ஹிண்ட்ராப் : பல்லி இறந்துவிட்டது வால் மட்டும் துடிக்கிறது!

ம.நவீன் 01

ராமாஜி

ஹிண்ட்ராப் குறித்த முதல் பேச்சு யார் மூலமாக என் காதுகளுக்கு வந்தது என நினைவில் இல்லை. அடிக்கடி நாளிதழ்களில் பிரசுரமாகும் முகம் மூலம் எனக்கு உதயகுமாரை மட்டும் அதற்கு முன்பே அறிமுகம் இருந்தது. ஆனால் ஹிண்ட்ராப் குறித்து முதலில் தவறான அபிப்பிராயம் ஏற்பட அதன் பெயரே காரணமாக அமைந்தது. அது ‘ஹிந்து’ என்ற வட்டத்துக்குள் சுற்றிக்கிடந்ததாகவே பட்டது. ஆர்.எஸ்.எஸ் உடன் சம்பந்தப்பட்டிருக்குமோ என்ற ஐயமும் இருந்தது. மதத்தை முன்வைத்து முன்னெடுக்கப்படும் ஒரு போராட்டத்திற்கு எவ்வகையில் ஆதரவு தெரிவிப்பதென்ற குழப்பமும் சூழ்ந்தது. ஆனால், 25 நவம்பர் 2007 ல் ஐம்பதாயிரத்துக்கும் குறையாத பெரும் இந்தியர் திரள் சாலையில் இறங்கி தங்கள் உரிமைகளைக் கேட்டது மக்களின் சக்தியை நிரூபணப்படுத்தியது.

13 மே கலவரத்துக்குப் பின்பும், கம்போங் மேடானில் நடந்த இனக்கலவரத்தின் கொடூரங்களுக்குப் பின்பும் இனி எந்தத் தமிழரிடத்திலும் போராட்ட குணம் இருக்காது என அதிகார வர்க்கங்கள் நம்பிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அந்த எழுச்சி நிகழ்ந்தது. சிறுபான்மை சமூகத்தில் மதம் என்பது மனிதனைக் காக்கவில்லை மனிதர்கள்தான் தங்கள் அடையாளமாக நம்பும் மதத்தைக் காக்கப் போராடுகின்றனரோ எனத் தோன்றிய கணம் அது. நாடு முழுவதிலும் இருந்து கூடிய தமிழர்களிடம் இருந்ததெல்லாம் அத்தனை ஆண்டுகள் அரசால் தாங்கள் புறக்கணிக்கப்பட்ட கசப்பு மட்டுமே. அவர்களிடம் தர்க்கங்கள் இல்லை. மதம் குறித்தோ ‘ஹிண்ட்ராப்’ எனும் பெயர் குறித்தோ சங்கடங்கள் இல்லை. தங்களுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. 50 ஆண்டுகாலம் அடக்கப்பட்ட அதிகாரத்தை நோக்கி ஒருதரமாவது கையுயர்த்தும் நிமிடமாகவே பலரும் அதைப் பார்த்தனர். பல கிலோ மீட்டருக்கு முன்பே தடுக்கப்பட்ட பேருந்திலிருந்து இறங்கி, அத்தனை அரசு மற்றும் போலிஸ் எச்சரிக்கைகளை காலில் போட்டு மிதித்து நடந்ததே அடிமை விலங்குகளை உடைத்தெரிவதற்குச் சான்றாய் இருந்தது.

விளைவு, மலேசிய அரசு ஹிண்ட்ராப் குழுவின் ஐந்து முக்கியப் பொறுப்பாளர்களான, வழக்கறிஞர் பி.உதயகுமார், வழக்கறிஞர் எம். மனோகரன், வழக்கறிஞர் வீ.கணபதிராவ், வழக்கறிஞர் ஆர்.கங்காதரன், முன்னாள் வங்கி அதிகாரி கே.வசந்தகுமார் ஆகியோர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 8 – இன் கீழ் நவம்பர் 13, 2007 இல் கைது செய்யப்பட்டு தைப்பிங்கிலுள்ள கமுண்டிங் தடுப்பு முகாமில் அடைத்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ‘ஹிண்ட்ராப்’ அல்லது ‘மக்கள் சக்தி’ என்ற சொல்லாடல்களை பலரும் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக்கொண்டனர். அதில் முக்கியமானவர் தனேந்திரன்.

தனேந்திரன் என்ற …………………….

ஒரு முதலாளித்துவ மனம் கொண்ட நாட்டில் பலவும் சந்தைப்படுத்த ஏற்ற பொருள்களாக மாறிவிடுகின்றன. மக்கள் மனதில் பிரபலமடையும் ஒன்று மிக லாவகமாக விற்பனைக்கு வந்துவிடுகிறது. அந்த வகையில் ஷா அலாமில் உள்ள கம்போங் கருப்பையா கோவில் தீபாவளிக்கு ஒருவாரம் இருக்கும்போது இடிக்கப்பட அதை தடுக்க, அதன் அமுலாக்க அதிகாரியிடம் அன்றைய ம.இ.கா தலைவராக இருந்த சாமிவேலு எவ்வளவு சொல்லியும் எடுபடவில்லை. அன்றைய சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கீர் தோயோவின் சொல்லுக்கு மட்டுமே மதிப்பிருந்தது. கோயில் உடைக்கப்பட்ட இரண்டு நாள்களில் மீண்டும் பணம் வசூழிக்கப்பட்டு கோயில் அதே இடத்தில் நிறுவப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. அப்போது அக்கோயிலுக்கு இடப்பட்ட பெயரே ‘மக்கள் சக்தி மாரியம்மன்’. இதற்கெல்லாம் ஆதார சக்தியாக இருந்து செயல்பட்டவர்களில் ஒருவர் ராமாஜி. ‘மக்கள் சக்தி’ என்ற சொல்லாடல் தமிழர் மத்தியில் பிரபலமடையவும் அதை தனதாக்கிக் கொண்டு , அப்பெயரில் ஓர் இயக்கத்தையும் உருவாக்கி, எந்தச் அதிகாரச் சக்திக்கு எதிராக ஹிண்ட்ராப் கிளர்ந்தெழுந்ததோ அதே பாரிசானுடன் கைக் கோர்த்துக்கொண்டார் தனேந்திரன்.

மக்கள் குழம்பினர்.

ஹிண்ட்ராப் பாரிசானுடன் இணைந்துவிட்டதென சிலரும்… ஹிண்ட்ராப்தான் மக்கள் சக்தி என சிலரும்… போராட்டம் ஓய்ந்துவிட்டதாக சிலரும் தங்களின் ஊகங்கள் பேசிக்கொண்டிருக்க சிறைக்குச் செல்லும் முன் உதயகுமார் தனது அடுத்த பொறுப்பாளராக நம்பி விட்டுச்சென்ற தனேந்திரனின் துரோகம் நாள்படவே மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது. புரிந்து என்ன… வழக்கமான வசைகளுக்கு நடுவில் இன்று அவர் ‘சக்தி அறவாரியம்’ என ஆரம்பித்து இலக்கிய சேவையெல்லாம் செய்ய ஆரம்பிக்க நமது எழுத்தாளர்களும் எல்லாவற்றையும் மறந்து அவரிடம் கைக்கட்டி இருக்கின்றனர்.

நமது நாட்டு எழுத்தாளர்களுக்கு எதைப்பற்றிதான் கவலை இருந்தது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் புத்தகம் அச்சாக வேண்டும்… கூட்டம் கூட வேண்டும்… மந்திரி வர வேண்டும்… மாலை போட வேண்டும்… மறுநாள் பத்திரிகையில் பல்லிளித்தப் படங்கள் வரவேண்டும். அவ்வளவுதானே. அறச்சீற்றமெல்லாம் அதிகாரத்தின் முன் அரைச்சீற்றமாக மாறிய கதையைதான் காலம் முழுதும் பார்க்கிறோமே. ஆக…ஒரு போராட்ட இயக்கம் காயடிக்கப்பட்டதை சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டிய எழுத்தாளர்களும் ஏற்றுக்கொள்ள ‘மக்கள் சக்தி’ என்பது மழுங்கி கிடக்கிறது. இந்நிலையில் ஹிண்ட்ராப்பாவது மீண்டும் புத்துயிர் பெருமா என ஏங்கியவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி ஐந்தாண்டுக்குள் நடந்து முடிந்தது.

ஹிண்ட்ராப் (HINDU RIGHTS ACTION FORCE – HINDRAF) குறித்த குழப்பங்களைப் பேசும் முன்பு அது தோன்றிய வரலாறையும் கொஞ்சம் அறிய வேண்டியுள்ளது.

