It is frequently a misfortune to have very brilliant men in charge of affairs. They expect too much of ordinary men.”
― Thucydides
பொதுவாக ஒரு பள்ளி ஆசிரியரின், பள்ளி,கல்வியமைப்பு,மாணவர்கள் பற்றிய கட்டுரைகள்-அதிலும் தன்னைப் பின் தங்கிய ஆசிரியனென்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கட்டுரைகள்- அவ்வளவு சுவாரஸ்ய மிக்கவையாக இருக்குமா என்று உங்களுக்குத் தோன்றலாம். அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டு இந்தப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். சுவாரஸ்யமென்பதை விட பொறுப்பும் ஆதங்கமும் மிளிர இவை எழுதப்பட்டிருக்கும் விதம் நிச்சயம் உங்களை வியப்பிலாழ்த்தி விடும்.எளிய, சிறிய வாக்கியங்கள், யாரையும் காயப்படுத்தாத அரவணைப்பு மனம் கொண்ட சிந்தனைகள் என விறு விறுப்புக்கு பஞ்சமில்லாத நடையொழுக்குடன் எழுதப்பட்டவை இவை. ஒவ்வொரு கட்டுரை முடியும் போதும் எவ்வளவு சமூகக் கரிசனம் மிக்க செய்திகளைச் சொல்லியிருக்கிறார் இவர் என்று தோன்ற வைக்கிறார் நவீன்.
“Give me six hours to chop down a tree and I will spend the first four sharpening the axe.”
என்று ஆபிரகாம் லிங்கன் சொல்லுவார். இது வார்த்தைக்கு வார்த்தை மலேசியக் கல்விக்கு மிகவும் பொருந்துவது போல் இருக்கிறது. ஆறாவது ஆண்டில் நடத்தப் பெறும் யூ பி எஸ் ஆர் தேர்வுக்கு,ஐந்து ஆண்டுகள் வாளாவிருந்து விட்டு ஆறாவது ஆண்டில் மாணவர்களைத் தயார்ப் படுத்தும் அபத்தங்கள் பற்றி தீவிரமாகப் பேசுகிறார் நவீன். அவர், ’வெற்றியின் கூச்சல்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் முதல் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக மாணவர்களைத் தயார் படுத்தாமல் ஆறாவது ஆண்டில் அவ்வளவையும் திணிக்கும் அபத்த நடை முறையால் தேர்வுக்கு முன்பான இறுதி வாரங்களில் மாணவர்கள் மந்திரித்து விடப்பட்டது போல திரிவதை வருத்தம் பொங்க பதிவு செய்கிறார். ஆறு மணிநேரம் தந்தால் நான்கு மணி நேரம் கோடாரியைத் தீட்டுவதற்கு செலவழிப்பேன் என்று லிங்கன் சொல்வது போல அல்லவா ஓரோர் ஆண்டாக மாணவர்களைத் தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும். சாகப்போகிற நேரத்தில சங்கர சங்கரான்னு சொல்ற கதையால்ல இருக்கு என்று இங்கே ஒருசொலவடை சொல்லுவார்கள்.அதேபோல எப்படியாவது ‘ரிசல்ட்’ கொண்டு வந்து விடவேண்டும் என்ற முனைப்பில் திருட்டுத் தனம் செய்யக் கூட சில ஆசிரியத் தலைமைகள் முன் வருகிறதை, யார், எங்கே,எப்போது என்று ஒரு அரட்டைச் சம்பவமாகச் சொல்லாமல், (அது தேவையில்லை என்பதை உணர்ந்து) பொதுவான கல்வி முறை இது என்று சொல்லியிருப்பதில் நவீன் தன்னுடைய நோக்கம் என்ன என்பதைத் தெளிவு படுத்தி விடுகிறார்.
“கோவிலைக் கட்டி வைத்தது எதனாலே ? சிற்ப வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே.!” என்று பட்டுக் கோட்டையின் சினிமாப் பாடலொன்று உண்டு. அப்படிக் கலை வளர்த்துப் பண்பட்ட சமூகம் இன்று ஓவியம் ஒரு கல்வி என்றே ஒத்துக் கொள்ளத் தயங்குகிறது. உண்மையில் ஓவியம்தான் ஆதி மொழி. சித்திரங்கள் மூலமாகவேதான் மனிதன் தங்களுக்குள் தொடர்புகளை வளர்த்தெடுத்து வந்திருக்கிறான். பிற்பாடுதான் மொழி ஒரு சமூகக் கருவியாகிறது (Social Tool). அப்படிப்பட்ட ஓவியக் கல்வியை யூ பி எஸ் ஆர் தேர்வு நிலையின் ஆறாம் ஆண்டு பலி வாங்கி விடுகிறது. அந்தக் கல்வி முறையோ ’டிவ்யா’போன்ற கலைமகள்களைக் காவு வாங்கி,கல்விப் புலத்தை விட்டே விரட்டி விடுகிறது. இது பற்றிய ‘தூரிகைக் கரங்கள்’ என்கிற பதிவைப் படிக்கிற எந்த வாசகனும் அந்தப் பெண்குழந்தையின் வாழ்வு திசை மாறுவது குறித்து வலி கொள்ளாமல் இருக்க மாட்டான். உண்மையில் இப்படிப்பட்ட கலை வகுப்புகள்,இளம் வயதில் மாணவ மாணவியரின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும். ஆனால் ’யார் சொல்ல யார்கேட்க ’ என்றே நடைமுறையில் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.இதை ‘எளிய உள்ளங்களுக்காக அதிகாரம் வளையுமா’…என்கிற கேள்வியின் கனத்துடன் முடிக்கிறார் நவீன்.
‘மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்’
என்ற நிகழ்வில் வெளியீடு காணும் இந்த நூலைப் பெற கீழ்க்கண்ட விபரங்களை வாசிக்கவும்.
இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர்
திகதி: 11.10.2015 (ஞாயிறு)
நேரம்: மாலை 3.30 – 5.30 வரை