கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை
இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் தயாஜி அவர்கள் எழுதிய ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ – கவித்துவமான தலைப்பு – வல்லினம் இணைய இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளில் சிறந்தவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள். இது அவருடைய முதல் புத்தகம், பொதுவாக முதல் முயற்சி என்கிறபோது அதன் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் பாராட்டுவதே வழக்கம். என்றாலும் இவர் எழுத்துக்குப் புதியவரல்ல என்பதாலும் விமர்சனங்களை வரவேற்பவர் என்பதாலும் அதுகுறித்து சில விஷயங்கள் பேசலாம் என்று நினைக்கிறேன்.
பத்தி எழுத்துகளை நானும் விரும்பிப் படிப்பவன்தான். காரணம் அது சுருக்கமாக மற்றும் சுவாரசியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது. இன்று பத்திரிகைகளில் கட்டுரை என்று குறிப்பிடப்படுபவற்றில் பெரும்பாலானவை பத்திகள்தான். ஆனால் அதைப் ’பத்தி’ என்று குறிப்பிட மாட்டார்கள். அப்படிச் சொல்வதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. கட்டுரையாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் மரியாதை பத்தி எழுத்தாளர் என்று சொல்வதில் இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் உண்மையில் பத்தி எழுதுவதற்கு அதிகம் உழைப்பு தேவை. ஏனெனில் கட்டுரையை நீங்கள் எத்தனை பக்கம் வேண்டுமானாலும் நீட்டிக்கலாம், ஆனால் பத்திகளுக்கு மிகவும் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்கிறபோது அதற்குள் விஷயத்தைச் சொல்லிமுடிக்க நீங்கள் அதிகம் யோசிக்கவேண்டிய தேவையுள்ளது. எனவே பத்தி எழுத்துகளின் வீச்சு குறித்து உணர்ந்திருப்பவர்கள், அது என்னவென்று தெரிந்தவர்கள் தம்மைப் பெருமையாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Columnist என்ற சொல்வது இழிவானதல்ல. ஆனால் தமிழ் இலக்கியச்சூழலில் யாரையாவது நீங்கள் பத்தி எழுத்தாளர் என்று சொன்னால்… அதை அவர்கள் விரும்புவதில்லை. எழுத்தாளர், கட்டுரையாளர் என்று திருத்துவார்கள். அல்லது குறைந்தபட்சம் இன்னாருடைய Non-Ffiction writing என்று சொல்லச்சொல்வார்கள். இந்தப் புத்தகத்துக்கான முன்னுரை எழுதும்போது, இந்தப் பத்தியெழுத்து என்பதற்கு இலக்கணம், வரைமுறை என்று ஏதாவது உண்டா என சிறிது ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று.
அந்தவகையில் இதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய விஷயங்களைப் பேசுகிற, குரல் கொடுக்கிற எழுத்தாக உலகெங்கும் மாறியுள்ளது. பத்திகள் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பத்திகள் உண்டு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலைநாடுகளில் பத்தி எழுதுபவர்களை Columnist என்பார்கள். அவர்களை
- Advice columnist
- Critic
- Editorial opinion columnist
- Gossip columnist
- Humor columnist
- Food columnist
என்று பிரிப்பது வழக்கம்
Advice columnist – என்பது கேள்வி பதில்களாக சமகால வாழ்வில் உண்டாகும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பிரசித்தமான ஒரு எழுத்துமுறை. உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினையை நீங்கள் கடிதமாக எழுதினால் தீர்வு சொல்வார்கள்.
Critic – என்பவர்கள் விமர்சகர்கள், கலை, இலக்கியம், கட்டுமானம், உணவு போன்ற துறைகளில் விமர்சிப்பவர்கள்.
Editorial opinion columnist – சமகால அரசியல் சமூக நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனம் அடங்கிய பத்திரிக்கைத் தலையங்கம் எழுதுபவர்கள்.
