மலேசிய வரலாற்றில் இதுவரைக் காணக்கிடைக்காத அற்புத காட்சிகளோடு நாட்டின் 13-வது பொதுத்தேர்தல் களைக்கட்டியிருக்கிறது. நான் வாக்களிக்கப்போகும் இரண்டாவது தேர்தல் இது. எப்போதும் கட்டிக்கே (தேசிய முன்னணி) வாக்களிக்க வேண்டும் என்றிருந்த ஒரு தலைமுறையின் சத்தியத்தை உடைத்து நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவை கையில் வைத்திருக்கும் இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நான் இருக்கிறேன்.
மிக அண்மையில் நான் அம்பார் தென்னாங் தோட்டத்திற்கு ஓர் அலுவல் விடயமாகச் சென்றிருந்தேன். அப்போது காலை மணி 10.30க்கு மேல் இருக்கும். மக்கள் கூட்டாக ஒரு பொது இடத்தில் குழுமியிருந்தனர். அங்குள்ள பெரும்பாலானவர்கள் தோட்ட உழைப்பாளிகள். வேலை நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில் வாகனத்தை நிறுத்தி அங்கிருந்த ஓர் இளம் பெண்ணிடம் விசாரித்தேன். “மஇகாகாரவுங்க அரிசி, பருப்பு கொடுக்க வராங்க அக்கா. 10.00 மணிக்கு வாரதா சொன்னாங்க. இப்போது 11.00 மணின்னு சொல்லியிருக்காங்க” என்றவாறு அந்தப்பெண் நின்றிருந்த கூட்டத்தை நோட்டம்விட தொடங்கிவிட்டாள்.
நான் என் அலுவல் முடிந்து திரும்புகிறபோது மணி பிற்பகல் 12.00 நெருங்கிவிட்டிருந்தது. அப்போதும் வழங்கப்படவிருக்கும் அரிசி பருப்புக்காக காத்திருந்த கூட்டம் அங்கேயே குழுமியிருந்தது. அப்படியென்றால் வருவதாக சொன்னவர்கள் இன்னும் வரவில்லை என்பதை விளங்கிக் கொள்ள நமக்கு ஏழாம் அறிவுத் தேவையில்லை.
அரிசிக்காகவும் பருப்புக்காவும் செய்து கொண்டிருந்த வேலையைவிட்டு வந்து பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது யார்? லோரிகளில் உணவுப் பொருள்களை வைத்துவிட்டு அதைக் காட்டி கூட்டம் சேர்க்கும் கேவல அரசியலைத் தொடக்கி விட்டது யார்? நிகழ்வில் உணவு இலவசமாக வழங்கப்படும் – திரளாக வந்து கலந்து கொள்ளுங்கள் எனச் சோறைக் காட்டி ஆட்கள் சேர்க்கும் அபாயத்தை அரசியலாக்கியது யார்? மக்களின் இயலாமையை, வறுமையை, கண்ணீரைக் காட்டி அதற்குச் சில எலும்புத் துண்டுகளை வீசி ஓட்டு சேர்க்கும் வல்லமையை எப்படிப் பாராட்டுவது?
“இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
என சொல்லிச் சென்ற திருவள்ளுவரைக் கண்டிப்பாக இங்கே மேற்கோள்காட்ட வேண்டும். உலகியற்றியானைக் கடவுள் என்பவர்கள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள். எல்லாவற்றையும் இயற்றுபவன் யார்? ஆட்சியாளன் தானே? இப்படியாக பிறர் கொடுப்பதை வாங்கித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு நிலையை ஆட்சியாளன் உருவாக்குகிறான் என்றால் அவனும் அலைந்து கெடும் ஒரு நிலையை நாம் உருவாக்கியாக வேண்டும். அதுதான் உலக இயற்கை. நீங்கள் எலும்புத் துண்டுகளை வீசி ஓட்டுச் சேர்க்கும் அதே இயலாமையை, வறுமையை, கண்ணீரை உங்களுக்கு எதிரான ஆயுதமாக திருப்ப ஒரு சிறிய விசை போதும்.
நீங்கள் நிகழவிருக்கும் மாற்றத்தைத் தாமதப்படுத்தலாம். சில வேளைகளில் தள்ளிப்போடலாம். ஆனால், யாராலும் நிகழவிருக்கும் மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு சிலரை வைத்துக் கொண்டு உங்களால் மாற்றத்தைத் தாமதப்படுத்தவோ தள்ளிப்போடவோ முடியும் என்றால் அதே போன்றதொரு கூட்டத்தை வைத்துக் கொண்டு எங்களால் அந்த மாற்றத்தை விரைவுபடுத்த முடியும்.
மாற்றங்கள் மிக மிக விரைவாக கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடந்தப்படியே இருக்கின்றன. இப்போது சூடு பறக்க நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பரப்புரைகளை வைத்து உங்களால் அதை ஓரளவு கணிக்க முடியும். ஒரே வண்ணத்தில் மடிப்பு களையாத உடையோடு பவனி வரும் பாரிசான் நேசனல் கூட்டத்தையும் மக்களோடு மக்களாக கலந்திருந்திருக்கும் மக்கள் கூட்டணி பிரதிநிதிகளின் கூட்டத்தையும் இங்கே ஒப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
முன்னது மேல்தட்டு அரசியலையும் பின்னது சாமான்ய மக்களின் அரசியலையும் பிரதிபலிக்கிறது. பெரும்பாலான பாரிசான் நேசனல் பரப்புரை கூட்டங்களில் ஒரு மூத்த தலைமுறையைச் சார்ந்ததொரு கூட்டத்தினரை மட்டுமே பெரும்பான்மையாக காண முடிகிறது எனலாம். அரசியல்வாதிகள் ஒரு பெரும் பிம்பமாகவும் அந்த பிம்பத்தை அதே எண்ணத்தோடு இன்றும் பார்க்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து பாரிசான் நேசனல் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறது. ஆனால், கடந்த 56 ஆண்டுகளாக தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமுமின்றி இருக்கும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அது அம்மக்களின் மிக நியாயமான தேவையாகவும் கோரிக்கையாகவும் விளங்குகிறது.
அடுத்ததாக, நாட்டு அரசியலை எந்தவொரு மேல்பூச்சுமின்றி அவதானித்து வரும் இளைய சமுதாய கூட்டம் தொடர்ந்து மக்கள் கூட்டணி பிரச்சார கூட்டங்களில் பெருமளவில் பங்குகொண்டு வருகிறார்கள். இனிவரும் காலங்களில் அவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்களோ அதை ஒட்டிதான் இந்த 13-வது பொதுத் தேர்தல் முடிவுகள் இருக்கப்போகிறது. இளைய தலைமுறை இப்போது அரசு ஊடகங்களை நம்புவதில்லை. மாற்று ஊடகங்களை அவர்கள் ஆளத் தொடங்கிவிட்டனர். மிக தைரியமாக வெளிப்படையாக தங்கள் மாற்றுக் கருத்துகளை பதிவு செய்கின்றனர். தொடர்ந்து விவாதிக்கிறார்கள். விவாத முடிவுகளை அமல்படுத்துகிறார்கள். என்றுமில்லாத ஓர் அரசியல் விழிப்புணர்வு இந்த 13-வது பொதுத்தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது என முழுமையாக நம்பலாம்.
2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Census ஆய்வறிக்கையின் படி, 25-திலிருந்து 29 வயது வரையிலான வாக்காளர்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக காட்டுகிறது. இவர்கள்தான் அடுத்து வரப்போகிற மேலும் 3 தேர்தல் முடிவுகளுக்கு முக்கிய காரணிகளாக இருக்கப் போகின்றனர்.
இந்த வேளையில், கள நிலையை நன்கு உணர்ந்துள்ள எதிர்கட்சி கூட்டணி இதுவரை காலமும் ஆளுங்கட்சி விட்ட பிழைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் மிக முக்கியமானதான பெட்ரோல் விலை, கல்விக் கடனுதவி, அடையாள அட்டை, டோல் கட்டணம், பெருமளவிலான அரசாங்க ஊழல்கள், குத்தகைகளில் இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள், நாட்டின் வளத்தை, வரிப்பணத்தைத் தங்களின் சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்தியது, அவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள், தேர்தலையும் வாக்கு வேட்டையையும் குறி வைத்து வழங்கப்படும் மக்களுக்கான உதவிகள் மிக முக்கியமாக எல்லா பரப்புரைகளிலும் பேசப்படுகின்றன. இறுதி நேரத்தில் பணத்தைக் காட்டி மக்களை மயக்கி ஓட்டுகளை வாங்கி விடலாம் என்ற எண்ணம் இந்த நிமிடம் வரை பாரிசான் நேசனலிடம் இருக்கிறது.
