காலம் தந்த கருப்பினக் கவிதைகள்

“மனித இனம் தோன்றிப் பெருக ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை அடிமைப்படுத்த விழையும் போராட்டமும், அடிமைப்படுவதிலிருந்து விடுபட விழையும் போராட்டமும் ஒரு சேர நடந்துகொண்டுதான் இருக்கிறது. மனித இனம் இருக்கும்வரை இப்போராட்டமும் இருக்கும்” – எழுத்தாளர் இமையம்

பூங்குழலி கட்டுரை படம் 01ஆப்பிரிக்கக் கவிதைகள் லூசி தெர்ரி (1730-1821)–இல் இருந்து தொடங்குகிறது. ஆனாலும் பிலிஸ் வீட்லீ (1753-1784) என்பவர் எழுதிய “Poems on Various Subjects” என்ற பாலேட்தான் (ballad) கருப்பினக் கவிதைகளுக்கு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி வைக்கிறது. பிலிஸ் வீட்லீ இரு கருப்பின அடிமைகளுக்குப் பிறந்தவர். தன்னுடைய எஜமானரிடமே படிக்கக் கற்றுக்கொண்டார். அடிமைகளைப் பற்றியும் அடிமை வாழ்வின் கொடுமைகளைப் பற்றியும் அதனுடைய துயர் பற்றியும் அவரது எழுத்துகள் பேசின. அவருக்கு அடுத்ததாக முக்கிய கவனத்திற்குரிய கவிஞராக இருப்பவர் ஜூபிட்டர் ஹாமன் (1711-1806). இவருடைய எழுத்துகள் ஆப்பிரிக்க மக்களின் அறியாமையை அதிகம் பேசுபவை. அதே நேரத்தில் ஆப்பிரிக்க மண்ணின் வளத்தையும், செழுமையையும் பேசுபவை. இவருடைய எழுத்தைப் போலவே வலிமையான குரலில் அழுத்தமாகப் பேசும் கவிதைகள் என்று ஜோர்ஜ் மோசஸ் ஹார்டன் (1797-1884)-னின் கவிதைகளைச் சொல்லலாம். போல் லாரன்ஸ் டுன்பார் (1872-1906), சார்லோட் போர்தின் கிரிம்கே (1837-1914) போன்றவர்கள் கருப்பினக் கவிதைகளுக்கு அடித்தளமிட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்த ஆப்பிரிக்கக் கவிஞர்கள். இவர்கள் தங்களுடைய கவிதைகளில் ஆப்பிரிக்க கண்டத்திற்கான தனிச்சிறப்பு, பெருமை, வலிமை பற்றி பேசிய அதேநேரத்தில் சிறப்பு வாய்ந்த இனமாக இருந்த கருப்பின மக்கள் எப்படி மேற்குலக நாடுகளின் வியாபாரிகளின், பெருமுதலாளிகளின் கைகளில் சிக்கி அடிமையானார்கள், கூலியானார்கள், புதிய புதிய இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டார்கள், குடியேற்றப்பட்டார்கள், சொந்த நாட்டிலேயே அந்நிய நாட்டவரால் கூலிகளாக மாற்றப்பட்டார்கள் என்ற வரலாற்றையும் கண்ணீரோடும் வலியோடும் சொன்னார்கள்.

இவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் இரண்டாம் தலைமுறைக் கவிஞர்கள்; வி.இ.பி. டூ போயிஸ் (1868-1963), ஜேம்ஸ் வெல்டன் ஜோன்சன் (1871-1938), பிரான்செஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்ப்பர் (1825-1911), மெல்வின் பி. டோல்சன் (1898-1966), ஏஞ்சலினா வெல்ட் கிரிம்கே (1880-1958) போன்றவர்கள் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஆப்பிரிக்க கவிஞர்களில் முக்கிய இடத்தைப் பெறுபவர்கள். இவர்களுடைய கவிதைகள் முந்தைய தலைமுறையினரின் எழுத்தின் வலிமையைக் காட்டிலும் கூடுதல் வலிமையைப் பெற்றிருந்தன. அதற்குக் காரணம் காலமாற்றம். கருப்பின எழுத்துகள் பரவலாக உலகெங்கும் அறியப்பட ஆரம்பித்திருந்தன. வரவேற்கப்படவும் ஆரம்பித்திருந்தன. கருப்பர்கள் கல்வி கற்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. அரசியல் சூழலும் முக்கிய காரணியாக இருந்தது. ‘கருப்பர் – கருப்பர் இலக்கியம் – ஆப்பிரிக்க இலக்கியம்’ என்ற முழக்கங்கள் எழத் தொடங்கிய காலம் அது. அதோடு அரசியல்ரீதியான விழிப்புணர்வும், போராட்டங்களும் நடைபெற்ற காலம் அது. அதனால் சிவில் உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் கவிதைகளில் முன்வைக்கப்பட்டன. ஒருவிதத்தில் ஆப்பிரிக்க கவிதைகள் மென் உணர்ச்சி கவிதைகள், காதல் கவிதைகள் இல்லை. ஆக்ரோஷத்தை முன்னிறுத்திய அரசியல் கவிதைகள் எனலாம்.

முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த கருப்பினக் கவிஞர்களின் எழுத்துகளைக் காட்டிலும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகள் கூடுதல் கவனத்திற்குரியனவாக இருந்தன. மாயா ஏஞ்சலோ ( 1928-2014), டோனி மாரிசன் (1931) நிக்கி கியோவானி (1943), கவுண்ட்டி கலென் (1903-1946), ரீத்தா டோவ் (1952), அலைஸ் வால்கர் (1944), மைக்கேல் எஸ் ஹார்ப்பர் (1938), ஹாக்கி ஆர். மதுபுத்தி (1942) போன்றவர்களுடைய கவிதைகளில் புதிய ஆழத்தையும், அரசியல் தெளிவையும் காண முடியும். இந்தக் கவிஞர்களுடைய காலம், காலனித்துவ ஆதிக்கத்தின் செயல்பாடுகள் பலவீனமடையத் தொடங்கிய காலமும், கருப்பின மக்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடுகின்ற காலமாகவும் இருந்தது. ‘நீக்ரோவியம்’ என்ற கோசம் மேலோங்கியிருந்த நேரம்; பல்வேறு அமைப்புகள் உருவான காலம்; கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் அடையாள அரசியலுக்காகவும் போராடிய காலம்; கருப்பின அடையாளம் – கருப்பின மேம்பாடு – கருப்பின கலாச்சாரம் குறித்து விரிவாகப் பேசிய காலம்; அரசியல் முழக்கங்கள் கவிதைகளில் ஒளிவுமறைவின்றி நேரடியாக வெளிப்பட்டன. இறையியல் சார்ந்த நம்பிக்கைகளுடன் எழுதும் போக்கிலிருந்தும், சுயசரிதைகள் எழுதும் போக்கிலிருந்தும் விடுபட்டு மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் கவிதைகள் எழுதினர். இதனை கருப்பினக் கவிதைகளின் மறுமலர்ச்சிக் காலம் என்று கூற முடியும். அழுவதற்குப் பதிலாக கேள்வி கேட்டனர். கெஞ்சுவதற்குப் பதிலாக உரிமை பேசினர். பின்வாங்கிச் செல்லாமல் போராட முனைந்தனர். அமைப்புகளின் வழியாக மட்டுமல்ல கவிதைகளின் வழியாகவும் போராடினர். எழுத்தை ஓர் ஆயுதமாக்கினர். ஆப்பிரிக்கக் கவிதைகளை உலகறியச் செய்தனர். ஆப்பிரிக்க அமெரிக்க கவிதைகள் என்று ஒரு புதிய இலக்கிய வகையைத் தோற்றுவித்தனர்.

கருப்பினக் கவிதைகளுக்கு உயிர் கொடுக்க முன்வந்த அடுத்த தலைமுறையில், ஹெலன் ஜோன்சன் (1906-1995), மாரி ஈவான்ஸ் (1923), சோனியா ஸஞ்செஷ் (1934), இஷ்மேல் ரீட் (1938), டட்லி ரண்டால் (1914-2000), ஜெப்ரி டானியல் (1957), டி தேர்ரிகோட்டே (1941), கெவின் யாங் (1970), கில் ஸ்காட்ட்-ஹீரோன் (1949–2011), வோலே சொயிங்க (1934), மார்கரெட் வால்கர் (1915-1998), திரேசி கே. ஸ்மித் (1972), வண்டா கோலேமன் (1946), ஸ்டேர்லிங் அலென் பிரவுன் (1901-1989) போன்றவர்கள் கடந்தகால வரலாற்றை மட்டுமின்றி நிகழ்கால அரசியல் வரலாற்றையும், பொருளாதார வீழ்ச்சியையும் பேசினர். மொத்தத்தில் கருப்பினக் கவிதைகள் நானூறு ஆண்டுகால பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சு நாடுகளின் ஆதிக்கத்தையும், அதனால் கருப்பின மக்கள் சந்தித்த கொடூரங்களையும், ஆப்பிரிக்கக் கண்டத்திற்குரிய தனித்துவமான பண்பாடுகள் எப்படிச் சீரழிந்தன என்பதையும் பேசியது. 15-ஆம் நூற்றாண்டில் அடிமை வணிகம் என்ற பெயரில் எப்படி நீக்ரோக்கள் சந்தைகளில் விற்கப்பட்டனர்; வாங்கப்பட்டனர் என்பதையும், ஆடு, மாடுகளைப்போல எப்படிக் கருப்பின மக்கள் – தோலின் நிறத்தால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர் என்பதையும் விரிவாகப் பேசின. 17,18,19-ஆம் நூற்றாண்டுகளில் மட்டும் நூறு கோடி ஆப்பிரிக்க மக்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்; பன்றிகளை அடைத்து வைப்பது மாதிரி பண்ணைகளில் அடைத்து வைத்திருந்தனர் என்பதையும் கருப்பின மக்களின்மீது திணிக்கப்பட்ட மேல்நாட்டு மதிப்பீடுகளைப் பற்றியும் பேசினார்கள்; எழுதினார்கள். அவ்வாறு எழுதப்பட்டதுதான் கருப்பின இலக்கியம். “நீக்ரோவியம் – புதிய நீக்ரோ இயக்கம்” “கருப்பு எழுத்துகள்” போன்றவை இயக்கங்கள் மட்டுமல்ல புதிய முழக்கம். புதிய எழுச்சி; புதிய எழுத்து; புதிய பண்பாட்டு உருவாக்கம் என்பதாக மாறியது.

