தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் துணைக்கால் என்று சொல்லப்படும் துணையெழுத்து பிற எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும் இயல்பு கொண்டதாயினும் சொற்களின் பொருள் வேறுபாட்டுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் மிகவும் இன்றியமையாதது. தன்னடக்கத்தின் காரணமாகத் தன் கட்டுரைகள் துணைக்கால் தன்மை கொண்டவை என நூலாசிரியர் விஜயலட்சுமி கூறினாலும் இந்நூல் மலேசியச் சூழலில் மட்டுமின்றித் தமிழ் புழங்கும் எழுத்துச் சூழலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சீரிய நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. சிங்கப்பூர்ச் சூழலில் இந்நூலின் தேவை குறித்துப் பேசுவதோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மற்றவர்களுடன் இக்கட்டுரை மூலம் பகிர்ந்துகொள்ளத் துணைக்கால் எனக்கு ஓர் வாய்ப்பு அளித்துள்ளது.
அறிவைப் பெறும் வழிகள் பல்கிப்பெருகிவிட்ட இன்றைய சூழலில் நூலகவியலாளர் என்ற முறையில் ஆய்வாளர்கள், பதிப்பகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் முதலியோரிடம் காணப்பட்ட போதாமைகள் தன்னைத் ‘துணைக்கால்’ என்னும் நூலினை எழுதத் தூண்டியுள்ளன என நூலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. இப்போதாமைகள் மலேசியாவில் மட்டுமில்லை. தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் நிரம்பவே காணபடுகின்றன.
எழுத்தாளர்கள் தங்களின் உரிமைகள் பற்றி அறியவில்லை என்பதும் பதிப்புரிமைச் சட்டம் என்ற ஒரு சட்டம் இருப்பது பற்றி அறியாமல் இருப்பதும் பெரும்பாலான எழுத்தாளர்களிடையே இருக்கும் பலவீனம் என்றே நினைக்கவேண்டியுள்ளது. மின்மரபுடைமைச்சட்டம் பற்றி அறிந்த என் நண்பர்களில் சிலர் தங்கள் நூல்களை மின்வானில் உலா வர அனுமதிக்கவில்லை. சட்டப்படி ஒரு படைப்பாளிக்கு அவனுடைய படைப்பின் மீது எழுபதாண்டுகளுக்கு உரிமை உள்ளது. அவர் மரணமடைந்த பின்னரும் அவருடைய பிள்ளைக்கு அப்படைப்பின்மீது எழுபது ஆண்டுகளுக்கு உரிமை உள்ளது. இப்படியொரு உரிமை இருப்பதே சிங்கையில் பலருக்குத் தெரிவதில்லை. இலவசமாக அவர்களின் உரிமைகளைக் கொடுத்து விடுகிறார்கள். மின்மரபுடைமையில் தங்களின் எழுத்துக்களைக் கொடுத்த பின்னர் மீண்டும் அச்சுப்போடமுடியவில்லை என்று அங்கலாய்க்கிற எழுத்தாளர்களும் சிங்கையில் தமிழ்ச்சூழலில் இருக்கிறார்கள். படைப்பிலக்கியகர்த்தாக்கள் தங்கள் படைப்பின் மீதுள்ள உரிமையை மற்றவருக்கு விட்டுக்கொடுப்பது தன்னையே அடிமைசாசனம் எழுதிக்கொடுப்பது போல அல்லவா?
இவ்விடத்தில் மனம்ஒப்பிப் பதிப்புரிமையைப் பிறருக்கு விற்றுவிட்ட எழுத்தாளர்களில் சிலரையும் நான் அறிவேன். தமிழகஅரசு நாட்டுடைமை ஆக்கிய எழுத்தாளர்களின் படைப்புக்கள் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு எத்தனை பதிப்பகத்தினரைப் பணம் சம்பாதிக்க வைத்திருக்கிறது என்பதையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டியுள்ளது.”செத்தும் கொடுத்த சீதக்காதி”களாகவே நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் அறிவுச்செல்வங்கள் (படைப்புக்கள்) பலரைச் செல்வர்களாக்கி உள்ளன.
