மலாக்கா மலேசியாவின் வரலாற்று மாநிலம். மலேசிய வரலாற்றை மலாக்காவிலிருந்து தொடங்குவதுதான் அரசைப் பொறுத்தவரை உவப்பானது. அதற்கு முன்பே பழமையான சுவடுகளைக்கொண்ட பூஜாங் பள்ளத்தாக்கெல்லாம் மேம்பாட்டுத் திட்டத்துக்காக அப்புறப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க, வரலாறு குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் மலேசியாவில் தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லும் பிற்போக்குவாதிகள் ‘தமிழர் தேசியம்’ எனத் தமிழக அரசியல் கோமாளிகளின் பாதங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள். பினாங்கு துணை முதல்வர் ராமசாமி போன்றவர்கள் தங்கள் சுய அரசியல் லாபத்துக்காக சீமானையும் வை.கோவையும் அழைத்து வந்து கூட்டம் நடத்தி தங்களைத் தமிழர் தலைவராகக் காட்ட பல லட்சம் ரிங்கிட்டுகளைச் செலவிடுகின்றனர். மற்றுமொரு புறம் தமிழை வளர்ப்பதாகக் கூறி பல லட்சங்களைச் செலவிட்டு ஆராய்ச்சி மாநாடுகளை நடத்துபவர்கள் அடுத்த கட்டங்களுக்கான உழைப்பும் தூரநோக்கும் இன்றி சடங்குபூர்வமாகக் கூட்டம் சேர்ப்பதைச் சாதனையாகப் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்படித் தமிழகத்தின் அருவருப்பான அரசியலையும் ஜனரஞ்சக கூட்டங்களையும் மொழியின் பெயரால் கூட்டி சக்தியையும் நேரத்தையும் விரயம் செய்துகொண்டிருக்கும் கோமாளிக்கூட்டத்துக்கு மத்தியில் தனி ஒருவராக மலேசிய இந்தியர் வரலாற்று அடையாளங்களைச் சேகரித்து வருகிறார் மலாக்கா லிம்புங்கானைச் சேர்ந்த ஆர்.மணி.
முக்கிய சாலை ஓரம் அமைந்துள்ள அவர் வீட்டினுள் நுழைந்த அடுத்த கனமே பழம் பொருள்கள் நம்மை வரவேற்கின்றன. சட்டெனக் கடந்த காலத்திற்குள் நுழைந்ததுபோல ஓர் உணர்வு. மலாக்கா செட்டிகளின் சேகரிப்பில் இருந்த ஓலைச் சுவடிகள், பொருளியல் தகுதிக்கேற்ப பயன்படுத்தப்பட்ட பல்வேறு வெற்றிலைப் பெட்டிகள், சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை பூசப்பட்ட பெட்டிகள், மர பொருள்கள், ரப்பர் தோட்டத்து மிச்சங்கள் என எண்ணற்ற பொருள்கள் குவிந்திருந்தன. எந்தப் பெட்டியைத் திறந்தாலும் பழைய ஆபரணங்கள், ஆயுதங்கள், பத்திரங்கள், பல ஆண்டுகளுக்கு முன் உபயோகப்படுத்தப்பட்ட பொருள்கள், ஆண்டு வாரியாகக் குறிப்பிட்டு சொல்லும்படி பல்வேறு வானொலிகள் என அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வியப்பிலிருந்து மீழும் முன்பே மணி அவர்கள் பேசத் தொடங்கினார்.
பழைய நாணயங்களைச் சேகரிப்பதில் இருந்துதான் எனக்கு இந்த ஆவல் தொடங்கியது. பள்ளியில் வரலாற்றுப் பாடத்தின் மூலம் எனக்கு வரலாற்றில் ஓர் அம்சமாய் இருக்கும் பொருள்கள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. அந்தப் பொருள்களைத் தொடுவது நீண்ட வரலாற்றின் ஒரு பகுதியைத் தீண்டுவது போல உணர்ந்தேன். வரலாற்றில் வாழ்ந்த எத்தனையோ ஆளுமைகளின் கைப்பட்ட ஒன்றை நாம் தொடுவது நெகிழ்வளிக்கக் கூடியது. இங்கே பார்த்தீர்களா 1925ஆம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் தட்டச்சு இயந்திரம். இதை தொடும்போது இதுவரை இந்தக் கருவியைத் தொட்ட விரல்களைத் தீண்டும் ஆச்சரியம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
இன்று பழம் பொருள்களைச் சேகரிக்கும் பழக்கம் ஒரு வணிகமாக உங்களுக்கு மாறி அதை தொழிலாகவே நடத்துகிறீர்கள். தொடக்கத்தில் இருந்தே இந்த வணிகத்தில் இருந்துதான் வாழ்வை ஆரம்பித்தீர்களா?
என்னிடம் பெரிய கல்விப் பின்புலம் இல்லை. பத்து வருடங்கள் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தேன். திருமணம் செய்ய மீண்டும் மலேசியா வந்தேன். மீண்டும் பழம்பொருள்களைச் சேமிக்கும் ஆசை தொற்றிக்கொண்டது. ஆனால் அதை மனம் போல செய்ய பணம் இல்லை. வேலை எங்கும் கிடைக்கவில்லை. வட்டிக்குப் பணம் வாங்கியே வாழ்வை ஓட்ட வேண்டிய நிலை. இந்தச் சமயத்தில்தான் என் வாழ்வில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
அப்படியா? அது பற்றி கூறுங்கள்.
என் தம்பி பேப்பர் கடை நடத்திக்கொண்டிருந்தார். நான் சில சமயம் அவருக்கு உதவியாக அங்கே இருப்பேன். அப்போது அந்தக் கடைக்கு முன் இருந்த மூன்று குப்பைத்தொட்டிகளில் ஒரு ரிக்ஷா ஓட்டி, குப்பைகளை எடுத்து வந்து கொட்டினார். அருகில் இருந்த பணக்காரக் குடும்பம் வெளிநாட்டுக்குச் செல்வதால் தேவையற்றதை வீசிவிட்டனர் என்றார். நான் அருகில் சென்று பார்த்தேன். அவை அனைத்தும் நூல்கள். ஆயிரம் நூல்களாவது இருக்கும். அத்தனையும் ஆங்கிலம். நான் அவற்றைப் பொறுக்கியெடுத்தேன். அலுவலகம் செல்பவர்களுக்கும் படித்த வர்க்கத்துக்கும் அவற்றைக் குறைந்த விலையில் விற்கலாம் என திட்டம்.
அதில் 1892ல் அச்சான 13 தொகுதி அடங்கிய நூல்கள் இருந்தன. ஆனால் அதில் சில தொகுதிகள் விடுபட்டிருந்தன. முதல் தொகுதி இருக்க இரண்டாம் தொகுதி அடங்கிய நூல் இல்லாமல் இருந்தது. இப்படி சில இருந்தும் சில இல்லாமலும் இருந்த தொகுப்புகள் அவை. அப்போதுதான் நான் அவற்றை விரித்துப் பார்த்தேன். அவை பாபா இனத்தவர் பேசும் மலாய் மொழியில் எழுதப்பட்டிருந்தது. மலாக்காவில் பழம் பொருள்களை விற்கும் கடைகள் உள்ளன. எனவே அந்தத் தொகுப்பை எடுத்துச்சென்று அங்கே கொடுத்து முன்னூறு வெள்ளிக்காவது விற்றுக்கொடுக்கக் கேட்டேன். ஆனால் சில வாரங்களிலேயே அவற்றை விற்க முடியவில்லை என்றும் இடத்தை அடைத்துள்ளதால் மீட்டுக்கொள்ளும் படியும் கூறிவிட்டனர். இப்படிக் காலம் போய்க்கொண்டிருக்கும் போது ‘ஸ்டார்’ நாளிதழ் நிருபர் ஒருவர் எங்கள் கடையில் பத்திரிகை வாங்கினார். அவரிடம் நான் என்னிடம் உள்ள நூல்களைக் காட்டி அது குறித்து நாளிதழில் பிரசுரிக்க முடியுமா எனக்கேட்டேன். அவர் உதவுவதாகக் கூறி என்னிடம் உள்ள நூல்கள் குறித்த செய்தியைச் சிறியதாகப் பிரசுரித்து உதவினார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு அழைப்புகள் வந்தன. பலரும் இவை மிக அரிய நூல்கள் எனக் கூறினர். சபா, சரவாக்கில் இருந்தெல்லாம் அழைப்புகள் வந்தன. ஆனால் அஹ்மாட் சாக்கி என்ற மலாய்க்காரர் மட்டும் தினமும் அழைத்து அந்த நூல்கள் என்ன விலை என விசாரிப்பார். அவர் ஒரு பதிப்பகம் நடத்துபவர். என்னால் விலையைக் கூற முடியவில்லை. எனக்கு அதன் விலை தெரியவில்லை. நான் சொல்வதாகக் காலத்தைக் கடத்தினேன். பலரிடமும் விசாரித்தேன். 500 ரிங்கிட்டுக்கு விற்கலாம் என சிலர் கூறினர். அது எனக்குப் பேராசையாகப் பட்டது. இந்த விலையைக் கேட்டால் என்னைத் திட்டுவாரோ என பயந்தேன். யாருக்கும் இதன் விலை தெரியவில்லை. அவர் எனக்குக் கடைசியாகக் கொடுத்த அவகாசம் முடிய ஒருநாள் இருக்கும்போது அழைத்த அந்த மலாய்க்காரன் “நான் உன்னிடம் இந்த நூலைக் கேட்க காரணம் என்னிடமும் இது போல ஒரு தொகுப்பு உள்ளது. ஆனால் அது முழுமையாக இல்லை. நான் என் நூல் தொகுப்புகளை முழுமைப்படுத்த விரும்புகிறேன்,” என்றார்.
வறுமை, கடன், நெருக்கடி என பல்வேறு மனப்போராட்டத்துக்கு மத்தியில் இறுதி நாள் மீண்டும் அவரே அழைத்தார். நான் விலையைத் தீர்மானித்திருக்கவில்லை. ஆனால் என்னை அறியாமல் இருபதாயிரம் வெள்ளி என ஒரு தொகையைக் கூறினேன். இந்நிமிடம்வரை ஏன் அப்படிச் சொன்னேன் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் வாயிலிருந்து அத்தொகை இயல்பாக வந்தது. எதிர் திசையில் மௌனம். என்னால் மன வலியைத் தாங்க முடியவில்லை. என்னை ஒரு பேராசைக்காரனாக நினைப்பாரே என வருந்தினேன். ஆனால் அவர் “போதுமா” என்றார். எனக்குக் குழப்பம். போதும் என்றேன். மறுநாள் ரொக்கமாக அவ்வளவுப் பணத்துடன் வந்தார்.
அந்த இருபதாயிரம் ரிங்கிட்தான் இன்று பல லட்சம் மதிப்புள்ள பொருள்களை நான் சேர்க்க உதவியாக இருந்தது.
எம்மாதிரியான பொருள்கள் உங்கள் சேகரிப்பில் உள்ளன?
மலேசிய இந்தியர்களின் வரலாற்றைச் சொல்லும் பல பொருள்களை என் சேமிப்பில் வைத்துள்ளேன். அவை விற்பனைக்கானவை அல்ல. என் ஆன்ம திருப்திக்கானவை. நான் வாங்கிச் சேமித்து விற்பவை எல்லாம் பாபா, சீனர் மற்றும் மலாய்க்காரர்களின் பொருள்கள்தான். அதில் கிடைக்கும் லாபத்தில் இந்தியர்களின் பொருள்களைச் சேமிக்கிறேன்.
எம்மாதிரியான பொருள்களுக்கு அதிக மவுசு உள்ளது?
பாபா, ஞோஞ்ஞா பொருள்களுக்குத்தான். அந்த இனத்தின் பூர்வீக அடையாளம் இப்போது இல்லை. ஜப்பானிய ஆட்சியில் அவர்கள் பலவற்றையும் விற்றனர். அடையாளங்கள் அழிந்துகொண்டு வரும் ஒரு சமூகத்தின் வரலாற்றுச் சுவடுக்கு மவுசு உண்டு.
இதுபோன்ற பொருள்களை அதிகப் பணம் கொடுத்து பலரும் வாங்கிச்செல்ல காரணம் என்ன?
பலவிதமான காரணம் சொல்லலாம். யாரிடமும் இல்லாத பொருள் தங்களிடம் இருப்பதை சிலர் கௌரவமாக நினைக்கின்றனர். இன்று அதிக விலைகொண்ட எந்த நவீன ரகப் பொருளாக இருந்தாலும் அது உங்களைத் தவிர இன்னொருவரிடமும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் பழங்காலப் பொருள்கள் அனைவரிடமும் இருக்க வாய்ப்பில்லை. மற்றுமொரு காரணம் அதன் வேலைப்பாடு. ஓர் அலமாரியையோ, ஆபரணத்தையோ எடுத்துப்பாருங்கள். அதன் நுட்பமான வடிவமைப்பு மனிதனின் கைவிரல்களின் கலைத்திறனால் விளைந்தவை. அதில் நாம் ஒரு கலைஞனைக் காண்கிறோம். இயந்திரங்கள் உருவாக்கும் கலைக்கு எப்போதுமே பெரிய ஈர்ப்பு இருப்பதில்லை. பிரம்மாண்டமான வளவளப்பான தாளில் அச்சில் உருவாகும் ஒரு போஸ்டருக்கும் எளிய தாளில் உருவாகும் ஓர் ஓவியத்துக்கும் உள்ள வித்தியாசம் அது. இதையெல்லாம் மீறி வரலாற்றை ஏதோ ஒரு முறையில் தொட்டுப்பார்க்க விரும்புபவர்களும் இதுபோன்ற பொருள்களைச் சேகரிக்கின்றனர்.
உங்களிடம் உள்ள மிகப்பழமையான அதே சமயம் மதிப்புமிக்க பொருள்களாக எதைக் கூறுவீர்கள்?
1826 டச்சுக்காரர்களின் அரசாங்க ஆவணம், வெள்ளையர்கள் காலத்தின் கவர்னர் கடிதங்கள் என சில உள்ளன. ஆனால் அவர்களுக்கு அப்பொருட்களின்மீது எவ்விதமும் மதிப்பிருக்காது. பிரிட்டிஷ் அரசாங்கம் பல நாடுகளை ஆண்டுள்ளது. அங்கெல்லாம் எண்ணற்ற மிச்சங்களை விட்டே வந்திருக்கும். எனவே அவற்றை சேகரிப்பது குறித்த அவசியம் அவர்களுக்கும் இருக்காது. நமது நாட்டுக்குதான் இதுபோன்ற ஆவணங்கள் தேவை.
நீங்கள் தேடி, கிடைக்காமல் இருக்கும் பொருள்கள் உள்ளனவா?
பரமேஸ்வரா காலத்தில் இருந்த பொருள்கள் ஒன்றுமே இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. எப்படி அவ்வளவு பெரிய ஆட்சி நடந்து ஒன்றுமே எஞ்சாமல் போனது என வியப்பாக உள்ளது. அப்படி ஏதும் கிடைத்தால் நான் உற்சாகம் அடைவேன். இன்று பரமேஸ்வரா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என கருத்து உள்ளது. பாடப்புத்தகங்களிலும் வலியுறுத்துகிறார்கள். அப்படி நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆதாரங்கள் கிடைக்காதது அதிகாரத்துக்குத் தேவையானது என இங்கு கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.
மிக அரிதான பொருள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?
ஜப்பான் காலத்தில் ஜப்பானியர்கள் பயன்படுத்திய கத்தி உள்ளது. கிடைப்பதற்கு அரிதானது. புதிய பொருள்கள் பளபளப்பாக இருந்தால்தான் மதிப்பு. பழம் பொருள்களைத் துடைத்தால் மதிப்பு போய்விடும். அவை துரு ஏறியும் மண் ஒட்டியுமே இருக்கும். பழமைக்கு பளபளப்பு எதிரி.
எப்படி ஒரு பொருளை பழமையானது என முடிவெடுக்கிறீர்கள்?
அறிவியல் பூர்வமாகச் சோதிக்கும் முறை உள்ளது என்றாலும் அனுபவத்தின் மூலம் தொட்டுணர்ந்து ஒரு பொருளின் பழமையை அறிய முடியும். அதோடு அதன் வேலைப்பாடுகளை வைத்தும் அறிந்துகொள்ளலாம். 600 வருட பழமையான பீரங்கி குண்டு ஒன்றை என் சேமிப்பில் வைத்துள்ளேன். அதுபோன்ற பொருள்களைச் சோதித்து ஆண்டை நிர்ணயம் செய்ய இன்று அறிவியல் துணை புரிகிறது.