கருப்பினக் கவிதைகள் பேசுவது அடிமைப்பட்ட வரலாற்றை மட்டுமல்ல, அடிமை வாழ்விலிருந்து விடுபடுவதற்கான வரலாற்றையும்தான். அதே நேரத்தில் சுய அடையாளப் பெருமையையும் முன்னிறுத்தியது. கவிதை என்பது வாழும் வாழ்வைப் பேசுவது; வாழ்கிற இடத்தைப் பற்றிப் பேசுவது; ஆப்பிரிக்க மண்ணிலிருந்து; ஆப்பிரிக்க வாழ்வையும், ஆப்பிரிக்காவின் வருங்காலத்தைப் பற்றியும் பேசுவதே கருப்பினக் கவிதை என்று நிறுவிக் காட்டியது.

இன்று கருப்பினக் கவிஞர்கள் என்று நூறு பேருக்கு மேல் பட்டியலிட முடியும். கிட்டத்தட்ட முப்பதாயிரம் கவிதைகள் கருப்பினக் கவிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதையும் தீயைப் பரவ செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. கவிதை என்பது, இலக்கியம் என்பது பொழுது போக்கிற்காக எழுதப்படுவதல்ல என்பதையும், கவிதையும், இலக்கியமும் போராட்டத்திற்கான ஆயுதங்கள் என்பதையும் கருப்பினக் கவிதைகள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளன.

கருப்பினமும் கவிதையும்

பூங்குழலி கட்டுரை படம் 02கருப்பினக் கவிதைகள் துயரத்தை, வலியை, கண்ணீரை, காயத்தை, அரசியலை, வாழ்வுரிமையைப் பேசின. அந்தத் துயரம் காதல் தோல்வியால், பண இழப்பால், பொருள் இழப்பால் ஏற்பட்டதல்ல. அடிமைப்பட்டதால், அடிமை வாழ்வின் துன்பங்களால், பண்பாட்டை, கலாச்சாரத்தை இழந்ததால் ஏற்பட்ட துயரம்; கண்ணீர். டச்சு, பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனித்துவ ஆதிக்கத்தின்கீழ் கருப்பின மக்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதை உரத்த குரலில் இக்கவிதைகள் பேசுகின்றன.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மாறிமாறி டச்சு, பிரான்ஸ், பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகள் எப்படி கருப்பின மக்களின் உழைப்பைச் சுரண்டினார்கள், அவர்களுடைய பண்பாட்டை, கலாச்சாரத்தைச் சீரழித்தார்கள். மேலாதிக்கம் செய்தார்கள், தாய் ஒரு பண்ணையிலும், தந்தை ஒரு பண்ணையிலும் குழந்தை ஒரு பண்ணையிலுமாக எப்படித் தனித்தனியாக பிரித்துவைக்கப்பட்டு அடிமைச் சேவகம் செய்ய வைத்தார்கள் என்பதைப் பேசுகின்றன கருப்பினக் கவிதைகள். கிட்டத்தட்ட 500 வருட அடிமைச் சேவக வரலாறு.

கருப்பினக் கவிதைகள் தங்களுக்கென புதிய மொழியை, புதிய வடிவத்தை, புதிய சொல் முறையை உருவாக்கின. கவிதைக்கான அழகியல் என்பதைவிட, கவிதைக்கான ஒழுங்கு செய்யப்பட்ட மொழி என்பதைவிட கருத்திற்கு, அரசியலுக்கு, அரசியல் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புதிய தலைமுறையைச் சேர்ந்த நீக்ரோ கலைஞர்களான நாங்கள், எங்களது தனிப்பட்ட கருப்புத் தோல் போர்த்திய பண்புகளை எவ்வித பயமோ, வெட்கமோ இன்றி வெளிப்படுத்த முனைகின்றோம். நாங்கள் அழகானவர்கள் என்று எங்களுக்குத் தெரியும். அசிங்கமானவர்கள் என்றும் தெரியும். முரசுகள் சில நேரம் சிரிக்கின்றன. சில நேரம் அழுகின்றன. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த முறையில் எங்களுக்கான நாளைய கோவில்களைக் கட்டுகின்றோம்.” (இந்திரன், 2014, பக். 4)

என்று லாங்ஸ்டன் ஹியூஸ் கூறுவதுபோலத்தான் கருப்பினக் கவிதைகள் எழுதப்பட்டன. புதிய அழகியலை, புதிய அரசியலை, பண்பாட்டை முன்வைத்தன. காலனித்துவ ஆதிக்கம் பரப்பிய அனைத்து பொய்களுக்கும் எதிரான புதிய முன்மொழிவுகளைப் பிரகடனப்படுத்தின. கருப்பின மக்களுக்கான வாழ்வுரிமையை முன்வைத்தன.

உங்கள் கருப்புத் தோல்களை உங்கள் உடம்பை மூடும் ஓர் அங்கியைப்போல் அணிந்து கொள்ளாதீர்கள். அதை ஓர் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்.” (இந்திரன், 2014, பக். 11) என்ற கொள்கை பிரகடனமாக அறிவிக்கப்பட்டது.

சிறுசிறு விஷயங்களுக்கும், சிறுசிறு காரியங்களுக்கும், சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் கதை சொல்கிற, பாட்டுப் பாடுகிற, விடுகதை சொல்கிற மரபைக் கொண்டது கருப்பினப் பண்பாடு. ஆனால் டச்சு, பிரான்ஸ், பிரிட்டிஷ் காலனிய நாடுகள் தங்களுடைய வரண்ட, உயிரற்ற, போலியான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சிறந்தது என்று எப்படி கருப்பின மக்கள்மீது திணித்தார்கள் என்பதை உகாண்டா கவிஞர் ஓகோட் பீடெக் சொல்கிறார்.

வகுப்பறைகளில் எங்கள் இளைஞர்களின் ஆண்மை

காயடிக்கப்பட்டது.

அவர்களது விதைகள் கனமான புத்தகங்களால் நசுக்கப்பட்டன.

(இந்திரன், 2014, பக். 17)

இதைவிட அழகாக பண்பாட்டுச் சீரழிவைச் சொல்ல முடியுமா? கருப்பின மக்களின் வாழ்வை மட்டும் காலனித்துவ நாடுகள் சுரண்டவில்லை. அவர்களுடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இழிவானதென்று சொல்லி அழித்தார்கள். ஆப்பிரிக்க மக்களுக்கான கல்வியும் பண்பாடும் கலாச்சாரமும் ஆப்பிரிக்க மண்ணிலிருந்துதானே உருவாக வேண்டும். மாறாக வேறு வேறு நாடுகளில் தீர்மானிக்கப்பட்டது; கல்வியை மட்டுமல்ல வாழ்வையும் காலனியாதிக்கவாதிகள்தான் தீர்மானித்தனர்.

ஓகோட் பீடெக்கின் சொற்கள் நாகரீகமற்றவையாக இருக்கலாம். அழகியல்தன்மைகள் குறைந்தவையாக இருக்கலாம். கவிதைக்கான தகுதியை, இலக்கியத்திற்கான தகுதியை காலனித்துவ நாடுகளின் இலக்கிய கோட்பாடு வழங்காமல் இருக்கலாம். ஓகோட் பீடெக்கின் கவிதை வரிகள் மட்டுமல்ல, எல்லா கருப்பினக் கவிதைகளினதும், கவிஞர்களினதும் கேள்வி இவைதான். அழும்போது எப்படி அழகாக அழ முடியும்? வலியில் துடிக்கும்போது எப்படி அழகாகத் துடிக்க முடியும்? காயத்தைப் பற்றியும், புண்ணைப் பற்றியும் பேசும்போது எப்படி அழகான கவிதைக்குரிய சொற்களைக் கொண்டு பேச முடியும்; விவரிக்க முடியும்? புண்ணும் காயமும் எப்படி அழகாக இருக்க முடியும்? இழிவை, அவமானத்தை, துயரத்தை எப்படி நேர்த்தியாகச் சொல்ல முடியும்? அப்படி சொல்லப்படுவதுதான் இலக்கிய அழகியல் என்றால் – அதை உடைத்தெறிவதுதான் கருப்பினக் கவிதைகள் என்று உலகுக்கு எடுத்துக்காட்டின ஆப்பிரிக்க கவிதைகள்.

இதைத்தான் செனகல் நாட்டுக் கவிஞன் லியோபோல்டு சிடார் செங்கோர் ‘நட்சத்திரங்களின் நேரம்’ என்ற கவிதையில் சொல்கிறார்.

நமது கருத்த இரத்தத்தின்

பாடலை உற்றுக்கேள்

இழந்துபோன கிராமங்களின்

இடையிலுள்ள ஆப்பிரிக்காவின்

கருத்த உயிர்

துடிப்பை உற்றுக் கேள்

(இந்திரன், 2014, பக். 21)

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சந்தையில் கருப்பின அடிமைகள் விற்கப்பட்ட வரலாறு, அவ்வாறு விற்கப்படுவது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட – வணிகமயமாக்கப்பட்ட வரலாறு இன்னும் அழியாமல் இருக்கிறது. நிறத்தால் அடிமை சேவகம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட வரலாறு; உழைப்புச் சுரண்டல் மட்டுமல்ல; பாலியல் சுரண்டலுக்கும் கருப்பினப் பெண்கள் உள்ளாக்கப்பட்ட வரலாறு என பலவும் கருப்பினக் கவிதைகளின் மையம். கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளின் அடிமைச் சேவகம் – அதன் துயரம், கண்ணீர், வலி, காயம், இழப்பு என்ன என்பதை தன்னுடைய பாடல்களாலும், இசையாலும் உலகுக்கு அறிவித்தான் பாப் மார்லி – “கனவில் கிடைத்த மோதிரம்” என்ற கவிதையில் சொல்கிறான்.

