கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர் போன்ற அடிக்குறிப்புகள் எல்லாமே பிற்கால சேர்மானம் என்று சொல்கிறார். ஆக, இன்று ஒரு நவீன வாசகன் பொருளுரையின் உதவி இல்லாமல் அவற்றை வாசித்து தனது அனுபவத்தின் திரட்சியில் அவ்விலக்கியங்களுப் பொருள் கூற முழு சுதந்திரம் உண்டு. அது முற்றிலும் வேறு பொருளாகவும் இருக்கலாம். இலக்கியத்திற்கே உள்ள சுதந்திரம் அது.
வாசகன் என தனித்த சமூகம் ஒன்றில்லை. இலக்கிய வாசிப்பு அனைவருக்குமானது. பல சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சமூகத்தில் பல அடுக்கில் உள்ளவர்களும் ஓர் இலக்கியப் பிரதியை அணுகும்போது அவரவர் வாழ்வுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப அதில் முரண்படவும் உடன்படவும் செய்கின்றனர். எனவே, எல்லாருக்குமான இலக்கியம் என ஒன்றில்லை எனவும் இலக்கியம் மூலம் எல்லாருக்குமான ஒரு நீதியை கூறிவிட முடியாது.
கவிதை திட்டவட்டமான பொருளை அல்லது அர்த்தத்தைச் சொல்ல உருவாகுபவையும் அல்ல. அப்படி அதன் பயன் அதுதானென்றால் கவிதை என்ற இலக்கிய வடிவை ஒருவர் தேர்ந்தெடுக்காமல் கட்டுரை, கடிதம் போன்ற வடிவங்களைத் தேர்ந்தெடுப்பாரேயானால் அவரால் இன்னும் எளிதாகத் தான் சொல்ல வந்ததை வெகுசன மக்கள் முன் சமர்ப்பிக்க முடியும். ஆக கவிதை என்பது சொற்கள் மூலம் வாசகனின் உணர்வை உந்தி தள்ள முனையும் ஓர் வடிவம். அவ்வுணர்வின் மூலம் தனது பொருளை பல்வேறு வகையாக்கவே கவிதை முனைகிறது.
நகுலனின் ஒரு கவிதையை உதாரணமாகச் சொல்லலாம்.
எனக்கு
யாருமில்லை
நான்
கூட
இந்த வரிகள் பலராலும் சொல்லப்படுவதை நாம் கேட்டிருக்கலாம். ‘எனக்கு யாருமே இல்லை’ என்ற எளிய வரியைத்தான் நகுலனும் கூறியுள்ளார். ஆனால் அடுத்த வரியில் நானும் எனக்கு இல்லை என சொல்லும்போது இல்லாமைக்கும் அந்நியமாதலுக்குமான நுண்ணிய பேதத்தை உணர முடிகிறது. நகுலனின் இன்னொரு கவிதையும் இவ்வாறான நுட்பமான மன உணர்வைச் சொல்லக்கூடியவைதான்,
நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
ஊர்ந்து செல்லும் நினைவுகள் எப்போதுமே அபத்தமான காட்சிகளையே நமக்குக் காட்டுகின்றன. அவை நமக்கு அச்சத்தை மூட்டுகின்றன. ஆனால் அந்த அச்சத்தைச் சகித்துக்கொண்டு தினம் தினம் அந்த பயங்களுடன் வாழ்கிறோம். உண்மையில் ஒருநாளில் நமது எண்ணங்கள் இவ்வாறான அபத்தங்களைதான் ஒரு திரைப்படமாக நமது மனதில் ஓட்டிக்கொண்டே இருக்கிறது. நாமும் அதை கவனித்துக்கொண்டே இருக்கிறோம். ரோலர் கோஸ்டரில் கத்திக்கொண்டே அதி உற்சாகமாக மீண்டும் மீண்டும் வரிசை நின்று ஏறும் அபத்தத்தை இக்கவிதை சட்டென ஏற்படுத்துகிறது. நாம் சரியானவர்கள் என நம்பி எத்தனை முரணாக இருக்கிறோம் என நம்மை பரிசோதனைக்குட்படுத்துகிறது. இதே கவிதையை என் நண்பர் ஒருவர் நினைவு என்பதை எறும்புடன் ஒப்பிட்டுக்கூறினார். எறும்பு கண்களுக்குப் புலப்படாத இருளுக்குள் ஊர்ந்து போவதுபோல எண்ணங்கள் மனதில் இருளில் ஊர்வதில் கொடுக்கும் பயத்தைப் பற்றி பேசினார். இரண்டுமே சரிதான். அவரவர் நிலையில்.
