“ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன்வழி, அம்மொழியில் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத்தளத்தையும் அறியமுடியும் என்பதால் மலாய் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் குறித்து அறிந்திருக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதுவே ‘அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எழுதப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.”
- முன்னுரையில் அ.பாண்டியன்
மலாய் இலக்கிய வாசிப்பு இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு அவ்விலக்கியம் குறித்த சிறிய எளிமையான அறிமுகம் இந்தப்புத்தகம். அ.பாண்டியன் தனது நீண்ட வாசிப்பில் தன்னைக் கவர்ந்த சிறுகதைகளைத் தேர்ந்து அதைப்பற்றிய தனது வாசிப்பனுபவத்தையும் இணைத்துத் தந்திருக்கிறார். ஆசிரியர் பற்றிய குறிப்பு, கதை, கதை சொல்லப்பட்ட விதம், கதை அல்லது ஆசிரியர் அவருடைய விருப்பத் தேர்வினுள் அமையக் காரணம் என, கச்சிதமான வடிவம் கொண்ட கட்டுரைகள். மிக எளிமையான அனைவருக்கும் புரியக்கூடிய அலுப்பூட்டாத ஆசிரியமொழி. புத்தகத்துக்கு இது பலம் என்று சொல்ல முடியும்.
வெவ்வேறு இனங்கள் வசிக்கக்கூடிய மலேசியாவில் மற்ற இனங்களின் இலக்கியங்களுடனான ஒப்பீடென்பது தவிர்க்கமுடியாதது. போலவே பரிமாற்றங்களும். பாண்டியன் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போலும் சமூகத்தை அதன் இலக்கியம் வழி அறிதல் என்பது மிகச்சரியான, நல்ல உத்தி. ஆனால் பண்பாட்டளவில் வறுமையான ஒரு சமூகம் மற்றுமொரு பண்பாட்டிலிருந்தே தனக்கான விழுமியங்களை பெற்றுக்கொள்ளும் என்பதால் பண்பாட்டு உச்சங்களை, விழுமியங்களை நகலெடுக்கும் ஒரு சமூகத்தின் இலக்கியம் பற்றி நாம் சற்று யோசிக்கவேண்டியுள்ளது. அதுவும் பெற்றுக்கொண்டதாகத்தான் அமையும். மலாய் இலக்கியத்தின் மூலம் அல்லது மலாய் இலக்கியம் அடியொற்றி வளர்ந்தது இந்தோனேசிய இலக்கியத்தினால் என்கிறார் பாண்டியன். மலாய் இலக்கியம் போலவே இந்தோனேசிய இலக்கியமும் மதம் என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டதுதான். ஆகவே மதத்தின் கட்டுப்பாட்டுக்குள் அது முளையடித்துக் கொடுத்த வட்டத்துக்குள் உழல்கிற ஓர் இலக்கியம் சில உத்திகளை, கூறுமுறைகளை முன்னெடுத்துப் பார்க்கலாம் (பாண்டியனும் அதைக் குறிப்பிடுகிறார்) என்பதைத் தவிர, சிந்தனை ரீதியாக கிடைமட்ட வளர்ச்சி கூடச் சாத்தியமில்லாததே என்பது என் கருத்து.