அவர்கள் சொல்கிறார்கள்

நாம் அறிந்ததெல்லாம் அவர்கள்

நமக்குச் சொல்லித் தந்ததென்று

நாம் ஏமாளிகளாக இருக்கிறோம்

அவர்கள் ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு தந்திரத்தைப் பயன்படுத்தி

நம்மை ஏமாற்றுகிறார்கள்

ஏதாவது கிடைத்து சாப்பிடப்போனால்

எதிரியாகிவிடுகிறான் நம் சகோதரன்

(ரவிக்குமார், 2010, பக். 107)

Ngugi Wa Thiong'o is an award winning author and distinguished Professor of English and Comparative Literature at UC Irvine. He is speculated to receive the Nobel Prize in Literature. Ngugi was imprisoned in 1977 in Kenya for writing an anti-government text. During his time in prison, he wrote some of his manuscript in toilet paper.He has been a professor at UC Irvine since 2002 and previously taught at NYU for 10 years. ///ADDITIONAL INFO //// 10/7/13 --uc.nobelprof.xxxx -- ISAAC ARJONILLA, ORANGE COUNTY REGISTER - Ngugi Wa Thiong'o is an award-winning author and professor at UC Irvine who is speculated to receive the Nobel Prize in Literature. Originally from Kenya, Ngugi was imprisioned for publishing an anti-government piece in 1977. While imprisoned, he wrote part of his manuscript on toilet paper in his cell. Ngugi was exiled from his home and moved to the U.S. to pursue a career in teaching. He is also the recipient of the UCI Medal Award, one of the university's highest honors, similar to a lifetime achievement award. ///பசியாலும் பட்டினியாலும் கருப்பர்கள் செத்தார்கள். ஒரு பிடி சோற்றுக்காகத் தாயும் பிள்ளையும் சண்டையிட்டுக் கொண்டார்கள். இந்த பஞ்சம் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்பதுதான் பாப் மார்லியின் கேள்வி.

காலனித்துவ ஆதிக்கம் ஆப்பிரிக்க மக்களைத் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களால் மட்டுமே மண்டியிட வைத்துவிடவில்லை. அதிகமும் சூழ்ச்சியால்தான் மண்டியிட வைத்தார்கள். கருப்பர்களுக்குள்ளேயே கலகத்தை உண்டாக்கி, சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் செய்த துரோகம் என்ன என்பதை பாப் மார்லி தன் எழுத்துக்களில் வெளிப்படுத்தினார். கருப்பினத்தவர்களுக்கு என்று எந்த அறிவுச் செழுமையும், பண்பாட்டு, கலாச்சார செழுமையும் இல்லையென்று கருப்பினத்தவர்களையே நம்ப வைத்ததுதான் காலனித்துவ திட்டத்தின் வெற்றி. அதற்கான திட்டமிடல், சூழ்ச்சி எப்படி நிகழ்ந்தது; அதை ஆப்பிரிக்க மக்கள் எப்படி நம்பி மோசம் போனார்கள் என்பதைத்தான் இன்றைய ஆப்பிரிக்கக் கவிதைகள் பேசுகின்றன.

கருப்பினக் கவிதைகள் புதிய முழக்கத்தை முன்னெடுத்தன. அது தமது நிறத்தைக் கொண்டாடுவது. அதன் அழகியல் தன்மைகளை, பெருமைகளை, மண்ணைப் பற்றி பேசுவது என்ற ஒரு புதிய அலையை உருவாக்கியது. தன்னையே மதிப்புமிக்க செல்வப் பொருளாக உணர்வது; அதை உலகுக்கு அறிவிப்பது என்ற போக்கும் உருவானது. ஜ்வென்டொலின் பென்னெட் எழுதிய “ஒரு பழுப்புப் பெண்ணுக்காக” என்ற கவிதை அந்தப் பிரகடனத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.

ஓ, சிறிய பழுப்புப் பெண்ணே
துன்பத்திற்குப் பிறந்தவளே
அரசிகளின் தளிர் அழகு, கம்பீரம் எதையும் இழந்துவிடாமல்
ஒரு காலத்தில் அடிமையாக இருந்தாய் என்பதை மறந்து
உன் தடித்த இதழ்களை விரித்து
விதியின் முகத்தில் ஒரு புன்னகையை உதிர்த்துவிடு

(வளர்மதி, 2007)

ஜ்வென்டொலின் பென்னெட் “இது உன்விதி என்று தீர்மானித்த சமூகத்தைப் பார்த்துச் சிரி. நீ அசிங்கமானவள், கருப்பானவள், அடிமை என்று சொன்ன சமூகத்திற்கு எதிராகச் சிரி. உன் ஏளனச் சிரிப்பின் வழியே அவர்களை வெட்கமடையச் செய்” என்று சொல்கிறார். புன்னகையில் கருப்புப் புன்னகை, வெள்ளைப் புன்னகை என்று இருக்கிறதா? கண்ணீரில் கருப்பு, வெள்ளை இருக்கிறதா? கனவில் கருப்பு, வெள்ளை இருக்கிறதா? பழி தீர்க்க, ஏளனம் செய்யச் சொல்கிறது இக்கவிதை. இந்த கவிதை மட்டுமல்ல, எல்லாக் கருப்பினக் கவிதைகளுக்குள்ளும் அடி ஆழத்தில் மறைந்திருக்கும் பொருள் இதுதான். இதை ஆப்பிரிக்கக் கவிதைகளின் முழக்கம் என்றும் வரையறுக்கலாம். ஆப்பிரிக்கக் கவிதைகள் மாலைநேர ஓய்வின் போதும், காப்பி குடிக்கும்போதும் எழுதப்பட்டவையல்ல. சுற்றுலாத் தளத்திலும், ஓய்வு எடுக்கும்போதும் எழுதப்பட்டவையல்ல. ஐரோப்பிய இலக்கியத்திற்கும், ஆப்பிரிக்க இலக்கியத்திற்குமான வேறுபாடு இதுதான். பஞ்சத்தில், பசியில், வேதனையில், கண்ணீரில் எழுதப்பட்டது ஆப்பிரிக்க இலக்கியம். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும், ஆப்பிரிக்க கண்டத்திற்கான வலியை, வேதனையைப் பேசுவதாக இருக்கிறது. புதிய மதத்தையும், புதிய கடவுளையும், புதிய புதிய பொய்களையும், கற்பனைகளையும், கட்டுக் கதைகளையும், சுரண்டல்களையும், ஏமாற்றுகளையும் எப்படி எளிதில் பரப்பினார்கள், எப்படி எளிதில் நம்ப வைத்தார்கள், ஒவ்வொரு கருப்பனையும் ஒவ்வொரு கருப்பியையும் எப்படி தங்களைத் தாங்களே இழிவாகவும், கேவலமாகவும் எண்ணவும், நம்பவும் வைத்தார்கள் என்பதை நிக்கி கியோவானி “கருப்புக்காதல்” என்ற கவிதையில் சொல்கிறார்.

ஒரு நாள்
நீ இந்த வீட்டிற்குள் மெல்ல நடந்து வருவாய்
நான்
ஒரு நீண்ட ஆப்ரிக்க கவுன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீ பேசத் தொடங்குவாய் கருப்பு …

(வளர்மதி, 2007)

நிறத்தில் மட்டுமல்ல, உடையில், உணவில், பண்பாட்டில், நாகரிகத்தில் என அனைத்து விஷயங்களிலும் காதல் விவகாரத்திலும் எப்படி இழிவானதாகப் பார்க்கப்பட்டது; நடத்தப்பட்டது என்பதைத்தான் நிக்கி கியோவானியின் கவிதை விவரிக்கிறது. வெள்ளை இனத்தவர்கள்தான் கருப்பினத்தவர்களை இப்படி நடத்தினார்கள் என்பது ஒருபுறம். இந்த இழிவைச் சுமத்திய காலனியாதிக்க மனோபாவத்தைக் கருப்பினத்தவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது முக்கியமானது. காலனியாதிக்க மனோபாவத்தை, கல்வியை, கலாச்சாரத்தை, ஏன் கடவுளையும் அதன் நம்பிக்கைகளையும் எந்த எதிர்ப்புமின்றி ஏன் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் அதற்கான மனோபாவம் எப்படி ஏற்பட்டது, திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்திக்கப்பட்டது. தன்னை அறிதல் என்ற போக்கு காலம் தாழ்த்தியே ஆப்பிரிக்க மண்ணில் ஏற்படுகிறது என்பதை எதேல்பர்ட் மில்லர் எழுதிய ‘சிவப்பு விளக்கு’ கவிதையின் வழியே அறியலாம்.

நம்மில் பலர் அந்நிய மொழியில் நேசிக்கிறோம்

அதனால்தான் நம் இதயங்கள் நம் உணர்வை

மொழிபெயர்க்க யாராவது கிடைப்பார்களா எனத்

தேடிக்கொண்டிருக்கின்றன.”

(ரவிக்குமார், 2014)

காலனித்துவ நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மக்களைச் சொந்தமொழியில் பேசத் தெரியாத, சொந்த மொழியில் சிந்திக்கத் தெரியாதவர்களாக உருவாக்கியது. இதுதான் காலனித்துவ ஆதிக்கத்தின் வெற்றி. அவர்கள் தந்த கல்வியின் வெற்றி. கருப்பினத்தவர்கள் அனைவரையுமே மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மாற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அதிசயம் இருக்கிறதே – அதுதான் உச்சகட்ட தந்திரம். ஆனால், ஒரு நிலையில் காலனியாதிக்க சூழ்ச்சியிலிருந்து, மனோபாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம், உணர்வு மெல்ல மெல்ல பரவுகிறது. அதன் விளைவாக தங்களை மீட்டு எடுக்கவும், மீட்டுருவாக்கம் செய்துகொள்ளவும் முயல்கின்றனர். அதற்கான ஆயுதமாக, வழியாக கவிதையைப் பார்த்தார்கள். அதனால் கவிதையை எழுதினார்கள். கவிதையால் தங்களை விடுவித்துக்கொண்டார்கள். போராட்டத்திற்கான ஆயுதமாக, விடுதலைக்கான முழக்கமாக கவிதையைப் பயன்படுத்தினார்கள். அழுகையை மட்டுமே அவர்கள் முன்னிறுத்தவில்லை. கவிதைக்கான அழகு எது? கவிதைக்கான உணர்வு எது என்பதை அறிந்துதான் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது அமிரி பராகா எழுதிய “SOS” என்ற கவிதை.