தமிழகப் பதிப்பகத்தினர் பலர் அயலக – குறிப்பாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களுடன் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் ஒன்றும் செய்துகொள்வதில்லை. அவ்வாறு கேட்டாலும் கொடுப்பது வழக்கமில்லை என்று சொல்லிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு (இக்கட்டுரையாளர்) நான் எவ்வாறு ஏமாற்றப்பட்டேன் என்பதற்கு ஒரு சம்பவத்தைக் கூற நினைக்கிறேன். ஒரு பதிப்பகம் என்னுடைய “ சிங்கப்பூர்த்தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்” என்னும் நூலினை 2005 இல் அச்சிட்டது. அந்த நூலினை அச்சிடச் சிங்கப்பூரில் மானியம் கிடைத்தது. சிங்கப்பூரில் அச்சிட்டிருக்கலாமே எனப் பலர் நினைக்கலாம். பரவலாக வாசகர்களைச் சென்றடைவதற்குத் தமிழகத்தில் சந்தை வாய்ப்புகள் அதிகம் என்பதாலும், அந்த நூல் ஆய்வு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் போன்றோரைச் சென்றடைய வேண்டும் என நினைத்ததாலும் அங்கே அச்சிட நினைத்தேன். என் நண்பர் ஒருவர் அந்தப் பதிப்பகத்தினைப் பரிந்துரைத்தார். அப்பதிப்பகம் எனது நூலைத் தமிழக நூலகங்களுக்கென ஆயிரம் பிரதிகள் விற்றுவிட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டது. அதன் உரிமையாளர் பதிப்பகத் தொழிலுக்கு முழுக்குப்போட்டுவிட்டு வேறு வேலையில் சேர்ந்துவிட்டார் என்று அறிகிறேன். என்னைப்போல எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனரோ அறியேன் பராபரமே! சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கவேண்டாமா? என்ற கேள்வி பிறக்கலாம். உண்மைதான். வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டபிறகு தமிழகத்தில் நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்து, தக்க வழக்கறிஞரைத் தேடி, வாய்தாக்களுக்கு அலைவது என்பது சாத்தியப்படுமா? என்று யோசித்து நீதிமன்றத்துக்குப் போவதைக் கைவிட்டுவிட்டேன். “சுண்டைக்காய் அரைப்பணம் சுமைகூலி முக்கால்பணம் “ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. மேலும் உள்மனம் இன்னும் பல இலட்சங்களை இழக்காதே என்று சொன்னது. இதனால் தமிழகப் பதிப்பகத்தினர் அனைவரையும் குறைகூறுவது என் நோக்கமுமன்று. நேர்மையான, சட்டங்களை மதிக்கும் பதிப்பகத்தினரும் இருக்கிறார்கள். புத்தக வியாபாரிகளாக இயங்கும் வியாபார நோக்கமும் இருக்கிறது. இவ்வாறு எழுத்தாளர்கள் ஏமாறாமல் இருக்கத் ‘துணைக்கால்’ அவர்களின் பல்வேறு உரிமைகளை எளிய நடையில் விளக்குகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்பு, பதிப்பு, ஆய்வு போன்ற பல துறைகளையும், அவைகுறித்த சட்டங்கள்பற்றிப் பல நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும், பேசப்பட்டிருந்தாலும் அவை மலேசிய எழுத்துலகத்தையும், ஆய்வுலகத்தையும் சென்றடைந்ததாகக் கூற இயலாது. ஆகவே விஜயலட்சுமி துணைக்காலை உருவாக்கியுள்ளார். ஆய்வாளர்களுக்குத் துணைக்கால் எவ்வாறு உதவுகிறது? தான் ஒன்றும் புதிதாக எழுதவில்லை; விழிப்புணர்வு ஊட்டவே எழுதியுள்ளேன் என்று அடக்கத்துடன் கூறும் ஆசிரியரின் நேர்மை, பணிவு போன்றவை ஆகிய குணங்கள் ‘துணைக்கால்’ என்னும் நூலின் வழி அறிமுகமாகி நூலாசிரியரை மதிக்கவும், பாராட்டவும் வைக்கின்றன. ‘பம்மாத்து வேலைகள் பல செய்து நான் மட்டுமே இதனை எழுதியுள்ளேன் ‘மற்றவருக்கு ஒன்றும் தெரியாது’ என்று தருக்கித் திரியும் எழுத்தாளர்கள் மத்தியில் விஜயலட்சுமி அடக்கமாகவே உண்மையை எழுதியுள்ளார். மேலும் அவருடைய இந்த நூல் மிக முக்கியமானது.
இதுவரை மலாயாப்பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை நூலகத்தில் பணிபுரிந்தவர்கள் நூல்களைச் சேகரித்து வைக்கும் பணிக்கு அப்பால் ஆக்ககரமாக ஒன்றும் செய்யவில்லை. அதாவது தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்தார்கள். ஆனால் இந்த நூலாசிரியர் சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யவில்லை; சமூக அக்கறையோடு இயங்குகிறார் என்பதை இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. தமிழர்களின் பங்கும் பணியும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்னும் நியாயமான ஆசையோடு அவர் செயலாற்றிவருகிறார். அவரின் நோக்கமும் நேர்மையான செயல்பாடும் இளம் ஆய்வாளர்க்கு வழிகாட்டுவன.
ஆய்வியல் நெறிமுறைகள் (Research Methodology) என்னும் நூல் எண்பதுகளில் தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் போன்ற பட்டங்களுக்காக ஆய்வு செய்யப் பதிந்துகொண்ட மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது; இன்றும் கூடப் பாடமாகத்தான் உள்ளது. ஆனால், இன்று ஆய்வுலகில் உள்ள நிலைமை என்ன? தேர்ச்சி பெறுவது அல்லது பட்டம் பெறுவது ஒன்றே நோக்கமாகிப் போய்விட்ட சூழலில் ‘ஆய்வியல் அறங்கள்’ பேணப்படுவதில்லை. அறிவுத் திருட்டு, கருத்துத் திருட்டு எனப் பல குற்றங்கள் பெருகிவிட்டன. கல்வி வணிகமயமாகிவிட்ட சூழலில் இந்நூல் கூறும் கருத்துக்கள் எவ்வளவு தூரம் ஆய்வாளர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் முதலியோரைச் சென்று சேரும்? என்னும் கவலையே எனக்குள் எழுந்தது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆய்வு நேர்மை இன்று இல்லை. புகழ்பெறுவது, பணிவிவரப்பட்டியலை (portfolio) நிரப்புவது போன்ற காரணங்களுக்காகவும் பல வகை அறிவுத் திருட்டுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. பல்கலைக்கழகங்கள், தரகர்கள் போன்றோர் பல லட்சங்களுக்குப் பட்டங்களை விற்கின்றனர். இந்த விற்பனை தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. அதன் விளைவு என்ன? தமிழை முறையாக எழுதவோ, பேசவோ தெரியாத பேதைகள் முனைவர்களாகிவிட்டனர். இவர்களின் புகழ்போதை மற்றவர்களின் எழுத்தைத் திருடச் செய்கின்றது. சான்றாக இக்கட்டுரையாளரின் ஒரு கட்டுரையைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சில வார்த்தைகளை மாற்றிவிட்டு அப்படியே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக் கட்டுரையாக வாசித்துவிட்டார். இந்தத் திருட்டைச் செய்யத் தூண்டியவர் கல்விநிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பு வகித்தவர். ஓர் ஆசிரியர் திருட வழிகாட்டுகிறார்; மற்றோர் ஆசிரியர் திருடுகிறார். எப்படி ஆய்வுலகம் உருப்படும்? ஆசிரியர்களாகிய இவர்கள் ‘ஆசு உரியர்கள்’ அல்லவா? இவர்கள் திருடர்கள். ஆனால், சமூகத்தில் இவர்களுக்குப் பதவி காரணமாக ராஜமரியாதை கிடைக்கிறது! (துணைக்கால் நூலை வாங்கி இவர்கள் படித்துத் திருந்துவார்கள் என்பது சந்தேகமே!)
