இல்லாத திசைகள் 5 – முதல் முழு சம்பளம்

libre-fm-mens-artistic-freedom-dark-t-shirt_designபாடாவதி ஓவியரிடமிருந்து தப்பித்து வார இதழ் ஆசிரியரின் தம்பி நடத்திவந்த நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தேன். மறக்க முடியாத வருடங்கள் அவை. அங்கு வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளத்தை வாங்கிய நாள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. ஒரு வெள்ளைக் கவரில் சம்பள பணத்தைப் போட்டு கொடுத்தார்கள். கவரின் மேல் என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கவரைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். முதல் முறையாக பெரிய தொகையை மொத்தமாகப் பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. சொற்ப சம்பளத்தைப் பிச்சி… பிச்சி… பிச்சை எடுப்பதுபோல் வாங்கிப் பழகியவனுக்குப் பெரிய தொகையை மொத்தமாகப் பெற்ற அதிர்விலிருந்து வெளிவர சில மாதங்கள் ஆகியது. இங்கே சம்பளம் பிரச்சினை இல்லை… மனிதர்கள்தான் பிரச்சினை…

ஆசிரியரின் தம்பி நாளிதழோடு சேர்த்து வார பத்திரிகை ஒன்றையும் நடத்திக்கொண்டிருந்தார். அந்த வார பத்திரிக்கையில் வேலைசெய்யும் இரண்டு வடிவமைப்பாளர்களும் வேலையை விட்டு நிற்கப்போவதாகவும் வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது என்பதாகச் சொல்லிதான் என்னை அழைத்தார்கள். நானும் வந்துவிட்டேன். ஆசிரியரின் தம்பி நடத்திய நாளிதழ் நிறைய வாசகர்களோடு விற்பனையில் முன்னணியில் இருந்தது. அவருக்குச் சொந்தமான ஐந்து மாடி கட்டடத்தில்தான் வெற்றிகரமாக நாளிதழை நடத்தி வந்தார். அங்கு  வேலைப்பார்க்கும் சில தமிழ் நாட்டு ஊழியர்கள் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் தங்கியிருந்தார்கள். எனக்கும் அங்கு ஒரு ‘ரூம்’ கொடுத்தார்கள்; வசதியாகத் தங்கிக்கொண்டேன்.

வாரப்பத்திரிக்கையில் புதிய வேலையைத் தொடங்கினேன். ஆசியரின் தம்பி அந்த வாரப்பத்திரிக்கைக்கு ஆசிரியராக ஒருவரை நியமித்திருந்தார். அவருக்கும் வாரப்பத்திரிக்கையின் மற்ற ஊழியர்களுக்கும் நட்பு சரியாக இல்லை என்பதை கொஞ்ச நாள்களிலேயே தெரிந்துகொண்டேன்… குறிப்பாக, அந்த இரண்டு வடிவமைப்பாளர்களையும் அவருக்கு துளியும் பிடிக்காது. அதனாலேயே அவருக்கு என்னைப் பிடித்திருந்தது. அவர்களிடம் கடும் முகத்தைக் காட்டிவிட்டு என்னை மட்டும் பாராட்டிவிட்டுச் செல்வார். ஆனால் அந்த இரு வடிவமைப்பாளர்களும் எனக்கு ஏற்கெனவே பழக்கம் என்பதால் அவர்களுக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் வரவில்லை; நாங்கள் குதூகலமாகவே வேலை செய்தோம்.

பிறகுதான் தெரிந்தது அவர்கள் வேலையை விட்டு நிற்பதாக இல்லை என்ற சங்கதி. அவர்களை வேலையை விட்டு தூக்குவதற்கு மறைமுகமாக அந்த ஆசிரியர் சதி செய்வதும் அதில் ஒரு முயற்சியாகதான் என்னை வேலைக்கு எடுத்தது என்றும் தெரிந்தது. அவர்களை வேலையை விட்டு தூக்க முடியவில்லை. ஆனால் நிர்வாகத்தினர் “ஒரு வாரப்பத்திரிக்கைக்கு மூன்று வடிவமைப்பாளர்களா?”, என்று சலசலக்க ஆரம்பித்தார்கள். அதைவிட கொடுமை மூன்று வடிவமைப்பாளர்கள் இருந்தும் வேலைகள் நேரத்துக்கு முடியாது. திங்கள் தொடங்கி வெள்ளிக்கிழமை ஐந்து மணிக்குள் வேலைகளை முடிக்க வேண்டும் ஆனால் ஒவ்வொரு வாரமும் தாமதமாகத்தான் முடிந்தது. சதி ஆசிரியர் ஊழியர்களையும், ஊழியர்கள் சதி ஆசிரியரையும் காரணம் காட்டினார்கள். இப்படியே பல குழறுபடிகளோடு நாள்கள் ஓடின… ஆனால் நான் எப்போதும்போல் ஜாலியாகத்தான் இருந்தேன்.

