“இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர் போனில் தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டேன்.
நேர்முகத்துக்குப் பிறகு பணியமர்த்தப்படும் தகுதி சுசிதாவுக்கில்லை என்று நாம்இருவருமே பரிந்துரைத்தோம். ஆனால் நேர்முகமே கண் துடைப்பு என்று நமக்கு பின்னால் புரிந்தது. உயர் அதிகாரி நம் பரிந்துரையை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பணியில் நியமித்ததோடு மட்டுமின்றி சுசிதாவுடைய வேலையின் மேற்பார்வைப் பொறுப்பையும் நான் மறுதலித்தும் என் தலையில் திணித்தார். மேற்பார்வை எல்லாம் சும்மா பேச்சுக்காக ! அதிகாரப் படிநிலையும் இல்லை. ஒன்றும் இல்லை. சுசிதா மணிக்கணக்கில் அதிகாரியின் அறையே பழியென்று கிடக்கிறாள். மருந்துக்கும் கூட அலுவல் சம்பந்தப்பட்ட ஓர் ஆலோசனைக்கும் அவள் என்னிடம் வருவதில்லை. சொல்லப்போனால் நான் அதைப்பற்றி கவலையும் படவில்லை.
பாதுகாப்பு பரிசோதனை முடித்து புறப்பாட்டு அழைப்புக்காக காத்திருந்தேன். அதிகாலை பொழுதின் தூக்கக்கலக்கத்தை காபி குடித்து முறிக்க முயன்று கொண்டிருந்தேன். “ஹை ஹரி” என்று யாரோ என் தோளைத் தட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் சில வருடங்களுக்கு முன்னர் நான் டேனிஸ்கோவில் வேலை பார்த்த நாட்களில் என்னுடன் வேலை பார்த்த ஆதித்யா. அவன் இப்போது டி எஸ் எம்-மில் பெரிய பொறுப்பில் பணி புரிகிறான். பெரிதாக அனுபவமோ விஷய ஞானமோ இல்லாதிருந்தும், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் அவனுக்கிருந்தது. என்னை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறான். பெரிய மனித தோரணை அவனுடைய உடல்மொழியில் மட்டுமில்லாமல் அவன் வாய்மொழியிலும் ஒட்டியிருந்தது.
நல விசாரிப்புகள், வணிகக் கிசுகிசுக்கள் என வழக்கமான விஷயங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு ஆதித்யா சுசிதா நம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பதைப் பற்றி கேட்டான். நான் சிறிது துணுக்குற்றேன். இவனுக்கு எப்படி அவளைத் தெரியும்? அவள் உணவுத்தொழிற்துறைக்கு புதிதாயிற்றே! என் சிந்தனையைப் படித்துவிட்டவன் மாதிரி சுசிதாவை அவன் எப்படி அறிவான் என்பதற்கு விளக்கம் கொடுத்தான். சுசிதாவின் கணவர் ஆதித்யாவின் குடும்ப நண்பராம். நான் அதிகம் எதுவும் சொல்லவில்லை. “ஆம் சுசிதாவின் என் அணியில் தான் இருக்கிறாள். சேர்ந்து இரு மாதங்கள் ஆகின்றன. எப்படி வேலை செய்கிறார் என்பது போகப்போகத் தான் தெரியும்.”
ஆதித்யாவும் நான் பயணம் செய்யவிருந்த விமானத்தில் மும்பை வருகிறானாம். இருவரும் சேர்ந்தே விமானம் ஏறினோம். எனக்கு இரு வரிசை முன்னர் ஒரு ஜன்னலோர இருக்கையில் ஆதித்யா அமர்ந்தான். அவனுக்கு பக்கத்துக்கு இருக்கை கொஞ்ச நேரம் காலியாக இருந்தது. எல்லோரும் ஏறிய பிறகு கடைசியாக விமானத்துள் சுசிதா நுழைந்தாள். நான் உட்கார்ந்திருந்ததை அவள் கவனித்ததாக தெரியவில்லை. ஆதித்யாவைப் பார்த்ததும் புன்னகை பூத்தவாறே அவனுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
என் பார்வை அவர்கள் மீதே இருந்தது. ஒருவர் மீது ஒருவர் இழைந்த வண்ணம் அவர்கள் நெருக்கமாய் பயணித்ததை கண்ட போது இரு குடும்ப நண்பர்களின் பரிச்சயம் போல இருக்கவில்லை. சுசிதா ஆதித்யாவின் தோள் மீது சிரத்தை புதைத்துக் கொண்டாள். தன் கரத்தை ஆதித்யாவின் கரத்தோடு கோர்த்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்துக்கு ஆதியாவின் கரங்கள் சுசிதாவின் தோள்களின் மேல் இருந்த மாதிரியும் இருந்தது.
