மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்குக் கற்பனையும் கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. கதையில்லை என்றால் கற்பனை இல்லை. கற்பனை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. வாழ்க்கைக்கு உயிர்ச்சத்தாக இருப்பது கற்பனையும் கதையும்தான்.
ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான கதைகள் உருவாகியிருக்கின்றன, பல கதைகள் தேச எல்லைகள் கடந்து உலகப் பொதுக் கதையாகவும் பேசப்படுகிறது. எழுத்து மரபில் பேசப்பட்ட கதைகளைவிட வாய்மொழி மரபில் பரவிய கதைகளே இன்றும் பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாக இருக்கிறது, வாழ்க்கை நெறியாக மேற்கொள்ளப்படுகிறது. வாய்மொழி மரபு கதைகளை விஞ்சும் வகையில் எழுத்தில் கதைகள் உருவாக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. தமிழ் மரபு காவியங்களை அடிப்படையாகக்கொண்டது. அதுவும் பதினாறாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தமிழில் உரைநடை இலக்கியம் அறிமுகமாகிறது. குறிப்பாக சிறுகதை வடிவம். அதற்கு முன் தமிழில் சிறுகதை வடிவமே இல்லையா என்றால்இருந்தது. அதுவும் சிறந்த வகையில் இருந்தது. “ஒரு ஊருல ஒரு நரி, கதை அதோட சரி”, “ஒரு ஊருல ஒரு சிங்கம், அந்தக் கதைய சொன்னா அசிங்கம்”, “ஒரு ஊருல ஒரு பரி, கதை அதோட சரி” என்று ஒரே ஒரு வாக்கியத்திலேயே கதை சொன்னது தமிழ் மரபு.
வாய்மொழி மரபையும் ஆங்கில இலக்கியத்தின் வழியாகப் பெறப்பட்ட வடிவத்தையும் கொண்டு உருவானதுதான் நவீன சிறுகதை வடிவம். கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சிறுகதை என்ற வடிவம் பெற்றுள்ள மாற்றம், செழுமை, வளர்ச்சி, வடிவச்சோதனைகள், பரிசோதனை முயற்சிகள் போன்றவை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன. தமிழில் இவ்வடிவத்தின் முன்னோடியாக வ.வே.சு.ஐயரைக் குறிப்பிடலாம். அவரைத் தொடர்ந்து பி.எஸ்.இராமையை, கு.ப.இராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன், இளங்கோவன், சிதம்பரசுப்பிரமணியன், மௌனி போன்றவர்கள் சிறுகதை வடிவத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஆக்கங்களை உருவாக்கிய இவ்வடிவம் தமிழில் பரவலாகவும், ஆழமாகவும் வேர் ஊன்றச் செய்ததோடு பல முன்மாதிரிகளையும் உருவாக்கிக்காட்டினார்கள். இவர்களையடுத்து வந்த கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், த.ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்கள். உருவம், உள்ளடக்கம், மொழி, செய்நேர்த்தி போன்றவற்றில் இவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். இவர்களுடைய எழுத்து அகவுலகத் தேடல் எனலாம். இவர்கள்தாம் தனிமனித வாழ்க்கையின் வழியே, தனிமனித சிக்கல்களினூடே சமூகத்தை உற்று நோக்கியவர்கள். இவர்களையடுத்தும் இவர்களோடு சேர்ந்தும் வந்த அசோகமித்திரன், ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன், நாஞ்சில்நாடன், சா.கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், அம்பை, பூமணி, தோப்பில் முகமது மீரான் போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கித் தந்தார்கள். இந்த மறுமலர்ச்சியை வளர்த்தெடுக்கும் விதமாகத் தற்காலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் திலிப்குமார், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பெருமாள் முருகன், தேவிபாரதி, சு.வேணுகோபால், பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், பிரேம்ரமேஷ், சோ.தர்மன், கௌதம சித்தார்த்தன், எம்.ஜி.சுரேஷ், ச.தமிழ்ச்செல்வன், கண்மணி குணசேகரன், பாமா, சிவகாமி, அழகியபெரியவன், ஆதவன் தீட்சணயா, யுவன்சந்திரசேகர், அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், ஜீ.முருகன், காலபைரவன், சு.தமிழ்ச்செல்வி, சல்மா, உமா மகேஸ்வரி, அ.வெண்ணிலா, புகழ், ஜே.பி.சாணக்யா, எஸ்.செந்தில்குமார், கே.என்.செந்தில் …. என்று இன்னும் பலர் தமிழ்ச்சிறுகதைக்கு தங்களுடைய பங்களிப்பின் வழியே வளம் சேர்த்து வருகின்றனர்.
