இப்போதைய மலேசியாவை அசைத்து பார்க்கும் இன்னொரு பேரலை. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைப்பெறும் நாட்டின் பொதுத்தேர்தல் இம்முறை 2008-ம் ஆண்டுக்கு பின்னர் நான்காண்டுகள் கடந்து ஐந்தாம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது. பன்னிரண்டு பொது தேர்தல்களை கடந்து விட்ட மலேசியாவுக்கு இது பதிமூன்றாவது தேர்தல். எனவே சென்டிமென்ட் காரணமாக பதிமூன்றாவது தேர்தல் 2013-ம் ஆண்டு தான் நடக்க வேண்டும் என யாராவது குறி சொல்பவர் சொல்லியிருக்க கூடும்.
இத்தேர்தல் பல அனுமானங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தாள் வரை அசராது ஆண்ட பரிசான் நெஷனல் அரசாங்கத்துக்கு ஒரு மைல் கல். எனக்கு அரசியல் எட்டாகனி என்றாலும் தற்போதைய சூழலில் இதை பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு நான் மட்டுமல்ல என்னை போன்ற பல தள்ளப்பட்டிருக்கின்றார்கள். 55 ஆண்டுகளில் இருக்கையை இறுக்கி பிடித்து கொண்டு ஆண்ட அரசாங்கம் அளித்த பங்களிப்பு என்ன? அது உருவாக்கிய பண்பாடு என்ன? இதனால் நாடு எந்த அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது? உருக்கப்பட்டிருக்கிறது? எத்தனை பேர் நாட்டை விட்டு தூர போயிருக்கின்றனர்? எத்தனை பேர் நாட்டுக்குள் வந்து இருக்கின்றனர்? என்பதே பாமரனாய் இருந்தாலும் மண்டைக்குள் பட்டிமன்றம் நடத்தும் கேள்விகள். இதற்கு குறிப்பிட்ட பொதுஅறிவு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் என் பள்ளியின் கடைநிலை மாணவன் கூட இதைப்பற்றி புள்ளி விபரத்தோடு பேசுகிறான்.
இது ஆளும் கட்சியின் நீண்ட கால ஆளுமையினால் ஏற்பட்ட தாக்கமாக கூட இருக்கலாம். எல்லா மட்டத்தில் இருக்கும் மக்களும் எங்கும் எதிலும் புதுமையை எதிர்ப்பார்க்கிறார்கள். இது தான் உண்மை நிலை. நாடு இரண்டு பெரும்பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு பகுதி மட்டுமே முழுமையாக முன்னேற்றப்பட்டிருக்கிறது; இன்னொரு பகுதி அதற்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் பாராமுகமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இப்போதைய பலரின் குற்றச்சாட்டு.
இந்த இன்னொரு பகுதியில் ஒன்றான சரவாக்கில் என்னதான் இன்றைய தேர்தல் நிலவரம்? ஒரு சாதாரண பார்வையாளரின் கோணத்தில் என்ன எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் இதன் நோக்கம். தீபகற்பத்தில் தேர்தல் புரட்சியில் எதிர்கட்சியினால் பல விஷயங்கள் கட்டவிழ்க்க படுகின்றன. அதை எதிர்த்து பாரிசான் நெஷ்னல் கட்சி பல வகைகளில் போராடுகின்றது. ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு பிறகு எல்லாரும் விழித்து கொண்ட பின் இதன் கோணம் இனம் மதம் என ஒரு மதத்தை இன்னொரு மதமும் ஒரு இனத்தை இன்னொரு இனமும் தாழ்த்தி பேசுவதும் வெட்டி பேசுவதும் இப்போது வெளிநடப்புகளில் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
தீபகற்ப மக்களின் ஓட்டு 50:50 என்ற நிலைக்கு வந்த பின் ஆளுங்கட்சியின் முழுகவனமும் சரவாக் பக்கம் திரும்பி விட்டது. என்ன காரணம்? சரவாக் பி.என் கட்சியின் மொத்த சொத்து. தீபகற்பத்தின் அளவை கொண்டுள்ள சரவாக் பெரும்பாலும் ஊரக பகுதிகளை உள்ளடக்கியது. அதிலும் அங்கு இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் அதிகபட்ச அக்கறை பணமாக தான் இருக்கின்றது. உண்மையை சொல்லப்போனால்,. சரவாக் மக்கள் பி.என் ஆட்சியை தான் விரும்புகிறார்கள். ஆனால் இன்னுமும் ஆட்சிப்பீடத்தை விட்டுகொடுக்காமல் இருக்கும் சரவாக் முதலமைச்சரின் ஆட்சியை தான் விரும்பவில்லை என்பது தான் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் நகர பகுதியில் பி.என் கட்சிக்கு சவால் விடும் வகையில் சக்தி வாய்ந்த வார்த்தை வெடிகுண்டுகள் எதிர்கட்சியினால் வீசப்படுகின்றன. ஆனாலும் ஆளுங்கட்சி இங்கே அசராமல் அமைதியாக தான் இருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் அன்வார் இப்ராஹிமின் பிரவேசத்தை அடிக்கடி நான் இருக்கும் இடத்தில் நடைப்பெறுவதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
இங்குள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள்? எங்களுக்கு பி.என் வேண்டும் ஆனால் முதலமைச்சர் வேண்டாம். ஏன்? சரவாக்கின் இயற்கை வளத்தை தன் குடும்பத்தின் பெயரில் மாற்றி பூர்வகுடி மக்களின் உரிமையை பறிப்பதாக பேச்சு. இவரின் இந்த இருபது கால ஆட்சி காலத்தில் எல்லாமே தன் தலைமுறைக்காக சேர்த்து வைத்து கொண்டதாக இவர் மேல் பல குற்றச்சாட்டு. இதை இங்கே பகிரங்கமாகவே பறைசாற்றுகிறார்கள். ஆனால் இதை பற்றி எந்த எதிர்வினையையும் இதுவரை வெளிவந்ததில்லை. இதை தெரிந்து வைத்து கொண்ட அன்வார் முதலமைச்சர் மாற வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என ஒரே கேள்வியில் மீண்டும் தேர்தலை சூடு பறக்க வைத்திருக்கிறார். இதற்கு இணையாக துணைபிரதமரின் பிரவேசமும் இங்கே இருக்கிறது.
இங்கே முஸ்லிம் மக்களை விட கிறிஸ்துவர்கள் அதிகம் என்ற காரணத்தால் அதிகமாக கிறிஸ்துவ மார்க்க பள்ளிகள் அதிகம். இவற்றுள் இன்னும் பல பாதிரியார்களின் ஆளுமைக்கு கீழே நேரடியாக செயல்படுகின்றன. சில அரசாங்கத்தின் ஆளுமைக்கு கீழ் வந்து விட்டன. இன்னும் வராதவை பகுதி உபகார பள்ளிகளாய் உள்ளன. எனவே இங்குள்ள கிறிஸ்துவர்களின் நம்பகத்தன்மையை தக்க வைத்து கொள்ள சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. இப்பள்ளிகளுக்கு உபகாரத்தொகையை அளிக்க துணை பிரதமரே வருகையளித்திருந்தார்.
(இணைப்பைபார்க்கவும் http://www.theborneopost.com/2013/04/14/peranan-sekolah-mubaligh-diiktiraf/)
பள்ளிவாரியான அழைப்பின் பேரில் நானும் இந்நிகழ்வுக்கு சென்றிருந்தேன். பிற்பகல் 2.30 மணிக்கு நிரலிடப்பட்டிருந்த நிகழ்ச்சி துணைப்பிரதமரின் தாமதமான வருகைக்கு பிறகு அடை மழையினூடே 4.30 மணிக்கு தான் தொடங்கியது. சரவாக் முழுவதிலிருந்துமிருந்து சம்பந்தப்பட்ட அநேகர் அந்நிகழ்ச்சியில் வருகை தந்த்திருந்தனர். கிட்டத்தட்ட 4 மணி நேர காத்திருப்பு. ரொம்பவும் அமைதி காத்தனர்.
காத்திருந்த நேரத்தில் சில உரையாடல்களை கேட்க நேரிட்டது. ஏன் இந்த நேரத்தில் துணைப்பிரதமர் இங்கு வர வேண்டும்? அதுவும் ஏன் 31 இலட்சம் மலேசிய ரிங்கிட்டை உபகாரமாக தர வேண்டும்? தீபகற்பத்தில் ஒன்றும் செய்ய இயலாது என்பதால் முழு கவனத்தையும் இங்கே திருப்பி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறார்களா? இல்லை தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தேசிய கஜானாவை உபகாரம் என்ற பெயரில் காலி செய்கிறார்களா என பல கேள்விகள். காத்திருந்த நேரத்தில் பலர் எதோ ஒப்புக்கு தான் வந்து அமர்ந்த்திருப்பதாக தெரிந்தது. அதோடு மழையும் அதன் இஷ்டத்துக்கு வெளுத்துகட்டி கொண்டிருந்தது.
அதே நேரத்தில் துணைபிரதமரும் கட்சியின் எதிர்ப்பார்ப்பை முன்வைக்க தவர வில்லை. இன்னொரு முறை வாய்ப்பு தரப்பட்டால் இந்த உபகார பணம் மேலும் அதிகரிக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்படியானால் கட்சி பணத்தை பிரயோகித்து தான் ஓட்டை வாங்குகிறதா என்று சிலர் தங்களுக்குள்ளாகவே முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டனர். இதை தொடர்ந்து ஊழல் பிரச்சனை பற்றியும் சலசலப்பு தொடங்கியது. பல காலம் ஆண்ட ஆளும் கட்சியில் ஊழல் அதிகம் இருப்பதாகவும் ஒருகால் மலேசியாவில் இரு கட்சி ஆட்சி மாற்ற அமைப்பு வந்தால் இந்த நிலை மாறலாம். ஒருத்தரை ஒருத்தர் குறை கண்டு பிடிப்பதிலேயே நேரமும் பணமும் செலவாகின்றது. இப்படி இரு கட்சி ஆட்சி மாற்றம் மக்களின் தேவைகேற்ப தங்களை சரிபார்த்து ஊழலையும் குறைக்க உதவியாக இருக்கும் எனவும் சிலர் தங்களின் பொதுவான கருத்தை வெளிப்படுத்தினர். ஆளுங்கட்சி செய்யும் ஒவ்வொரு அசைவிலேயும் குறை தேடும் எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கும் ஆட்சி பீடத்தின் அழுத்தம் தெரிய வாய்ப்பாக அமையும் எனவும் கருத்து பகிரப்பட்டது.
ஆக பொதுவாக சரவாக் மக்கள் இம்முறை புதுமையை எதிர்பார்க்கிறார்கள் எனவே எண்ண தோன்றுகிறது. ஆனாலும் ஊரக பகுதிகளின் மொத்த ஓட்டும் ஆழுங்கட்சிக்கு தான் என்பதில் ஐயமே இல்லை. அப்படியே பார்த்தாலும் எதிர்க்கட்சி வெற்றி பெறுவதாய் இருப்பின் அது நகரபகுதிகளையே ஆட்டி பார்க்க முடியும். எதிர்க்கட்சியின் ஆக்கிரமிப்பு வழி நகரப்பகுதிகளை தம் பக்கம் இழுக்கலாம் என்ற நிலை இங்கே நிலவுகிறது. யார் பக்கம் வெற்றி என்பது அடுத்த மாதம் ஐந்தாம் தேதி அன்று தான் தெரியும். எதுவும் நடக்கலாம். அதுவரையில் நடப்பவைகளை நிதானமாக கவனிப்போம்.
சரவாக் குறித்து நல்ல ஒரு அறிமுகம் கிடைத்தது. நோவா பயணம் குறித்து மட்டும்தான் எழுதுவார் என நினைத்தேன். அரசியலும் எழுதுகிறார்.வாழ்த்துகள்
நன்றி ராம்…வல்லினம் ஆசிரியரின் உந்துதலால் எழுதப்பட்டது…