என்னை சந்தித்ததை ஆதித்யா நிச்சயம் சொல்லியிருப்பான். சுசிதா ஒருமுறை கூட தன் முகத்தை திருப்பி பின் வரிசைகளை பார்க்கவில்லை. பாத்ரூம் செல்வது மாதிரி நடந்து அவர்களைக் கடக்கும் போது அவர்கள் இருவரையும் கைத்தொலைபேசியின் காமிராவில் சிறைப்படுத்திவிடலாமா என்ற குழந்தைத்தனமான எண்ணம் தோன்றி மறைந்தது.
விமானம் தரையை தொட்டு கதவுகள் திறக்கப்பட்டனவோ இல்லையோ சுசிதா அவசர அவசரமாக முன்புறம் சென்று முதலாம் வரிசையில் உட்கார்ந்தவர்கள் இறங்கும் முன்னர் இறங்க சென்று விட்டாள். நான் மெதுவாக இறங்கி ‘கோச்சில்’ ஏறி டெர்மினலை அடைந்தேன். பயணப் பேட்டிக்காக நான் காத்திருந்த போது ‘ஹலோ சார்’ என்ற படி சுசிதா அருகே வந்தாள்.
சற்று தள்ளி நின்றிருந்த ஆதித்யா “ஸீ யூ” என்று என்னுடன் கை குலுக்க அருகே வரவும், சுசிதா தற்செயலான சந்திப்பைப் போல “ஆதித்யா சார் நீங்களா? மும்பைல? பார்த்து எத்தனை நாளாச்சு ? ஒரு வருஷத்துக்கு மேலாச்சு! முடியெல்லாம் கூட கொட்டிப் போயிடிச்சு…” என்று சொல்லி பல்வரிசையை காட்டினாள். என் பெட்டி பெல்ட்டில் வரவும் அதை எடுத்துக் கொண்டேன். “என்ன சுசிதா, ஆதித்யாவுக்கு முடி கொட்டிடுச்சுன்னு இப்பதான் தெரிஞ்சுதா ? ஒன்றரை மணிநேரமா அவர் பக்கத்துல உக்கார்ந்த போது பார்க்கலியா?” என்று நக்கலாகச் சொன்னேன். இருவரும் சில கணங்களுக்கு அசட்டுப் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தார்கள். ஆதித்யா அவ்விடத்திலிருந்து அகன்றான்.
விமான நிலையத்துக்கு வெளியே கருப்பு-மஞ்சள் டாக்சியைப் பிடித்து கோரேகாவ்ன்-இல் இருக்கும் தேசிய பொருட்காட்சி மையத்துக்கு செல்லும் வழியெல்லாம் சுசிதா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவளின் முகபாவம் எப்படி இருந்தது என்றும் தெரியவில்லை. அவள் முன் சீட்டில் ஓட்டுனருக்குப பக்கத்திலும் நான் பின் சீட்டிலும் உட்கார்ந்திருந்தோம்.”
பார்த்தி சொல்கிறான் :
“சுசிதாவும் ஹரியும் பொருட்காட்சி மையத்துக்கு வருவதற்கு முன்னரே நானும் இன்னொரு சக-ஊழியரும் சாவடியைத் தயார் செய்து வைத்திருந்தோம். ஹரி வந்ததும் வராததுமாக என்னை காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தான். பொருட்காட்சி மையத்துக்கு வெளியே இருந்த ஓர் உடுப்பி ஓட்டலில் இட்லி சாப்பிட்டோம். ஹரி விமானப் பயண அனுபவத்தைக் சொன்னதும் உரக்க சிரித்தோம். கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் தெரிவு செய்யாத சுசிதாவை உயர் அதிகாரி நியமித்ததை ஒரு வித கசப்புணர்வுடன் சகித்துக் கொண்டிருந்த எனக்கு ஹரி சொன்ன சம்பவம் மலிவான மகிழ்வுணர்வை ஏற்படுத்திற்று. புறச்செருகல்கள், இடைச்செருகல்கள், ஊகங்கள், மூர்க்கமான கற்பனைகள் என்று ஹரி சம்பவத்துக்கு கண்ணும் காதும் இட்டு ஒரு கதாகாலட்சேபனை செய்பவன் போல் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தேன்.”
சுசிதா பார்த்திக்கு சொன்னது :
“பெண்களைக் குறைவாக எடை போடுபவர்களை சந்திப்பது எனக்கொன்றும் புதிதல்ல. பெண்களை கையாலாகாதவர்கள் என்று நினைக்கும் மனப்போக்கு எல்லா ஆண்களிடமும் துளியேனும் இருக்கிறது. ஹரியிடம் அது கொட்டிக்கிடந்தது. அவனுடன் வேலை பார்த்த ஒரு நாளும் நான் வசதியாக உணர்ந்ததில்லை. என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக அவன் பேசி வந்தது என் காதில் எட்டாமல் இல்லை. ஆனாலும் கண்ணியக் குறைவிலாமல் பேசியும். முடிந்த வரை மூத்த ஊழியருக்கு காட்டவேண்டிய மரியாதையுணர்வுடனும் பழகி வந்ததை ஹரி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவனுக்கு என் மேலிருந்த வெறுப்பு அவனுடைய நிதானவுணர்ச்சியை இழந்த சம்பவம் ஒன்று சென்ற வருடம் நடந்தது.
உங்களுக்கு ஞாபகம் இருக்கும்! போன வருடம் மும்பையில் ஒரு பொருட்காட்சியில் பங்கு கொண்டோமே, அப்போது நானும் ஹரியும் ஒரே விமானத்தில் வந்தோம். அதற்கு அடுத்த நாள் நான் உங்களிடம் அது பற்றி ஹரி ஏதும் சொன்னானா என்று கேட்டேன். நீங்கள் ‘எதுவும் சொல்லவில்லை’ என்று சொன்னீர்கள். ஹரியும் அதே விமானத்தில் பயணம் செய்யப்போகிறான் என்று உண்மையில் எனக்கு தெரியாது.
டி எஸ் எம்-மில் வேலை பார்க்கும் என் நண்பர் ஆதித்யாவை ஒரு முறை உங்களுக்கு அறிமுகம் செய்தி வைத்தேனில்லையா? நான் வேலை பார்த்த முதல் நிறுவனத்தில் அவர் என் அதிகாரியாக இருந்தார். நான் பிறந்து வளர்ந்த ஹரித்வார் தான் அவருக்கும் சொந்த ஊர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் முன்னதாக ஆதித்யாவுடன் போனில் பேசுகையில் நாங்களிருவரும் ஒரே விமானத்தில் மும்பை செல்லப்போகிறோம் என்று தெரிந்தது. இருவரும் பக்கத்து இருக்கைகளில் உட்காரும் படியாக இருக்கைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.
நான்கு வரிசை தள்ளி ஹரி உட்கார்ந்திருக்கிறான் என்று ஆதித்யா எனக்கு சொன்னார். அதற்குள் விமானம் கிளம்பி விட்டதால் டெர்மினலில் ஹரியை சந்திக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஹரியுடன் அவர் நடத்திய உரையாடல் பற்றியும் ஆதித்யா என்னிடம் சொன்னார்.
ஹரிக்கு நானும் ஆதித்யாவும் நண்பர்கள் என்று தெரியாது. ஒரு முன்னாள் சக-ஊழியர் என்ற அடிப்படையில் ஹரி மனந்திறந்து என்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை ஆதித்யாவிடம் பிட்டு வைத்து விட்டான்.
‘விற்பனை முன்னனுபவமும் இல்லை ; உணவுத்துறை நிறுவனத்தில் பணி புரிந்ததும் இல்லை. வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுவது என்ற இங்கிதமும் தெரியவில்லை. இவளைப் பார்த்துக்கொள் என்று என் தலையில் கட்டி விட்டார் என் உயர் அதிகாரி. பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறாள் என்றால் தனக்கு கீழ் வைத்துக் கொள்வது தானே. ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். கவர்ச்சியான உடை அணியும் திறமை அவளிடம் இருக்கிறது’
ஒரு செக்சிஸ்டின் வக்கிரம் மற்றும் சமநிலைப் பார்வையுடன் ஒருவரைக் கணிக்கும் திறமையற்று தோல்வியடைந்த ஒரு மேலாளரின் மனநிலை – இரண்டும் கலந்த கருத்தை என் நண்பரிடமே பகிர்ந்து கொண்ட ஒரு முட்டாள் அவன். ஆதித்யா பகிர்ந்து கொண்ட விஷயம் என்னுள் சினத்தை உண்டு பண்ணிற்று. தேர்ந்தெடுத்த கெட்ட வார்த்தை உரிச்சொற்களால் ஹரிக்கு என் மனதில் அர்ச்சனை செய்தேன். என் முக வாட்டத்தை கண்ட ஆதித்யா ஆறுதல் தரும் வார்த்தைகளால் ஹரியின் அசட்டுத்தனத்தை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிறிது சமாதானமடைந்ததும் எங்கள் பேச்சு வேறு திசைகளில் திரும்பிவிட்டது.
டெர்மினலில் பெட்டிகளை சேகரிக்கும் பெல்ட்டுக்கருகில் ஹரியை சந்தித்தேன். ஹரியிடமிருந்து விடை பெற்றுக்கொள்ள அந்த சமயம் அங்கு வந்த ஆதித்யாவையும் அங்கு எதேச்சையாய் சந்தித்ததைப் போல காட்டிக்கொண்டேன். எத்தனை கோபமிருந்தாலும் கண்ணியமாக தன் தலையை காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பை நானே அவனுக்கு வழங்கினேன். என்னுடைய நாகரிக நடத்தையை அவன் புரிந்து கொள்வான் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஏனென்றால் நாகரிகம் தெரிந்தவர்களால் தான் அதை புரிந்து கொள்ளமுடியும்.
டாக்சியில் கொரேகாவ்ன் போகும் போதும் என் எரிச்சலை வெளிக்காட்டாமல் சாதாரணமாக பேசினேன். ஆதித்யாவுக்கு வயதான தோற்றம் வந்துவிட்டது எனவும் வழுக்கைக் கோடு இன்னும் மேலேறிச் சென்றுவிட்டது எனவும் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பேசுவதை கேட்பதில் ஆர்வமில்லை என்றாலும் சிரிப்பது போல் பாவனை செய்தேன்.”
பார்த்தி சொல்கிறான் :
ஆறு மாதம் முன்பு, ஹரி வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லும் முன்பு, உடுப்பி ஓட்டலில் ஹரி சொன்ன கதையை கேட்டு உரக்க சிரித்தது எனக்கு ஞாபகம் வந்தது. சுசிதா விவரித்த சம்பவத்தில் டாக்சியில் அவள் சிரித்துக் கொண்டே வந்ததற்கும் நான் சிரித்துக்கொண்டே ஹரி சொன்னதை கேட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆறு மாதத்தில் ஏற்பட்ட படிநிலை மட்ட மாறுதல்கள் இன்று நிறுவனத்தில் என்னை உயர் அதிகாரியாக ஆக்கியிருக்கிறது. அதன் காரணமாக வாடிக்கையாளரொருவரை காண்பதற்காக சுசிதாவுடன் ருத்ரபூர் செல்லுகையில் நடந்த உரையாடலின் போது விமான சம்பவத்தின் இன்னொரு கோணம் எனக்கு தெரிய வந்தது. இதே சம்பவத்தைப் பற்றி ஆதித்யா என்ன சொல்லக்கூடும்? ஆதித்யா எனக்கு தெரிந்தவரில்லை. அவர் கோணம் எனக்கு தெரிய வாய்ப்பேயில்லை.
அவசர அவசரமாக ஹரி சிற்றுண்டிக்காக என்னை வெளியே அழைத்துக் சென்றதும், அதே பொருட்காட்சியின் போது ‘ஹரி ஏதேனும் சொன்னாரா?’ என்று சுசிதா என்னிடம் கேட்டதும், சுசிதாவுடனான உரையாடலின் வழியை கற்பிதமான முக்கியத்துவத்தைக் கொண்டு நானே அடைத்துவிட்டதும், மாதங்கள் கழிந்த பின்னர் ஹரி நிறுவனத்தில் இல்லாது போன பின்னர் சுசிதாவின் கோணம் எனக்கு தெரிய வருவதும் என விமான சம்பவம் தறுவாய், சூழல் மாற்றங்களுக்கிடையில் புதுப்புது நிறங்களுடன், புதுப்புது அர்த்தங்களுடன் வெப்ப நீரூற்றைப்போல் கொந்தளித்தவாறிருக்கிறது.
பார்த்தி பின்னொரு சமயம் ஒரு வலைதளத்தில் வாசித்தது :
என் தோழி S-இன் வரவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன். அதிகாலை புறப்படும் விமானத்தில் நான் மும்பை செல்கிறேன். S-ம் மும்பை செல்கிறாள். அவள் செல்வது தன் நிறுவனம் பங்கு கொள்ளும் கண்காட்சியில் கலந்து கொள்ளச் செல்கிறாள். நான் மும்பை செல்கிறேன் என்று சொன்ன போது S-இன் கணவர் எனக்கு S மும்பை செல்லும் விஷயத்தை தெரியப்படுத்தினார். S-ம் நானும் பக்கத்து இருக்கைகளில் உட்காருமாறு முன்பதிவும் செய்து கொடுத்தார்.
’நான் கிளம்ப தாமதமாகிவிட்டது ; நீ செக்-இன் செய்து கொள் ; சிறிது நேரத்தில் அங்கு வந்து சேருகிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். விமான நிலையத்துக்கு வந்து செக்-இன் செய்துவிட்டு பாதுகாப்பு பரிசோதனைக்கான வரிசையில் எனக்கு முன்னதாக H நின்றிருந்தான் ; H என் பழைய பரிச்சயம். சில வருடங்கள் முன்னால் நானும் H -ம் ஒரே நிறுவனத்தில் வேலை செய்திருந்தோம். அவன் கொஞ்சம் குண்டாக கொழுகொழுவென்று இருந்தான். அவன் அங்கவளைவுகளை அவன் வித்தியாசமாக நினைக்காத படி பார்த்துக்கொண்டே சில நிமிடங்களுக்கு பேசிக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்னர் என் வாழ்வில் நடந்தேறிய அதிரடி நிகழ்வுகளைப் பற்றி அவன் இன்னும் கேள்விப் படவில்லை போலும். கேள்விப் பட்டிருந்தால் என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல் கடந்து சென்றிருக்கலாம்.
“அலமாரியில் இருப்பவர்கள்” என்ற ஆங்கிலச் சொற்றொடர் எத்துனை பொருத்தமானது. இருண்ட அலமாரிக்குள் தாழ் போட்டுக்கொண்டு மூச்சுத் திணறியபடி பல ஆண்டுகள் இருந்துவிட்டேன். நடுவில் பெற்றோரின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் திருமணம் செய்து கொண்டேன். முதல் வருடம் ஒரு மாதிரி சமாளித்தேன். மனைவி ஒரு வித்தியாசத்தையும் கண்டு பிடிக்கவில்லை. அவளுக்கு பாலுறவில் விருப்பம் குறைவாக இருந்தது அல்லது நானாகவே அப்படி நினைத்துக் கொண்டேன். ஆடவர்கள் மேல் ஈர்ப்பு இருந்தாலும் திருமண உறவில் இருந்தவரை ஒழுக்கம் பிறழாமல் பற்றுறுதியுடனேயே இருந்து வந்தேன். இரண்டாவது வருடம் இடைவெளி பெருக ஆரம்பித்தது. விவாகரத்து கேட்டாள். விலகிக் கொண்டோம். விவாகரத்து பெறும் சமயத்திலும் என் (முன்னாள்) மனைவிக்கு என் பாலியல் சார்பு பற்றிய ஐயம் தோன்றவில்லை என்றே எண்ணுகிறேன். மனைவியே கண்டு பிடிக்க முடியாமல் போன போது கூட சேர்ந்து வேலை செய்த நண்பர்கள் எப்படி கண்டு பிடித்திருக்க முடியும்!