அடுத்து அறிவுத்திருட்டுக்கு மற்றோர் உதாரணத்தைப் பார்ப்போம். முனைவர் இரத்தின வெங்கடேசன் என்பவர் சிங்கப்பூரின் ஐம்பது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி வெளியிடப்பட்ட “பொன்விழாக் கட்டுரைகள்” என்னும் நூலுக்குக் கட்டுரை எழுதி அனுப்பியிருந்தார். அக்கட்டுரையும் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. இவ்விடத்தில்தான் சிக்கல் ஆரம்பமாகிறது. (நான்கு நாள்களுக்கு முந்தி ஒரு பேச்சுக்குத்தான்) சிங்கப்பூர் என்னும் திரவிய தேசத்திற்கு வந்தவர்கள் (நன்றி உணர்வால்) எழுதிய கட்டுரைகள் இடம்பெறும்போது நீண்ட நாள்கள் இங்கு வாழ்ந்துவரும் முனைவர் இரத்தின வெங்கடேசன் கட்டுரை எழுத நினைத்தது நியாயமே. அதனால் அவர் என்ன செய்திருக்கவேண்டும்? சொந்தமாக எழுதியிருக்கவேண்டும். ஆனால் அவர் செய்தது என்ன? சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய என் கட்டுரையையும், பாலு மணிமாறன் வெளியிட்ட தொகுப்புப் பற்றிக் காலச்சுவடு இதழில் வெளிவந்திருந்த கருத்துகளையும் சேர்த்துக் “கதம்ப சாம்பார் போல”, ஒரு சில வார்த்தைகளை (நாகரிகமாகச் சொல்வதென்றால்) மாற்றிவிட்டுச் “சுடப்பட்ட” திருட்டுக்கட்டுரையை அனுப்பிவிட்டார். கட்டுரையைத் தொகுத்தோருக்கு எது அசல் கட்டுரை, எது நகல் எடுக்கப்பட்ட கட்டுரை என்றெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் சாதனைப்பட்டியலை நிரப்புவதுதானே? அப்போதுதான் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தமுடியும்? பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் முனைவரிடம் ஆய்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் எப்படி இதைச்செய்தீர்கள்? என்று நேரடியாகவே கேட்டுவிட்டு “இனி இவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று எச்சரித்தேன். பாதிக்கப்பட்ட பாலு மணிமாறனும் அவர் பங்குக்குத் தனது முகப்பக்கத்தில் ‘கிழிகிழி’ என்று கிழித்துவிட்டார். இப்படியெல்லாம் திருட்டுச்சம்பவங்கள் தமிழ் எழுத்துச்சூழலில் நிலவுவதை நோக்கப் புகழ்போதை தலைக்கேறி மற்றவர் எழுத்துக்களைத் திருடும் இவர்களைத் தமிழண்ணல் குறிப்பிட்டதுபோல, புதுமைப்பித்தன் சொன்னதுபோல “ சோரம்போனவர்கள்” என்று அழைக்காமல் எப்படி அழைப்பது? பேராசிரியர்கள்,முனைவர்கள், ஆய்வாளர்கள் முதலியோர் பகிரங்கமாகவே திருடுகிறார்கள். இவர்களின் திருட்டுக்களை அடிப்படையாக வைத்து இவர்களை ஆய்வுநரிகள்,ஆய்வுக்கிளிகள், ஆய்வுப்பூனைகள் என்றெல்லாம் வருணிப்பது சரிதானே ?
எனக்குத் தெரிந்த ஓர் ஆய்வு மாணவர் தன் ஆய்வேட்டைத் தன் நண்பர் ஒருவரிடம் தட்டச்சு செய்யக் கொடுத்திருந்தார். தட்டச்சு செய்தவரோ அவர் பெயரில் பல்கலைக்கழகத்தில் ஆய்வேடு சமர்ப்பித்து முனைவராகிவிட்டார். பாவம்! பாதிக்கப்பட்ட ஆய்வாளர் “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்“ என்று பாடாத குறைதான். இது தமிழகத்துக் கதை. இவ்வாறு பல நிலைகளிலும் ஆய்வுலகம் போதாமை மிக்க உலகமாக மாறி வருகிறது. ஆகவே துணைக்கால் என்னும் நூலின் தேவை தவிர்க்கமுடியாத ஒன்று தான்.
ஆங்கில மொழியைப் பொறுத்தவரை சில கணினி மென்பொருட்கள் கருத்துத் திருட்டு, அறிவுத்திருட்டு போன்ற திருட்டுக்களை அம்பலப்படுத்த உதவுகின்றன. அவை தமிழில் இன்னும் அறிமுகமாகவில்லை. அவ்வாறே அறிமுகமானாலும் தமிழ் இலக்கியங்களில் “முன்னோர் மொழிபொருள் பொன்னேபோல் போற்றும்” உத்திமுறையைக் கணினி மென்பொருள் எவ்வாறு ஏற்கும்? திருட்டு என்று வகைப்படுத்துமா? ஆய்வுலகில் நிகழும் திருட்டுக்களைக் குறைக்க அந்த மென்பொருள் எப்போது வரும்? நேர்மையான ஆய்வாளர்களின் உழைப்பு எவ்வாறு பாதுகாக்கப்படும் என்று ஆவலோடு காத்திருக்கவேண்டிய நிலை ஆய்வாளர்களுக்கு உள்ளது.
கற்றுத் தெரிந்துகொள்வது ஒரு வகை. பட்டுத்தெரிந்துகொள்வது மற்றொருவகை. என்போன்று சிலர் கற்றும் பட்டும் தெரிந்துவைத்திருக்கும் விஷயங்களைப் பலரும் தெரிந்துகொள்ளத் துணைக்கால் தந்த விஜயலட்சுமியின் பணி ஆக்ககரமான பணி என்பது மட்டுமின்றி அவசியமானதும் ஆகும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது