மக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)

pplஓர் உணவகத்துக்கு வெளியே இப்படி ஓர் அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது, “நீங்கள் இங்கு கட்டணமின்றி உண்ணலாம்.  நீங்கள் சாப்பிட்டதற்கான பணம் உங்கள் பேரக் குழந்தைகளிடமிருந்து பிறகு பெற்றுக் கொள்ளப்படும்”. இதனைக் கண்ட ஒருவர் உணவகத்துக்குள் நுழைந்து வயிறு புடைக்க உண்டார். நடக்க முடியாமல் நடந்து வெளியே போக எத்தனித்தார். “ஐயா பணம் செலுத்திவிட்டுப் போங்கள்” என்றார் கல்லாவில் இருந்தவர். வந்ததே கோபம் இவருக்கு, “என்னய்யா, காசு கொடுக்க வேணாம்னு எழுதிப் போட்டிருக்கீங்க, இப்போ காசு கேக்கறீங்க”. கல்லாவில் உள்ளவர், “ஐயா, இது நீங்கள் சாப்பிட்டதற்கன்று, உங்கள் தாத்தா சாப்பிட்டதற்கு, நீங்கள் சாப்பிட்டதற்கான பணத்தை உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்” என்றாரே பார்க்கலாம்.

ஆம், தற்போது வழங்கப்பட்டுவரும் பல்வேறு ‘பிரபல’ ரொக்க அன்பளிப்புகள்  தொடருமேயானால், இதேபோல,  தலைமுறைக்கிடையிலான  கடன் பெறும் நடவடிக்கை ஊக்குவிக்கப்பட்டு; தற்காலத் தலைமுறையினர் பெற்றுவரும் பலன்களால் ஏறபடக்கூடிய பெருமளவிலான நிதிக் கடப்பாடுகள்  எதிர்காலத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.

தான்ஸ்ரீ முகிடின் யாசினின் அண்மைய அறிக்கை, எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது. ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M மூலம் வழங்கப்படும்  500 ரிங்கிட்டை இரட்டிப்பாக்க  புத்ராஜெயா முடிவெடுத்திருப்பதாக துணைப்பிரதமர் அறிவித்திருப்பதாக  ஊடகங்கள்   தெரிவிக்கின்றன.  தேசிய முன்னணி வெற்றி பெற்று, வரி விதிப்பும் தேசிய வருமானமும் 125 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்டிருந்தால்,  கூட்டரசு அரசாங்கம் இதனை நிரந்தரத் திட்டமாக கொண்டுவரக்கூடுமென அவர் தெரிவித்திருத்தார்.

ஏறக்குறைய ஐந்து மில்லியன் குடும்பங்களுக்கு முதலாவது  ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M மூலம் கடந்தாண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்ட 2.16 பில்லியன் ரிங்கிட், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் செல்வாக்கை 69 விழுக்காட்டுக்கு உயர்த்தியது, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஆதரவினால்.

இரண்டாவது ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M 2.0 திருமணமாகாத இளையோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் 17 வரை, ஏறக்குறைய 720,000 குடும்பங்களையும் 1.6 மில்லியன் திருமணமாகாத இளையோரையும் உட்படுத்திய 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம்,  மாதமொன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள் ஒரு முறை வழங்கப்படும் 500 ரிங்கிட்டுக்குத் தகுதி பெறும் வேளையில், மாதம் 2,000 ரிங்கிட்டுக்கு மேற்போகாத வருமானமீட்டும் 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத தனிநபர்கள் 250 ரிங்கிட்டைப் பெற தகுதியுள்ளவர்களாகின்றனர்.  இந்த BR1M 2.0 திட்டம் 4.3 மில்லியன் குடும்பங்களுக்கும் 2.7 மில்லியன் திருமணமாகாத இளையோருக்கும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையோர் தொடர்பு திட்டத்துக்காக கூடுதலாக 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், 3,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவாக வருமானம் ஈட்டும் 21 முதல் 31 வயதுக்கு உட்பட்ட இளையோர், 3G விவேகக் கைப்பேசிகளை வாங்கும்போது 200 ரிங்கிட் கழிவைப் பெறலாம்.

கடந்த பொதுத் தேர்தலில் சில மாநிலங்களைக் கைப்பற்றிய எதிர்கட்சிகள் இதேபோன்ற சில உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தின. மூத்த குடிமக்களைப் போற்றும் திட்டம், தனித்து வாழும் தாய்மார் மற்றும் உடற்குறையுடையோருக்கான திட்டம், தங்க மாணாக்கர் திட்டம் போன்றவை அவற்றுள் சில.

மக்கள் கவர்ச்சிக் கொள்கை நமக்கு அச்சத்தை  ஏற்படுத்துவதாகவே உள்ளது.  தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென இலவசமாக அல்லது ஒரு முறை என்ற அளவில் வழங்கப்படும் உதவிகள் நாளடைவில் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறக்கூடிய நிரந்தர திட்டங்களாக உருப்பெறக்கூடும்.  மக்களின் மனத்தையும் சிந்தனையையும் கவர்வதற்காக ஏற்பட்டுள்ள போட்டா போட்டியில் அவர்களின் சட்டைப்பையை பணத்தால் நிரப்பும் நடவடிக்கை பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பேதுமில்லை.

