மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல கட்சிக்காரர்கள் தத்தம் அரசியல் நடத்தவும் இத்தளங்கள் பயன்பட்டன என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இவ்விரண்டு தளங்கள் குறித்தும் அவ்வப்போது சில சீண்டல்கள் வருவதும், அந்தச் சீண்டல்களுக்கு அவ்வப்போது எதிர்வினையாற்றி சமூகம் சட்டென அடங்குவது மீண்டும் சீண்டப்படும்போது எகிறி குதிப்பது என்றே காலம் கழிகிறது.
இந்த நெடிய சீண்டல்களில் உதயசங்கர் எஸ்.பி என்பவர் மிகச்சிறிய துரும்பு. தன்னை எழுத்தாளனாக மட்டுமே நிறுவிக்கொண்டு ‘காவியன்’ எனும் அமைப்பின் மூலம் இயங்கி வருபவர். மலாய் மொழியில் புனைவுகளை எழுதும் இவர் அரசிடமும் எதிர்க்கட்சியினரிடமும் எப்போதுமே நல்லப்பிள்ளையாக இருப்பவர். முழுநேர எழுத்தாளன் என தன்னைக் கூறிக்கொள்ளும் உதயசங்கர் எஸ்.பி தான் எழுதும் இணைய ஊடகங்களுக்குக் கவனத்தை அதிகப்படுத்த அவ்வப்போது சர்ச்சையான ஏதாவது ஒன்றைத் தொட்டு எழுதுவது வழக்கம். அவ்வாறு எழுதுவதன் மூலமே அவருக்கு வருமானம் கிடைக்கும். எளிதாகச் சொல்வதென்றால் இவர் இணைய எழுத்துக்கூலி. இந்த எழுத்துக்கூலி சமீபத்தில் தமிழ்ப்பள்ளிகள் குறித்து முன்வைத்தக் கருத்துகள் பெரும் சர்ச்சையானது. அந்தக் கருத்தையும் அதை ஒட்டி அவர் கொடுத்த நேர்காணலில் உள்ள கருத்துகளையும் பின்வருமாறு தொகுக்கலாம்.
⦁ தமிழ்ப்பள்ளியில் பயின்று யூ.பி.எஸ்.ஆரில் ‘ஏழு ஏ’ எடுத்த சில இடைநிலைப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அடைவு நிலைகள் படு மோசமாக உள்ளன.
⦁ அவர்களில் பலர் இடைநிலைப்பள்ளி சோதனையின் போது காப்பியடித்ததால் மாட்டிக்கொண்டு நெறிவுரைஞரிடம் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
⦁ ஒன்றாம் ஆண்டு முதல் காப்பியடிப்பது ஏமாற்றுவது என எதை செய்தாவது தேர்ச்சி அடைய தமிழ்ப்பள்ளிகளில் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதை இடைநிலைப்பள்ளியில் அமுலாக்க முடியாமல் மாட்டிக்கொண்டு விழிக்கின்றனர்.
⦁ யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ எடுத்ததோடு போட்டி விளையாட்டிலும் சிறப்பான அடைவுநிலையை அடந்த மாணவனின் பெற்றோர், தன் மகன் தமிழ்ப்பள்ளியில் படித்தக் காரணத்தினாலேயே நல்ல இடைநிலைப்பள்ளியில் இணைக்க முடியாமல் உள்ளனர்.
⦁ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் மலாய்மொழியில் பேச திணருவதை உணரமுடிகிறது.
⦁ தமிழ்ப்பள்ளியில் இருந்து வந்து சாதித்தவர்கள் தங்கள் தேர்ச்சிக்குத் தமிழ்ப்பள்ளி மட்டுமே காரணம் அல்ல என அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.
⦁ தமிழ்ப்பள்ளி என்பது தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கும் ஒரு கல்விக்கூடம். அங்கு இந்து மதம் மட்டுமல்ல, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் படிக்கும் சூழல் உண்டு. ஆகையால் தமிழ்ப்பள்ளியைக் கல்விக்கூடமாகத்தான் பார்க்கவேண்டும். கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அங்கு போதிப்பதுகூடாது.