உங்களுக்குப் பின் உங்கள் குடும்பத்தில் இத்துறையில் யாருக்கும் நாட்டம் இல்லாத நிலையில் உங்கள் எதிர்கால திட்டம்தான் என்ன?
மேடையேறிப் பேசும் போது ஆறு போல பேச்சு, கீழ இறங்கி வந்துட்டா சொன்னதெல்லாம் போச்சு என்ற பாடலைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மலாக்கா தமிழர் சங்கம் என இரு முக்கியமான நிகழ்வுகளில் என் சேமிப்பில் இருந்த மலேசிய இந்தியர் பொருள்களைக் கண்காட்சிக்கு வைத்துள்ளேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழுக்காக என்னென்னவோ செய்யப்போவதாக மேடையில் ஏறும்போது சொல்கிறார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடமாக மலேசிய இந்தியர்களுக்காக ஒரு தொல்பொருள் காட்சியகத்தை உருவாக்க முயன்று வருகிறேன். மலாக்கா அரசாங்கம் மூலமாக, ம.இ.கா மூலமாக எவ்வளவோ முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. இந்த நாட்டில் மலாய், போர்த்துகீசியர், மலாக்கா செட்டி, பாபா, சீனர் என பல்வேறு இனத்துக்கும் தொல்காட்சியகங்கள் உள்ளன. ஆனால் நமது அடையாளங்களைச் சேகரிப்பது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவ்வடையாளங்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திச்செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. ஆனால் நமக்கில்லாததைப் பற்றியும் நமது அடையாளங்களைச் சேகரிப்பது பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை. அப்படி யாரும் உருவாக்க முன்வந்தால் என் சேமிப்பில் உள்ள சில பழம் பொருள்களை அன்பளிப்பாகவும், விலை மதிப்புள்ள சிலவற்றை அடிப்படை விலைக்கும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவற்றை நான் பல ஆயிரங்கள் செலவு செய்து பெற்றேன். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல நம் நாட்டுத் தமிழர்கள் அடையாளம், அரசியல், உரிமை என எதற்கெதற்கோ கூடிக் கலைகிறார்கள். நமக்கான ஒரு தொல்காட்சியகத்தை அமைக்க அவர்களில் யாருக்கும் அக்கறையில்லை. நான் தனியனாக அவ்வாறு அமைக்கவும் முடியாமல் யாரேனும் உதவுவார்களா காத்திருக்கிறேன். அல்லது மலேசிய இந்தியர்களுக்கான தொல்காட்சியகம் கனவாகவே கரையலாம்.
செவ்வியை முடித்துவிட்டு புறப்பட்டோம். வாசலில் ரப்பர் பால் அரைக்கும் இயந்திரம் இருந்தது. தொட்டுப்பார்த்தேன். ரப்பர் பால் மணம் வீசியது. எஞ்சியுள்ள எச்சமா? நினைவு படிமங்களில் எங்கோ சேமிப்பில் இருந்த மணமா எனத்தெரியாமல் புறப்பட்டேன்.
நேர்காணல் : ம.நவீன்
புகைப்படங்கள் : ஓவியர் சந்துரு
unggalin aarvamum iidubaadum tamilin tamilarin meethu ulla anbum ennai mei silirkka vaikkiratu. arasiyal suyanalattirkakavum peerum pugalum adaivatarkakavum silarin muyarcikalai veetikku konduvantatu miga periya unmai. ‘unmayaai ulaipavan tarkolai muyarcikku selbavan’ endru padittullen. Atai kadantu neenggal vantullirgal endru ninaikkumpotu malaippai irukkiratu. nandri aiya, melum unggal muyarciyai todarunggal- iyarkai orunaal tunai puriyum- itu varalaaru. vanakam
தமிழர்கள் கெடாவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கு தமிழர் ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன.காடாரம் என்பது தமிழர்களின் பூர்வீகம்.ஆனால் யுனசுக்கோவில் அதனை மலாய்க்கார்களின் பூர்வீகம் என்று அறிவித்துள்ளனர்