வரலாற்றிலிருந்து வாக்கு மூலங்கள்

மணிமொழி கட்டுரை படம் 02நினைவுகளைப் பதிவு செய்வது ஒரு கலை. இக்கலை வடிவத்தை ‘நினைவுக்குறிப்பு’ (memoir) என்கிறோம். இது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இலக்கியத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புனைவு இலக்கியம். மற்றொன்று புனைவில்லா (அல்புனைவு) இலக்கியம். சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என கற்பனை கலந்த அனைத்தும் புனைவுகள் வகையைச் சார்ந்தது. சுயசரிதை, நாள்குறிப்பு, நினைவுக்குறிப்பு என்பவை  புனைவில்லா இலக்கிய பிரிவில் பட்டியலிடப்படுகின்றன.  இதற்கு சான்றாக, இலக்கிய முகவர் (literacy agent) என்றழைக்கப்படும் பார்பரா டோயன் (2006),  ‘Memoirs is a literary nonfiction genre’ என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். எழுதும் பாணி கதை வடிவில் அமைந்திருந்தாலும் நினைவுக்குறிப்பை ஒரு புனைவு இலக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிடுகிறார்.

சுயக்குறிப்பு (autobiography), நாள்குறிப்பு (diaries) மற்றும் நினைவுக்குறிப்பு (memoir)  இவை மூன்றின் வித்தியாசங்கள் யாவை என நாம் கேட்கலாம். இவை ஒன்றோடு ஒன்று நுட்பமாக மாறுப்பட்டவை. அதாவது சுயக்குறிப்பு, ஒருவர் தன்னுடைய சுய வரலாற்றைப் பதிவு செய்யும் செயல்பாடாகும். ஒரு நீண்ட கால வாழ்க்கை  வரிசையாகத் தொகுக்கப்படும்போது சுயக்குறிப்பு உருவாகிறது. இது பெரும்பாலும் உலகத் தலைவர்கள், போராளிகள், நடிகர்கள் போன்ற பிரபலங்களின் வாழ்க்கையை அறிய செய்யும் வடிவமாக உருவெடுக்கின்றது. பிரபலங்கள் பிறந்தது முதல் இன்று வரையிலான அவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள்  கால வாரியாக இந்தச் சுயக்குறிப்பில் அடங்கி இருக்கும்.

நாள்குறிப்பு (Diary) ஒரு தனி நபரின் கையெழுத்துப் பிரதியின் நேரடி பதிப்பு ஆகும். வரலாற்று ஆய்வாளர்கள் நாட்குறிப்பை வரலாற்றின் முதல் ஆதாரமாக (primary source)  எடுத்துக் கொள்கின்றனர். எவ்வாறு நாள்குறிப்பு, சுயசரிதை மற்றும் நினைவுக்குறிப்பைவிட வித்தியாசப்படுகிறது என்பதை அறிவது முக்கியம். நாள்குறிப்பில் சம்பவங்களை எழுதுபவர்களுக்கு ஒரு மையக்கருவோ அல்லது கருப்பொருளோ கிடையாது. நாள்குறிப்பு அவ்வப்போது நடக்கும் சுவாரசியமான, மறக்க விரும்பாத, மனதை வருடும் சிறு சிறு சம்பவங்களை எழுதி வைப்பதாகும். மிக பிரபலமான நாள்குறிப்பாக Anne Frankகின், ‘The Diary Of A Young Girl’ திகழ்கிறது. அவர் இரண்டாம் உலகப்போரின்போது தானும் தன் நான்கு நண்பர்களையும் ஜெர்மனின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மறைந்து பதுங்கி வாழ்ந்த வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். யூத குடும்பத்தைச் சார்ந்திருந்ததால் அவர்கள் தங்களை மறைத்து வாழ வேண்டிய காட்டயத்திற்கு உட்பட்டனர். 12 ஜூன் 1942 முதல் 1 ஆகஸ்ட் 1944 வரையிலான  கால குறிப்புகள்  மட்டுமே அவரின் குறிப்பில் அடங்கியுள்ளன. ‘ஒரு இளம் பெண் டைரி’ என்ற தலைப்பில் அவரது தந்தை, ஆட்டோ ஃபிராங்க் நூலை வெளியீடு செய்தார். அந்நூல் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு உலக அங்கீகாரம் பெற்றது.

மேலே கூறிய சுயசரிதைக்கும் நாள்குறிப்பிற்கும் மாறுபட்டவை நினைவுக்குறிப்பு. நினைவுக்குறிப்பு உணர்ச்சியின் வெளிபாடாகத் தென்படுகின்றது. இது அனுபவசாலியின் நேரடி அனுபவங்களைப் பதிப்பிக்கும் ஒரு படிமம். தனது வாழ்நாளில் நிகழ்ந்த மிக முக்கியமான ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவாக எழுதி வைக்கும்  செயல்பாடாக நினைவுக்குறிப்பு செயல்படுகின்றது.  இதனை Elaine showalter (2014) என்பவர் ‘Memoirs Are Shelfies’ எனவும் குறிப்பிடுகிறார். ஒருவர் தன்னை தானே படிமம் எடுத்துக் கொள்வதும் ஒரு நினைவுக்குறிப்பின் தன்மை என்கிறார். இது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை மட்டும் எழுதுவதாகும். அந்த ஒரு நிகழ்வு, ஒரு மையக்கருவையே நோக்கிச் எழுத்தில் பயணம் செய்யும். உதாரணமாக பராக் ஓபாமாவின் Dreams from My Father நூலைச் சொல்லலாம். அவர் தன்னுடைய சிறுவயது முதல் இளமை காலம் வரை, தன்னுடைய நடத்தை,குடி மற்றும் போதை பொருள் பழக்க வழக்கங்கள் என தன் வாழ்வில்  நடந்த ஒவ்வொன்றையும் மிக துள்ளியமாக எழுதியுள்ளார்.

ஓர் இலக்கிய வகைமை என்ற ரீதியில் நினைவுக்குறிப்புகள் ஒருவகையில் தொன்மையானது.  அதேவேளை  புத்தம் புதியதும் கூட என பென் யகொட கூறுகிறார் (Ben Yagoda, Memoir A History,2009). ஓர் எழுத்தாளனின் எழுத்து பழைய நிகழ்வுகள் குறித்துபேசினாலும், அது அவனுக்குப் பழமையாகத் தோன்றினாலும்,  வாசகனுக்கு அது புதிய அனுபவத்தைதான்  கொடுக்கிறது. வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் வயது மற்றும் அனுபவ முரண்கள் இருந்தாலும் வாசிக்கும் படைப்பு அவனுக்குப் புதியதை மட்டுமே சொல்லி விட்டு போகின்றது. சில குறிப்புகள் வாழ்வின் எந்த மையப் பகுதியிலிருந்தும் தொடங்கலாம். இவ்வாறு பதியும் நிகழ்வானது  எழுதுபவரின் தேர்வு. அதற்கு வரையறை ஏதும் தேவை இல்லை. Vivian Gornick (2005), நல்ல எழுத்து இரண்டு குணங்களைக் கொண்டிருக்கும் என்கிறார். ஒன்று அது ஒவ்வொரு பக்கங்களிலும் வாழும் நிகழ்வுகளாக அமையும். மற்றொன்று, அது எழுத்தாளனோடு பயணம் செய்ய வற்புறுத்தும்.

இம்மூன்று இலக்கிய வடிவங்களும் அதன் தன்மைகள் அடிப்படையில் வித்தியாசங்கள் கொண்டிருந்தாலும் அந்த வடிவங்களிடையே சில ஒற்றுமைகளும் உள்ளன. அதாவது, இவை மூன்றும் நம்பகத்தன்மை கொண்டவை. உண்மைகளை மட்டுமே பேசுபவை. அதோடு எழுத்தாளரின் நேரடி எழுத்து படிவங்கள் மற்றும் அனுபவங்களைக் கூறுபவை. நினைவுக்குறிப்பில் சில கற்பனை கலவைகள் இருந்தாலும், காட்சிகளுக்கு அழகியல் சேர்க்கும் நோக்கத்தோடு நிறுத்திக்  கொள்கிறது. அதன் சாரம் உண்மையை எப்பொழுதும் தக்க வைத்துக் கொண்டே இருப்பது உறுதியாய் உள்ளது.

‘இந்தக் குறிப்பின் நம்பகத்தன்மையின் அளவு என்ன? நான் வாசித்த இந்த நூல் என்னுள் ஏற்படுத்துகின்ற தாக்கம் அல்லது பாதிப்பு, எழுத்து மொழியின் ஈர்ப்பினாலா அல்லது உண்மை சம்பவத்தினாலா? அல்லது படைப்பின் வடிவத்தின் தாக்கமா?’ இவ்வாறான சில கேள்விகள் பொதுவாகவே வாசகனுக்கு எழுவதுண்டு. வாசகன் அதன் பதிலை அறியும்வரை அக்கேள்விகள் அவனைத் துரத்திக் கொண்டே இருக்கும். அதை முடிவு செய்வதில் தாமதம்கூட ஆகலாம். உண்மை படைப்புகளுக்கு மட்டுமே இந்தக் கேள்விகள் தோன்றுவதாக Vivian Gornik (2005) கூறுகிறார்.

அசலின் தழுவலாக ஒரு தனிமனிதனின் தன் வாழ்வுக் குறித்தான நுட்பமான அனுபவங்களையும்  அந்தரங்க செயல்பாடுகளையும் உலகில் முன்னெடுக்க தயராகும் போது அவனுக்கு சில வெள்ளைத் தாட்களும் பேனாவும் மட்டுமே தேவைப்படுகின்றது. ‘என்னுள் நடந்த அந்தரங்கத்தை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்’ என அவன் வாசகனுக்கு எழுத்தின் வழி வாக்களிக்கிறான். உண்மையை மட்டும் பேசும் வடிவமாக ஏற்றுக்கொண்டு வாசிக்கும் வாசகனுக்கு நேர்மையான படைப்பைத் தர  தயாராகின்றான்.

நினைவுக்குறிப்பு எனச் சொல்லி எழுதப்படும் எல்லா படைப்புகளும், உண்மையாக எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளா என்ற கேள்வியும் இங்கு முன் வைக்கப்படுகின்றது. எல்லாமே உண்மை அல்ல. ஆனால் அது உண்மையல்ல என்பது அந்த எழுத்தாளருக்கும் அவரை சுற்றி வாழ்ந்த மனிதர்களுக்கு மட்டுமே தெரிகிறது. அதோடு அது குறித்தான சர்ச்சைகள் எழும் போது சந்தேகங்கள் வலுவடைந்து உண்மை தேடுதலுக்கு வழி செய்கின்றது. அப்படிபட்ட சூழலில் உருவானதுதான் A Moveable Feast (1964) என்ற நூல். இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1954) வென்ற Ernest Hemingway, 20ஆம் நூற்றாண்டின் மகத்தான  நாவலாசிரியராகக் கருதப்பட்டார். இவர் இராணுவத்தில் தன்னுடைய அளப்பரிய பங்கினையும் வழங்கியுள்ளார். 1920ல், Ernest Hemingway லண்டனில் வாழ்ந்தபோது பாரிசில் ரிட்ஸ் ஹோட்டல் அடித்தளத்தில் தன்னுடைய குறிப்புகள் அடங்கிய நோட்டுப்புத்தகங்களைச் சேமித்து கொண்டு வந்தார். 1956-ல் அக்குறிப்புகளை வைத்து புத்தகம் எழுதினார். 1961-ல் புத்தகமாகப் பதிப்பிக்கும் முன்பே மன அழுத்ததால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதால் அவரது நான்காவது மனைவி (Mary) அந்தப் பணியைத் தொடர்ந்தார். அவர் எழுதியப் படைப்பைப்  திருத்தம் செய்து 1964 ‘A Moveable Feast’என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார். 2009-ல் அதே புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டபோது அதிலுள்ள சில குறிப்புகளை Ernest Hemingwayயின் பேரன் (இரண்டாவது மனைவியின் வழி) மாற்றி அமைத்திருந்தார். தனது பாட்டி பௌலின் தொடர்பான விசயங்களில் அதிருப்தி அடைந்ததன் விளைவாக அந்நிலை ஏற்பட்டது. இதனால் பல விவாதங்கள் அவர்கள் மத்தியில் நடந்தன. பிறகு சில முக்கிய எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், முக்கியமான Ernest Hemingway நண்பரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இரண்டாவது மனைவி மேரி வெளியிட்ட புத்தகமே உண்மை என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும், சில நினைவுக்குறிப்புகள் தவறுதலான எண்ணங்களினாலும் எழுதப்பட்டு பிறகு மாற்றி சீரமைக்கவும் பட்டுள்ளன. அந்த வகையில் Meredith Maran என்ற எழுத்தாளரின் புத்தகத்தைச் சொல்லலாம். தனது தந்தை தன்னை இருபது வயதுவரை பாலியல் இச்சைக்கு ஆளாக்கி கொடுமைகள் செய்ததாகக் குறை கூறி எழுதி வந்தார் Meredith Maran. ஒரு காலக்கட்டதில் தான் மனநோயால் பாதிக்கப்பட்டதால்தான் இந்த எண்ணங்கள் தோன்றி இருந்திருப்பதை உணர்ந்தார்.  தந்தைமீது சுமத்திய பழிக்காக மன்னிப்புகோரும் வண்ணமாக அவர்,  My Lie: A True Story Of False Memory(2010) என்ற தலைப்பில் நூலை வெளியிட்டார். இந்த நூல் அவருக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் மருந்தாகி போனது.

தொடர்ந்து, Forbidden Love என்ற நூலை ஆஸ்திரேலியா பதிப்பகமான Random House 2004ல், மீட்டுக்கொண்டது. இந்த நூல் நோர்ம கௌரி என்ற முஸ்லிம் பெண்ணால் எழுத்தப்பட்டது.

ஜோர்டானில்  வாழும் ஓர் இளம் முஸ்லீம் பெண் வாழ்க்கை மையமாக எழுதப்பட்ட இந்நூல் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. டலியா என்ற இளம் முஸ்ஸீம் பெண்ணிற்கும் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பிரிட்டிஷ் இராணுவ வீரரான மைக்கேலுக்கும் நெருங்கிய காதல் ஏற்படுகின்றது. இவர்கள் தங்களின் காதலை பல நாள்களாக இரகசியப்படுத்தி வந்தனர். இவர்களின் காதல் உடலுறவில் முடிந்தது. விஷயம் அறிந்த டலியாவின் அண்ணன் தன் தந்தையிடம்  தங்கை கன்னியற்றவள் என கூறினான். ஆத்திரம் அடைந்த அப்பா டலியாவின் பிறந்த நாள் முடிந்து இரண்டு மாதத்திற்கு பின் டலியாவை அடித்துகொன்று விட்டதாக அந்த நூலில் எழுதப்பட்டிருந்தது.  இந்த நூலில் வெளியான கதையை அறிந்த ஜோர்டான் பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் வரலாற்று பிழைகள் இருப்பதாகவும் கூறினர். இந்தப் புத்தகத்தில் வரலாற்றுக் குழப்பங்கள் உள்ளதை அறிந்த பதிப்பகம் அதை மீட்டுக்கொண்டது. ஆகவே உண்மையான குறிப்புகளை மட்டுமே நினைவுக் குறிப்பாக ஏற்று கொள்ளப்படுகிறது. எந்தவொரு சம்பவத்திலும் ஏதாவது ஒரு வரலாற்று பிழை இருப்பின் அதனை மறுக்கவோ நிராகரிக்கவோ நிச்சயம் பதிப்பாதிரியருக்கும் மற்றும் வாசகனுக்கும்  உரிமை இருப்பதை இது உறுதி செய்கின்றது.

நினைவுக்குறிப்புகள் எழுதும் பழக்கம், நேற்று இன்று தொடங்கியது அல்ல. அப்பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிற்று. ஜூலியஸ் சீசரின் Commentarii De Bello Gallico என்ற நூலில் தான் ஒன்பது ஆண்டுகளாக காலிக் வார்ஸ் (Gallic Wars) போரில் உள்ளூர் படைகளோடு போராடியதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவரது இரண்டாவது, Commentary On The Civil War நினைவுக்குறிப்பு நூலில், 48 கி.மு – 49 கி.மு காலக்கட்டத்தில் தாம் Gnaeus Pompeius மற்றும் The Senateயை எதிர்த்து போரிட்ட அப்போர் தொடர்பாக  விவரித்து  எழுதியுள்ளார். 17ஆம், 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போரை மையம் கொண்ட அனுபவங்களையே சார்ந்திருந்தது. அதன் பிறகு, 19ஆம், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடுத்தவரின் அனுபவங்களைப் பதிவுச் செய்வதை நினைவுக்குறிப்பின் இயல்பானது. 20களின் இறுதியில்தான் எழுத்தாளன் தன் சுய வாழ்க்கை அனுபவத்தைப் பதிவு செய்யத் தொடங்கினான்.

ஆரம்பக் காலக் கட்டத்தில் அதாவது முதல் உலகப் போரின் போது இராணுவத்தினர் நினைவுக்குறிப்புகளையும் நாள்குறிப்புகளையும் தங்களின் வாழ்வை ஏதோ ஒரு வகையில்  குடும்பத்திற்கு எடுத்து சொல்ல பயன்படுத்தி வந்தனர். அதோடு, எழுதுவது, வரைவது போன்ற நடவடிக்கைகள் போர் முகாமில் தங்கி இருக்கும் அவர்களுக்குப் பொழுது போக்கானது. அதே சமயத்தில் மிக தீவிரமாக போர் களத்தில் நடக்கும் அனுபவங்களைப் பதிவும் செய்தனர். தன்னுடைய நெருங்கிய நண்பரின் மரணம், தான் காப்பற்ற நினைத்த மக்களின் மரணங்கள், தான் முதல் முதலில் கேட்ட வெடிச் சத்தம், பயன்படுத்திய ஆயுதங்கள், கொன்று குவித்த எதிரிகளின் எண்ணிக்கைகள், தன்னுடைய காதல் மற்றும் குடும்ப ஏக்கங்கள் என இவை அனைத்தும் அப்பதிவில் அடங்கியது. போர் குறித்த அனுபவங்களைத் தாங்கி எழுதப்பட்ட நூல்தான் Bit: A Lancashire Fusilier at War, 1914-1918. இதனை எழுதியவர் George Ashurst. George Ashurst முதல் முதலாக வைப்பரஸ் (Ypres,) கலிப்பொலி (Gallipoli) மற்றும் சோம் (Somme) போன்ற போர்களில் பங்கு எடுத்தார். அங்கு பல மாதங்களாக ஆபத்தான நிலையில் ஆள்கள் இல்லாத நிலத்தில்  ரோந்து செய்த அனுபவங்களை அந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார். பதுங்கு குழிகளில் வாழ்ந்த அவரது வாழ்க்கை உண்மை வரலாற்றில் பதிவுசெய்ய வேண்டியதொன்று. தன்னுடைய மேல் அதிகாரிகளைக் கண்டால் நடுங்கும் ஜோர்ச், போரில் மட்டும் தனது படையை, எதிரிகள் தாக்கும்போது  தாம் பின் வாங்கியது இல்லை என்பதை இந்த நூலில் வெளிப்படுத்துகிறார்.

கதை வடிவமாக இருந்தாலும் நினைவுக்குறிப்பு அதற்கென்று ஒரு நோக்கம் அல்லது கவன போக்கு கொண்டிருக்கிறது. எண்ணங்களின் உருவாக்கங்கள் மொழியையோ அல்லது அதன் நடையையோ கவனத்தில் கொள்ளாது. எழுத்தாளருக்குச் சொல்ல ஒரு கதை உண்டு. அவர்களுக்கு வடிவம் குறித்தான சிக்கல்கள் இல்லை. அவரவருக்கேற்ற பாணியைத் தேர்வு செய்து கொண்டு எழுதுகிறார்கள். அது மற்றவர்களுக்கு எந்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் நினைவுக்குறிப்பு வாசகனை படைப்போடு இணைக்கும் வகையில் அமைதல் அவசியம். அந்தப் படைப்பின் கடப்பாடாக அமையும் ஒவ்வொரு பக்கங்களும் எழுத்தாளரை பிரதிபலிகின்றது.

இன்னும் எத்தனையோ நினைவுக்குறிப்புகள் பூர்த்தியாகாமல் பாதியிலே விடுப்பட்டுள்ளன.  பதிப்பிக்கப்படாமலும் இருக்கின்றன. அவை பல ஆவணங்களை, முக்கியமாக போர் கால தகவல்களைப் பூர்த்திச் செய்யும் கருவியாகப் பயன்படுகின்றது. நினைவுக்குறிப்பு எழுதுவதென்பது மீண்டுமொரு முறை அவ்வாழ்க்கையை வாழ அனுமதி தருவதாகும். ஆழமான அனுபவத்தைப் பகிரக்கூடிய படிவமாகவும் என் வாழ்வில் என்ன நடந்தது என்ற கேள்வியின் தொடர்ச்சியின் நகர்ச்சியாகவும் நினைவுக்குறிப்பு வடிவம் பெறுகிறது.


மேற்கோள்கள்

  • Anna frank. (2011). The diari of young girl. United kingdom: Penguin.
  • Barack Obama. (2008). Dreams from My Father. A Story of Race and Inheritance. Canongate.
  • Ben Yagoda. (2009).  Memoir. A History. United kingdom: Penguin.
  • Showalter, E. (25 May, 2014). Rise Of The Shelfie. Chronicle Of Higher Education.
  • Ernest Hemingway (1996). A Moveable Feast. Simon and Schuster.
  • Couser, G. T. (2011). Memoir : An Introduction. New York : Oxford University Press.
  • Meredith Maran (2010). My Lie: A True Story of False Memory.  John Wiley & Sons.
  • Norma Khouri (2003). Forbidden Love. Doubleday
  • Vivian Gornick (2005). Fierce Attachments: A Memoir. Macmillan.

1 comment for “வரலாற்றிலிருந்து வாக்கு மூலங்கள்

  1. அ.பாண்டியன்
    September 9, 2015 at 11:15 am

    வணக்கம் . பல புதிய தகவல்களைத் தரும் கட்டுரை. தமிழ் இலக்கியத்தில் சுயவரலாறு எழுதுதல் குறித்த தகவல்களையும் அறிய ஆவல்… இக்கட்டுரையுடன் இணைத்துக் கொண்டால் சிறப்பாக அமையும். நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...