⦁ தமிழ்ப்பள்ளியில் கட்டாயம் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் எனச் சொல்லும் தலைமை ஆசிரியர்களும் அமைச்சர்களும் தங்கள் பிள்ளைகளை அவ்வாறு சேர்ப்பதில்லை.
உண்மையில் உதயசங்கர் மிகவும் தந்திரக்காரர். மதப்பிரச்சாரம் செய்பவர்கள் எதிர்மதத்தில் உள்ள உண்மையான ஒரு பலவீனத்தை நம் கண்முன் வைப்பர். அந்த உண்மைக்கு நாம் பதில் சொல்ல தினரும்போது அடுத்தடுத்த அவதூறுகளைப் பரப்புவது ஒரு உத்தி. உதயசங்கர் அந்த உத்தியைத்தான் இந்த விடயத்திலும் உபயோகித்துள்ளார். பெரும்பாலான தலைமை ஆசிரியரும் அமைச்சரும் நெஞ்சு நிமிர்த்து சொல்ல முடியாத தங்கள் பிள்ளைகளின் பள்ளிக்கூடம் தொடர்பான பலவீனத்தைக் கேள்வியாக மாற்றி, அதை ஒரு பாதுகாப்பு வளையமாகப் போட்டு அதற்குள் மற்ற அவதூறுகளை கட்டமைக்கிறார்.
உண்மையில் உதயசங்கரின் நோக்கம் அமைச்சர்களோ அல்லது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களோ தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்புவது அல்ல. தன்னை தன் கருத்தை மறுக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை என முன்னமே சொல்லிவைக்க அந்த வாசகத்தைப் பிரயோகிக்கிறார். பெரும்பாலான தலைவர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் வாய்த்திறக்காமல் போவதற்கு அந்த வாசகமே காரணமாக இருக்கிறது. ‘நம்ம சங்கதி தெரிஞ்சிடுமோ’ என்ற பயத்திலேயே பலரும் மௌனமாக உள்ளனர்.
இந்நிலையில் உதயசங்கர் எஸ்.பி போன்ற ஒரு துரும்பை பெரிது படுத்தாமல் அவர் கூறிய அபத்தமான கருத்துகளுக்குப் பொதுமக்களிடம் விளக்கம் சொல்வது நம் கடமையாக உள்ளது.
விளக்கங்கள்
⦁ “தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு” எனும் இயக்கத்தை விமர்சிப்பதாக எழுதப்பட்ட உதயசங்கர் கட்டுரை, தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும் ஒட்டுமொத்தமாக சிறுமைப்படுத்தவே முனைகிறது என யார் படித்தாலும் அறிவர். ஆனால் மிக நாசுக்காக தனது கோபம் இனத்தைப் பிரித்தாலும் அரசியல்வாதிகள் மீதென கலண்டுக்கொள்கிறார். அரசியல்வாதிகள் மீதுதான் அவரது கோபம் என்றால் அவர் தமிழ்ப்பள்ளிகளின் கல்விதரம் குறித்தோ ஆசிரியர்களின் நேர்மை, நம்பகத்தன்மை குறித்தோ எழுதவேண்டிய அவசியம் இல்லை.
⦁ காப்பியடிப்பதால் நெறிவுரைஞரிடம் அழைத்துச்செல்லப்படுவதில் நாடுமுழுவதிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கட்டுரையாளர் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. யூ.பி.எஸ்.ஆரில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற எல்லாவகை பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் அடைவு நிலை இடைநிலைப்பள்ளியில் என்னவாக மாறியுள்ளது என்ற கணக்கெடுப்பும் அவரிடம் இல்லை. அவரிடம் உள்ளது சுய அனுபவங்கள் அல்லது யாரோ அவருக்குச் சொல்லிவிட்டு சென்ற புலம்பல்கள். இதுதான் அவர் எழுத்தின் ஆதாரம்.
⦁ எந்த ஆய்வும் இன்றி போகிற போக்கில் தமிழ்ப்பள்ளிகள் மேல் எச்சில் துப்பிவிட்டு போகும் உதயசங்கர் எஸ் பி யின் கூற்றுகளை நாம் மிகச் சுலபமாக தகர்க்க முடியும். தமிழ்ப்பள்ளியில் கற்று உயர்நிலைக் கல்விவரை உயர்ந்துள்ள பல மாணவர்களை பட்டியலிட நம்மால் முடியும். அதே போன்று, மலாய்ப் பள்ளியில் பயின்றும் கல்வியில் தோல்விகண்ட பல மாணவர்களையும் குற்றச்செயல்களில் சிக்கி தண்டனை பெரும் மாணவர்களையும் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் உதயசங்கர் எஸ் பிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. தமிழ்ப்பள்ளிகள்தான் சமுதாய சீரழிவிற்கு காரணம் என்ற தோற்றத்தை உண்டுசெய்வது மட்டுமே அவர்
நோக்கம்.
⦁ உதயசங்கர் எஸ்.பி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொதுவாக ஆதாரமற்றவை. அந்தவகையில் அவதூறானவை. அவர் அனுபவத்தில் அவருக்குத் தெரிந்தவர்களை மட்டும் வைத்து சொல்லும் நியதிகள் சமூகத்துகானதாகிவிடாது. அதேபோல் 2014ல் தேர்வுக்கு முன்பே கசிந்த யூ.பி.எஸ்.ஆர் சோதனைத்தாள்களில் தேசியப்பள்ளியுடையவையும் அடக்கம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ஒரு தேசியப்பிரச்சனையை ஒரு சமூகத்தின் தலையில் மொத்தமாக சுமத்தி அச்சமூகத்தைப் பிரச்சனையாகக் காட்டி கீழ்மைப்படுத்துவதுதான் உதயசங்கர் எஸ்.பி போன்றவர்களின் அரசியல்.
⦁ யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கலாம். ஆனால் கிடைக்கப்பெற்ற தகவலின் நம்பகத்தன்மை, உண்மை நிலவரம், தகவலுக்குப் பின் உள்ள உள் நோக்கம் என அனைத்தையும் ஆராய்ந்தப் பின்னரே அத்தகவலை ஒரு சமூக கருத்தாக்கி ஊடகங்களில் பதிவிட வேண்டியது பொறுப்பானவர்களின் செயல். உதாரணமாக, உதயசங்கர் தேசிய இலக்கியவாதி சமாட் சைட் அவர்களை தமிழ்ப்பள்ளிகளின் கவனத்தைக் கவர பயன்படுத்தி அவர் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் நுழைந்து, தமிழ்ப்பள்ளிகளிடம் பெறும் சில நூறு ரிங்கிட்டை சமாட் சைட் அவர்களுக்கு இந்தப்பக்கம் கொடுத்துவிட்டு; அந்தப்பக்கம் தான் இலக்கியச் சேவை செய்வதாக அரசாங்கத்திடம் பணம் வாங்கிக்கொள்கிறார் என்ற தகவல் எனக்கும் கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தகவல் கிடைத்ததாலேயே அதை நான் செய்தியாக்குவதும் கட்டுரையாக்குவதும் வெறும் அவதூறு மட்டுமே. இந்தத் தகவலை ஆராய நான் சில பள்ளிகளை அணுகுவதும் , அவரை நேர்க்காணல் செய்வதும், தகவல் சொன்னவரிடம் தொடர் உரையாடல் நடத்துவது அவசியமாகிறது. ஆக, யாரோ சொன்ன தகவலின் அடிப்படையில் ஒரு கருத்தை சமூகத்தின் முன் வைக்கும் உதயசங்கர் எல்லா தகவலையும் அப்படிச் செய்யப்போவதில்லை. எந்தத் தகவலைக் கட்டுரையாக்குவது என்பது அவரது தேர்வு. இந்தத் தேர்வுக்கான காரணம் தமிழ்ப்பள்ளிகளின் மீது அவருக்கு உள்ள கசப்பன்றி வேறில்லை.
⦁ ஒரு பள்ளியைப் பற்றிய குற்றச்சாட்டை அப்பள்ளியின் பெற்றோர்கள் அவர்களுக்கு என்று இருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் தெரிவிக்க வேண்டும். யாரும் ஒரு இயக்கத்தைப், பள்ளியை, அல்லது தனிநபரைக் குறைச்சொல்ல / விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் அவையெல்லாம் செய்திகளாகும் என்றால் அதன் தரம்தான் என்ன? அவர் சில மாணவர்கள், பெற்றோர்கள் தன்னிடம் சொன்னார்கள் என்கிறார். சரி, இந்த மாணவர்களும் பெற்றோர்களும் தங்கள் குற்றச்சாட்டை எழுத்துப்பூர்வமாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமோ பள்ளி நிர்வாகம் மூலமோ தங்களுக்கு நடந்த அநீதியை தெரிவித்துள்ளார்களா? குறைந்தபட்சம் நாளிதழ்களில் எழுதியுள்ளார்களா? அப்படி ஏதேனும் ஆதாரம் உண்டா? அல்லது அந்த பெற்றோர்கள் தங்கள் புகார்களை மேலிடத்திற்கு முறைப்படி கொண்டுசெல்ல உதயசங்கர் உதவியிருக்கிறாரா? இல்லாத ஆதாரத்தைக் காட்ட ‘தான் விரும்பவில்லை’ எனச்சொல்வதெல்லாம் மிக பழைய உத்தி என உதயசங்கருக்குப் புரியவில்லை. ஏதோ மொட்டைக்கடிதத்தை வைத்துக்கொண்டு அடையும் அற்பர்களின் பதற்றம் போலவே உள்ளது உதயசங்கர் பேச்சு.
⦁ ஒரு சேவையாளர்போல உதயசங்கர் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய்ப்பாடத்துக்கான அடைவு நிலை குறித்து பேசுகிறார். தேசியப்பள்ளியில் பயிலும் தமிழ்மாணவர்கள் அனைவரும் மலாய் மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெறுகின்றனரா? சரி தமிழ்மாணவர்களை விடுவோம், மலாய் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே மலாய் மொழிப்பாடத்தில் முழுத்தேர்ச்சி அடைந்துள்ளனரா? சீனப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களின் மலாய் மொழி தேர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறதா? ஆதாரம் உள்ளதா அவரிடம்? கடந்த மூன்றாண்டுகளில் வெளியான யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சி அறிக்கையில் தேசியப்பள்ளியில் மலாய் பாடத்தின் தேர்ச்சி விகிதத்தை ஆராய்ந்திருக்கிறாரா? இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் போது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் சிற்சில பின்னடைவுகளை பூதாகரமாகக் காட்டும் அவர் நோக்கம் என்ன? இரு காரணங்கள் இருக்க முடியும். ஒன்றாவது, அதன் மூலம் தமிழ்ப்பள்ளியை மட்டம் தட்டுவது. இரண்டாவது, தாங்கள் மட்டமானவர்கள் என சமூகத்தை நம்பவைத்து அச்சமூகத்திற்குள் தான் நுழைந்து பணம் பண்ணுவது. அவரே ஒப்புக்கொண்டப்படி கல்வி அமைச்சின் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் மலாய் இலக்கியப்பட்டறை நடத்த அவருக்குப் பணம் கிடைப்பது உறுதியாகிறது.
⦁ தமிழ்ப்பள்ளிகள் கலை கலாச்சாரம் மதம் போன்றவற்றை வளர்க்க வேண்டிய இடமல்ல எனக்கூறும் உதயசங்கர், இதே கருத்தை தேசியப்பள்ளிகளிலும் சொல்வாரா? இன்னும் சொல்லப்போனால் தமிழ்ப்பள்ளிகளில் இன்னமும் நன்னெறி என்ற மதசார்பற்ற பாடம் நடக்க தேசியப்பள்ளிகளில் மதபோதனை நடக்கிறது. அது எனக்கு தவறாகவும் படவில்லை. நெறியை வளர்க்கும் என்றால் மதத்தை முறையாகவே பயிலட்டும். ஆனால் அந்த வசதிகூட தமிழ்ப்பள்ளிகளில் இல்லை. தேசியப்பள்ளிகளிலும் பல்லின. பல சமய மாணவர்கள் பயில்கின்றனர், ஆயினும் பாடத்திலேயே மதத்தைப் போதிக்க தேசியப்பள்ளியில் அனுமதி உண்டு. ஆனால், கூடுதலாக கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சொல்லிக்கொடுக்க தமிழ்ப்பள்ளிகள் மட்டும் கோயிலுக்குச் செல்லவேண்டும்.
எதிர்வினைகள்
உதயசங்கரின் இத்தகையக் கருத்துக்குச் சிலரிடமிருந்து குழப்பமான எதிர்வினை வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது குறித்து அவர்கள் பேசுகின்றனர். அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் ஆகிவிடும் என நம்புகின்றனர். அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது என கனவும் காண்கின்றனர்.
நான் இவர்களிடம் எப்போதுமே சில அடிப்படையான கேள்விகளை முன்வைத்துள்ளேன்.
1. தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்கும்பட்சத்தில் இப்போதிருக்கும் தமிழ்மொழியின் தரம் தேசியப்பள்ளியிலும் நிலைக்குமா? அல்லது இன்று தேசியப்பள்ளிகளில் போதிக்கப்படும் தமிழைப் போல எளிமைப்படுத்தப்படுமா? அவ்வாறு எளிமைப்படுத்தப்படுவதில் சம்மதமா?
2. தேசியப்பள்ளி என்றால் அதில் தலைமை ஆசிரியர்கள் முதல் துணைத்தலைமை ஆசிரியர் என அனைத்து வகையான பொறுப்புகளும் பாராபட்சம் இல்லாமல் அனைத்து இனங்களுக்கும் வழங்கப்படுமா? அல்லது மலாய்ப் பள்ளி அடையாளத்துடன் இப்போதிருக்கும் தேசியப்பள்ளிகள் போலவே இயங்குமா? இப்போதிருக்கும் 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் அதே பதவியில் நிலைநிறுத்தப்படுவார்களா? தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் உள்ளிட்ட அரசாங்கப்பதவிகள் பாராபட்சம் இன்றி தேசியப்பள்ளியிலும் எண்ணிக்கைக் குறையாமல் வழங்கப்படுமா?
3. அறிவியல், கணிதம், நன்னெறி, வரலாறு போன்ற பாடங்களில் உள்ள கலைச்சொற்களை ஒரு தமிழ்மாணவன் அறிய வேறு வழிகள் ஏதேனும் உண்டா? அல்லது அவற்றை அறிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறீர்களா?
4. மலாய்ப்பள்ளிகளில் இஸ்லாமிய சமய விழாக்கள் கொண்டாடப்படுவது போல மலேசியாவில் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் தத்தம் விழாக்களைத் தேசியப்பள்ளிகளில் தடைகள் இல்லாமல் கொண்டாட வாய்ப்புண்டா?
5. தேசியப்பள்ளியில் தமிழ்ப்பாடம் மட்டும் தமிழில் போதிக்கப்படும்போது இதரப்பாடங்களுக்கு நூல் எழுதியவர்கள், பயிற்சி புத்தகம் தயாரித்தவர்கள் என அதைச்சுற்றி உருவாகியிருக்கும் பொருளாதார வலை பாதிப்பதில் உங்களுக்குச் சம்மதம் உண்டா? அந்த அச்சகம் மற்றும் பதிப்புரிமை தமிழர்களிடமிருந்து கை மாறும் என்ற பிரக்ஞை உண்டா?