மக்களின்  அளவிடமுடியாத  தேவைகளையும் அவாக்களையும்  நிறைவேற்ற மேலும் மேலும் வாக்குறுதிகளை வழங்குவது மக்களாட்சியில் வழக்கமாகிவிட்டது. அதிகரித்துக்கொண்டே செல்லும் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசியல்வாதிகள் வேறு வழியின்றி ‘பணத்தை அச்சிட’ அல்லது அதிகளவில் கடன் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனைக்காணும்போது, அரசியல் அதிகாரம் என்பது ஆள்பவர் எண்ணிக்கை மற்றும் எத்தகு  ஆட்சி என்பதைப் பொறுத்து பிரிக்கப்படுவதாக அரிஸ்டோட்டல் கூறுயிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.

இங்கேதான் அதிர்ச்சி காத்திருக்கிறது. பெரும்பான்மையினரின் பொது நலனுக்காக ஆட்சி செலுத்தும்போது, அந்த ஆட்சி நல்லாட்சி  எனப்படுகிறது.  அதேவேளை, அந்தப் பெரும்பான்மையினர்    பொது நலனை விடுத்து தங்கள் சுயநலத்துக்காக ஆட்சி செய்யும்போது,  அது மக்களாட்சி எனப்படுகிறது.

நீதித்துறை, நாடாளுமன்றம், பொதுச் சேவைத்துறை, ஊடகம் மற்றும் குடும்பம் போன்ற நமது பெரும் கழகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்வதற்கான காரணத்தை இது ஓரளவு விளக்கக்கூடும்.    மக்களாட்சி முறையில் பேராற்றலாக விளங்கும் மக்கள் கவர்ச்சிக் கொள்கைக்கு எதிராக இவை ‘சரிபார்த்து நிகர் செய்யும்’ முறையை ஏற்படுத்தித் தந்துள்ளன. மக்களாட்சியில் தவிர்க்கவியலா அழுத்தத்துக்கு உள்ளாகும் கண்ணியம், நியாயம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, சட்டத்துக்குட்பட்ட சுதந்திரம்  போன்ற விழுமியங்களை அந்தக் கழகங்கள் பாதுகாக்கின்றன.

உண்மையில், விடாப்பிடியான எண்ணங்கள் அரசியலில் ஆபத்தானவை. மக்களாட்சி என்பது விடுதலையுரிமை, விட்டுக்கொடுத்தல், நியாயம் ஆகியவற்றுக்கு நிகரானது என எண்ணுவது தவறாகும்.  மேற்குறிப்பிடப்பட்ட விழுமியங்கள், அனைத்துலக வாக்குரிமைக்கு வெகு காலத்துக்கு முன்னதாகவே   பொதுச் சேவையில் பதிக்கப்பட்டு  நாம் தற்போது மக்களாட்சி என எண்ணிக்கொள்ளக்கூடிய தோற்றத்தை அளிக்கின்றன.

1930-களில் ஜெர்மனி ஹிட்லரின் அதிகாரத்துக்கு வந்த பின்னர், சகிப்புத்தன்மைக்கும் விடுதலையுரிமைக்கும் பகையாக மக்களாட்சி கொள்ளப்பட்டது.  இந்த பாசிச (இன வல்லாண்மை கோட்பாடு) உதாரணம் மீமிகையாகத் தோன்றலாம் ஆனால் அது தனித்தன்மையானது. ஏறத்தாழ எல்லாவகையான மக்களாட்சி முறையிலும், அரசியல்வாதிகள் சிறந்த நோக்கங்களால் உந்தப்படுகிறார்களோ இல்லையோ, பெரும்பான்மை என்ற போர்வையில் சிறுபான்மையினரின்  உரிமைகளை    முடக்கி, தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தி அதிகாரம் செலுத்துகிறார்கள். இதற்கு அவர்கள் மேலும் மேலும் அதிகார வெறிபிடித்து அலைகிறார்கள்.

அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி, நீதித்துறையைப் படியவைத்து, ஊடகங்களை சூழ்ச்சித்  திறத்துடன் கையாண்டு , மக்களின் விடுதலையுரிமையை முடக்கி, தங்களுக்கு தேவையானவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பர் எனபது இதன் பொருளாகும்.

“இன்னலும் பாவமும் நிறைந்த இவ்வுலகில் பல்வேறு உருவிலான அரசாங்கங்கள் இருந்துள்ளன ;இருக்கப்போகின்றன. மக்களாட்சி குறையற்றது என ஒருவரும் பாசாங்கு செய்யப்போவதில்லை. காலங்கலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த எல்லா வகையான அரசாங்களிலும் மக்களட்சிதான் மிக மோசமானது” என மேனாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மிகச் சரியாக கூறியிருக்கிறார்.

மக்களாட்சியில், மக்கள் தங்களுக்கு வேண்டிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதே மக்களாட்சியின்  தனித்தன்மை சிறந்த அழகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *