ஹருகி முராகமி சிறுகதை: கினோ

haruki-murakami-kinoஅந்த மனிதன் எப்போதும் அதே இருக்கையிலேயே உட்கார்ந்தான். அந்த இருக்கை உயரமான பரிமாறும் மேடைக்குப் பக்கத்தில் இருந்தது. அது காலியாக இருந்தது. ஆனால் அது எப்போதும் காலியாகத்தான் இருக்கும். மதுபான விடுதியில் எப்போதாவதுதான் கூட்டம் நிரம்பி வழியும், அந்த இருக்கை கவனத்திற்கு வராமலும் வசதியற்றும் இருக்கும். அதற்குப் பின்னாலுள்ள படிக்கட்டு வளைந்து இறங்கியிருக்கும். அந்த இடத்தில் தலை குனியாமல் உங்களால் நிற்க முடியாது. அந்த மனிதன் உயரமாக இருந்தான், ஆனாலும் எதனாலோ நெருக்கடியான அந்த இடத்தை தேர்ந்தெடுத்திருந்தான்.

கினோ முதன் முதலில் அந்த மனிதன் மதுபான விடுதிக்கு வந்ததை நினைவு கூர்ந்தான். அவன் உருவம் கினோவின் கண்களுக்கு உடனடியாகப் படிந்துவிட்டது. மொட்டையடித்த வழவழப்பான தலை. ஒல்லியான ஆனால் அகலமான தோள்கள். அவன் பார்வை கூர்மையாக இருந்தது. உறுதியான தாடை, அகன்ற நெற்றி, முப்பது வயதுக்குள் இருக்கும். கினோ அவன் ஒரு யசூக்காவாக இருப்பான்; அவன் அடியாட்கள் அவனைத்தொடர்ந்து வருவார்கள் என்று நினைத்தான். அது ஒரு ஏப்ரல் மாதத்தின் மாலை நேரம். ஏழரை மணி ஆகியிருந்தது. அவன் ஒரு நீளமான கிரே வர்ண நீள கோட் அணிந்திருந்தான். அப்போது மழைகூட இல்லை. மதுபான விடுதி ஆளற்று இருந்தது. அந்த மனிதன் கடைசியாக இருந்த அந்த இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்தான். கோட்டைக் கழற்றியபடி மெல்லிய குரலில் ஒரு பியர் கொண்டுவரும்படி சொன்னான். அரை மணி நேரம் கழித்து பியரைக் குடித்துவிட்டு, அரை அல்லது ஒரு இன்ஞ்ச் உயரத்திற்கு கையை தூக்கி அழைத்தான். கினோ சென்றதும், விஸ்கிக்கு ஆர்டர் செய்தான். “என்ன பிராண்ட்?” கினோ கேட்டான். எதுவாக இருந்தாலும் சரி என்றான் அவன்.

எதாவது சாதாரண ஸ்காட்ச் விஸ்கி இரண்டு சிறிய பெக்குகள். அதே அளவு தண்ணீர். சிறிதளவு ஐஸ் போட்டால் நல்லது.

கினோ, விஸ்கியை கிளாசில் ஊற்றினான். அதே அளவு தண்ணீர். இரண்டு சிறிய அளவில் உறைவிக்கப்பட்ட ஐஸ் கட்டிகள். அந்த மனிதன் ஒரு தடவை உறிஞ்சினான். மதுக் கிண்ணத்தைப் பார்த்தான். பிறகு கண்களைப் பார்த்து சொன்னான். “இது நன்றாக இருக்கிறது.”

அரை மணி நேரம் படித்துக் கொண்டிருந்தான். பின் எழுந்து ரசீதுக்கான தொகையைப் பணமாகக் கொடுத்தான். பணத்தை சரியாக எண்ணிக் கொடுத்ததால் சில்லறை எதுவும் கொடுக்கும் சூழல் ஏற்படவில்லை. அவன் கதவை திறந்து கொண்டு போனதும் கினோ நிம்மதிப் பெருமூச்சு விட்டான்

அந்த மனிதன் தினமும் கினோவின் மதுபானவிடுதிக்கு வரத்துவங்கினான். ஒருதடவை அல்லது வாரத்தில் தொடர்ந்து இரு முறை. அவன் சொல்லிவைத்தமாதிரி முதலில் பியர் பிறகு விஸ்கி. சில சமயங்களில் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் அன்றாட உணவுப்பட்டியலைப் பார்த்து சிறிய அளவிலான உணவுவகைகள் எதாவது வாங்குவான்.

அந்த மனிதன் எப்போதுமே எதுவும் பேசாதவனாக இருந்தான். மாலை நேரத்துக்கு முன்னால் சரியாக வருவான். அவன் கக்கத்தில் புத்தகமொன்று சொருகப்பட்டிருக்கும். அதை கவுண்டரின் மீது வைப்பான். எப்போதெல்லாம் படிப்பதிலிருந்து அவன் களைப்படைகிறானோ (களைப்படைகிறான் என்று கினோ நினைத்தான்} புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி அவனுக்கு முன்னாலிருக்கும் அலமாரியில் வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருக்கும் பாட்டில்களைப் பார்ப்பான்.

கினோ அந்த மனிதனைக் கவனிக்கத்துவங்கியிருந்தான்.

ஆனால் அந்த மனிதன் அதனை சட்டை பண்ணியதாகத் தெரியவில்லை. கினோ அவனிடம் அதிகமாகப் பேசவும் இல்லை. மற்றவர்களைப் போல பேசாமலிருப்பது சிரமமாகவும் இல்லை. அந்த மனிதன் படித்துக் கொண்டடிருக்கும் போது, கினோ தான் தனியே இருக்கும்போது செய்யும் வேலைகளான பாத்திரங்களைக் கழுவுதல், சாஸ் தயாரித்தல், இசைதட்டுகளை தேர்ந்தெடுத்தல் இல்லையென்றால் செய்தித்தாளின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருத்தல் என ஈடுபட்டிருப்பான்.

கினோவுக்கு அந்த மனிதனின் பெயர் தெரியாது. அவன் கடைக்கு வரும் ஒரு வாடிக்கையாளன். வருவான். பியர், விஸ்கி சாப்பிடுவான். அமைதியாகப் படித்துக் கொண்டிருப்பான். அவன் யாரையும் கண்டு கொள்வதில்லை. அவனைப்பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்வதற்க்கு கினோவுக்கு என்ன இருந்துவிடப்போகிறது.

கல்லூரி நாட்களில் கினோ ஒரு நடுத்தொலைவு ஓட்டப்பந்தய வீரன். ஆனால் அவன் தன் இளங்கலை வருடத்தில் தன் காலை ஒடித்துக் கொண்டாதால் ஆட்டப்பந்தய அணியில் சேர முடியாமல் போய்விட்டது. படிப்பு முடிந்ததும் அவனது பயிற்சியாளரின் ஆலோசனைப்படி விளையாட்டு உபகரணங்கள் விற்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான். அதில் பதினேழு வருடங்கள் வேலை பார்த்தான். விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகளில் தங்கள் நிறுவனப் பொருட்களை விற்க வைப்பதும், முண்ணனி விளையாட்டு வீரர்கள் தங்கள் நிறுவன பொருட்களை பயன்படுத்தச் செய்வதும் அவன் வேலை

நிறுவனத்தின் மத்திய அலுவலகம் ஒகயாமாவில் இருந்தது. அது பெரும்பாலும் அறியப்படாத நிறுவனம். நைக் அல்லது அடிட்டாஸ் நிறுவனம் போல பெரிய புகழ்பெற்ற ஓட்ட வீரர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடிய வசதியான நிறுவனம் அல்ல. ஆனால் சிறப்பான நுணுக்கமான கைவேலைப்பாடுகள் செய்யப்படும் அந்தப் பொருட்களை அறிந்த சிலர் பயன்படுத்துகிறார்கள். ‘நேர்மையாக உங்கள் வேலையை செய்யுங்கள். அதற்கான வெகுமதி உங்களுக்கு கிடைக்கும்’ என்பதே அந்த நிறுவனரின் விளம்பர வார்த்தை. அந்த ஆரவாரமில்லாத வார்த்தைகள் கினோவின் குணாதிசயங்களுக்குப் பொருத்தமாக இருந்தன. குறிப்பாகச் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளாதவன். யாரோடும் சகஜமாகப் பழகும் சுபாவம் இல்லாதவனால் விற்பனையை எப்படி உயர்த்திவிட முடியும்.

கினோ வேலையை விட்டுவிட்டான். அதற்கு திருப்தியில்லாத இந்த வேலை காரணமில்லை. அவனோடு அலுவலகத்தில் வேலைபார்த்த அவனது நெருக்கமான நண்பனுக்கும் அவன் மனைவிக்கும் இருந்த ரகசிய உறவே காரணம். கினோ வீட்டை விட அதிக நேரம் டோக்கியோ நகரவீதிகளில்தான் சுற்றிக் கொண்டிருப்பான். பெரிய உடற்பயிற்சி சாதனப் பையில் ஷூக்களை திணித்துக் கொண்டு ஜப்பானின் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகளுக்குச் சுற்றிக் கொண்டிருப்பான். அதோடு உள்ளூர் கல்லூரிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்களுக்கும் சென்று கொண்டிருப்பான்.

கினோ வீட்டிலில்லாத போது அவன் நண்பனும் மனைவியும் படுக்கை அறையைப் பகிர்ந்துகொள்ளத் துவங்கியிருந்தார்கள். சிறிய சந்தேகங்களையெல்லாம் கினோ பொருட்படுத்தாதவன். அவனைப் பொறுத்தவரைக்கும் அவன் திருமணவாழ்க்கை நல்லபடியாகத்தான் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் எதையும் சொன்னதில்லை. அவன் தன் வேலையிலிருந்து சீக்கிரமாக வராமலிருந்தால் இப்படி ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்கவே மாட்டான்.

அவன் டோகியோவிற்க்கு சென்ற அன்று கசாயிலிருக்கும் அவன் தன் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றான். அவன் மனைவியும் நண்பனும் படுக்கை அறையில் பின்னிப் பிணைந்திருந்ததைக் கண்டான். கினோ கதவைத் திறந்த போது அவன் மனைவி மேலிருந்து இயங்கிக் கொண்டிருந்தாள். அவளது அழகான மார்பகங்கள் மேலும் கீழும் குலுங்கிக் கொண்டிருந்தன. அப்போது அவனுக்கு முப்பத்து ஒன்பது வயது. அவன் மனைவிக்கு முப்பத்து ஐந்து. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கினோ கதவை திறந்ததும் அவளை நேருக்கு நேர் பார்த்தான். தலையைக் குனிந்து கதவை அடைத்தவன் குடியிருப்பை விட்டு வெளியே வந்தான். மறுபடி அங்கு போகவே இல்லை. அடுத்த நாள் தன் வேலையை விட்டுவிட்டான்.

கினோவுக்கு திருமணமாகாத ஒரு பெரியம்மா இருந்தாள். அவன் அம்மாவின் மூத்த சகோதரி. அவனது இளம்பிராயத்திலிருந்தே அவனிடத்தில் அன்பாக இருப்பவள்.

அவளுக்கு ஒரு வயதான ஆண் நண்பர் ஒருவர் உண்டு (காதலர் என்று விளிப்பது சாலப்பொருத்தமாக இருக்கும்) அவர் அயோமாவில் சிறிய வீடு ஒன்றை அவளுக்குக் கொடுத்திருந்தார். அவள் அதன் இரண்டாவது மாடியில் வசித்தாள். முதல் மாடியில் ஒரு காபிக்கடையை நடத்திவந்தாள். வாசலில் சின்ன அழகான தோட்டம், அழகான வில்லோ மரங்கள், தாழ்ந்த இலைகளோடு கூடிய செழுமையான கிளைகள். நெசு மியூசியத்திற்க்கு நேர்பின் பக்க தெருவில் அந்த வீடு இருந்தது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் இடமல்ல அது. ஆனால் அவன் பெரியம்மாவுக்கு ஆட்களை ஈர்க்கும் சாமர்த்தியம் இருந்தது. அவளின் காபிக்கடையில் ஓரளவுக்கு சுமாரான வியாபாரம் இருந்தது.

அவளுக்கு அறுபதுவயதானதாலும், அவள் முதுகில் அடிபட்டதாலும் கடையை நடத்துவது நாளடைவில் அவளுக்கு சிரமமாக இருந்ததால் அவள் ரிஸார்ட்டிலிருந்த Izu Kogen Highlands. குடியிருப்புக்கு சென்றுவிட இருந்தாள்.

“இந்தக்கடையை நீ எடுத்துக் கொண்டால் நான் சந்தோஷமடைவேன்,” அவள் அவனிடம் கேட்டாள். இது அவன் மனைவியின் கள்ளத்தொடர்பை அவன் அறிவதற்கு மூன்றுமாதங்களுக்கு முன்னால் நடந்தது. நல்ல விஷயம்தான் அவன் சொன்னான். ஆனால் நான் என் வேலையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்றவன் வேலையை ராஜினாமா செய்த பிறகு அவளுக்கு போன் செய்து, “அந்த இடம் இன்னும் இருக்கிறதா விற்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டான். ரியல் எஸ்டேட் ஆளிடம் சொல்லியிருக்கிறேன். இன்னும் விலை படியவில்லை என்றாள் அவள். நான் அந்த இடத்தில் மதுபான விடுதி நடத்திக் கொள்ளட்டுமா? மாதாமாதம் வாடகை தந்துவிடட்டுமா?” கினோ சொன்னான்.

”சரி. உன் வேலை என்னாயிற்று,” அவள் கேட்டாள்

உன் மனைவிக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே

“நாங்கள் அனேகமாக விரைவில் விவாகரத்து செய்து கொள்வோம்.” கினோ காரணம் சொல்லவில்லை. அவளும் கேட்கவில்லை. போனின் மறுமுனையில் மௌனம் நீடித்தது. அதன் பின் பெரியம்மா மாதவாடகையைச் சொன்னாள். அது கினோ எதிர் பார்த்ததைவிடக் குறைவாக இருந்தது. என்னால் இதை சரியாகச் செய்ய முடியும் அவன் சொன்னான்.

அவனும் அவன் பெரியம்மாவும் அதிகம் பேசிக் கொண்டதில்லை. (அவன் அம்மா அவளிடம் பழகுவதை விலக்கியே வைத்திருந்தாள்) ஆனால் அவர்களுக்குள் பரஸ்பர நட்பும் அன்பும் இருந்தது போலிருந்தது. கினோ வாக்குறுதியை மீறும் ஆளல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள்

கினோ தன் சேமிப்பில் பாதியை செலவிட்டு காப்பிக்கடையை மதுபான விடுதியாக மாற்றினான். எளிமையான நாற்காலி மேஜைகள் வாங்கினான். நீள மதுபான கவுண்டரை அமைத்தான். வீட்டிலிருந்த இசைத்தட்டு சேகரிப்பை எடுத்துவந்தான். வரிசையாக அலமாரியில் அடுக்கி வைத்தான். அவனிடம் நல்ல ஸ்ட்ரியோ மற்றும் இசைத்தட்டு ஒலிபரப்புக் கருவிகள், ஸ்பீக்கர்கள் எல்லாம் அவன் திருமணமாகாத காலத்திலேயே வாங்கியவை. ஆனால் அவன் பழைய ஜாஸ் இசைத்தட்டுகளைக் கேட்கவே விரும்பினான். அதுதான் அவன் ஒரே பொழுது போக்கு. கல்லூரியில் அவனுக்குத் தெரிந்த யாரிடமும் அவன் இதைச் சொன்னதில்லை. Roppongi –ல் அவன் பகுதி நேர மதுபானக்கடை ஊழியராக வேலைபார்த்தான். அதனால் காக்டெய்ல் கலக்கும் கலை அவனுக்கு கை வந்திருந்தது.

அவன் தன் மதுபானக் கடைக்கு கினோ என்று பெயர் சூட்டினான். அதை விட சிறந்த பெயர் அவனுக்கு வரவில்லை.முதல் வாரத்தில் ஒரு வாடிக்கையாளர்கூட வரவில்லை. அவனதற்காக கவலை கொள்ளவில்லை. அவன் அந்த இடத்தை விளம்பரப்படுத்தவில்லை. கண்கவரும் பெயர்ப்பலகை கூட வைக்கவில்லை. அவன் பொறுமையும் நிதானமுமாக ஆர்வத்துடன் அந்த தெருவில் போகிறவர்கள் வருவார்களா என்று காத்திருந்தான்

அவனது முதல் வாடிக்கையாளருக்காகக் காத்திருந்த போது அவனுக்குப் பிடித்தமான இசையை ரசித்துக் கேட்டான். நீண்ட நாட்களாகப் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்களைப் படித்தான். மழையை வரவேற்கும் வறண்ட நிலம்போல அவன் தன் தனிமையை அமைதியை யாருமற்ற தன்மையை மூழ்கடித்தான். Art Tatum பியானோ இசைக் கோர்வைகளைக் கேட்டான். அது அவ்னது மன நிலைக்கு ஏதுவாக இருந்தது

தன் மனைவியோடு படுக்கையில் கிடந்த தன் அலுவலகத்தோழன் மீது ஏன் தனக்கு கோபமோ கசப்போ வரவில்லை என்று அவனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இந்த துரோகம் நிச்சயமாக அதிர்ச்சிகரமான ஒன்றுதான். அவன் வாழ்வில் எதையும் சாதித்திருக்கவில்லை. அவனால் உருப்படியாக எதையும் செய்ய முடிந்ததில்லை, யாரையும் சந்தோஷப்படுத்தியதில்லை. சந்தோஷம்? அது சரியாக எது என அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அது கோபம், வலி, ஏமாற்றம் அல்லது ராஜினாமா அதை எப்படி உணர்வது.

குறிக்கோளற்று திரியும் மனதைக் கட்டிப்போடும் முகமாக அவன் அந்த இடத்தினை உருவாக்கியிருந்தான். அந்த சிறிய மதுபான விடுதி கினோ அந்த சந்துக்குள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதன் வடிவமைப்பால் அல்லாது வினோதமான வசதியான இடம்.

அது வசதியான இடம் என்று முதலில் கண்டறிந்தது ஒரு இருப்பிடம் தேடியலைந்த சாம்பல் நிறமும் நீளவாலுடனுமிருந்த பெண் பூனை. அது எல்லா இடத்தையும் விட்டுவிட்டு, மூலையிலிருந்த காட்சிப்பொருள்கள் வைக்கும் சட்டத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பது போல சுருண்டு படுத்துக் கிடந்தது. நாளைக்கு ஒரு முறை அவன் சாப்பாடு வைத்து தண்ணீரையும் மாற்றி வைப்பான். அதோடு சரி. பூனை நினைத்த நேரத்தில் வெளியே சென்றுவர சிறு வழியையும் அமைத்துவைத்தான்

அந்தப் பூனை தன்னோடு கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வந்திருக்க வேண்டும். அது வந்த பிறகு அவ்வப்போது சில வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள். சிலர் தொடர்ந்து வர ஆரம்பித்தார்கள் அவர்களுக்கு இந்தச் சந்தும் பழமையான வில்லோ மரங்களும், அமைதியான நடுத்தர வயது உரிமையாளனும், மூலையில் வந்து போகும் சாம்பல் நிறப்பூனையும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அவர்கள் வந்து போகும்போது சில புதிய வாடிக்கையாளர்களையும் அழைத்து வந்தார்கள். வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் வாடகை கொடுக்கும் அளவுக்கு பணம்வர ஆரம்பித்தது. கினோவுக்கு அது போதுமானதாக இருந்தது

தலை மழித்த இளைஞன் மதுபான விடுதி ஆரம்பித்த இரண்டு மாதங்கள் கழித்து வரத்துவங்கியிருந்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்குப்பின் கினோ அவனது பெயர் கமிட்டா என்று அறிந்தான்.

அன்று மெல்லிய மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழைக்கு குடைகூட தேவையாக இருக்காது. மதுபான விடுதியில் மூன்று வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். கமிட்டாவும் கோட் அணிந்த இரண்டு பேரும் இருந்தார்கள். மணி ஏழரை ஆகியிருந்தது. கமிட்டா வழக்கம்போல தூரமாக ஸ்டூலில் அமர்ந்திருந்தான். மேஜையில் இருந்த இருவரும் பினோட்நோய்ர் சிகப்பு வைனைப் பருகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வரும்போதே பாட்டிலைக் கொண்டுவந்திருந்தார்கள். அதை அங்கு வைத்துக் குடிக்க கினோவிடம் அனுமதி கேட்டார்கள். அப்படி நிகழ்வது அவனுக்கு முதல் தடவை. அதை மறுக்க அவனுக்கு எந்தக் காரணமும் இல்லை. ஐந்தாயிரம் யென் கட்டணம் தர சம்மதித்தார்கள். அவன் பாட்டிலைத்திறந்து இரண்டு வைன் கிண்ணங்களைக் கொண்டுபோய் வைத்தான். ஒரு கோப்பையில் பருப்புவகைகளைக் கொண்டுபோய் வைத்தான். எவ்வித பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. அவர்கள் நிறைய சிகரெட் புகைத்தார்கள். கினோவுக்கு புகை பிடிக்காது அதனால் அவர்களை வரவேற்கத்தக்கவர்களாக நினைக்கவில்லை. கினோ அமைதியாக கோல்மேன் ஹாக்கின்சின் “Joshua Fit the Battle of Jericho.” இசைக் கோர்வையைக் கேட்டுக் கொண்டிருந்தான். அதில் வரும்மேஜர் ஹோலியின் தனி இசை அற்புதமாக இருந்தது.

ஆரம்பத்தில் இருவரும் ஒருமித்து உற்சாகமாக இருந்தார்கள். வைனை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு எதோ ஒரு விஷயத்தில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கவேண்டும். என்னவாக இருக்கும் என்று கினோவுக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் பிரச்சினை வளர்ந்துகொண்டே போனது. ஒரு கட்டத்தில் ஒருவன் மேஜையை சாய்த்தான். நிரம்பியிருந்த சாம்பல் கிண்ணமும் மதுக் கோப்பையும் கீழே விழுந்து சிதறின. கினோ துடைப்பத்தோடு உடனே சென்று சுத்தம் செய்து, புது சாம்பல் கிண்ணத்தையும் மதுக் கோப்பையையும் கொண்டுபோய் வைத்தான்.

கமிட்டா அந்த நேரம் கினோ அவன் பெயர் அறிந்திருக்கவில்லை. அவன் அவர்களின் செயலில் அதிருப்தி அடைந்தவன் போல காணப்பட்டான். அவன் முகபாவங்கள் மாறவில்லை. ஆனால் அவனது இடது கைவிரல்கள் கவுண்டரின் மீது அசைந்து கொண்டிருந்தன. பியானோ கலைஞன் விசையை சோதிப்பதுபோல இருந்தது. சூழ்நிலையை சகஜமாக்கவேண்டும். கினோ நினைத்தான். அவர்களை நோக்கிச் சென்று, “மன்னிக்க வேண்டும்” மெல்லிய குரலில் சொன்னான். “நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால் அற்புதமாக இருக்கும்”

ஒருவன் பளிச்சிட்ட விழிகளுடன் கினோவைப் பார்த்தான். மேஜையிலிருந்து எழுந்திருந்தான். கினோ அதைக் கவனித்திருக்கவில்லை. அந்த மனிதன் பெருத்த உருவம் கொண்டவனாக இருந்தான். அதிக உயரமில்லை. திரண்ட மார்புகளும் திரட்சியான புஜங்களோடும் இருந்தான். அவனைப் பார்க்க சுமோ வீரன் போல இருந்தான்.

இன்னொரு மனிதன் சிறிய உருவமாய் இருந்தான். ஒல்லியாக கோபமாகப் பார்த்தான். மெல்ல இருக்கையிலிருந்து எழுந்தான். கினோ அவர்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அவர்கள் சொல்லி வைத்த மாதிரி அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பேச்சை நிறுத்திவிட்டு கினோவோடு வாக்குவாதம் செய்யத்தயாரானார்கள். இது போன்ற சூழலுக்காக ரகசியமாகக் காத்திருந்தது போல அவர்கள் ஒத்திசைவு இருந்தது.

அவர்கள் அணிந்திருந்த கோட் அதிக விலையுடைதாக தெரிந்தது. ஆனால் உற்றுக் கவனிக்கும்போது விலை மலிவானதாகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்படாமலிருந்ததும் தெரிந்தது. அவர்கள் முழுமையான யசூக்காக்கள் அல்ல. அவர்கள் எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் அது சிறப்பான வேலையாக இருக்காது. தடிமனாக இருந்தவன் முடியை ஒட்ட வெட்டியிருந்தான். அவனுடன் வந்தவன் செம்பளுப்பு நிறத்தில் தலைக்கு சாயம்பூசி குதிரைவால் போல முடியை நீளமாக வளர்த்திருந்தான். கினோ அவர்களை உற்றுப் பார்த்தான். எதோ அசம்பாவிதம் நடக்கக் கூடும்போல தெரிந்தது. அவன் கக்கத்தில் வியர்வை வழிய ஆரம்பித்தது.

”மன்னிக்க வேண்டும்” குரல் கேட்டது.

கினோ திரும்பிப்பார்த்தபோது கமிட்டா அவனுக்குப் பின்னால் நின்றிருந்தான்.

”எங்க விஷயத்துல தலையிட்டு தொந்தரவு குடுக்கற?” இருவரில் பெரியவனாக இருந்தவன் சொன்னான். அவன் குரல் கண்டிப்பும் மென்மையுமாக இருந்தது.

”வேலை பார்ப்பவர்களை குற்றம் சொல்லாதீர்கள்” கமிட்டோ, கினோவை சுட்டிக்காட்டச் சொன்னான்.

“நான் தான் உங்களை அமைதியாக இருக்கும்படி சொல்லச் சொன்னேன். என்னால் கவனத்துடன் படிக்க முடியவில்லை.”

கமிட்டாவின் குரல் மெல்லியதாக இருந்தது. வழக்கத்தைவிட அலட்சிய தொணியில் இருந்தது. கூடாத ஒன்று நிகழ்ப்போவதாக கலக்கம் வந்தது

”புத்தகம் படிக்க முடியலையா?” ஒல்லியாக இருந்தவன் இலக்கண சுத்தமாக திரும்பச் சொன்னான்.

“உனக்கு வீடு இல்லையா?” தடிமனாக இருந்தவன் கேட்டான்

”இருக்கு. கமிட்டா சொன்னான் பக்கத்துலதான் குடி இருக்கேன்”

பின்ன ஏன் நீ வீட்டுக்குப்போயி படிக்கக் கூடாது?”

“இங்க படிக்கறத நா விரும்பறேன்” கமிட்டா சொன்னான்

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

புத்தகத்தோடு ஒல்லியாக இருந்தவன் கேட்டான் “நா புத்தகத்த வசிக்கறேன்.”

”நா எனக்குள்ள அமைதியா படிச்சுக்க விரும்பறேன்” கமிட்டா சொன்னான். “அதும்போக, வார்த்தைகளை தப்பா உச்சரிச்சா எனக்குப் பிடிக்காது.”

”இது நீ எழுதினதா?’ தடியன் கேட்டான் “இவன் என்ன மாதிரி ஆளாருப்பான்.”

”உன்னோட பேர் என்ன” குதிரைவால் கேட்டான்.

“என் பேரு கமிட்டா. அவன் சொன்னான். அது கடவுள் பேரு கமி. அப்புறம் நிலம். கடவுள் நிலம். ஆனா கண்டாண்ணு சொல்லக்கூடாது. கமிட்டான்னு உச்சரிக்கணும். எனக்கு ஞாபகம் இருக்கு” தடிமனாக இருந்தவன் சொன்னான்

“நல்ல யோசனை, ஞாபகத்துல வச்சுக்கறது நல்லது”

”சரி நாம வெளில போலாமா” ஒல்லியானவன் கேட்டான்.

“நாம என்ன செய்ய விரும்பறமோ அந்த வழியில.”

எனக்கு சம்மதம். கமிட்டா சொன்னான். ”எங்க வேணாலும் போங்க. போறதுக்கு முன்னால பணத்த கொடுத்துட்டுப் போங்க. இங்க எந்த தொந்தரவும் பண்ணக்கூடாது.”

கமிட்டா, கினோவிடம் அவர்களின் ரசீதைக் கொண்டுவரச் சொன்னான். பிறகு அவனது ரசீது தொகையை சரியான சில்லறைகளாக கவுண்டரில் வைத்தான். குதிரை வால் பத்தாயிரம் யென் பணத்தை தன் பணப்பையிலிருந்து எடுத்து கவுண்டரில் போட்டான்.

“எனக்கு பாக்கி சில்லறை எதுவும் தேவையில்லை”

”என்ன ஒரு மோசமான இடம்” தடித்தவன் இகழ்ச்சியாகச் சொன்னான்.

“சரிதான். கீழ்த்தரமான வாடிக்கையாளர்களுக்கான கீழ்த்தரமான இடம்.” கமிட்டா சொன்னான். “இந்த இடம் உங்களுக்கு சரிப்பட்டு வராது. வேறு இடத்திற்குப் போங்கள். அது எனக்கு தெரியாது.”

“புத்திசாலித்தனமா பேசறியாக்கும். சிரிப்பா இருக்கு.” தடியன் சொன்னான்.

”அப்புறமாக யோசித்துப் பார்த்து நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்” கமிட்டா சொன்னான்.

“அதெல்லாம் முடியாது. நாங்கள் எங்கு போக வேண்டும் என்பதை நீதான் சொல்ல வேண்டும்” குதிரை வால் சொன்னான். மெல்ல அவன் நாக்கால் உதடுகளை நக்கினான். பாம்பு இரை தேடுவது போலிருந்தது அது.

தடிமனாக இருந்தவன் கதவை திறந்து கொண்டு வெளியே போனான். குதிரைவால் அவனுக்குப் பின்னால் போனான்.

“நிச்சயமாக உனக்கு பிரச்சினை ஒன்றும் இல்லையே?” கினோ கமிட்டாவிடம் கேட்டான்.

”கவலைப்பட வேண்டாம் கமிட்டா மெல்லிய புன்னகையோடு சொன்னான். நீ எதுவும் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள் கினோ. இது விரைவில் சரியாகி கமிட்டா வெளியே சென்று கதவை அடைத்தான். இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது. சற்று முன் பெய்ததை விட சற்று அதிகமாக இருந்தது. கினோ ஸ்டூலில் அமர்ந்து காத்திருந்தான். அவன் கவனம் வெளியிலேயே இருந்தது.அவனால் எதையும் கேட்க முடியவில்லை. கமிட்டாவின் புத்தகம் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நாய் தன் எஜமானனுக்கு காத்திருப்பது போல கவுண்டரில் விரித்தபடி இருந்தது. பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். கதவு திறந்தது. கமிட்டா வேகமாக உள்ளே வந்தான்.

“எனக்கு ஒரு துண்டு தருவீர்களா?” அவன் கேட்டான்

கினோ புதிய துண்டு ஒன்றைக் கொடுத்தான். கமிட்டா முகம் துடைத்தான் .பிறகு கழுத்து, முகம் கடைசியாக இரண்டு கைகளையும் துடைத்துக் கொண்டு, “நன்றி எல்லாம் சரியாகிவிட்டது.”என்றான். “அவங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் தலவச்சுக் கூட படுக்க மாட்டாங்க.”

உலகத்தில் என்ன நடக்கிறது?

கமிட்டா தலையசைத்தபடி உனக்கு தெரியாமலிருப்பது நல்லது” அவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான். மீதி விஸ்கியைக் குடித்தான். புத்தகத்தில் விடுபட்டிருந்ததை வாசிக்க ஆரம்பித்தான்

மாலை நேரத்திற்க்குப் பிறகு, கமிட்டா வெளியேறிய பின் கினோ வெளியே சென்று அக்கம்பக்கத்தில் பார்த்தான். அங்கு அமைதியாக இருந்தது. அந்த இடத்தில் சண்டை நடந்த அறிகுறி எதுவும் இல்லை. ரத்தக் கறை இல்லை. என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. அவன் மதுபான விடுதிக்குச் சென்று வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தான். ஆனால் அந்த இரவு யாரும் வரவில்லை. பூனையும் திரும்பவில்லை. அவன் சிறிது வொய்ட் லேபிள் விஸ்கியை ஊற்றிக் கொண்டு உட்கார்ந்தான். அதே அளவு தண்ணீர் ஊற்றினான். இரண்டு துண்டு ஐஸ் கட்டிகளைப் போட்டான். பருகினான். அவன் சிறப்பான எதையும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் அந்த இரவு அவன் அமைதிக்கு ஆல்கஹால் தேவைபட்டது.

அந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வாரம் கழித்து கினோ தன் வாடிகையாளர் ஒருத்தியுடன் இரவைக் கழித்தான். தன் மனைவியைப் பிரிந்து வந்த பிறகு உறவுகொள்ளும் முதல் பெண் அவள்தான். அவளுக்கு முப்பது வயது. அல்லது அதற்கு மேலிருக்கலாம். அவள் அழகைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அவளிடம் எதோ ஒன்று குறிப்பிட்டு சொல்லவியலாத அளவுக்கு சிறப்பாக இருந்தது.

அந்தப் பெண் அதற்கு முன் பல தடவை அங்கு வந்திருக்கிறாள். வரும்போதெல்லாம் அவள் வயதொத்த ஒருவனோடு வருவாள். அவன் ஆமைத்தோட்டினால் ஆன பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்து, கோட் மாதிரியொன்றில் இருப்பான். அவன் தலைமயிர் ஒழுங்கற்று இருக்கும். அவன் கழுத்துச் சுருக்கு அணிந்திருக்கமாட்டான். அவன் வழக்கமான எந்த நிறுவனத்தின் ஊழியனுமாக இருக்க முடியாது என்று கினோ நினைத்தான். அந்தப் பெண் எப்போதும் இறுக்கமான உடையை அணிந்து தன் தளிர் மேனியின் வடிவத்தைக் காட்டுபவளாகவே இருந்தாள். அவர்கள் மதுபான விடுதிக்குள் உட்கார்ந்து காக்டெய்ல் அல்லது ஷெர்ரி குடிக்கும்போது எப்போதாவதுதான் கிசுகிசுப்பாக எதாவது பேசிக் கொள்வார்கள். அவர்கள் நீண்ட நேரம் இருந்ததில்லை. காதல் அல்லது வேறு எதையோ தொடர்வதக்கு முன்பாக அவர்கள் குடிக்கிறார்கள் என்று கினோ கற்பனை செய்து கொள்வான். அவனால் சரியாகச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவர்கள் மதுவைப் பருகும் விதம் பாலுணர்வை ஞாபகப்படுத்தும். ஆழமான தீவீரமான காமத்துக்கு இட்டுச் செல்லும். அவர்கள் முகம் உணர்ச்சியற்ற நிலையிலேயே எப்போதும் இருந்தது. குறிப்பாக அந்தப் பெண். அவள் புன்னகைத்து கினோ பார்த்ததே இல்லை. அவள் எப்போதாவது அவனுடன் பேசுவாள். குறிப்பாக அங்கு ஒலிக்கும் இசை குறித்து. அவளுக்கு ஜாஸ் இசையும், இசைத்தட்டுகள் சேகரிப்பும் பிடித்திருந்தது. என் தந்தை வீட்டில் இசையை ஒலிக்கவிட்டு கேட்டுக் கொண்டேயிருப்பார். அவள் சொன்னாள் “இதைக் கேட்பது என் பழைய ஞாபகங்களைக் கிளறுகின்றன.”

அவள் தொணியிலிருந்த ஞாபகங்கள் அப்பாவைப் பற்றியா இசையைப் பற்றியா என்று கேட்க நினைத்தான் ஆனால் கேட்கவில்லை.

கினோ அவளோடு அதிகம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். அந்த மனிதன் அதில் அவ்வளவாக விருப்பமிலாதவனாக இருப்பதும் அவனுக்கு தெரிந்தது. ஒரு முறை அந்தப் பெண்ணும் கினோவும் நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தது. டோக்கியோவிலுள்ள பயன்படுத்தப்பட்ட இசைத் தட்டுகளை விற்கும் கடைகள், இசைத்தட்டுகளைப் பாதுகாப்பது பற்றி ஆலோசனைகளைப் பரிமாறிக் கொண்டபோது அந்த மனிதன் பனித்த சந்தேகக் கண்ணோடு பார்த்தான். கினோ வழக்கமாக இந்த மாதிரி சிக்கல்கள் வரும்போது கவனமாக தள்ளியே நின்று கொள்பவன். பொறாமையையும் பெருமையையும் விட மோசமானது எதுவுமில்லை. கினோவுக்கு இது போன்ற அனேக அருவருப்பான அனுபவங்கள். அது அவனை தடுத்து நிறுத்தும் போது, மற்றவர்களின் மோசமானமறுபக்கத்தைப் பார்க்க அவனால் முடிந்திருக்கிறது.

அன்று இரவு மதுபானவிடுதிக்கு அப்பெண் தனியாக வந்தாள். வேறு வாடிக்கையாளர்கள் அப்போது இல்லை. அவள் கதவைத் திறந்த போது குளிர்ந்த இரவுநேரக்காற்று உட்புகுந்தது. அவள் கவுண்டரில் அமர்ந்து பிராந்தி கொண்டுவரச் சொன்னாள். அதோடு கினோவிடம் பில்லி ஹாலிடே இசைத்தட்டை ஒலிக்கவிடச் சொன்னாள். அதைவிட பழமையானது இருந்தால்கூட என்றாள். கினோ கார் கொலம்பியா இசைத்தட்டுகளை சுழலவிட்டான். ஜார்ஜியா ஆன் மை மைண்ட் ஒலித்தது. இருவரும் அமைதியாகக் கேட்டார்கள். “அடுத்த பக்கத்தையும் சுழலவிட முடியுமா?” அவள் கேட்டாள். பாட்டு முடிந்ததும் அவன் அவள் கேட்ட படியே செய்தான்.

அவள், தன் வழியில் இயங்கி மூன்று முறை பரிமாறப்பட்ட பிராந்தி குடித்தாள். இன்னும் சில இசைத்தட்டுகளைக் கேட்டாள். எரோல் கார்னரின் மூன்குளோ. படிஃப்ரான்கோஸின் ஐ காண்ட் கெட் ஸ்டார்டெட். ஆரம்பத்தில் கினோ அவள் அவனுக்காக காத்திருக்கிறாள் என்று நினைத்தான். ஆனால் அவள் ஒருமுறை கூட தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கவில்லை. அவள் அமர்திருந்தாள். இசையைக் கேட்டாள். மெய்மறந்து பிராந்தியைப் பருகிக் கொண்டிருந்தாள்.

”உங்கள் நண்பர் இன்று வரவில்லையா?” கினோ விடுதி மூடும் நேரம் நெருங்குவதை மனதிற்கொண்டு கேட்டான்.

அவர் வரமாட்டார். தூரமாக இருக்கிறார். அப்பெண் சொன்னாள்.அவள் இருக்கையிலிருந்து எழுந்து நடந்து, பூனை தூங்கும் இடத்திற்கு வந்தாள். அவள் விரல் நுனியால் பூனையை வருடிக் கொடுத்தாள். பூனைக்கு சஞ்சலப்படவில்லை. அது தூங்கத்துவங்கிவிட்டது.

“நாம் ஒருவரையொருவர் இனி பார்க்கமாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்”

கினோவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அதானால் அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் கவுண்டருக்குப் பின்னால் நின்றிருந்தான்.

எனக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண் சொன்னாள். பூனையைக் கொஞ்சுவதை விட்டுவிட்டு உள்ளே நடந்தாள். அவளின் உயர்ந்த குதிகால் செருப்பு ஓசை எழுப்பின. ”நம் உறவு இயல்பான ஒன்றல்ல ”

”இயல்பான ஒன்றல்ல” கினோ என்ன சொல்லவருகிறாள் என்பதை உண்மையிலேயே கவனத்தில் கொள்ளாமல் அவள் சொன்னதை திரும்பச் சொன்னான்.

அவள் கண்ணாடிக் கோப்பையில் மீதமிருந்த பிராந்தியை முடித்தாள். ”நான் உங்களிடம் ஒன்றைக் காண்பிக்க ஆசைப்படுகிறேன் மிஸ்டர் கினோ.”

எதுவாக இருந்தாலும் கினோ பார்க்க ஆசைப்படவில்லை என்று சொல்ல நினைத்தான். ஆனால் அவனால் அதைச் சொல்ல முடியவில்லை.

அந்தப் பெண் தான் அணிந்திருந்த சட்டைபோன்ற மேலாடையைக் கழற்றி ஸ்டூலில் போட்டாள். இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று ஆடையின் ஜிப்பை திறந்துவிட்டு கினோவை நோக்கி முதுகு காட்டினாள். அவளது வெள்ளை மார்க்கச்சையின் பட்டைகளுக்கு கீழே தீயால் சுட்ட வடுக்கள் காய்ந்து குளிர்கால இரவு வானத்தில்,உதிர்ந்த நட்சத்திரங்கள் சிதறியிருப்பது போல இருந்ததைக் கண்டான்.

அந்தப் பெண் எதுவும் சொல்லவில்லை. ஆடையற்ற தன் முதுகை கினோவுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

“அவை சிகரெட்டால் சுட்ட வடுக்கள்”அவள் இயல்பாகச் சொன்னாள்.

கினோ வாயடைத்துப்போனான். ஆனால் அவனுக்கு எதாவது சொல்லவேண்டும் போலிருந்தது. “யார் உனக்கு இதைச் செய்தது?” என்று கேட்டான். அவன் குரல் வரட்சியாக இருந்தது.

அப்பெண் பதிலெதுவும் சொல்லவில்லை. அவனும் அவளிடமிருந்து பதிலெதுவும் வரும் என்று நினைக்கவில்லை

இன்னும் சில இடங்களிலும் அவை இருக்கின்றன. கடைசியாக அவள் சொன்னாள். அவள் குரலில் உணர்வே இல்லை. “அந்த இடங்கள் … காண்பிக்க முடியாத இடங்கள்”

கினோ ஆரம்பத்திலிருந்தே அந்தப் பெண்ணிடம் வழக்கத்திற்கு மாறாக எதோ ஒன்று இருப்பதை உணர்ந்திருந்தான். அவனது உள்ளுணர்வு அவளிடம் நெருங்க வேண்டாம் என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தது. அவன் அடிப்படையில் ஜாக்கிரதை உணர்வுள்ளவன். அவன் பெண்களோடு படுத்துக் கொள்ள விரும்பினால், அதை தொழிலாகக் கொண்ட பெண்களோடு மட்டும்தான் அதை நடத்திக் கொள்வான். அந்தப் பெண்ணிடம் அவ்வளவாக ஈர்ப்பும் அவனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

ஆனால் அந்த இரவு ஒரு மனிதன் தன்னிடம் காதல் புரிய வேண்டும் என்ற மட்டுமீறிய ஆவலோடு இருந்தாள். அது அவன்தான் என்பது போலவே இருந்தது. அவள் கண்கள் ஆழமற்று, கண்மணிகள் அசைவற்று, இமைமூடாமல் இருந்தன. முடிவு செய்யப்பட்ட ஒருவித பிரகாசம், ஒதுங்க இடமற்ற ஒரு நீரோடையாய் தெரிந்தது. கினோவுக்கு அதை தடுக்க சக்தியில்லை.

கினோ கதவைப் பூட்டினான். இருவரும் மாடிக்குச் சென்றார்கள். படுக்கை அறையில் அப் பெண் தன் ஆடைகளை அவசர அவசரமாகக் கற்றினாள்.உள்ளாடைகளை உரித்துப் போட்டாள். “ ‘அந்த இடங்கள் காண்பிக்க முடியாத இடங்கள்.’ தடுக்கமுடியாமல் அவன் கண்கள் அங்கு பாய்ந்தன. பின் அவன் பலவந்தமாகப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டான். அவனுக்குப் புரியவில்லை அல்லது தெரிந்து கொள்ளவிரும்பினான். ஒரு மனிதனின் மனம் இவ்வளவு கொடூரமாக இதைச் செய்திருக்க முடியுமா? அல்லது வலியைப் பொறுத்துக் கொண்டு அப்பெண் இதற்கு சம்மதித்திருப்பாளா? அது காட்டுமிராண்டித்தனமான கொடூரக்காட்சி. அவன் வாழும் காலத்திற்கு பல்வருடங்கள் முந்தைய காலத்து நிகழ்வு.

அப்பெண் அவன் கையை எடுத்து தளும்புகளின் மீது வைத்து தொட்டுக் காட்டினாள். அவள் மார்பின் மீது வடு இருந்தது. அவள் பெண்குறியின் பக்கங்களிலும். அவன் அந்த கருத்துச் சுருங்கிய வடுக்களைப் பார்த்தான். அந்த வடுக்களை கோடுகளால் இணைத்தால் எதோ ஒரு உருவ வடிவம் தெரியும் என்று நினைத்தான். அது என்ன உருவம் என்று அவனால் சிந்திக்க முடியவில்லை

அவர்கள் புற்களால் வேயப்பட்ட தரைவிரிப்பில் உடலுறவு கொண்டார்கள். எதையும் பேசிக் கொள்ளவில்லை. ஆயத்த விளையாட்டுகள் எதிலும் ஈடுபடவில்லை. விளக்கை அணைப்பதற்கோ படுக்கையைப் போட்டுக் கொள்வற்கோ கூட அவர்களுக்கு அவகாசம் இல்லை. அப்பெண்ணின் நாக்கு அவன் தொண்டை வரைக்கும் நீண்டது. அவள் நகங்கள் அவன் முதுகில் பதிந்தன. விளக்கின் கீழ் இரு பசிகொண்ட மிருகங்கள் தங்கள் கண்டு ஏங்கிய இரையை தின்றழிக்க முயன்றன. வெளியே வெளிச்சம் புலப்படத் துவங்கியதும் அவர்கள் மூடிய படுக்கைக்குள் ஊர்ந்து சென்றார்கள். அது இன்னும் கருமைக்குள் அவர்களை இழுத்துக் கொண்டது.

கினோ மதியத்திற்கு சற்று முன்பாக எழுந்தான். அவள் போயிருந்தாள். அவன் நிஜமான ஒன்றை கனவு போலக் கண்டதாக நினைத்தான். ஆனால் அது கனவு இல்லை. அவன் முதுகுப் பக்கம் கீறல்கள் இருந்தன. அவன் புஜங்களில் பல்தடங்கள் பதிந்திருந்தன. அவன் ஆண்குறி களைத்து சுருங்கியிருந்தது. பல கருத்த மயிர்க்கற்றைகள் அவனது வெள்ளை தலையணை உறையில் சுருண்டுகிடந்தன. படுக்கை விரிப்பில் நெடிய மணம் வீசின. அந்த வாசனை தைலத்தை அவன் இதற்குமுன் முகர்ந்ததில்லை.

அந்தப் பெண் அதற்குப் பின் பலமுறை மதுபான விடுதிக்கு சவரம் செய்யப்படாத முகத்துடன் இருக்கும் அவனோடு வந்தாள். அவர்கள் அவனுக்கு எதிரேயிருக்கும் சேவை மேஜைக்கு முன் அமர்ந்தார்கள். ஓரிரு மதுக்கலவை குடித்தார்கள். மிக அடக்கமான குரலில் பேசினார்கள். அப்பெண் சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டாள். அது இசை பற்றியிருந்தது. அவள் பேச்சுக்குரலின் தன்மை முன்பு போலவேதான் இருந்தது. அவனுக்கும் அவளுக்கும் அந்த இரவில் நடந்த சம்பவத்தை அவள் மறந்துவிட்டாளா?அவளுக்கு நினைவுகள் போய் விட்டதா? ஆனால் கினோ அவள் கண்களில் ஆழமான சுரங்கத்தில் தென்படும் வெளிச்சம்போல ஆசை தெரிவதை கண்டுகொண்டான். நிச்சயமாக அதுதான். அது அவனுக்குள் பழைய நினைவுகளை வேகமாகக் கொண்டுவந்தது. முதுகின் நக்கீறல்கள். ஆண் குறியின் வலி. அவளது நீண்ட துழாவும் நாக்கு. அவனது படுக்கையின் வாசனை.

அவனும் அப்பெண்ணும் பேசும்போது அவளோடு வந்தவன் கவனமாக கினோவின் முகபாவனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். கினோ அவர்கள் உறவில் ஏதோ தடைப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தான். அந்த தனிப்பட்ட ரகசியத்தை அவர்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.

கோடைகாலத்தின் முடிவில் கினோவின் விவாகரத்து முடிவாகிவிட்டது. அவனும் அவன் மனைவியும் மதிய நேரத்தில் மதுபான விடுதி திறக்கும் நேரத்திற்கு முன்பாக, சில கடைசி நேர விஷயங்களைப் பேசிக் கொள்ள சந்தித்துக் கொண்டார்கள்

சட்ட விஷயங்கள் உடனடியாக முடிவடைந்துவிட்டன. இருவரும் அதற்குண்டான பத்திரங்களில் கையெழுத்திட்டுவிட்டார்கள். கினோவின் மனைவி நீல நிறத்தில் புதிய உடையை அணிந்திருந்தாள். கூந்தலை குட்டையாக வெட்டியிருந்தாள். அவள் பார்ப்பதற்க்கு ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் தெரிந்தாள். அவளை அப்படி அவன் பார்த்ததில்லை. அவள் புதிதாகத்துவங்கியிருக்கிறாள். சந்தேகமில்லாமல் முழுமையாக வாழ்வை துவங்கியிருக்கிறாள். அவள் மதுபான விடுதியை நோட்டம்விட்டாள். “என்ன அற்புதமான இடம்” அவள் சொன்னாள். “அமைதியாக, சுத்தமாக, நிசப்தமாக உன்னை மாதிரி” சிறு மௌனத்திற்குப் பின் “ஆனால் உன்னை முன் நகர்த்துவதற்கான எதுவும் இங்கு இல்லை” கினோ இந்த வார்த்தைகளை அவள் பேசுவாள் என்று கற்பனை செய்திருந்தான்.

“எதாவது குடிக்கிறாயா?” அவன் கேட்டான்.

“சிகப்பு வைன் இருந்தால் கொஞ்சம்”

கினோ இரண்டு மதுக் கிண்ணங்களை எடுத்து வைனை ஊற்றினான். அவர்கள் மௌனமாகக் குடித்தார்கள். அவர்கள் அவர்களது விவாகரத்தை கொண்டாடவில்லை. பூனை அங்கு பிரவேசித்தது. ஆச்சர்யமாக அவன் மடியில் ஏறிக் கொண்டது.அவன் அதன் காதோரமாக வருடிக் கொடுத்தான்

நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” அவன் மனைவி கடைசியாகச் சொன்னாள்.

“எதற்காக?” கினோ கேட்டான்.

“உன்னை காயப்படுத்தியதற்கு” அவள் சொன்னாள். “நீ காயப்பட்டிருப்பாய், கொஞ்சமாவது, இல்லையா?”

“ஆமாம் கொஞ்சம்” கினோ சற்று யோசித்துவிட்டுச் சொன்னான். “நான் மனிதன் தானே எனக்கு வருத்தமாகத்தான் இருந்திருக்கும். அது கொஞ்சமா அதிகமா என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.”

“நான் என்னை மன்னித்து விடு என்று சொல்லவே உன்னைப் பார்க்க வந்தேன். என்னை மன்னித்துவிடு.”

கினோ தலையசைத்தான் “நீ மன்னிப்பு கேட்டாய். நான் மன்னித்து விட்டேன். இது பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.”

“என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல விரும்புகிறேன். ஆனால் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.”

ஆனால் நாம் அதே இடத்தில் வந்து நின்றுக் கொண்டிருக்கவில்லை.”

“நான் அப்படித்தான் நினைக்கிறேன்” அவன் மனைவி சொன்னாள்.

கினோ வைனை ஒருமடக்கு குடித்தான்.

“இது யாருடைய தவறும் அல்ல.” அவன் சொன்னான். “நான் ஒரு நாளைக்கு முன்பாக வீட்டுக்கு வந்திருக்கக் கூடாது. அல்லது நான் வரும் தகவலை உனக்கு சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாம் நம் வழியில் போய்க் கொண்டிருந்திருப்போம்”

அவன் மனைவி ஒன்றும் சொல்லவில்லை.

“எப்போது அவனைப் பார்க்க ஆரம்பித்தாய்?” கினோ கேட்டான்.

“நாம் இது குறித்து பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.”

“நான் தெரிந்து கொள்ளாமலிருப்பது நல்லது என்று நினைக்கிறாயா? சரிதான் என்று தோன்றுகிறது.” கினோ ஆமோதித்தான். பூனையை தொடர்ந்து வருடிக் கொடுத்தான். அது சந்தோஷத்தில் பலத்த குரல் எழுப்பியது. அதுவும் முதல்தடவைதான்.

“இருக்கலாம். அதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டா என்று தெரியவில்லை.” அவன் மனைவி சொன்னாள். “ஆனால் நடந்தவைகளை மறந்துவிட்டு புதிதாக ஒன்றைத்தேடிக் கொள்வதுதான் உனக்கு நல்லது.”

“இருக்கலாம்” அவன் சொன்னான்

”உனக்கு சரியான எத்தனையோ பெண்கள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பது கடினமான வேலையொன்றுமில்லை. நான் உனக்கானவள் இல்லை. அதுபோக கொடூரமான ஒரு விஷயத்தை செய்திருக்கிறேன். அதுகுறித்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் உனக்கும் எனக்கும் நடுவே எதோ ஒன்று ஆரம்பத்திலிருந்தே சரியாக இல்லை. நாம் தவறுதலாக முன்னெடுத்து விட்டோம். உன்னால் நல்ல சந்தோஷமான வாழ்வை வாழ முடியும் என்று நான் நினைக்கிறேன்.”

“நாம் தவறுதலாக முன்னெடுத்துவிட்டோம்,” கினோ யோசித்தான்.

அவன், அவள் அணிந்திருந்த புது ஆடையைப் பார்த்தான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். அதனால் அவள் முதுக்குக்குப் பின்னால பொத்தான் வைத்து தைக்கப்பட்டிருக்கிறதா அல்லது ஜிப் வைக்கப்பட்டிருக்கிறதா என்று சொல்ல முடியவில்லை. அவள் பொத்தானையோ ஜிப்பையோ கழற்றி அவள் முதுகைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்காமலிருக்க முடியவில்லை. அவள் உடல் இனி அவனுக்கானது அல்ல. அதனால் அவனால் இனி கற்பனை பண்ணிக் கொள்ள மட்டும்தான் முடியும். அவன் கண்களை மூடும்போது கருப்பாக, வெளிறிய வடுக்கள் வெண்ணிற முதுகில் புழுக்கள் போல ஊர்ந்து செல்வதைக் கண்டான். அவன் தலையை உலுக்கி அக்காட்சியை மறையவைத்தான். அவன் மனைவி அதை என்னவோவென்று புரிந்துகொண்டது போலிருந்தது.

அவள் மெல்ல தன் கையை அவன் கையின் மீது வைத்தாள். “மன்னிக்க வேண்டும் தவறு செய்துவிட்டேன்.” அவள் சொன்னாள். “ உண்மையாகவே மன்னிக்க”

கை அசைந்தது. பூனை வெளியிறங்கிப் போயிற்று.

அது காணாமல் போனதை சில நாட்கள் கழித்துதான் அவன் உணர்ந்தான். அந்தப்பூனை – இன்னும் பெயரிட்டு அழைக்கப்படாத அந்தப் பூனை. தான் விரும்பும்போது வந்து சென்று கொண்டிருந்த அது அவ்வப்போது வராமலிருக்கும் என்றாலும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களாக காணாமல் போனதில்லை. அவன் அதற்காக பெரிதும் கவலைப்படவில்லை. அவனுக்கு அந்தப் பூனையின்மீது கரிசனமிருந்தது. அது அவன் மீது நம்பிக்கையோடிருந்தது. அதும் தவிர அது அதிர்ஷ்ட்த்தின் அறிகுறியாகவும் இருந்தது. கினோ யோசித்துப் பார்க்கையில் அது மூலையில் படுத்துக் கிடந்தவரைக்கும் எவ்வித துர்சம்பவங்களும் நிகழவில்லை. ஆனால் இரண்டுவாரங்கள் கழிந்ததும் அவன் கவலைப்பட்டான். மூன்றாவது வாரத்தில் பூனை திரும்பப்போவதில்லை என்று அவனுக்குள் சொல்லிக் கொண்டான்.

பூனை காணாமல் போன அந்த நாட்களில் கினோ கட்டிடத்திற்க்கு வெளியே பாம்புகளின் நடமாட்டத்தைக் கண்டான்.

அவன் பார்த்த முதல் பாம்பு நீளமாக பழுப்பு நிறத்தில் இருந்தது. அது வாசலில் நின்றிருந்த வில்லோ மரத்தின் நிழலில் ஓய்வாகக் கிடந்தது. கினோ கையில் மளிகை ஜாமான்களை வைத்துக் கொண்டு கதவைத்திறந்து கொண்டிருந்தான். டோக்கியோவின் மத்திய பகுதியில் பாம்புகள் தென்படுவது அபூர்வம். அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் கவலைப்படவில்லை. அவனது கட்டிடத்திற்குப் பின்னால் நெசு அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கு இருக்கும் பெரிய தோட்டங்களில் பாம்புகள் வசிக்கலாம்.

ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, அவன் பேப்பர் வாங்கச் செல்ல கதவை திறந்த போது புதிய பாம்பொன்றை அதே இடத்தில் கண்டான். கருநீல நிறத்தில் முதலில் பார்த்ததைவிட சற்று சிறியதாக, ஒல்லியான தோற்றத்தில் இருந்தது. கினோவைக் கண்டதும் நின்ற அது தலையைதூக்கிப் பார்த்தது. அவனைத் தெரிந்தது போல வெறித்தது. கினோ தயங்கினான், அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பாம்பு தலையை தாழ்த்திக் கொண்டு நிழலை நோக்கி ஊர்ந்துபோய்விட்டது. அந்த மொத்த நிகழ்வும் கினோவுக்குப் பயத்தைக் கொடுத்தது.

மூன்று நாட்கள் கழித்து மூன்றாவது பாம்பை அவன் ரகசியமாகக் கண்டான். அது வில்லோ மரத்துக்கு கீழே முன் வாசலில் இருந்தது. அந்தப் பாம்பு மற்றப் பாம்புகளைவிட சிறியதாகவும், கருப்பு வர்ணத்திலும் இருந்தது. கினோவுக்கு பாம்புகளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இது மிகவும் கொடியது போல தோன்றியது. எப்படியோ இந்த உடனடி நிகழ்வு அவன் இருப்பை உணரச் செய்தது. அது அவனை துக்கங்களை நோக்கி இழுத்தது. ஒரு வாரத்தில் மூன்று பாம்புகள். நீங்கள் எப்படி நினைப்பீர்களோ? அவை மிக அதிகம். கினோ இஸுவிலிருக்கும் பெரியம்மாவுக்கு போன் செய்தான். அக்கம் பக்கத்துக்காரர்களைப் பற்றிய தற்போதைய விஷயங்களையெல்லாம் சொல்லி முடித்து கடைசியாக எப்போதாவது அவள் யோமாவில் பாம்புகளைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டான். விநோத விஷயம் நடந்துகொண்டிருக்கிறது.

“பாம்பா” என்று பெரியம்மா சத்தமான குரலில் ஆச்சர்யத்துடன் கேட்டாள். “நான் அங்கு வெகு நாட்களாக வசித்திருக்கிறேன். ஆனால் பாம்புகளைப் பார்த்த ஞாபகம் இல்லை. நான் அவை பூகம்பத்தின் அறிகுறி என்று நினைக்கிறேன். விலங்குகள் அழிவை முன்னுணர்ந்து வினோதமாக நடந்து கொள்ளும்”

“அது உண்மையாக இருந்தால் அவசரகாலத்துக்கு தேவையான நடவடிக்கைகளில் நான் இறங்க வேண்டுமா?” கினோ கேட்டான்.

“அது நல்ல யோசனைதான். டோக்யோ ஒரு நாளில்லை ஒரு நாள் பலத்த பூகம்பத்தால் தாக்கப்படும்”

“பாம்புகள் அத்தனை தூரம் பூகம்பத்தை உணரும் குணம் கொண்டவையா?”

“எனக்குத்தெரியாது” பெரியம்மா சொன்னாள். “ஆனால் பாம்புகள் புத்திசாலித்தனமான உயிரினம். பழங்காலத்தில் அவை மனிதருக்கு வழிகாட்டியிருக்கின்றன. ஆனால் பாம்பு வழிகாட்டும்போது அது உங்களை நல்ல வழியில் இழுத்துச் செல்கிறதா கெட்ட வழிக்கு கொண்டு செல்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாது. பல விஷயங்களில் அவை நல்லதும் தீயதும் கலந்ததாகவே இருக்கிறது.

“குழப்பமாக இருக்கிறது” கினோ சொன்னான்.

உண்மையில் பாம்புகள் குழப்பமான உயிர்வகைதான். புராணகாலத்தில் பெரிய புத்திசாலித்தனமான பாம்புகள் தங்கள் இதயத்தை எங்கோ வெளியில் பத்திரமாக ஒளித்து வைத்துக் கொள்ளுமாம். அதனால் அவைகளைக் கொல்ல முடியாதாம். நீங்கள் பாம்பைக் கொல்ல வேண்டுமானால் அவை ஒளிந்திருக்கும் இடத்திற்குச் செல்லவேண்டும். அங்கு பாம்பு இல்லை என்றால், துடிக்கும் இதயத்தை கண்டுபிடித்து இரண்டாக வெட்ட வேண்டும். நிச்சயமாக அது சாதாரண வேலையல்ல.”

பெரியம்மாவுக்கு இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்?

“ஒரு நாள் ஜப்பானிய தொலைக்காட்சியில் உலகிலுள்ள பலவகை பாம்புகளைப் பற்றிய தொகுப்பை பார்த்தேன்.” அவள் சொன்னாள். “ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் பேசினார். தொலைக்காட்சி பயனுள்ளது. உனக்கு நேரம் கிடைக்கும்போது தொலைக்காட்சி பார்.”

கினோ வீடு பாம்புகளால் சூழப்பாட்டிருப்பதாக நினைத்தான். அமைதியான அவற்றின் இருப்பை உணர்ந்தான். அவன் மதுபான விடுதியை மூடும் நள்ளிரவில் அக்கம் பக்கத்தினர் அமைதியாக இருக்கும் போது, எப்போதாவது கேட்கும் வாகன சத்தங்களுக்கு நடுவே பாம்பு ஊர்ந்து செல்லும் சப்தத்தை அவனால் கேட்க முடிந்தது. அவன் ஒரு பலகையை எடுத்து பூனை சென்றுவர அமைத்திருந்த வழியில் பாம்புகள் உள்ளே வராது இருக்க அடைத்தான்.

ஒரு இரவில் பத்து மணிக்கு முன் கமிட்டா வந்தான். பியர் குடித்தான். வழக்கம்போல இரண்டு வெள்ளை லேபல் விஸ்கி. முட்டைகோஸ் அடைத்து செய்த உணவு. அவன் தாமதமாக வந்ததும் நீண்ட நேரம் இருப்பதும் வழக்கமான ஒன்றல்ல. அவன் புத்தகத்திலிருந்து தலையை உயர்த்தி சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தான். எதையோ தீவீரமாக சிந்தித்தது போலிருந்தது. கடை மூடும் நேரம் நெருங்கியதை அவன் ஞாபகப் படுத்தினான். அவன்தான் கடைசி வாடிக்கையாளன்.

” மிஸ்டர். கினோ” கமிட்டா பணம் செலுத்திய பிறகு இயல்பாக அழைத்தான். “இந்த முடிவிற்கு வந்திருப்பது குறித்து வருத்தம் அடைகிறேன்”

“எந்த முடிவிற்கு” கினோ திரும்பச் சொன்னான்.

“நீங்கள் விடுதியை மூடப்போகிறீர்களாமே, தற்காலிகமாகவா?”

கினோ கமிட்டாவை உற்றுப்பார்த்தான். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. “விடுதியை மூடப் போகிறேன்.”

கமிட்டா கலைந்திருக்கும் மதுபானவிடுதியைப் பார்த்தான்.கினோவை நோக்கி திரும்பினான். “நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்குப் புரிகிறதா?”

”இல்லை என்னால் முடியவில்லை”

“எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருக்கிறது.” கமிட்டா நம்பும் விதமாகச் சொன்னான். “இது அமைதியாக இருக்கிறது. அதனால் என்னால் படிக்க முடிந்தது. இசையை ரசிக்க முடிந்தது. மதுபான விடுதி இந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்பாராத விதமாக, எதையோ இழந்த மாதிரி இருக்கிறது.”

“இழந்த மாதிரியா?” கினோ கேட்டான். அவன் என்ன அர்த்தத்தில் சொல்கிறான் என்ற முடிவுக்கு வர முடியவில்லை. அவனால் ஒரு சின்ன தேநீர் கோப்பையின் விளிம்பில் சிறு உறிஞ்சலைத்தான் நினைக்க முடிந்தது.

“அந்தப் பூனை இனி வராது.” கமிட்டா சொன்னான். “கொஞ்ச நாளைக்காவது மட்டும்.”

“இந்த இடத்தில் எதையோ இழந்த மாதிரி இருக்கிறது.”

கமிட்டா எதையும் சொல்லவில்லை

கினோ கமிட்டாவின் நீண்ட பார்வையைப் பார்த்தான். கவனமாக மதுபானவிடுதியைப் பார்த்தான்.எதுவும் வழக்கத்திற்கு மாறாக இல்லை. அவன்தான் உருவாக்கியிருந்தாலும் அந்த இடம் எதுவுமற்று இருப்பதாக, உயிரற்று இருப்பதாக, நிறம் மங்கி இருப்பதாக, வழக்கத்திற்கு அப்பால் இருப்பதாக, இருளினால் மூடப்பட்டிருப்பதுபோன்ற உணர்வு.

கமிட்டா பேசத்துவங்கினான். “மிஸ்டர்.கினோ, நீங்கள் ஆசைப்பட்டு மோசமான செயல்களைச் செய்யும் நபரல்ல என்பது எனக்குத்தெரியும். ஆனால் இந்த உலகத்தில் நாம் செய்யக்கூடாத விஷயங்களைச் செய்யாமலிருப்பதற்கு நேரம் போதாது. சிலர் அந்த இடத்தைத்தான் சாக்குப் போக்காக எடுத்துக் கொள்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?”

கினோவால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“கவனமாக யோசித்துப் பாருங்கள்.” கமிட்டா சொன்னான். கினோவின் கண்களை உற்றுப் பார்த்தபடி, “இது முக்கியமான கேள்வி. தீவிர யோசனை தேவைப்படும் கேள்வி. அதனால் பதிலை உடனடியாகச் சொல்லிவிட முடியாது.”

“சில தீவிரமான தொந்தரவுகள் ஏற்பட்டுவிட்டன என்று சொல்கிறீர்கள். நான் செய்த காரியங்களால் அல்ல . நான் தவறாக எதையும் செய்யவில்லை. இந்த மதுபானவிடுதிக்கு தொந்தரவா அல்லது எனக்கா” கமிட்டா தலையசைத்தான். “நீங்கள் அதை சாதாரணமாக விட்டுவிடலாம் மிஸ்டர்.கினோ .நானும் தவறுக்கு காரணம்தான். நான் முன்னரே கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இது ஒரு வசதியான இடம் எனக்கு மட்டுமல்ல யாருக்கும்.”

“பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?” கினோ கேட்டான்.

“கொஞ்ச நாளைக்கு மதுபான விடுதியை மூடி விட்டு நீண்ட தூரம் எங்காவது போய் வா. அதை தவிர இந்த சூழலில் உன்னால் எதுவும் செய்ய முடியாது. நீண்ட மழைக்காலத்துக்கு முன்னால் நீ சென்றுவிடுவதும் கூட நல்லதுதான். இதைக் கேட்பதற்கு மன்னிக்க வேண்டும், நீண்ட தூரபயணம் செல்ல போதுமான பணம் உன்னிடமிருக்கிறதா?”

“என்னால் அதை சமாளித்துக் கொள்ள முடியும்.”

“நல்லது. நீ அதையெல்லாம் முடித்துவந்த பிறகு கவலைப்பட்டுக் கொள்ளலாம்.”

“சரி, நீங்கள் யார்?”

“நான் ஒரு சாதாரண மனிதன். என் பெயர் கமிட்டா. கமிட்டா சொன்னான். கமி என்ற எழுத்துகளுக்கு கடவுள் என்றும் டா என்ற எழுத்துக்களுக்கு நிலம் என்றும் பொருள். ஆனால் அடா என்று சொல்லக் கூடாது. நான் இந்தப் பகுதியில் அனேக வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்.”

கினோ ஆர்வத்துடன் நெருங்கி, “மிஸ்டர் கமிட்டா ஒரு கேள்வி. நீங்கள் இதற்கு முன்பாக இந்தப்பக்கம் பாம்புகளைப் பார்த்ததுண்டா?”

கமிட்டா பதில் சொல்லவில்லை. “அதனாலதான் போறியா? தூரமாகப் போ. ஒரே இடத்துல நீண்டநாள் தங்காத திங்கள் மற்றும் வியாழக் கிழமையன்று அஞ்சல் அட்டை அனுப்பு. நீ ஒழுங்காக இருப்பதை நான் அறிந்து கொள்வேன்…”

“அஞ்சல் அட்டை?”

”நீ தங்கியிருக்கும் இடத்தின் அஞ்சல் அட்டை.”

“சரி, யார் முகவரிக்கு அனுப்ப”

“உன் பெரியம்மா வீட்டுக்கு இஸூவிற்கு அனுப்பு. உன் பெயரையோ செய்தியையோ அதில் எழுத வேண்டாம். இது மிக மிக முக்கியம் மறந்துவிடாதே.”

கினோ அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தான் “என் பெரியம்மாவை உனக்கு தெரியுமா?”

“ஆம் எனக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் அவர்தான் உன்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்”

இந்த உலகத்தில் இந்த மனிதன் யார்? கினோ தனக்குள் கேட்டுக் கொண்டான்

“மிஸ்டர். கினோ. நீங்கள் எப்போது திரும்பிவருவீர்கள் என்பது வரைக்கும் நான் உங்களோடு தொடர்பிலிருப்பேன். அதுவரை இங்கிருந்து விலகி iஇருங்கள் . புரிகிறதா?”

அந்த இரவு கினோ பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ‘நீண்ட மழைக்கு முன்பாக நீங்கள் சென்று விடுவது நல்லது.’ அந்த அறிவிப்பு உடனடியாக வந்தது. அதன் எதார்த்தம் அவனை துரத்தியது. ஆனால் கமிட்டாவின் குரல் அவனது செயலைக் குறைக்கும் நடவடிக்கையாகவே பட்டது. கினோ அவனை சந்தேகப்படவில்லை. அவன் சில உடைகளையும், குளியலறைப் பொருட்களையும் ஒரு பெரிதும் சிறிதுமில்லாத தோள் பையில் போட்டுக் கொண்டான். அந்தப்பை அவன் தனது அலுவலக காலங்களில் பயன் படுத்தியது. அதிகாலை வேலியில் அவன் ஒரு அறிவிப்பை மதுபான விடுதியின் முன் கதவில் ஒட்டினான். ‘மன்னிக்க வேண்டுகிறோம். மதுபான விடுதி தற்காலிகமாக மூடப்படுகிறது.’

நீண்ட தூரம்… கமிட்டா அவனிடம் சொன்னான். ஆனால் எங்கு அவன் போகவேண்டும்? அவனுக்கு எவ்வித திட்டமும் இல்லை. அவன் வடக்கு நோக்கிப் போகலாமா? அல்லது தெற்கிலா? அவன் வழக்கமாக தன் விளையாட்டுப் பொருட்களை விற்கச் சென்ற வழியைப் பற்றி யோசித்தான். அவன் நீண்டதூர விரைவுப் பேருந்தில் ஏறி ட்காமாட்சூ சென்றான். ஷிக்கோவின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்து குய்ஷூ சென்றான்.

அவன் ட்காமாட்சூவில் ஒரு நல்ல இடத்தில் மூன்று நாட்கள் தங்கினான். அவன் நகரத்தைச் சுற்றிபார்த்தப்பிறகு மூன்று திரைப்படங்களுக்கும் சென்றான். பகல் நேர திரைஅரங்குகள் ஆளற்று இருந்தன. திரைப்படங்களும் மனதில் மாற்றம் கொள்ளும்படியோ மரத்துப்போக வைக்கும்படியோ இல்லை. இரவானதும் அவன் அறைக்கு திரும்பி வந்தான். பெரியம்மா சொன்னதுபோல தொலைக்காட்சியில் கல்வி நிகழ்ச்சிகளைப் பார்த்தான். அதனால் உபயோகமாக எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ட்காமாட்சூவில் இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமை. கடையில் அஞ்சல் அட்டை வாங்கிவந்து தபால் தலை ஒட்டி, பெரியம்மாவின் வீட்டு முகவரிக்கு அனுப்பினான். கமிட்டா சொல்லியிருந்ததுபோல அவன் முகவரியைமட்டும் எழுதினான்.

‘கவனமாக இதனை சிந்தித்துப் பார்.’ கமிட்டா அவனிடம் சொல்லியிருந்தான். “இது முக்கியமான கேள்வி. தீவிர சிந்தனையைக் கோருவது.” ஆனால் அவன் தீவீரமாக அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. என்ன பிரச்சினை என்பதைக்கூட சிந்திக்கவில்லை.

சில நாட்கள் கழித்து அவன் மலிவான தங்குமிடத்தில் தங்கினான். அது கியாஷூவில் குமமோட்டோ ரயில் நிலையம் அருகே இருந்தது. தாழ்வான கூரை. சிறிய படுக்கை. குட்டி தொலைக்காட்சி. மோசமான குளிர்சாதனப் பெட்டி. புராதன குளியல் தொட்டி. அவன் மோசமாக உணர்ந்தான். அருகிலுள்ள அங்காடிக்குப் போனான். அறையிலேயே இருந்தான். அங்காடியில் விஸ்கி, சுத்தப்படுத்தப் பட்ட தண்ணீர், கொறிக்க சில சிற்றுண்டி வாங்கி வந்தான். படித்தான் அதில் சோர்வடையும் போது தொலைக்காட்சி பார்த்தான் அதில் சோர்வடையும்போது மீண்டும் படிப்பு.

அன்று குமமோட்டோவில் மூன்றாவது நாள். அவனது சேமிப்புக் கணக்கில் இன்னும் பணமிருந்தது. அவன் நினைத்தால் இதைவிட வசதியான இடத்தில் சென்று தங்க முடியும். ஆனால் அவனுக்கு அந்த இடம்தான் சரியான இடம் என்று பட்டது. இது போன்ற சிறிய இடத்தில் தங்கும்போது அவன் தேவையற்ற சிந்தனைகளில் கவனம் செலுத்தமாட்டான். அவனுக்கு தேவையான எல்லாமும் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தன. அவனுக்கு அவை எதிர்ப்பாராத சந்தோஷத்தைக் கொடுத்தன. அவன் ஆசைப்பட்டதெல்லாம் இசைதான். Teddy Wilson, Vic Dickenson, Buck Clayton— சில நேரங்களில் அவனுக்கு அவர்களின் பழைய ஜாஸ் இசையைக் கேட்கவேண்டும் என்று ஏக்கமாக இருக்கும். ‘ஜாஸ்’ அவற்றின் நேர்த்தியான தொழில் நுணுக்கம், நேரடியான இசைக்கோர்வை, அவர்கள் அதை அரங்கேற்றும் போது அடையும் உண்மையான சந்தோஷம், நம்பிக்கையைக் காணவிரும்பினான். ஆனால் அவனது இசைத்தட்டு சேகரிப்புகள் தூரத்தில் இருக்கின்றன. அவன் அவனது மதுபானவிடுதியை நினைவுக்குக் கொண்டுவந்தான். அந்த சந்து, உயர்ந்த வில்லோ மரங்கள், அங்கு வந்தவர்கள் அவன் ஒட்டியிருந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள். பூனை? அது திரும்பி வந்தால் அதன் வழி அடைக்கபட்டிருக்குமே. அந்தப் பாம்புகள் இன்னும் வீட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனவா?

எட்டாவது மாடியிலிருக்கும் அவனது அறை ஜன்னலுக்கு எதிரே இருக்கும் ஜன்னல் ஒரு அலுவலகத்தினுடையது. அவன் அங்கு வேலை பார்ப்பவர்களைக் கவனிக்கத் துவங்கியிருந்தான். அங்கு என்ன தொழில் நடக்கிறது என்பது அவனுக்குத்தெரியாது. கழுத்துச் சுருக்கு அணிந்த ஆண்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். பெண்கள் கணிப்பொறியின் விசையத்தட்டிக் கொண்டேயிருப்பார்கள் .தொலைபேசியில் பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அங்கு வேலை பார்ப்பவர்கள் சராசரியான உடையணிந்திருந்தார்கள். சொல்லப்போனால் பலமுறை அணிந்த உடைகள். கினோ அவர்களை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே காரணம்தான். அவனுக்கு அதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. அவன் அவர்களிடம் பார்த்து ஆச்சர்யப்பட்ட ஒரே விஷயம் சில நேரங்களில் அவர்கள் எவ்வளவு சந்தோஷம் நிரம்பியவர்களாகத் தெரிகிறார்கள். சிலர் சில நேரங்களில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஏன்? நாள் முழுவதும் அழுக்கடைந்த அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலை(கினோவின் கண்களுக்கு) எவ்வித ஆர்வமுமில்லாமலிருக்கிறது. இப்படியெல்லாம் இருந்துகொண்டு எப்படி அவர்களால் சந்தோஷமாக இருக்க முடிகிறது. அவனுக்குப் புலப்படக் கடினமான ரகசியம் எதாவது அங்கு ஒளிந்திருக்கிறதா?

அவன் மீண்டும் நகரவேண்டிய நேரம் வந்துவிட்டது. ‘ஒரே இடத்தில் நீண்ட நாள் இருக்காதே.’ கமிட்டா அவனிடம் சொல்லியிருந்தான். ஏதோ ஒரு விதத்தில் அந்தச் சிறிய குமமட்டோ தங்குமிட அறையில் இருந்து வரவும் அவனுக்கு விருப்பமில்லை. அவன் எங்கு போக வேண்டும் என்று அவன் சிந்திக்கக் கூட இல்லை. உலகம் பரந்த கடல். எல்லைக் கற்களற்ற கடல். கினோ சிறு படகு. துடுப்பைத் தொலைத்துவிட்ட, நங்கூரமற்ற படகு. அவன் க்ஹியூசுவின் வரைபடத்தினை விரித்தான். அடுத்து எங்கு போவது? அவனுக்கு குமட்டிக் கொண்டுவந்தது. கடல் நோய். அவன் படுக்கையில் கிடந்து புத்தகம் படித்தான். எழுந்து அமர்ந்து எதிர்சாரி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களை பார்க்கத்துவங்கினான்.

அன்று திங்கட் கிழமை. பரிசுப் பொருட்கள் விற்கும் கடையிலிருந்து அவன் குமமட்டோ கோட்டை புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை வாங்கி வந்தான். பெரியம்மாவின் பெயர் முகவரியை எழுதினான். அஞ்சல் தலை ஒட்டினான். அஞ்சல் அட்டையை வெறித்துப் பார்த்தபடியிருந்தான். வழக்கமான புகைப்படம். கோட்டை கம்பீரமாக. கொளுத்த வெண் மேகங்கள் கூடிய நீலவானத்திற்கு முன்னாலிருந்தது. காரணமேயில்லாமல் எத்தனை நேரம் அதனை வெறித்துக் கொண்டிருப்பது. அவனுக்கும் கோட்டைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத்தெரியவில்லை. திடீரென அவனுள் ஏற்பட்ட உணர்வுப்பெருக்கில் அஞ்சல் அட்டையை திருப்பி பெரியம்மாவுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தான்.

எப்படி இருக்கிறாய்? முதுகுவலி எப்படி இருக்கிறது? உனக்கு தெரிந்தவரையில் நான் இன்னும் என் பயணத்தில்தான் இருக்கிறேன். சில நேரங்களில் நான் என்னை பாதியளவுக்கு உணர்ந்துள்ளதாக நினைக்கிறேன். என்னை என் உள்ளுறுப்புகளின் வழியே நோக்கினால் இப்போதுதான் பிடிக்கப்பட்ட கணவாய் மீன் போல இருப்பேன். மற்ற படி நான் நலம். விரைவில் உன்னை சந்திப்பேன் என்று நம்புகிறேன். கினோ.

கினோவுக்கு எது தன்னை எழுதத் தூண்டியது என்று தெரியவில்லை. கமிட்டா கண்டிப்பாக இதை செய்யாதே என்றிருந்தான். ஆனால் கினோவால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதோ ஒரு வகையில் நிகழ்காலத்தோடு நான் சம்பந்தப்படுகிறேன். அவன் நினைத்தான். அதை தவிர வேறு எதுவாகவும் என்னால் இருக்கமுடியாது. இல்லாமலிருந்த நான் இனி இருக்கப் போகிறேன். அவன் மனதை மாற்றிக் கொள்வதற்கு முன் தங்குமிடம் அருகே இருந்த அஞ்சல் பெட்டியை அடைந்தான். அஞ்சல் அட்டையை உள்ளே தள்ளினான்.

அவன் விழித்தபோது படுக்கைக்கு அடுத்திருந்த கடிகாரம் இரண்டு மணி-பதினைந்து நிமிடங்களைக் காட்டியது. யாரோ அவன் கதவை தட்டினார்கள். பலமாக அல்லாமல் நிதானமாக சிறு சப்தமாக தட்டினார்கள். திறமையான தச்சனின் மர இழைப்புபோல அது இருந்தது. அந்த சத்தம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை இழுத்துவந்துவிட்டது. அவன் இயல்புக்கு வரும்வரை அது குரூரமாக தெளிவாக இருந்தது.

கினோவுக்கு அந்த கதவுதட்டல் எதற்கு என்று தெரியும். அவன் படுக்கையிலிருந்து எழுந்து கதவை திறக்க வேண்டும். கதவு தட்டல் எப்படி இருந்தாலும் கதவை வெளியிலிருந்து திறக்கும் அளவுக்கு பலம் வாய்ந்தது அல்ல. அது கினோவின் கைகளால்தான் திறக்கப் பட வேண்டும்.

அது அவனை இந்தப் பயணத்தால் பெறப்போவது என்ன என்று யோசிக்க வைத்துவிட்டது. அதே சமயம் எல்லாவற்றிற்கும் மேலாக அவன் எதற்காக பயந்தான். அதுதான் சந்தேகம். இரண்டு சம்பந்தமில்லாத வெற்றிடத்தை எப்படி பற்றிக் கொள்வது போல. “நீ கொஞ்சம் காயப்பட்டிருப்பாய்.இல்லையா? அவன் மனைவி கேட்டாள். “நான் மனிதன் தானே எனக்கு எப்படி காயமில்லாமலிருக்கும்?” அவன் பதில் சொல்லியிருந்தான். அனால் அது உண்மையல்ல. பொய்யாக இருக்கலாம். நான் நிறைய காயப்பட்டேன். கினோ அவனுக்குள் சொல்லிக் கொண்டான். எனக்கு உண்மையான வலி வரும் போது கட்டுப்படுத்திக் கொண்டேன். அதை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை. அதை தவிர்த்தேன். அதனால்தான் என் இதயம் காலியாக இருக்கிறது. பாம்புகள் அந்த இடத்தில் ஊரும் பாம்புகள் தங்கள் துடிக்கும் இதயங்களை பத்திரப்படுத்தவே இடம் தேடி அலைகின்றன.

“இந்த இடம் வசதியான இடம். எனக்கு மட்டுமல்ல. யாருக்கு வேண்டுமானாலும்” கமிட்டா சொல்லியிருந்தான். கினோவுக்கு அவன் சொன்ன அர்த்தம் புரிந்தது.

கினோ போர்வையை இழுத்து மூடிக் கொண்டான். கண்களை மூடினான். கைகளால் காதுகளைப் பொத்திக் கொண்டான். நான் பார்க்கப் போவதில்லை. நான் கேட்கப் போவதில்லை. அவனுக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் அவனால் சத்தத்திலிருந்து வெளியேற முடியவில்லை. அவன் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும், காடுகளில் களிமண் கொண்டு மூடினாலும் அந்த தளராத கதவுதட்டும் சத்தம் அவனை கீழிழுத்துப் போட்டது. அது அந்த தங்கும் விடுதியின் அறைக்கதவை தட்டும் சத்தம் அல்ல. அது அவன் இதயக் கதவின் சத்தம். யாரும் அந்த சத்தத்திலிருந்து தப்பித்துவிடமுடியாது.

எவ்வளவுநேரம் கழிந்திருக்கும் என்று அவனால் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த கதவுதட்டும் சத்தம் நின்றிருப்பதை அவனால் உணர முடிந்தது. அறை நிலவின் மறு பக்கம்போல நிசப்தமாக இருந்தது. கினோ இன்னும் போர்வைக்குள்ளிருந்தான். அது அவனுக்கு பாதுகாப்பாக நினைத்தான். கதவுக்கு மறுபக்கம் செல்வதை அவ்வளவு எளிதாகச் செய்துவிடமுடியாது. எந்த அவசரமும் இல்லை. இன்னும் நிலவு வரவில்லை. சில சிதறிய நட்சத்திரக் கூட்டங்கள் ஆங்காங்கே தெரிந்தன. உலகம் மற்றவர்களுக்கானதும் கூட. அவர்கள் பலவழிகளில் தங்களுக்கு தேவையானதை தேவையான வழிகளில் தேடிக் கொள்வார்கள். இருளின் வேர்கள் பூமிக்கடியில் பரவிக்கிடக்கின்றன. பொறுமையாக நேரமெடுத்து, பலவீனத்தை தேடி, அவர்கள் கடினமான பாறைபோலானதை உடைத்து நொறுக்குகிறார்கள்.

கடைசியாக கினோ எதிர்பார்த்ததுபோல சத்தம் மீண்டும் கேட்டது. ஆனால் இந்த முறை சத்தம் வேறு திசையிலிருந்து வந்தது. முன்பைவிட நெருக்கமாகக் கேட்டது. யாரோ அவனது படுக்கைக்குப் பின்னாலுள்ள ஜன்னல் கதவைத்தட்டினார்கள். எட்டுமாடி கட்டிடச் சுவர்களில் தட்டினார்கள். டப் டப்பென்ற மழைத்துளி கண்ணாடியில் விழுந்து சிதறியது.

கதவு தட்டல் அதேஅலை வரிசையில் இருந்தது. இருமுறை. மீண்டும் இரு முறை. மீண்டும் மீண்டும் இடைவெளி இல்லாமல் இடைவிடாத வேகமான இதயத்துடிப்பு ஓசை போல.

திரைச்சீலை திறந்திருந்தது. தூங்கும் முன்பாக அவன் கண்ணாடியில் மழைக் கோடுகள் வரைந்திருந்த சித்திரத்தைப் பார்த்தான். கினோ இப்போது உள்ளிருந்து பார்ப்பதை வெளியில் நின்று பார்த்திருக்க முடியுமா என்று கற்பனை செய்தான். இல்லை. அவன் கற்பனை செய்யவில்லை. அவனுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி கற்பனை செய்யும் திறன் இருந்தது. நான் அதைப் பார்க்கவில்லை. அவன் சொல்லிக் கொண்டான். என் இதயம் எவ்வளவு காலியானதாக இருந்தாலும் அது என் இதயம். இன்னும் மனித ஸ்பரிசத்தின் உஷ்ணம் இருக்கிறது. ஞாபகங்கள் கடற்கரையில் வளரும் தாவரங்கள் போன்றவை, நீர்மட்டத்திற்காக காத்திருப்பவை. உணர்வு வேகம் என்பது வெட்டினால் ரத்தம் வழியும். அவற்றை என் புரிதலுக்கு அப்பால் அலையவிட முடியாது.

”ஞாபகங்கள் உதவக்கூடியவை” கமிட்டா சொல்லியிருந்தான். திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. கமிட்டா வாசலிலிருக்கும் அந்த பழமையான வில்லோ மரங்களோடு தொடர்புடையவனோ. இது அறிவார்ந்த சிந்தனையா என்று அவனால் உணரமுடியவில்லை. ஆனால் யோசிக்க ஆரம்பித்ததும் அந்த இடத்தில் மனம் போயிற்று. கினோ படம்பிடிக்க முயன்றான். தரைவரை தொங்கும் மரத்தின் கிளைகள் அவற்றின் பசுமை, கோடைகாலத்தில் அது தரும் நிழல். மழைக்காலத்தில் சிறிய கிளைகளிலிருந்து உதிரும் நீர்த்துளிகள், காற்றடிக்கும்போது ஓய்வற்ற இதயம்போல அதன் அசைவு, அதன் மீது பறக்கும் பறவைகள். அவற்றின் கீச்சொலியோடு அமர்ந்து பறந்து செல்லும் சிறிய கிளிகள்.

படுக்கை விரிப்புக்கு கீழே புழுப்போல கினோ சுருண்டு கிடந்தான். கண்களை இறுக மூடிக் கொண்டு வில்லோ மரங்களை நினைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொன்றாக யோசித்தான். அதன் தரம், அதன் நிறம், அதன் வடிவம், உருவம். அவன் செய்யவேண்டியதெல்லாம் அதுபோல காத்திருப்பதுதான். பொறுமையாக, அது வளர்ந்து வெளிவந்து பறவைகள் விழித்து தங்கள் நாளை துவங்கும்போது அவன் செய்ய வேண்டியதெல்லாம் பறவைகளை நம்ப வேண்டும். எல்லா பறவைகளையும் அவற்றின் இறக்கைகளோடு, அலகுகளோடு, அதுவரை இதயத்தை வெற்றிடமாக வைத்திருக்க வேண்டியதுதான். அந்த வெற்றிடம், அந்த காலியிடம் அதுவே உருவாக்கிக் கொண்டது. இட்டு நிரப்பப் படவேண்டும்.

வில்லோ மரங்களை யோசித்தது போதாமல் கினோ சாம்பல் நிற பூனையை யோசித்தான். சுடப்பட்ட கடலுணவின் மீது அது கொண்டிருந்த ஆரவம். அவன் கவுண்டரில் அமரும் கமிட்டாவை நினைத்தான். புத்தகங்களில் தன்னை தொலைப்பவன். இளம் ஓட்டப்பந்தய வீரர்கள் கொடூரமாக தொடர்ந்து மைதானவட்டங்களில் ஓடுவதை யோசித்தான். பென் வெப்ஸ்டரின் மை ரொமன்ஸ் தனிப்பாடல், அவன் மனைவியின் புது நீல ஆடையை நினைத்தான். அவள் கூந்தல் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவள் புது வீட்டில் சந்தோஷமான ஆரோக்கியமான வாழ்வை வாழ்கிறாள். அவள் முதுகில் எவ்வித தளும்பும் இருக்காது என்று நம்பினான். அவள் என் முகத்திற்கு எதிராக மன்னிப்பு கோரினாள். நானும் ஏற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொள்ளவேண்டும். மறப்பதற்கு அல்ல மன்னிப்பதற்க்கு.

ஆனால் காலத்தின் வேகத்தை சரியாகப் பொருத்த முடியவில்லை. ஆசைகளின் ரத்தக் கனம், துருப்பிடித்த கோபம் தரும் கடந்த காலத்தவறுகளின் கழிவிரக்கம் எல்லாம் இந்த இயல்பான ஓட்டத்தை அடைக்கின்றன. தொடர்ந்த மழை,பறவைகளின் ஆழ்தூக்கம்,முகமறியா அஞ்சலக ஊழியர்கள் அமைதியாக கடிதங்களைப் பிரித்தல், அவன் மனைவியின் அசுரத்தனமாக காற்றில் அசைந்தாடும் மார்புகள், எதோ இடைவிடாமல் ஜன்னல் கதவை தட்டுகிறது. அவன் உள்ளே புகுந்து டாப், டாப், டாப், இன்னொருமுறை டாப். “எங்கோ பார்க்காதே, இங்கு பார்” யாரோ காதில் கிசுகிசுக்கிறார்கள். “இதயம் இப்படித்தான் இருக்கும்.”

வில்லோ மரக் கிளைகள் கோடைகாலத்துக்கு முந்தைய இளங்காற்றில் அசைகின்றன.ஒரு சிறிய இருட்டு அறையில் கினோ இருக்கிறான். உற்சாகமான கரம் அவனை நோக்கி நீழ்கிறது. கண்கள் மூடி, அவன் அந்தக் கரத்தை உணர்கிறான். அவனுடையதுதான் அது. மெல்லிய உறுதியான கரம். அவன் அதை மறந்திருந்தான். அதனைப் பிரிந்து வெகுதூரம் போயிருந்தான். ஆம் நான் காயப்பட்டிருக்கிறேன். ஆழமாக அவன் அவனிடம் சொல்லிக்கொண்டான். அழுதான்.

எப்போதும் மழை நின்று போவதில்லை. உலகை குளிர்ச்சியால் நனைத்துக் கொண்டுதான் இருக்கிறது.


‘Kino’

Translated from the Japanese by Philip Gabriel

By Haruki Murakami

தமிழில்: என். ஜெகநாதன்

3 comments for “ஹருகி முராகமி சிறுகதை: கினோ

  1. vallavan
    March 11, 2015 at 11:37 am

    இது போன்ற மொழிப்பெயர்ப்பு சிறுகதைகள் தொடர்ந்து வரவேண்டும். என்னைப்போன்றவர்கள் வாசிக்க வல்லினம் சிறந்த களமாக உள்ளது ஜெகநாதனுக்கு மிக்க நன்றி

  2. Murugan
    March 18, 2015 at 11:42 pm

    Arumai sirukathai….Anna..

  3. March 19, 2015 at 9:20 pm

    முழுமையாகப் படிக்காமல் சொல்வதற்கு மன்னிக்கவும். முதல் வரியைத் தாண்டவே எரிச்சலாக உள்ளது. இவ்வளவு மோசமான, mis-leading மொழிபெயர்ப்பு. முராகாமியின் புதிய, அற்புதமான கதையை வெளியிட விரும்புவதெல்லாம் சரிதான்.. ஆனால் குறைந்தபட்ச சரிபார்ப்பு கூட செய்வதில்லையா??? ஒரு வாசகனாக இவ்வளவு எரிச்சலானதில்லை.

    உயரமான பரிமாறும் மேடைக்குப் பக்கத்தில் இருந்தது// farthest down…

    அது காலியாக இருந்தது. ஆனால் அது எப்போதும் காலியாகத்தான் இருக்கும்// When it wasn’t occupied, that is, but it was nearly always free.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...