கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வார்கள். அந்த மாதிரிதான் பேராக் மாநிலத்திலும் நடந்தது. ஆட்சியில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும். அப்படித்தான் பேராக் மாநில மக்கள் நினைத்தனர். ஆனால், மாற்றம்தான் மாறிப் போய்விட்டது. மனுஷத் தலைகள் மாறவில்லை. அடுத்த வீட்டுக்காரன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாகிப் போனது. இப்படியும் சொல்லலாம்.
புதுப் பெண்ணைக் கூட்டி வந்து, மாமியார் தங்கத் தாம்பாளத்தில் வடை பாயாசம் செய்து கொடுத்தார். மாமானார் மஞ்சள் ஊஞ்சல் கட்டி மனதார ஊட்டிவிட்டார். கொழுந்தியார்கள் சீவிச் சிங்காரித்து சிமிட்டி விட்டார்கள். மைத்துனர் மயிலாப்பூரில் இறங்கி மயிலிறகை வாங்கி வந்து காற்று வீசினார். ஆனால், ஆய கலைகளைச் சொல்லிக் கொடுத்த புருசன்காரன்தான் ஒரு ‘மிஸ்டேக்’ செய்துவிட்டான்.
ஒரே ஒரு கலையை மட்டும் சொல்லித் தர மறந்து போனான். அங்கேதான் கோளாறு. அது என்ன கலை தெரியுமா? அதுதான் சனி பகவானை விரட்டி அடிக்கிற கலை. ஏழடுக்கு மாளிகையில் ஏறி நிற்கும் ஏழுமலையானுக்கு மட்டும் தெரிந்த கலை.
சனி பகவானை விரட்டி அடிக்கிற கலை இருக்கிறதே, சும்மா சொல்லக்கூடாது அது கலைகளிலேயே கடினமான கதையாக்கும். படிப்பதற்கு ரொம்பவும் சிரமம். பேராக் மாநிலத்தைப் பொருத்த வரையில், நிழல்கள் நிஜாந்த் இருக்கிறாரே அதைப் பற்றி ஆவன்னா ஈயன்னாதான் படித்து இருந்தார். இளையவர் ஜாம் ஜாம் இருக்கிறாரே, சும்மா சொல்லக்கூடாது. பங்கோர் கரைகளில் இராவும் பகலுமாய்ப் படுத்துப் புரண்டு பாட்டாய்ப் படித்து பி.எச்டி பட்டம் வாங்கி விட்டார்.
அதோடு இராத்திரி நேரம் பார்த்து மதனாபிஷேகப் பதுமையான நஜீபாவைக் கூட்டி வந்தார். பராக்கிரமங்களைப் பறைசாற்றும் கனகமணி சிம்மாசனத்தின் தலையெழுத்தாய் விளங்கிய விக்கிரமாதித்ய மகாராஜா போஜராஜனைப் பார்த்தார்கள். வெள்ளி மாநில அரசாங்கத்தின் தலையெழுத்தும் மாறிப் போனது.
வெள்ளி மாநிலத்தை வாங்குவதற்கு யார் யார் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்கிற கதை சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. அதைப் பற்றி கூடுதலாகவே தெரிந்த அடியேனுக்கு, மலேசிய சோசலிசக் கட்சியின் மேடையில் பேசப் போய், கமுந்திங் மாமியார் வீட்டுக்கு என்னை அழைத்துக் கொண்டு போனதுதான் உச்சக்கட்டம்.
அப்புறம் என்ன, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்கிற பேரில் நல்ல ஓர் ஆலாத்தி எடுத்து, சில நாட்கள் தங்க வைத்து, மஞ்சள் தண்ணீரில் மசாலாப் பொடியைத் தூவி, நல்லபடியாகக் குளிப்பாட்டி… நல்லபடியாகச் சந்தனம் பூசி, கையில் கொஞ்சம் காசையும் கொடுத்து அனுப்பி வைத்தது நல்ல ஒரு காகிதச்சுவடு. பத்திரிகை உலகில் கொஞ்ச காலம் தனித்துப் போனதற்கும் அது ஒரு காரணம். அது ஒரு பெரிய கதை. இப்ப வேண்டாங்க!
வெள்ளி மாநிலக் கதைக்கு வருவோம். கதையைப் படித்த பிறகு நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்.
