‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நான் சமீபத்தில் படித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. அளவில் சிறியது, ஆனால், நம் சிந்தனையைக் கிளறுவது. பள்ளிக் கல்வியாயினும், பல்கலைக்கழகக் கல்வியாயினும் அது மாணவர் மையக் கல்வியாக இருக்கவேண்டும் என்பதையே கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் நமது கல்வி பரீட்சை மையக் கல்வியாகவே இருக்கின்றது. இதன் விபரீதங்களை இந்நூலாசிரியர் நவீன் தன் சொந்த அனுபவங்கள் ஊடாக விபரிக்கிறார். அவர் பயிற்றப்பட்ட, அனுபவமுடைய பள்ளி ஆசிரியர். தன் தொழில் பற்றிய விழிப்புணர்வும் விமர்சன நோக்கும் உடையவர். பின்தங்கிய மாணவர்கள் என்று யாரும் இல்லை. குடும்ப, சமூகச் சூழலும், பள்ளிகளும், நமது கல்விமுறையும் மாணவர்களில் ஒரு கணிசமான தொகையினரைப் பின்தங்கியவர்களாக ஆக்கிவிடுகின்றன என்பதையும், ஆசிரியர்கள் புரிந்துணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதையும் அழுத்திக் கூறும் இந்நூல் கல்வியில் அக்கறையுடைய எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்றாகும்.
இந்நூல் வெளியீடு காணும் விபரங்கள்:
இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர்
திகதி: 11.10.2015 (ஞாயிறு)
நேரம்: மாலை 3.30 – 5.30 வரை