1980-90களுக்குப் பிறகு படைப்பு சார்ந்தும், படைப்பு மொழி சார்ந்தும், தமிழ்ச் சிறுகதையில் பெரியமாற்றம் நிகழ்ந்தது. அடித்தட்டு மக்களும், விளிம்புநிலை மக்களும், அவர்களுடைய மொழியும் இலக்கியமாக்கப்பட்டது. இக்காலகட்டத்தில்தான் சமூகத்தின் பலதரப்பு வாழ்க்கை முறையும் இலக்கியமாயின. பழைய எழுத்தாளர்களிடம் காணப்பட்ட உத்தி சார்ந்த மயக்கங்கள், பிரமைகள், உதிர்ந்து போயின. கதைப் பரப்பும், அனுபவமும் விரிந்த தளத்தில் இருந்தது. புதியபுதிய கதைக் களன்களைத் தேடி எழுத்தாளர்கள் நகர்ந்தவாறே இருக்கின்றனர். வாய்மொழி மரபும், வட்டார வழக்கும், இனக்குழு வரலாறுகளும் கூடுதல் கவனம் பெற்றதோடு அதிகமாக எழுதவும்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகத் தலித்தியம், பெண்ணியம் என்ற கோட்பாடுகளால் எழுச்சிபெற்று எழுந்த இலக்கியங்கள் தமிழ் சிறுகதைக்கு புதிய முகத்தைக் கொடுத்துள்ளது. தற்காலத்தில் தமிழ்ச் சிறுகதை வடிவம் காட்டாறு வெள்ளம்போலப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு ஓடுகிற வெள்ளத்தில் ஒரு கையளவு நீரை மட்டுமே அள்ளி உதாரணம் காட்ட முடியும். அதுவும் கடந்த பத்தாண்டுகளில் வந்த சிறுகதையின் வழியே. இதன் மூலம் மொத்த தமிழ்ச் சிறுகதைகளைப்பற்றிய சித்திரத்தை அறியமுடியும்.
தற்காலத்தில் தமிழில் எழுதப்படும் சிறுகதைகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1.பொதுவான சிறுகதைகள், 2.புதுவகைச் சிறுகதைகள், 3.தலித்தியச் சிறுகதைகள், 4.பெண்ணியச்சிறுகதைகள், 5.வாய்மொழி மரபுச்சிறுகதைகள்.
பொதுவான கதைகள்
ஒரு மனிதனைப்பற்றிய “வெள்ளை அறிக்கை” (உயிர்மை பிப்,2010) என்ற பிரபஞ்சனின் சிறுகதை பல விதங்களில் முக்கியமானது. கதை எலிகளைப் பற்றிப் பேசுகிறது. உண்மையில் எலிகளைப்பற்றி அல்ல மனிதர்களைப்பற்றிதான் பேசுகிறது. எலிகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்ன, ஏன் அவர்களுக்கிடையே ஓயாமல் போராட்டம் நிகழ்கிறது. அந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவது யார், மனிதர்களால் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுவரும் உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சூசகமாகப் பல ஆழமான கேள்விகளைக் கேட்கிறது கதை. அப்படிக் கேட்கப்படுகிற கேள்விகளில் ஒன்று மனிதர் சங்கதியும், எலிகளின் சங்கதியும் ஒன்றா என்ன?.
“பொதுவாக என் மீது ஒரு புகார் இருக்கிறது. ஏதாவது ஒன்றைச் சொல்ல ஆரம்பித்துவிட்டு எங்கெங்கோ அலைந்து திரிய ஆரம்பித்துவிடுகிறேன். இந்தமுறை அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளப்போகிறேன்” என்று ஆரம்பிக்கிற யுவன் சந்திரசேகரனின் “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” (உயிர்எழுத்து – டிசம்பர் – 09) என்ற கதை ரயில் பயணத்தில் தொடங்குகிறது. பயணம் முடியும்போது கதையும் முடிந்துவிடுகிறது. கதையை எழுதுகிற எழுத்தாளருடைய நண்பரைப்பற்றிய கதை. கதையில் வரும் நாயகனும் எழுத்தாளரே. அதிக பிரபலமில்லாத, அதிகம் எழுதாத எழுத்தாளர். காரணமின்றிப் பலருக்கு வாழ்க்கை தொடர்ந்து நெருக்கடிகளையும் சங்கடங்களையும் தந்துகொண்டிருக்கிறது. ஓயாமல் நெருக்கடிக்குள்ளாகிற மனிதனைப்பற்றி விவரிக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் கதை. ஒவ்வோர் எழுத்தாளரும் தன்னையே உணரலாம் இக்கதையில். தன்னுடைய அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றம் செய்வதுதானே கலைப்படைப்பின் நோக்கம்.
