சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்

தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது.

100-00-0002-357-3_b-01முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் ஆய்வு நூலான மலேசியத் தமிழரும் தமிழும் எனும் நூலின் வழி, மலேசியாவில் நடந்த சிற்றிதழ் முயற்சிகளை அறிய முடிகின்றது. 1941ல் போர் நடந்த காலத்தில் வெளிவந்த தமிழ்கொடி, 46-க்குப் பிந்திய இலக்கிய இதழ்களில் கா.இராமநாதனையும் பின்னர் தி.சு.சண்முகத்தையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘சோலை‘ திங்களிதழ், 1954 முதல்1956 வரை எழுத்தாளர் மா.செ. மாயதேவன் மூலம் கையெழுத்து இதழாகத் தொடங்கி பின்னர் அச்சு இதழாக வந்த ‘திருமுகம்‘, கரு.இராமநாதனை ஆசிரியராகக் கொண்டு ஈப்போவிலிருந்து 1956ல் வெளிவந்த ‘மலைமகள்‘, 1958ல் வெளிவந்த ‘நவரசம்‘, 1965ல் கருத்து மோதல்களுக்கு வாய்ப்பளித்த ‘பொன்னி‘, 1999ல் மா.ராமையா அவர்கள் வெளியிட்ட ‘இலக்கியக்குரிசில்‘ என இலக்கியம் சார்ந்த இதழியல் முயற்சிகளைப் பட்டியலிடலாம். இதனுடன், எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு ‘அகம்‘ (2004) எனும் தலைப்பில் ஒரே ஒரு இலக்கிய இதழைப் பிரசுரித்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்விதழ்களில் சில மட்டுமே இன்று வாசிப்புக்குக் கிடைக்கின்றன. மற்றவை இதற்கு முந்தைய ஆய்வாளர்களுக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் உள்ளவையே. வாசிக்கக் கிடைத்த இவ்விதழ்கள் அனைத்துமே அவ்வப்போதைய இலக்கியப் படைப்புகளை பிரசுரிக்க முனைப்பு காட்டின. அதோடு சில இதழ்கள் முறையான அரசாங்க பதிப்பு அனுமதி இல்லாமல் தனிச்சுற்றுகளாக நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவை அனைத்தையும் சிற்றிதழ் என வரையறை செய்ய முடியுமா என்பது முக்கியமான கேள்வி. ஆய்வாளர் ராஜமார்த்தாண்டம் (2005) தமிழில் சிறுபத்திரிகை சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து'(1959) இதழிலிருந்து தொடங்குவதாகவே கூறுகிறார். சிற்றிதழ்களின் ஆய்வாளராகக் கருதப்படும் வல்லிக்கண்ணன் அவர்களும் தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில்(1991) இதே கூற்றை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எழுத்து இதழ் எளிய மக்களுக்கான குரலாக இல்லாமல் மேட்டுக்குடிகள் வாசிக்கும் இதழாக இருந்தது, அதன் முதல் இதழ் முன்னுரையின் மூலமே அறிய முடிகிறது. அதே வேலையில் எழுத்து இதழ் 1959ல் உருவாவதற்கு முன்பே பல்வேறு சிற்றிதழ்கள் தமிழில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சி.சு.செல்லப்பா போல அவ்விதழ் ஆசிரியர்கள் சிற்றிதழ் எனும் தன்மையை அறியாமல் இருந்தாலும், குரல் நசுக்கப்பட்டவர்கள் அல்லது பொது புத்திக்கு மாற்றான சிந்தனைக்கொண்டவர்களின் தேவைக்காக உருவாகும் இதழை ‘சிற்றிதழ்’ என வரையறை செய்தால் அம்முயற்சிகள் அனைத்தும் அவற்றில் அடங்கும். ஆக, தமிழகத்தில் அரசியல் நீக்கம் பெற்று ‘எழுத்து’ சிற்றிதழின் தொடக்கமாக வரையரை செய்யப்பட வேண்டிய காரணத்தை ஆராய வேண்டியுள்ளது.