மலேசியாவுக்கு வந்திருந்த அ.மார்க்ஸ் கூறியது இன்னும் நினைவில் உண்டு.
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
என்ற பாரதியின் கவிதையை ஒரு வாசகன் முழுக்க புணர்ச்சி சார்ந்து அர்த்தப்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு என்றார். ஆம்! உண்மையில் இக்கவிதையில் அதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. அப்படி ஒருவன் புரிந்துகொள்வானென்றால் அது தவறும் இல்லை. கவிதைகள் அவரவர் மன அமைப்பின்படி பொருளை திரட்டித்தருகின்றன.
அ.பாண்டியன் மலேசியாவில் மிக முக்கியமான கட்டுரையாளர் மற்றும் புனைவெழுத்தாளர். அவரது ‘தேடல்’ என்ற கவிதை இவ்வாறு ஒலிக்கிறது.
சிதரிக்கிடக்கும்
முக்கோணங்களையும்,
சதுரங்கங்களையும்
வட்டங்களையும்
பொறுக்கி எடுத்து அடுக்குகிறேன்.
ஏறக்குறைய வாழ்க்கை போன்றதொரு வடிவம் கிடைக்கிறது
மனம் சலித்து வடிவங்களை களைத்துப் போட்டுவிட்டு
மீண்டும் அடுக்குகிறேன்
வாழ்க்கையைத் தாண்டி வேறு
ஏதாவது கிடைக்குமா என்று
மிக நுட்பமாக எழுதப்பட்ட, மிகச்சிறந்த கவிதை என இதைக் கூறலாம். தேர்ந்த வாசகன் ஒருவன் சிதரிக்கிடப்பதாகச் சொல்லும் முக்கோணங்களும் சதுரங்களும் வடிவங்கள் அல்ல அது முன்பு வாழ்க்கையாக நம்பப்பட்ட நினைவுகளின் சிதிலங்கள் என உருவகப்படுத்திக்கொள்வான். அச்சிதிலங்களைக் கொண்டு மீண்டும் வாழ்ந்த வாழ்வை தவிர்த்து வேறொன்றை அடைய முடியுமா என்பதுதான் கவிஞரின் கேள்வியாக உள்ளது. ஒருவிதத்தில் அது கேள்வியில்லை. விரக்தியில் வெற்றுப்புன்னகை. அந்த நினைவுகள் அர்த்தம் அற்றவை என அறியும் கனம் வாழ்வை மாயை என நொந்துக்கொள்கிறான். வாசகன் அந்த வெற்றுப்புன்னகையை அறிய முனையாமல் இக்கவிதையில் கருத்தைத் தேட முனைந்தால் வேறொரு அர்த்தத்தைக் கண்டடையலாம். வாழ்க்கையைத்தாண்டிய ஓர் உன்னத நிலை குறித்து கவிஞர் சொல்கிறார் எனலாம். அப்படிச் சொல்ல அந்த வாசகனுக்கு முழு உரிமை உண்டு. அவன் வாழ்வின் விரக்தியின் வெறுமை தெரியாதவரை இக்கவிதையில் அந்த உணர்ச்சியை அவன் அறியப்போவதே இல்லை.
இந்த வெற்றுப்புன்னகையை பாரதியிடமும் கேட்டிருக்கலாம். அவரது ஒரு கவிதையில் இவ்வாறு ஒரு வரி வருகிறது
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
கவிஞர்கள் காலாகாலமாக வாழ்வைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்வு அதை கவனிக்கிறதோ இல்லையோ வாசகன் கவனிக்கவேண்டியுள்ளது.