Gossip columnist – பிரபலங்களைப் பற்றி, அவர்களது படைப்புகள் குறித்த விமர்சனங்களை பெயர் குறிப்பிடாமல் எழுதுபவர்கள். (கிசுகிசு)
Humor columnist – சமகால நிகழ்வுகளை, அரசியலை, நபர்களை பகடியாக விமர்சிப்பது. இதில் நகைச்சுவை ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும்.
Food columnist – உணவகங்கள், உணவுமுறைகள் குறித்த எழுத்து.
இதுபோக இன்று பங்குவர்த்தகம் மற்றும் அதன் போக்கு குறித்த பத்திகளும் வெளிவருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் குஷ்வந்த் சிங், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, குல்தீப் நாயர், ஷோபா டே, கன்வால் பார்தி போன்றவர்கள் பத்தி எழுத்துகளில் உலகளவில் அறியப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாமரன், ஞாநிசங்கரன் போன்றவர்களைப் பத்தி எழுத்தாளர்களாகக் குறிப்பிடலாம். சாரு நிவேதிதா, எஸ்.ரா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களும் கூடப் பத்திகளை எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு இணையத்தில் Blog, Facebook போன்றவற்றில் எழுதப்படுகிற எழுத்துகளைக்கூடப் பத்தி எழுத்துகளாகவே அடையாளம் காட்டுகிறார்கள்.
பத்தி என்பதன் விளக்கம் என்னவென்று பார்ப்போமானால்:
An article on a particular subject or by a particular writer that appears regularly in a newspaper or magazine. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்து அல்லது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரால் செய்தித்தாள் அல்லது பத்திரிகையில் தொடர்ந்து எழுதப்படும் எழுத்து. அந்த வகையில் யோசிக்கும்போது பத்தி எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துக்குள் இல்லாமல் free form போலத் தோன்றினாலும் ஒரு எளிமையான Formula பத்திகளுக்கு உண்டு. அதை 4S என்று சொல்வார்கள்.
- Make it short – அளவு – பொதுவாக ஒரு 1000 வார்த்தைகளுக்குள் சொல்லி முடிக்கவேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் இன்னமும் சிறப்பு.
- Make it simple – எளிமை – வாசகனின் அறிவுப்பரப்பு குறித்த தெளிவுடன் இருத்தல், அவனுக்குப் புரிகிற மொழியில், புரியக்கூடிய விஷயங்களை மட்டுமே பேசுவது.
- Make it sound – தெளிவு – உங்கள் எழுத்து உங்களுடைய தரப்பைத் தெளிவாகப் பேசவேண்டும். உங்களுடைய கருத்துகளை தெளிவாக எடுத்து வையுங்கள்.
- Make it sing – தனித்தன்மை – பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவது, தனித்தன்மையான வாக்கிய அமைப்புகளை உருவாக்குவது. உங்கள் எழுத்து மற்றவர்களிடமிருந்து தனியாகத் தெரியும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு நல்ல பத்தியை எழுதவும் அடையாளம் காணவும் இக்குறிப்புகள் உதவும். பத்திகள் கட்டுரையைப் போலவே ஒரு ஆரம்பம் அதாவது முன்னுரை மற்றும் உடல்பகுதி, முடிவுரை என்று மூன்று விதமாக பகுக்கக் கூடியதாக இருக்கும். பத்திகளில் தன்னிலை வாக்கியங்கள் குறைவாக இருக்கவேண்டும், அடிக்கடி எழுதப்படக்கூடாது, அப்படி எழுதினால் அது சுயஅனுபவக் கட்டுரைகள் அதாவது Anecdote என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள், அந்த வகைமைக்குள் வந்துவிடும். எனவே சுய அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுவோமானால் அதைப் பத்திகள் என்று சொல்லக்கூடாது. ஒரு நிகழ்வில் ஏதேனும் ஒரு சார்புநிலையில் இருந்து எழுதப்பட வேண்டும். இவ்வளவுதான் பத்தி என்பதன் இலக்கணம்.
மேலும் பத்தி எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்…
- பத்தி எழுதுபவர்கள் ஒரு நிகழ்வில் ஏதேனும் தரப்பைத் தேர்ந்தெடுத்து எழுதுவது அவசியம், மதில்மேல் பூனை நிலை உதவாது.