அதற்கு அக்காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழலையே மீள்பார்வைக்குட்படுத்தலாம். தொடக்கத்தில் சமூக இயக்கமாகவே இருந்த தி.மு.க. 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது பொதுவான வரலாறு.

இந்தக் காலக்கட்டத்தில் அதுவரை தமிழகத்தின் சகல அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டிருந்த பார்ப்பனர்கள் திராவிட கழகத்தின் எழுச்சியால் தங்கள் குரல் நசுக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். அதன் பொருட்டே அதிகார பலம் அற்றவர்களான அவர்கள் வெளியிடும் ஒன்றை சிற்றிதழின் தொடக்கமாக வரையரை செய்கிறார்கள் என உணர முடிகிறது.

பார்ப்பனர்களின் அரசியல் சூழலில் ‘எழுத்து’ இதழை சிற்றிதழ் என ஏற்க முடிந்தாலும் அதை தமிழின் சிற்றிதழ் தொடக்கமாக சொல்வது வரலாற்றுப்பிழையாகவே கருத முடியும்.

essay3a1842 முதல் 1942 வரை ஏராளமான தமிழ் இதழ்கள் உதயமாகி இருப்பதும் அவை சமூகத்தின் பொதுபுத்திக்கு மாற்றான கருத்துகளை முன்வைத்து இயங்கியதும் அவற்றில் சில விளிம்புநிலை சார்ந்த இதழ்கள், பகுத்தறிவு இதழ்கள், பெண்கள் நடத்திய இதழ்கள் போன்றவை உள்ளன என்பதும் மாற்றுவெளி ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழில்'(2010) இடம்பெற்ற கோ.கணேஷ் அவர்களின் கட்டுரை வழி அறிய முடிகிறது. அதோடு ‘ஒரு பைசாத் தமிழன்(1907) என்ற வார இதழையும் அயோத்திதாசப் பண்டிதர் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசப் பண்டிதர் இவ்விதழை தங்கள் வாழ்வியல் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட வேதமத, பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, சமூகநீதி, சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை செய்வதற்காக நடத்தினார். இவ்வாறு தமிழில் நடந்த அத்தனை இதழியல் முயற்சிகளையும் புறக்கணித்துவிட்டு சிற்றிதழுக்கான புறவடிவம் மற்றும் பொருளாதார சூழலை மட்டுமே கணக்கில் கொண்டு இலக்கிய இதழ்களை மையப்படுத்துவது கவனித்து ஆராயவேண்டிய பகுதியாகவே இருக்கிறது.

மலேசியாவில் முதல் சிற்றிதழ்

இந்நிலையில் மேற்சொன்ன சிற்றிதழ் வரையறையுடன் உருவாக்கப்பட்ட மலேசியாவின் முதல் இதழாக செம்பருத்தியைக் குறிப்பிட வேண்டும். எழுத்தாளர் மா.சண்முகசிவா அவர்களின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் பசுபதி அவர்கள் தொடங்கிய இவ்விதழ் முற்றிலுமாக அதிகாரத்துக்கு எதிரான குரலை அதில் வெளிவந்த இலக்கியங்கள், கட்டுரை, சிறுகதை மூலமாக பதிவு செய்தது. இதழியல் சூழலில் அனுபவம் கொண்ட இலங்கைத் தமிழரான கணபதி கணேசனை ஆசிரியராக கொண்டு நடத்தப்பட்ட காலத்தில் (1998) அவ்விதழ் மிகவும் தீவிரமாக இடதுசாரி சிந்தனையில் செயல்பட்டது. மேலும் சிற்றிதழுக்கே உரிய காத்திரத்துடன் ஓர் இயக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் இலக்கியத்துக்கான முக்கியத்துவம் மிகக்குறைந்த அளவே இருந்தது. மேலும் பரீட்சார்த்தமான இலக்கிய முயற்சிகள் அதில் நடைபெறவில்லை. நவீனத்துவம் அல்லது பின் நவீனத்துவம் குறித்த அறிமுகங்களையும் அதன் அரசியல் புரிதலோடு செம்பருத்தி உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் இதழ்

