பகுதி 2
இதே காலத்தில் தமிழ்நாட்டிலும் இதே மாற்றம் ஏற்படுகிறது. இன்று தமிழ்நாடு. இலங்கை மலேசியா, தமிழர்கள்வாழ் புலம்பெயர் நாடு என்ற வேடுபாறின்றி ‘தமிழ்கவிதை’ பொதுத் தளத்தை வந்தடைந்திருக்கிறது. இதில் எங்கு தேக்கம் வந்ததெனக் கருதுகிறீர்கள்?
நான் அப்படி எண்ணவில்லை. நான் எப்போதும் அதைத் துரத்துபவனாகவே இருக்கிறேன். அப்படி தேக்கமிருந்தாலும் ஏதோ ஒரு திசையில் உடைத்துப் பாயும். அதுதான் இயல்பு.
படிமமும் நுட்பமும் கவிதையை மீளச் சிக்கலாக்கிவிட்டது எனச்சொல்வோர் உண்டு. என் எண்ணப்படி கவிஞன் தான் அன்றாடம் காண்கின்ற காட்சிப்புலத்தில் தன் அனுபவத்திலிருந்து படிமங்களை கையாண்டால் இந்தச் சிக்கல் இருக்காது என எண்ணுகிறேன்.
இன்று தமிழில் வெளிவரும் நூல்களில் கவிதையே அதிகம். தேங்கியிருந்தால் இது சாத்தியமில்லை. இங்கு எல்லாத்தரத்திலுமான கவிதைநூல்கள் வெளிவருகின்றன. மேலோட்டமான வாசிப்புக்குரிய கவிதைகளும் வருகின்றன. ஆழமான முதற்தர வாசிப்புக்குரிய கவிதைகளும் வருகின்றன. சங்கத்து கவிதைகளில் ஒருபாடலிலேயே எல்லாவித வாசிப்புக்குரிய தன்மையும் ஒரு பாடலில் இருக்கும். இங்கு அப்படி அல்ல. நாங்கள் அந்தந்த வாசிப்புக்குரிய கவிஞர்களை தேடவேண்டி இருக்கிறது.
இன்று கம்பியூடர் காலம். எல்லாத் துறையிலும் தங்கள் தங்கள் அடையாளத்தை காட்டக்கூடியவர்கள் பலர் முன் வருகிறார்கள். இது இசை, நடிப்பு, நடனம், ஓவியம் என எங்கும் எதிலும் பார்க்கலாம். அதுபோலவே கவிதையும்.
அவரவர் தங்கள் விருப்புக்குரிய தரத்துக்குரிய நூல்களை தேடி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
கவிதையின் இன்றைய பெறுமானம்? நாடகத்தைச் சினிமா மேவியதைப்போல, ஓவியத்தை ஒளிப்படம் மேவியதைப் போல கவிதையைப் பாடல் மேவியுள்ளதா? நவீன தொழில் நுட்பம் உருவாக்கிய பிந்திய கலைவெளிப்பாடுகள் மாறுபட்ட ரசனையை ஏற்படுத்தியதன் விளைவாக இந்த மாதிரியான ஒரு நெருக்கடி நிலை உருவாக்கியதாகக் கொள்ள முடியுமா?
காலத்திற்கும் அதன் மாற்றங்களுக்கும் ஏற்றபடி உயிர்ப்புள்ளவை அனைத்தும் தன்னை தகவமைத்துக்கொள்ளும் இதுதான் நியதி. இதற்கு கவிதை மட்டும் விதிவிலக்கா என்ன? நாடகத்தை சினிமா மேவியதாக நான் கருதவில்லை. அது நாடகத்தின் இன்னொரு பரிணாமம்.
நீங்கள் மேடை நாடகத்தை அல்லது கூத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். நாடகத்தை அப்படியே திரைப்படக் கலை சுவீகரித்துக் கொண்டபோது மேடை நாடகம் தன்னை மாற்றிக் கொள்கிறது. அது கதை சொல்லும் முறை, உத்தி என்பவற்றின் மூலம் தன்னைப் புதுக்கிக் கொள்கிறது. இன்றும் அதற்கான மதிப்பும் மரியாதையும் உண்டு.
