சுற்றிலும் செடி கொடிகள், வானுயர வளர்ந்த மரங்கள், சலசலத்து ஓடும் தெளிந்த நீரோடை. வீடோ முற்றிலும் மூங்கில்களால் ஆனது. இயற்கைதான் இங்கே ஜீவ நாதம். கூச்சிங் நகரத்திலிருந்து ஒரு மணி நேர காரில் பயணம். சரவாக் என்றாலே நீண்ட வீடுகளின் கலாச்சாரம், இசை, நடனம், உணவு, வாழ்க்கை முறை என முற்றிலும் மாறுபட்ட சூழல். அது ‘அன்னா ரைஸ்’ என்ற ஒரு குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில் இருந்துதான் ஒரு குரல் விரல்களின் துணையுடன் உலக அளவில் மலேசியாவைப் பிரதிநிதித்து இசை பாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலுக்கும் இசைக்கும் சொந்தக்காரர் ஆர்தர் பொர்மன் (Arthur Borman).
தனக்கென ஒரு தனித் தோற்றத்தைக் கொண்டவர் ஆர்தர் பொர்மன் . நீண்ட வெண்மயிர். எளிமையான ஒடிசலான உடல்வாகு. சராசரி உயரம். தேடல் இன்னும் முடிவடையவில்லை என்பதை உணர்த்துவது போன்ற இரு விழிகள். எப்போதும் புன்னகை இழையும் முகம். எல்லாரும் மறந்துபோன தனது இன கலாச்சாரத்தை இன்னுமும் விடாமல் பிடித்துக் கொண்டு அதை உலகளவில் கொண்டுபோய் புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் கலைஞர். இவர் பிடாயு (Bidayuh) இனத்தை சேர்ந்தவர். பிடாயு இனத்தில் பிடாயு செலாகாவ் (Bidayu Salako), பிடாயு சாடோங் (Bidayuh Sadong), பிடாயு செரியான் (Bidayuh Serian), பிடாயு சிங்காய் (Bidayuh Singai), பிடாயு படவான் (Bidayuh Padawan) என பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றும் மொழிவாரியாக, இடவாரியாகப் பிரிக்கப்பட்டவை. ஒரு பிரிவினருக்கும் இன்னொரு பிரிவினருக்கும் பல வேறுபாடுகள் உண்டு. ஒரு பிரிவினர் பேசும் மொழி இன்னொரு பிரிவினருக்குப் புரியாது. ஆர்தர் ‘பிடாயு படவான்’ பிரிவினைச் சார்ந்தவர்.
அவர் பார்ப்பதற்குச் சாதாரண ஒரு விவசாயி போலத் தோற்றமளித்தாலும் அவர் இசைக்கு அவர்தான் முன்னோடி. அவரை நான் அந்தக் குக்கிராமத்தில்தான் முதல்முதலில் சந்தித்தேன். நானும் என் நண்பர்களும் தங்கியிருந்த பெரிய வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வந்திருந்தார். எப்போதும் போல இசை, நடனம் என இருந்தாலும், அவர் வாசித்த அந்த இசைக்கருவி என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. இதற்கு முன் நான் அதைப் பார்த்ததில்லை. அப்போதுதான் அவருக்கும் எனக்கும் இடையிலான உரையாடல் தொடங்கியது. மனுஷன் சாதாரண ஆள் கிடையாது. ப்ராதுஆக்ங் (Pratuokng) எனப்படும் முழுவதும் மூங்கிலால் ஆன அந்த இசைக் கருவியை எப்படி வாசிப்பது என்று தனது 50 வயது குருவிடமிருந்து கற்று, அதை மீண்டும் சொந்தமாக வடிவமைத்து, அதன் வகையறாக்களை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வாசித்து, உலக இசைக் காட்சியகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இசையில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக Wold Music Expo (WOMEX) என்னும் நிகழ்வை அறிந்திருப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள விதவிதமான நூதனமான இசை கருவிகள் இங்கே வாசிக்கப்படும்.
அவர் வாசிக்கும் இந்த ‘ப்ராதுஆக்ங்’ என்னும் இசைக் கருவி மிகவும் பழமையானது. அதன் பெயரைச் சரியாக உச்சரிக்கவே எனக்கு ஒரு மணி நேரம் ஆனது. அதாவது ‘ப்ராதுஆக்ங்’ என்பதை மூன்று பகுதிகளாக உச்சரிக்க வேண்டும். (ப்ரா/துஆ/ங்). இப்படி உச்சரிக்கும்போது ‘க்’ என்னும் எழுத்தின் ஒலி மறைந்துவிடும். அந்த வாத்தியம் முழு மூங்கிலால் ஆனது. அதன் இசை ஐந்தே ஸ்வரங்களால் ஆனது. அது சிதெர் (Zither) வகையைச் சேர்ந்தது. அதைத் தனியாகவும் வாசிக்கலாம். பிற வாத்தியங்களோடு சேர்த்தும் வாசிக்கலாம். பொதுவாக அதை கடுஆக் (Gaduak) எனப்படும் சிறிய கைத்தப்புடன் வாசிப்பார்கள். இது தப்பாட்ட செய்கையைக் கொண்டு ஒலியை உண்டாக்குகின்றது.
பிற வாத்தியங்கள்போல இதற்கு கம்பியோ, கயிரோ தேவை இல்லை. ஒரு முழு மூங்கிலை எடுத்து அதன் மேல் தோலை தனியாக எடுக்காமல் மூங்கிலோடு ஒட்டியிருக்கும் நிலையிலேயே, அதை தனித்தனி தந்திகளாகப் பிரித்தெடுப்பதே மிகவும் நுணுக்கமான வேலை. அப்படிப் பிரித்தெடுத்த மூங்கில் தந்திகள் தனக்கென தனி ஓசையை உருவாக்க சின்ன சின்ன மூங்கில் துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெவ்வேறு நீளத்தில் வைக்கப்படுகின்றன. அவற்றைச் சரிப்படுத்த கொஞ்சம் நீளமான இன்னொரு மூங்கில் துண்டு உபயோகப்படுத்தப்படுகிறது. தந்திகளை இசைக்க ஒன்று அல்லது இரண்டு சிறு குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. முழுமையாக இந்த வாத்தியக் கருவியை உருவாக்க மூன்று வாரங்கள் எடுக்கும்.
அத்தகைய நூதன வேலைப்பாடுகளுக்குச் சொந்தக்காரர் ஆர்தர் ஒருவரே. அவரை விட்டால் இப்போதைக்கு வேறு யாருக்கும் இந்த வாத்தியத்தை நுணுக்கமாகவோ லாவகமாகவோ உருவாக்க ஆள் இல்லை. பழமையான தனது கலாச்சாரத்தைப் புதுமையானதாக்கி அதன் இசையை மடே (Madeeh) என்னும் இசைக்குழுவின் மூலம் உலக அரங்கில் உயிர் பெறச் செய்தவர் அவர். ‘மடே’ என்றால் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான் என்பது போன்ற குடும்ப உறவுகளை குறிக்கும் ஒரு சொல். அதாவது ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த கலாச்சாரம் அன்பு, பாசம், உறவு என எல்லாவற்றையும் குறிக்கும் ஓர் இசையாக இந்த வாத்தியம் வாசிக்கப்படுகின்றது என ஆர்தர் கூறுகிறார்.
இந்த வாத்தியம் வாசிக்கப்பட்டபோது ஆர்தர், பிடாயு மொழியில் ஒரு நாட்டுபுறப் பாடலைப் பாடினார். மிகவும் மெதுவாக அழுத்தமான நடையில் அமைந்த தாளம். ஆரவாரமில்லாத ராகம். கொஞ்சம் தாலாட்டு பாடுவதுபோல இருந்தது. ஆனால் இதுதான் இங்கு கலாச்சாரம் என்றார் ஆர்தர். அப்படியே பாடலுக்கான அர்த்தத்தையும் சொன்னார். அதாவது வந்தவர்களை வருகவென வரவேற்பதும் அவர்களை அமைதிப்படுத்துவதும்தான் அதன் அடிப்படை சாராம்சம். இப்போது அவரின் 15 வயது மகன் அவரது கலையை ஆர்வமுடன் கற்கிறான்.
அவரின் இசை ஒவ்வொரு வருடமும் சரவாக் கலாச்சார கிராமத்தில் நடைபெறும் Rainforest World Music Festival (RWMF) என்னும் நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் உள்ள இசைக் கலைஞர்கள் வருகை தருவார்கள். மேலும் சென்ற ஆண்டு ஸ்பென்னில் நடைபெற்ற WOMEX நிகழ்ச்சிக்கு ஆர்தர் தலைமையிலான மடே இசைக்குழு சென்று வந்தது.இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் அவர் ஃப்ரான்ஸில் இருப்பதாக அவரின் உறவுப் பையன் மூலம் அறிந்தேன்.
அவருக்கு இதுதான் முழு நேர வேலை. உங்களுக்கு அலுப்புத் தட்டவில்லையா என நான் கேட்டதற்கு அவரின் பதில் இதுதான்:
“நான் இந்த வாத்தியத்தை வாசிக்கும்போது அதில் ஏற்படும் அதிர்வானது என்னுள்ளும் பிரவேசிக்கிறது. என் நாடி, நரம்புகள் நடனமாடுகின்றன. யார் என்ன சொன்னாலும் எனக்கு அது விளங்காது. என் உடலோடு ஒட்டிதான் இது இருக்கும். நான் என் மனைவியோடு இருந்ததைவிட இந்த வாத்தியத்தோடு இருந்ததுதான் அதிகம். அப்படியென்றால் இதுதான் என் முதல் மனைவி. நான் என் மனைவியை நேசித்ததைவிட என் இசையை அதிகம் நேசிக்கிறேன். என் மனைவியைவிட்டு விலகி இருப்பதுகூட எனக்கு பெரிதாகப்படவில்லை. என் இசை இல்லாவிட்டால் நான் இல்லை. இப்போதும்கூட ஏதாவது புதுமையை இதில் செய்ய முடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். என் இசை அற்புதமானது. இயற்கையின் ஊடே பயணிப்பது. அதன் தாளம், ராகம் ஒவ்வொன்றும் எனக்குச் சொல்லும் கதைகள் அற்புதமானவை. நான் இதை அணு அணுவாக அனுபவித்துச் செய்கிறேன். பிறகு எப்படி எனக்கு அலுப்பு தட்டும்?”
நான் அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். கொஞ்ச நேரம் எனக்கு வேறெதுவும் கேட்கத் தோற்றவில்லை. ஒரு நிமிட சுதாகரிப்புக்குப் பிறகு மீண்டும் எப்படி உங்களுக்கு இதில் ஆர்வம் வந்தது என கேட்க, அதற்கு அவர், “இதில் எழுந்த ஓசைதான் காரணம். என் குரு இன்னுமும் உயிரோடு இங்கே இதே குக்கிராமத்தில்தான் இருக்கிறார். இப்போது அவருக்கு 82 வயதாகிவிட்டது. ஆனால் அவர் எனக்களித்த இந்த கலைக்கு இன்னும் வயதாகவில்லை. நான் இதை வாசிக்கக் கற்றுகொண்டபோது எனக்கு வயது 10. இப்போது எனக்கு வயது 45. இசையைத் தவிர எனக்கு வேறொன்றும் காரணமாகத் தென்படவில்லை. அதன் மேல் ஏற்பட்ட காதலுக்குக் காரணமே இல்லை. நான் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் திரும்பவும் இங்கேதான் வருவேன். இது என் கிராமம். என் குருவின் இசை இருக்கும் கிராமம். என் நாட்டை நான் பிரதிநிதிப்பது இதோ இந்த அழகான இசையால்தான். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்றார்.
தொடர்ந்து நான் கேட்காமலேயே அவர், “என் மகன் இப்போது தானாகவே வாசிக்கப் பழகுகிறான். நான் யாரையும் கட்டாயப்படுத்திச் சொல்லி தருவது கிடையாது. கற்பதற்கான உந்துதல் சொந்தமாக வரவேண்டும். எனவே அந்த உந்துதல் என் மகனுக்குள்ளே இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். கூச்சிங்கில் இருக்கும் 9 வயது சிறுமிக்கு நான் இதை சொல்லித் தருகிறேன். இன்னும் ஒரு 3 வருடங்களில் இதே வாத்தியத்தை பெண்ணொருத்தி வாசிப்பதை நீங்கள் கேட்கலாம். என் மகனைவிட அற்புதமாக வாசிக்கிறாள். இதோடு நாங்கள் பள்ளி நிகழ்ச்சிகளிலும் அழைப்பின் பேரில் இலவசமாக இசைக்கிறோம். இதில் லாப நோக்கம் எதுவும் கிடையாது. உலகம் முழுவது இந்த இசை பரவ வேண்டும். அதில் நம் நாட்டுப் பெருமையும் பரவ வேண்டும்,” என்றார். ரொம்பவும் அமைதியாக அவர் ஆங்கிலத்தில் சொற்களை அழகாக பேசுவது கொஞ்சம் பரவசமாகத்தான் இருந்தது.
இறுதியாக அந்த வாத்தியத்தை வாசிக்க எங்களுக்கும் வாய்ப்பளித்தார். அதாவது 1, 2, 3, 5, 1, 2, 3, 4 எனும் இலக்க குறியீட்டில் வாசிக்கச் சொல்லி கொடுத்தார். தொடர்ந்து கவனம் சிதறாமல் தப்படித்துக் கொண்டே வாசிக்கப் பழக்கினார். கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் சுவாரசியமாகவும் இருந்தது. பின்னர் சென்றிருந்த நண்பர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதால் தமிழில் நாங்கள் ஒரு பாடல் பாட அதற்கு ராகம் போட்டுப் பார்த்தார். அதுவும் நன்றாகத்தான் இருந்தது. இது ஐந்து ஸ்வரங்களால் ஆனதால் இன்னும் அதை மேம்படுத்த மாற்று வழி தேடிக்கொண்டிப்பதாகவும் சொன்னார்.
எல்லாவற்றையும் விட தனக்கான ஓர் அடையாளத்தை கிராமத்தில் இருந்தவாறே உருவாக்கிவிட்டார் ஆர்தர். கிராமத்தை விட்டு நீங்கும்போது மனதில் அந்த இசை ஒலித்துக்கொண்டே இருந்தது.
துணைநூல் பட்டியல்
- Sarawak Malaysia Borneo: Our People – Bidayuh. (n.d.). Retrieved April 23, 2015, from http://blog.sarawaktourism.com/2012/08/our-people-bidayuh.html
- Bidayuh music played at WOMEX. (2014, October 27). Retrieved April 23, 2015, from http://www.newsarawaktribune.com/news/38211/Bidayuh-music-played-at-WOMEX/
- Official WOMEX 2014 Showcase Selection. (2000, January 1). Retrieved March 23, 2015, from https://www.womex.com/virtual/artists/
- Zaman Production. (2015, January 1). Retrieved March 23, 2015, from http://www.zamanproduction.com/en/artist/madeeh
- MADEEH BAND: Bidayuh Traditional Music. (n.d.). Retrieved March 23, 2015, from http://salomavillagestay.org/madeeh/