துணைக்கால்: படைப்பாளிகளுக்குத் துணைநூல்

vijaya cover copyஇந்நூலைப் பல கோணங்களில் படைப்பாளிகளுக்குத் தேவையான தகவல்களைச் சொல்லும் கையடக்க விதிமுறை நூலாக நான் பார்க்கிறேன். ஒரு நூல் எழுதத் தொடங்கும் முதல் எழுத்திலிருந்து அந்நூலால் கிடைக்கப்பெறும் வருமானம் வரை ஒவ்வொரு படைப்பாளரும் கட்டாயம் கருத்தில் வைத்திருக்கவேண்டிய செய்திகளை எளிமையாகவும் தேவைக்கு ஏற்ப ஆங்கிலக் குறியீடுகள் மூலமாகவும் வழங்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலிலிருக்கும் நூறு பக்கங்கள் இனி வரக்கூடிய பல்லாயிரம் பக்கங்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் தரநிலையாக்கத்துக்கும் ஆவணப்படுத்துதலுக்கும் வழிகோலுகிறது என்றால் அது மிகையில்லை.

ஒவ்வொரு கட்டுரையும் ஐந்து முதல் எட்டு பக்கங்கள் மட்டுமே இருப்பது இந்நூலுக்கு இன்னொரு பலம். வழவழ கொழகொழ என்று நீண்ட, புரிந்துகொள்ளக் கடுமையான விளக்கங்களாக இவை இல்லாமல் நறுக்கென எடுத்துக்கொண்ட கருவை செரிவாக விளக்கிவிட்டு முடித்திருப்பது கட்டுரைகளின் பேசுபொருளை மனதில் பதியவைக்க ஏதுவாக அமைகிறது.

  1. படைப்பாளன்

படைப்புகளுக்கெல்லாம் படைப்பாளனே மூலம். முதலில் அவன் யார் என்பதை நாம் அடையாளம் காணுதல் அவசியமாகிறது.

படைப்பாளன் அல்லது எழுத்தாளன் என்பவன் எழுத்து வடிவில் கற்பனையைப் பயன்படுத்தியோ தரவுகளைப் பயன்படுத்தியோ அல்லது இரண்டையும் கலந்தோ தனது சொந்த எழுத்து நடையில் வழங்குபவன். அப்படைப்பாளனின் எழுத்துத் தரத்தையும் கருத்து உரத்தையும் வைத்துத்தான் அவனுடைய எழுத்துக்களுக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம் அமையும்.

படைப்பாளர்களில் சில வகையினர் இருக்கிறார்கள் என்று துணைக்கால் நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது.

அ. நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான வகை தனி எழுத்தாளர். ஒரு நூலை உருவாக்குவதற்கு முழுக்க முழுக்கத் தனது சொந்த உழைப்பைப் போட்டுச் செய்யும் வகை.

ஆ. ஒருவரின் சிந்தனையில் உருவான திட்டம் இன்னொருவரின் ஒத்துழைப்பை வைத்து முழுமைப்படுத்துவது ஒரு வகை.

இ. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் அந்நிறுவனத்தின் ஒத்துழைப்பைப் பெற்று அதைச்சார்ந்த படைப்பை உருவாக்குவது இன்னொரு வகை.

ஈ. வேற்றுமொழியில் இருக்கும் ஒரு படைப்பை மூல வெளியீட்டுப் படைப்பாளரின் அனுமதி பெற்று மொழிபெயர்த்துத் தரும் வகை,

உ. சிறுகதைத் தொகுப்பு, ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு போல பலரின் கூட்டுமுயற்சியில் விளையும் தொகுப்பு நூல்களைத் தொகுக்கும் ஒரு வகை,

இவ்வாறு சிலவகைகள் இருப்பதை இந்நூல் ஆங்காங்கே காட்டிச் சென்றிருக்கிறது. இவ்வகையினர் ஒவ்வொருவருக்கும் பெயர்களைக் கண்டுபிடித்துப் போட்டிருந்தால் குறிப்பெடுத்தலுக்கு இலகுவாக இருந்திருக்கும். அப்படிக் குறிப்பிட்ட பெயர்கள் இல்லையென்றால் உருவாக்கிக் கொடுத்திருக்கலாம். சொல்லாக்கத்திற்கு நூலாசிரியரின் பங்களிப்பாக அது அமைந்திருக்கும்.