மலேசியத்தமிழ் இலக்கியச் சூழலை 2006க்கு முன் – பின் என தாராளமாகப் பிரிக்கலாம். 2006ல்தான் ‘காதல்‘ எனும் இலக்கிய இதழ் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்குப் புதிதாக அறிமுகம் கண்டது. அதற்கு முன் இதுபோன்ற இலக்கிய இதழ் முயற்சிகள் அவ்வப்போது மலேசியாவில் தொடங்கப்பட்டிருந்தாலும், காதல் இதழ் ‘நவீன இலக்கியத்தை நோக்கி…’ என்ற வாசகத்தைத் தாங்கி மலர்ந்தது கவனிக்கத்தக்கது.

‘நவீன இலக்கியம்’ என்ற சொல்லாடல் 2006க்கு முன் அதன் அரசியல் தன்மை அறிந்து பயன்படுத்தப்படவில்லை. மாறாகப் ‘புதியது’ என்ற பொருளிலேயே புழக்கம் கண்டது என்பது படைப்புகளின் வழி தெரியவருகிறது. மத நிறுவனங்களுக்கும், மத மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான விஞ்ஞான மனப்பாங்கு, தனிமனித சுதந்திரம், அரசியலில் ஜனநாயக கோட்பாடு, மக்களிடையே சமத்துவம், பெண்களிடையே சம உரிமை, கலை இலக்கியத்தில் சமயச்சார்பின்மை, புதிய கலை இலக்கிய வடிவங்களின் தோற்றம் என நவீனத்துவத்தின் பல அம்சங்களை 2006க்கு முன் உள்ள மலேசிய இலக்கியங்களில் காண்பது அரிதாகவே இருந்தது.

வல்லினம்

scan0007ஆய்வாளர் க. பஞ்சாங்கம் அவர்கள் காதல் இதழ் குறித்து சிற்றேடு (2012) இதழில் வைக்கும் விமர்சனம் கவனிக்கத்தக்கது. தமிழக எழுத்தாளர்களின் படைப்புகளை அதிகம் தாங்கி வந்த காதல் இதழில் மலேசியாவிற்கான தனித்துவ அடையாளம் கிடைக்கவில்லை என்ற அவரது கூற்று வல்லினம் இதழ் மூலம் நிவர்த்தி கண்டது.

முற்றிலும் மலேசிய கலை, இலக்கியம் மற்றும் அரசியல் சூழலை கவனப்படுத்தி வல்லினம் அச்சு இதழாக 1000 பிரதிகள் வரை விற்பனையானது. எட்டு இதழ்களுடன் அது தன் ஆயுளை அச்சு வடிவில் முடித்துக்கொண்டு இணைய இதழாக உருவெடுத்தது.

www.vallinam.com.my என்ற தளத்தில் வல்லினம் இணைய இதழ் தனது வாசகர்களாக 5000ற்கும் மேற்பட்டவர்களைச் சென்றடைந்திருந்தது. இணையத்தில் வருவதால் இலக்கியம், அரசியல், சமூகம் என பல்வேறு நிலைகளின் எழும் மாற்று சிந்தனையை மிக சுதந்திரமாக முன்வைக்க வல்லினம் சிறந்த களமாக இருந்தது. அதே சமயம் காலாண்டிதழாக வந்துகொண்டிருந்த வல்லினம் இணையத்துக்குள் சென்றதும் மாத இதழாக உருமாறியது. மலேசிய படைப்புகள் மற்றும் மலேசிய இளம் படைப்பாளர்களின் மாற்று சிந்தனைகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் அகப்பக்கத்தின் மூலம் சாத்தியப்பட்டது.

பிற இதழ்கள்

வல்லினம் அச்சு இதழாக வந்த அதே காலக்கட்டத்தில் ‘அநங்கம்’ மற்றும் ‘மௌனம்’ என இரு இதழ்கள் வெளிவந்தன. இதில் கே.பாலமுருகன் ஆசிரியராக இருந்த ‘அநங்கம்’ (2008) சில இதழ்களே வந்து நின்றாலும் சிற்றிதழுக்கான தன்மையை அது உள்வாங்கி இருந்தது. எதிர் அரசியல், பின்நவீனத்துவம், விளிம்பு நிலை மக்கள் என அதன் கவனத்தைக் குவித்தது.

ஆனால், ஏ.தேவராஜன் எனும் எழுத்தாளரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட ‘மௌனம்’ (2009) கவிதைகளைத் தொகுத்து வழங்கும் இதழாக மட்டும் தன் பணியைச் செய்தது. தனித்த, திடமான அரசியல் மற்றும் சிந்தனை இல்லாமல் எல்லோருக்கும் நல்லப்பிள்ளையாக இருக்கும் பிரதியாக அமிழ்ந்து போனது.

மேற்சொன்ன இவ்விரு இதழ்களும் 500 பிரதிக்கு மேல் விற்பனையாகாமல் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவ்விரு இதழ்களுமே பொருளாதார நெருக்கடியில் சிக்கியதும் அவ்விதழ்களின் ஆசிரியர் தலையங்கம் மூலம் தெரியவருகிறது.

சிற்றிதழும் ஆய்விதழும்

அச்சு இதழாக வெளிவந்த ‘வல்லினம்’ போன்ற இதழ் இணைய இதழாக வெளிவந்து பரவலான வாசக பலத்தைப் பெற்றப்பின் மலேசியச் சூழலுக்கு அச்சு வடிவிலான சிற்றிதழ்கள் தேவையா என்ற அடிப்படையான கேள்வியை இனி முன்வைக்க வேண்டியுள்ளது. சுதந்திரமாகக் கருத்துகளை முன்வைத்தல், உடனடியான எதிர்வினை, சமரசமற்ற எழுத்துபோக்கு என பலவற்றுக்கும் ஏற்ற ஊடகமாக இன்று முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களும் அகப்பக்கம், வலைப்பூ போன்ற இணையத் தளங்களும் எளிதாகவும் உடனடியாகவும் பயன்படும் சாதனமாகிவிட்ட காலத்தில் வலுவான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட மலேசியா போன்ற தேசத்தில் 500க்கும் குறைவான பிரதிகளில் அச்சு இதழ்கள் ‘சிற்றிதழ்கள்’ என்ற அடைமொழியுடன் இன்னமும் வெளிவந்தால், அம்முயற்சி ஒருவகையில் பிற்போக்குதான். அல்லது தனிப்பட்ட ஒருவரின் ஆளுமையை மிகைப்படுத்த மெனக்கெடும் முயற்சி மட்டுமே என ஊகத்துக்குள்ளாக்க முடிகிறது.

மாற்று சிந்தனைக்கொண்ட இதழ்களை பரவலாகக் கொண்டுச்செல்லும் திட்டமில்லாத சூழலில், ஊடகங்களின் போக்கு அதி நவீனமாக மாறிவரும் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் உற்பத்தியாகும் இதழ்கள் மீண்டும் தொடக்கப்படுவது அவரவர் தனிப்பட்ட விருப்பமே. இந்தத் தனிப்பட்ட விருப்பத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கலுக்கும், பின்னடைவுக்கும் சமூகத்தைக் குறை சொல்லி பயனில்லை என்றே உணரமுடிகிறது. அல்லது தங்களின் சுய விளம்பரத்துக்காக இலக்கியம், மொழி என்ற பெயரில் பொருளாதார ரீதியாக சுற்றத்தாரை துன்புறுத்துவதும் ஒருவித உளவியல் ரீதியான வன்முறைதான்.

இந்நிலையில் அச்சு ஊடகங்களின் தேவை வேறாகவும் உள்ளதை மறுப்பதற்கில்லை.   அச்சு ஊடகங்கள் இன்று ஆய்வேடுகளுக்கு அவசியமாவது நடைமுறை தேவையின் மூலம் அறிய முடிகிறது. இங்கு சிற்றிதழ் (Little Magazine) மற்றும் ஆய்விதழ் (Journal) வித்தியாசங்களை அறிந்திருப்பதும் அவசியமாகிறது.