அனைத்து இனத்துக்குமான ஒரே தேசியப்பள்ளி சாத்தியமா?
நிச்சயம் சாத்தியம். அதற்கு மாற்றப்பட வேண்டியது தமிழ்ப்பள்ளிகளோ சீனப்பள்ளிகளோ அல்ல. மக்களின் மனம். நாளையே அனைத்தும் தேசியப்பள்ளி என அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம். ஆனால் இன்று தமிழ்ப்பள்ளிகளாக இயங்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமைத்துவத்திலோ ஆசிரியர்களிலோ எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரவேண்டும். தாராளமாக பிற இனமாணவர்கள் அங்குப் பயிலலாம். இருக்கும் அதே சூழலில் பல்லின மாணவர்கள் பயில்வதுதான் தேசியப்பள்ளியாக இருக்க முடியுமே தவிர கட்டடங்களை மாற்றுவது மலாய்ப்பள்ளி என்ற அடையாளத்திற்கே இட்டுச்செல்லும். அப்படி இப்போதிருக்கும் தமிழ்ப்பள்ளி கட்டடங்கள் வசதியற்றவையாய் இல்லாமல் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. காரணம் அது இப்போது தேசியப் பள்ளி.
இறுதியாக
உதயசங்கரின் எழுத்து எப்போதும் ஆய்வு அடிப்படையில் உள்ளதல்ல. அதை நான் பொருட்படுத்துவதும் இல்லை. மலேசியாவில் அவதூறுகள் எழுதுவது மூலம் அடையாளம் காணப்படுபவர்களில் அவர் முக்கியமானவர். பெரும்பாலும் அவர் கட்டுரைகளில் ‘நான் கேள்விப்பட்டேன்’, ’என்னிடம் கூறினார்கள்’, ‘என் அனுபவத்தில்’ என ஆதாரங்கள் இல்லாத மூலங்களில் இருந்து கதையைக் கட்டமைப்பார்.
உண்மையில் உதயசங்கர் எஸ்.பி போன்றவர்களை நோக்கி இன்னும் எழுதுவது வீண்தான் என்பதை அறிவேன். சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் இவர்களின் உண்மையான முகத்தை சமுகத்தின் முன் காட்டவாவது மீண்டும் மீண்டும் இதைச் செய்ய வேண்டியுள்ளது. அவரை தமிழ்ச்சார்ந்த அனைத்து அமைப்புகளும் மறுப்பதும் அவர் நூல்களை தமிழ்ப்பள்ளிகள் வாங்காமல் புறக்கணிப்பதும், அவர் நடத்தும் பட்டறைகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதுமே குறைந்தபட்ச தன்மானம் உள்ளவர்களின் எதிர்ப்புக்குரலாக இருக்கும். ‘காவியன்’ எனும் அமைப்பை வைத்துள்ள அவர், அதன் மூலம் பல தமிழ்ப்பள்ளிகளில் மலாய் இலக்கியம் சொல்லித்தருவதாக நுழைகிறார். அவரை அனுப்பதிப்பது குறித்து பள்ளி நிர்வாகம் இனியாவது யோசிக்க வேண்டும். ஏதோ ஒரு நடவடிக்கை நடத்தினால் போதுமானது என கண்டவர்களை தமிழ்ப்பள்ளியில் நுழையவிடும் போக்குத் தொடருவது நம் சுயமரியாதை மீது நாமே காரி உமிழ்வதற்குச் சமம்.
தமிழ்ப் பள்ளிகள் ஊடுருவலில் சிக்கி அழிக்கப்படுகின்றன https://www.facebook.com/profile.php?id=100090187159070