- தம்முடைய தரப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
- அதேசமயம் எதிர்தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.
- ஒப்பீடுகளோடு கருத்தை விளக்குவது எளிதில் புரியவைக்கும்.
- தனி மனிதரையோ, அரசியல் சமூக நிகழ்வுகளையோ அல்லது சூழலையோ விமர்சிப்பதில் தவறில்லை, தைரியமாக விமர்சிக்கவேண்டும்.
- எழுத்தில் எப்போதேனும் சுய அனுபவம் சேர்வதும், உள்ளூர் சமாச்சாரங்களும் பத்தியை சுவாரசியமாக்கும்.
- உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கும் உண்மை நிகழ்வுகளைக் குறிப்பிடுங்கள்.
- களத்தில் இறங்கிச் செய்திகளை சேகரித்து அவற்றைத் தெரியப்படுத்துவது நல்ல உத்தி.
- உங்கள் கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருங்கள், மேம்போக்கான கருத்துகளை யாரும் ஒருபோதும் விரும்புவதில்லை.
- ஒரு சிக்கலில் வெறுமனே அதைக்குறை சொல்வதை விட்டுவிட்டு அதற்குத் தீர்வு சொல்ல முயலுங்கள். அதுதான் தேவை, குறை சொல்வது என்பது யாராலும் முடியக்கூடியதே.
இப்போது இந்த நூலைப்பற்றி…
உள்ளே இருப்பதைப் பேசுவதற்குமுன், வெளித்தோற்றத்தைப் பற்றிச் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். வல்லினம் பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் 70-80 பக்கங்கள் மட்டுமே இருப்பது என்னைப் போன்ற கனத்த புத்தகங்களைப் பார்த்தவுடன் ஆயாசமடைபவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம், சிறந்த கட்டுமானத்தோடு புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள், முன்னட்டை ஓவியங்கள் ஆகட்டும், பெரிய எழுத்துருவாகட்டும், இது வல்லினத்தின் புத்தகம் என்று தனித்த அடையாளத்துடன் பதிப்பிக்கிறார்கள். அது பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். வல்லினம் தொடர்ந்து இதேபோன்று தனித்தன்மையுடன் இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மலேசிய இலக்கியத்தில் பத்தி எழுத்துகளை முன்பே ரெ.கார்த்திகேசு எழுதியிருப்பதாக அறிகிறேன், நான் அதை வாசித்ததில்லை. வல்லினம் வெளியீடாக வந்துள்ள, ம.நவீனின் ‘கடக்க முடியாத காலம்’, யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ ஆகிய தொகுப்புகளை வாசிக்க முடிந்தது. அடுத்ததாக, தற்போது தயாஜியின் இந்தத் தொகுப்பு.
தயாஜியின் இந்தத் தொகுப்பிற்கான முன்னுரையில் சொன்னது போல இத்தொகுப்பின் மொழி, ஒரு கிராமத்துச் சொலவடை போல எளிமையைத் தன்னுள்ளே வைத்திருக்கிற மொழி. அது அவருடைய இயல்பும் கூட. அவரோடு பழகியவர்களுக்கு அது தெரியும். ஒரு கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு வரநேர்ந்த சிறுவன் ஒருவனின் குதூகலமும், ஆச்சரியமும், பயமும் ஒருங்கே கலந்த அந்த உணர்வு அவருடைய மொழியில் தெரியும். கூடவே ஒரு மெல்லிய அங்கதமும் அவருடைய மொழியில் இழையோடியிருப்பது சிறப்பானது.
நகரத்திற்கு வந்து இத்தனை வருடங்களாகியும், இந்நகரத்தோடு பல தளங்களில் தொழிற்பட்டும் தயாஜி தன்னுள் இருக்கும் அச்சிறுவனை இன்னமும் தொலைக்காமல் இருப்பதை அவருடைய அனுபவங்களை அவர் விவரிக்கும்போது தெரிந்து கொள்ளமுடிகிறது. அவருடைய எழுத்துகளை வாசிக்கையில் முதல் ஈர்ப்பு இதுவாகத்தான் இருக்கும். வெள்ளந்தியான மனதுடன் அதாவது வெகுளித்தனமாகக் கேட்கப்படும் எளிமையான கேள்விகளே எப்போதும், பதிலளிக்க முடியாத கேள்விகளாக இருக்கும். ஒரு குழந்தையின் எல்லாக் கேள்விகளுக்கும் உங்களால் நேர்மையாகப் பதிலளித்துவிட முடியாது. தயாஜியின் கேள்விகளும் அத்தகையதுதான்.
ஊரிலிருந்து வந்து உங்களுக்காக உழைக்கிற தமிழர்களை வெறுத்து ஒதுக்குகிறீர்கள், ஆனால் ஊரிலிருக்கிற, உங்களுக்காக எதுவுமே செய்யாத நடிகர்களை மட்டும் உறவென்று கொண்டாடுகிறீர்களே, ஏன்?
ஏன் இன்றைய வீடுகள் முதுபெற்றோர்கள் இல்லாமல் ஆகிவிட்டன? அவ்வீட்டிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் யார் கதை சொல்வார்கள்?
விவேகானந்தரைப் பார்த்து வணங்குகின்ற உங்கள் கண்களுக்கு அதனை அடுத்துள்ள ஒரு பிரதேசமும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களின் நிலையும் தெரிவதில்லையே ஏன்?
வெட்டி வீசப்படும் முடியைத் திருத்திக் கொள்வதில்கூட சாதி பார்க்கும் நீங்கள் அது இல்லாதது போல் நடிக்கிறீர்களே ஏன்?
இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்வதை மறந்து நாம் ஒரு சௌகரியமான மனநிலையில் இருக்கிறோம். அவர் அதை ஞாபகப்படுத்தும் விதமும் அதிலிருக்கும் நியாயமும் நமக்குச் சற்று எரிச்சலூட்டும் என்றாலும் அவை கேட்கப்படவேண்டிய கேள்விகள்தான். வெளியிலிருந்து நகரங்களுக்குப் பெயர்பவர்கள் வெகுசீக்கிரமே ஒரு மனிதமற்ற விநோத குணத்துக்குள் தங்களைத் திணித்துக் கொள்வதும் – ஒட்டுமொத்த நகரமும் ஒரு கூட்டுமனம் போல ஒரேமாதிரி சிந்திப்பதையும் கவனித்து வியந்திருக்கிறேன். நகரம் மனிதர்களை இப்படி ஆக்குகிறதா? இல்லை மனிதர்கள்தான் நகரத்தை இப்படியாக்கி விட்டார்களா? எனக்குத் தெரியவில்லை. நான் நகரங்களிலிருந்து வீடு திரும்புகையில் நினைத்துக்கொள்வது; நகரம் என்பது ஒரு தனி உயிரி. அவ்விலங்கிடம் சிலரால் இணக்கமாக முடிகிறது, சிலர் வெருண்டு ஒதுங்குகிறார்கள், சிலர் வேறு வழியில்லாமல் அதனோடு உண்டு உறங்குகிறார்கள். தயாஜியும் அப்படியான சிந்தனைகளைத்தான் இக்கட்டுரைகள் மூலமாக முன்வைக்கிறார். ஒரு கிராமத்து இளைஞனான அவரால் இந்நகரத்து நியாங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தயாஜியைப் போன்ற இன்னமும் மனிதம் மிச்சமுள்ள இளைஞர்களாலேயே நகரம் முழுமையாக நரகமாகாமல் இருக்கிறது என்பேன்.
இந்தத் தொகுப்பில் சில பெண்கள் வருகிறார்கள். ‘ஊர்க்காரர்கள்’ கட்டுரையில் வரும் பூக்காரப்பெண், சன்னிலியோன் கட்டுரையில் வரும் குழந்தைகளின் தாய், பாவக்கணக்கு என்ற தலைப்பில் ஒரு திருமணமான ஆணை நம்பி வரும் விடலைப்பெண், வாசனையுள்ள அறைகள் தலைப்பில் வரும் விலைமாது. இவர்களிடத்தில் என்னால் ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடிந்தது. எல்லோருமே நகரத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது கையறுநிலையில் உள்ளவர்கள். நகரம்தான் அவர்களை மறைமுகமாக ஆட்டுவிக்கிறது. உங்களால் ஒருபோதும் நகரத்தை ஜெயிக்க முடியாது. இதுதான் நகரங்களுக்கான நியாயம்.
தொகுப்பிலுள்ள முக்கியமான கட்டுரையாக ‘ஒளிபுகா இடங்களின் ஒலி,’ ‘விவேகானந்தரும் விலைமாதர்களும்,’ ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்,’ ஆகிய கட்டுரைகளைக் குறிப்பிடலாம். குறிப்பாக விவேகானந்தரும் விலைமாதர்களும் என்கிற அக்கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வரும் கடைசிக்கட்டுரையும் ஒரு சிறுகதைக்குண்டான சுவாரசியத்துடன் உள்ளதைக் கவனிக்க முடிகிறது. அவர் சிறுகதை எழுதக்கூடியவர் என்பது அறிந்த ஒன்றே. கல்குதிரையில் அவர் எழுதிய ’இன்னொரு கிளை முளைக்கிறது’ என்ற சிறுகதை நிச்சயமாக மலேசிய இலக்கியத்தில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்று. அந்தவகையில் அவர் Onetime wonder ஆக இல்லாமல் அதுமாதிரியான சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என் ஆசை.
சாமி யார்? என்ற கட்டுரையில் சிறு வயதில் அவர் சாமியாராக ஆசைப்பட்ட விஷயத்தைக் குறிப்பிடுகிறார். இன்றைய தேதியில் மரத்தடி முதல் கார்ப்பரேட் வரை சாமியார்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கும் சொல்வாக்கும் நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இதை 15-20 வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருக்கும் தயாஜியிடம் ஏதோவொரு சக்தி இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது. எனக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசைதான். அதேசமயம் ’வெறும் செருப்பு’ சொல்லும் தத்துவார்த்தநிலை, அதாவது மாளாத சோகத்திலும் ‘மர்லின் மன்றோ’வை நினைக்கும் அந்தத் தத்துவார்த்த மனநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும் என்ற கேள்வியும் எனக்கு வருகிறது. துறவறம் மேற்கொள்வதற்கான அடிப்படைத்தகுதி அவரிடம் வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
தொகுப்பில் வெகுசில இடங்களில் தயாஜியின் எளிமையான மொழி ஒரு போதாமையாக இருக்கிறது. அதாவது அவருடைய பலமே பலவீனமாகவும் இருக்கிறது. தொடர்ந்து ஒரேகுரலில் ஒரேவிதமாக விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போவது Monotonous ஆகத்தோன்றுகிறதுதான். குறிப்பாக பண இலை, சாதி மயிர், கலீல் ஜிப்ரான் போன்ற கட்டுரைகளில். ஆனால் நிச்சயமாக அடுத்த தொகுப்பில் அது மாறுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் தொடர்ந்து வாசித்து, தொடர்ந்து எழுதுகிறார். ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுக்கிறார் என்பதால், விரைவில் அவர் மொழி இன்னமும் வலுவானதாக மாறும். அதற்கு கல்குதிரையில் வந்த சிறுகதையே ஒரு உதாரணம். முன்னம் சொன்னது போல சொலவடை போன்ற அவருடைய எளியமொழி அதைப்போன்றே புரிந்துகொள்ள பல திறப்புகள் உள்ளதாகவும் மாறும்நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆரோக்கியமான தகவல்கள் பத்தி எழுத்தின் மூலவர் உயர்திரு பாரதியார் என்கிறார் ஆய்வாளர் சலபதி அவர்கள் ..பத்தி எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்கள் மனங்கொள்ளத்தக்கது .வாழ்த்துக்கள் .
Very useful article .
மிகவும் தெளிவாக பத்தி விளக்கம் , இதை எழுதிய திரு ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களுக்கு மிகப் பெரிய
பாராட்டுக்கள்.