ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்

veedhaபாயா பெசார் (கூலிம், கெடா) ஹிண்ட்ராப் இயக்கத்தின் முக்கிய தளமாகச் செயல்பட்டது. `வெட்டிப் போட்டாலும் ‘கட்டி’க்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று வாழ்ந்த இந்தியர்கள் மொத்தமாக மாறிய தருணம் அது.

எப்படி அந்த மனமாற்றம் சாத்தியமானது?

அளவற்ற விரக்தியுடன் இருந்த ஒரு சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக, குரலற்று வாழ்ந்தவர்களுக்கு வலிமையான, ஒரு சிலுவைச் சுமப்பவர் அடையாளத்துடன் ஹிண்ட்ராப் இயக்கம் வந்தது.

மஇகா, பிபிபி, ஐபிஎப் இன்னும் பிற இந்தியர் அடையாளக் கட்சிகள் செய்யத் தவறிய அல்லது செய்ய மறந்த ஒன்றை ஹிண்ட்ராப் தயக்கமின்றி, முழு வீச்சுடன், ஒரு சத்திய ஆவேசத்துடன் முன்னெடுத்தது. ஹிண்ட்ராப் இந்தியர்களுக்கு நம்பிக்கையை அளித்தது; பரிவு உரிமை அல்ல என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது.

முக்கியமாக, நமக்குள் நீர்த்துப் போயிருந்த போராட்ட உணர்வை , தட்டியெழுப்பி ஒருமித்தக் குரலில் உரிமையை, ஒன்று திரண்டு கேட்க வைக்க ஹிண்ட்ராப்பால் முடிந்தது.

இந்திய சமுதாயம் இவ்வளவு ஒருமித்தக் குரலில் பேசியதில்லை, இதுவரை எனக்குத் தெரிந்து.

ஆன்ம பலமற்ற ஒரு இயக்கத்தால் இதை நிகழ்த்துவது சாத்தியமல்ல; ஹிண்ட்ராப் சாதித்தது. அதன் போராட்டத்தில் நேர்மையும், உண்மையும் இருந்தது.

ஒர் அரசு சார்பற்ற இயக்கம், அதுவும் இந்தியர்கள் / இந்துக்கள் என்ற தெளிவான அடையாளத்துடன் காரியமாற்றிய ஓர் இயக்கம்,  பரவலான, ஆழமான சமூக, அரசியல் விளவுகளுக்கு காரணமாயிருந்திருப்பது ஹிண்ட்ராப்பின் பெரிய வெற்றிதான்.

சமகால இந்தியச் சமூக ஆய்வில் ஹிண்ட்ராப்பின் பங்களிப்பை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. அத்தகைய ஆழமான பாதிப்பை அவ்வியக்கம் இந்தியர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

இவையாவும், யாவருக்கும் தெரிந்ததுதான். இனி வருவதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றுதான் கருதவேண்டியுள்ளது. நாள் தவறாமல் ஹிண்ட்ராப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாய் உள்ளன.

`பச்சைத் துரோகி’

`ஹிண்ட்ராப் கடத்தப்பட்டுவிட்டது’

`விலைபோய்விட்டதா ஹிண்ட்ராப்’ – என்றும், இன்னும் மோசமாகவும் சிலரும்,

 ‘உரிமைப் போராட்டத்திற்கான அங்கீகாரம்’

‘மாற்றத்தின் உத்தரவாதம்’

‘..விலை போய்விட்டோம் என்றால் எங்களின் வம்சம் பாழாய்ப் போகட்டும்’- என்று சிலரும் மிக உறுதியாக் கூறுகின்றனர்.

என்ன ஆச்சு…பாரிசான் நேஷனலுடனான ஹிண்ட்ராப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏன் பலமான எதிர்ப்பைச் சந்திக்கிறது?

     2 வாரங்களுக்குமுன் என் தங்கையுடன் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டார், ` இவுங்க என்னதான் சொல்ராங்க..யாருக்கு ஓட்டுப் போடணும்னு கிளீனா  சொல்லவேண்டியதுதான. போன தடவ சொன்னாங்க சரி. இப்ப ஒன்னும்  புரியர  மாதிரி இல்லையே..`

     இலக்கிய சந்திப்பில் நண்பர்கள் சொன்னார்கள், ‘ஹிண்ட்ராப்  சரியில்லை..என்னமோ  நடக்குது. அதன் போக்கும் நடவடிக்கைகளும்  அதன் போராட்டங்களைப்  பிரதிபலிக்கவில்லை.’

பெரும்பாலான ஹிண்ட்ராப் அனுதாபிகளின் நிலைஇப்படிதான் இருக்கிறது. ஹிண்ட்ராப் அவர்களை ஏமாற்றிவிட்டதா?

ஹிண்ட்ராப் நீர்த்துவிட்டது. ஆவேசத்துடன்  பிரவேசித்து, இந்தியர்களின் உரிமையை மீட்டெடுப்பவர்களாகக் கொண்டாடப்பட்ட அதன் தலைவர்கள், தங்களின் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தங்களின் ஆதரவாளர்களை கொண்டு செல்ல தவறிவிட்டனர் என்றே படுகிறது. தங்கள் போராட்டத்தைக் கட்டமைக்க ஹிண்ட்ராப் கட்டியெழுப்பிய அத்தனை காரணங்களும் அவர்கள் பாரிசான் நேஷனலுடன் செய்து கொண்ட உடன்படிக்கையுடன் சட்டென காலாவதியாகிவிட்டதாகவே அதன் அபிமானிகளும், ஆதரவாளர்களும் ஐயுறுகின்றனர்.

55 ஆண்டுகளாக ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகமாகவே இந்தியர்கள் தங்களை காணுகின்றனர், கருதுகின்றனர். தனி நபர்களின் வாழ்வாதார நீட்சிக்கும், சுயதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் தங்களை வைப்புத் தொகையாகவும், பகடைக் காயாகவும் பயன்படுத்திகொள்கின்றன என்பது இந்தியர்களின் பொதுவான ஆதங்கம். நமது அரசு சார்பற்ற இயக்கங்கள் சில தொடர்ந்து செயலாற்றினாலும், பெருவாரியான இந்தியர்களிடம் அவர்களின் போராட்டங்கள் சென்றடையவில்லை.

ஆனால், ஹிண்ட்ராப் அவர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை முன்னிறுத்தி தனது போராட்டங்களை முன்னெடுத்தது.

அதன் போராட்டம் ஒரு களப்பணிபோல் தீவிரத் தன்மை கொண்டிருந்தது. நேருக்கு நேர் மோதும் பாணி. பெரிய பெரிய சித்தாந்தங்களை, கோட்பாடுகளை மக்களுக்கு உபதேசிப்பதல்ல. இதுகாறும் ஆட்சியாளர்கள் கட்டமைத்திருந்த மாய திரைகளை கிழிப்பதுதான் அதன் பாணி. தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள ஆட்சியாளர்கள் எப்போதும் உருவாக்கும் `பயந்த நாகரிகத்தை’ ஹிண்ட்ராப் தைரியமாக எதிர்க்கத் துணிந்தது.

ஆதரவற்றும், கேட்பாரற்றும் இருந்த இந்தியர்களுக்கு இந்த பாணி அணுகுமுறை மிகவும் உவப்பானதாக இருந்தது.

தங்களுக்கிடையிலான எல்லா மனத்தடைகளையும் நீக்கி, பகை மறந்து மிக குறுகிய காலத்தில், கட்டுக்கோப்பான ஒரு எதிர்ப்பியக்கமாக ஹிண்ட்ராப்பின் ஆதரவாளர்கள் உருவாகினர். ஒருங்கிணைந்த சிந்தனையும், நேர்மையான போராட்டமும், கட்டுக்கோப்பான வழிநடத்தலும் தான் ஹிண்ட்ராப் இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஹிண்ட்ராப் பெரும்பாலான இந்தியர்களின் மனவோட்டத்தைச் சரியாகப் பிரதிபலித்தது.

அது, தங்களுக்கு எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை; தாங்கள் ஓரங்கட்டப் படுகிறோம்; இந்த நாட்டில் நமக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை; தங்களின் மதக் கோட்பாடுகளும், கலாச்சார கூறுகளும் சிறுமைப்படுத்தப் படுகின்றன; யாரும் கேட்பதற்கில்லை.

யாராவது முன்வருவார்களா, எங்களுக்காகப் போராட..என்ற சூழலில் ஹிண்ட்ராப் சரியான வழிதடம் அமைத்துக் கொடுத்தது.

ஆளும் வர்க்கத்தினரிடம் ஏற்பட்ட தீராக் கோபமும், வெறுப்பும்; நம்பிய கட்சிக்காரர்களின் சுயநலப் போக்கும், அதை நியாயப் படுத்த அவர்கள் கூறிய அத்துனை புரட்டுகளும்தான் ஹிண்ட்ராப்பிடம் அவர்களைக் கொண்டு சேர்த்தது.

பிரதிபலனாக, ஹிண்ட்ராப் அவர்களுக்கு தங்கள் உரிமைகள் என்னவென்றும், இலவசங்களுக்கு மயங்கி வாழக்கூடாது என்பதையும் உரத்துக் கூறியது. தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று அறைந்து கூறியது.

அவர்களை பயப்படவேண்டாம் என்று அணைத்துச் சொன்னது.அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கு மாட்டப்பட்டிருந்த மூக்கணாங்கயிறு அறுக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இப்போது ஹிண்ட்ராப் பாரிசானோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் ஹிண்ட்ராப் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையையே தகர்த்துவிட்டது. வேதமூர்த்தியின் லாஜிக் கணக்கு அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கவில்லை.

`5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பக்காத்தான் எதுவும் செய்யவில்லை; பேச அழைத்தால் பதிலே வருவதில்லை. ஆதலால், நமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து, ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பாரிசானுடம் நாம் கைக்கோர்ப்போம் ‘ என்று வேதமூர்த்தி கூறும்போது ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் வாயடைத்து நிற்கின்றனர். என்ன ஆச்சு? நல்லாதான போய்கிட்டிருந்தது? ஏன் இந்த `U-TURN`? 5 வருடம் 55வருடம், ரொம்பவும் இடிக்கிறதே? ஏன் இந்தத் திடீர் மாற்றம்? யாருடன் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டது? தெருவில் இறங்கிப் போராட நாங்கள் வேண்டும், முடிவுகளை நீங்களே செய்துவிடுவீகளா? நீங்களும் எங்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டீர்களா?

இப்படி நிறைய விசனங்கள், கோபங்கள். அதன் விளைவாக கடுமையான தூற்றுதல்கள். அதிக நம்பியவர்கள், அதிகமாகக் கோபப்படுவது இயற்கைதானே.

அதோடு, வஞ்சப் புகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. தன்னை இந்தியர்களின் ஒற்றைச் சாம்பியனாகப் பாவித்துக் கொடி நாட்டிய  மஇகா தலையில் துண்டைப் போட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ந்து பல `conspiracy theory`களும் உலாவருகின்றன;வரும்.

ஹிண்ட்ராப் என்னவாகும்? கவலையில்லை. சில இயக்கங்கள் காலத்தின் கட்டாயத்தில் தோன்றுகின்றன. ஹிண்ட்ராப் `ஊழிக்கூத்துக்கு உடுகடிக்க'(நன்றி:சு.ரா) வந்த இயக்கமாகவே காண்கிறேன்.

அப்துல்லா படாவி `பேசுங்கள், கேட்கிறேன். என் காதுகள் பெரியவை’ என்று `பூட்டைக்’ கழற்றினார். ஹிண்ட்ராப்  இந்தியர்கள் பேசுவதற்கு மேடை ஏற்பாடு செய்தது. சிந்தனைத் தளைகளைத் தகர்த்தது.

இப்போது – சரியாகவோ, தவறாகவோ – இந்தியர்கள் சிந்திக்கிறார்கள். இப்போது அவர்களிடம் போய் `பரவாயில்லை, மீண்டும் பாரிசானுக்கே வாக்களிப்போம்’ என்று சொல்வதை ஆதரவாளர்கள் செவிமடுப்பார்களா என்பது முக்கியமான கேள்வி.

கடந்த தேர்தலைப் போல இல்லா விடினும், அதிருப்தியாளர்கள் வாக்குகளை பக்காதான் கட்சிகள் இம்முறையும் அதிகமாகவே பெறும். இம்முறை அதற்காக அவர்கள் எவ்விதப் பிரயத்தனமும் படத்தேவையிருக்காது என்பதுதான் நிதர்சனம்.

ஹிண்ட்ராப், தான் காலாவதியாகவில்லை; கடத்தப்படவில்லை என்பதை எஞ்சியிருக்கும் தன் ஆதரவாளர்களுக்கும் நிரூபிக்கும் நாளைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.

1 comment for “ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்

  1. ஸ்ரீவிஜி
    April 29, 2013 at 6:28 am

    தமிழ்ச்சமூதாயம் ஹிண்ட்ராஃப் தலைவர்களுக்கு நிஜமாலுமே தலைவணங்கும். சரித்திரம் சொல்லும் இவர்களின் தியாகங்களையும் போராட்டங்களையும்.
    இவர்களின் போராட்டமே இந்தியர்களின் மறுமலர்ச்சிக்கு ஆதாரம். அந்த இயக்கத்தையும் அவர்களையும் நிந்திக்க மனமில்லை.
    வரிசை வரிசையாக கீழறுப்புகளை மேற்கோல்காட்டி, அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு தந்த அவர்கள் (ஹிண்ட்ரஃப்) போற்றத்தக்கவர்களே. இருப்பினும் மீண்டும் பாதாளத்தில் விழச்சொல்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாரிசானுக்கு ஓட்டுப்போடுங்கள் என்பதனை ஏற்கவேமுடியாது. நீங்கள் இங்கே குறிப்பிட்டதுபோல் 5க்கும் 55க்கும் வித்தியாசம் உண்டுதான். யோசிக்கவைத்த பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *