மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது .
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு ‘இருளில் அலையும் குரல்கள்’ என்ற பெயரில் வெளிவர காத்து நிற்கின்றது. 2009 ஆண்டில் வல்லினம் அச்சு இதழில் தொடராக வெளிவந்த சீ.மு வின் “செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம்” என்னும் அனுபவக்கட்டுரையைச் சார்ந்து இக்குறுநாவலின் கதைகள் சில அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குறுநாவல்களை உள்ளடக்கிய இந்த தொகுப்பு அவரின் வழக்கமான களமான தோட்டபுறத்தை அழுத்தமாக பதிவு செய்யும் வெவ்வேறு மூன்று கதைகளைக் கொண்டுள்ளது. ஆனால் மூன்றுக்கும் நூலிழையாக ஒரு மெல்லிய தொடர்பு நீள்கிறது. வாசகனின் கவனமான வாசிப்பில் அந்த தொடர்புகளை அறிய முடியும்.
குறுநாவல்களுக்குச் செல்வதற்கு முன் இந்த நூலில் இடம்பெற்றுள்ள இரண்டு முன்னுரைகள் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றன. ரெ.கார்த்திகேசு எழுதியுள்ள முன்னுரையில் ‘சீ.முத்துசாமியை தான் எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் என்று வர்ணிப்பதற்கான காரணத்தை, சீ.மு வின் எழுத்து பலத்தையும் புனைவின் தன்மையையும் அடிப்படையாக வைத்து விளக்கியுள்ளார். சீ.மு வின் எழுத்து இலக்கிய பரிட்சயம் அற்ற எளிய வசகர்களுக்கு கடுமையானதாக இருக்கும் என்பதாலும், இலக்கிய அனுபவம் உள்ள வாசகர்கள் ( சீ.முவை விரும்பி வாசிப்பவர்கள்) எழுத்தாளர்களாக பரிணாமம் பெற்றிருப்பார்கள் என்பதும் ரெ.காவின் கருத்துகளாகும். ஆகவே சீ.முவின் எழுத்து எளிய வாசகர்களுக்குப் புதிரானது என்றும் அது எழுத்தாளுமை பெற்ற எழுத்தாளார்களுக்கே பல திரப்புகளைக் கொடுக்கும் என்னும் முடிவுக்கு ரெ.கா வந்துவிட்டார் என்று பொருள்கொள்ள முடிகிறது.
அதே போல் சிங்கை கமலாதேவி அரவிந்தன் எழுதியுள்ள மதிப்புரையும் சீ.முவின் எழுத்து சிறப்பும் செறிவும் கொண்டிருப்பதோடு தோட்ட மக்களின் பேச்சு மொழியைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் நேருகிறது என்பதை விளக்குகிறார். அதை அவர் ‘கித்தாக்காட்டு மொழி’ என்றே கூறுகிறார். “தோட்டப்புற மனிதர்களை வைத்து, பல கதைகள் மலேசிய இலக்கியத்தில் வந்துவிட்டன. ஆனால் தோட்டப்புறத்தை, தூர்வாரியெடுத்து, சகதியிலும் சாக்கடையிலும் சொத சொதவென்று நின்றுகொண்டே, கதைமாந்தர்களைப் பயணிக்க வைத்திருப்பது நாவல் இலக்கியத்தில் அருமையான கோணம்” என்பது கமலாதேவின் கருத்து. ஆகவே இப்புனைவை வாசித்து அனுபவிப்பது தனி அனுபவமாக நிலைக்கிறது என்பது அவர் கருத்து.
நான் மேற்கண்ட இரண்டு மதிப்புரைகளையும் வாசகன், சீ.முவின் நூலுக்குள் நுழையும் முன் அறிவிக்கப்படும் மென்மையான எச்சரிக்கைகளாகவே பார்க்கிறேன். சீ.முவின் கலைந்த புனைவு உலகிற்குள் புகுந்து வாசகன் காணாமல் போய்விட அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த மதிப்புரைகளை வாசிப்பது அவசியமாகிறது.
ஆனால் சீ. மு தனது கலைந்த கதைத் திட்டத்தை எளிமையானது என்பதோடு, சா.கந்தசாமி சொன்னதுபோல் கதையில் இருந்து கதையை நீக்கும் முறை என்று விளக்கியுள்ளார்.
என் வாசிப்பில், அடர்ந்த திணை விபரனங்களுக்கும் முன்னும் பின்னுமாக நகரும் மன ஓட்டங்களுக்கும் பின்னே மறைந்து வளரும் மைய கதையை கண்டடையும் பணியை சீ.மு வாசகனிடமே விட்டு விட்டார் என்றே கூறலாம்.
இந்த குறுநாவல் தொகுப்பில், அகதிகள், விளிம்புகள், இருளில் அலையும் குரல்கள் ஆகிய மூன்று குறுநாவல்கள் அடங்கியுள்ளன. பொதுவாக குறுநாவல் என்பது சிறுகதைகளுக்குறிய ஒருமையும் முடிவற்ற முடிவும் கொண்டும் நாவலுக்குறிய விரிவும் பல கதாமாந்தர்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்பது குறுநாவல் இலக்கணமாகும். ஆயினும் நான் குறுநாவலுக்கான இலக்கண விசாரணைகள் இன்றி, மூன்று படைப்புகளையும் வாசித்த அனுபவத்தை மட்டுமே பதிவு செய்கிறேன்.
கதை சொல்லல் என்பது ஒரு வாசகனை அல்லது வாசக குழுவை கதைக் களத்திற்கு உணர்வு பூர்வமாக அழைத்துச் சென்ற பின் நிகழ்த்தவேண்டிய அடுத்தக் கட்ட செயல்பாடு என்பதில் சீ.மு திடமாக இருப்பது இவரது மூன்று குறுநாவல்களும் உணர்த்துகின்றன. கதாநாயகன் அல்லது நாயக பாத்திரம் என்று ஏதும் இல்லாமல் களத்தில் ஜீவிக்கும் அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருட்களையும் பல கோணங்களில் வியந்து விலாவாரியாக கூறிவிட்டு பின் சட்டென அந்த பேச்சை முடித்துக் கொண்டு அடுத்ததற்கு தாவி விடும் கதைச் சொல்லியின் பாணி வாசகனின் களம் குறித்த பார்வையை கதை இறுதி வரை விரிவாக்கிக் கொண்டே போகிறது. கண்ணில் படும் சில துண்டு காட்சிகள் கூட உயிர்புடன் நிழலாடும் படி கதையை நகர்த்தும் சீ.மு கொஞ்சமும் பதற்றமோ அவசரமோ இல்லாமல் புனைவின் மையக்கதையை மிகவும் மறைவாகவே வைத்துள்ளார்.
ஒருவைகையில் சீ.முவுக்கு கதை என்று தனியாக எதையும் சொல்லும் ஆர்வத்தைவிட தன் அனுபவங்களை சிந்தாமல் சிதராமல் பதிவாக்கும் போது வாசகன் கண்டுகொள்ளும் ‘கதை’யே முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. களத்தில் இருக்கும் வீடுகள், கட்டில், மூட்டைப்பூச்சி, குஞ்சீத்தா கோழி, மலக்கூடம், கோயில், கோயிலில் சுற்றித்திரியும் புறாக்கள், ஆறு, காட்டுப்பன்றி, நாய்கள் என்று பலவற்றையும் முதன்மைபடுத்தி வைக்கும் சீ.மு கதையை மட்டும் திணைபுலத்துக்குப் பின்னால் ஒளித்துவைத்து வாசகனிடம் விளையாடுகிறார்.