ஒரு சுருக்கமான வரலாறு

டிசம்பர் 2005-இல் எவரஸ்ட் வீரர் எம்.மூர்த்தியின் இறப்பிலிருந்தே அதன் தொடக்கம் முளைக்கிறது. அவர் இஸ்லாமியர் என உடலைப் பிடுங்கி புதைப்பதற்கு இஸ்லாமிய அமைப்புகள் (Jabatan Agama Islam) முயல இந்து அமைப்புகள் அச்செயலை எதிர்க்கின்றனர். டிசம்பர் 25 தொடங்கி 29 வரை 48 இந்து அமைப்புகளின் கூட்டமைவில் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்ட சந்திப்புகள் பயனளிக்காமல் போகின்றன. இந்த நிலையில் ராமாஜி தலைமையில் உருவான இந்த எதிர்ப்பலை 48 இந்து அமைப்புகளின் கூட்டமைப்பாகி ‘ஹிண்ட்ராப்’ என பெயர்கொண்டது சுருக்கமான வரலாறு. அதன் பின்னர் நடந்த கோயில் உடைப்புகளிலும் மதமாற்ற சிக்கல்களிலும் ஹிண்ட்ராப் முன்வந்து குரல் கொடுக்க அது எளிய மக்களின் ஆதரவைப் பெற்றது.

அதன் பின்னர் இன்றைய மலேசிய இந்தியர்களின் அவல நிலைக்கு பொறுப்பேற்க வேண்டியது இந்நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் அரசுதான் எனவும் எனவே இந்தியர்கள் வாழ்வுரிமைக்கு பிரிட்டிஷ் அரசு இரண்டு லட்சம் கோடி பவுண்ட் (Trilions of pounds) வழங்க வேண்டும் என்றும் அவ்வரசு மீது இலண்டன் உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்டு 30, 2007ல் ஹிண்ட்ராப் சிவில் வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான விளக்கக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்து ஒரு லட்சம் இந்தியர்களிடம் கையெழுத்து வாங்கப்பட நாடு முழுவது பல்வேறு விதமான குரல்கள் எழுந்தன. உண்மையான உரிமை போராட்டத்துக்காக கையொப்பமிட்டவர்கள் போக எஞ்சியவர்களின் குரல் இவ்வாறு இருந்தது :

‘இதெல்லாம் நடக்கும் காரியம் இல்லை’ எனவும், ‘கிடைச்சா வாங்கிக்குவோம் கையொப்பம் தானே போட்ட போச்சி’ எனவும், நாட்டின் அமைதியைக் கெடுக்கிறார்கள் எனவும், ‘நிச்சயம் நாம் கோடிஸ்வரர்களாகப் போகிறோம்’ எனவும் பல்வேறு எண்ணங்கள் நாடு முழுதும் எழ, எது குறித்தும் கவலைப்படாமல் ஹிண்ட்ராப் திட்டமிட்டபடி 25.11.2007 ல் பேரணியைக் கூட்டி பிரிட்டிஷ் தூதரகப் பொறுப்பாளரிடம் ஒரு லட்சம் கையொப்பத்தோடு தங்கள் மனுவைக் கொடுப்பதென்பதில் உறுதியாக இருந்தார்கள்.

இந்திய மக்கள் சக்தி

25.11.2007 ல் ஹிண்ட்ராப் இயக்கத்தினர் கூட எதிர்ப்பார்க்காத இந்தியத் திரள் கோலாலம்பூர் முக்கியச் சாலைகளில் கூடியது. நிலையைக் கட்டுப்படுத்த போலிஸார் அடித்த அமில நீரும் கண்ணீர் புகை குண்டும் உலகம் முழுதும் ஊடகங்களின் மூலம் பரவியது. உலக நாடுகள் அது குறித்து பேசின. உண்மையில் இது யாரின் தூண்டுதலால் வந்து சேர்ந்த கூட்டம் என பலருக்கும் கேள்வி இருந்தது.

2007 டிசம்பர் 3 ல் மலேசியா கினிக்கு நேர்காணல் கொடுத்த உதயகுமார் தானும் 10000 பேர்தான் வருவார்கள் என எதிர்ப்பார்த்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், அதையெல்லாம் மீறி மக்கள் கிளர்ந்து வர அத்தனைக் காலம் அவர்கள் அடக்கிவைக்கப்பட்டதே காரணம் எனலாம். பலரும் நம்புவது போல ஐந்து வழக்கறிஞர்களை நம்பி அந்த 50000 பேர் கூடவில்லை. அவர்களுக்குத் திரள காரணம் இருந்தது. கூடுவதற்கான தருணத்தை மட்டுமே ஹிண்ட்ராப் ஏற்படுத்திக்கொடுத்தது. ஆனாலும் ஐவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டப்பின்னர் மக்கள் தொடர்ச்சியாக தங்கள் ஆதரவை ஹிண்ட்ராப்புக்கு வழங்கிக்கொண்டிருந்தனர்.

நோக்கப் பிறழ்வு

இந்த இடத்தில்தான் ஹிண்ட்ராப்பின் நோக்கம் பிறழ்ந்தது. ஹிண்ட்ராப் தனது போராட்டத்தின் ஆதாரமாகக் கொண்டிருந்த 18 கோரிக்கைகள் அடங்கிய அம்சங்களை மறந்துவிட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஐவருக்கான விடுதலையை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பியது. அந்த நோக்கப் பிறழ்வுக்குத் தூண்டிதலாக இருந்தவர் வேதமூர்த்தி. அவர்களின் விடுதலைதான் ஹிண்ட்ராப்பின் வெற்றிபோல மாற்றம் கண்டது. உண்மையில் 18 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க அடுத்த நிலையில் யாரும் இல்லாத சூழலில் அது கோயில் வழிபாடு, விடுதலைக்கான பிரார்த்தனைகள், பண வசூழிப்பு என்பதோடு தேங்கியது.

சூழல் மோசமாகிக்கொண்டிருக்க ஹிண்ட்ராப்பின் தலைவராக கருதப்பட்ட வேதமூர்த்தி மட்டும் வெளிநாட்டுக்குள் தஞ்சம் புகுந்திருந்தார். அவர் ஹிண்ட்ராப் போராட்டத்தில் (நவம்பர் 25) கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிண்ட்ராப்பில் போராடிய ஐவர் சிறையில் இருக்க அவர் லண்டனில் சொகுசு வாழ்வில் சிறைபட்டிருந்தார். இந்நிலையில் ஹிண்ட்ராப் பெயரைச் சொல்லி பெறப்பட்ட பணம் எங்குப் போனது என்ற குழப்பம் வேதமூர்த்தியோடு தொடர்பு படுத்தி பேசப்பட்டது. நிலை இதோடு முடிந்திருந்தால்கூட மக்கள் சட்டத்தை மீறுவதம் மூலமாக மட்டுமே நியாயத்தைப் பெற முடியும் என்ற விழிப்புணர்ச்சியைப் பெற்றிருப்பார்கள். ஆனால் எந்த ஹிண்ட்ராப் இந்தியர்களிடையே வரமாகக் காட்சியளித்ததோ அதுவே பின்னர் சாபமானது.

பி. உதயகுமார்

514 நாள்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருந்து 9.5. 2009 வெளியேறிய பி.உதயகுமார் மீது இப்போதுவரையில் எனக்கு நல்ல அபிப்பிராயங்களே உண்டு. அவருடன் சிறையில் இருந்த வழக்கறிஞர் எம்.மனோகரன் சிறையில் இருக்கும் போதே கோத்தா அலாம் ஷா எம்.பி யாக தேர்தலில் வென்றார். வீ.கணபதிராவ் பி.கெ.ஆரில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். வசந்தகுமாரும் பி.கெ.ஆரில் இணைந்து இம்முறை தாப்பா தொகுதில் தோல்வியுற்றார். கங்காதரனிடம் அதன் பிறகு எந்தச் செயல்பாடுகளையும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் உதயகுமார் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுதலையாகும் போது சில அரசு சட்டதிட்டங்களில் கையொப்பம் இட மறுக்க சிறையிலிருந்து தூக்கி வீசப்பட்டதை பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தப் பிடிவாதம்தான் உதயகுமாரின் பலம். அவரின் பலவீனமும் அதுதான்.

செப்டம்பர் 2009 ல் உதயகுமார் மீண்டும் ஹிண்ட்ராப் அலுவலகத்தை அமைத்து இயங்கினார். பல புதிய வியூகங்களை அமைத்தார். ஹிண்ட்ராப்பிலிருந்து ஒரு எம்.பியாவது செல்ல வேண்டும் என்பது அவர் நோக்காக இருந்தது. வேதமூர்த்தி குறித்து அவர் சாதகமான தகவல்களையே கொடுத்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர் வெளிநாட்டில் இருப்பதுதான் ஹிண்ட்ராப்புக்கு நல்லது என்றும் அதன் கொள்கைகளையும் அதன் தேவைகளையும் வெளிநாடுகளில் பிரசாரம் செய்ய வேதமூர்த்தியால்தான் சாத்தியம் என்பதுபோல உதயகுமாரின் கருத்துகள் இருந்தன.

வேதமூர்த்தி இனி மலேசியாவுக்கு வந்தால் சிறைதான் என மக்கள் நம்பிக்கொண்டிருக்கையில் மிக அண்மையில் எந்தத் தடையும் இல்லாமல் அவர் நாட்டிற்குள் நுழைந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. உதயகுமாருடன் எவ்வித தொடர்பில் இருப்பதற்கான அறிகுறியும் அவர் நடவடிக்கையில் தென்படவும் இல்லை. தொடர்ச்சியாக ஹிண்ட்ராப் என மட்டும் வேத மூர்த்தி பேச ஆரம்பித்திருந்தார். அவ்வளவு காலம் உதயகுமாருடன் இருந்த சில முகங்களை வேத மூர்த்தியைச் சூழ்ந்து புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தன. உதயகுமார் மௌனம் காத்தார்.

இந்த நிலையில்தான் வேதமூர்த்தியில் உண்ணாவிரதம் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் அறிக்கை விட்டுக்கொண்டிருந்த உதயகுமாரிம் எவ்வித சலனமும் இல்லை. அது நல்ல வாய்ப்பாக மாற வேத மூர்த்தி தன் நாடகத்தை வசதியாக அரங்கேற்றத் தொடங்கினார்.

வேதமூர்த்தி

வேதமூர்த்தி முதலில் சமூக விரோதியல்ல. ஹிண்ட்ராப்பில் அவர் இடையில் வந்து இணைந்தாலும் ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் கோரி வாழ்ந்து அந்த கால கட்டத்தில் மலேசியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களையும் மலேசிய இந்தியர்களின் அவலங்களையும் உலக அரங்குகள் பலவற்றின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை பிரிவுக்கு பல அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார். எல்லாம் சரிதான். அவரது அத்தனை செயலையும் கலங்கம் கற்பிக்கும் நோக்கம் நமக்கில்லை. ஆனால் ஒரு காலக்கட்டத்திற்குப் பின் வேதமூர்த்தியின் முகத்திரை மெல்ல விலகுவதாகவே படுகிறது.

அனைத்துலக கடப்பிதழ் முடக்கப்பட்ட நிலையில் , வேதமூர்த்தி இனி மலேசியாவுக்குள் நுழைய முடியாது என எல்லோரும் நம்பிக்கொண்டிருக்க எளிதாக அவர் மீண்டும் இங்கு நுழைவதிலிருந்து அந்தச் சந்தேகம் வலுக்கிறது. அதன் பின்னர் ஓரிரு அறிக்கைகள் விடுகிறார். நாளிதழில் சமுதாயத் தொடரெல்லாம் அவர் பெயரில் வருகிறது. திடீரென ரவாங்கிலுள்ள அருள்மிகு அகோர வீரபத்திரர் சங்கிலி கருப்பர் ஆலயத்தில் வேதமூர்த்தி உண்ணாவிரதப் போராட்டத்தை 21 நாட்கள் தொடர்கிறார். அப்போதும் உதயகுமார் அமைதியாக இருக்கிறார்.

