யார் அந்தப் பண்டிதன்?

Pandithanஅங்கியை அணிந்துகொண்டு மாபெரும் மாணவர்கள் கூட்டத்திற்கும் அவர்களை உள்ளே வரவேற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்கும் இடையில் விரிவுரையாளர்களின் அணிவகுப்பில் நின்றுக்கொண்டிருந்தேன். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் பகுதி. புலங்களின் தலைவர்கள் பிரத்யேக அங்கிகளை அணிந்துகொண்டு விரிவுரையாளர்களுக்கு நேரெதிரில் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தனர்.

விழாவின் தொடக்கத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பின்னணி இசை முழங்கியது. மாணவர்களும் பெற்றோர்களும் எழுந்து நிற்க, விரிவுரையாளர்களுக்கு மண்டபத்திற்குள் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. நான் சக விரிவுரையாளர்களுடன், பார்வையாளர்களைப் பெருமிதத்தோடு கடந்து சென்று இருக்கையில் அமர்ந்தேன். பல்கலைக்கழக விரிவுரையாளனாகப் பெருமிதம் கொள்ளும் தருணங்களில் இதுவும் ஒன்று. அதுவும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அடுத்தகணம் முதல் விழாவின் அனைத்து உரைகளையும் செவிமடுத்துப் பட்டம் பெறும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கை சிவக்க கைத்தட்டல் கொடுத்துவிட்டு மீண்டும் அறிவிப்பைத் தொடர்ந்து பின்னணி இசை முழங்க மண்டபத்திலிருந்து பரிதாபத்துடன் வெளியேறுவேன்.

அன்றைய விழாவின் முக்கிய அம்சமாக நாட்டின் முன்னால் பிரதமரும் இந்நாள் பிரதமரின் தலைவலியுமான துன் டாக்டர் மகாதீர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருந்தது. தற்போதைய அரசியல் சூழலில் துன் மகாதீரின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததால் அனைவரும் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் முன்னாள் அமைச்சர் துன் லிங் லியோங் சிக், துன் மகாதீருடன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். துன் லிங்ஙின் மனைவி துன் சித்தி ஹஸ்மாவைக் கைத்தாங்கலாக அழைத்து வந்துகொண்டிருந்தார். இவ்விடத்தில் முக்கியமான விடயம் இருவருமே தங்களின் கணவர்களைப் பின் தொடர்ந்தே வந்தனர்.

துன் மகாதீர் மண்டபத்திற்குள் நுழைந்தபோது மக்களிடையே அவர் பெற்றிருக்கும் செல்வாக்கு கரவோஷமாக எதிரொலித்தது. எப்போதும் போலவே துன் மகாதீர் இளமையாகவே இருந்தார். துன் லிங் லியோங் சிக் மட்டும் முதுமையை அடைந்திருந்தார். பல திறன்பேசிகள் துன் மகாதீரை படமெடுப்பதில் மும்முரம் காட்டிக்கொண்டிருந்தன. துன் மகாதீரின் முகத்தில் எப்போதும் காணக்கிடைக்கும் அந்த எள்ளலான சிரிப்பு ஒருபோதும் குறைந்திடவில்லை.

சிறப்பு விருந்தினர்களும் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்களும் பிரதான மேடையில் வீற்றிருக்க நாட்டுப்பண் ஒலித்தது. நாட்டுப்பண் பாடும்போது மட்டும் எல்லோரும் மலேசியரானோம். அதைத் தொடர்ந்து விழாவின் முதல் உரையைச் செவிமடுக்க மண்டபம் தயாரானது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் துன் லிங் லியோங் சிக் தளர்ச்சியால் தள்ளாடியபடி உரை நிகழ்த்த சென்றார். அந்தப் பல்கலைக்கழகம் உருவான விதம் குறித்து உரையாற்றினார். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான ஒப்புதல் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றதையும் பல்கலைக்கழக வளாகம் அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டதையும் துன் லிங் நினைவு கூர்ந்தார். கட்டடம் எழுப்ப ரிங்கிட் மலேசியா 200 மில்லியன் இரண்டு மாதங்களில் திரட்டியாக வேண்டியிருந்தை துன் லிங் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

மலேசியாவின் செல்வந்தர்கள் ரோபர்ட் குவாக் முதல் நன்கொடை நிதியாக 20 மில்லியனும், தான்ஶ்ரீ லிம் கோ தோங் 20 மில்லியனும் தான்ஶ்ரீ ஆனந்தகிருஷ்ணன் 10 மில்லியனும், தான்ஶ்ரீ தே ஹோங் பியோவ் (பப்ளிக் பேங்க் குழுமம்) 10 மில்லியனும், துன் மகாதீரின் தலைமையில் இயங்கிய அரசாங்கம் 50 மில்லியனும், இன்னும் சிலர் வழங்கியதையும் துன் லிங் சொல்லிக்கொண்டிருந்தபோது மண்டபத்தில் குழுமியிருந்த சீனர்கள் “Wah….” எனப் பெருமையாகவே வாயைப் பிளந்தனர்.

துன் லிங் தமது உரையைத் தொடர்ந்தார்.

பல்கலைக்கழகம் அமைந்திடவும், அமைத்திடவும் கோடிஸ்வரர்கள் உட்பட பலர் நிதியுதவி செய்திருந்தாலும் தம்மால் எப்போதும் ஒருவரை மட்டும் மறக்கவே இயலாது என துன் லிங் சொல்லியபோது, யாரும் எதிர்பார்த்திராத ‘டத்தோ எம்.ஜி.பண்டிதன்’ பெயரை குறிப்பிட்டார்.

ஒருநாள் துன் லிங்கை அழைப்பேசியில் அழைத்து, அன்றைய தேதியில் ஒரு ஹோட்டலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார் டத்தோ பண்டிதன். அழைப்பையேற்று ஹோட்டலுக்குச் சென்ற துன் லிங் அங்கே கூடியிருந்த இந்தியர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். டத்தோ பண்டிதன் துன் லிங்கிடம் பல்கலைக்கழகத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியென அறிவித்து அவரை மேடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேடையில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் என வரிசையில் நின்று தங்களால் இயன்ற நிதியை செலுத்தியுள்ளனர். மேடையில் செலுத்தப்பட்ட நிதி அங்கேயே எண்ணப்பட்டுக் கிட்டத்தட்ட பதினாங்காயிரம் வெள்ளி துன் லிங் கையில் ஒப்படைக்கப்பட்டது. துன் லிங், ஏன் நெருக்கடியான நேரத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு நிதியைத் திரட்டினீர்கள்? எனக் கேட்டபோது, டத்தோ பண்டிதன் இவ்வாறாகப் பதில் அளித்துள்ளார்.

“எதிர்காலத்தில் நீங்கள் கட்டப்போகும் பல்கலைக்கழகம் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக அமையலாம். அங்கே படிக்க எங்கள் மாணவர்களும் வரலாம். அதற்கான வாய்ப்பும் உண்டு. அப்படியாக அவர்கள் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு வரும்போது படிக்க அனுமதியளித்து நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக, இதை எங்கள் கடமையாக எண்ணி எங்களுடைய பங்கை ஆற்றினோம்”

இக்காட்சியைத் துன் லிங் விவரித்தபோது மண்டபம் அமைதியாக இருந்தது. துன் லிங் பல மில்லியன்களுக்கு மத்தியில் பதினாங்காயிரத்தை முன்னிலைப்படுத்தி உணர்ச்சி பொங்க சொல்லியது எனக்கு வியப்பைக் கொடுத்தது. அதோடு ஒரு சிறு சந்தேகமும் எழுந்தது.

பட்டம் பெறப்போகும் ஆவலில் அமர்ந்திருந்த இந்திய மாணவர்களில் எத்தனை பேருக்கு ‘எம்.ஜி.பண்டிதன்’ என்கிற அந்த அரசியல் ஆளுமையின் பெயர் தெரிந்திருக்கும் என யோசித்தபோது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு விரிவுரையாளர் என்னிடம் கேட்டார்…

“யாரு கங்கா அந்த பண்டிதன்?”

1 comment for “யார் அந்தப் பண்டிதன்?

  1. ஸ்ரீவிஜி
    September 15, 2016 at 9:13 am

    டச்சிங்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...