சாதி மயிர்

jegan_5“ஆசிரியருக்கும் முடிவெட்டறவருக்கும் என்ன வித்தியாசம்..?”

“ஆசிரியர் பிழை திருத்துவார் முடிவெட்டறவர் முடி திருத்துவார்..”

சமீபத்தில் சில மாணவர்களைக் கடக்கும் போது அவர்கள் பேசியது எனக்கு சிரிப்பை வரவைத்தது . இதனை கவனித்த இரண்டு மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இடத்தைவிட்டு மெல்ல மறைந்தார்கள்.

தற்போது பணி நிமித்தம் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படியான சந்திப்புகளில் மாணவர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல்கள் என் மனப்பதிவுகளை உரசிவிட்டு செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை.

இப்படியாக அமைந்த அந்த உரையாடல் எனக்கு ஒருவரை நினைவுப்படுத்தியது. முடிவெட்டுகின்றவர். நினைவில் தெரிந்து என் தலையை ஐந்து ஆறு பேருக்குத்தான் கொடுத்திருக்கிறேன். எல்லோரையும் தலையில் கை வைக்க அனுமதிப்பதில்லை. பாடம் செய்யாமல் கொட்டு வாங்கும் சமயம் தவிர வேறெந்த சூழலிலும் மற்றவரின் கைகள் என் தலைக்கு வருவதில்லை.

எங்கள் தோட்டத்தில் ஒரே ஒரு முடி வெட்டும் அண்ணன் இருந்தார். பார்ப்பதற்கு கொஞ்சம் சீன சாயலில் இருப்பார். முடி வெட்டிக்கொள்கின்ற சமயம் தவிர அவருடன் பேசுவது முடியாத காரியம். தனியாக கடை எதுவும் அவரிடம் இல்லை. தோட்ட வீட்டு வரிசையில் ஆக கடைசியில் இருக்கும் ஒரு காலி வீட்டுக்கு அருகில் கொட்டகை போன்றிருக்கும் வீட்டில் தங்கியிருப்பார். வீட்டின் வாசலிலேயே நாற்காலியும் சிதறிக்கிடக்கும் தலை முடிகள் இருக்கும். அவருக்காக தோன்றினால் கூட்டுவார் இல்லையென்றால் காற்றின் அழுத்தம் முடிகளை எல்லா திசைக்கும் கொண்டுச்செல்லும்.

அவருக்குத் திருமணமாகி குழந்தை ஒன்று இருப்பது சில காலம் கழித்துதான் தெரிந்தது. அது ரொம்ப காலமாகக் குழந்தையாகவே இருந்த்துதான் ஆச்சரியம். சில தடவைகள் கடந்து நானாக முடிவெட்ட செல்லத்தொடங்கியிருந்த சமயம் அது. அப்போதுதான் அவருடைய குரலே எனக்கு கேட்டது. இதற்கு முன் அப்பாவுடனோ நண்பர்களின் அண்ணனோ அல்லது பெரியவர் எவருடனோதான் வந்திருக்கிறேன். ஏதோ காதுக்கு மிக அருகில் கீச்சிடும் குரலில் எதோ கேட்கும். உடன் வந்திருப்பவர்தான் “தலை தூக்கு”, “அந்தாண்ட திரும்பு”, “இந்தாண்ட திரும்பு”, என கட்டளையிடுவார். முடிவெட்டி முடிந்ததும் அங்கிருக்கும் ‘மெல்லோ’ (milo) டின்னின் பணத்தைப் போட்டுவிட்டு கிளம்புவோம்.

தனியாக செல்லவேண்டிய நிர்பந்தம் வந்த நாளில் பல அறிவுரைகள் வழங்கப்பட்டன. வீட்டிலிருந்து வந்ததைவிடவும் சாலையில் நடந்துச்செல்லும் சமயத்தில்தான் விபரம் அறிந்து ஆளுக்கு ஆள் நிற்கவைத்து பலவற்றை அறிவுருத்தினார்கள். விந்தையான ஒரு ஆலோசனையும் கிடைத்தது. “ஐயோ டேய், முடியைத் தவிர அவன் கொடுக்குற எதையும் வாங்கி சாப்பிடாத… அவன் கொடுக்குற தண்ணியெல்லாம் குடிக்காத”

நான் தனியே வந்ததைக் கவனித்தவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. பரபரப்பாகக் காணப்பட்டார். முடியை வெட்டிக்கொண்டே என் பெயரைக் கேட்டார். எனது ஒன்பது வயதுவரை அவரிடம்தான் முடிவெட்டிக் கொள்கிறேன். என் பெயர் அவருக்கும் அவர் பெயர் எனக்கும் தெரிந்திருக்கவில்லை. அவருக்கும் ஒரு பெயர் இருப்பதை அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். பெயரில் தொடங்கி , படிப்பு பள்ளிக்கூடம் என பலவற்றைக் கேட்டுத் தெரிந்துக்கொண்டார்.

அவருடைய பேச்சு எனக்கு சுவரசியமாகத் தோன்றியது. முடிவெட்டும் நேரம் தவிர பலமுறை தொடர்ந்து அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். கொட்டகைக்கு அருகில் அவர் வைந்திருந்த தோட்டம் அழகாக இருந்தது. புதிய வகை பூக்களை அங்குதான் பார்த்தேன்.

ஒரு நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் பரபரப்பானார்கள். விபரம் இதுதான் இது நாள் வரை எங்களுக்கு முடிவெட்டிக்கொண்டிருந்தவரும் அவரது மனைவியும் தற்கொலை செய்துக்கொண்டார்கள். கூடவே பல ஆண்டுகளாக வளர்ச்சியடையாத குழந்தையென நான் நம்பிவந்த பொம்மை ஒன்றும் இருந்தது. அதுவரையில் என்னிடம் ஏதேதோ பேசிய அவர் பொம்மை குழந்தை குறித்தும் மனைவி குறித்தும் ஒருமுறைகூட சொல்லியிருக்கவில்லை. மனைவி மனநிலை சரியில்லாதவர் என்று பின்னர்தான் பேச ஆரம்பித்தார்கள். அவரின் இறப்பிற்குப் பிறகுதான் அவரும் அவரின் மனைவி குறித்தும் ஓரளவேனும் சுற்றத்தினர் பேச தொடங்கினார்கள். எத்தனை நாட்கள் அவர் யாருடனும் பேச இயலாமல் கழித்திருப்பார் என்று நினைக்கவே மனதில் நெருடல் ஏற்படுகிறது. மற்றவர்கள் தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள இப்படியான சிலரை வாழ்நாள் முழுக்க முடமாக்கிட தயங்குவதில்லை.

பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே நவீன மயமாக்கப்பட்ட உணவகத்தில் அமர்ந்திருந்தேன். பயபக்தியாக உணவக கவுண்டரில் ஒருவர் அமர்ந்து வந்து போவோருக்கெல்லாம் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் . சட்டென அவருக்கு அருகில் வந்து அவர் மகன் எதையோ சொல்ல கோவம் வந்தவராக கரகரத்த குரலில்,

“போயி சீனன்கிட்ட வெட்டிக்கடா… கண்ட சாதிகாரன்கிட்ட தலைய கொடுக்கனுமுன்னு சொல்ற” என சத்தமிட்டார்.

எனக்கு பகீரென்றது. பள்ளியில் முடித்திருத்துபவர்களை ஆசிரியருக்கு ஒப்பான தொழிலில் பேசிய மாணவர்களுக்கு இவர்கள் சொல்லும் சாதிய பேதம் தெரியப்போவதில்லை. வெட்டி வீசப்படும் மயிரில் சாதி பார்க்கும் இவர்களால் எதிர்கால சந்ததியனரின் மனம் கெடாமல் இருக்க வேண்டும்.

2 comments for “சாதி மயிர்

  1. Ravi
    July 10, 2015 at 11:56 pm

    இந்த சாதி பேசுபவர்கள் கொஞ்சம் தமிழர்கழுடைய வரலாற்றைத் திருப்பிப்பார்த்தால் தலைகுனிய வேண்டிவரும்.முடிதிருத்துபவர்கழுக்கு பரியாரி என்றோரு பெயர் வழக்கத்தில் இருந்தது எத்தனை பெயருக்குத் தெரியும்?உண்மைதான் இவர்கள் மன்னர்காலத்தில் அரண்மனை வைத்தியர்கள் சித்தவைத்திய பரியாரிகள்தான் பிற்காலத்தில் அம்பட்டர் என்று இழித்துக்கூறப்பட்டார்கள்,அப்படியாக்கியவர்கள் யார்?மன்னர்களிடத்தில் வெள்ளைத்தோல் பெண்களை மன்னரின் அந்தப்புரத்துக்கு அனுப்பி விட்டு மன்னரின் மைத்துனர்மாரை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்சியதிகாரங்களை தங்கள் கைக்குள் எடுத்துக்கொண்ட ஆரியச்சூழ்ச்சிக்காரரகள்தான்,500வருட காலத்துக்குள் மாற்றியமைக்கப்பட்ட தமிழரின் தலை எழுத்து இன்றுவரை மாற்றமுடியாமல் அடிமைத்தனமான வாழ்க்கைக்குப்பழகிப்போன தமிழ் இனத்தை மீட்டெடுக்க வந்தவனையும் சாதிப்பெயரால் உதறித்தள்ளிய கருங்காலிகள் பதவிக்கு ஆசைப்பட்டு இன்றும் அடிகழுவிகளாக ஆகிவிட்ட பரிதாபம்,என் செய்வேன் என் தமிழ்த்தாயே வலிமை தருவாயோ?தமிழ்த்தாயே?நன்றி,

  2. bharathi ramasamy
    July 15, 2015 at 5:32 pm

    சாதி பார்க்கும் இவர்களால் எதிர்கால சந்ததியனரின் மனம் கெடாமல் இருக்க வேண்டும்.
    jaathi endru onru iruppathu unggalukku terinthathaalthaan itheye neenggal eluthiyirukkireergal. athai pattri teriyaathe sile maanavargal ithai padittal, avargalukkum athu ennevenru ketka thondrum. எதிர்கால சந்ததியனரின் மனம் கெடாமல் இருக்க neenggalum satru yosikka vendum… ithu enathu thaalmaiyaane karuttu…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...