எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் 13ஆவது பொதுத்தேர்தல் திகிலும் பரபரப்பும் குழப்பமும் நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இம்முறை யாருக்கு வெற்றி என்று அறுதியிட்டுக் கூற முடியாத சூழலே இன்றளவும் நிலவுகிறது. ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ என்ற சினிமாப் பாடல் உருமாற்றம் பெற்று “தேர்தலிலே ஜெயிக்கப் போறதாருங்க? அது பாரிசானா? பக்காத்தா? சொல்லுங்க” என்று ஒலிக்கும் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டும் வந்துவிட்டது. சூடு பிடித்துவிட்ட தேர்தல் களத்திலிருந்து ஒவ்வொரு நாளும் பல வேடிக்கைக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தகவல் ஊடகங்கள் தங்களால் ஆனமட்டும் ஊகங்களை, விளம்பரங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்க்க முயலுகின்றன.
இலவசங்கள் இழிவு
இதிலே நம் இந்தியரின் நிலை என்ன? தேர்தலுக்குப் பிறகு நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வருமா? அல்லது ‘பழைய குருடி கதவைத் திறடி’ என எந்த மாற்றமும் இல்லாது அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்க வேண்டுமா? 60, 70 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் சக்தி பெற்ற இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர வழிகள் பிறக்குமா? அல்லது தற்காலிக இலவசங்களால் வயிற்றை நிரப்பும் அரும்பணி தொடருமா? இங்கு உணவுக்கு வழியில்லாமல் பஞ்சத்திலா நம்மவர்கள் பரிதவிக்கிறார்கள்? இலவசச் சாப்பாடு, பரிசுக்கூடை, அங்பாவ், அரிசி, பால்மாவு, மீகூன் பொட்டலம் போன்றவற்றைத் தந்தால் போதும். இந்தியர்கள் வயிறு நிறைந்து மனமும் நெகிழ்ந்து தங்கள் பொன்னான வாக்குகளை அளிப்பார்கள் என நினைப்பதும் ஒரு வகையில் இனத்தை இழிவுசெய்தல்தானே? இதை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யார் செய்தாலும் இழிவுதானே?
கடந்த 12 தேர்தல்களில் ஆளும் அரசுக்குப் பிளவுபடாத ஆதரவைத் தந்த இந்திய சமூகம் தனக்கான தேவைகளைப் பெறத் தவறிய சமூகமாக இன்றும் பின் தங்கியுள்ளது. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பார்கள். எதையும் துணிந்து கேட்காத சமூகத் தலைவர்கள் அல்லது கேட்பதற்குத் தயங்கிய தலைவர்கள், கேட்டாலும் கிடைக்காது என்று கேட்காமல் விட்ட தலைவர்கள், கேட்டாலும் தராமல் மழுப்பிய துன் மகாதீர் போன்ற பிரதமர்கள் என நம் கடந்த கால வரலாறு அசிங்கமானது. இதனால் கடந்த 56 ஆண்டுகளில் நாம் இழந்தவை அதிகம். இனியாவது விழித்துக்கொண்டு நம் கோரிக்கைகளை ஆணித்தரமாக முன் வைப்போமா? யார் ஆட்சியைப் பிடித்தாலும் நம் தேவைகளை நிறைவேற்றும் ஒரு சூழலை உருவாக்கவேண்டும்.
என்ன வேண்டும் நமக்கு?
உண்மையில் நம் சமூகத்தின் தேவைகள் எவை என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்கும் தருணம் இது. முதலில் சமூகத்துக்கு உரிய மரியாதை, மதிப்பு தரப்படவேண்டும் என ஒவ்வோர் இந்தியனும் எதிர்பார்க்கிறான். எந்தச் சூழலிலும் இனமும் மொழியும் சமயமும் இழிவுபடுத்தப்படுவதைப் பொறுக்க முடியாது. சமூகத்துக்கு வேண்டும் பூ என்ன பூ? என்று கேட்டால் மாணவர்கள்கூட ‘மதிப்பு’ என்று தெளிவாகச் சொல்கிறார்கள். ‘ஒரே மலேசியா’ என்ற குடையின் கீழ் சக மலேசியனை மதிக்கும் பண்பு போற்றப்படவேண்டும். யாராவது இந்தியரை இழிவுபடுத்தினால் கண்டும் காணாமல் இருப்பதும் அவர்களுக்குத் தண்டனை தரத் தயங்குவதும் ஏன்? இதற்காக ஆயிரத்தெட்டுப் போலீஸ் புகார்கள் செய்ய வேண்டுமா? அப்போதும் வாளாவிருந்துவிட்டு மன்னிப்போம் மறப்போம் என இழிவுபடுத்தியவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல் அல்லவா? தண்டனைகள் இல்லாததும் பாவ மன்னிப்புக்கு வாய்ப்பிருப்பதாலும் பலர் தொடர்ந்து இனத்தை இழிவுபடுத்தும் செயல்களில் தயங்காமல் ஈடுபடுகிறார்கள். இண்டர்லொக் நாவல் இந்தியரை இழிவுபடுத்துகிறது என்று தெளிவாகச் சொல்லியும் அதைத் தடைசெய்ய அரசு காட்டிய ஆமை வேகம் மறக்கமுடியாதது.
தமிழ்ப்பள்ளிகள் தவிக்கலாமா?
1957இல் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. கடந்த 56 ஆண்டுகளில் தோட்டங்கள் அழிக்கப்பட்டதால் அந்த எண்ணிக்கை இப்பொழுது 523. தமிழ்ப்பள்ளிகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கணிசமான நிதி ஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளுக்கும் கோயில்களுக்கும் அள்ளித் தந்தால் போதும். இந்தியர்கள் மனம் நிறைந்து பூரித்துப் போவார்கள் என்பது கட்சிகளின் கணிப்பாக இருக்கிறது. சில தமிழ்ப்பள்ளிகளைக் கரையானும் தீ விபத்தும் தின்று தீர்த்த செய்தி ஏடுகளில் வந்தால்தான் உடனே புயல் வேகத்தில் கட்டடத்திற்கு நிதி உதவி கிடைக்கிறது. உண்மையில் நம் கோரிக்கை என்ன? 523 தமிழ்ப்பள்ளிகளையும் அரசின் முழு உதவி பெறும் பள்ளியாக மாற்றிவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளின் சிக்கல்கள் தீர்ந்துவிடும். இதுதானே சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கை? பிரதமர், “துணைப்பிரதமரிடம் பேசி முடிவெடுக்கிறேன்” என்கிறார். ஹிண்ட்ரா*ப் கோரிக்கையாக முன் வைக்கிறது. ம.இ.கா.வும் நீண்ட காலம் போராடுகிறது. அரசு மனம் வைத்தால் இதனைத் தீர்க்க முடியாதா?
நமக்கு வேலை இல்லையா?
பொதுச்சேவைத் துறை என்பது எல்லா மலேசியர்களையும் அரவணைக்கும் ஒன்றாகத் திகழ வேண்டும். ஆனால், எதார்த்தம் எப்படி இருக்கிறது? இந்தியர்களுக்குத் தகுதி இருந்தும் பல அமைச்சுகளில், நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இல்லை. உயர் பதவிகளில் மருந்துக்குக்கூட பல துறைகளில் நம்மவர்கள் இல்லை. ஏன் தலைமை இயக்குநர், துணை இயக்குநர் பதவிகள் என்பது ஓர் இனத்துக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டதா? நாட்டின் மூன்றாவது முக்கிய இனமான இந்தியருக்குத் தரக்கூடாதா? 14 இலட்சம் பொதுச் சேவை ஊழியர்களில் இந்தியர்கள் தொடர்ந்து மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளனர். ஏன் இந்த மோசமான நிலை? எடுத்துக்காட்டுக்குக் கல்வி அமைச்சு ஒன்று போதும். அமைச்சின் எல்லா நிலையிலும் முக்கியப் பதவிகளை மலாய்க்காரர்கள் மட்டும் அலங்கரிக்கிறார்கள். மாநில, மாவட்ட இலாகாவிலும் அதே மோசமான நிலை. பத்துப் பதினைந்து தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள ஒரு மாவட்ட கல்வி இலாகாவில் ஓர் இந்திய அதிகாரி நியமிக்கப்படுவதில்லை. நாடு முழுமையும் இதுதான் நிலை. பிறகு, எப்படி இந்தியருக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும்? ஒதுக்கப்படும் இனம் எவ்வளவு காலத்துக்குப் பொறுத்துக்கொண்டு வாக்குறுதிகளை நம்பிக்கொண்டிருக்கும்?கல்வித் துறையில் நமக்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் துணைக்கல்வி அமைச்சர் பதவி இந்தியர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதைக் கேட்டுப் பெறும் துணிவு நமக்கு வேண்டும்.
இலக்கியத்துக்கு மரியாதை?
1971இல் நடைபெற்ற தேசிய பண்பாட்டு மாநாட்டில் தேசிய பண்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டது. அதனையொட்டி உருவாக்கப்பட்டதுதான் தேசிய இலக்கியக் கொள்கை. மலாய் மொழியில் எழுதும் படைப்புகள் தேசிய இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற மொழிகளில் எழுதப்பட்டாலும் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டால் அவையும் தேசிய இலக்கியத் தகுதியைப் பெறும். ஒற்றுமை எனும் ஒன்றை மையப்படுத்தி இப்படிப் பல கொள்கைகளை, திட்டங்களைச் செயல்படுத்தியது.
ஆனால், எதார்த்தம் வேறு மாதிரியாக அல்லவா உள்ளது. இங்கே, சீனர், இந்தியர் என மற்ற இரண்டு முக்கிய இனங்கள் தத்தம் தனித்த சமயம், மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றோடு இயங்குகிறார்கள். தொடக்கப்பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை தங்கள் தாய்மொழியைக் கற்கவும் இலக்கியம் படைக்கவும் உரிமை பெற்றுள்ளார்கள். அவர்களின் தாய்மொழிப் பள்ளிகளைச் சுற்றியே அரசியலும் பின்னப்பட்டுள்ளது. தாய்மொழிக் கல்வியைப்பெறும் உரிமை அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, தேசிய இனங்களான சீனர், இந்தியர்களின் இலக்கியங்களும் அல்லவா தேசிய இலக்கியத்தில் இணைக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தத்தம் பல இன மக்களின் இலக்கியங்களை அங்கீகரிக்கும்போது மலேசியா ஏன் அங்கீகரிக்கக்கூடாது? 10 தமிழ் நூல்களை வெளியிட அரசு பண உதவி செய்தால் (இதுவும் ஒரு வகை இலவசம்தான்) போதுமா? அந்த நூல் வெளியீட்டுக்குப் பிரதமர் வருகை தருவதைத் தமிழ் இலக்கியத்துக்கு மாபெரும் அங்கீகாரம் எனத் தமிழ் நாளேட்டில் செய்தி வருகிறது. ஒரே மலேசியா என்ற குடையின் கீழ் இந்தியரின் இலக்கியத்துக்கும் உரிய மரியாதை, அங்கீகாரம், விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
உயர்கல்விக்கு வாய்ப்பு?
படித்துத் தேர்ச்சி பெற்றும் உயர்கல்வி வாய்ப்புக்குத் தவிக்கும் இனமாக இந்திய இனம் அல்லாடுகின்றது. 11ஏக்கள் பெற்ற மாணவனுக்கு மெட்ரிக்குலேசஷனில் வாய்ப்பு இல்லை என்று அண்மையில் நாளிதழில் செய்தி வந்தது. உயர்கல்விக்கூடங்களில் பத்து விழுக்காடு வாய்ப்பு போய் இப்பொழுது நான்கு, ஐந்து விழுக்காட்டுக்குத் தவியாய்த் தவிக்கும் நிலை நம் மாணவர்களுக்கு. 10 ஏக்கள் பெற்ற மற்ற இன மாணவர்களுக்கு எங்கெங்கோ வாய்ப்புகள் வலிய வந்து வீட்டுக் கதவைத் தட்டும்பொழுது நம் மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்காமல் அலைகின்றனர். பின் தங்கிய ஓர் இனத்துக்கு இன்னும் கருணையோடு குறைந்த தேர்ச்சிக்கும் அல்லவா அரசு பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினைத் தரவேண்டும். தோட்டப்பாட்டாளிகளின் பிள்ளைகளை, குறைந்த வருமானம் பெறும் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வாய்ப்பு வழங்குவது பரிவுமிக்க அரசின் கடமையல்லவா? அதுபோலவே உபகாரச் சம்பளமும் இந்தியருக்கு எட்டாக் கனவாக ஆகிக்கொண்டிருக்கிறது.
மொழிக்காக ஒரு மையம்
மலேசிய இந்தியர்களில் தெலுங்கர், மலையாளிகள் என்று தனித் தனியே நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அவர்களைத் திருப்திபடுத்துவதில் பிரதமர் முனைப்பாகச் செயல்படுகிறார். ஆனால், இந்தியர்களில் 90 விழுக்காட்டும் அதிகமான தமிழர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மலாய் மொழி வளர்ச்சிக்குச் செயல்படும் டேவான் பகாசா டான் புஸ்தாக போன்று தமிழ்மொழிக்கு ஒரு மொழி மையத்தை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது அரசின் கடமையாகும். பல ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பாளிகளின், தமிழ் இயக்கங்களின், எழுத்தாளர் அமைப்புகளின் கோரிக்கையாக இது திகழ்கிறது. முறையாக நம்மைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் அரசின் பார்வைக்கு இதனைக் கொண்டு போனதே கிடையாது என அறுதியிட்டுக் கூறலாம்.
கடனுதவித் திட்டம்
இந்தியர்கள் தொழில் தொடங்கவும் வியாபாரத்தில் ஈடுபடவும் வழங்கப்படும் ‘தெக்கூன்’ போன்ற கடனுதவித் திட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும். மனுசெய்வோரை ஏகப்பட்ட பாரங்களைப் பூர்த்தி செய்யுமாறு அலைக்கழிக்காமல் கடனுதவிகள் விரைவாக வழங்க வழியேற்படுத்தவேண்டும். கல்வியைப் பாதியிலேயே நிறுத்தும் மாணவர்கள் வன்முறையை வாழ்க்கை முறையாக மாற்றும் நிலையிலிருந்து காப்பாற்றித் தொழிற்பயிற்சிக்கு அனுப்பும் திட்டமும் வேண்டும்.
நம்பிக்கை போதுமா?
நம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கை மாறும். ஒளிமயமான எதிர்காலம் தோன்றும் என எல்லாக் கட்சிகளும் உறுதிமொழியை அள்ளி வழங்கினால் போதாது. தேர்தலில் வென்றுவந்த பிறகு உடனே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக ஆட்சி அமைத்த கட்சிகளுக்கு அல்வா கொடுக்க நேரிடும். மோசமாக ஆட்சி செய்யும் அரசுக்கு ஆப்பு வைக்கும் மாபெரும் சக்தி ஜனநாயக முறையில் மக்களுக்கு உண்டு என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும். யாருக்கு வாக்கு என்பது அவரவர் உரிமை. ஆனால், இனமான உணர்வோடு தீரச் சிந்தித்துச் செயல்படுவது முக்கியம்.
சிறப்பான அலசல்..