இந்த மாதம் எதிர்ப்பாராவிதமாக ‘இலக்கிய மாதமாக’ அமைந்து விட்டது. நவம்பர் 1, வல்லினம் கலை இலக்கிய விழாவும் அதைத் தொடர்ந்து 6,7-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்பும் சிறப்பாக அமைந்தன. அனைத்துலக தரம் வாய்ந்த சிங்கப்பூர் இலக்கிய விழாவில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் மிக அறிதாகவே கிடைப்பதாக அறிகிறேன். ஆக கடைசியாக இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் பேரா. ரே.கா அந்த விழாவில் பங்கேற்றார்.
சிங்கை எழுத்தாளர் விழா அந்நாட்டின் நான்கு மொழிகளுக்கும் சமமான வாய்ப்புகளையும் மரியாதையையும் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு விழாவில் மொத்தம் ஆறு தமிழ் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன. அவ்வகையில் தமிழுக்கென்று ஏற்பாடாகியிருந்த கருத்தரங்கு ஒன்றில் நானும் நண்பர் நவீனும் மலேசிய பிரதிநிதிகளாக கலந்து கொண்டோம். கருத்தரங்கின் தலைப்பு ‘இலக்கியம் வழி தேசிய அடையாளத்தை உருவாக்குவது’ என்பதாகும். அதே அரங்கில் சிங்கப்பூர் பிரதிநிதிகளாக கவிஞர் நெப்போலியனும் மேடை நாடக கலைஞர் செல்வாவும் கலந்துகொண்டனர். அரங்கின் தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் பணியாற்றினார்.
கருத்தரங்க தலைப்பு சிங்கப்பூர் பின்னனியை மையமிட்டிருந்தாலும் மலேசிய-சிங்கப்பூர் நாடுகளிக்கிடையே உள்ள பல்லின மத பண்பாட்டு தன்மை நமக்கு உரையாடவும் கருத்து பரிமாற்றம் செய்யவும் வாய்ப்புகளைக் கொடுத்தது. அதோடு சிங்கப்பூர் முன்வைக்கும் தேசிய அடையாளத்தையும் மலேசியாவில் நாம் எதிர்நோக்கும் தேசிய அடையாளச் சிக்கல்களையும் ஒப்புநோக்க இத்தலைப்பு வழிகோலுகிறது.
இலக்கியம் வழி தேசிய அடையாளத்தை கட்டியமைக்கும் பணி என்பது பொதுவாக பலராலும் பேசப்படும் கருத்தாக உள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகள் எழுத்தாளர்களிடமும் கலைஞர்களிடமும் முன்வைக்கும் முக்கிய வேண்டுகோளே படைப்பின் வழி தேசிய அடையாளத்தை உருவாக்க படைப்பாளிகள் பாடுபடவேண்டும் என்பதாகத்தான் உள்ளது. மலேசிய சூழலில் இப்போக்கு மிக முக்கியமான தேவையாக ஆளும் தரப்பினர் கருதுகின்றனர். ஆயினும் மலேசியாவில் தேசிய அடையாளம் என்றால் என்ன? எதை தேசிய அடையாளமாக கொள்வது? போன்ற முக்கிய வினாக்கள் தொடர்ந்து சர்ச்சையாகி வருவதையும் காணமுடிகிறது. சிங்கப்பூர் கலந்துரையாடலில் இச்சிக்கல் அங்கும் இருப்பதை உணரமுடிந்தது. சிங்கப்பூர் அரசாங்கம் முன் வைக்கும் தேசிய அடையாளம் எப்படி பட்டதாக இருக்கவேண்டும் என்பதில் பல மாறுபட்ட கருத்துகள் இருப்பதை அறிய முடிந்தது.
மலேசியாவில், தேசிய அடையாளம் என்பது இருவகை தளங்களில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. முதலாவது அரசியல் பின்புலத்துடன் கூடிய தேசிய அடையாளம். அடுத்தது பண்பாட்டு பின்புலத்துடன் கூடிய தேசிய அடையாளம் ஆகியனவாகும். இவை இரண்டும் சார்ந்தும் முரண்பட்டும் தொடர்ந்து செயல்படுவதைக் காணமுடிகிறது.
மலேசிய அரசியல் சட்டம் மலாய் மொழியை தேசிய மொழியாக அடையாளப்படுத்துகிறது. இதன்வழி இந்நாட்டில் மலாய் மொழியில் படைக்கப்படும் கலை இலக்கியப் படைப்புகளை மட்டுமே அரசாங்கம் அங்கீகரிக்கும் நிலை உருவானது. ஆயினும் இந்நாட்டில் மற்ற இனங்களின் தாய்மொழிகளாகிய சீனம் தமிழ் போன்ற மொழிகளில் படைப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. அவை பண்பாட்டுதளத்தில் தொடர்ந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு இனமும் தங்கள் தாய்மொழி படைப்புகளின் வழி மலேசிய மண்ணின் அடையாளத்தை தங்கள் படைப்பில் கொண்டுவரும் முயற்சியை தீவிரமாக செயல்படுத்தவே செய்கின்றன.
அரசியல் நோக்கம் கொண்ட தேசிய அடையாளம் என்பது கலை இலக்கிய பண்பாட்டுத் துறைகளில் ஒற்றை அடையாளத்தை நிலைபெறச் செய்யும் பணியையே செய்கிறது. அனைவருக்கும் ஒரு மொழி, அனைவருக்கும் ஒரு பண்பாடு போன்ற நிலைப்பாடுகள் பெரும்பான்மை சமூகத்தின் ஓட்டு வங்கியை நோக்கமாக கொண்டவையாகும். சிறுபான்மைகளின் பண்பாட்டு விழுமியங்களை உட்கிரகித்து தன்வயமாக்கும் நோக்கோடு அது செயல்படுகின்ன்றது. ஆகவே இச்செயல் சிறுபான்மை மக்களிடம் பதற்றத்தையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டதில் இருந்து முற்றாக அந்நியப்படுத்தி விடுகின்றது.
ஆயினும் பண்பாட்டு அடிப்படையிலான தேசிய அடையாளம் என்பது பன்மை தன்மை கொண்டதாக இருப்பது அதன் சிறப்பு. இதன் வெளிப்பாட்டை நாம் தேசிய தின கொண்டாட்டங்களிலும் சுற்றுலாதுறை தொடர்பான இயக்கங்களிலும் காணமுடியும். பல்லின மக்களின் உடை இசை கலை நடனம் போன்ற கலைவெளிப்பாடுகள் திரளான தேசிய அடையாளமாக காட்டப்படுகின்றன. மலேசியாவின் புறத்தோற்றம் பன்மை அடையாளமாக இருப்பதையே அரசு விரும்புகிறது என்பதை இதன்வழி உணரலாம்.
நாடு சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலகட்டங்களில் மலேசிய தலைவர்கள் “முகிபா’ என்னும் கருத்தியலை அதிகம் வலியுறுத்தினர். இதன் செயல்பாடு முற்றிலும் பண்பாட்டுத்தளத்தையே சார்ந்திருந்தது. பல்லின மக்களும் தங்கள் பாரம்பரிய அடையாளங்களைத் தொலைக்காமல் ஒன்று கூடி நாட்டின் மேன்மைக்காக பாடுபடும் பாங்கே அன்று விரிவாக பேசப்பட்டது. அன்றைய மலாய் திரைப்படங்களும் இலக்கிய படைப்புகளும் இந்த நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தின. பி.ரம்லி போன்ற திரைத்துறை ஆளுமைகள் முன்னிருத்திய தேசிய அடையாளம் பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கா வண்ணம் இருந்தது. அவாங் ஹாட் சாலே (Awang Had Salleh) எழுதிய பிரு வர்ணா (Biru Warna) நாவல் மத நல்லினக்கத்தின் உச்சங்களையும் மிதவாத போக்குடன் கூடிய இன ஒற்றுமையையும் அடிப்படையாக கொண்டிருந்தது.
ஆயினும் 80ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இனவாத அரசியல் நோக்கங்கள் மிகுந்ததோடு மத அடிப்படைவாத சிந்தனைகள் தோன்றியதால் ஒருமைவாத சிந்தனையே தேசிய அடையாளமாக முன்னெடுக்கப்படும் சூழல் இன்று மிகுந்துள்ளது.
பல்லின சமூக மக்கள் வாழும் ஒரு தேசத்தின் அழகியல் அதன் பன்மை தன்மைகளில்தான் மறைந்துள்ளது. பல்வேறு இன மனிதர்களும் கலை பண்பாடுகளும் இயல்பாகவும் செறிவாகவும் நெய்யப்பட்ட எழுத்துகளே மலேசியாவின் தேசிய அடையாளமாக நிலைக்க முடியும். இலக்கியத்தில் மலேசிய எழுத்து என்பதன் அடையாளம் அது மலேசிய மண்ணின் திணை சார்ந்த அடையாளங்களோடு மொழி, பண்பாட்டு அடையாளங்களையும் சிதைக்காவண்ணம் அமைந்திருக்க வேண்டும். அதுவே தேசிய அடையாளமாகவும் அமையும் என்பது உறுதி.