அம்மா தாயே புக்கு போடனும்; பிச்சை போடுங்க!

bookஇனி பக்கம் பக்கமாக எழுதி உங்களிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. இனி முடிவு உங்கள் கையில். இதற்கிடையில் கதையொன்றை உங்களுக்கு சொல்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் கதை. ஒவ்வொரு எழுத்தும் காரசாராமத்தான் இருக்கும். அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வபோது எழுதி அனைவருக்கும் தான் இருப்பதாக காட்டிவிடுவது அவரது வழக்கம். பத்திரிக்கைகளும் எழுத்தாளர் சங்கமும் கூட அதற்கு உற்ற துணையாக இருக்கிறது.

இனி கதையை ஆரம்பிக்கிறேன்,

அந்த எழுத்தாளர், தான் எழுதியவற்றை புத்தகமாக தொகுக்கும் ஆசை வந்தது . அதற்கான வேலையில் இறங்கினார். முதலில் யாரை போய் பார்க்கலாம் என யோசிகிறார். யோசனை ஆழமானது. சமீபத்திய அல்லது காலம்காலமாக நடந்துவந்த ஏதோ ஒன்று அவருக்கு நினைவில் வந்தது.

 ஒரு வாரத்திற்கான நாளிதழ்களை எடுத்து வைத்துக் கொள்கிறார். கையில் ஒரு குவளை தேநீர் உடன் குறிப்பு புத்தகம். ஒவ்வொரு நாளிதழிலும் அதிகமாக, இதை இவர் ‘கிழித்தார்’, அதை அவர் ‘கிழித்தார்’ என்று புகைப்படங்களோடு வந்திருக்கும் செய்திகளில் அதிகமாக இடம்பெற்ற அல்லது அதிகமாக இந்திய சமூதாயத்திற்கு ‘கிழித்த’ பிரமுகரை தேடிக் கண்டுபிடித்தார்.

சின்ன பிள்ளையைக் கேட்டிருந்தாலும் சொல்லியிருக்கும், அதிகம் கிழித்தவர்கள் அரசியல்வாதிகள் என. அது தெரியாமல் அவர் என்ன எழுதிவந்தார் என தெரியவில்லை.

தன் குறிப்பு புத்தகத்தில் அதிகமாக இடம்பெற்றவர்களில் அவரவர் கிழித்ததையெல்லாம் தனியாக பிரித்து எழுதினார். எப்படியெப்படியோ கணக்கு போட்டு கடைசியாக ‘முஇகா’ என்ற கட்சிக்காரரைக்  கண்டுபிடித்தார்.

தற்போது அந்த முஇகா-விற்கும் கிழிக்கும் வேலை குறைவாகவும் குறை சொல்லும் வகையாகவும் இருப்பது இவருக்கு தெரிந்தே இருந்தது. அவர்களுக்கு ஒரு கிழித்தல் வேலையை கொடுப்பதின் வழி தனக்கும் லாபம் அந்த மு.இ.கா-விற்கும் லாபம் என கணக்கின் முடிவில் கண்டுக்கொண்டார்.

அதற்கான வேலைகளை செய்யத் தொடங்கினார்.

புத்தக வெளியீடு என்று சொன்னதும் , மு.இ.கா-வினர் மகிழ்ச்சி பொங்க ஒத்துக்கொண்டார்கள். ஒத்துக் கொண்டதோடு கையில் பெயர் பட்டியல் ஒன்றைக் கொடுத்தார்கள். வேறொன்றுமில்லை, மு.இ.கா-வின் குட்டியில் இருந்து ஜட்டி வரை உள்ள முக்கியமானவர்களுக்கு பன்னாடை..! மன்னிக்கவும் பொன்னாடை போத்துவதற்குத்தான்.

 நேரம் குறிக்கப்பட்டது.

இதை, இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிட்டேன், ஆனால் அதற்காக அந்த எழுத்தாளர் அலைந்தது நான்கு மாதம்.

தேதி தயார்

இடம் தயார்

மு.இ.கா தயார்

எழுத்தாளர் தயார்

புத்தகம் கூட , நன்கொடையாளர்களின் பெயர் புகைப்படங்களுடன் தயார்

புத்தக வெளியீட்டுக்கு முதல் நாள், மு.இ.காவின் முக்கிய பிரமுகர் வீட்டில் நாய் குட்டிக்கு பிறந்தநாள் என்பதால் நிகழ்ச்சி மூன்று நாள்கள் தள்ளிவைக்கப்பட்டது. எழுத்தாளர் விபரம் தெரிந்தது முதல், நிகழ்ச்சி நடக்கும் முதல் நாள் இரவு வரை ஒவ்வொருவருக்கும் குறுஞ்செய்தியை அனுப்பிக் கோண்டிருந்தார்.

“மு.இ.கா-வின் முக்கியவருக்கு , அவசர சமுதாயப் பணி இருந்ததால், நமது புத்தக வெளியிடு மூன்றாவது நாளில் நடக்கும். “

எனபதுதான் அவர் பரப்பிய செய்தி…..

மூன்றாம் நாள் குதித்துக் கொண்டிருந்தார் எழுத்தாளர். சும்மாவா சொல்லுங்க எத்தனை பாடுபட்டு , எத்தனை உழைப்பை போட்டு புத்தகத்தை வெளியீடு செய்கிறார்.

அரங்கம் மு.இ.கா-வின் ஆதரவு

சாப்பாடு மு.இ.கா ஆதரவு

விளம்பரம் மு.இ.காவின் ஆதரவு

பொன்னாடைகளும் மலர் மாலைகளும் மட்டும் எழுத்தாளரின் செலவு.

முன்னே சொன்ன மூன்றையும் விட, பின்னே வந்த செலவுதான் அதிகம் என்பதை எழுத்தாளருக்கு யாரும் சொல்லவில்லை.

புத்தக வெளியீடு தொடங்கியது, மு.இ.காவின் முக்கிய பிரமுகர் எங்கோ சாலை நெரிசலில் (அப்படித்தான் பேசிக்கொண்டார்கள்) மட்டிக்கொண்டதால் தாமதம் என்றார்கள். சரியாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் வந்திருந்தவர்களில் சிலர் வெளியேறினார்கள் இன்னும் சிலர் சாப்பிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றார்கள். தலைவர் வரும் வரை சாப்பாடு கொடுப்பது அவ்வளவு மரியாதையாக இருக்காதே..!

மு.இ.கா-வின் முக்கிய பிரமுகர் வருவதற்கு சரியாக ஐந்து நிமிடத்தில் அரங்கள் கட்சித் தொண்டர்களால் நிறைந்தது. ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை வாங்கினாலும், அடுத்த புத்தகத்தை தன்மானத்தோடு தனியே வெளீயிடலாம் என கணக்கு ஒன்று ஓடியது அந்த எழுத்தாளருக்கு.

வந்தார் தலைவர். பரபரப்பானது அரங்கம். அறிவிப்பாளர் எழுதி வைத்திருந்த குறிப்பு புத்தகத்தை பிடுங்கி வேறு ஒன்று கொடுத்தார்கள். படிக்கப்படிக்க பெயர்கள் வந்துக் கொண்டே இருந்த அவர்கள் கொடுத்த குறிப்பில். எப்படியோ இரவுக்குள் எழுத்தாளரின் பெயரும் புத்தகத்தின் பெயரும் வாசிக்கப்பட்டது.

மு.இ.காவில் இருந்து புத்தகத்தை பற்றி பேச ஒரு கவிஞர் அழைக்கப்பட்டார். மு.இ.காவின் தொடக்கம் முதல் தற்காலிக தலைவர் கிழித்தது வரை சந்தம் சிதராமல் எதுகை எகிறாமல் பேசினார். கடைசியில் கட்சிப்பணி காரணாய் புத்தகத்தை முழுதாய் படிக்க முடியவில்லை, ஆனால் நல்ல புத்தகம் ஒவ்வொரு தமிழன் வீடிலும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் என்று கூறி கைத்தட்டலைப் பெற்றார். இவரெப்படி புத்தகத்தின் கடைசியில் மூன்று பக்கத்திற்கு புத்தக விமர்சனம் எழுதினார் என எழுத்தாளர் யோசிக்கவில்லை.

 தலைவர் அதிகம் பேசவில்லை.

ஒவ்வொருவருக்கும் பொன்னாடையும் பூமாலையும் போடப்பட்டது. குனிந்து குனிந்தே வாங்கிக் கொண்டார்கள். பணிவுக்கு பேர்போன மு.இ.காவினர்.

ஒருவழியாக புத்தக வெளியீடு தொடங்கியது. தலைவர்தான் தொடக்கினார்.

சட்டென பாக்கெட்டில் கைவிட்டு கட்டாக ஐநூறு வெள்ளியைக் கொடுத்த முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார். பத்திரிக்கை நிருபர்கள் வழக்கம்போல பலக்கோணங்களில் புகைப்படம் எடுத்தார்கள். பின் வேறொரு கிழித்தல் வேலையைக் காரணாய் சொல்லி ஐந்தாவது நிமிடத்தில் புறப்பட்டார்.

போகிற அவசரத்தில் வாங்கிய புத்தகம் அவரின் இருக்கையிலேயே வைத்துவிட்டார். அவரின் பின்னார் சிலர் போய்விட்டதால் முதல் இரண்டு வரிசை அப்படியே காலியானது. ஒரு புத்தகம் மட்டும் அநாதையாய் பார்த்துக் கோண்டிருந்தது எழுதியவரை.

எப்படியோ ஒருவழியாக புத்தக வெளீயீடு பெரிய செலவில்லாமல் முடிந்தது. மண்டபம் காலியானது. கொஞ்ச நேரம் தன் சாதனைகளை எண்ணியெண்ணி மகிழ்ந்த நமது எழுத்தாளர். விடைபெறும் நேரம்.. சிலர் கையில் ரசீதுடன் வந்திருந்தார்கள்.

மண்டபத்திற்கு ஒருவர்

சாப்பாட்டிற்கு ஒருவர்

வெளியே போட்டிருந்த பந்தலுக்கு ஒருவர்

விளம்பர போஸ்டருக்கு ஒருவர்

என கட்டாத பாதி பணத்தை வாங்கிக் கொண்டார்கள்.

வெளியே வரும் போதுதான் மண்டபத்தை சுத்தம் செய்கிறவர் வந்து “சார் உங்க புத்தகம் மூனு பெட்டில இருக்கு பாருங்க எடுக்க மறந்துட்டிங்க ” என்றார். அதற்கும் பணம் முழுமையாய் கொடுக்கப்படாதது தெரிய இன்றைய பொழுது விடியவேண்டும் அந்த எழுத்தாளருக்கு.

குட்டிக்கதை சொல்வதாகச் சொல்லி இழுவையாக்கிவிட்டேனா… இப்பவும் ஒன்னும் கெட்டு போகல இந்த கதையையே நாம் குட்டிக்கதையாக்கலாம்..

‘அம்மா… தாயே… பிச்சப்போடுங்க’ என்று எழுத்தாளர்களை பழக்கப்படுத்துகிறது மு.இ.கா.

அல்லது,

“அப்போ எங்க பேரு சொல்லி வாங்கின காசெல்லாம் எங்க?” எழுத்தாளர்களும் கேட்பதில்லை.

பின் குறிப்பு ; மு.இ.கா-வை முட்டாள் இந்திய காங்கிரஸ் என்று நீங்கள் பொருள் கொண்டால் நான் பொறுப்பல்ல.

4 comments for “அம்மா தாயே புக்கு போடனும்; பிச்சை போடுங்க!

  1. ஸ்ரீவிஜி
    April 29, 2013 at 6:58 am

    நல்ல சிறுகதை

  2. Netra
    April 30, 2013 at 10:18 pm

    Hmmmm… Vaarttai onnum illai solvatharkku… Shabba ivvallavu sothanai ilakkiyattirkku 🙁

  3. கோபிநாத்
    May 2, 2013 at 3:47 pm

    ஒரு எழுத்தாளரின் வரலாறு….. சிறுகதை “super” 🙂 🙂

  4. அரு.நலவேந்தன்
    May 23, 2013 at 10:14 pm

    இன்றைய எழுத்தாளனின் அவல நிலையினை நகைச்சுவையாகவும் கிட்டலாகவும் தெளிய வைத்துள்ளீர்கள்.சிறுகதையின் வழி கருத்தின் பறிமாற்றம் அருமை.நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...