ஜி.முருகனின் “கள்ளத் துப்பாக்களின் கதை” (அடவி மாத இதழ் பிப், 2010) என்ற கதை சுப்ரமணியன் என்ற மனிதனுடைய மொத்த வாழ்க்கையையுமே சொல்கிறது. தர்மாபுரத்தில் வசிக்கிற ஆசாரியின் இரண்டாம் தாரத்து மகன் சுப்பிரமணியன், முதல் தாரத்து நான்கு மகன்களாலும் ஓயாமல் விரட்டப்படுகிற சுப்ரமணியன் ஒரு கட்டத்தில் ஊரைவிட்டே போகிறான். பல ஆண்டுகள் கழித்து ஒரு பெண்ணுடன் ஊருக்கு வந்து ஊரின் ஒதுக்குப்புறமாக வாழ்கிறான். பறவைகளை வேட்டையாடுவது அவனது தொழிலாகிறது. அவனைக் காவல்துறை தேடுகிறது. பிறந்தது முதல் இறக்கும்வரை அவன் எப்படி ஓடிக்கொண்டேயிருக்கிறான் என்பதை மிகுந்த வலியுடன் சொல்கிறது கதை. கதாநாயகன் இறந்தாலும் அவன் உருவாக்கிய துப்பாக்கிகள் சாகவில்லை என்பதை கதையின் கடைசி வரிகள் காட்டுகின்றன. “கள்ளத்துப்பாக்கிகளோ அவன் பெயரை உச்சரித்தபடி இன்னும் காடுகளுக்குள் இரைச்சலிட்டுக்கொண்டேயிருக்கின்றன.”
எஸ்.ராமகிருஷ்ணனின் பி.விஜயலட்சுமியின் “சிகிச்சைக் குறிப்புகள்” (உயிர்மை – ஆக, 2005) என்ற சிறுகதை திருமணமான குறைந்த காலத்திலேயே சித்திரவதைக்குட்பட்டு மனச்சிதைவுக்கு உள்ளான பெண்ணினுடைய வாழ்வை சொல்கிறது. மொத்த குடும்பமே ஒரு இளம் பெண்ணின் மீது துவேசத்தைக் கக்குகிறது, சிறு தவறு செய்தாலும் அடிக்கிறது. கணவனே மனைவியை வன்புணர்ச்சி செய்கிறான். இச்செயல் தொடர் நிகழ்வாக நடக்கிறது. வேலைக்குச் செல்வதற்கும், மேல் படிப்பு படிப்பதற்கும் மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு கணவனும் எதிர்க்கிறான். சான்றிதழ்களைக் கிழித்தெறிகிறான். இப்படியான ஒரு சூழலில் ஒரு பெண்ணுக்கு மனச்சிதைவு ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆனால், விஜயலட்சுமியின் மனச்சிதைவுக்கு அவளுடைய கணவனும், மாமனார் மாமியார் கூறும் காரணங்கள் விநோதமானவை.
“மூளக்கோளாறு ரொம்ப நாளாகவே இருந்திருக்கணும். நம்ம தலையில் கெட்டி வச்சிட்டாங்க. இனிமே இவ செத்தாலும், பிழைச்சாலும் நமக்கென்ன? விடு.”
பெருமாள் முருகனின் ‘வெள்ளி மீன்கள்’ (காலச்சுவடு அக்-07) என்ற கதை ஆடு திருடனைப் பற்றியது. ஆடு திருடப்போய் மாட்டிக்கொண்டு ஒரு இரவு முழுவதும் மோசமான புதருக்குள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிற பசுபதி என்கிற திருடனுடைய மனஉளைச்சசலையும், அவன் படுகிற துன்பத்தையும் விவரிக்கிறது. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவன் திருடனாக இருக்கலாம். அவனுக்கு வயிற்றுப் பிழைப்புக்கான வழி அது. ஒரு மனிதனைச் சாப்பிடாமல் இரு என்று எப்படிச்சொல்வது? பிறருக்குக் கஷ்டம்தான். திருட்டு அவனுக்குச் சோற்றுக்கான வழி. அதைச் செய்யாதே என்று எப்பபடிச் சொல்வது என்று மிக அழகாகக் கேட்கிறது இக்கதை.
“பூபதிக்கு ஆடு திருடுவதை பழக்கிவிட்டவர் அவன் அப்பன்தான். அவரோடு ஒப்பிட்டால் தன் திருட்டு ஒன்றுமேயில்லை என்றுபடும். அவர் ஒருநாளும் இப்படி மாட்டிக்கொண்டதில்லை. அவர் அழைத்துப்போக ஓராள் வண்டியில் காத்திருக்கவில்லை. எவ்வளவு தூரமானாலும் தோள்மீது போட்ட ஆடு சிறு சத்தமும் இல்லாமல் வரும். ஆடு திருட தோதான நேரத்தை அவர்தான் அவனுக்குச் சொல்லித்தந்தார்.”
‘ஊமை செந்நாய்’ (உயிர்மை நவ – 08) என்ற ஜெயமோகனின் கதை சென்ற நூற்றாண்டில் நடக்கிறது. ஒரு வெள்ளைக்காரத் துரைக்கும் நாய் மாதிரி நடத்தப்படுகிற இந்தியனுக்கும் இடையே நடக்கிற கதை. துரைக்கு வேட்டையாடுதல்தான் பொழுதுபோக்கு. வேட்டைக்கு உதவியாளாக வழிகாட்டியாக இருக்கிறவனின் மன உளைச்சல் என்ன என்பதையும் அவன்படுகிற அவஸ்தைகளையும் தத்ரூபமாக விவரிக்கிறது. அவன் துரையினுடைய தொல்லை தாங்க முடியாமல் கடைசியில் மலையிலிருந்து விழுந்து சாவதையும் உயிரோட்டமாக விவரிக்கிறது கதை.
பெண்ணியச் சிறுகதைகள்
1980க்குப் பிறகு தமிழில் ஏற்பட்ட பெண்ணியச் சிந்தனையால் ஊக்கம் பெற்றுப் பலர் மரபார்ந்த முறைக்கு எதிரான சிந்தனையோடும், புதிய எழுச்சியோடும், பெண்மொழி, பெண் உடல்மொழி, பெண் புழங்கும் வெளி என்ற முழக்கங்களோடும் புரிதலோடும் எழுதினர். அச்சு ஊடகம் ஒரு ஜனநாயகத் தன்மையை உருவாக்கிற்று. யார்வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் அது அளித்தது. அதன் அடிப்படையில் எங்களுக்கும் சொல்வதற்கு கதை உண்டு, மொழி உண்டு, அனுபவம் உண்டு என்று எழுத ஆரம்பித்தனர். உக்கிரமான மொழியில் பெண்கள் தங்களை வெளிப்படுத்தினர். சென்ற நூற்றாண்டில் வை.மு.கோதைநாயகி அம்மாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள், ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் என்று ஆரம்பித்த பட்டியல் சிவகாமி, ஆண்டாள் பிரியதர்ஷினி, பாமா, தமயந்தி, திலகவதி, உமா மகேஸ்வரி, அ.வெண்ணிலா, சு.தமிழ்ச்செல்வி, அம்பை, கிருஷாங்கினி, சல்மா என்று பட்டியல் நீள்கிறது.
அம்பையின் “வற்றும் ஏரியின் மீன்கள்” (பனிக்குடம் ஏப்-ஜுன் 07) கதை முக்கியமானது. இளம் வயதிலேயே தாயை இழந்து, தங்குவதற்காக – வாழ்வதற்காகப் பாதுகாப்பான இடம்தேடி மாறிமாறி இடம் பெயர்கிறாள் ஓர் இளம்பெண். இடம் பெயர்ந்ததால் ஏற்படுகிற மனஉளைச்சல்களை, நெருக்கடிகளை மிகுந்த வலியோடு சொல்கிறது இக்கதை. பெண்ணியம் என்பதை அதன் உண்மையான பொருளில் புரிந்துகொண்டவர் அம்பை. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கதை.
இந்த வரிகளே கதை என்ன என்பதை வாசகருக்குக் கூறும்,
“பயணங்கள் அவளுடைய வாழ்க்கையின் குறியீடாகிவிட்டன. இலக்குள்ள பயணங்கள். இலக்கில்லாப் பயணங்கள், அர்த்தமுள்ள பயணங்கள், நிர்ப்பந்தப் பயணங்கள், திட்டமிட்டு உருவாக்காத பயணங்கள், திட்டங்களை உடைத்த பயணங்கள், சடங்காகிப்போன பயணங்கள்”.
“இந்தக்குட்டி பாப்பபாவை நன்றாகத் தேய்த்து வெள்ளை ஆக்குங்கள், வெள்ளை ஆக்குங்கள், என் சின்ன பாப்பாவை சுத்தமாகக்கழுவி வாசனையாக்குங்கள், வாசனையாக்குங்கள்” என்று உமாமகேஸ்வரி “ரணகள்ளி” (மரப்பாச்சசி தொகுப்ழு – 02) என்ற சிறுகதையில் எழுதுகிறார். போற்றி வளர்க்கப்படுகிற பெண் குழந்தை பிற்காலத்தில் என்னவாக மாறுகிறாள், பெண்கள் ஏன் ஓயாமல் ஏக்கத்துடனேயே வாழ்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லும் கதை இது. பெண், வீடு இதுதான் இவருடைய எழுத்துலகம். இவருடைய எழுத்தில் வரும் பெண்கள் நாம் தினந்தோறும் சந்திக்கிற பெண்கள்தாம்.
அ.வெண்ணிலாவின் கதைகள் மிகவும் எளிமையானவை. நேரடியாகப் பேசுபவை. சமூகத்தின் மொத்த குரலாகவும் ஒலிப்பவை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது அவருடைய “பூமிக்குச் சற்றுமேலே” (ஆனந்தவிகடன் 22-02-02) என்ற கதை. இந்த உரையால் கதையின் மொத்த சாரத்தையும் சமூகத்தின் மனப்போக்கையும் அப்படியே காட்டுகிறது.
“இவளக் கட்டிக்கிட்டுப் போனா குடும்பத்துக்குச் சரிபடாது. எம்புள்ளய கையில போட்டுக்குவா”
“காலப்பாரு வீச்சு வீச்சா, சொழட்டிப் போட்டுருவா எல்லாத்தையும்”
“ஆம்பள காலுள்ளவ, வாத்தியார் மாதிரிதான் இருப்பா, வணக்கமே இல்லாம”
“வரன்கள் நிராகரித்தன. அம்மாவுக்குச் சிரிப்பு தொலைந்து போயிற்று”
சு.தமிழ்ச்செல்வி, சாமுண்டி (சாமுண்டி – தொகுப்பு – 2006) என்ற கதையில் விவரிக்கிற உலகம் மண் சார்ந்தது. கிராமப்புறங்களில் வாழ்கிற மக்களுடைய நம்பிக்கைகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. கனகம் என்ற பெண்ணின் உடம்புக்குள் சாமுண்டி என்ற பாம்பு குடி புகுந்துள்ளது. அதனால் அப்பெண் படுகிற துன்பம் சொல்லிமாளாது. ஆனால் கனகம் அதை மரியாதையாக, கௌரவமாக கருதுகிறாள். அவள் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறாள். நம்முடைய சமூகத்தினுடைய விருப்பமும் அதுதான். பல நேரங்களில் நாம் வாழ்வை – வாழ்க்கையின் வழியாகவேதான் பார்க்க வேண்டும். விஞ்ஞானத்தின் வழியாக அல்ல என்று சொல்கிறது சாமுண்டி கதை.
“கனகத்தின் உடம்புக்குள் புகுந்திருந்த சாமுண்டிப் பாம்பு தன்
சட்டையை உரிக்க ஆரம்பித்தது” (ப-44)
“என் இருப்பை நீ உணராததுபோல் இருந்தாலும் உன் உணர்வுகளில் என் இருப்பு பதியப்பட்டுள்ளது. எனது இருப்பை அங்கீகரிக்கும் உனது செயல்பாடுகள்தான் என்னை உன்னுடனான இந்த வாழ்க்கையில் நிலைப்பெறச் செய்கிறது. இருப்பினும் அங்கீகரிப்பது வாழ்க்கையில் கிடைக்கும் பெறும் ஏற்பு ஆகிவிடுமா” (நெற்குஞ்சம் தொகுதி – டிச – 09) என்று கேட்கிற தேன்மொழி அதே ‘கடல்கோள்’ என்ற கதையில் “எல்லாம் விடுதலைக்கான இசைபோல் ஒலிக்கிறது. யாருக்கான விடுதலை, யாருக்கு வேண்டிய விடுதலை?” (ப-22) என்று கேட்கிறார். இக்கேள்விகள் கதையிலிருந்தும் உருவாகவில்லை. வாழ்க்கையிலிருந்தும் உருவாகவில்லை. கேள்விகள் கதையாவதில்லை. வாழ்க்கைதான் கதையாகும். கேள்வியாகும். மிகச்சிறந்த கதை மதிப்பு வாய்ந்த கேள்விகளை எழுப்பும்.
கிருஷாங்கினியின் ‘வெள்ளை யானையும் குளிர்சாதனப் பெட்டியும்’ என்ற கதை, ஆண்டாள் பிரியதர்ஷினியின் ‘கழிவு’, தமயந்தியின் ‘மழையும் தொலைவும்’, சந்திராவின் ‘பூனைகள் இல்லாத வீடு’ போன்ற கதைகள் மதிப்பு வாய்ந்தவை.
தலித் சிறுகதைகள்
அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுந்த தலித் அரசியல் என்ற செயல்பாட்டால் இலக்கியத்திலும் தலித் இலக்கியம் என்ற ஒருவகை உருவாயிற்று. 1980க்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் முகம் தலித் இலக்கியத்தின் முகமாகத்தான் இருக்கிறது. இதை உருவாக்கியவர்கள், பூமணி, சிவகாமி, பாமா, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, சோ.தர்மன், ஸ்ரீதரகணேசன், அபிமானி, ஜே.பி.சாணக்யா, புதிய மாதவி, அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், பாப்லோ அறிவுக்குயில், என்.டி.ராஜ்குமார், வெ.வெங்கடாசலம், பிரதிபா ஜெயச்சந்திரன், சந்ரு, ரவிக்குமார் என்று பலரையும் சொல்லலாம். இவர்கள் இல்லையென்றால் தமிழில் தலித் இலக்கியம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்த, நாள்தோறும் சந்தித்துவரும் சாதிய கொடுமைகளுக்கு, இழிவுகளுக்கு, புறக்கணிப்புகளுக்கு எதிர்ச்செயலாகத் தலித் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. சூழலைப் பிரதிபலிக்கக்கூடிய நடைமுறை வாழ்க்கையை, உண்மையை வாழ்வின் முரண்களைச் செறிவான மொழியில் எழுதுவதைவிட கதையே முக்கியம் கதையின் மையமே முக்கியம் என்று எழுதுவதுதான் இவர்களுடைய கொள்கை. இலக்கியம் வாழ்க்கையிலிருந்து மட்டுமே உருவாக்கப்பட முடியும். கற்பனையிலிருந்து அல்ல. அவ்வாறு உருவாக்கப்படுவது இலக்கியம் அல்ல. பரிதாப உணர்வு இலக்கியமாகாது.
தமிழ்நாட்டில் தலித்களுக்கென்று உள்ளாட்சி நிர்வாகத்தில் இடஒதுக்கீடு தந்தாலும் அதில் போட்டியிட முடியாத நிலையையே இன்றும் காண்கிறோம். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் நடந்த மோதல்களை நாம் அறிவோம். அதேமாதிரி லிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பொதுத்தோகுதியில் தலித் ஒருவர் வேட்புமனு செய்ததால் கலவரம் ஏற்படுகிறது. அந்த கலவரத்தை “எகத்தாளம்” (வல்லினம் மாத இதழ் – மே-ஜுன்-02) என்ற பெயரில் கதையாக்கியிருக்கிறார் பாமா. கதையில் வரக்கூடிய இந்த வரிகளே கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
“அங்கங்க தனித்தொகுதிக்குள்ளேயே இவஞ்சாதிக்காரனுங்க நிக்க முடியாம கெடக்கயிலெ…. இவனுங்களுக்கு எம்புட்டுக் கொழுப்புன்னா பொதுத்தொகுதியில, அதுவும் நம்பளுக்குப் போட்டியா நிப்பானுங்க.”
விழி.பா.இதயவேந்தனுடைய சிறுகதை ‘பறை’ (புதிய கோடாங்கி மாத இதழ் – ஆக.-02) “சாவு வீட்டில் ஒரே களேபரமாக இருந்தது. அழுகையும் கூச்சலுமாக இருந்தது. அதிகாலையில் இறந்துபோன நாட்டாமைக்கு சுற்றுவட்டாரம் முழுக்கப்போய் தகவல் சொல்லிவர கோல்க்காரனை அனுப்பியிருந்தார்கள்” என்று ஆரம்பிக்கிற கதை, ஒரு சாவின் வழியே, சாவு நிகழ்ந்த இடம், அங்குள்ள மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, சடங்குகள் என்று விரிகிறது. சாவைப்பற்றி சொல்வதைவிட அஙகுள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றியே அதிகம் சொல்கிறது பறை கதை.
மு.ஹரிகிருஷ்ணன் எழுதிய ‘பாதரவு’ (மணல்வீடு – ஜன., பி.-09) என்ற சிறுகதை தெருக்கூத்துக் கலைஞர்களின் அன்றாட வாழ்வைச் சித்தரிப்பபது. இவருடைய எழுத்து வாய்மொழி மரபுக் கதை சொல்லும் முறையைப் பின்பற்றுவது. இவருடைய எல்லாக் கதைகளுமே இந்த அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. வட்டார வழக்கும், பேச்சு வழக்கும் எந்தப் பிசிறுமின்றி அப்படியே இவருடைய கதைகளில் பதிவாகின்றன.
“ஈனச்சாதி பயலே – திருட்டு அயோக்கிய ராஸ்கல். எவ்வளவு தைரியமிருந்தா ரெட்டியார் லாரி டிப்போவுக்குள்ளார நுழைவே” என்று “நாளும் தொடரும்” என்ற கதையில் ப.சிவகாமி எழுதியிருக்கிறார். அந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது. சமூகத்தில் மாற்றம் இல்லை என்று இக்கதை சொல்கிறது. அது உண்மையா? சிறுவன் ஒருவன் ரெட்டியார் வீட்டு லாரி நிறுத்துகிற இடத்தில் நுழைந்ததற்காக அடித்துத் துரத்தப்படுகின்றான். லாரி நிற்கிற இடத்திற்கு மனிதன் மட்டுமல்ல குழந்தைகள்கூட போக முடியாத நிலைதான் தீட்டு என்ற பெயரில் இன்றும் நம் சமூகத்தில் இருக்கிறது.
அழகிய பெரியவனின் ‘களி’, அபிமானியின் ‘முரண்’, சோ.தர்மனின் ‘தழும்பு’, அன்பாதவனின் ‘சர்டிபிகேட்’, ஆதவன் தீட்சண்யாவின் ‘கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்’ போன்றவை தலித் சிறுகதைகளின் மிகச்சிறந்த கதைகளாக மதிக்கப்படுகின்றன.