சிற்றிதழ் (Little Magazine)

  • பல்வேறு துறை சார்ந்து கட்டுரைகளாக அல்லது பத்திகளாக படைக்கப்பட்டிருக்கும்.
  • இதன் ஆசிரியர்கள் பெரும்பாலும் மொழிவளமும் எழுத்தாற்றலும் மிக்கவர்களாக இருப்பார்களேயன்றி அவர்களுக்கு குறிப்பிட்ட ஒருதுறையிலும் ஆய்வு ரீதியான நேரடி அணுகுமுறை இருக்காது.
  • அப்படியே சில வேளைகளில் ஆய்வுக் கட்டுரை வடிவில் ஏதாவது ஒரு குறிப்பிட்டத் துறையை முன்வைத்து பத்திகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அடுத்தடுத்து எந்தவொரு தொடர்ச்சிகளும் அற்று நின்றுவிடக் கூடியதாக இருக்கும்.
  • ஒரு குறிப்பிட்ட துறையில் அனுபவம் இல்லாதவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெகுமக்களுக்கு ஏற்ற மொழியில் எழுதப்பட்டிருக்கும்.
  • கட்டுரைகள் போலவே புனைவுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும்.

ஆய்விதழ் (Journal)

  • பெருமளவு இவ்வகை சார்ந்த படைப்புகள் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களால் அத்துறையின் பின்னணி, தற்போதைய நிலை ஆகியவை மிக அநுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு பின்பு அதன் எதிர்காலம் குறித்த ஆரூடங்களும் கணிப்புகளும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுபவையாக இருக்கின்றன.
  • ஒரு குறிப்பிட்டத் துறையை முன்னிறுத்தி அது தொடர்பான நடப்புச் செய்திகள், ஆளுமைகளின் தீவிர கருத்துப் பகிர்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், துறை சார்ந்து ஆழமான; தீர்க்கமான செய்திகள், அத்துறைச் சார்ந்த ஆளுமைகளின் பேட்டிகள்; கருத்துகள், விளக்கங்கள் ஆகியவற்றை ஓரளவு நீளமான அல்லது தொடர் வடிவங்களில் உள்ளீடாகக் கொண்டிருக்கும்.
  • இதன் வாசகர்கள் அத்துறையில் இயங்குபவர்களாகவோ அல்லது அத்துறையின்மீது நாட்டமுடையவர்களாகவோ இருப்பர். தொடர் வாசிப்பின்மூலம் துறை சார்ந்த தனது அறிவை வளர்த்துக்கொள்வதில் அதிக அக்கறையும் நாட்டமும் கொண்டிருப்பர்.
  • இதன் ஆசிரியர்கள் குறிப்பிட்ட துறையில் முக்கிய ஆளுமைகளாகவோ, நல்ல தேர்ச்சிப் பெற்றவர்களாகவோ இருப்பர். இதழில் அச்சிடப்படும் ஒவ்வொரு கட்டுரையையும் ஆசிரியர் குழு ஆய்வுக்கு உட்படுத்திய பின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை மட்டுமே மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கும்.
  • சர்ச்சைகளும் விவாதங்களும் ஒரு குறிப்பிட்ட அறிவுத்தளத்திலிருந்து நடைபெற்று புதிய சிந்தனையையும்; மறுபட்ட பார்வையையும் வாசகர்களிடையே கொண்டு சேர்க்கும் திறனைக் கொண்டிருக்கும். விவாதங்கள் மற்றும் எதிர்வினைகள் அனைத்தும் சான்றுகளுடன் நிறுவப்படும் அல்லது எதிர்கொள்ளப்படும்.
  • பெரும்பாலும் துறை சாந்த சொல்லாடல்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆனால், எளிதில் வாசித்து புரிந்துகொள்ளக் கூடிய அளவிலும் அமைந்திருக்கும்.
  • அதிகமான விளம்பரங்களையோ, கண்ணைக் கவரும் படங்களையோ, கேலிச் சித்திரங்களையோ பார்க்க முடியாது. பெரும்பாலும், ஆளுமைகளின் புகைப்படங்கள், தரவுகள், அட்டவணைகள், ஆய்வுக் கட்டுரைகளாயின் அவற்றிற்கு மேற்கோள் நூல்கள் இடம்பெற்றிருக்கும்.

மேற்கண்ட வித்தியாசங்களைக் கொண்டு சிற்றிதழ் மிகவும் மோசமான இதழ் வடிவம் என்றோ ஆய்விதழ் அறிவுஜீவிகளுக்கு மட்டுமே உகந்தது என்றோ முடிவுகட்டிவிட முடியாது. அடிப்படையில் இவ்விரு வகை இதழ் வடிவங்களும் வெவ்வேறு விதமான செயல்பாடுகளையும், நோக்கத்தையும், வாசகர் வட்டத்தையும் கொண்டிருப்பதை இவ்வித்தியாசங்கள் காட்ட முயற்சித்துள்ளன. இவ்விரு வகை இதழ்களில் முழுமையான அறிவுப் பகிர்வு என்பது ஆய்வேடுகள் மூலமாகவே நிகழும் என்பதை நிச்சயம் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள முடியும்.

வல்லினம் இணைய இதழின் வாசகர்கள் நுழைவை ஆராய்ந்தால் சிற்றிதழ்கள் என்பது ஒரு வாசகன் முழுமையாக அனைத்தையும் வாசிக்கும் களம் அல்ல என்பது புரியும். ஒரு வாசகன் தனக்கு உகந்த படைப்புகளையே தேர்ந்தெடுத்து வாசிக்கிறான். அவன் ரசனை, அவன் தேவை என ஒரு படைப்பை தேர்ந்தெடுக்க சிற்றிதழில் சாத்தியம் உண்டு. அதற்கு மிக மிக முக்கியக் காரணம் சிற்றிதழ்களில் ஒரு படைப்புக்கும் மற்ற படைப்புக்கும் தொடர்பு இருப்பதில்லை. ஆனால் ஆய்விதழில் ஒரே தலைப்பை ஒட்டி பல்வேறு தரப்பட்ட ஆய்வுகள் நடக்கின்றன. ஒரு கட்டுரைக்கும் மற்ற கட்டுரைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளதால் ஆய்விதழ்கள் முழுமையாக வாசிக்கப்படவேண்டிய தேவை உள்ளது.

பறை

coverஇச்சூழலில் மலேசியாவில் வெளிவந்து பொதுவாசகர் பரப்பை அடையும் முதல் ஆய்விதழாக ‘பறை’ இதழ் 2014ல் உருவானது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட ஒரு தலைப்பை ஒட்டி பல்வேறு நோக்கிலிருந்து பார்வையை குவித்து அதை ஆய்விதழாகப் பிரசுரமாக்கி புதிய வாசிப்புக்களத்தை வல்லினம் குழுவினர் மலேசிய இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காலத்துக்கு ஏற்ற மாற்றமாகவே இதை கருத முடிகிறது. மேலும் 10,000 இதழ்கள் வரை பறையை பொது வாசகப்பரப்புக்குக் கொண்டுச்செல்லமுடிவது மலேசியாவில் ஆரோக்கியமான முயற்சியே.

முடிவாக

சிற்றிதழ் என்ற ஊடக வடிவத்தை காலம், சூழல், தொழில்நுட்பம் போன்றவற்றின் துணைக்கொண்டே அணுக வேண்டியுள்ளது. போரின் போதும் அதற்குப் பின்பும் பரவலாக்கப்படாத இணைய வசதியினால் ஈழச்சூழலுக்கு அச்சு வடிவிலான இதழ்களின் தேவையையோ தமிழகத்தின் இணையம் புழக்கம் இல்லாத உட்புற பகுதிகளில் அச்சுப்பிரதிகளின் அவசியத்தையோ கேள்விக்குள்ளாக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மலேசியா மற்றும் சிங்கை போன்ற மலிவான இணைய சேவையும் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இலவச இணைய வசதியும் கொண்ட தேசத்தில் அச்சு இதழ்களின் தேவை அதை வகைமையைக் கொண்டே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையே இங்கு பரிந்துரைக்கிறேன்.

வணிக இதழ்களின் செயல்பாட்டில் பிடித்தமில்லாத நிலையிலும், ஒரு படைப்பாளன் தனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்துக்களை மாற்று வழியில் வெளிப்படுத்த விரும்பியவர்கள் கொண்டு வந்ததுதான் பெரும்பான்மையான சிற்றிதழ்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சிற்றிதழ்கள் மின்இதழ்களாக உருவாக முடியும் என்ற உண்மையை நாம் ஏற்க வேண்டியுள்ளது. கணினி, திறன்கைத்தொலைபேசி, மின்புத்தகம் (kindle) என இணைய ஏடுகளை வாசிக்க உருவாகியுள்ள பல்வேறு நவீன சாதனங்களை அறியாமல் அதை உபயோகிக்க தயங்கும் ஒருவர் நவீன காலக்கட்டம் குறித்தும் நவீன சிந்தனை குறித்தும் பேசுவது முரண்நகை.

எனவே எவ்வாறான கருத்துகளை எச்சாதனம் மூலம் மக்களிடம் கொண்டுச் செல்வதென்ற பிரக்ஞை படைப்பாளர்களுக்கும் பதிப்பாசிரியர்களுக்கும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

மேற்கோள் நூல்கள்

  1. கீரைத்தமிழன். (2004). சிற்றிதழ் வகைகளும், படைப்பாளுமையும். https://thoguppukal.wordpress.com
  2. ஜெயமோகன். (2010). வாசகனும் எழுத்தாளனும். http://www.jeyamohan.in/7781.
  3. ஆதவன் தீட்சண்யா. (2012). ஆதவன் தீட்சண்யா பதில்கள். http://www.vallinam.com.my/issue40/aathavanbathilgal.html.
  4. எம்.ஏ.நுஃமான். (2006). தனது மொழியும் இலக்கியமும். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
  5. கந்தசாமி, சா. (2014). சிற்றிதழ்கள். http://maattru.com/pp/?p=402.
  6. பஞ்சாங்கம், க. (2012). சிற்றேடு. பேங்கலூர்: MSM Foundation Bangalore.
  7. ராஜமார்த்தாண்டம். (2005). தமிழ் இனி 2000. சென்னை: காலச்சுவடு அறக்கட்டளை.
  8. முரசு நெடுமாறன். (1997). மலேசியத் தமிழ்க் கவிதை களஞ்சியம். சென்னை: அருள்மதி பதிப்பகம்.
  9. முரசு நெடுமாறன். (2007). மலேசியத் தமிழரும் தமிழும். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
  10. வல்லிக்கண்ணன். எழுத்து-முதல் வருடம். http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=180&pno=83
  11. (1991). தமிழில் சிறு பத்திரிகைகள். சென்னை: ஐந்திணை பதிப்பகம்.
  12. (2004). இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு. சென்னை: சந்தியா பதிப்பகம்.
  13. (ஏப்ரல், 2008). காலச்சுவடு இதழ். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
  14. (2010). மாற்றுவெளி. சென்னை: பரிசல் புத்தக நிலையம்.
  15. (ஜூன், 2012). காலச்சுவடு இதழ். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
  16. Gorgon, H. T. (1961). Little Magazineshttp://www.bl.uk/reshelp/findhelprestype/journals/littlemagazines/littlemagazines.html
  17. Peter Brooker & Andrew Thacker (2009). The Oxford Critical and Cultural History of Modernist Magazines: Vol. 1 Britain and Ireland 1880-1955. Oxford: OUP.
  18. Wolfgang G. (1993). Little Magazine Profiles: The Little Magazines in Great Britain, 1939-1993. Salzburg: University of Salzburg.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...