நிலையான துணை இல்லாமல் காலத்தை கழிப்பது சொல்லொணா அவஸ்தையை உண்டு பண்ணிற்று. வறண்ட பாலைவனத்தில் பயணிப்பவனுக்கு எப்போதாவது பருகக் கிடைக்கும் நீரைப் போல இரண்டு – மூன்று தற்காலிக உறவுகள் ; ஆனால் எதுவும் நிலைக்கவில்லை. விரக்தி அதிகமான ஒரு நாளில், விளைவுகள் பற்றி யோசிக்காமல், நிதானமிழந்த தருணத்தில் ஒரு விபத்து நடந்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞனின் பின் பாகத்தை அவன் சம்மதமில்லாமல் தொட்டு விடவும் பிரச்னை வெடித்தது. நடந்த சம்பவத்துக்கு எல்லோர் முன்னிலையிலும் அந்த இளைஞனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். பாலியல் சிறுபான்மையரின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை சிறிதேனும் இல்லாத இந்திய நிறுவனச் சூழல் ; முகத்துக்குப் பின் கேலி செய்யும் சக ஊழியர்கள் ; அனுதாபம் காட்டிக் கொண்டே உள்ளூர மகிழும் மேலதிகாரிகள். நல்ல வேளை, அடிப்படையில் என் நிறுவனம் சர்வ தேச நிறுவனம். விஷயம் தலைமை அலுவலகத்தை எட்டியது. ‘ஹோமொபோபிக்’ மனோபாவங்கள் வெற்றி பெறா வண்ணம் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு மாத கட்டாய விடுமுறையில் இருந்த நான் கவுரவத்துடன் பணியில் திரும்பச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.
H சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான். அவன் வேலை செய்யும் நிறுவனத்தைச் சொல்லவும் எனக்கு ஆச்சர்யம். S வேலை செய்யும் அதே நிறுவனம். S -ஐப் பற்றி விசாரித்தேன். அவனும் அவளும் ஒரே அணியில் வேலை செய்வதாகச் சொன்னான்.
அவன் போர்டிங் கேட்டுக்குச் சென்ற பிறகு S இன் வரவுக்காக காத்திருந்தேன். எப்போதும் போல் அன்ன நடை போட்டு தாமதமாக வந்தாள். விமானத்துள் சென்று நாங்கள் அமர்ந்தவுடன் H அதே விமானத்தில் வந்திருக்கிறான் என்று சொன்னேன். பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்திருப்பான் என்று சொன்னேன். அவள் ஆர்வம் காட்டவில்லை. ”தூக்கம் வருகிறது ; இறங்கும் போது சந்தித்துக் கொள்ளலாம்” என்று சொன்னாள். விமானம் பறக்குமுன்னரே தூங்கிப் போனாள்.
சில நிமிடங்களில் அவள் தலையை என் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அவள் வலக்கையை என் தொடைப்பகுதியில் போட்டுக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். டியோடரண்ட்-டின் வாசத்தை முகர முடிந்தது. அவளின் மார்புகள் அளவாக விம்மின. அவள் வலக்கையால் என் இடக்கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள். பல வருடங்களாகக் செய்யாத ஒன்றை அப்போது நான் செய்தேன். அவள் கையை விலக்கிக் கொண்டு அவள் முதுகுப் புறத்தை தொட்டேன். திருமண வாழ்க்கையின் துவக்க காலம் ஞாபகத்தில் வந்தது. ஒரு வருட தாம்பத்ய வாழ்க்கையில் என்னுடைய ‘ஓரியெண்டஷனை’ என் மனைவி கண்டு பிடிக்க முடியாது போன காரணம் எனக்கு புரிந்தது. அவள் கழுத்துப் புறத்தை வருடிக்கொண்டிருந்தேன். ஒரு சமயம் என் வலக்கை அவளின் கூந்தலை தடவியது. குற்றவுணர்வும் ஆனந்தவுணர்வும் ஒரு சேரப் போட்டியிட்டன. அதுவரை என்னைப் பற்றி நானே அறிந்திராத ஓர் அம்சத்தை அறிய வைத்தன.