வாய்மொழி மரபுச் சிறுகதைகள்
எழுத்துவடிவச் சிறுகதைக்கு வாய்மொழி மரபுச் சிறுகதைகள்தான் முன்னோடி. அந்தமரபு தற்போது தமிழில் குறைந்துவிட்டது. ஆனால் புகழ், அமலநாயகம், மு.ஹரிகிருஷ்ணன், கண்மணி குணசேகரன் போன்ற சிலர் வாய்மொழி மரபுச் சிறுகதைகளையே இன்றும் எழுதி வருகின்றனர், அதனுடைய செழுமை குன்றாமல்.
முக்தி, மாங்கொட்டசாமி என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலுமே புகழ் வாய்மொழி மரபுச் சிறுகதைகளைத்தான் எழுதியுள்ளார். இந்த முறையைப் பின்பற்றி ஏழுதுகிற ஒரே எழுத்தாளரும் இவர்தாம். ‘உறமுறை’ (மாங்கொட்டசாமி – டிச – 09) என்ற கதையில் வாய்மொழி மரபுச் சிறுகதையின் உச்ச பட்ச எல்லையைத் தொட்டிருப்பதைக் காணமுடியும். “உழுத காடு வெள்ளாம போட ஆளில்லாமக் கெடக்குது. தெரிஞ்சு வாரத்துக்கொருக்க வர்ற பய தெனம்வந்து நின்னுப் பாக்க ஆரம்பிச்சிட்டான். லேசா சாடமாடயா ஆரம்பிச்ச பேச்சுப் பழக்கம் காலப்போக்குல ஆளு இல்லாத நேரம்பாத்து வூட்டுக்குள்ளேயே போயிப் புழங்குற அளவுக்கு வந்துடுச்சி” (ப.55)
அமலநாயகத்தின் ‘ஓட்ட மண்டயன்’ (பழஞ்சோறு – தொகுப்பு டிச – 08) என்ற சிறுகதை வாசகர் கவனத்திற்குரியது. அதிகம் அறியப்படாதவர். ஆனால் அறியப்பட வேண்டியவர் என்பதற்கு ஓட்ட மண்டயன் சிறுகதையில் வரக்கூடிய இந்த வரிகளே காட்டும்.
“ஊருல எப்ப எந்தப் பொருள் திருட்டுப் போனாலும் மொதல்ல சனங்க சந்தேகப்படுகிறது ஓட்ட மண்டயன்தான். ஏன்னா, அவன் அந்த மாதிரி ஆளு. ஏதோ நகய காணும், நட்டக்காணும்ன்னா அவன நெனக்க மாட்டாங்க, அண்டாவக் காணும், குண்டானக் காணுமின்னா அவன்பேருதான் மொதல்ல வரும்.”
கண்மணி குணசேகரன் வாய்மொழி மரபுக் கதை சொல் முறையையும், எழுத்து மரபையும் இணைத்து எழுதக் கூடியவர். எழுத்து வடிவத்திற்கும், வாய்மொழி மரபுக்குமான இடைவெளியை அவர் அறிந்தால் நல்லது. பேச்சு வழக்கு இவருடைய எழுத்தின் பலம் என்பதற்கு அவருடைய ‘சாட்டை’ (மணல் வீடு இதழ் – செப். – அக். – 08) கதையே உதாரணம்.
புதிய வகைச் சிறுகதைகள்
இவ்வகையான சிறுகதைகள் கிட்டத்தட்ட கவிதை நடையிலேயே பொருளில்லாமல் எழுதப்பபடுகிறது. கதையை நேரடியாகச் சொல்லாமல் புதிய அதே நேரத்தில் குழப்பமான முறையில் சொல்வது, ஒருவகையில் புரியாத மொழியில், அடுக்கடுக்கான வாக்கியங்களைக் கொண்டு சொல்லப்படுவது ஒரு புதிய போக்காக இருக்கிறது. இவ்வகையான எழுத்துக்கு ஆங்கில வழிப் படிப்பும், வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறையை அப்படியே பின்பற்றுவதும்தான் காரணம். இந்தவகை எழுத்துதான் தற்போது தமிழ்ச் சிறுகதை உலகில் புகழ்பெற்றுள்ளது. இதற்கு வித்திட்டவர் மௌனி, கோணங்கி, இவர்களைத் தொடர்ந்து பா.வெங்கடேசன், ச.முருகபூபதி, க.சீ.சிவக்குமார், பிரேம்-ரமேஷ், ஜே.பி.சாணக்யா, தேவி பாரதி, சுரேஷ்குமார் இந்திரஜித், அரவிந்தன், போன்ற எழுத்தாளர்களும் இந்தப் போக்கில் எழுதிவருகின்றனர். இவர்களுடைய நோக்கமே சிடுக்குகள் உள்ள மொழியில் எழுதுவது. இவர்களுக்கு கதை முக்கியமல்ல. வாசகன் முக்கியமல். அலங்காரமான வார்த்தைகளே முக்கியம். கதையைவிட மொழியே முக்கியம். அதுவும் தெளிவில்லாத குழப்பமான மொழி.