***
2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்த மக்கள் கூட்டணியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் செய்தனர். 2009 பிப்ரவரியில் நடந்தது.
ஹீ இட் பூங் என்பவர் ஜெலாப்பாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். இந்த மனுஷியுடன் பேராங் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலுடின் முகமட் ராட்சி, சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஒஸ்மான் முகமட் ஜைலு. (சில மாதங்கள் கழித்து) மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங். தேசிய முன்னணிக்கு ஆதரவாகக் கட்சி தாவல் செய்தனர். மாநில ஆட்சி உடைந்தது.
புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும்முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடினின் கோரிக்கையை, பேராக் சுல்தான் நிராகரித்தார். அதற்கு பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.
பிரதமர் நஜீப் துன் ரசாக், பேராக் சுல்தான் ராஜா அஸ்லான் ஷாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டார். அரண்மனைக் கதவுகள் திறந்தன. சட்டசபையில் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகச் சுல்தானிடம் கூறினார்.
அதே தினம் பிற்பகல் மூன்று மணிக்கு 31 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுடன், பிரதமர் மறுபடியும் சுல்தானைச் சென்று கண்டார். அவருடன் வந்த எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு மக்கள் கூட்டணியின் மீது நம்பிக்கை இல்லை என்றனர். தேசிய முன்னணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.
அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், மக்கள் கூட்டணிக்கு 32 சட்டமன்ற உறுப்பினர்கள். தேசிய முன்னணிக்கு 27 சட்டமன்ற உறுப்பினர்கள். அரசியல் நெருக்கடி ஏற்பட்ட பின்னர், மக்கள் கூட்டணிக்கு 28 உறுப்பினர்கள்.
தேசிய முன்னணிக்கு 28 உறுப்பினர்கள் எனும் நிலை உருவானது. மக்கள் கூட்டணியில் இருந்து சுயேட்சையாக மாறிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஆதரவைத் தேசிய முன்னணிக்கு வழங்குவதாகப் பகிங்கரமாக அறிவித்தனர்.
இந்த அரசியல் சாசன நெருக்கடியில் காணப்படும் சர்ச்சைக்குரிய அம்சங்கள்:
• கட்சியில் இருந்து கட்சி மாறுவதில் காணும் ஒழுக்க மீறல் பண்புகள்
• முதலமைச்சரைப் பதவி இறக்கம் செய்யும் சுல்தானின் அதிகார வலிமை
• தேதி குறிக்கப்படாமல் முன்கூட்டியே கையொப்பமிடப் பட்ட ராஜிநாமா கடிதங்கள்
• சட்டசபை சபாநாயகரின் அதிகாரங்கள்
தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள்
இது தொடர்பாக, 2009 மே மாதம் 11ஆம்தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பேராக் முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்வதற்கு சுல்தானுக்கு அரசியலமைப்பின்படி உரிமையில்லை என்று அறிவித்தது. அடுத்த பதினொரு நாட்களில், மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் புதிய தீர்ப்பை வழங்கியது.
அந்தத் தீர்ப்பிற்குப் பின்னர், தேசிய முன்னணியின் முதலமைச்சர் சாம்ரி அப்துல் காதிர் நிரந்தரமாக முதலமைச்சர் ஆனார். மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்குமாறு முகமட் நிஜார் விடுத்த வேண்டுகோள் மறுக்கப்படுவதாக, பேராக் சுல்தான் ராஜா அஸ்லான் ஷா அறிவித்தார்.
அத்துடன் நிஜாரின் அமைச்சரவையில் உள்ள அனைவரையும் ராஜிநாமா செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். பேராக் மாநில அரசியலமைப்பு Article XVIII (2)(b) விதிகளின்படி அவ்வாறு கட்டளையிட தமக்கு அதிகாரம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முகமட் நிஜார் ராஜிநாமா செய்ய மறுத்தார். மக்களாட்சி காரணங்களை முன்வைத்து, மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க விடுத்த தம்முடைய கோரிக்கையை மறுபரீசலனை செய்யுமாறு சுல்தானைக் கேட்டுக் கொண்டார்.
சுல்தான் மறுக்கவே, மாநிலச் சட்டமன்றக் கட்டிடத்தைக் காவலர்கள் முற்றுகையிட்டனர். முகமட் நிஜாரும் அவருடைய அமைச்சரவையும் கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப் படுத்தப்பட்டனர்.
ஜாம்ரி அப்துல் காதிரை புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும்படி பேராக் சுல்தான் கேட்டுக் கொண்டார். அதே சமயத்தில் முகமட் நிஜாரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 2009 பிப்ரவரி 6ஆம் தேதி ஜாம்ரி அப்துல் காதிர், புதிய முதலமைச்சராக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
2009 பிப்ரவரி 6ஆம் தேதி காலையில் முகமட் நிஜாரும், அவருடைய அமைச்சர்களும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்த போது அவர்களுடைய அலுவலக உடைமைகள் அனைத்தும் துப்புரவு செய்யப்பட்டிருந்தன. அத்துடன், மாநிலச் செயலகத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் கட்டளையிடப் பட்டனர். 45 நிமிடங்கள் கழித்து முகமட் நிஜார் அங்கிருந்த காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
2009 பிப்ரவரி 6ஆம் தேதி மாலை 4.08க்கு, பேராக் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜாம்ரி அப்துல் காதிர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார். சத்திய பிரமாண நிகழ்ச்சி கோலாகங்சார் அரச நகரத்தின் இஸ்கண்டாரியா அரண்மனையில் நடைபெற்றது.
பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜாம்ரி அப்துல் காதிரின் சத்திய பிரமாணத்தை எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் அரண்மனைக்கு முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதிய அரசாங்கம் சட்டபடி செல்லாது என்று சபாநாயகர் வி. சிவகுமார் அறிவித்தார். மாநிலச் சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்த மரத்திற்கு அடியில் அவசர சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார்.
சபாநாயகரின் முழு ஆடை அணிகலன்களுடன் மரத்தின் அடிவாரத்திலேயே சட்டசபைக் கூட்டத்தையும் நடத்தினார். இந்த நிகழ்ச்சி, மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக உருவகம் பெற்று உள்ளது.
மரத்தின் அடிவாரத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தைப் பார்ப்பதற்கு, ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் கூடி நின்றனர். கைதட்டல்கள் மூலமாகத் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர்.
ஒரு மரத்தின் கீழ் சிவகுமார் நடத்திய சட்டசபை அவசரக் கூட்டம் கேலிக்கூத்தானது என்று அறிவித்த பாரிசான் நேசனல், அந்தக் கூட்டத்திற்கு ஒரு பகிங்கரமான கண்டனத்தையும் தெரிவித்தது. அந்தக் கூட்டத்தில் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் பாரிசான் நேசனல் அறிவித்தது.
பேராக் மாநிலச் சட்டசபையைக் கலைத்து விடுமாறு பேராக் மாநில சுல்தான் ராஜா அஸ்லான் ஷாவிற்கு மக்கள் கூட்டணியின் முகமட் நிஜார் ஜமாலுடின், ஒரு கடிதம் எழுதினார். ஆனால், அந்த வேண்டுகோள் கடசிவரையில் நிறைவேற்றப்படவில்லை.
சிவகுமார் நடத்திய அவசரக் கூட்டத்தின் பிரதான இடமாக விளங்கிய அந்த மரத்திற்கு ‘மக்களாட்சி மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு நினைவுப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநில சட்டசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால், இப்பேர்ப்பட்ட ஓர் இழுபறி வந்து இருக்காது. நம்முடைய நீதி அமைப்புகள், நீதிமன்றங்கள், காவல்துறை போன்றவை துவைத்துப் பார்க்கப்படுகின்றன. அவை சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா இல்லையா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு முறை ஏமாந்து போனால், மறுபடியும் ஏமாற வேண்டுமா? நான் கேட்கவில்லை. பேராக் மக்கள் கேட்கிறார்கள். நான் கேட்டால் மறுபடியும் கமுந்திங் மாமியார், அல்வா லட்டு ஜாங்கிரி என்று பாசத்தோடு அழைக்கலாம். ஆக, நானும் பேரன் பேத்திகளுடன் வாழ ஆசைப்படுகிறேன்.
——————————————————-
விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதி இருக்கிறேன். அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/பேராக்_அரசியல்_சாசன_நெருக்கடி_2009
sari sani bagavaanai turattuvathu eppadi?