கவனிக்கவும்
கருப்பு மக்கள் கவனிக்கவும்
ஆண் பெண் குழந்தை எல்லாக் கருப்பு மக்களும் கவனிக்கவும்
எவர் எங்கே இருந்தாலும் கவனிக்கவும்
அவசரம், மறுமொழி பேசவும்
கருப்பு மக்கள் மறுமொழி பேசவும்
அவசரம், எவர் எங்கே இருந்தாலும் கவனிக்கவும்
எல்லாக் கருப்பு மக்களும் கவனிக்கவும்
எல்லாக் கருப்பு மக்களும் கவனிக்கவும், மறுமொழி பேசவும்
கருப்பு மக்கள் உடன் மறுமொழி பேசவும்

(வளர்மதி, 2007)

ஐநூறு ஆண்டுகால அடிமை வாழ்வு பற்றி பேச வேண்டும். அதன் துயரங்களைப்பற்றி பேச வேண்டும். கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல், ஒளிவு மறைவின்றிப் பேச வேண்டும். செய்த தவறுகளையும், செய்யாத தவறுகளுக்காக தண்டனையையும், பழியையும் அனுபவித்ததைப் பேச வேண்டும். பேசுவதன் வழியே, உரையாடுவதன் வழியேதான் தவறுகளிலிருந்து மீள முடியும். புதிய சிந்தனைகளை, புதிய வரலாற்றை உருவாக்க முடியும். சொந்த சிந்தனை ஆப்பிரிக்க கண்டத்திற்கான, அதன் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற பெரும் அறைகூவலை அமிரி பராகாவின் கவிதை விடுக்கிறது. இந்த அறைகூவல்தான் இன்றைய ஆப்பிரிக்கக் கவிதையின் உயிர் நாடியாக இருக்கிறது. இன்று கருப்பினத்தவர்கள் பெற்றுள்ள சட்டரீதியான சலுகைகளுக்கும் வாழ்வுக்கும் அதுதான் அடித்தளம்.

உலகிலேயே பெரிய கண்டம். ஆனால், இருண்ட கண்டம். ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் சதுர மைல் கொண்ட ஆப்பிரிக்காவில் சுமார் 4200 வழக்கு மொழிகள் உள்ளன. நூறு கோடி பேர் அடிமைகளாக விற்கப்பட்டு, அடிமைகளாக வாங்கப்பட்டு பல நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பேச்சின் வழியேதான் கருப்பின மக்களுக்கான விடுதலையைக் கொண்டுவர முடியும் என்பது அமிரி பராகாவின் அழைப்பு மட்டுமல்ல, மொத்த ஆப்பிரிக்கக் கவிதைகளின் அழைப்பும் அதுதான்.

“எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த என்

உடலுக்காகத் துக்கம் கொண்டாடுகிறேன்

கல்லறையில் நான் புதைக்கப்படுகையில்

யாருடன் அதனைப் பகிர்ந்துகொள்வது

என்றும் எனக்குள் கேட்டுக்கொண்டேன்”

(அமரந்த்தா, சிங்கராயர், 2000, பக். 11)

ஆப்பிரிக்கக் கவிதை நீதியை மட்டும் கோரவில்லை. சட்டம் எப்படி இரண்டு விதமாக செயல்பட முடியும்? கருப்பர்களுக்கு ஒரு விதமாகவும், வெள்ளையர்களுக்கு ஒரு விதமாகவும்? இதுதான் சட்டமா? ‘ஆம்’ என்று சொல்கிறது காலனியாதிக்க சட்டம். அநீதி எப்படி நீதியாக, சமூக சட்டமாக இருந்தது என்பதை மட்டுமல்ல, நிறம் எப்படி இழிவான சின்னமாக, அடிமை வாழ்விற்கான, அடிமை சேவகத்திற்கான சின்னமாக மாறியது என்பதை பேச வேண்டும். அதையும் கடவுளிடம் பேச வேண்டும். ரட்சகரின் நீதியின், மீட்பரின் நீதியின், தேவகுமாரனின் நீதியில் – இதுதான் நீதியா என்று கேட்க வேண்டும் என்று கூகி வான் தியாங்கோ கேட்கிறார். இக்கேள்விக்கு மீட்பர்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் எங்கள் பிதாவே

உங்கள் திவ்விய நாமம் போற்றப்படுவதாக

உங்கள் ராஜ்ஜியம் வருவதாக

எங்கள் செல்வமிக்க ஆப்பிரிக்காவில்

விரும்பி அழைக்கும் ஆப்பிரிக்காவில்

காலனிய ஆட்சிக் காலத்தில் நடந்ததுபோலவே

இப்போதும் உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாக

(அமரந்த்தா, சிங்கராயர், 2000, பக். 11)

நியாயம் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் கூகி வான் தியாங்கோவின் விருப்பம். யாருடைய நியாயம், யாருக்கான நியாயம் தீர்க்கப்பட வேண்டும்? பிதாவினுடைய பிள்ளைகளில் ஒரு பிரிவு எப்படி அடிமை சேவகம் செய்ய நிர்பந்திக்கப்பட்டது? இதுதான் நியாயத் தீர்ப்பா? இப்படியான கேள்விகள் ஆப்பிரிக்கக் கவிதைகளின் மையமாக இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் கவிதைகள் எழுதப்படுவதன் நோக்கமே இக்கேள்விகளை எழுப்புவதற்காகத்தான். “நாங்கள் என்ன குற்றம் செய்தோம் பிதாவே! எங்களை ஏன் கைவிட்டீர்?’’ என்று கேட்பதற்குத்தான். நிறத்தை எப்படி அடிமைச் சின்னமாக்கினீர்? நீங்கள் யாருக்கான தேவகுமாரன், ரட்சகர்? உங்களுடைய பெயராலும், நீதியின், தர்மத்தின் பெயராலும்தானே நாங்கள் அடிமைகள் ஆனோம். அடிமைகளாக ஆக்கப்பட்டோம். பிதாவே! இதுதான் உங்கள் பரலோக சாம்ராஜ்ஜியத்தின் தர்மமா? அப்படியென்றால் கருப்பர்களாகிய நாங்கள் உங்களுடைய ராஜ்ஜியத்தை புறக்கணிக்கிறோம்” என்று எழுதியது கருப்பினக் கவிதை. இதைத்தான் மாயா ஏஞ்சலோ தனது “கூண்டு கிளி ஏன் பாடுவதில்லை?” என்ற கவிதையில் விரிவாக, ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார்.

சமூகத்தின் ஒவ்வொரு விசயத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது ஆப்பிரிக்கக் கவிதைகள். “கேள்வி கேட்பதால் உயிரோடு இருக்கிறோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில்தான் இன்றைய ஆப்பிரிக்கக் கவிதைகள் ஒவ்வொன்றும் நூறு, ஆயிரம் கேள்விகளைத் தனக்குள் கொண்டிருக்கின்றன. அக்கேள்விகள் அறச்சீற்றத்தின் பலத்தில் நிற்கின்றன. அது கருப்பினக் கவிதைகளின் பலம் மட்டுமல்ல; உயிரும் என்பதை கூகி வா தியாங்கோவின் இந்த வார்த்தைகள் மெய்ப்பிக்கின்றன.

இலக்கியம் தானாகத் தோன்றுவதில்லை. குறிப்பிட்ட சமூகத்திலுள்ள அரசியல் – சமூக – பொருளாதார சக்திகளினால் உந்தப்பட்டு, வடிவமும் திசைவழியும் கவனமும் கொள்ளத்தக்க களமும் அமைத்துத்தரப்பட்ட பின்பே அது உருவாகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்காவைப் பொறுத்தமட்டில் இது கூடுதல் கவனம் பெறுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஓர் எழுத்தாளன் தான் சார்ந்துள்ள சமூகத்தின் மனசாட்சியாக இருந்து வரப்போகும் அபாயத்தை முன்கூட்டியே தெரிவித்து அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்து நெறிப்படுத்துவதை தனது பணியாகக் கொள்ள வேண்டும். அறிவுபூர்வமாகவும் ஊக்கத்துடனும் சமூகத்தின் மறுவுருவாக்கத்தில் தனது பங்கைச் செலுத்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுதான் எழுத்தாளனின் அவசரமான செய்தியாக இருக்க வேண்டும்” (அமரந்த்தா, சிங்கராயர், 2000, பக். 11).

கருப்பினக் கவிஞர்கள் தங்களுக்கான நீதியை, சட்டரீதியான உரிமையை, கல்வியை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, அழகியலை, வாழ்வியலை, மண்ணை, மண்ணின் மகத்துவத்தை எழுதினார்கள். கவிஞனாக, எழுத்தாளனாக தேசத்தின் விடுதலைக்கான தங்களுடைய பங்களிப்பை, உழைப்பை வழங்கினார்கள். இந்தக் கவிதைகள் ஆப்பிரிக்க கண்டத்தின் விடுதலைக்காக மட்டும் எழுதப்படவில்லை. எங்கெல்லாம் அடிமை வாழ்வு வாழப்படுகிறதோ, யாரெல்லாம் அடிமை வாழ்வு வாழ்கிறார்களோ, அந்த மனிதர்களின் விடுதலைக்காகவும், அந்த நாட்டின் விடுதலைக்காகவும் எழுதப்பட்டது என்பதுதான் கருப்பினக் கவிதைகளின் மகத்துவம்.

ஒருவர் முதல்தரம்

ஒருவர் இரண்டாம் தரம்

குடிமக்களிடையே இப்படி பேதம்

இருக்கும்வரை

நடக்கும் யுத்தம் எங்கும் யுத்தம்.

(ரவிக்குமார், 2010, பக். 142)


துணைநூல் பட்டியல்

  • இந்திரன். (2014). அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம். கோடம்பாக்கம்: யாளி பதிப்பக வெளியீடு.
  • கூகி வா தியாங்கோ, தமிழில் அமரந்த்தா, சிங்கராயர். (2000). சிலுவையில் தொங்கும் சாத்தான். சென்னை: தாமரைச்செல்வி பதிப்பகம்.
  • ரவிக்குமார். (2010). பாப் மார்லி : இசைப்போராளி. சென்னை: உயிர்மை பதிப்பகம்.
  • ரவிக்குமார், (2010). வலசைப் பறவை: மொழிப்பெயர்ப்பு கவிதைகள். புதுச்சேரி: மணற்கேணி பதிப்பகம்.
  • ரவிக்குமார். (2014). வெள்ளை நிழல் படியாத வீடு: கருப்புக் கவிதைகள். (மொழிப்பெயர்ப்பு). திருவல்லிக்கேணி: மணற்கேணி பதிப்பகம்.
  • வளர்மதி. (2007). ஒரு பழுப்புப் பெண்ணுக்காக. https://vinaiyaanathogai.wordpress.com/2007/08/27.
  • வளர்மதி. (2007). கருப்புக் காதல். https://vinaiyaanathogai.wordpress.com/tag/page/4.
  • வளர்மதி. (2007). SOS. https://vinaiyaanathogai.wordpress.com/category/D/
  • வலசைப் பறவை: (மொழிபெயர்ப்புக் கவிதைகள்): – ரவிக்குமார், விமர்சனம்: இமையம். http://www.writerimayam.com

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...