‘பிறகொரு இரவு’ (காலச்சுவடு – ஜனவரி – 08) என்ற கதையை எழுதியுள்ள தேவிபாரதி வரலாற்றை கதையின் வழியே மீட்டுருவாக்கம் செய்து காந்தியைப் பற்றிப் புதிய சித்திரத்தை வாசகருக்கு தந்துள்ளார். இந்தக் கதையில் நாம் இதுவரை அறியாத காந்தியை சந்திக்கிறோம். கடந்த காலம் நிகழ்கால அரசியலுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. காந்தியை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது, அவருடைய ஆளுமை என்ன, நாம் தெரிந்து வைத்திருக்கிற காந்தி என்பவர் யார் என்று பல அரிய கேள்விகளை இக்கதை வாசகனுக்குள் எழுப்புகிறது. அதற்கு இந்த வரிகளே உதாரணம்.
“தங்களுக்கு என்றுமே மரணமில்லை பாபுஜீ, இந்தத் தேசத்தின் எதிர்காலம் கருணை மிகுந்த தங்கள் கரங்களில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.”
கோணங்கி – யின் ‘நாடோடி ரயில் கள்ளன் சேக்கு’ (கல்குதிரை – ஜன. 2010) என்ற கதை எங்குத் தொடங்குகிறது, எங்கு முடிகிறது? கதை நிகழும் காலம் எது? பரசுராமன் – என்பவரின் வழியாக விரிகிறது கதை. எல்லைகள் கடந்து கதைக்குள் பழைய காலம் பதியப்படுகிறது. புதியகாலம் பதியப்படுகிறது. கோணங்கியின் மனம் பின்னோக்கி மட்டுமே பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பழைய காலம் குறித்த சித்திரங்கள் அடுக்கடுக்காகக் கொட்டப்படுகின்றன. பலவாழ்க்கை முறைகள் இந்தக் கதையின் வழியே காட்சிப்படுத்தப்படுகின்றன. கதாசிரியர் கடக்கிற தூரம் நம்பத் தகுந்ததாக இல்லை. கதை தொடர்ந்து நமக்குப் பல செய்திகளைச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றது. அவை தகவல்களாக மட்டுமே இருக்கின்றன என்பதற்கு இந்த வரிகளே சான்று.
“தையல்காரர்கள் கையில் வறுமையும் கிழிந்த வாழ்வைத் தைக்கவும் இருட்டைக் கீறி மூட்டுகிறார்கள். துவைத்தெடுத்த கல்லில் அடிபட்டு சாயம்போன பழைய துணி. இறந்து ஒடியும் ஆடைகள் மூச்சுவிடும் கனவு.”
தலித்திய சிறுகதைகள், பெண்ணிய, நவீன, வாய்மொழி மரபுச் சிறுகதைகள் என்று பல பெயர்களில், பல அடையாளங்களில் எழுதப்பட்டாலும் எல்லாக் கதைகளுமே தமிழ் வாழ்வைத்தான் எழுதுகின்றன. மற்றக் காலங்களைவிட இக்காலத்தில்தான் சிறுகதைக்கானக் கூறுகள், வடிவம் குறித்த, மொழி, உள்ளடக்ககம், எல்லை, கதாசிரியரின் நிலை குறித்த தெளிவு ஏற்பட்டுள்ளது. புதியவகை முயற்சிகள் இப்போது கூடுதலாக ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பலதரப்பினரும் பலதரப்பு வாழ்க்கை குறித்தும் எழுதுகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கையும், பெண்களுடைய வாழ்க்கையும் அக்கறையுடன் எழுதப்படுகின்றன. இதுவரை சமூகம் அறியாத பல வாழ்க்கை முறைகள் இப்போதுதான் கதைகளாகின்றன. சிடுக்குகள் நிறைந்த மொழியில் எழுதப்படுகிற முறையும், எளிய சொற்களில், எளிய மொழியில் எழுதப்படுகிற முறையும் தற்போது உள்ளன. இதற்கு மேற்குறிப்பிட்ட பல கதைகளே மாதிரிகள். தமிழ்ச் சிறுகதைகள் என்ற பெரிய கடலில் அண்மைக்காலச் சிறுகதைகள் ஒரு பார்வை என்பது – ஒரு கைப்பிடி அளவு நீர்தான். அந்தக் கைப்பிடி அளவுநீரும் உண்மையாக மட்டுமல்ல காலத்தின் கண்ணாடியாகவும் இருக்கிறது. இதன் வழியே மொத்த தமிழ்ச் சிறுகதையின் செழுமையையும் பலவீனத்தையும் உணர முடியும். இன்றைய கதைகள் நாளைய கதைகளுக்கு வாசல்களைத் திறந்துவிடும்.