Magic mirror on the wall, who is the fairest one of all?
ஒரு நாள் வீட்டின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்த அறையில் இரண்டு அலமாரிகள் உள்ளன. ஒன்றில் முழு கண்ணாடி பதிக்க பட்டிருந்தது. இரண்டு அலமாரிகளிலும் சேலைகள்தான் மடித்து வைக்க பட்டிருந்தன. எப்போதும் விடுமுறைக்கு வீட்டுக்கு போனாலும் நான்தான் எல்லா சேலைகளையும் மடிந்து வைப்பேன். ஒரு சேலையை மடித்து வைப்பதற்கு எப்படியும் இரண்டு நிமிடங்கள் பிடிக்கும். அதுவும் ஒரு சேலையை இழுக்கும் போது இன்னொரு சேலை கலையாமல் இருக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் இப்படி சேலை குவியலில் மாட்டிக்கொள்வதால் ஏதோ ஒரு இனம் புரியாத அலுப்பு. மரக்கட்டைதானே என நினைத்து அலமாரி கதவு அப்படியே மூடி கொள்ளும் என்னும் நினைப்பில் விட்டு விட்டேன். அழகான முளு நீள கண்ணாடியில் விரிசல்கள் எற்பட்டு விட்டன.
சத்தம் கேட்டு அங்கு வந்த அம்மா “போச்சா, ஒரு கண்ணாடி ஒழுங்கா இருந்தா புடிக்காதே. ஒடிச்சிடனும், இல்லேனா ஒன்னும் முடியாது. முதல்லே இந்தா, இந்த அட்டைய எடுத்து ஒடஞ்ச கண்ணாடியே மூடு. ஒடஞ்ச கண்ணாடிலே முகம் பாக்குறது நல்லதுஇல்லே,’’ என சொல்லி ஒரு கடின அட்டையை எடுத்து என் கையில் திணித்து விட்டு முனுமுனுத்து கொண்டே சென்று விட்டார். மொத்தடி விழும் என நினைத்திருந்த எனக்கு ஒரே குழப்பம். அது எப்படி உடைந்த கண்ணாடி நல்லது நடக்க விடாமல் தடுக்கும்? அதுவும் இதையே ஒரு சிலர் ஆயூள் குறையும் என சொல்லியும் கேட்டு இருக்கிறேன். இந்த நம்பிக்கை உண்மையா என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் மேலிட்டது. எனவே அட்டை அலமாரி மேல் ஒட்டிய பின் விட்ட வேலையை முடித்து பின்னர் கணினி முன்னமர்ந்து விவர வேட்டையை தொடர்ந்தேன்.
கண்ணாடி உண்மையில் மக்களிடையே பல நம்பிக்கைகளுக்கு வித்தாக இருந்திருக்கிறது. கண்ணாடியை மையமாக வைத்தே பல நம்பிக்கைகள் இருந்திருப்பது எனக்கு மேலும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது. அவை யாவை என இப்போது பார்ப்போம். கண்ணாடி இரண்டு விஷயத்தை தனக்குள் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஒன்று: கெட்டதை கொண்டு வரும். இரண்டு: எதிர்க்காலத்தை காட்டும். இது ஏன் என்று பார்த்தோமானால் கண்ணாடி என்பது பிம்பத்தை பிரதிபலிக்க கூடிய ஒன்று. கண்ணாடி கண்டுபிடிப்பதற்கு முன்பே பிம்பத்தை பிரதிபலிக்க கூடிய நீர்நிலைகள் சூன்யங்களிலும் மந்திரங்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். உதாரணமாக ‘Snow White’ சித்திரபடத்தில் இடம் பெற்ற இந்த “Magic mirror on the wall, who is the fairest one of all? ” என்னும் வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமில்லாமல் மேற்கூறிய காரணத்தை கொண்டதாகவும் காட்டப்படுகிறது. கண்ணாடியை மைய படுத்தி கடைப்பிடிக்கபட்டு வந்துள்ள சில நம்பிக்கைகள் கீழ்கண்டவாறு:
- கண்ணாடியை உடைத்தால் ஏழு வருடங்களுக்கு துரதிஷ்டம் ஏற்படும்.
- வீட்டில் மாட்டப்படிருந்த கண்ணாடி திடிரென்று சொந்தமாக விழுந்து உடைந்தால், அந்த வீட்டில் உயிரிழப்பு ஏற்படும்.
- ஒருவர் இறந்து விட்டால் அவரின் வீட்டிலோ அல்லது அறையிலோ இருக்கும் கண்ணாடியை துணிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் இறந்தவரின் ஆத்துமா வெளியே செல்ல முடியாமல் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொள்ளும்.
- மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் ஒருவர் கண்ணாடியை பார்த்தால் அது துரதிஷ்டத்தை தருவிக்கும்.
- இறந்தவரின் அறையில் உள்ள கண்ணாடியில் ஒருவர் தன் சொந்த பிம்பத்தை கண்டால், அவர் விரைவில் இறந்து விடுவார்.
- பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு கண்ணாடியை பார்க்க கூடாது.
- தன் வருங்கால கணவன் யாரென்று தெரிய வேண்டுமாயின், ஒரு பெண் ஆப்பிளை மென்றவாறு கூந்தலை வாரிய படி கண்ணாடியை பார்த்தால் அவளின் வருங்கால கணவனின் முகம் அவள் தோளுக்கு பின்னால் நிற்பது போல கண்ணாடியில் தெரியும்.
- அம்மை நோயின் போது கண்ணாடியை பார்த்தால் நோய் இன்னும் கொடுரமாகும்.
- வீட்டு வாசலில் கண்ணாடியை வைத்தால் கெட்ட ஆவிகள் பேய் பிசாசுகள் அண்டா.
இப்படியாக பல நம்பிக்கைகள் கண்ணாடியையே சுத்தி சுத்தி பின்னப்பட்டிருக்கின்றன. இவற்றை எப்படியெல்லாமோ தெரிந்து கொண்ட என் அம்மா எல்லாவற்றையும் ஒன்றிணைத்து நல்லது இல்லை என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார் போலும். இவற்றின் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு தொடர் எழுத வேண்டும் போல. சரி முதலாவது நம்பிக்கை எதனால் சொல்ல பட்டது என பார்ப்போம்.
- கண்ணாடியை உடைத்தால் ஏழு வருடங்களுக்கு துரதிஷ்டம் ஏற்படும்.
இந்த கண்ணாடி தொடர்பான நம்பிக்கை கொஞ்சம் லாஜிக் கொண்டதாக இருக்கிறது. பழங்காலத்தில் கண்ணாடி விலையுர்ந்த பொருளாதலால் பெரும்பாலும் அரண்மனைகளிலும் அரசு தொடர்பான அலுவலகங்களிலும்தான் காண கிடைக்குமாம். எனவே கண்ணாடி பொதுவாக ஏழைகளுக்கு எட்டாத ஒன்று. அதுவும் ஏழைகள் அல்லது நடு வர்க்கத்தினர் அலுவலகங்களிலும் அரண்மனைகளிலும் வேலை செய்யும் போது கவனக்குறைவால் விலையுள்ள கண்ணாடி கீழே விழுந்து உடைய வாய்ப்புண்டு. இதனால் அரசருக்கோ அதிகாரிகளுக்கோ கோபம் வந்து தண்டனை காலமாக ஏழு ஆண்டுகள் கஷ்ட பட வாய்ப்பு உண்டு. இதை கருத்தில் கொண்டுதான் கவனக்குறைவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த வாய்வழி அறிவுரை கால போக்கில் நம்பிக்கையாக உருமாறிவிட்டது.
- வீட்டில் மாட்டப்பட்டிக்கும் கண்ணாடி திடீரென்று சொந்தமாக விழுந்து உடைந்தால், அந்த வீட்டில் உயிரிழப்பு ஏற்படும்
- ஒருவர் இறந்து விட்டால் அவரின் வீட்டிலோ அல்லது அறையிலோ இருக்கும் கண்ணாடியை துணிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் இறந்தவரின் ஆத்துமா வெளியே செல்ல முடியாமல் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொள்ளும்.
- இறந்தவரின் அறையில் உள்ள கண்ணாடியில் ஒருவர் தன் சொந்த பிம்பத்தை கண்டால், அவர் விரைவில் இறந்து விடுவார்.
- மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் ஒருவர் கண்ணாடியை பார்த்தால் அது துரதிஷ்டத்தை தருவிக்கும்.
இந்த மூன்று நம்பிக்கைகளையும் பார்த்தோமானால் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் இறப்பையும் சம்பந்தப் படுத்திய நம்பிக்கைகளாக இருக்கின்றன. இவற்றுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளதாகத்தான் தெரிகிறது. அக்காலத்தில் ஆத்மாக்கும் அது உறையும் இடங்களும் இயற்கையின் செயல்பாடுகளும் மனிதனுக்கு மிகவும் புரியாத புதிராகதான் இருந்திருக்கிறது. ஆனாலும் மனிதனுக்கு ஒன்றோடு ஒன்றை சம்பந்தப் படுத்தும் அபார கற்பனா சக்தி மிகவும் அதிகம். அதனால்தான் கெட்ட சக்தி காற்றாக மாறி வீட்டுக்குள் நுழைந்து கண்ணாடியை உடைக்கிறது என நம்ப தொடங்கினான். அறிவியல் ரீதியாக யோசித்தோமானால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அன்று கிடையாது. இன்று போல நிலநடுக்க அதிர்வுகளையும் இயற்கை பேரிடர்களையும் கண்டு கொள்ள கூடிய அளவைகள் அன்று கிடையாது. இதனால் எதிர்பாராமல் வரும் இயற்கை பேரிடர்களால் உயிரிழப்பு ஏற்பட்டது. இதை தான் சொந்தமாக கண்ணாடி விழுந்து உடைந்தால் யாரவது இறப்பார் என கூறப்பட்டது. இதுக்கு பின்னால் மனிதனின் கற்பனா சக்தியும் மறைந்திருக்கிறது. இதைதான் இறந்தவரின் ஆவி கண்ணாடியின் பின்னால் மாட்டிக்கொள்ளும் என்பது போன்ற நம்பிக்கைகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. அதாவது பிம்பத்தின் பிரதிபலிப்பு எப்படி உருவாகுகின்றது என்பதன் அடிபடை தெரியாமல் இருந்ததன் விளைவாக கண்ணாடிக்கு பின்னால் இன்னொரு உலகம் இருப்பது போன்ற ஒரு கற்பனை நம்பிக்கையாக உருவாகி இருக்கலாம். ஆனால் கண்ணாடி ஒளியை உள்வாங்காத ஒரு பொருள் என்பதுதான் நிஜம். அதாவது ஆங்கிலத்தில் ஓபக் ‘opaque’ எனப்படும். ஒளியலைகள் ஒளி உள்வாங்கா பொருட்கள் மேல் படரும் போது அவை பிரதிபலிப்பாக, ஒளிக்கீற்றுகளாக திரும்ப வெளிப்படும். வெளிச்சமாக இருந்தால்தான் ஒளி என பொருளாகாது. ஒளி எங்கும் பரவி உள்ளது. எனவேதான் கொஞ்சம் மத பூச்சுகளோடு தெளிவு படுத்தமுடியாத நம்பிக்கைகளோடும் இறந்த ஆத்மாவோடு சம்பந்த படுத்தபட்டிருக்கின்றன இந்த நம்பிக்கைகள்.
இந்த நான்கு நம்பிக்கைகளும் வழக்கில் இருந்து வந்திருக்கின்றன. இவை யாவை என ஒவ்வொன்றாய் பார்ப்போமே.
- பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு கண்ணாடியை பார்க்க கூடாது.
குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒரு வருட காலத்துக்கு அவர்கள் கண்ணாடி பார்க்க கூடாது என்பது அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூறப்பட்டது என சொல்ல படுகிறது. குழந்தைகள் பிறந்து அந்த ஒரு வருட காலக்கட்டம் தவழவது குப்புறவிழுவது, முட்டி போடுவது என ஒவ்வொன்றாக கற்று கொள்ளும் கால கட்டம். கண்ணாடி கையில் கிடைத்தால் என்னாகும்? கீழே விழுந்து உடையும். இதனால் குழந்தைக்கு அபாயம் தானே. எனவே இதை கருத்தில் கொண்டு தான் இப்படி கூறப்பட்டிருக்கலாம்.
- தன் வருங்கால கணவன் யாரென்று தெரிய வேண்டுமாயின், ஒரு பெண் ஆப்பிளை மென்றவாறு கூந்தலை வாரிய படி கண்ணாடியை பார்த்தால் அவளின் வருங்கால கணவனின் முகம் அவள் தோளுக்கு பின்னால் நிற்பது போல கண்ணாடியில் தெரியும்.
அக்காலத்தில் இங்கிலாந்து நாட்டு வழக்கத்தில் ஹலோவீன் நாளன்று இளம்பெண்கள் கயிற்றில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் ஆப்பிளின் தோலை வாயால் உரித்து எடுக்க, அது கீழே விழுந்து ஒரு கண்ணாடி மூலமாகப் பார்த்தால் அது எதேச்சையாக ஏதோ ஒரு எழுத்து வடிவத்தை ஒத்திருக்குமாம். அது வருங்கால கணவன் பெயரின் முதல் எழுத்து என நம்பப்பட்டது. அதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அது நாளாக நாளாக மேற்குறிப்பிட்ட நம்பிக்கையாக உருவெடுத்து உள்ளது.
- அம்மை நோயின் போது கண்ணாடியை பார்த்தால் நோய் இன்னும் கொடுரமாகும்.
இந்த நம்பிக்கை உருவான விதம் அனுபவத்திலிருந்து எழுந்தது. அம்மை நோயின் போது முகத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் கொப்பளங்கள் உருவாகி இருக்கும். அவை பெரியம்மை என்றால் சீழுடன் கூடிய கொப்பளங்கள் வலியும் எரிச்சலும் தரக்கூடியவையாக தான் இருக்கும். இவ்வற்றுடன் முகமும் மொத மொத வென வீங்கி போய் இருக்கும். இப்படி பட்ட சூழலில் கண்ணாடியில் முகத்தையும் உடலின் மற்ற பாகங்களையும் பார்த்தால் கை சும்மா இருக்குமா? கண்டிப்பாக கொப்பளங்களை கிள்ள செய்யும். இதனால் அம்மை நோயின் தாக்கம் இன்னும் அதிகமாகும். வலியும் அதிகரிக்கும். எனவே தான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டன.
- வீட்டு வாசலில் கண்ணாடியை வைத்தால் கெட்ட ஆவிகள் பேய் பிசாசுகள் அண்டா.
இந்த நம்பிக்கையின் பின்புலம் சீனர் நம்பிக்கைதான். சீனர்களின் எல்லா குடியிருப்புகளின் வாசலில் எல்லாமே கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். என்னவென்று ஆராய்ந்தால் எல்லாமே ஃபெங்சுய் (சீன வாஸ்துசாஸ்திரம்) தான். அதாவது கெட்ட சக்திகளை திசை திருப்ப வாசலில் வைக்க படுவதாக நம்ப படுகிறது. அதாவது வீட்டின் சில இடங்களில் கண்ணாடி வைக்கலாம் சில இடங்களில் வைக்க கூடாது. எல்லாவற்றுக்கும் காரணம் வீட்டின் மூலைகள் பூமியின் காந்த திசைகளை வைத்து கட்டப்படிருப்பதாகவும் அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி அதிர்வலைகளை உண்டாக்கி நல்ல கெட்ட சக்திகளை உருவாக்கும் என நம்ப படுகிறது. (நம்பிக்கை மட்டுமே, அறிவியலால் இன்னும் ஊர்ஜீத படுத்தப்படவில்லை).
எனவே இவற்றை எல்லாவற்றையும் பார்க்கும் போது கண்ணாடி உடைவது பாதுகாப்பற்றது, நெருப்போ அல்லது அதிகபடியான சூரிய ஒளியோ பட்டால் அது பிரதிபலிக்கப்பட்டு நெருப்பை உண்டாக்கும். எனவே கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ஆயினும் இவற்றை பின்பற்றுவது என்பது அவரவர் சிந்தனையை பொருத்து உள்ளது. கொஞ்சம் பௌதீகமும் கலந்து இருக்கிறது. எனவே இவற்றை கடைபிடிப்பதா இல்லையா என்பது காலத்துக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படுவது தான் உத்தமம் என்பது என் கருத்து. தேர்வு உங்கள் கையில்.
பின் குறிப்பு: இக்கருத்து ஒரு சிலரோடு உரையாடியும் பின்வரும் அகப்பக்கத்திலிருந்தும் பெறபட்டது.
http://redlotusletter.com/reflections-on-feng-shui-10-mirror-dos-and-donts/
http://www.pookapages.com/Gruenwold/halloween_magic_and_superstition.htm
http://www.csicop.org/superstition/library/mirrors/
http://www.penmai.com/forums/spiritual-queries/56521-spiritual-queries-7.html
நன்றிகள்
பெரும் தெளிவு பெற்றேன்.
வீட்டு வாசலில் உள்ள கண்ணாடி உடைந்தாலும் அதே 7 ஆண்டுகள் துரதிருஷ்டம் தொடருமா? இல்லையென்றால் வீட்டு வாசல் என்பதால் அது குறையுமா?
uyirilappu erpatta veetil thanagave kannadi puthithaga udainthal enna palan
சில நேரங்களில் மற்ற மற்ற காரணங்களாலும் உடைவதுண்டு அல்லவா…காரணங்களை கண்டடைவது தானே சுவாரசியம்…