“என் கணவரின் வடிவான பின் பாகத்தை நோட்டமிடாதே” என்று என் கன்னத்தை கிள்ளியிருக்கிறாள் ; தன் இரு கைகளால் இதமாக என் தோள்களுக்கு மசாஜ் செய்திருக்கிறாள் ; டிஸ்கோ-க்களில் என்னுடன் சேர்ந்து குதியாட்டம் போட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் தோன்றிராத உணர்வு அன்று அந்த விமானப்பயணத்தில் என்னுள் எழுந்தது. ஆனந்தவுணர்வு சரி-தவறு என்ற சமூக அளவுகோல்களுக்குள் அடங்காது என்பதை பல வருடங்களுக்கு முன்னாலேயே உணர்ந்த எனக்கு ஆனந்தானுபவத்தின் இன்னொரு புது கால்வாய் அந்த ஆகாய விமானப் பயணத்தின் போது திறந்தது.
விமானம் தரையிறங்கத் தொடங்கியதும் S விழித்துக் கொண்டாள். விமானம் தரை தொட்டதும் ‘பை’ சொல்லிவிட்டு வேகமாக முன்னாள் சென்று முதலாவதாக விமானத்திலிருந்து இறங்கிச் சென்றாள். H-ஐ தவிர்க்கிறாளோ? ‘டெர்மினலை’ அடைந்த நான் என் ‘லக்கேஜ்’க்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. என்னுடைய ‘லக்கேஜும்’ H-ன் ’லக்கேஜும்’ கடைசியாக வந்தன. Hம் நானும் ‘லக்கேஜ்’ வந்தபிறகும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். S-ஐ அவன் விமானத்தில் பார்க்கவில்லை என்று தோன்றியது. S விமான நிலையத்துக்கு வெளியே எனக்காகவோ H -க்காகவோ காத்திருக்கவில்லை. என்னைத் தவிர்க்கிறாளோ? நான் S-ஐ சந்தித்தது அன்றே கடைசி.
பார்த்தி சொல்கிறான் :
வலைத்தளத்தில் எழுதுபவரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அது ஆதித்யாவாக இருக்க சாத்தியமேயில்லை. ஏனெனில் உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இந்திக்காரன் ஆதித்யா தமிழில் எப்படி எழுத முடியும்? வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதி. பதில் வந்தால் கடிதத்தின் இறுதியில் எந்தப் பெயரில் ஒப்பம் இடப்பட்டிருக்கிறது என்று பார்த்து விடலாம். அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. யாரோ எழுதிய கற்பனைக் கதை இது என்றே கொண்டாலும், சில வருடங்களுக்கு முன்னர் இரு விதமாகக் கேள்விப்பட்ட ஒரே சம்பவத்தின் நீட்சியாகவே எனக்கு தோன்றியது. ஹரியும் சுசிதாவும் என் தொடர்பில் இல்லை. ஆதித்யாவை நான் அறிந்ததில்லை. இம்மூவரின் அனுபவத்தில் ஒரு நேரடிப் பாத்திரமாக நான் பங்கு பெறவில்லை. ஒவ்வொருவரின் பார்வையிலும் சொல்லப்பட்ட அனுபவ விவரணைகளை (கற்பனையான மூன்றாவது விவரணையையும் சேர்த்து!) ஆணாதிக்க மனோபாவத்தில் தொடங்கி பெண் மைய நோக்கு வழியாக வேற்றுமை தாண்டிய அன்புணர்வு நோக்கிய என் உருவகப் பயணத்தின் விவரணைகளாக எடுத்துக் கொண்டேன்.