பாவனைச் சமுதாயம்

i3.phpகடந்த மாதம் 27ஆம் தேதி இரவு 10 மணி அளவில் எனது புலனத்தில் தொடர்ந்து வரத்துவங்கிய தகவல்கள் என் கவனத்தைக் கோரின. இந்திய முன்னால் அதிபரும் உலக தமிழர்கள் பலவகையிலும் நன்கு அறிந்த பெரியவர் எ.பி.ஜே அப்துல் கலாம் மரணம் பற்றிய தகவல்கள் அவை என்பதால் அத்தகவல்களின் நம்பகத்தன்மையை முதலில் அறியவேண்டியிருந்தது.

அது உண்மை தகவல் என்பது உறுதியானது. ஆயினும் அந்த செய்தியைத் தொடர்ந்து அவரது மரணம் குறித்த பல புனைவுத் தகவல்களும் அவரின் இறுதி மரியாதை தொடர்பான பொய்த் தகவல்களும் தவறான புகைப்படங்களும் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. பிழையான தகவல் அனுப்பிய சில நெருங்கிய நண்பர்களுக்கு அதன் பிழை குறித்து குறிப்பிட்டு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். ஆயினும் பல தகவல்களை வெறுமனே கடந்து சென்றேன்.

அன்று தொடங்கி இன்றுவரை வட்சாப்பிலும் முகநூலிலும் தினசரிகளிலும் எ.பி.ஜே அப்துல் கலாம் குறித்த தகவல் மழை நிற்காமல் பெய்தவண்ணம் இருக்கிறது. அவரை பாடுபொருளாக்கி பல கவிதைகள் இயற்றப்படுகின்றன. விவேகானந்தருக்குப் பிறகு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு கொண்டாடும் ஆளுமையாக எ.பி.ஜே அப்துல் கலாமைக் குறிப்பிடலாம்.

கன்யாகுமரியில் கலாமுக்கு பிரமாண்ட சிலை வைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதன் வழி அவரை புனிதராக்கும் வழக்கமான முயற்சிகள் பின்பற்றப்படுவதையும் அறியமுடிகிறது. மனிதனைப் புனிதனாக உயர்த்திப் பிடிப்பதன் வழி, சராசரிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்ச்சியுமற்று தொடரமுடியும் என்பதால் மக்கள் கலாமையும் அவரின் வாழ்க்கையையும் பிராமாண்ட சிலையாக மாற்றும் பணியில் துரிதமாக இறங்கியுள்ளனர். அதேபோல் அன்னார் சொன்னதாகவும் அன்னார் செய்ததாகவும் பரப்ப்ப்படும் கருத்துகளிலும் வாசகங்களிலும் எந்த அளவு உண்மை இருக்கும் என்னும் ஐயம் ஒரு புறம் இருக்க அவரை பொதுபுத்தி சமூகம் உச்சத்தில் தூக்கி வைத்து கொண்டாடுவதில் உள்ள முரண்களையும் அபத்தங்களையும் சுட்டிக்காட்டவேண்டியது அவசியமாகிறது.

பொதுவாக இந்திய அரசு என்பது ஆங்கிலேய ஆட்சிகாலத்திற்குப் பிறகு ‘காந்தி’ என்கிற அடையாளத்தால் முன்நிறுத்தப்பட்டது. காந்தியின் அகிம்சை வழி என்பது இந்தியாவின் ஆன்மாவாக குறிப்பிடப்பட்டது. உலகின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆயுத பலத்தை விட ஆன்ம பலத்தையே முதன்மையாக போற்றும் சிந்தனை இந்திய நடுத்தர மக்களின் மனங்களில் உறுதியாக விதைக்கப்பட்டது. ஆயினும் இந்திய அரசு தன் நிலையை உலக அரங்கில் நிலைநிறுத்தவும் அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் தனது தொழில்நுட்ப ஆற்றலை உயர்த்தும் முக்கிய கடப்பாட்டைக் தான் கொண்டிருப்பதை உணர்ந்தது. உலகம் அறிந்த காந்திய அடையாளம் சிதையாமல் அதே நேரம் தனது ஆயுத தொழில் நுட்பவளர்ச்சியையும் மெல்ல முன்னெடுக்கும் இந்திய குடியரசின் முயற்சிக்கு முழுமூச்சாக கைகொடுத்தவர் எ.பி.ஜே அப்துல் கலாமாகும். காந்திய அகிம்சைவாதத்தால் உலகை கவர்ந்த இந்தியா இன்று அப்துல் கலாம் அமைத்த அணுவாயுத ஆற்றலால் உலகைக் கவர முடிகிறது. அவ்வகையில் இந்தியாவை வல்லரசாக மாற்ற கனவுகாணும் அரசு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பது உண்மை.

ஆயினும் பொதுமக்கள் அப்துல் கலாமை ஒரு தொழில்நுட்ப அறிஞர் என்பதற்காக மட்டும் கொண்டாட முன்வரவில்லை. மாறாக அவரது கருத்துகளாலும் வாழ்க்கை முறையாளும் தாங்கள் கவரப்பட்டுள்ளதாக அறிவிக்கவே அவர்கள் முனைகிறார்கள். ஆயினும் இதில் காணப்படும் பாவனைகள் கவனிக்கத்தக்கன.

எ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்த தெளிவு உள்ள பலரும் அவரின் செயல்பாடுகள் சராசரி பொதுபுத்தி சமுதாயத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்தே இருப்பர். அவரின் அறிவியல் தொழில்நுட்ப அறிவும் மனஊக்கம் குறித்து அவர் கொண்ட நிலைப்பாடுகளும் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவை என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் அவர் தமிழ் மொழி மீது கொண்டிருந்த பெருங்காதலும் நமக்கு பெருமைசேர்ப்பதாக இருக்கலாம். ஆயினும், அந்தக் கருத்துகளைக் கண்டடைய அவர் வாழ்க்கையை எதிர்கொண்ட முறை பொதுபுத்தி சமுதாயத்தின் எதிர்ப்பார்புகளுக்கும் அறிவுரைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை மிக லாவகமாக கடந்து செல்லும் நிலையை இப்போது காணமுடிகிறது.

வாழ்க்கையை எல்லாவகையிலும் எவ்வித விமர்சனங்களும் இன்றி பெரும்பான்மை கருத்தோடு ஒத்து, ஏற்று, சுகித்து வாழ்வதே பொதுபுத்தி சமுதாயம் வழிகாட்டும் இலட்சிய வாழ்க்கையாகும். மாற்று கருத்து என்பது ‘கலகக்காரனின் வேலை’ என்கிற புரிதலே பலரிடமும் காணப்படுகிறது. சராசரி மனிதன் முதல் அதிகார பீடங்களை அலங்கரிப்போர் வரை மக்களை மந்தையாக கட்டியாளும் திட்டங்களையே மீண்டும் மீண்டும் கல்வி என்ற பெயரிலும், அரசியல் கொள்கைகள் என்ற பெயரிலும் சமய பண்பாட்டு கோட்பாடுகள் என்ற பெயரிலும் சமுதாயத்தின் மீது திணிக்கப்படுகிறது. மாற்றுகருத்தாளர்களுக்கு சமுதாயம் எப்போதும் வழிவிடுவது இல்லை. ஆயினும் மாற்றுக் கருத்தாளர்கள் தாங்களாகவே தங்கள் வழிகளை அமைத்துக் கொண்டு முன்சென்ற பிறகு அவர்களின் தடம் பார்த்து உலகம் மெல்ல இயங்கத்தொடங்குவதும் உலக வரலாறு உணர்த்தும் உண்மைகளாகும். அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையும் அதையே வழியுறுத்துகிறது.

தன் வாழ்நாளில் பல விடயங்களில் மாற்றுச் சிந்தனையாளராக வாழ்ந்த எ.பி.ஜே அப்துல் கலாமை இன்று பொதுபுத்திசமுதாயம் முன்வந்து கொண்டாடும் ஆர்ப்பாட்டங்களிளேயே அதன் முரண்களும் பாசாங்குகளும் மெல்ல வெளிப்படக் காணமுடிகிறது.

குறிப்பாக இரண்டு முக்கிய காரணங்களின் அடிப்படையிலேயே பொதுபுத்தி சமுதாயம் அப்துல் கலாமை கொண்டாட திரண்டிருப்பதாக புரிந்து கொள்ளலாம். அவை 1. தாங்கள் வகுத்துக் கொண்ட வழக்கு மாறாத வாழ்க்கை லட்சியங்களை அடைய எ.பி.ஜே அப்துல் கலாமின் கருத்துகள் அச்சுருத்தலாக இருக்கமாட்டா என்ற நம்பிக்கையினாலும், 2. ஒரு மாற்று கருத்தாளனைப் போன்ற பாவனைகளை தாங்களும் காட்டவிரும்புதலுமே அவையன்றி வேறில்லை.

இதற்கு உதாரணமாக சில விடயங்களை முன்மாதிரியாக காட்டலாம். தேர்வுகளில் ‘A’ க்கள் பெருவதை நோக்கமாக கொண்ட கல்விமுறையில் வாழும் மாணவர்களுக்கு எ.பி.ஜே அப்துல் கலாம் குறித்த தகவல்கள் திருவாக்குபோல சொல்லப்படுகின்றன. கலாமின் புகழ்பெற்ற வாசகமான ‘கனவுகாணுங்கள்’ என்னும் சொற்றொடர் எல்லா நிலைகளிலும் வழியுறுத்தப்படுகிறது. ஆரம்பப்பள்ளி முதல் தனியார் கல்லூரிகள் வரை மாணவர்களிடம் கனவு காணுதல் பற்றி பேசுகிறார்கள். ஆயினும் இவர்கள் கலாமின் கனவுகளை தங்கள் வியாபார விளம்பரத்திற்கான ஒரு வாசகமாக பயன்படுத்திக்கொள்வது சமுதாயத்தை தங்கள் வசம் திருப்பும் வியாபார தந்திரமாகும். காரணம் இவர்கள் முன்வைக்கும் கனவுகளுக்கு மிகக் குறுகிய எல்லைகளே உள்ளன. அவை சில ‘A’ களில் அடங்கிவிடக் கூடியவை. எல்லைகளைக் கடந்த மிக உயரிய அல்லது அகண்ட கனவுகளைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. இவர்களின் கல்வி வியாபாரம் சிறப்பாக நடைபெற எல்லரையும் கவர்ந்த அந்த வாசகம் அவர்களுக்கு தேவை. அவ்வளவே!

அடுத்து, தங்கள் பள்ளியில் ‘A’ க்கள் பெற்ற மாணவர்களை மிகச் சிறப்பாக கொண்டாடி தங்கள் பள்ளியின் புகழை நிலைநாட்ட விரும்பும் பள்ளி ஆசிரியர்களும் கலாமின் ‘‘கனவுகாணுங்கள்’ வாசகத்தை மாணவர்களைப் பார்த்து முழங்குகிறார்கள். ஆயினும் கலாம் உரைத்த கனவு என்பது ‘A’ க்களை பெறாத, வெறும் ‘E’ க்களை மட்டுமே பெரும் மாணவனுக்கும் இருக்கக் கூடும் என்பதை மறந்துவிடுகின்றனர். உறங்க விடாமல் செய்யக் கூடிய கனவுகளை கொண்டு வாழ்பவன் சமுதாயம் வகுத்துக் கொண்ட அளவுகோல்களுக்குள் அடங்கக்கூடியவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தனக்கான வாழ்க்கையைத் தானே முடிவு செய்து அமைத்துக் கொள்ளக்கூடியவனுக்கே அத்தகைய கனவுகள் சாத்தியமாகும்.

கலாம் மிக பிரபலமான மனிதராக வாழ்ந்த போதும் அவர் தனக்கான சொத்துகள் என்று எதையும் கொண்டிருக்கவில்லை. மிக எழிய வாழ்க்கை வாழ்ந்த அவரின் உடமைகளில் நூல்களே அதிகம் என்பது இன்று பலரும் வியக்கும் தகவலாகும். ஆயினும் இத்தகவலை வியக்கும் மக்கள் கூட்டம் தனக்கான சொத்துகளை மட்டும் இன்றி தன் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைப்பதில் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருப்பது கண்கூடு. தங்கள் பேராசைகள் நிறைவேறுவதில் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளும் சமுதாயம் அறத்தின் வழி நின்ற பெரியவர்களையும் போற்றுவது ஒருவகையான பாவனையாகும். அசலான நிலை அல்ல. ஆனால் சமுதாயம் விரும்பி ஏற்பது மகான்கள் போன்ற பாவனையையே அன்றி மகான்களை அல்ல.

ஆகவே, முன்னர் வாழ்ந்து மறைந்த பல உன்னத மனிதர்களைப் போலவே கலாம் அவர்களின் வாழ்க்கையையை பொதுபுத்திசமுதாயம் பாட நூல்களிலும், மேடை பேச்சுகளிலும், விருதுகளின் பெயர்களிலும் சூட்டி மகிழுமே அன்றி அவரின் வாழ்க்கைத் தடைத்தை காடுமண்ட விட்டு தன் முதலாளியத்துவ வழியில் தொடர்ந்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

4 comments for “பாவனைச் சமுதாயம்

  1. rajarajan
    September 8, 2015 at 3:23 pm

    அருமை.ஆனால் எல்லா ஆசிரியர்களும் கடை நிலை மாணவர்களை புறக்கணிப்பதோ அல்லது அவர்களின் கனவுகளை உதாசினம் செய்வதோ இல்லை.

  2. மு. அக்பர் அலி
    September 9, 2015 at 11:46 am

    மிகச் சரியான கருத்துக்கள்.

  3. Ram
    September 18, 2015 at 2:32 am

    பெரும்பான்மையான மக்கள் அறம் சார்ந்த லட்சிய வாழ்க்கை வாழ விரும்புவர்கள்தான். ஆனால் அதற்குரிய சமூக சூழ்நிலையும், தனிப்பட்ட மனஉறுதியும் இல்லாமல் தன் லட்சியத்தை மறைத்து நடைமுறை வாழ்கையை வாழ்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் அறம் சார்ந்த லட்சிய வாழ்க்கை வாழ்ந்து சமூக அடையாளம் பெறும்போது பெரும்பான்மை சமூகம் அதை போற்றுவது இயல்பான ஒன்றே.

    அதே சமயம் சுயநல காரணங்களுக்காக இந்த சமூக எண்ணப்போக்கை பாவனையாகப் பயன் படுத்தும் கூட்டமும் உள்ளது என்பதை மறுக்கமுடியாதுதான். ஆனால் அது நீங்கள் கூறும் ‘பொதுபுத்திசமுதாயத்தின்’ மிக சிறிய பகுதியே. அவர்கள் ஊடகத்தை பயன்படுத்தும் கலையில் வல்லமை பெற்றிருப்பதால் அது பெரிதாக தோற்றம் அளிக்கலாம்.

  4. அ.பாண்டியன்
    September 26, 2015 at 12:56 pm

    வணக்கம். பொதுவாக இது போன்ற கட்டுரைகளின் நோக்கம் முடிவான கருத்துக்களை நிருவுவது அல்ல. ஆனால் சமுதாயத்தின் மீது தாக்கம் ஏற்படுத்துவதாக சித்தரிக்கப்படும் எல்லா நிகழ்ச்சிகளின் ஊடேயும் விடுபட்டு நிற்கும் காலி இடங்களை, போலித்தன்மைகளை, அபத்தங்களை சுட்டிக் காட்டுவது மட்டுமே. இவ்வகையான கருத்துகள் உரையாடல்களின் வழி தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டியவை. அகண்ட சமூக பார்வையைப் பெற இது அவசியம். பின்னூட்டம் இட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி. தொடர்ந்து உரையாடுவோம். நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...