பாரிசான் ஆகட்டும்; மக்கள் கூட்டணியாகட்டும். இருவரையும் மிக துல்லியமாக அவதானிக்க வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். இன மத பேதமற்ற அரசு என கொள்ளை அறிக்கையை வெளியிட்டு கையைச் சுட்டுக் கொண்ட மக்கள் கூட்டணி இனிவரும் காலங்களில் அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது. தேவைப்படுவர்களுக்குத் தேவையானதைச் செய்வது இங்கு மிக முக்கியமாகிறது. மேலும், கூட்டணிக் கட்சிக்கிடையிலான அணுக்கப்போக்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்படும் பிளவு அதன்மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து விடும். ஒரு முறை நம்பிக்கையை இழந்துவிட்டால் மீண்டும் அதைப் பெறுவது மிகக் கடினமான என்ற பாடத்தை தேசிய முன்னணியிடமிருந்து மக்கள் கூட்டணி கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில், மக்களுக்கு வழங்கும் உதவிகளை முதன்மைப்படுத்தி அந்த உதவிகளை அதிஅற்புத சக்தி வாய்ந்தவவையாக உருவகப்படுத்தும் பேர்வழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என் நான் கருதுகிறேன். தேவைப்படும் நேரத்தில் செய்யப்படாத உதவிகளால் எந்தப் பயனும் இல்லை. வாழ்கிற காலத்தில் அடையாள அட்டை வழங்காமல் முதிர்ந்து வயதுபோன பின்பு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அதை ஒரு மாபெரும் புனிதமாக காண்பிக்க முற்பட்ட தேசிய முன்னணி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைய நிலையில் இரு கட்சி ஆட்சியையும் மக்கள் வரவேற்கின்றனர். ஒரே கட்சி ஆட்சி செய்து எதிர்ப்பதற்கு ஆளின்றி, கேள்வி கேட்ட ஆளின்றி அவர்களே அனைத்தையும் அமல்படுத்தி வந்த சூழல் கடந்த தேர்தலோடு மாற்றம் கண்டிருக்கிறது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். முடிவுகள் அவர்கள் கையில்தான் இருக்கிறது. பெரும் மாற்றங்களுக்கும் புரட்சிகளுக்கும் பின்னணியில் சாமான்ய மக்கள்தான் இருக்கின்றனர்.
அடக்கி அடக்கி வைக்கப்படும் ஒன்று வெடித்து வெளிவரும் போதும் அதன் வெளிப்பாடு வீரியமிக்கதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வீரியம் இந்த 13வது பொதுத்தேர்தலில் நிகழ வேண்டும்.
மாற்றத்தை நோக்கிய தேர்தலில் முதல் மரியாதை எப்போதும் மக்களுக்கும் அவர்கள் வழங்கும் முடிவுகளுக்கும்தான்.
எனக்குத்தெரிந்த தோழி ஒருவள் சொன்னாள், நான் எதிர்கட்சிதான் எங்கம்மா தான் அரிசி பருப்பு வாங்கிய விசுவாசத்திற்காக மாறமாட்டேன் என்கிறார்கள் என்றாள். வைச்சு வாங்கினேன் அவளை.. பூசி மெழுகியதுபோதும் புரட்சி செய்வோம். பெண்களின் கைகளில்தான் உள்ளது.
கட்டுரை அற்புதம் பூங்குழலி.
/அரிசிக்காகவும் பருப்புக்காவும் செய்து கொண்டிருந்த வேலையைவிட்டு வந்து பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது யார்? லோரிகளில் உணவுப் பொருள்களை வைத்துவிட்டு அதைக் காட்டி கூட்டம் சேர்க்கும் கேவல அரசியலைத் தொடக்கி விட்டது யார்? நிகழ்வில் உணவு இலவசமாக வழங்கப்படும் – திரளாக வந்து கலந்து கொள்ளுங்கள் எனச் சோறைக் காட்டி ஆட்கள் சேர்க்கும் அபாயத்தை அரசியலாக்கியது யார்? மக்களின் இயலாமையை, வறுமையை, கண்ணீரைக் காட்டி அதற்குச் சில எலும்புத் துண்டுகளை வீசி ஓட்டு சேர்க்கும் வல்லமையை எப்படிப் பாராட்டுவது?/
நல்ல வரிகள்; உணர்வை தூண்டும் வரிகள்