கூத்து தன்னைக் காலத்திற்கேற்ப புதுக்கிக் கொள்ள விழையவில்லை. அவர்கள் அதன் தனித்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதுகிறார்கள். அதனால் கூத்து இன்னமும் சடங்கு நிலையிலேயே இருக்கிறது. நான் சில நாட்களுக்கு முன் மௌனகுரு இயக்கிய ‘இராவணேசன்’ வடமோடிக் கூத்தை ஒளிப்பேழை மூலம் பார்த்தேன். நவீன வடிவில் மேடையில் அளிக்கை செய்தார். மிக அற்புதமாக இருந்தது. நேரடியாகப்பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்மேற்பட்டது.
இதுபோலப் பலர் கூத்தை நவீனப்படுத்தி கிராமங்களிலிருந்து தொழில்நுட்ப அரங்கிற்கு அழைத்து வரவேண்டும். அண்மையில் முல்லைத்தீவிலும் மன்னாரிலும் பல கூத்து நிகழ்வுகளை பார்த்தாக பேராசிரியர் மௌனகுருவே கூறியிருக்கிறார். இது நல்ல அறிகுறி என்றே கருதுகிறேன். தமிழ் நாட்டோடு ஒப்பிடும்போது ஈழத்தில் திரைப்படத்தின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிரமிக்கவில்லை. ஈழத்து திரைப்பட நிலை இன்றும் மெலிந்தே கிடக்கிறது. அவர்களால் இந்திய தமிழ் சினிமாவை வியபார ரீதியில் விஞ்சவே முடியாது.
இந்தியச் சினிமா கூட இன்று புலம்பெயர் தமிழர்களிலேயே தங்கியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களும் சரி இலங்கைத் தமிழரும் சரி தமிழ்நாட்டு சினிமாவை பிரதிபண்ண முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ் நாட்டுச் சினிமாவின் அதீதபெருக்கமும் அதன் தரமும் சுவைஞர்களுக்கு சலிப்பூட்டி வருகிறது. சினிமா அரங்குகளை விடுத்து வீட்டிலுள்ள சின்னத் திரையில் சினிமா அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி வருகிறது. வெளியே போய் பொழுதுபோக்காக ஒரு மாலைப்பொழுதை அனுபவிக்கும் இடமாக நாடக அரங்கங்கள் மாறுவதற்கான வெளி இருக்கிறது. அதை நாங்கள் எப்படிப்பயன் படுத்தப்போகிறோம் என்பதில் தங்கியிருக்கிறது தமிழில் நாடகத்தின் எதிர்காலம்.
அடுத்து ஓவியம் புகைப்படம் இரண்டையும் பார்க்கும்போது புகைப்படம் வந்தபோது ஓவியம் இனித்தேவைப் படாது அழிந்துவிடும் என்றே கருதினர். அது தன் திசையை மாற்றிக் கொண்டு பயணிக்கத் தொடங்கியது. நவீன ஓவிய மரபு உருவானது. இன்றும் அது தனக்கே உரித்தான இடத்தை தக்கவைத்திருக்கிறது.
இன்று தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சி புகைப்படத்தை செல்லாததாக்கிவிட்டது. முன்பெல்லாம் புகைப்படத்திலிருந்த பிரமிப்பு இப்போ குன்றி வருகிறது. எந்தப் பொருளும் அளவோடு இருந்தால்தான் அழகு. இப்போது மீள ஓவியத்தின் மீது மேலும் கவனம் திரும்பி வருகிறது. இன்று புகைப்படமும் கம்பியூட்டரும் ஓவியத்திற்கு புதுப்பலம் சேர்த்து வருகின்றன.
என்னைப் பொறுத்தவரையில் ஒவியத்தையும் கவிதையையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒவியம் என்பது வண்ணங்களாலும் கோடுகளாலும் எழுதப்படுகிற கவிதை. அதேபோல் கவிதை என்பது சொற்களாலும் ஓசையாலும் வரையும் ஓவியம்.
இரண்டுமே உணர்தலுக்கான ஊடகமாக இருக்கிறது. இந்து மதத்தில் உருவம் அருஉருவம் அருவம் என மூன்று நிலை உண்டு. இதை நான் ஓவியத்திலும் கவிதையிலும் நிறுத்திப் பார்ப்பதுண்டு.
தெளிவான காட்சிப்பொருளை சித்தரிக்கின்ற ஓவியமும் சிக்கலின்றி முதல் வாசிப்பில் புரிந்து கொள்ளக்கூடிய நேர்கோட்டு கவிதையும் முதலாம் ரகம்.
கோடுகளுக்குள் ஒன்றுக்குள் ஒன்று சிதைந்தும் பொருந்தியும் பிரிந்தும் ஒருவித உருவமயக்கத்தை தருகின்ற ஓவியங்களும் படிமங்களாலும் சொற்சிக்கனத்தாலும் பொருள் மயக்கத்தினூடு பல வாசிப்புகளை கோருகின்ற கவிதைகள் இரண்டம் வகை.
சிந்தப்பட்ட வண்ணங்களில் உருவான அரூபம் மூலம் உணர்வுகளை கிளர்த்தி தன் வயப்படுத்தும் ஓவியங்களும்; இருண்மை நிறைந்து ஒவ்வொரு வாசிப்பின் போதும் வாசகனின் உணர்வுக்ககேற்ப தேடலையும் மனக்கிளர்ச்சியை ஊட்டும் கவிதையும் மூன்றாம் நிலை.
இந்தவகையில் இன்று கவியும் ஓவியமும் எந்த வகையிலும் நெருக்கடிநிலையை அடையவில்லை.
பாடல் வேறு. கவிதை வேறு. ஓவியம் – புகைப்படத்தைப் போன்றோ அல்லது நாடகம் – சினிமாவைப்போன்றோ பாடலையும் கவிதையையும் பொருத்திப் பார்க்க முடியாது. இங்கு நீங்கள் சினிமா பாடல்களை குறிப்பிடுகின்றீர்கள் என நம்புகிறேன்.
கவிதை பழுதென்றால் பாடலுக்கு நன்று என தன் தந்தை ‘மஹாகவி’ சொல்வதாக கவிஞர் சேரன் அடிக்கடி சொல்வார். பாரதியின் சில கவிதைகள் பாடலுக்குள் இசைவாக அமைந்தது அவர் பாக்கியம்.
இன்று தமிழ்த் திரைப்பாடல்களில் இசைக்கு ஏற்ப சொற்களை அடுக்கும் கலை தெரிந்தால் போதும். இதற்கு கவிஞர்கள் தேவையில்லை. சொற்களுக்கு பொருள் கூடத் தேவையில்லை. வெறும் ஒலிகள் போதும். அழகான பொருள் கொண்ட சொற்களைக் கூட இசைக்கேற்ப உச்சரிப்பால் திரிபுபடுத்துகிறார்கள்.
பாடலாசிரியர்கள் தங்களை கவியரசு கவிப்பேரரசு கவிச்சக்கரவர்த்தி எனப் பெயர் சூட்டிக் கொள்வதால் தங்களுக்கு இந்த ஒப்பீடு செய்யும் எண்ணம் தோண்றி இருக்கலாம். தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை. நிச்சயமாக சினிமாப் பாடலால் தமிழ்க் கவிதைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
நீங்கள் மக்கள் அல்லது நுகர்வோர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு குறிப்பிடக் கூடும். நாங்கள் எதைக் கொடுக்கிறோமோ நாட்கள் செல்லச்செல்ல அதன் ரசனைக்கு மக்கள் பழகிவிடுகிறார்கள்.
கடந்த 2013 ஆம் வருடத்தில் சென்னைப் புத்தகத் திருவிழாவில் 300 க்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. அதில் 250 மேல் தரமற்றவை. இதைத்தான் நாங்கள் கொடுக்கப்போகிறோம் என்றால் இந்த ரசனைக்குத்தானே மக்கள் பழகுவர்.
சர்வதேசப் போட்டிகளில் பரிசுகளைத் தட்டிச்செல்லும் தமிழ்ப்படங்கள் ஒருநாள் கூட தியேட்டர்களில் தாக்குப்பிடிப்பதில்லை. தேசியவிருது பெற்ற ‘காஞ்சிவரம்’ படத்தை எத்தனைபேர் பார்த்தார்கள்.
அண்மையில் ‘கடல்’ என்றொரு படம் வெளிவந்தது. அதே காலத்தில் மலையாளத்தில் ‘ஒழிமுறி’ என்றொருபடமும் வந்தது. இரண்டுக்கும் கதைவசனம் எழுதியவர் ஜெயமோகன். இரண்டு படத்தையும் பார்த்தால் இந்த ரசனை வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம்.
ஜெயமோகன் தமிழ்சினிமா ரசனைக்கு தாழ்ந்துபோய் கதை எழுதியதாலேயே இந்தநிலை ஏற்பட்டது. இப்படித்தான் என்னால் பார்க்க முடிந்தது.
இதுவே தான் கவிதைக்கும் பொருந்தும். கவிஞர்களுக்கு நுகர்வோரை விடவும் இலக்கியத் தரமே முக்கியம்.
அப்படியென்றால், கவிதையின் எதிர்காலம்? கவிதையின் அடுத்த தளம்?
கவிதையின் போக்கை காலமே தீர்மானிக்கிறது. இதுதான் வரலாறு. தமிழ்நாட்டில் மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதுக்கவிதை தொடங்கிய போது பெரும் எதிர்ப்பிருந்தது. ஆனால் பின்னாளில் அதுவே கவிதையின் அடுத்து பரிணாமமானது.
ஆனால் அது அத்தோடு நிற்கவில்லை. உத்தி படிமம் புதிய வடிவங்களுக்குள் காலடி எடுத்து வைத்தது. இன்று இதற்கும் எதிர்ப்பு. கவிதை புரியவில்லை. இருன்மை நிறைந்து கிடக்கிறது என்கிறார்கள். ஆனால் காலம் தக்கதை தகவமைத்துச் செல்லும். இதை நான் நம்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் இருண்மைதான் மூலம். இருண்மையில் ஒளியால் எழுதப்படுவது அழகு. எல்லா கலைகளுக்கும் இதுவே ஆதாரம். புகைப்படமாக இருந்தாலென்ன ஓவியமாக இருந்தாலென்ன. சினிமாவாக இருந்தாலென்ன. கவிதைக்கும் இதுவே ஆதாரம். கருவறை இருளில் தூங்காமணி விளக்கின் சிறு சுடரில் கருங்கல்சிலையின் அழகை விஞ்ச வேறென்ன இருக்கிறது. கவிதையும் அப்படித்தான். தேடி அடைவதே இன்பம், கிளர்ச்சி, பிரமிப்பு, எல்லாம்.
ஆனால் எவ்வளவு இருன்மை எவ்வளவு ஒளி என்கிற நுட்பம் வேண்டும். நுகர்பவன் உள் நுழையக்கூடய அளவில் வெளி இருக்கவேன்டும். அதுவே சிறந்த கவிதை என்பது என் எண்ணம்.செய்யுள் வடிவத்திலிருந்து கவிதை தன்னை விடுவித்துக் கொண்டபோது கவிதைக்கென ஒரு வரைபு இல்லாமல் போய்விட்டது அதன் சாதககங்கள் பல நிகழ்ந்தன. பண்டிதக் குரல்களில் இருந்து விடுபட்டு பாமர வலியும் பதிவாகியது. இது பலமென்றால் இலையான் பீச்சியது போல பல பெருகிவிட்டது. எல்லோரும் ‘விருந்தினர் முகவரி அட்டை’ போல கவிதை என்ற பெயரில் ஒருதொகுப்பை போட்டுவிட்டு கவியரசர்களாய் அலையும் நிலை வந்துவிட்டது.
இதனால் நுகர்வோர் ரசனை குன்றி வருகிறது. இங்கு கவிதைக்கான தரத்தை தீர்மானிப்பது யார் என்னைப் பொறுத்த வரையில் முதலில் பதிப்பகங்கள் கவனமெடுக்க வேண்டும். இருந்தும் இன்றுள்ள அச்சகசுதந்திரத்தில் இது பெரிதும் சாத்தியமற்றதாகி விடுகிறது.
இங்கு பாரியபொறுப்பு இலக்கிய விமர்சகர்களுக்கு உண்டு. திறனாய்வு செய்வோர், முன்னுரை எழுதுவோர் இதில் கவனமெடுக்கவேண்டும். தரமான இலக்கிய உலகத்தை உருவாக்குவது படைப்பளிகள் மட்மல்ல. அவர்களுக்கு சமாந்தரமாக செயல்படும் இந்த இலக்கிய விமர்ககர்கள் ஆர்வலர்களுக்கும் உண்டு.
இங்கு பல புத்தகவெளியீடுகளுக்கு சென்றுவருகிறேன். வரும் எல்லா நுல்களையும் அற்புதமென்றே புழுகுகிறார்கள். படிப்பவனிருக்கட்டும் படைப்பாளி எங்கே தன் படைப்பின் தரத்தை தீர்மானிப்பது?
இப்படியே போனால் தமிழ் இலக்கியத்தில் பெரியதொரு குப்பை மேடு தோன்றிவிடும் என ஒரு பேராசிரியர் கூறியதையே நானும் வழிமொழிகிறேன்
படைப்பாளிகளுக்கு நிகராக விமர்சகர்கள் செயற்படவேண்டும். நல்லவற்றை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல அல்லதை நிராகரிப்பதும் இவர்கள் கடமை. புதுக்கவிதைத் தொடக்ககாலத்தில் நல்லதொரு விமர்சகர் அணி இருந்தது. வெங்கட்சாமிநாதன். பிரமிள் கைலாசபதி நுஃமான் எனப் பலர் அணிபிரிந்து நின்று பலதையும் நிறுவினர். அதுபோன்ற நிலை மீள உருவாக வேண்டும். தரமற்றவை பெருகப்பெருக அப்படி ஒருநிலை உருவாகும்.
இவர்களாலேயே கவிதையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
கவிஞனாக இருப்பதில் உள்ள சவால்கள்?
எனது எண்ணப்படி கவிதை வேறு. கவிஞன் வேறு. கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் கவிஞர்கள் அல்ல என்பது என் எண்ணம். பலர் கவிதை புனைபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியின் புலமையும் பயிற்சியும் மட்டுமிருந்தால் போதுமானது.
கவிஞனின் கவிதையானது அவனது அனுபவங்களின் பதிவாயிருக்கிறது. அவனது வாழ்வுதான் கவிதை. அவன் அதிகம் எழுத வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை.
எனது அனுபவத்தில் என் வாழ்வைக் கடப்பதற்கான சிறு கட்டுமரம் போலவே கவிதை பயன்பட்டது. இந்த பெரும்பான்மை சமூகத்தின் போக்கிலிருந்து நான் மறுத்தோடியாக இருந்தேன். இது நான் வலிந்து ஏற்றுக்கொண்டதல்ல. என்தந்தை வழி நான் கற்றுக்கொண்ட பொதுவுடமை சித்தாந்தம், என் வறுமைச் சூழல், என்வாசிப்பனுபவம் என்பனவற்றிலிருந்து ஏற்பட்டிருக்கக் கூடும்.
யுத்த சூழலில் கலகக்கரனாக வாழ்வதனால் ஏற்படும் விழைவுகளிலிருந்து தப்பவைப்பதற்காக என்குடும்பத்தினர் என்னை என்தேசத்திலிருந்து துரத்தினர். நான் துரத்தப்பட்டதாகவே அப்போது உணர்ந்தேன். கையாலாகாதவன் போலவே கடல் கடந்தேன்.
சனத்தோடு சனமாக தொரன்றோவில் கரையொதுங்கியபோதும் பெரிய மாற்றம் இருக்கவில்லை. வாழ்வே பெரும் போராட்டமாக இருந்தது. ஒருபுறம் வாழ்வின் சுமை. மறுபுறத்தில் இந்த சமூகத்தின் அவலங்கள். என்னால் ஓத்தோட முடியவில்லை.
மீண்டும் நான் தனிமைப்பட்டுப் போனேன். மனம்போனபோக்கிலே தெருவிலும் பெருமரத்தோட்டங்களிலும் அலைவதே வாழ்வாயிற்று. நான் இயற்கையின் உபாசகனாயிருந்தேன். வின்டர் காலங்கள் அதற்குக்கூட இடமிருக்காது. சன்னேலோரும் குளிருக்கு குடங்கியிருக்கும் புறாவும் நானுமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தேன். அக்காலத்திலேயே அதிகம் எழுதினேன்.
அந்தத்துயரில் இருந்து என்னை மீட்டுத்தந்தது இந்த எழுத்தும் கவிதையும் தான். எனது எழுத்துக்களை கவிதை என்று கொண்டாடியபோது எனக்கு அதில் மேலும் ஆர்வம் ஏற்பட்டது.
கவிஞனாய் வாழ்வதில் எனக்கிருந்த சங்கடங்களை விட என்னோடு வாழ்ந்த என் துணை மற்றும் பிள்ளைகள் தான் அதிகம் சங்கடமடைந்தனர். போராட்ட காலத்தில் நான் துரோகக் கும்பலைச் சேர்ந்தவனாக சித்தரிக்கப்பட்டேன். சிலசமயங்களில் அச்சமுற்று வாழவேண்டிய நிலை இருந்தது. நான் அசட்டுத் துணிச்சலுடன் கடந்துவந்தேன். என்னைவிடவும் என்துணை மற்றும் பிள்ளைகளே அச்சமுற்றவர்களாக இருந்தார்கள். இதனால் அவர்கள் தங்கள் விருப்புவெறுப்புகளை எனக்காக விட்டுகொடுக்க வேண்டியவர்களாயினர்.
இன்று நான் கூறியவை எழுதியவை யதார்த்தமான போது விலகிப் போனவர்களில் ஒருசாரார் நெருங்கியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இத்துணை இடித்துரைத்தும் இந்தச் சமூகம் கேட்கவில்லையே என்ற வருத்தமிருக்கிறது.
எந்த ஒருசமூகத்திலும் ஒருவன் மறுத்தோடியாக கலகக்கரனான, கவிஞனாக வாழ்வது மிகக் கொடுமை. அவன் பெருமைப்பட ஏதுமில்லை.
தமிழில் கவிதை விமர்சனம், கவிதை குறித்த விவாதங்கள், கவிதை ரசனை. கவிதை பற்றிய அறிவு எப்படி இன்றுள்ளது?
பொதுவில் சொல்வதாயின் கவிதை குறித்த விவாதங்கள் விமர்சனங்கள் அருகி வருகின்றன. இதன் அடுத்த படிநிலைதான் கவிதை பற்றிய ரசனையும் அறிவும். செய்யுள் வடிவை துறந்து தமிழில் புதிய கவிதை தோற்றம் பெற்றகாலத்தில் பலத்த நிராகரிப்பை சந்திக்கவேண்டி இருந்தது. அக்காலத்தில் புதிய கவிதை வடிவை தூக்கி நிறுத்தியவர்கள் விமர்சகர்களும் திறனாய்வாளர்களுந்தான். அப்போதெல்லாம் எழுத்துபத்திரிகையில் கவிதைதொடர்பான காரசாரமான விவாதங்கள் நிழ்ந்தன. வெங்கட்சாமிநாதன், பிரமிள். சி.கனகசபாபதி, கைலாசபதி, சிவத்தம்பி எனப்பலர் எதிரும்புதிருமாக நின்று இலக்கியவிவாதங்களை நிகழ்த்தினர்.
இன்று செய்யுள்வடிவம் செயலிழந்து போய் புதுக்கவிதையே தமிழ் கவிதையாயிற்று.
அப்படிப்பட்ட விவாதங்கள் இன்று இல்லை. முன்பெல்லாம் இப்படைப்புகளை வெளிக்கொணர இலக்கியப் பத்திரிகைகளே இருந்தன. ஒவ்வொரு இலக்கிய பத்திரிகைகளின் பின்னாலும் ஆசிரியர் குழு இருந்தது. பதிப்பகங்கள் மிகப் பொறுப்போடு இயங்கின. இன்று நிலை அப்படி அல்ல. மின்ஊடகங்களின் அதீத வளர்ச்சியினால் பல சாதகபாதகங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்தவருடம் (2014) சென்னை புத்தகத் திருவிழாவில் முந்நூறு வரையிலான கவிதைத்திரட்டுகள் வெளிவந்திருந்தன. தரம் அடிப்படையில் பார்த்தால் அதில் கால்பங்கு கூட தேறவில்லை என்றார்கள்.
இன்று சாதாரனமாக முகப்புத்தகத்தில் எழுதும் துனுக்குகளை கவிதை என்று ‘லைக்’ போட சிலகாலத்தின் பின் அவையே கவிதைத் திரட்டுகளாக வெளிவந்து விடுகின்றன.
கவிதையென்றால் என்ன புதினம் என்றால் என்ன இலக்கியத்தைப் பொறுத்த வரை படைப்பளிகளும் விமர்சகர் அல்லது திறனாய்வாளர்களும் வண்டியின் இருசக்கரங்களைப் போன்றவர்கள்.
ஒரு வாய்க்காலில் பாய்கின்ற நீரை அந்த வாய்காலின் இரு புருவங்களாய் இருந்து நீரின் திசையை தீர்மாப்பவர்களாய் விமர்சகர்களும் திறனாய்வாளர்கள் இருந்தனர்.
இங்கு நுகர்வோர் பிதானமானவர் அல்லர் என்பது என்கருத்து. நான் இலக்கியத்தை விற்பனைப் பண்டமாக பார்க்கவில்லை. இலக்கிய ரசனை என்பது இலக்கியங்களால் உருவாகுவது. ரசனைக்கேற்ப இலக்கியங்களை உருவாக்க முடியாது. உருவாக்கக் கூடாது.
ஆனால் இன்று இலக்கியம் என்பது பரந்து ஓடும் நீர் போலாயிற்று. சேதாரம் அதிகம். இந்நிலை மாறவேண்டும் என்பதென் அவா.
ஒரு பேராசிரியருடன் இது பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இந்தநிலை நீடிக்குமாயின் தமிழில் பெரியதொரு குப்பைமேடு உருவாகிவிடும் என்றார்.
மிகத்துணிச்சலோடு காய்தல் உவத்தலின்றி திறனாய்வுசெய்யக் கூடிய விமர்சகர்கள் வரவேண்டும். இவை நல்லவை என்று சொல்வதோடு அல்லாதவற்றை காரணத்தோடு நெறிப்படுத்தக்கூடிய இலக்கிய அமர்வுகள் இடம் பெறவேண்டும். இப்படி ஒருகாலம் மீள வரும்.
கனடியச் சூழலில் கவிதை மற்றும் பிற இலக்கிய முயற்சிகள்?
கனடா தனிநாடாக இருந்தபோதும் அது அமெரிக்கத் தன்மைகளைக் கொண்ட நாடு. எல்லாவற்றையுமே லாபநேக்கோடு பார்க்கின்ற நாடு. இத்தன்மையானது எல்லாவற்றிக்கும் பொருந்தும். வாழுவதற்கென ஒரு வீட்டை வாங்குவார்கள். வாழ்வதைவிட அதன் விற்பனைப்பெறுமானம் எவ்வளவு என்பதிலேயே அவர்கள் குறி இருக்கும். இலக்கியத்திற்கும் இது பொருந்தும். இலக்கியத்திலே எம்மவர்கள் பணம் சம்பாதித்துவிட முடியாது. எப்படி விரைவில் புகழ் சேர்க்கலாம் என்பதே இவர்களின் குறி.