1968ல் Langit Makin Mendung ‘வானம் கருமை கொண்டிருக்கிறது’ என்ற சிறுகதை, சஸ்த்ரா (Sastra) எனும் இந்தோனேசியச் சிறு பத்திரிக்கையொன்றில் கிபாஞ்சிகஸ்மின் (Kipandjikusmin) என்பவரால் எழுதப்பட்டு வெளியானது. (அவர் ஏற்கெனவே இரண்டு சிறுகதைகளை அதே பத்திரிக்கையில் எழுதியிருந்தார்). இச்சிறுகதையைப் பிரசுரம் செய்ததற்காக அதன் ஆசிரியரான H.B.Jassin மதவாதிகளின் நீதிமன்றப் படிகளில் பலமுறை ஏறி இறங்க வேண்டியதாயிற்று. ’இறைவனுக்கு உரு வைத்தல்’தான் பிரச்சினை. கண்ணாடி அணிந்த ஒரு வயதான நபராகக் கடவுளை உருவகித்துவிட்டார் கிபாஞ்சி. அது மதச்சட்டத்தின்படி மன்னிக்க முடியாத குற்றம். சிற்றிதழின் ஆசிரியரான ஜாசின், இலக்கியம் என்பது மதப்புத்தகமல்ல, அதை யாரும் நினைவு வைத்துக்கொண்டு அதைப் பின்தொடரப் போவதில்லை, இலக்கியத்திற்கு என்று கற்பனைச் சுதந்திரம் உண்டு என்றெல்லாம் வாதாடிப்பார்த்துத் தோல்வியுற்றார். பேட்டிகள், ஏகப்பட்ட எதிர்ப்புக் கட்டுரைகள் என ஜாவாவிலும் ஜகார்த்தாவிலும் கிட்டத்தட்டக் கலவரமே உருவானது. கிபாஞ்சி கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றவர் என்பதால் அவருடைய மதத்தின்பாலான நேர்மையைச் சந்தேகித்தார் மற்றொரு எழுத்தாளர். கடைசியில், 1968 அக்டோபர் 22 – அவருக்கு உருவாக்கப்பட்ட அழுத்தம் தாங்காமல் கிபாஞ்சி பொதுவில் மன்னிப்புக் கோரினார். தான் செய்த தவறை உணர்ந்து விட்டதாகவும் அப்படியொரு சிறுகதை இருப்பதற்கான தடயமே இனி இருக்காதென்றும் அதை எல்லோரும் மறந்துவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதுவொரு நீள்கதையின் முதல்பகுதி மட்டுமே. அதன் இரண்டாம் பாகமாக அவர் எழுதவிருந்த Hujan Mulai Rintik (மழைத்தூறல் ஆரம்பித்துவிட்டது) என்ற பகுதியை அவர் எழுதவில்லை. ஏன், அதற்குப்பிறகு அவர் எழுதவே இல்லை. கிபாஞ்சியின் மூன்றாவது சிறுகதையே அவருடைய கடைசிச் சிறுகதையாயிற்று. இந்தத் தகவல்கள் ஜாசின் பின்நாட்களில் எழுதிய Suatu Pertanggungan-Jawab (The Assured Answers) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். (இந்நிகழ்வை ‘இந்தோனேசிய இலக்கியமும் மதம் என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டதுதான்’ என்று நான் சொன்னதற்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாம்). ஆக, மலாய் இலக்கியம் தன்னுடைய முன்னோடியாக இந்தோனேசிய இலக்கியத்தைக் கொள்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
இருப்பினும், இந்தப் புத்தகத்தைப் பொறுத்தமட்டில் சில சிறுகதைகளை முக்கியமானவையாக நான் கருதுகிறேன். (வைக்கோல் போரில் குண்டூசியைக் கண்டுபிடிப்பது போலச் சிரமமான வேலை அவர் செய்திருப்பது.) ‘மனதுக்குள் ஒரு மிருகம்’, ‘கந்தசாமிகளின் கனவுகள்’, ‘ஒருவனுக்கு ஒருத்தியா’ ஆகிய மூன்று கதைகளைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. முதல் சிறுகதை நன்னெறிக்கதை, இரண்டாவது தற்காலத்திற்குப் பொருந்துமா என்ற கேள்வி பாண்டியனாலும் முன்வைக்கப்பட்டுவிட்டது, மூன்றாவது மதச்சட்டமான பலதாரமணத்தை நியாயப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது என்பதால்.
’கத்திரிக்கோலின் சங்கீதம்’ என்ற கட்டுரைத் தலைப்பில் பேசப்படும் நோர் ஹிடாயா அஸ்ஸாரி என்ற பெண் எழுத்தாளர் எழுதிய ‘நாவிதனின் மகள்’ சிறுகதை. பெண்களின் கூந்தல் குறித்து, கூந்தலைக் கத்தரித்துக் கொள்வது தடைசெய்யப்பட்ட நிலையில் அதைச்செய்யும் மானீஸ் என்கிற பெண் மற்றும் அவள் தந்தைக்கு இடையேயான உறவை முன்னிறுத்தும் கதை, இடையில் கட்டைக்கூந்தலுக்காக கல்லூரி நிர்வாகத்திடம் போராடி வெற்றிபெறும் மானீஸ் மற்றும் சக தோழிகள் எனச்செல்லும் கதை மானீஸ் ரத்தப்புற்றுநோய் ஏற்பட்டு மடிவதாக, “இனி நான் எப்போது எப்படி உனக்கு முடிவெட்டுவேன்” என்ற தகப்பனின் கதறலோடு முடிகிறது. கூந்தலை வளர்ப்பதும் வெட்டிக்கொள்வதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று கருத்தையும் பெண்ணியப் புரட்சியாளராக முன்வைத்தாயிற்று, ஏதாவது பிரச்சினை உண்டானால் மதத்திற்கு எதிராகப் பேசிச் செயல்பட்டதால்தான் இறைவன் இந்தத் தண்டனையை அவளுக்கு அளித்துள்ளான் என்ற கருத்தை வலியுறுத்தும் கதையென மதவாதிகளைச் சமாதானம் செய்துகொள்ளலாம் என இரண்டு முனைக்கும் ஏதுவாக எழுதப்பட்ட கதை. ஆசிரியர் அதிகமாக பிரச்சினை செய்துகொள்ள விரும்பவில்லை போல. பாண்டியன் இதைப் பெண்ணிய இலக்கியம் என்றே குறிப்பிடுகிறார். கூடவே இது மேல்நிலைப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார். எதிர்பார்க்கக் கூடியதே.
’மனிதனின் வேர்கள்’ என்ற தலைப்பில் குறிப்பிடப்படும் பஹருடின் கஹார் என்பவர் எழுதிய ‘பா உரே’ என்ற சிறுகதை முக்கியமானது. பா உரே என்ற செமாய் ஆதிகுடியினன் தன் இறந்துவிட்ட மனைவியின் நினைவாகப் போற்றிவரும் பழமரத்தைக் காக்கமுடியாமல் அதிகார வர்க்கத்தின் முன் தோற்றுச் சமாதானம் செய்துகொள்ளும் கதை. மண்ணை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்படும் ஒவ்வொரு ஆதிகுடிக்குமான கதையாகவே இதைக் கொள்ளலாம், கதையை எழுதிய ஆசிரியரும் அதைத்தான் வலியுறுத்துகிறார். பாண்டியன் அதை, தோட்டத் துண்டாடலின்போது தங்கள் பூர்வநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்களும் இந்த உணர்வைத்தான் அடைந்தனர் என்று பொருத்திப் பார்த்துக் கொள்கிறார். அந்த வகையில் முக்கியமான கதை இது.
தொகுப்பில் சற்றே வித்தியாசமான சேர்க்கை என்றால், ’ஒரு சித்தாந்தம்; சில மனிதர்கள்’ என்ற கட்டுரையில் விவாதிக்கப்படும் ‘தூறல் மழையில்’ என்ற சிறுகதைதான். ஏனெனில் இது சீனமொழியில் எழுதப்பட்டு மலாயில் மொழிபெயர்க்கப்பட்ட கதை. மற்ற சிறுகதைகள் போல மலாயில் எழுதப்பட்டதல்ல. க்ஷியோ ஹேய் (Xiao Hei) என்ற மலேசியச் சீனரால் சீனமொழியில் எழுதப்பட்ட கதையை வூ தெக் லோக் மலாயில் மொழிபெயர்த்திருக்கிறார். கொள்கை என்பது தலைமுறைகள் தாண்டினால் வேறு அர்த்தப்பட்டு விடுகிறது. ஒரு தலைமுறையின் கொள்கை, அடுத்த தலைமுறையால் தீவிரவாதமாகவோ அல்லது அபத்தமானதொரு பைத்தியக்காரத்தனமாகவோ பார்க்கப்படலாம். அந்தக் கொள்கைதான் இப்போது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை நமக்குத் தந்திருக்கிறது என்றெல்லாம் அந்தத் தலைமுறை யோசிப்பதில்லை என்பதை இச்சிறுகதை முன்வைக்கிறது. முற்றிலுமாக இந்தியச் சூழலுக்குப் பொருந்தக்கூடிய கதை.
