இந்திய சமூகத்தில் விதவைகள் எந்த நிலைமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும், அந்த அவலம் வேத சாஸ்திரத்தைக் கொண்டு சமூகத்தின் மத்தியில் எவ்வாறு ஆழமான நம்பிக்கையாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது ‘வாட்டர்’ திரைப்படம். சர்ச்சைக்குரிய படைப்பாளி என்று கூறப்படும் இந்தோ-கன்னடியரான இயக்குனர் தீபா மேத்தாவின் இயற்கை கூறுகள் வரிசை கொண்ட (element trilogy) மூன்றாவது படமாக ‘வாட்டர்’ திரைப்படம் இந்து மதவாதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திரையேறியது.
2000 ஆம் ஆண்டு, வாரணாசியில் படப்பிடிப்பை ஆரம்பித்த தீபா மேத்தாவுக்கு எதிராக இந்து தீவிரவாதிகள் கலவரத்தை ஏற்படுத்தி, அவருடைய படப்பிடிப்புக் கருவிகளை உடைத்து, நொறுக்கி ஆற்றில் வீசி எறிந்தனர். இப்படப்பிடிப்புக்கு எதிராகக் கூலி கொடுத்து ஒருவனை தயார்படுத்தி தீக்குளிக்க வைத்து, அவன் இறந்தால் இங்கே கலவரம் மீண்டும் வெடிக்கும் என்ற எச்சரிக்கையின் பிரதிபலிப்பாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சர்ச்சைகள் அடங்கியப்பின் நான்கு வருடங்கள் கழித்து சிறீலங்காவில் ‘வார்ட்டர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தியாவை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் மலிவான சினிமா கதைகளைப் புறம்தள்ளி, மனித வாழ்க்கையில் சூழ்ந்து கொண்டிருக்கும் சிக்கல்களை மூடி மறைக்காமல், ரசிகனிடம் கொண்டு செல்லும் முயற்சியை எடுத்துள்ளார் தீபா மேத்தா.
இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ள விதவைகளின் வாழ்க்கைமுறையை நேரில்கண்டு, வியந்துபோன தீபா மேத்தா, விதவைகளை மையமாக வைத்து மக்களுக்குக் கதை சொல்ல விழைந்த முயற்சியில் இப்படம் உருவானது. ‘இந்து சாஸ்திரங்கள் பெண்களை எப்படி பார்க்கிறது? அவர்களை சாஸ்திரம் என்ற பெயரில் எப்படி நடத்துகிறார்கள்? சாஸ்திரத்தின் பேரில் சட்டதிட்டங்களை வகுத்தவர்கள் அதே சட்டத்தினால் பெண்களை காக்கிறார்களா? அல்லது பெண்களைப் பயன்படுத்துவதற்காகச் சாஸ்திரங்களின் சட்டங்கள் இயற்றப் பட்டனவா?’ போன்ற கேள்விகளுக்கு விடைகளை ‘வாட்டர்’ கதா பாத்திரங்கள் வழி உணர்த்தியிருக்கிறார் தீபா மேதா.
வாட்டர் படத்தின் மிக முக்கிய கதாபாதிரங்களாக விளங்கும்,சூயா (சரளா காரியவசம்), சகுந்தலா (சீமா பிஸ்வாஸ்), கல்யாணி (லீசா ரேய்), ஆகியோரின் கதாபத்திரங்கள், காலங்காலமாக மனிதனுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் சாஸ்திரச் சடங்குகளின் உள்நோக்கத்தையும் அதனை கடைபிடிக்கும் நடைமுறையில் இருக்கும் முரண்களையும் நமது தீர்ப்புக்கு விட்டுச் செல்கிறது.
சூயா விதவையாகிறாள்
1938-ஆம் ஆண்டில், இந்தியாவை பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்டு கொண்டிருந்த காலக் கட்டத்தைப் பின்னணியாக வைத்து, கணவன் இறந்த பிறகு, பொருளாதார அடிப்படையிலும், அமங்கலம் என்று சமூகப் பார்வையில் ஒதுக்கப்படும் காரணத்தினாலும், விதவையான பெண்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசிரமத்தில் அவர்களின் வாழ்நாளை நான்கு சுவருக்குள் அடைத்துக்கொண்டு, மரணத்துக்காக காத்திருக்கும் ஜடமாக வாழக் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். இந்த சாஸ்திர கொடுமை சிறுமிகளையும் விட்டுவைப்பதில்லை என்பதனை சூயா எனும் கதாப்பாத்திரம் மூலம் காட்டுகிறார் இயக்குனர்.
தனக்கு திருமணம் எப்போது நடந்தது என்று அறியாத 7 வயது சிறுமி சூயாவின் 55 வயது கணவன் இறக்கிறான். உறங்கிக் கொண்டிருந்த சூயாவை எழுப்பி அவளது தந்தை மெதுவாகப் பேச்சை இப்படி தொடங்குகிறான்.
“மகளே உன் திருமணம் உனக்கு நினைவிருக்கிறதா?”
“உன் கணவன் இறந்து விட்டான். இப்போது நீ விதவை”, என்று கூறிக்கொண்டிருக்கும் தந்தையின் முகத்தை அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் தூக்க வெறியில் கேட்டுக் கொண்டிருக்கிறாள் சூயா. சூயாவின் எதிர்கால நம்பிக்கைக் கனவை அவளுடைய குடும்பம் சாஸ்திரத்தில் அடகு வைக்கிறது. இறக்கும் தருணத்தில் இருக்கும் கணவனை மாட்டு வண்டியில் ஏற்றி அக்கறைக்கு சென்று கொண்டிருக்கும் காட்சியின் போது, பால் வடிந்த முகத்தோடு, கரும்பை கடித்துக் கொண்டு உடன் பயணிக்கும் சூயா , வண்டியில் நீண்டு கிடத்தப் பட்டிருக்கும் ‘கணவனின்’ பாதங்களைக் கரும்பால் வருடி விளையாடும் காட்சியில் சூயாவின் குழந்தைப் பருவம் சாஸ்திர அடக்கு முறையினால் சூறையாடப்படுவதை எடுத்துரைப்பதாக உள்ளது.
பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்து, ஓடி ஆடிக் கொண்டிருந்த சூயாவிடமிருந்து வண்ண ஆடைகள் அந்நியமாக்கப்படுகின்றன.
தலை மொட்டை அடிக்கப்பட்டு, வெள்ளை ஆடை உடுத்தப்பட்டு, தன் வயதுக்கு ஈடற்ற விதைவைகள் வாழும் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப் படுகிறாள். தாய் வீட்டுக்குப் போகணும் என்று அடம் பிடிக்கும் சூயா,மூன்று நாட்கள் கழித்து அம்மா வந்து அழைத்து செல்வாள் என்று ஆசிரமத்தின் தலைவி மதுமதியால் (மனோராமா) கூறப்பட்ட பொய்யால் அமைதிபடுத்தப்படுகிறாள்.
விதவைகள் தங்களின் கெட்ட கர்மாவை போக்குவதற்கு ஆசாபாசங்களைத் துறந்து வாழவேண்டும் என்று விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை அமுல்படுத்தும் 14 விதவைகள் வாழும் பழமையான ஆசிரமத்தைச் சூழ்ந்திருந்த வெறுமை சூயாவின் வருகையால் அவிழ்க்கப்படுகிறது.
‘கணவன் இறந்து விட்ட மனைவி பாதி இறந்தவளாக இருக்கிறாள். பாதி இறந்தவளுக்கு வலி தெரியாது’ என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்குப் போகணும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த சூயாவிடம் விதவைப் பெண்ணின் அந்த விதி குறித்து பேசப்படுகிறது. ஆனால் சூயா ‘ மீதி உயிரோடு இருப்பதனால் அந்த வலியை உணரமுடியும்’ என்று பதில் கூறுகிறாள். ஆத்திரம் அடைந்த மதுமதி ‘கெட்டிக்காரத் தனத்தைக் காட்டதே’ என்று எச்சரிக்கும் போது ” நான் மற்றவர்களைப்போல் முட்டாள் விதவையாக இருக்க விரும்பவில்லை” என்ற சூயா இருண்டு கிடக்கும் விதவைகளின் வாழ்க்கைக்கு ஒரு விடிவெள்ளியாக உதிக்கிறாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் அவர்களின் வாழ்வுக்குள் நுழைகிறாள்.
சூயாவும் விதவைகளும்
“7 வயதில் திருமணம் நடந்து கொண்டிருக்கும் வைபவத்தில், இனிப்புப் பண்டங்கள் நிறைந்து கிடந்தன. ரசகுலா, குலாப் ஜான், பட்டரில் நனைக்கப்பட்ட லட்டு இன்னும் பல எச்சில் ஊறச் செய்தன” என்று ஒவ்வொரு முறையும் தூங்கி எழுந்திருக்கும் 80 வயது பாட்டி பதிராஜி நினைத்து நினைத்து அசைபோடுகிறாள். விதவைகள் இனிப்புப் பண்டங்களையோ அல்லது எண்ணையில் பொறிக்கப்பட்ட பண்டங்களையோ உண்ணக் கூடாது என்ற தடை நடைமுறையில் உண்டு. ஆலய வளாகத்தில் விதவைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வரிசையில் சூயாவும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். தாயுடன் வந்த மகள் ஒருத்தி சூயாவுக்கு இட்ட பிச்சை அவளுக்குள் கலகத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியது. அவ்விடத்தை விட்டு உடனே அகன்ற சூயா பலகாரக் கடைக்குச் செல்கிறாள். லட்டை வாங்குகிறாள். ஆசிரமத்தில் இனிப்பு பண்ட ஏக்கங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பதிராஜியை எழுப்பி லட்டை கொடுத்து ஒரு ஓரமாக ஒளிந்து கொண்டு பார்க்கிறாள். 7 வயதில் கல்யாண மேடையில் ஊட்டப்பட்ட லட்டை 80 வயதில் காணும் பதிராஜியின் முகத்தில் ஆனந்தமும் கண்களில் கண்ணீரும் பெருகுகிறது. பொக்கைவாய் வழியாக ஒரே மூச்சில் லட்டை உண்கிறாள்.
நாக்கில் பட்ட அந்த இனிப்பை உண்டுவாறு சூயாவை கடவுளாகக் காண்கிறாள். பதிராஜி மறுநாள் மீண்டும் லட்டு ஏக்கத்தோடு உயிரை விடுகிறாள்.
மதத் தேவைகளைவிட மனிதத் தேவைகளை அறிந்திருப்பது கடவுள் செயலாக இக்காட்சியின்வழி இயக்குனர் வடிவமைத்துக் காட்டுகிறார். இவ்வளவு காலம் உயிரை பிடித்துக் கொண்டு வாழ்ந்த பதிராஜிக்கு விடுதலை கொடுக்கிறாள் சூயா.
சாஸ்திரம் பேசும் பொய்
சுயநலக்காரர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யவே மதத்தின் பேரில் சாஸ்திரங்கள் திரிக்கப்பட்டுள்ளன என்பதனை ஆசிரமத் தலைவி மதுமதியின் செயல்பாடுகள் வாயிலாக படம் நெடுகச் சொல்லபடுகிறது. இங்கே சுட்டிக்காட்டப்படுவது மதத்தின் மீதான கோபமல்ல. அரசியல் மற்றும் பொருளாதார லாபத்துக்காக மதத்தின் பேரில் நடத்தப்படும் நுண் அரசியல் என சாடுகிறார் இயக்குனர் தீபா மேத்தா. வேதங்களை தண்டிக்கும் பொருளாகக் காட்டி, அறியாமையிடம் மேலாதிக்கம் செலுத்தி வயிறு வளர்க்கும் கும்பலை பிரதிநிதிக்கிறாள் மதுமதி.
“விதவைகள் வாழும்போதும் இறக்கும்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். யாரும் விதவைகளைத் திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள்” என கல்யாணி என்ற விதவையிடம் கூறுகிறாள் மது. “பிறகு ஏன் என்னை ஆற்றைக் கடந்து அக்கரைக்கு அனுப்புகிறீர்கள்” என்று கல்யாணி எதிர் கேள்வியை மதுவிடம் கேட்கிறாள். “அது உயிர் வாழ்வதற்காக. யாரும் இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஏன் கடவுளே இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது” என்று கூறி இதுவரை நீளமான கூந்தலை வளர்க்க அனுமதிக்கப்பட்ட கல்யாணியின் முடி மதுமதியால் வெட்டப்படுகிறது.
மேல் மட்ட பிராமணர்களுக்கு உடல் சுகம் கொடுக்க விதவைகளை அனுப்பி வைத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் மதுமதி போன்ற ஆசிரமத் தலைவிகளின் இரட்டை வேடங்கள் இந்தப் படத்தில் பகிரங்கமாக விமர்சிக்கப்படுகிறது. ‘எதன் மேலும் ஆசை வைக்காதே’ என்று கட்டளையிடும் ஆசிரம கங்காணியாகச் செயல்படும் வயதான மதுவுக்கு கஞ்சா இழுக்கும் பழக்கமும் இருக்கின்றது. குலாபி என்ற அரவாணியுடன் நட்பு வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு விதவைகளை குலாபி மூலம் பேசிவிடுகிறாள். இளமையான, தேவதைபோல் இருக்கும் கல்யாணி மதுமதியின் வணிகப்பொருள்.
“சிறு வயதில் நான் இங்கு வந்தேன். நான் சிறுமியாக இருக்கும்போது வயதான என் புருஷன் கலவியின் மூலம் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் என்னை இந்த நரகத்தில் தள்ளி விட்டான்” என்று குலாபியிடம் மது புலம்பாலாக சொல்லும் காட்சியின் மூலம், மதுமதி இதை செய்வதற்கு உளவியல் ரீதியான பழிவாங்குதலும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. தான் அனுபவித்து வந்த துன்பத்தை பிறரின் மேல் புகுத்தி இன்பம் காண்பதும் உளவியல் கோளாறுதான்.
“உங்களை நான் நரகத்தில் எரிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றி விட்டேன். விதவைகள் கற்பனை செய்தால் குருடாகி விடுவார்கள்” என்று ஆசிரமத்தில் இருக்கும் விதவைகளிடம் தம்முடைய நடவடிக்கைகளை ஒவ்வொரு முறையும் ஞாயப்படுத்தி பேசுகிறாள் மது. இதற்கு அவள் பயன்படுத்தும் ஆயுதம் சாஸ்திரம். கல்யாணியைக் கொடுமைப் படுத்தும் மதுமதியின் மேல் கோபத்தைக் காட்டுவதற்காக, மது உயிரையே வைத்திருக்கும் ‘மித்து’ எனும் கிளியைச் சாகடிக்கிறாள் சூயா. சாஸ்திர கெடுபிடிகள் பிறர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்போது சில வேளைகளில் அதற்கான எதிர்வினைகள் வன்மமாகிவிடுகின்றன. லட்டு கொடுத்த கைகளை கொலை செய்ய வைத்தது யார்? என்ற கேள்வி இக்காட்சியில் ஆழமாகப் பதிகிறது.
புண்ணிய கங்கை
கல்யாணிக்கும் மேல்மட்ட பிராமணன் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணனுக்கும் (ஜான் அப்ரஹாம்) வழிபோக்கில் ஏற்பட்ட திடீர் சந்திப்பில் ஈர்ப்பு ஏற்படுகிறது.
கல்யாணியிடம் காலு என்ற பெயருடைய நாய் செல்லப்பிராணியாக வளர்கிறது. சாஸ்திர வழக்கு படி நாய் என்பது கெட்ட சகுனம் என்றபடியால் அப்பிராணியை கல்யாணி ஆசிரமத்தின் தலைவியிடமிருந்து மறைத்து வைத்து வளர்க்கிறாள். ஒரு நாள் கல்யாணி கங்கை ஆற்றில் காலுவை குளிப்பாட்டுகிறாள். உன்னுடைய பாவ கர்மா கழிந்து விட்டது என்று கூறி குளிப்பாட்டிய காலுவை உடன் வந்த சூயாவிடம் கொடுக்கிறாள் கல்யாணி. சூயாவின் கைகளிலிருந்து திமிறிக் கொண்டு ஓடிய காலுவை துரத்திக் கொண்டு ஓடுகிறாள் சூயா.
நாயை விரட்டி வந்த சூயாவுக்கு உதவும் வகையில் வழியில் வந்து கொண்டிருந்த நாராயணன் நாயை பிடித்து சூயாவிடம் கொடுக்கிறான்.
ஓடி வந்த சூயாவுக்கு ஆசிரமத்துக்குத் திரும்பிப் போக வழி தெரியவில்லை. வழியைக் காட்டும் நாராயணனுக்கு கல்யாணியை அறிமுகம் செய்து வைக்கிறாள் சூயா. தன்னை சேற்றிலோர் செந்தாமரையாக, தனித்தன்மை வாய்ந்த மாசற்றவளாக உருவகப் படுத்திக் கொண்டிருந்த கல்யாணியின் மேல் முதல் பார்வையிலேயே காதல் வசப்படுகிறான் நாராயணன். தன்னை மதிக்கும் நாராயணனின் காதலுக்குச் சரி சொல்கிறாள் கல்யாணி. குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைக்க அழைத்துச் செல்லும் வழியில், நாராயணனின் தந்தையே இதுவரை தன்னை உடல் இச்சைக்கு சுகித்தவன் என்பதை கல்யாணி அறிகிறாள்.
இதுவரை தன்னை அனுபவித்தவனே தனக்கு மாமனார் ஆகப்போகிறான் என்றறிந்தவுடன் ‘படகை திருப்புங்கள், காரணத்தை உங்கள் தந்தையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி மீண்டும் ஆசிரமத்துக்கே திரும்பிச் சென்ற கல்யாணியை, மதுமதி மீண்டும் விபச்சாரத்துக்குத் தயாராகச் சொல்கிறாள். அன்றிரவு கல்யாணி கங்கையில் மூழ்கி தற்கொலை செய்து கொள்கிறாள்.
‘வாட்டர்’ என்ற தலைப்பில் செல்லப்படும் கதை கங்கை ஆற்றங்கரையை சூழ்ந்திருக்கும் வாழ்கையைக் காட்டுகிறது. பாவங்களைப் போக்கும் நதியாகவும், மோட்சம் கொடுக்கும் நதியாகவும் கங்கை இந்துக்களால் போற்றப்படுகிறது. கங்கையைத் தாண்டி அக்கரைக்குப் பயணம் செய்த கல்யாணியும், கல்யாணி தற்கொலை செய்த பிறகு அவள் இடத்தை நிரப்புவதற்காக மதுமதியின் சூழ்ச்சியால் அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி துவாரகநாத் சேட் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் சூயாவும் மனிதனின் சுயநலங்களுக்குத் தீனியாகப் போடப்பட்டவர்கள். சாஸ்திரம் பேசும் வேடதாரிகள். கங்கையை புனிதம் என்று போற்றும் சந்தர்ப்பவாதிகள் கங்கை நதியின் உதவியில் இச்சைகளைத் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
மேல் தட்டு பிராமணன் குடும்பத்தில் பிறந்த நாராயணன் ஒரு காந்தியவாதி. பகவத் கீதையைவிட காந்தியவாதத்தைப் போற்றும் கொள்கைவாதி. சட்டக் கல்வியை முடித்துவிட்டு வாரணாசியில் இருக்கும் பிறந்த ஊருக்கு திரும்பும் நாராயணன், வெள்ளையர்களின் மோகத்தில் வாழும் நண்பனையும் காந்திய வழிக்கு அழைக்கிறான்.
“பிராமணர்கள் விதவைகளை வேறுவிதமாக நோக்குகிறார்கள் அந்தப் படகில் வந்து கொண்டிருப்பது ஒரு விதவை. ஒரு சமயம் அவள் என் அப்பாவுக்காக அழைத்து வந்துகொண்டிருக்கலாம்”, என்று நாராயணனின் சுக போக நண்பன் கூறுகிறான். படகில் வந்து கொண்டிருப்பது கல்யாணி என்பதை அறியாமலே நண்பனின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நாராயணன், “உன் தந்தையும் காந்தியும் கைகோர்த்தால் விதவைகளை விடுதலை செய்யலாம்”, எனக் கூறுகிறான்.
“வெள்ளையனின் விஸ்கியிலும் கவிதையிலும் நான் திருப்தி அடைகிறேன்”, என்று நாராயணனின் நண்பன் கூறும் வார்த்தைகள், சாஸ்திரப் போர்வையில் மூடிமறைக்கப்பட்டிருக்கும் மேல் மட்ட பிராமணன்களின் வாழ்க்கை முறையை அம்பலத்துக்குக் கொண்டு வருகிறார் தீபா மேத்தா.
நாராயணன் கவித்துவம் கொண்டவனாகவும், எதனையும் பகுத்தறிந்து செயல்படுபவனாகவும், மூட நம்பிக்கைகளை அறிவுநிலையில் நின்று கேள்வி எழுப்புபவனாக, பெண் உரிமையை போற்றுபவனாக தன்னை தனது பாத்திரங்களால் அவ்வப்போது அடையாளம் படுத்திக் கொள்கிறான்.
நாராயணனுக்கும் கல்யாணிக்கும் ஏற்படும் சந்திப்பில் மொழியப்படும் வார்த்தைகளில் நம்பிக்கையைப் பற்றி நாராயணன் கல்யாணியிடம் எழுப்பும் கேள்விகள் அவள் நம்பிக் கொண்டிருக்கும் வழக்கு முறைகளை வழக்காட வைக்கிறது.
“பழைய பாரம்பரியங்கள் மடிந்து கொண்டு வருகிறது”, என்று நாராயணன் சொல்கிறான். “ஆனால் நல்லது என்னப்படுவது மடியக் கூடாது”, என்று நாராயணின் பேச்சுக்கு பதில் கொடுக்கிறாள் கல்யாணி. எது நல்லது? எது கேட்டது என்பதை யார் நிர்ணயிப்பது? என்று மறு கேள்வியை முன்வைக்கும் நாரயணனிடம், “நீங்கள்தான்” என்று கல்யாணி கூறும் பதிலில் “ஆண்கள்தான்” எனும் ஆணாதிக்க மறைமொழி உரைக்கப்படுவதை உணர முடிகிறது. ஒழுக்க அடிப்படையிலான வழக்குகளும், சாஸ்திரங்களும் பெண்களுக்கு மட்டுமே என்ற கோட்பாட்டில் ஆண்களால் உருவாக்கபடுகிறது என்பதனை கல்யாணி மூலம் விளம்பியிருக்கிறார் இயக்குனர்.
இங்கே இயக்குனர் காளிதாசன் கவிதைகளின் மூலம் காதலைச் சொல்லும் அதேவேளையில் கடவுளுக்கும் இயற்கைக்கும் வேறுபாடு கிடையாது என்பதனை வலியுறுத்துகிறார்.
“மேகதூது என்னும் காளிதாசன் கவிதையில் வரும் காதலர்களின் பிரிவின் துன்பத்தை மேகத்திடம் கூறுவது போன்ற வரிகளைக் கொண்ட காட்சியை நாராயணன் கல்யாணியிடம் விவரிக்கும் பொழுது, “மேகத்துக்கு விளங்கி இருக்குமா என்று கல்யாணி கேட்கிறாள்.
சிலைவடிவில் இருக்கும் உருவத்திடம் சொல்லப்படுவதை ‘கடவுள் கேட்கிறார்’ என்று நம்பும்போது மேகத்துக்கும் விளங்கும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்று நாராயணன் முன் வைக்கும் கேள்விகள் மூலம் நம்பிக்கையின் உருவங்களை உரித்துக் காட்டுகிறார் தீபா மேத்தா.
விதவையைத் திருமணம் செய்துக் கொள்வது பாவம் என்று நாராயணனின் தாய் அவனிடம் சொல்லும் பொழுது, காந்தியவாதியான நாராயணன் தாயின் சொல்லுக்குச் செவி சாய்க்க மறுக்கிறான். காந்தியின் தத்துவங்களை எடுத்துரைத்து தாயை சாமாதானப் படுத்திய பிறகு கல்யாணியை ஆசிரமத்திலிருந்து அழைத்துச் செல்ல விழைகிறான் நாராயணன்.
காந்தியின் கொள்கைகள் தாயின் கண்ணீரையும் வெல்லும் என்பதனை இங்கிலாந்தில் படித்த, இளையத் தலைமுறையை பிரதிநிதிக்கும் நாராயணனின் விதவைத் திருமணம் குறித்த பார்வையின் ஊடாகப் பார்க்க முடிகிறது.
“பிராமணர்கள் அவர்களுக்கு வேண்டும் என்கிறவர்களோடு உறவு கொள்ளலாம். அவர்களோடு உறவு கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்”, என்று நாராயணின் தந்தை தன் மகனிடம் பேசும் பேச்சுக்கள் ஆணாதிக்கத்தைக் காட்டுபவையாக உள்ளன. “கணவனை இழந்த பெண்கள் இறந்த கணவனை நினைத்துக் கொண்டு இறுதிவரை காலத்தை தூய்மையாக கழிக்க வேண்டும் என்று கூறும் சாஸ்திரம் பிராமணனுக்கு இன்னொரு சட்டத்தை எழுதி வைத்திருக்கிறதா? தங்களின் சுய லாபங்களுக்காக வேதங்களை தமக்கு வேண்டியபடி பொருள்படுத்தும் பிராமணர்களுக்கு நீ மரியாதை கொடுக்காதே”, என்று ராமன் தன்னுடைய சகோதரனுக்கு கூறியுள்ளான் என்பதை நாராயணன் தந்தையிடம் எடுத்து கூறும் காட்சி, பாரதி சாஸ்திரங்களை எதிர்த்துச் செயல்பட்டதற்கான அர்த்தங்களை மிக சூட்சமமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
ருது வருவதற்கு முன் நிச்சயம் செய்வது, நிச்சயம் செய்யும் பெண்ணை அடைத்து வைப்பது போன்ற மூட கொள்கைகளை எதிர்த்துப் போரிட்ட பாரதியார், “உங்களின் சாஸ்திரங்களை எப்படி உடைப்பது என்று எனக்குத் தெரியும்” என்று சவால் விட்டார். விதைவைகளாக ஆசிரமத்தில் வாழ்ந்தவர்களுக்கு கல்வி அறிவு கிடையாது. நாராயணன் எழுதிய கடிதத்தை படிக்கத் தெரியாமல் இருந்தாள் கல்யாணி. 108 வரை எண்ணி கிருஷ்ணா மந்திரத்தைச் சொல் என்று சூயாவிடம் கூறியபோது, எனக்கு 10 வரைதான் எண்ணத் தெரியும் என்றாள் சூயா.
ஆசிரமத்தில் வாழும் சகுந்தலா சாஸ்திர நம்பிக்கையைக் கடுமையாகக் கடைபிடிக்கும் ஒரு விதவை. சூயாவை தனது கண்காணிப்பில் வைத்துக் கொண்டு ஆசிரம வாழ்க்கையை ஓட்டுபவள்.முகத்தில் எந்தவொரு எதிர்வினைகளையும் காட்டாமல் சாத்திர போதகரின் ஆலோசனைகள் படி வாழ்பவள்.
கங்கையில் நீர் மொண்ட சென்றிருந்த சகுந்தலாவிடம் உன் நிழல் திருமணத் தம்பதிகள் மேல் படாமல் பார்த்துக்கொள் என்று கங்கை ஆற்றில் திருமண சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்த குருக்கள் கூறியபோது, எந்தவொரு உணர்ச்சி வெளிப்பாடுகளின்றி வந்த வேலையை முடித்துக் கொண்டு செல்லும் காட்சி, சகுந்தலா சாஸ்திர நம்பிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள மனப்பாங்கை தெளிவு படுத்துகிறது. இருப்பினும் அந்தச் சாஸ்திர சடங்கைக் கேள்வி எழுப்பும் சந்தர்ப்பத்தை அவள் தடுத்ததும் இல்லை; அவளுடைய நம்பிக்கையை பிறர் மீது திணித்ததும் இல்லை.
“மனைவிகளை இழந்த ஆண்களின் ஆசிரமம் எங்கே இருக்கிறது?” என்று சூயா சாஸ்திர வகுப்பில் கேள்வியை எழுப்புகிறாள்.
சாஸ்திர வகுப்பில் வகுப்பை நடத்துபவர் ஓர் ஆணாக இருக்கிறார். அவரைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் கணவனை இழந்தப் பெண்ணாக இருக்கிறார்கள். இந்தனைச் சுற்றும் முற்றும் பார்த்த சூயா இப்படிப்பட்ட ஒரு கேள்வியை எழுப்பும் போது கூடியிருந்த வயதான விதவைகள் சூயாவை கடிந்து பேசுகிறார்கள். “ கடவுள் ஆண்களை இப்படிப்பட்ட விதியிலிருந்து காப்பாற்றுகிறார். உன் நாக்கு அழுகட்டும். நாக்கைப் பிடிங்கி ஆற்றில் வீசு என்றெல்லாம் வையப் படுகிறாள் சூயா. இருப்பினும் சகுந்தலா ஒரு வார்த்தை கூட சூயாவை நோக்கி ஏசாமல்இருந்தாள்.
கல்யாணியின் காதலும், அவளது இறப்பும், விதவைகளின் மறுமணம் குறித்து மதவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட சட்டமும், சூயாவுக்கு நேர்ந்த பாலுறவு வன்முறையும் இதுநாள் வரை பாரம்பரியத்தை கேள்விக்கு உட்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருந்த சகுந்தலாவை அதே சாஸ்திர நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.
“புனித வேதங்களில் விதவைகள் கடுமையாக நடத்தப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதா?”, என்று வேத குருவை நோக்கி கேள்வி கேட்கிறாள் சகுந்தலா. “கணவனை இழந்தவளுக்கு 3 வழிகள் சாஸ்திரங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒன்று அவள் கணவனோடு உடன் கட்டை ஏறுவது. பெற்றோர்களின் சம்பந்தத்துடன் கணவனின் தம்பியை திருமணம் செய்துக் கொள்வது. மூன்றாவது எல்லா ஆசைகளையும் துறந்து தனித்து வாழ்வது. ஆனால் இன்று விதவைகள் மறுமணம் செய்யலாம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது”, என்று வேத குரு பதில் உரைக்கிறார்.
“சட்டம் ஏற்றப்பட்டதை யாரும் சொல்லவில்லையே!”, என்று குருவிடம் ஆச்சரியத்துடன் கேட்டபோது, “சம்பிரதாயங்களுக்கும் நம்பிக்கைக்கும் பயன்படாதவைகள் புறக்கணிக்கப்படும்”, என்று குருவின் பதிலில் தெரியும் சாஸ்திரங்களின் சுயநலத்தை உணர்கிறாள் சகுந்தலா. இருப்பினும் இந்த உணர்தல் அவளது நம்பிகையைத் தளரவிடவில்ல. பூட்டி வைக்கப்பட்ட கல்யாணியை விடுவிப்பதற்காக அவள் இந்த சட்டத்தை பாரம்பரிய நம்பிக்கைக்கு எதிராகப் பயன்படுத்துகிறாள்.
நிஜத்துக்கும் சாஸ்திர நம்பிக்கைக்கும் இடையில் மாட்டிகொண்டு தவிக்கும் சகுந்தலா மனதில் ஒரு கணம் தனைப்பற்றிய சிந்தனை அவளுக்குத் தோன்றுகிறது. “நான் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறேன்?”, என்று சூயாவிடம் ஒரு எதிர்பார்ப்புடன் அவள் கேட்டபோது, “வயதானவளாகத் தெரிகிறாய்”, என்று சூயா பதில் கூறுகிறாள். அப்போது சகுந்தலையின் முகம் வாட்டமடைகிறது. காலம் கடந்து சிந்திக்கிறேன் என்ற ஏக்கம் அவளின் முகத்தின் வாட்டத்தில் அறியமுடிகிறது. இருப்பினும் சூயாவின் பதிலின் உண்மையை ஏற்றுக் கொள்ளும் பாவனையில் தனது மனதின் வெளிபாட்டை அத்தருணமே புதைக்கிறாள். உனக்கு வயதாகி விட்டது என்று கூறிய சிறுமி சூயா, காலம் கடத்தாமல் காப்பற்றப் படவேண்டியவள் என்று இயக்குனரின் எச்சரிக்கை இங்கே வெளிப்படுகிறது. விளையாட்டுப் பருவத்தில் விதவையான சிறுமிகளின் எதிர்காலத்தைப் பிரதிநிதிக்கும் சூயாவை காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறாள் சகுந்தலா.
‘கடவுள்தான் உண்மை என்றிருந்தேன் ஆனால் இப்போது உண்மைதான் கடவுள் என்று உணர்ந்திருக்கிறேன்’ என்று காந்தியின் உரையை பாதிக்கப்பட்ட சூயாவை மடியில் வைத்துக் கொண்டு கேட்கும் சகுந்தலாவுக்கு புதிய விடியல் தெரிகிறது. விதவைகள் காதலுக்கு அந்நியமானவர்கள் அல்ல என்று காந்தியின் பிரச்சாரம் அவர்களுக்கு புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. நகரும் ரயிலை விரட்டிக் கொண்டே செல்லும் சகுந்தலா கையில் ஏந்தியிருக்கும் சூயாவை காந்தியவாதியான நாராயணனிடம் ஒப்படைக்கிறாள். அவளை காந்தியிடம் ஒப்படையுங்கள் என்று கூறிய படியே செல்லும் ரயிலை பார்த்துக் கொண்டே நிற்கிறாள்… ஒரு புதிய எதிர்காலத்தின் பயணத்தைக் காண்பதுபோலவும் நரகத்திலிருந்து சூயாவை விடுவித்த கடவுள் போலவும்.
துணைநூல் பட்டியல்
- தீபா மேத்தா. (இயக்குனர்). (2005). வாட்டர். [திரைப்படம்]. அமெரிக்கா.