காதலுக்கு ரசாயன மாற்றங்களைக் காரணமாக சொன்னாலும், அத்தகைய ரசாயன மாற்றம் ஏற்படும் நேரம் காலமெல்லாம் நம் கைவசம் இருப்பதில்லை. ‘இருபது வயதில் காதல் வராவிட்டாலும் தப்பு; அறுபது வயதில் காதல் வந்தாலும் தப்பு’ என்று சில பேச்சாளர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த வசனங்களுக்கு கைதட்டல்களின் சத்தம்தான் இருக்குமே தவிர வாழ்வின் உண்மையை அவை நெருங்குவதே இல்லை. யார் யாரைக் காதலிக்கலாம் யாரோடு யாருக்கு காதல் வரலாம் என்ற வரையறையெல்லாம் இல்லை.
காதல் என்பதற்கு ஆளுக்கு ஆள் ஒரு புரிதலை வைத்திருக்கிறோம். ஆனாலும் இன்னொருவரின் காதல் கதைகளிலும் காதல் விமர்சனங்களிலும் ஆர்வம் கொண்டிருக்கிறோம். காதில் விழும் கதைகள் தொடங்கி காகிதத்தில் கிடைக்கும் காதல் கதைகள் வரை அவற்றின் உண்மைத் தன்மைக்கு ஏற்ப நாம் ஈர்க்கப்படுகின்றோம்.
கணவன் மனைவி என்னும் உறவு புனிதமாகப் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் திருமணத்திற்கு பின் ஒருவருக்கொருவர் எனும் கட்டமைப்பிற்குள் அடங்குகிறார்கள். திருமணம் பெண்களை அடிமையாக்குகிறது என்றார் தந்தை பெரியார். காதல் என்பதும் ஒன்றுமில்லாதது. வெறுமனே அதற்கு புனித பிம்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றும் பெரியார் சொன்னதாய் படித்த ஞாபகம் இருக்கிறது.
உடல் தேவைக்காக வேறு துணை நாடுவது; மனத்தேவைக்காக வேறு துணை தேடுவது என ஆழ்மனதின் ஆசைகளைத் தீர்ப்பவர்கள் எப்போதும் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் தேவைகள் உண்டு, மனம் உண்டு, ஆசைகள் உண்டு என்பதனை உத்தம வேடதாரிகள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், வாழ்க்கை எந்தக் கட்டத்திற்குள்ளும் அடங்காமல் தூண்டுதலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. அது வெளிப்படுத்தும் உணர்வுக்கு பஞ்ச பூதங்களும் கட்டுப்பட்டே இயங்குகின்றன. புலன்களுக்கும் உணர்வுக்குமான ஊடாட்டத்திலேயே வாழ்வின் சுவாரசியம் இருப்பதாகத் தோன்றுகிறது.
இவ்வாறான உணர்வுகள் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என நினைத்துப்பார்க்க வைத்தது, ‘பட்டு’ எனும் மொழிபெயர்ப்பு நாவல். அச்லெசாண்ட்ரோ பாரிக்கோ Alessandro Baricco எழுதிய நாவல் இது.
‘பட்டு’ (செட்டா-seta) என்ற இந்நாவல் இத்தாலிய மொழியில் 1996-ல் வெளியானது. நாவல் வெளிவந்த மறு ஆண்டே இந்நாவல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 30 மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். 2005ஆம் ஆண்டு மேடை நாடகமாகவும், 2007ஆம் ஆண்டு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நாடக வடிவை, அமெரிக்க நாடக இயக்குனராக மேரி ஸிம்மன்மான் உருவாக்கினார். திரைப்படத்தை பிரெஞ்சு-கனடிய இயக்குனர் பிரான்ஸ்வா கியார்த் இயக்கியுள்ளார்.
பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பிரகாசமான எதிர்காலத்துக்குக் காத்திருக்கும் இளைஞன் ஹெர்வே ஜான்கர். நண்பனின் தூண்டுதலால், பட்டுப் புழு வியாபாரம் செய்யத் தொடங்குகிறான். வியாபாரத்திற்காக உலகின் மறுகோடியில் இருப்பதாகச் சொல்லப்படும் ஜப்பானுக்குச் செல்கிறான். 1860ஆம் ஆண்டுக் காலகட்டம் என்பதால் பயணம் இலகுவாக இருக்கவில்லை. ஒரு முறை அங்கு சென்று பட்டுப் புழு முட்டைகளை கொண்டு வர ஆறு மாதம் வரை ஆகிறது. ஹெர்வே ஜான்கரின் அந்தப் பயணம் மனதைச் சுவாரஸ்யப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.
ஜப்பானுக்கும் இதர நாடுகளுக்கும் கூட அரசியல் நெருக்கடியாக இருந்த சமயம் அது. அங்கே செல்வதால் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம் என்றபோதும் அதன் சுவாரசியமும் அதனால் கிடைக்கப்போகும் லாபமும் ஹெர்வே ஜான்கரைத் தடுக்கவில்லை.
அங்குதான், ஜப்பானியப் பெண் ஒருத்தியை அவன் சந்திக்கின்றான். முதல் சந்திப்பிலேயே இனம் புரியாத ஈர்ப்பு அவள் பார்வையில் இருப்பதாக உணர்கிறான் ஜான்கர். அவளும் அதற்கு ஏற்றார் போலவே பார்வையைப் பரிமாறுகிறாள். பின்னர் யாருக்கும் தெரியாமல் கடிதம் ஒன்றை ஜான்கரிடம் கொடுக்கின்றாள். ஜப்பானிய மொழியின் சித்திர எழுத்துகளில் அக்கடிதம் இருந்ததால், ஹெர்வேக்கு அதன் பொருள் புரியவில்லை. அதே நினைவுகளுடனும் அன்று நடந்த சம்பவங்களுடன் திரும்புகிறான்.
தன் நாட்டிற்கு வந்ததும் தன் நண்பனிடம் ஜப்பானிய சித்திர எழுத்துகளை வாசிக்க தெரிந்தவர்கள் குறித்து வினவ, அங்கேயிருக்கும் விபச்சார விடுதியை நடத்தும் பெண் குறித்து அறிந்து அங்கே செல்கிறான். அவள் அந்த சித்திர எழுத்துகளைப் படிக்கிறாள்.
“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்…” என்று இருக்கிறது. அப்போதிருந்து ஹெர்வேயின் வேட்கை அதிகமாகிறது. யார் அவள்? எதற்கு இப்படி எழுதியிருக்கிறாள்? ஏன் தன்னிடம் இப்படியொரு கடிதத்தை அவள் எழுதிக்கொடுத்திருக்கிறாள்? தான் பட்டுப் புழு முட்டைகளை வாங்கும் சர்வாதிகாரியின் மனைவியாக இவள் இருப்பாளோ.. என எண்ணுகிறான். அந்த சர்வாதிகாரியிடமிருந்து தன்னால் அவளைக் காப்பாற்ற முடியும் எனவும் தன்னால் அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க முடியும் என நம்புகிற அளவுக்கு தன்னிடம் ஒன்றுமில்லையே என்று ஜான்கர் தனக்குள் எழும் கேள்விகளால் குழப்பத்தில் ஆழ்கிறான்.
மீண்டும் பயணிக்கிறான். முன்பு போல பயணம் அத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கவில்லை. அப்போது உள்நாட்டு போருக்கான ஆரம்ப வேலைகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தன. ஆதலால் வெளியில் இருந்து யார் நாட்டிற்குள் நுழைந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவேண்டியிருந்தது.
பட்டுப்புழு மூட்டைகளைப் பெற அதைவிட எளிய வழிகள் இருப்பதை வியாபாரிகள் உணர்கிறார்கள். அப்போதும் ஹெர்வே ஜான்கர் ஜப்பானுக்குச் செல்வதை விரும்புகிறான். அவனது மனைவிக்கு சந்தேகம் எழுகிறது. ஆனாலும் அவளால் அவனை மேலும் மேலும் நேசிக்கவே முடிகிறது.
“கட்டாயம் நீங்கள் திரும்ப வேண்டும்,” என்ற விருப்பத்தைக் கூறியே வழியனுப்புகிறாள்.
முன்பு சென்றிருந்த நகரம் பாதியாக சீர்குலைக்கப்பட்டு இருந்தது. இடிபாடுகளுக்கு இடையில் அரசாங்க ராணுவப் படை முகாமிட்டிருந்தது. நதி, காடு, அதனைத் தொடர்ந்து பாதை என ஒவ்வொன்றாக நாள்கணக்கில் கண்டுபிடித்து முன்பு அந்தப் பெண்ணைச் சந்தித்த கிராமத்தை அடைகிறான். முழுக்க எரிந்துபோன வீடுகள், மரங்கள் என ஒவ்வொன்றாக அவன் பார்வையில் படுகின்றன. அங்கே எதுவும் இவனின் வருகைக்காக மிஞ்சியிருக்கவில்லை. உயிருள்ள எதுவும் இருக்கவில்லை. மீண்டும் ஊருக்குத் திரும்புகிறான். அவனால் இயல்பாக இருக்க முடியாததை அனைவரும் உணர்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவற்றை செய்து, அவன் தன்னிலை மறந்துவிட்டான், புத்தி பேதலித்துவிட்டான் என்று பலரும் பலவாறாகப் பேசும்படி ஆகிறான்.
இப்போது அவனது முகவரிக்கு ஒரு கடிதம் வருகிறது. முகப்பில் மட்டுமே பழக்கமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. கடிதத்தில் ஜப்பானிய சித்திர எழுத்துகள் பக்கம் பக்கமாக இருக்கின்றன. இனம் புரியாத சிந்தனை அவனை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. படிக்காத போதும் அந்தக் கடித்தத்துடனேயே தன் நாட்களைக் கடக்கிறான். மீண்டும் விபச்சார விடுதி நடத்தும் பெண்மணியைத் தேடி போகிறான். அவளும் அவனை அடையாளம் கண்டு வரவேற்கிறாள். அவள் அணிந்திருந்த நீல மலர்கள் அவளுக்கு மேலும் அழகைக் கூட்டின. நீல மலர்களுக்கு ஏற்றார்போலவே இருந்தாள் அவள்.
அப்போது அவள் ‘இதுதான் கடைசி, இனி இந்தக் கடிதங்களை தன்னால் படிக்க இயலாது’ என்கிறாள். மேற்கொண்டு தன் நிலையை அவனுக்கு விளக்க அவள் விரும்பவில்லை. குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டவள் போல அவள் கடிதத்தை அவனுக்கு படித்துக் காட்டுகிறாள். கவிதைகளாகக் காதல் மொழிகளாக ஏக்கத்தின் அழைப்பிதழாக அந்தக் கடிதம் இருக்கிறது. அந்த இன்பமான
வாழ்க்கைதான் அவன் வாழவேண்டிய வாழ்க்கை என மனம் நம்புகிறது.
வாழ்க்கை மாறிவிட்டது. வியாபாரமும் வளர்ந்தது. அவனுக்கு வியாபார யுக்தி முதல் ஆலோசனை வரை சொல்லி வந்த நண்பன் விடைபெறுகிறான். யாருக்கும் அந்த நண்பன் எங்கே போகப் போகிறான் எனத் தெரிந்திருக்கவில்லை. ஹெர்வே ஜாங்கர் அவனை வழியனுப்ப, ஹெர்வேயின் மனைவி அவனை கட்டியணைத்து அன்பு பரிமாறிக் கண்ணீருடன் அவனை வழியனுப்புகிறாள் . தன் கணவனின் ஜப்பான் பயணத்தில் நடந்ததெல்லாம் இந்த நண்பனின்றி அவளுக்கு தெரிந்திருக்காது. சொல்வதற்கும் யாருமில்லை. இனி கணவன் மனைவிக்கு இடையில் அன்பு மிகும் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை உடன் இருந்த நண்பன் பெயர் குறிப்பிடாத இடத்திற்குச் செல்கிறான்.
இந்நிலையில் ஹெர்வே ஜான்கரின் மனைவி இறக்கிறாள். அவளுக்கு சமாதி கட்டப்படுகிறது. இரண்டு மாதங்கள் கழித்து, மனைவியில் கல்லறையில் பூக்களை வைக்கும்போது வேறு சில பூக்களையும் கவனிக்கிறான். அவை நீல நிறப் பூமாலை. அவனுக்கு புதிய உண்மைகள் தோன்றுகின்றன.
கடிதத்தை படித்த அந்த ஜப்பானியப் பெண்மணியைத் தேடிப் போகிறான். அவள் வேறு நாட்டுக்குச் சென்றது தெரிகிறது. பல நாட்களுக்கு பிறகு அவளைச் சந்திக்கின்றான். அவள் மெருகேறியிருந்தாள். இப்போது பணக்காரன் ஒருவனுக்காக மட்டுமே அவள் வாழ்ந்துகொண்டிருந்தாள் எனத் தெரிந்தது. அவளிடம் நீல நிற பூக்களோ, நீல நிறப் பூக்கள் போன்ற மோதிரமோ அப்போது இருக்கவில்லை.
ஹெர்வே கேட்கிறான்.
“நீங்கள்தானே அந்தக் கடிதத்தை எழுதினீர்கள்”
அவள் சொல்கிறாள்.
“கடிதத்தை எழுதியது நானில்லை..”
அமைதி நிலவுகிறது; மீண்டும் அவள் சொல்கிறாள்.
“கடிதத்தை எழுதியது உங்கள் மனைவி ஹெலன். அவள் என்னிடம் வருவதற்கு முன்பே அதனை எழுதியிருந்தாள். என்னை அவற்றை ஜப்பானிய சித்திர எழுத்துகளில் எழுதச் சொன்னாள்.”
மேற்கொண்டு அவளது விவரிப்பு ஹேர்வோ போல நம்மையும் உருக வைப்பவை.
“ஐயா, இந்த உலகத்தில் எதைவிடவும் அவள் ஆசைப்பட்டது நீங்கள் மனதில் உருவகப்படுத்தியிருந்த அந்தப் பெண்ணாக ஆவதற்குத்தான் என்று நம்புகிறேன். அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவள் அந்தக் கடிதத்தை வாசிப்பதை நான் கேட்டிருக்கிறேன். எனக்குப் புரியும்”
ஹெர்வே புறப்படுகிறான். மீண்டும் அவர்கள் சந்திக்கவேயில்லை. நாவலில் மீதி இருப்பது ஓர் அத்தியாயம் மட்டுமே. கணவன் காதலிக்கும் பெண்ணாக மாற எத்தனிக்கும் ஒரு மனைவியின் வலி இந்த நாவலை முடிக்கும்போது விரவியிருக்கும். நாவலைப் படித்தாலின்றி, அவர்களின் அன்பை புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொள்ளாத அன்பு அந்தக் கடைசி அத்தியாயத்தையும் தாண்டி வாசகர்களின் மனதின் நுழைந்துவிடுகிறது.
துணைநூல் பட்டியல்
- அச்லெசாண்ட்ரோ பாரிக்கோ. (2012). செட்டா: பட்டு (சுகுமாரன், மொழிபெயர்ப்பு). மிலனொ: ரிசோலி. (அசல் பதிப்பு 1996)