சாமிக்கண்ணு- பாப்பம்மாள் இணையரின் பிள்ளைகள் ராதா, ஜெயா, பெரியவனே என்றழைக்கப்படும் கிருஷ்ணா, முனுசாமி – பாப்பம்மாள், டீக் கடை நாயர், பெரியான், அலாவூடின் முனியான்டி, சன்னாசிக் கிழவன்- மலயா, தற்கொலைகளை செய்து கொண்டு செத்துப் போன அவர்களின் மகள், கைம்பெண் லட்சுமி, மாரியாயி, ராஜமாணிக்கம், சிவகாமி என்று பல கதாமாந்தர்கள் இக்கதைகளில் வளம் வந்தாலும் அவர்கள் யாரும் தனிச் சிறப்பு பெற்று இருக்கவில்லை. மேலும் சொல்வதென்றால், நாகரிக உலக அடையாளங்கள் அற்று இயங்கும் ரப்பர் தோட்டக் காட்டில் பல்வேறு உயிரினங்களோடு சேர்ந்து வாழும் சமானிய உயிர்களாகவே அவர்கள் வாழ்கின்றனர். உதாரணமாக விளிம்பு குறுநாவலில் சீ.மு, குஞ்சீத்தா கோழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையே காளி என்ற மனிதனுக்கும் கொடுத்திருக்கிறார். அந்த கோழிக்கு ஒதுக்கிய பகுதிகளினும் இந்நாவலின் உச்சக்கட்ட திருப்பத்திற்கு பங்காற்றும் காளிக்கு ஒதுக்கிய பகுதி குறைவாக உள்ளது.
இதை ஆசிரியரே ஓரிடத்தில் “ குச்சிக்காட்டிலிருந்த பெரும்பான்மை வீடுகள், வெறும் இரண்டு கால் ஜீவன்களான மனிதர்கள் மட்டுமே உலவிய தனி ராஜ்ஜியமல்ல! அது பிற ஜீவன்களுக்கும் தனது வெளிக்குள், இடமளித்து, சகல உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் நடமாடி உறவாடிய கூட்டுக் குடும்பம்” என்று எழுதுகிறார்.
ஆக, சீ.முவின் குறுநாவல்களின் மைய கதையை பிராதானப்படுத்தி தனித்துச் சொல்வதில் அப்புனைவுகளின் சிறப்பு குறந்துவிடும் என்றே நினைக்கிறேன். முப்பதில் இருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட, மின்சார வசதி அற்ற, ஏ.எம் ராஜாவும்-ஜிக்கியும் திரை இசை உலகில் முன்னனியில் இருந்த காலத்து தோட்டக் காட்டுக் கதையை தெரிந்து கொள்ள இன்றைய நவீன வாசகன் அந்த மண்ணில் முதலில் அழுத்தமாக கால்வைக்க வேண்டும். அங்கு ரப்பர் பாலின் வாசனையையும், பசும் புல்லின் வாசனையையும், புளித்த கள்ளின் நெடியையும், கழிப்பறைகளின் நாற்றங்களையும் உள்வாங்கும் திராணி அவனுக்கு வேண்டும். அங்கு சுதந்திரமாக உலவும் வளர்ப்பு பிராணிகளுடனும் காட்டு விலங்குகளுடனும் அவனுக்கு பழக்கம் ஏற்பட வேண்டும். அதன் பின்னே அங்கு வாழ்ந்து உரமானவர்களின் காதலையும், வருமையையும், தனி மனித ஒழுக்கங்களையும், சாதி வெறியையும், குடும்ப வன்முறைகளையும், சிவப்பு அடையாள அட்டையும் வேலை பெர்மிட்டும் ஏற்படுத்திய மன உடைவுகளையும் பற்றிய கதைகளைப் புரிந்து கொள்ளுதல் எளிதாகும்.
சீ.மு மலேசிய தமிழ் இலக்கியத்தின் தனித்த தனி அடையாளம். தமிழக திறனாய்வாளர்கள் முதலில் இவரின் படைப்புக்களை ஆய்ந்து விட்டு மலேசிய இலக்கியம் பற்றி பேச வேண்டும்.
அற்புதமான அறிமுகம்! தலைப்பு ‘இருளுள்’ என்றிருக்கவேண்டும், இருளில் அல்ல.
நானும் என் வாசிப்பனுபவத்தை இங்கு எழுதியுள்ளேன். எழுதிவிட்டு சீ.மு. படத்துக்காகத் தேடியபோதுதான் இங்கு வந்துசேர்ந்தேன்.
http://kurinjinet.blogspot.sg/2016/12/28.html
நன்றி!!