ஆரம்பத்தில் கவிதையில் தொடங்குவார்கள். யாருடையதாவது நல்ல சிறுகதையை பத்துப்பேர் புகழ்ந்து பேசிவிட்டால் போதும் சிறுகதைக்கு தாவி விடுவார்கள். அதேபோல் நாடகம், குறும்படம், சினிமாவரை தொடரும். வெள்ளாடு கடித்ததைப்போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொட்டுத் தொட்டே இன்று புகலிட இலக்கியம் கனடாவில் மையங்கொண்டிருக்கிறது.
இப்படிச்சொல்லிவிட்டு வெறுமனே கடந்து செல்ல முடியவில்லை. கடந்த ஆண்டில் ஒவ்வொரு வார இறுதியும் புத்தக வெளியீடுகளால் நிறைந்திருந்தது. இலக்கியத்துக்குக்கான பெரும் பணிகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
கவிதையைப் பொறுத்த வரை சேரன் தன் கவிதைகள் மூலம் தமிழின் புகழை உலகெங்கும் கொண்டுசெல்பவராக இருக்கிறார். பல்வேறு மொழிகளில் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு நாட்டுக் கவிஞர்களுடன் இணைந்து சர்வதேயக் கவிதைவாசிப்பு அரங்குகளில் பங்குபெற்றுவருகிறார்.
அ. முத்துலிங்கம் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்டிருக்கிறார். வெகுஜன இதழ்கள் தீவிர இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடின்றி தமிழ்நாட்டின் பல இலக்கிய இதழ்களை இவரது கதைகள் அலங்கரிக்கின்றன. இவரது முயற்சியால் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கியத்தோட்டம் என்ற அமைப்பு வருடந்தோறும் வாழ்நாள்சாதனையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ‘இயல் விருது’ வழங்கி வருகிறது. இந்த விருதுத்தெரிவானது தமிழ் இலக்கியஉலகில் மதிப்புவாய்ததாக கருதப்படுகிறது. இதனுடன் வருடந்தோறும் பல இலக்கிய முயற்சிகளுக்கான பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
தேவகாந்தன் பல நாவல்களை எழுதியிருக்கிறார். வருடம்தோறும் கனேடிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டு கூர் என்றொரு இலக்கிய தொகுப்பை வெளியிட்டுவருகிறார். என். கே. மகாலிங்கம் பல புதினங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். இதில் நாவல்களும் சிறுகதைகளும் அடங்கும்.
பேராசிரியர். செல்வா. கனகநாயகம் பல கவிதைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சியிலிருக்கிறார். அண்மையில் கூட உலகெங்கும் வாழும் எண்பத்தாறு கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு தமிழும் ஆங்கிலமும் இணைந்ததாக வெளியிடப்பட்டது.
வாரம், மாதம் இருமுறை, ஒருமுறை என தமிழ் பத்திரிகைகள் வெளிவருகிள்றன. அதில் பல நல்ல இலக்கிய முயற்சிகளும் இடைக்கிடை இடம்பெறுவதுன்டு. தமிழ்நாட்டிலிருந்து பல இலக்கியவாதிகள் வருகின்றனர். நல்ல இலக்கிய உரைகளை கேட்கமுடிகிறது.
இப்படிப் பார்க்கும் போது புலம்பெயர் தமிழ் இலக்கியம் கனடாவில் மையங்கொண்டிருக்கின்றது என்றே நம்பவேண்டி இருக்கிறது.
தமிழில் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான சேரன், மற்றும் செழியன், ‘காலம்’ செல்வம் போன்ற மூத்த கவிஞர்கள், அதற்குப் பின் தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கியவர்கள், இரண்டாயிரத்தில் எழுதத்தொடங்கியவர்கள், இன்னும் புனைபெயருக்குள் அனாமதேயமாக மறைந்துறையும் கவிஞர்கள் என ஏராளம் பேர் கனடாவில் இருக்கிறார்கள்.
கவிதை பற்றிய ஆழமான சிந்தனையை இந்தநேர்காணல் ஏற்படுத்தியுள்ளது