  1. விளக்கங்கள்

இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் தரவுகள் அடைப்படையில்தான். தரவுகள் என்றுமே குழப்பத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவாகவும் அதே சமயம் விளங்கிகொள்ள எளிதாகவும் விளக்கப்பட்டால் மட்டுமே அதைப் புரிந்துகொண்டு மேற்கொண்டு அவற்றைப் பயனாக்க ரீதியில் அணுக முடியும். அவ்வகையில் விஜயலட்சுமி இந்நூலை மிகவும் நேர்த்தியாகவே வடிவமைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் அக்கட்டுரைக்கான முக்கியக் கலைச்சொற்களை முன்கூட்டியே விளக்கிவிடுவதன் மூலம் ஆய்வுக்கட்டுரையின் தன்மையையும் பெற்றிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆய்வுகள் யாவுமே கலைச்சொல் விளக்கத்தைச் சொல்லிவிட்டுத்தான் மற்ற விளக்கங்களுக்குச் செல்லும். நூலாசிரியரின் இந்தத் திட்டமிடல் இந்நூலின் கட்டமைப்பை மேலும் செரிவூட்டுகிறது.

சில கலைச்சொற்களுக்குத் தேவைக்கேற்றபடி ஆங்கிலம் கலந்திருப்பதை வரவேற்கத் தக்கதாகவே நான் கருதுகிறேன். ஆனால், கட்டுரைகளின் தலைப்பில் ஆங்கிலம் கலக்காமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்நூலாசிரியரின் கலைச்சொல் விளக்கங்களில் மிக முக்கியமானதாக நான் கருதுவது படைப்பாளர்களின், படைப்புகளின் சட்டப்பூர்வமான அடையாளப்படுத்துதல் தொடர்பானவற்றையும் படைப்பாளனின் உரிமைகளைப் பேசும் பகுதிகளும் படைப்புகளின் பாதுகாப்பு குறித்த பகுதிகளும்தான்.

கலைச்சொல் விளக்கங்களைத் தவிர இந்நூலில் பேச எடுத்துக்கொண்ட கருக்கள் யாவும் தேவையான அளவுக்கு விளக்கப்பட்டு செரிவாக வந்துள்ளன. ISBN, காப்புரிமை, உரிமைப்பணம், மேற்கோள் நூல்கள், பகிர் உரிமம், அறிவுத்திருட்டு முதலான கருக்களை இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஒவ்வொரு படைப்பாளனும் மேற்கண்டவற்றை அறிந்திருக்கவும் புரிந்திருக்கவும் வேண்டும். இவ்வறிவு இல்லாமல் போகும் பட்சத்தில் அப்படைப்பாளனும் சரி அவனது படைப்பைப் பயன்படுத்தத் தகுதியான பயனீட்டாளனும் சரி நிறைய இழக்கவேண்டியிருக்கும். இந்நூலின் அடிநாதமே இவற்றைப் பற்றிய அறிவு ஒவ்வொரு படைப்பாளனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதுதான் என்பதால் இந்நூல் எல்லா படைப்பாளிகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டியதாகிறது.

  1. உரிமைகள்

இந்நூலைப் படித்து முடித்தவுடன் முதலில் தோன்றும் உணர்வு ஒரு படைப்பாளனுக்கு இத்தனை உரிமைகள் உள்ளனவா எனும் ஆச்சரியம்தான்! அந்த வகையில் இந்நூலை ஒரு நல்ல விழிப்புணர்வு நூலாகவும் நாம் அணுகலாம். அவற்றில் குறிப்பிடத்தக்கது ராயல்டி எனும் உரிமைப் பணம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்தது ஒரு நூலுக்குக் குறிப்பிட்ட சதவீதம் எனும் அடிப்படையில் விற்பனையிலிருந்து வரும் தொகையில் ஒரு பகுதி என்பதுதான். ஆனால், அதற்குள்ளேயே மூன்று உட்பிரிவுகள் இருப்பது இந்நூல் படித்தபிறகுதான் தெரிந்தது. அதைத்தொடர்ந்து உரிமைப்பணம் கணக்கிடப்படும் முறையைக் காட்டியிருப்பதன் மூலம் இந்நூல் ஒரு வழிகாட்டி நூல் எனும் தகுதியையும் அடைகிறது.

ஒரு நூல் வெளியீடு காண்பதற்கு யாரெல்லாம் பங்களித்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்நூலின் உரிமை அமைகிறது என்று இங்கே காட்டப்பட்டிருக்கிறது. ஒரு நூலுக்கு யாரெல்லாம் உரிமை கொண்டாடலாம்?

அ. நூலாசிரியர்

ஆ. ஒப்பந்தத்தின் மூலம் உரிமையை வாங்கிகொள்ளும் வேறொரு நபர்

இ. மீளுருவாக்கம் செய்பவர் (கருத்து விரிவாக்கம், மொழிபெயர்ப்பு)

ஈ. பதிப்பகத்தார்

உ. நூலை உருவாக்கப் பணித்த நிறுவனம்

இவ்வாறு சில தரப்புகள் உள்ளனர் என்பதை இந்நூல் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல், எவ்வகை நூலுக்கு யார் யார் உரிமை கொண்டாடலாம் என்பதையும் தெளிவாகக் காட்டியிருப்பது இதன் சிறப்பு.

  1. வெளியீடும் சந்தைப்படுத்துதலும்

ஒரு நூலை வெளியீடு செய்வது அவ்வளவு சுலபமான செயல் அல்ல! அதிலும் முறையான வெளியீடு செய்வது அதனினும் சற்று கடினம். ஆனால், முறையான வெளியீடு செய்தால் மட்டுமே நூலுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்கும். முறையான வெளியீடு என்று குறிப்பிடப்படுவது என்ன?

நூலாசிரியருக்கு நூலக அறிவு இருப்பதால் நூலின் அடையாளமிடலைப் பற்றி மிகச் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறார். இதில் மிக முக்கியமானது ISBN எனப்படும் பன்னாட்டு நூல் தரஎண்ணாகும். மலேசியாவிலும் சரி தமிழகத்திலும் சரி நிறைய நூல்கள் இவ்வெண்கள் பதிவு பெறாமலேயே வெளியீடு காண்கின்றன. இதனால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்பதையும் இவ்வெண்களோடு நூல் வெளியிடப்பட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும் இந்நூலில் காணலாம். அதுமட்டுமின்றி இக்குறியீட்டு எண்ணிற்கான பொருளையும் இங்கே விளக்கியுள்ளது பாராட்டுக்குரியது.

இந்நூலில் இணைக்கப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான கட்டுரை வணிக முத்திரையைப் பற்றியது. குறிப்பாக பதிப்பகங்களுக்கு இதில் வழங்கப்படும் தகவல்கள் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கிறேன். முத்திரையின் வகைகள், தேவைகள் முதலான செய்திகள் நூலைச் சந்தைப்படுத்தும் பதிப்பகத்தாருக்கும் விற்பனையாளர்களுக்கும் அவசியம் என கருதுகிறேன்.

  1. படைப்புகளின் பயன்பாடு

படைப்பு என்பது பயன்பாட்டிற்காகவே! ஆனால், அதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும் அல்லவா? படைப்புகளைப் பொறுத்தமட்டில் நூல் உருவாக்கத்தில் ஈடுபடும் எழுத்தாளரும் வெளியீடு செய்யும் வெளியீட்டாளரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தத்தம் உழைப்பையும் முயற்சியையும் பணத்தையும் போட்டு நூலை சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள். இவர்களுடைய நோக்கம் நூல் வாசகனைச் சென்றடைய வேண்டுமென்பதுதான்! ஆனால், அப்படிச் சென்றடைந்த நூல்கள் முறையாகப் போய்ச் சேர்ந்தனவா என்பதுதான் கேள்வி.

தொழில்நுட்பம் மலிந்துள்ள இக்காலத்தில் பிரதி எடுக்கத் தடைவிதித்தாலும் தடுக்கமுடிவதில்லை. இணையத்திலும் சுலபமாகப் படைப்புகளைப் பகிர்வு செய்யும் முறை வந்துவிட்டதால் எண்ணியல் முறையிலான படைப்புகள் நொடிக்குள் பலரைச் சென்றடைகிறது. ஆனால், நூலை உருவாக்கியோருக்கு இதனால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. பயனீட்டாளர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் நியாயமானவையாக சிலவற்றைச் சொல்லலாம். நூலின் விலை, கிடைப்பதற்குக் கடினம், தற்காலிகப் பயன்பாட்டிற்கும் மட்டும் என்பன அவற்றில் சில.

ஆக, இருதரப்புக்கும் இடையே இருக்கும் இந்த இறுக்கங்களுக்குப் பொதுவான முடிவுதான் என்ன? தற்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வழிகளை நூலாசிரியர் இந்நூலில் சொல்லிக்கொடுத்திருக்கிறார். பகிர் உரிமம் எனும் இவ்வழிமுறை தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதிது. நூலாசிரியர் இப்பகிர் உரிமத்தைப் பற்றி தமிழுக்கு அறிமுகம் செய்துவிட்டார். இருப்பினும், இந்தப் பகிர் உரிமத்தைப் பற்றி பயனாக்க ரீதியிலான விளக்கத்தையும் எடுத்துக்காட்டுகளோடு தந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

  1. உன் உடைமை உன் உரிமை

ஒரு படைப்பாளன் தனது ஒவ்வொரு எழுத்துக்கும் கருத்துக்கும் சொந்தக்காரன். அவை அவனுடைய உரிமை. பொருளைத் திருடுவதில் இருக்கும் பயம் அறிவைத் திருடும்போது பொதுவாக யாருக்கும் இருப்பதில்லை எனும் நூலாசிரியரின் குற்றச்சாட்டை நான் வழிமொழிகிறேன். இதற்குச் சில காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். அதில் முக்கியமானது, அலட்சியபோக்கு. இது படைப்பாளன் பயனீட்டாளன் இருவருக்குமே பொதுவானதாகவே நான் பார்க்கிறேன். எடுத்தால் தெரியாது என்று திருடனும் எடுத்துக்கொள்ளட்டுமே, என்ன குறைந்து போகப்போகிறது என்று திருட்டுக்கொடுப்பவனும் கொண்டிருக்கும் மனோபாவம் இக்குற்றத்தைச் சரியென மாற்றிவிடுகின்றன. அடுத்தது, நான் திருடுகிறேனா என்று தெரியாமலேயே குற்றம் புரிதல். இது எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் அதை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் ‘திறனும் திருட்டும்’, ‘டர்ன் இட் இன்: மிரட்டலும் மீட்பும்’ முதலான கட்டுரைகள் அடுக்கிவைக்கின்றன.

கல்வி சார்ந்த துறையில் நான் இருப்பதால் அறிவுத்திருட்டின் அபத்தமும் ஆபத்தும் என்ன என்பதை நான் நன்கு அறிவேன். மேற்குலகத்தில் அறிவுத்திருட்டைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இருப்பதைப்போல் தமிழ் எழுத்துலகில் இல்லை என தைரியமாகச் சொல்லலாம். குறிப்பாக மலேசியாவில் வெளிவரும் சில நாளிதழ்கள் இணையச் செய்திகளை அப்படியே எடுத்துத் தாங்களே உருவாக்கியதுபோல வெளியிடும் போக்கு கண்கூடு. இவ்வகைத் திருட்டுக்களை எப்படி அடையாளம் காணுவது? ஆறறிவுத் திருட்டுகளில் என்னென்ன வகைகள் உண்டு என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையிலும் அதே வேளையில் உள்ளூர மெல்லிய எச்சரிக்கையையும் தந்திருப்பதால் நூலாசிரியருக்கு என்னுடைய சபாஷ்.

இந்நூல் முழுக்க முழுக்கத் தகவல் நூலாகும். இந்நூலிலுள்ள கட்டுரைகளுக்காக நூலாசிரியர் கட்டாயம் நிறைய நூல்களைக் குறிப்பெடுக்கப் பயன்படுத்தியிருப்பார். குறிப்பெடுத்த நூல்களின் விவரத்தை பதிவிடுதல் எவ்வளவு முக்கியம் என்று அறிவுறுத்திய நூலாசிரியரே ஒரு துணைநூற்பட்டியல் போடாதது ஏமாற்றத்தைத் தருகிறது. ஒவ்வொரு தனிக்கட்டுரைக்கும் மேற்கோள் நூல் பட்டியல் போட்டிருக்கவேண்டும்; அல்லது குறைந்தபட்சம் ஒட்டுமொத்தமாகக் கடைசி பக்கங்களில் போட்டிருக்கவேண்டும். அது தவிர, பத்திகளிடையேயும் சில மேற்கோள்கள் காட்டியிருந்தால் நூலாசிரியரே தனது கருத்துகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் விளங்கியிருந்திருப்பார்.

மூன்றாவதாக, இந்நூலின் முன்னுரையிலேயே நூலாசிரியர் இக்கட்டுரைகள் தனித்தனியாக வேறொரு தளத்தில் வந்தவை என்றும் அவற்றை இங்கே தொகுத்துப் போடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நன்று; ஆனால், தொகுக்கப்படும் கட்டுரைகளின் மையக்கருக்களிடையே ஒருங்கமைவு இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். முதல் தலைப்புக்கும் இரண்டாவது தலைப்புக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்று இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன். அதேபோல் முன்னைத் தலைப்புக்கும் பின்னைத் தலைப்புக்கும் இருக்கும் தொடர்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒரு பெரிய கருத்துக் கோர்வை அங்கே காணப்பெறும். இவ்வாறு இருப்பின் நூல் மேலும் சிறப்படைந்திருக்கும்.

 

முனைவர் முனிஸ்வரன் குமார்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...