தடாலடியாக உண்ணாவிரதம் 21 நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் புத்ரா ஜெயா சென்று பிரதமரைச் சந்திக்கிறார். உள்ளே என்ன பேசினார்கள் என சொல்லவும் மறுக்கிறார். பிரதமருடனான ஒரே சந்திப்பிற்கு பின்னர், பிரதமரே இறங்கி வந்து வேதமூர்த்தி குழுவினர் சமர்ப்பித்த ஐந்தாண்டு திட்டத்தின் 4 அம்சங்களை ஏற்றுக் கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய முன்னணி சார்பாக அதன் தலைமைச் செயலாளர் துங்கு அட்னானை கையெழுத்திட வைக்கிறார். இந்தத் தகவல் குறுந்தகவல் மூலமாகவே எல்லா இடங்களிலும் பரவுகிறது. சமுதாயத்தைப் புரட்டிப் போட்ட இந்த முக்கிய நிகழ்வுக்கு முன் அறிவிப்பே இல்லை. ஏதோ திருட்டுக் கல்யாணம்போல நடக்கிறது. ஒருவேளை முன் அறிவிப்பு செய்தால், உதயகுமார் பாக்காதானுடன் கூட்டணி வைத்துக்கொள்வாரோ அல்லது பாக்காதான் பகிரங்கமாக ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகளை ஏற்பார்களோ என்ற அச்சமாக இருக்கலாம். அப்படி அது நடந்திருந்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகத்தில் பெரிய திருப்பம் வந்திருக்கும் அல்லவா?

அத்தனை காலம் அமைதி காத்த உதயகுமார் “வேதமூர்த்தி ஹிண்ட்ராப்பை தேசிய முன்னணிக்கு ஆதரவாக கடத்திக்கொண்டு போய்விட்டார்” என்று பதறுகிறார். தனது பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்தி “எங்களின் இறுதி முடிவு இதுதான். நாங்கள் தேசிய முன்னணியை ஆதரிக்க மாட்டோம். அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் வாக்களிக்கமாட்டோம் என்ற ஹிண்ட்ராப் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மக்கள் கூட்டணிக்கு வாக்களிப்பது அவரவர்களின் சொந்த விருப்பம்” என்றும் உதயகுமார் வலியுறுத்துகிறார். ஆனால் அந்த வாசகத்திற்கு அப்போது எந்த சக்தியும் இல்லாமல் போய்விட்டிருந்தது.

ம.இ.காவின் நிலை

அந்தக் கையெழுத்து ஒப்பந்த நிகழ்வுதான் ம.இ.காவுக்கு அம்னோ அடித்த முதல் ஆப்பு. ம.இ.காவின் அத்தனைப் பிரமுகர்களையும் வைத்துக்கொண்டு நஜீப் வேதமூர்த்தியின் கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார் என்றால், அத்தனை காலம் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறும் ம.இ.கா ஏன் இந்தத் திட்டங்களை முன்மொழியவில்லை. அவர்கள் இப்படி ஒருவர் உண்ணாவிரதம் எடுத்து வந்து உரிமையைக் கேட்பார் எனக் காத்திருந்தார்களா? அல்லது என்ன கையெழுத்து போட்டாலும் ஒன்றும் நடக்காது என்பதால் தங்கள் புன்னகை ததும்பும் முகத்தை புகைப்படங்களில் பதிவு செய்தார்களா எனத் தெரியவில்லை.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த ம.இ.கா தலைவர்கள் , ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோதே தனது கண்டனத்தை தெரிவிக்காமல் , இப்போது குத்துதே குடையுதே என்பதெல்லாம் வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி கிடைத்த கடுப்பால் மட்டுமே என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

துணையமைச்சர் பதவியும் கோபங்களும்

ஒரு இந்தியருக்கு துணையமைச்சர் பதவி கிடைத்ததில் நாம் வருந்த ஒன்றும் இல்லை. ஆனால் வேத மூர்த்தி அதை அடைந்தவிதமே இங்குச் சிக்கலாகி நிர்க்கிறது. அவர் அப்பதவியை அடைய இந்தியர்கள் வாக்குகளை வியாபாரம் செய்திருக்க வேண்டியதில்லை. ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றைக் கொடுப்பேன் எனும் பச்சையான வியாபாரத்தைதான் வேதா நடத்தி முடித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நிகழும் சரிவுகளைதான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

முதலாவது, ஹிண்ட்ராப் தோற்றுனர்கள் அதை உருவாக்க 18 அம்ச கோரிக்கைகளே முதன்மை காரணமாக இருக்க இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. உதயகுமார் இன்னமும் அந்தப் 18 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினாலும் இனி அதை சீண்டுவார் யாருமில்லை. இனி அரசாங்கத்தைப் பொருத்தவரை வேதமூர்த்திதான் ஹிண்ட்ராப். ஆக, ஹிண்ட்ராம் தோன்ற காரணமாய் இருந்த நோக்கம் வேதமூர்த்தியால் அழிக்கப்பட்டதை அவர் ஆதரவாளர்கள் மனம் திறந்து ஒப்புக்கொள்ளவேண்டும்.

இரண்டாவது, இந்தியர்கள் ஒற்றுமை என்பது அதிகாரத்துக்கு எப்போதுமே அச்சத்தைக் கொடுக்கக் கூடியதுதான். ஹிண்ட்ராப் அந்த அச்சத்தை உண்டாக்கியது உண்மை. ஆனால் மாண்புமிகு நஜீப் அவர்களின் மிகத்திறமையான, சாதுர்யமான அரசியல் காய் நகர்ச்சியால் அந்தத் திட்டம் செல்லா காசாகிவிட்டது. இங்கு நாம் நஜீப்பை குறை கூறி ஒன்றும் இல்லை. வீசும் எலும்புக்கு வாலாட்டும் நாய்கள் இருக்கும் வரை திருடர்கள் திருடிய வீட்டில் திங்கவும் செய்வார்கள்.

மூன்றாவது, இத்தனை ஆண்டுக்காலம் ம.இ.கா நிச்சயம் நமக்கான தேவைகளைக் கேட்கவே செய்தது. ஆனால் அதன் குரல் வன்மையற்றுப் போக பதவி மோகமும் கூட்டணிக்கட்சியில் முடிவெடுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லாததே முக்கியக் காரணம். இதுபோன்ற எத்தனை கோரிக்கைகளுக்கு அம்னோ அரசு கையொப்பமிட்டிருந்தாலும் அத்தனையும் முடங்கிப்போக மஇகா-வும் காரணம் என்றாலும், பெரிய முட்டுக்கட்டை அம்னோ அரசாங்கத்தின் இனவாத அமைப்பு முறைதான். ஆனால் ஹிண்ட்ராப் இந்த குட்டையில் போய் சேராமல் இருந்திருந்தால் குறைந்த பட்சம் குரல் எழுப்பும் சுதந்திரமாவது இருந்திருக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் கைப்பொம்மையாக மாற ஒப்புதல் அழித்த அடுத்த கணமே அதன் குரல்வளை நசுங்கி தெறித்த ரத்தமே தமிழர்களின் கண்ணீராக பீறிட்டது.

நான்காவது, உதயகுமார் இல்லாத ஹிண்ட்ராப் இனி, சங்கப் பதிவு இலாகாவின் உதவியோடு ஹிண்ட்ராப் இயக்கம் வேதமூர்த்தியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். வேதமூர்த்தி அது அரசியல் கட்சியாக மாறாது என பலமுறை உறுதி சொல்கிறார். அவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், ஊரே பல்பிடுங்கிய பாம்பை கல்லால் அடிக்கும் போது பாம்பாட்டி மட்டும் ‘இனி யாரையும் பாம்பை ஏவி கொத்தவிட மாட்டேன் யாரும் பயப்படாதீங்க ‘ எனச் சொல்வது போல உள்ளது. ஹிண்ட்ராப் இனி அர்த்தம் இழந்துவிட்டது. அது இனி என்னவாக மாறினாலும் அறிவார்ந்த மக்கள் அதை புறக்கணிக்கவே செய்வர்.

ஐந்தாவது, உதயகுமார் சொன்னபடி வேதமூர்த்தியால் மெட்ரிகுலேஷனின் கல்வி பயில வாய்ப்புக்கிடைத்த 1500 மாணவர்களின் பெயரையும் தொடர்பு எண்ணையும் கூட பிரதமரிடம் இருந்து வாங்கி தர இயலாது. அதே போல ஹிண்ட்ராப் முன்னெடுத்த போராட்டங்களில் ஒன்றான சிறையில் இந்தியர்கள் இறந்துபோகும் கொடுமை என். தர்மேந்திரன் மரணம் மூலம் மீண்டும் தலைக்காட்டியுள்ளது. இந்தியர்களுக்காவே சிறப்பு துணை அமைச்சராக பதவி ஏற்ற குறுகிய காலத்திலேயே வேதமூர்த்தி எதிர்க்கொண்டுள்ள இந்தச் சிக்கலை அவர் முக்கி முணங்கி செய்தாலாவது கொஞ்சம் நம்பிக்கை ஏற்படும். மிஞ்சிபோனால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். அடிமையாகிவிட்ட ஒரு முன்னால் போராட்டவாதியால் அதைக்கூட செய்ய முடியாவிட்டால் எப்படி?