அப்துல்லா ஹுசேன் எழுதிய ‘தன்னைத் தொலைத்தவர்கள்’ குறிப்பிடத்தகுந்த சிறுகதையாக எனக்குப்படுகிறது. பாண்டியன் அளித்துள்ள குறிப்பின்படி, இவர், ‘மலேசிய இந்தியர்கள் அனைவரும் பறையர்கள், நாகரீகமாக வாழத்தெரியாதவர்கள்’ என்று எழுத அதைப் பள்ளிப்பாடமாகத் தேர்வு செய்தது மலேசிய அரசு. பின் இந்தியச் சமூகம் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தி, நாங்கள் ‘எல்லோரும்’ பறையர்கள் அல்ல, எங்களில் உயர்சாதியினரும் உண்டு என்று கூவிப் போராட்டம் நடத்தி அதைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கினர். ’இதுவே, அப்துல்லா ஹுசேன், மலேசிய இந்தியர்களில் பறையர்கள் என்றொரு சாதியினர் உள்ளனர் என்றும், அவர்கள் தாழ்ந்த சாதியினர் என்றும்’ எழுதியிருந்தால் இப்போராட்டங்கள் இருந்திருக்காது என்கிறார் பாண்டியன். உண்மைதான். கதையில், முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்ட ஓர் ஆங்கிலேயரான, ஹாஜி ஹெமில்டன் பின் அப்துல்லாவுக்கு மாலை விருந்தொன்றுக்கான அழைப்பு வருகிறது. மலாய் இனத்தவரின் பாரம்பரிய உடையில் அங்கு செல்லும் அவ் ஆங்கிலேயரை நவநாகரீக உடையில் இருக்கும் மற்றவர்கள் விநோதமாகப் பார்க்கின்றனர். இவர் மலாயில் பேச அவர்கள் ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர். பாண்டியன் இதை, ‘கலாச்சார வேறுபாடுகளை இக்கதை முன்வைக்கவில்லை. மாறாக அவரவர் இருப்புக்கு ஏற்ற கலாச்சாரத்தைத் தெரிவு செய்யவேண்டியதே சிறப்பு என்பதையே தெளிவுபடுத்துகிறது.’ என்கிறார். ஆனால் எனக்கு, கதையின் தலைப்போடு சேர்த்துவைத்துப் பார்க்கும்போது சுருக்கமாக, ‘நீ எவ்வளவு முயன்றாலும் எங்களில் ஒருவனல்ல’ என்ற கருத்தை முன்வைப்பதாகவே படுகிறது. இக்கரையிலும் இல்லாமல் அக்கரையிலும் இல்லாமல் ‘தன்னைத் தொலைத்தவர்கள்’ இவர்கள் என்கிறார் ஆசிரியர். இந்த மனப்போக்கு எல்லா இனத்தவர்களுக்கும் பொதுவானது. மதம் வேறு இனம் வேறு என்ற வேறுபாட்டைத் தெரிந்தோ தெரியாமலோ ‘மூடி’ எழுதுவதாகவும் பாண்டியன் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். எனக்குத் தெள்ளத்தெளிவாகவே அவர்கள் இரண்டையும் ஒன்றாக வைப்பது புரிகிறது. சிக்கல் யாரிடம் என்பதை பாண்டியன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
தொன்மம் என்பதை ‘கேள்வியெழுப்பக் கூடாதது’ என்கிற அர்த்தத்தில்தான் மதம் எப்போதும் முன்வைக்கிறது. தொன்மத்தை மறு உருவாக்கம் செய்வது அல்லது அதற்காக முயல்வது; அது சொல்லும் விழுமியத்தை சமகால மனநிலையில் பொருத்திப் பார்க்கவும் அதன் தேவை குறித்தும் அத்தொன்மத்தின் மீதான மீள்வாசிப்பாகவும் அதைப்பற்றி விவாதிக்கவும் உதவுகிறது. ஸைன் கஸ்தூரி எழுதிய ’ஹாங் நாடிமின் வேறு கதை’ – ஹாங் நாடிம் என்ற சிறுவனைப்பற்றிய தொன்மக் கதையை அது முடிந்த இடத்திலிருந்து தொடங்கி வேறு கோணத்தில் பார்க்கிறது. நாட்டு மக்களைக் காக்க உதவியவன் என்றும் பாராமல் மந்திரிகளின் பேச்சைக்கேட்டு ஹாங்நாடிமைக் கடலில் வீசிக் கொல்கிறான் அரசன். நீதிதவறியதால் முடியிழக்கிறான். இது தொன்மம் சொல்வது. நவீன கதை, ஹாங் நாடிம் சாகவில்லை மீனவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு வேறிடத்தில் வளர்கிறான் என்று ஆரம்பிக்கிறது. இப்போது இளைஞனாக வளர்ந்துவிட்ட அவன், இனி எங்கிருப்பது? தான் பிறந்த மண்ணா, தனக்கு எல்லாம் தரத் தயாராக உள்ள, தன்னைக் காப்பாற்றி வளர்த்த இந்த மண்ணா, எங்கு செல்வது? என்று திகைப்பதாக ஸைன் கஸ்தூரியின் கதை முடிகிறது. இது கிட்டத்தட்ட ‘கந்தசாமிகளின் கனவுகள்’ கதைதான். அதில் தன்னை வளர்த்த மண்ணையே தேர்வதாக கந்தசாமி முடிவெடுப்பார் – நேர்கோட்டுக் கதை; நாடிமின் கதை மாய யதார்த்தமாக எழுதப்பட்டிருப்பது – முடிவை வாசகனிடத்தில் விட்டுவிடுகிறது. இரண்டுக்குமுள்ள வேறுபாடு இதுதான்.
‘ஏமாளிகளின் தேசம்’ என்ற கட்டுரை சமாட் சைட் எழுதிய ‘சலீனா’ என்ற நாவலின் ஒரு பகுதியைப் பற்றிப் பேசுகிறது. ஒரு தேர்தல் களத்தை. ஆட்டுக் கிராமம் என்ற பொருள்படும்படியான பெயருடைய ஒரு கற்பனைக் கிராமத்தில் தேர்தலின்போது நடக்கும் நிகழ்வுகளே இந்த அத்தியாயங்கள், முற்றிலுமாக, அனைத்து மூன்றாம் உலகநாடுகளின் தேர்தல் களத்திற்கும் பொருந்திப் போகக்கூடிய கதைப்பகுதி. ஓட்டுக்காக அடித்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர்களின் கைக்கூலிகள், இதற்கிடையில் சாமானியன் ஒருவனின் கவலைகளைப் பற்றி அவர்களுக்கென்ன அக்கறை இருக்கப்போகிறது? அவர்களைப் பொறுத்தவரை இவனோ, நோய்வாய்ப்பட்டிருக்கும் இவன் அம்மாவோ ஒரு ஓட்டு மட்டுமே. இதுவே எப்போதும் எங்கும் உள்ள சூழ்நிலை எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் சிறுகதைகளுக்குள் ஆகச்சிறந்த சிறுகதையாக அனுவார் ரிட்வானின் ‘டிக் டிக் டிக்’ எனும் சிறுகதை இருக்கக்கூடும். அனுவாரின் எழுத்துகளை பாண்டியன் Colonial, Orientalism, மற்றும் Occidentalism சார்ந்த எழுத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். (ஒப்பிட்டுப் புரிந்து கொள்வதற்காக ஜெயகாந்தனின் ‘பாரீசுக்குப் போ’ அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ ஆகியவற்றை Occidentalism வகைமையில் வைக்கலாம் என்கிறார்.) அனுவார் மேற்கத்தியப் பின்புலத்திலேயும் கதைகளை அமைத்துள்ளார். இக்கதையில் ஹிரோஷிமாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் அணுகுண்டு வளர்ந்து வருகிறது. அவள் வயிற்றில் வளரும் அக்கருவிற்கு நெவாடாவிலிருந்து வந்த ஒருவனே தகப்பன். அது எந்நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் கதை முடிகிறது. சிறந்த குறியீடுகளைக் கொண்டு இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது மொழிபெயர்ப்புக்குத் தகுதியான கதையும் கூட.
இக்கதைகளை நான் நேரடியாக வாசிக்க முடியாது. அவை மலாய் மொழியில் எழுதப்பட்டவை. எனவே பாண்டியனின் வார்த்தைகள் மூலமாகவே நான் அக்கதைகளை அணுகிப் புரிந்து கொள்கிறேன். இதனால் என்னுடைய புரிதலில் சில இடைவெளிகள் இருக்கலாம். அது நிச்சயமாக பொருட்படுத்தக்கூடிய அளவில் இருக்காது என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டதே இக்கட்டுரை.
நிறைவாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக மதவட்டத்தைத் தாண்டிய படைப்புகள் மலாய் மொழியில் இருக்கலாம். அதைவிடுத்துப் பார்ப்போமானால் உத்திகள் கூறுமுறைகள் ஆகியவற்றுக்காக மட்டுமே ஒரு மொழியின் இலக்கியத்தை நாம் அணுக வேண்டியதில்லை. இன்று மலாய் மொழி அரசாங்க மொழியாக இருப்பதனால் மட்டுமே அதன் வளர்ச்சி விழுமியங்களற்றும் சாத்தியமாகி உள்ளது என்பதை பாண்டியனின் வார்த்தைகள் மூலம் யூகிக்க முடிகிறது. இவ்விலக்கியம் வளர்த்தெடுக்கப்பட்டதே தவிர பல்மொழிகளின் இலக்கியங்களோடு சம்பந்தப்பட்டதாலும் அல்லது பல்லின மக்களோடு அமைந்த சூழலால் மற்றதன் மிகச்சிறந்த விழுமியங்களை உள்வாங்கி வளர்ந்தது அல்ல என்றே நினைக்கிறேன். வெறுமனே உத்திகளுக்காக மிகவும் பிற்பட்ட ஒரு மதச்சிந்தனையை நாம் தொடர்ந்து வாசிக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வகையில் பைபிளின் மொழி எதைக்காட்டிலும் சுவையானது என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ்மொழியின் இலக்கியம் இவற்றைத் தாண்டிப் பலமடங்கு வளர்ந்து விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. (இதைச் சொல்லும்போது மலேசியத் தமிழ் படைப்புகள் சிலவற்றையும் மனதில் வைத்தே சொல்கிறேன்.) இதைப் பெருமையாக, உணர்ச்சிப் பெருக்கோடு எல்லாம் நான் அறிவிக்கவில்லை. நிதானமான மனநிலையிலேயே சொல்கிறேன். ஆனால் இத்தகைய ஒரு முடிவுக்கு நம்மை இட்டுச்செல்ல பாண்டியனின் ‘அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதில் எனக்குக் கருத்துவேறுபாடு இல்லை. அந்தளவில் மிகத் தெளிவானதொரு குறுக்குவெட்டுப் பார்வையை வழங்கியுள்ள பாண்டியனின் இப்படைப்பு மிகவும் உபயோகமானதே, பாராட்டுக்குரியதே. அதேசமயம், இதுபோன்ற மற்றுமொரு புத்தகத்தை பாண்டியன் இனி எழுதவேண்டிய தேவையும் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன், அவர் தன்னுடைய கவனத்தை வேறு திசையில் ஈடுபடுத்தலாம்.