அந்த சமயத்தில்தான் பக்கங்களைக் கணினியில் வடிவமைக்க வேண்டும் என எல்லா வடிவமைப்பாளர்களுக்கும் நிர்வாகம் நெருக்குதல் கொடுத்தது. எனக்கு கணினியில் வேலை செய்து பழக்கம் இருந்ததால் நான் மிக சுலபமாகவே கணினியில் வடிவமைக்கத் தொடங்கினேன். ஆனால், எனக்கு கொடுக்கப்பட்ட கணினி ரொம்பவும் மெதுவாக இயங்கியது. எல்லோரும் 4 மணிக்கு தேநீர் அருந்துவார்கள் என்றால், சதி ஆசிரியர் பீர் அருந்துவார். தண்ணிக்கு அப்படியொரு அடிமை அவர். அப்படி ஒரு நாள் சதி ஆசிரியர் சுதியோடு என்னிடம் வந்து “ஏன் தாமதமாக வேலையை முடிக்கிறீர்கள்… சீக்கிரம் முடிச்சிடுங்க…” என்றார். எனக்கு கொடுக்கப்பட்ட கணினியின் வேகம் குறைவாக இருக்கும் விசயத்தையும் இன்னும் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதையெல்லாம் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் விளக்கமாக எடுத்துச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அதெல்லாம் சரிதான்… வேலையை ஏன் தாமதமாக்குறீங்க… அதை சீக்கிரம் முடிங்க….” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எனக்கு தலையே சுற்றியது. ஏன் தாமதமாகிறது என்பதைதானே நான் இவ்வளவு நேரம் மூச்சு முட்ட சொன்னேன்… எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.

ஆனால் நான் ஜாலியாகத்தான் இருந்தேன்.

வேலை வெள்ளிக்கிழமை தாமதமாக முடிந்தாலும் சனிக்கிழமை வேலை இருக்காது. சும்மாதான் இருப்பேன். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. நல்ல சம்பளம். தீபாவளிக்கு ஒரு மாச போனஸ். 2 மணிக்கு வேலைக்கு வருவேன். இரவு வரை வேலை செய்வேன். எனக்கு இரவில் தூக்கம் வராது அதிகாலைதான் தூக்கம் வரும் என்பதால் சில நேரம் நள்ளிரவு வரை வேலை செய்வேன். இங்கேயும் மாசக்கடைசியில் கையில் காசு முடிந்து போகும். ஆனால் பசியோடு இருந்ததில்லை. அலுவலகத்தின் அருகில் இருக்கும் சின்ன சாப்பாட்டுக்கடையில் சாப்பிட்டுக்கொள்வேன். கணக்கில் வைத்துக்கொண்டு சம்பளம் போட்டதும் மொத்தமாக கொடுத்துவிடுவேன். கடன் வைக்காமல் சரியாக கொடுத்துவிடுவதால் அந்தக் கடையில் எனக்கு நல்ல பெயர் இருந்தது.

வேலையில் மற்ற இரு வடிவமைப்பாளர்களுடனும் நட்பு மிக நன்றாக இருந்தது. அதில் ஒருவர் ஓவியர் என்பதால் அவரோடு நிறைய பேசிக்கொண்டிருப்பேன். கொஞ்சம் வயதானவர். ஓவியம் பற்றியும் அது குறித்த நுணுக்கங்கள் பற்றியும் அவரின் பத்திரிக்கை அனுபவங்கள் குறித்தும் நிறைய பேசிக்கொள்வோம். மூத்த ஓவியர் என்ற ஈகோ எதுவும் இல்லாமல் ரொம்பவும் சகஜமாக பழகினார் அந்த ஓவியர். சதி ஆசிரியர் அவரைத்தான் ரொம்பவும் மட்டமாக பேசுவார். அதையும் அவரிடமே பேசுவார். வயதில் மூத்தவர் என்றும் பாராமல் அனைவரது முன்னிலையிலும் அவமானப்படுத்துவார். அவர் பேச்சுக்கெல்லாம் நிதானமாக பதில் சொல்லிவிட்டு ஓவியர் அவர் பாட்டுக்கு வேலையைப் பார்ப்பார். ரொம்பவும் பொறுமைசாலி. எனக்கோ சதி ஆசிரியரின் முகத்தை உடைக்கலாம்போல் இருக்கும். “ஏன் இவ்வளவு பொறுமையாய் இருக்கிங்க அண்ணா..” ஓவியரிடம் கேட்டால் “அவன் அப்படித்தான்… போரான் விடு…” என்பார். தமிழ்ப்பத்திரிக்கைகளில் பணிபுரியும் ஓவியர்களுக்கு இப்படியான நிலைமைதான் இருந்தது. ஓவியமும் வடிவமைப்பும் வெவ்வேறு துறைகள் என்றுகூடத் தெரியாத மடையர்களிடம் சிக்கிகொண்டார்கள் ஓவியர்கள். ஓவியம் வரையத் தெரிந்தால் பத்திரிக்கையில் வேலை செய்யலாம் என்ற மிகக் குறுகிய சிந்தனைதான் இருந்தது அப்போது. தமிழ்ப்பத்திரிக்கைகள் ஓவியர்களையெல்லாம் வடிவமைப்பாளர்களாக மாற்றிவிட்டு அவர்களின் ஓவிய வளர்ச்சியை சாகடித்துவிட்டிருந்தது.

நான் முன்பு வேலை செய்த இடங்களில் எனக்கிருந்த நெருக்கடி, குடைச்சல், சுதந்திரமின்மை எதுவும் இங்கு இல்லாததால் மிக சுதந்திரமாக நேரத்தை எடுத்துக்கொண்டேன். என்னை யாரும் கண்ட்ரோல் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் தூக்கத்தை இனி யாரும் கெடுத்துவிடக்கூடாது அதுவாக களைந்துதான் எழ வேண்டும் என்பதில் வெறியோடு இருந்தேன். கசப்பான முன் அனுபவங்கள் எனக்குள் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன. தாமதமாக உறங்குவதும் தாமதமாக வேலைக்கு வருவதும் சகஜமாகியிருந்தது. இது நிர்வாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் என் வேலை திறமையைப் பார்த்து “வேலை நடந்தால் சரி…” என்று விட்டு விட்டார்கள்.

சதி ஆசிரியரின் பிடிக்காதவர்கள் பட்டியலில் இப்போது என் பெயரும் இருந்தது. என்னிடமும் அவர் கடுப்பைக் காட்டத்தொடங்கினார்… ‘போடா மயிரு..’ என்று நினைத்துக்கொண்டு என் வேலையைப் பார்த்தேன். இச்சமயத்தில்தான் ஒரு முன்னணி அரசியல் கட்சியைப் பற்றிய செய்தியை சதி ஆசிரியர் வாரப்பத்திரிகையில் வெளியிட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது பொய்யான செய்தி என்று பத்தாயிரம் வெள்ளிக் கேட்டு மானநஷ்ட வழக்குப்போட்டது அந்தக் கட்சி. இதனால் ஆசிரியரின் தம்பி சதி ஆசிரியரின் மீது கடுப்பானார். சதி ஆசிரியரின் பெயர் கொஞ்சம் சரிந்தது. சதி ஆசிரியருக்குத் தர்மசங்கடமாகிப்போனது. கொஞ்சம் அடக்கியே வாசித்தார். வேலைகள் தாமதமாக முடிவது மட்டும் தொடர்ந்தது. கொஞ்ச நாளில் சதி ஆசிரியரை நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கு வேலை மாற்றியது நிர்வாகம். நாளிதழின் ஆசிரியர் குழுவின் முதன்மையான ‘நெருப்பான’ ஆசிரியர் ஒருவர் வாரப்பத்திரிக்கைக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார்… அன்றுதான் தொடங்கியது எனக்கு பிரச்சனை….

–    தொடரும்

1 comment for “இல்லாத திசைகள் 5 – முதல் முழு சம்பளம்

  1. July 16, 2015 at 9:23 pm

    Great..!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...