தனிப்பெரும் தலைவர் வேதா

இனி வேதமூர்த்தி தனிப்பெரும் தலைவராக விளங்குவார். அவ்வப்போது தேவைப்படும் சலுகைகளை நிறைவேற்றும் மண்டோராக அவர் மாறுவார். சாமிவேலு இரண்டு முட்டைகள் கொடுத்திருந்தால் வேதமூர்த்தி ஐந்து முட்டைகள் கொடுப்பார். எனவே மக்கள் வேதமூர்த்தி சிறந்த தலைவர் எனப் போற்றுவர். ஆனால், நமக்குக் கோழிகள் கிடைக்க வேண்டும் என்ற உரிமை கடைசிவரை தெரியாமலே போகும்.

சிங்க வன தத்துவம்

சுவாமி பிரமானந்த சரஸ்வதியிடம் பேசிக்கொண்டிருந்த போது உதயகுமாரின் நிலைப்பாட்டை சிங்க வன தத்துவத்தோடு ஒப்பிட்டார். சிங்கம் இருப்பதால் மரங்களை வெட்ட கள்ளத்தனமாக நுழைபவர்கள் அச்செயலைச் செய்யத் தயங்குவார்கள். இதனால் வனம் பாதுகாப்பாக இருக்கும். அதே போல வனம் அடர்ந்திருப்பதால் சிங்கமும் பாதுகாப்பாகவும் செழித்தும் வாழலாம். இதை உணர்ந்தால்தான் சிங்கம் அரசனாகக் காட்டில் வாழ முடிகிறது. உதயகுமார் தொடக்கத்திலேயே பாக்காதானில் இணைந்திருந்தால் அவருக்கும் அவரால் அக்கட்சிக்கும் சக்தி கூடியிருக்கும். மிகப்பிடிவாதமான தனது போக்கினால் சிங்கமும் இல்லாமல் காடும் இல்லாமல் போய்விட்டது. இப்போது அவர் விடும் அறிக்கைகளுக்கு எவ்வித அர்த்தமும் இல்லாமலும் போய்விட்டது.

இனி மக்களின் முடிவு

ஒரு சமகாலத்தில் போராட்டத்தின், மக்கள் புரட்சியின், உண்ணாவிரதத்தின் தவறான எடுத்துக்காட்டாக ஹிண்ட்ராப் மாறிவிட்டது. இது இளம் தலைமுறைக்கு போராட்டத்தின் மீதான தவறான புரிதல்களை ஏற்படுத்தியிருக்கும். ஒரு போராட்டம் அதிகாரத்திடம் சரணடைவதில்தான் முடியும் என்பது எத்தனை பாதகமான உதாரணம். ஆனால், இதை மீறி வரவேண்டியுள்ளது. இன்றைய இளம் தலைமுறைக்கு ஏட்டுக்கல்விபோலவே அரசியல் கல்வியையும் பாடத்திட்டம் இல்லாமலேயே பரப்ப வேண்டியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் மனம் மாறும்போது மீண்டும் இங்கு ஒரு மக்கள் புரட்சி தோன்றும். மாற்றம் நிகழும். இன்று அரசியலால் பிழைப்பு நடத்துபவர்கள் அப்போது எவ்வித சட்டத்திலும் சிக்காமல் தப்பி இருக்கலாம்.

காந்தி சொல்வதுபோல புரட்சி என்பது தண்டனை தருவதற்கல்ல… மக்களின் மனமாற்றமே அதன் வெற்றியைத் தீர்மாணிக்கிறது.

2 comments for “ஹிண்ட்ராப் : பல்லி இறந்துவிட்டது வால் மட்டும் துடிக்கிறது!

  1. ஸ்ரீவிஜி
    June 5, 2013 at 4:57 pm

    அரசியல் பற்றி எதுவுமே அறிந்திராத ஒரு தமிழன்(இந்தியன்) இக்கட்டுரையை வாசித்தானென்றால், ஹிண்ட்ரஃப் தோன்றிய வரலாறு அதன் பொருட்டு நடந்த நாடகங்கள் அனைத்தும் அத்துபடி. சிறப்பான கட்டுரை. தொடரட்டும்

  2. June 13, 2013 at 5:14 pm

    yes agreed.now i know..its an eye opener for all.please if can read this article.thumbs up for the writer!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *