ஓர் எழுத்தாளனாகப் பிறர் நூலை விமர்சனம் செய்யும் அளவுக்குத் தகுதி கொண்டிருக்கவில்லையென்றே நம்புகின்றேன். இதுவரையிலும் சிறுகதை இலக்கியம் என் கைக்கு அடங்காதொரு கலையாக இருக்கும் பட்சத்தில் ம.நவீனின் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பை ஒரு வாசகனின் பார்வையிலிருந்து விமர்சனம் செய்வது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.
எட்டு கதைகள் கொண்டுள்ள இத்தொகுப்பு என் கையில் கிடைத்தவுடன் முகப்பைப் பார்த்தேன். ம.நவீன் ‘மண்டை ஓடி’ அதன்கீழ் ஓர் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. மௌனமாகச் சிரித்துக்கொண்டேன். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் பலருக்கு ம.நவீன் ஏற்கனவே மண்டையோடிதான். அதை மீண்டும் ஒருமுறை எழுத்தாளர் இமையம் நூல் அறிமுக விழாவில் குறிப்பிட்டது எனக்குள் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. அதையே ம.நவீனும் நிறுவப் பார்க்கிறாரா என்பது தெரியவில்லை. அப்படியாக இருந்தால் இஃது ஒரு விதமான ‘Trend setting’ ஆக மாறுவதற்கு வாய்ப்புண்டு. இதை ம.நவீன் கவனத்தில் கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன். ஒருவேளை தொகுப்பின் முதல் கதை ‘மண்டை ஓடி’ என்பதால் அதனையே தலைப்பாக வைத்திருக்கலாம். மண்டை ஓடி என்ற சொல் பேச்சு வழக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு சொல். பலரது கவனத்தை ஈர்க்கக்கூடிய சொல்லாகவும் அது விளங்குகிறது. ஆக, இத்தலைப்பின் தேர்வு வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஓர் உத்தியாகவே பார்க்கிறேன். அதில் வெற்றியும் கிட்டியிருக்கிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல் விமர்சனம், வாசகனுக்குப் பெரும் தடையாக இருப்பதாகவே உணர்கிறேன். இத்தொகுப்பைச் செறிவு செய்து விமர்சனம் செய்தவர் எழுத்தாளர் இமையம். வாசகன் கதைகளை வாசிக்கும் முன்பாக அவன் முதலில் எதிர்கொள்வது இமையத்தின் விமர்சனம். எழுத்தாளர் இமையம் விமர்சனம் என்ற பெயரில் ஒட்டுமொத்த கதைகளையும் சொல்லிவிட்ட பிறகு வாசகன் தொடர்ந்து வாசிக்க என்ன வேண்டியிருக்கிறது? எழுத்தாளர் இமையம் கதையின் மொத்த உள்ளடக்கத்தையும் சொல்லிவிட்டு இக்கதை இதைத்தான் சொல்ல வருகிறது என்பதையும் சொல்லியிருக்கிறார். இதனால் வாசகனுக்கு எந்த மெனக்கெடலும் அவசியமில்லை. முன்னமே வாசகன் நூல் விமர்சனத்தை வாசித்துவிட்டு கதைக்குள் நுழையும்போது எந்தவித எதிர்வினையுமின்றியே கதைகளுடன் ஒத்துப்போக வேண்டியிருக்கின்றது. சிறுகதையின் உள்ளடக்கத்தை ஒருவரியில் சொல்லியிருந்தால் கதையை வாசிக்கும் வாசகனுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கக்கூடும். இனிவரும் காலங்களில் நூல் விமர்சனத்தை நூலின் தொடக்கமாக இடம்பெறுவதைக் குறித்து ம.நவீன் யோசிக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பை ம.நவீனின் சிறுகதையுடனான பத்தாண்டு காலப் பயணமாகவே பார்க்கிறேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் 2005 ஆம் ஆண்டுத் தொடங்கி 2015 ஆண்டு வரை எழுதப்பட்ட சிறுகதைகள். ம.நவீனுக்குள் இருக்கும் கதைசொல்லியின் பத்தாண்டு கால மாற்றத்தை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இக்கதைகள் மண்ணின் மணத்தை நிறைத்து வைத்திருக்கும் கதைகள். அசலான மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகள். அதேசமயம், எந்த மண்ணுக்கும் பொருந்தக்கூடிய கதைகள். தொகுப்பில் இடம்பெற்றுள்ள எட்டுக் கதைகளில் நெஞ்சுக்கொம்பு, இழப்பு, நொண்டி, ஒலி மற்றும் எனக்கு முன் இருந்தவனின் அறை ஆகியவை மிகச் சிறந்த கதைகள். மற்றவை மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மண்டை ஓடி, கூலி ஜனரஞ்சகமான கதைகளாகவே வெளிப்படுகின்றன. மணிமங்களம் சுமார் ரகம் என்பது போலவே இருந்தது. சிறந்த கதைகள் இடம்பெற்றுள்ள இத்தொகுப்பில் மணிமங்களம் இணைந்து கொண்டது ஒருவகையில் துரதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். விமர்சனம் என்ற பெயரில் எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. நூலின் முன்னுரையில் ம.நவீன் கூறிய ‘எவ்வித சமரசமின்றித் தொகுப்பிலிருந்து நீக்கிய கதைகளை’ அவரது அனுமதியுடன் கேட்டு வாசித்ததிலிருந்து ‘காசியும் கருப்பு நாயும்’ விடுபட்டதை எண்ணி மனம் வருத்தம் கொண்டது. இழப்புச் சிறுகதையில் பேசப்படும் அரசியலைப் போன்று நுண்ணரசியல் பேசும் முக்கியத்துவம் வாய்ந்த கதையாகவே அதைப் பார்க்கிறேன். அக்கதையும் தொகுப்பில் இடம்பெற்றிருந்தால் ‘மண்டை ஓடி’ தனித்துவமான தொகுப்பாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ம.நவீன் நல்ல கதைசொல்லி என்பதற்கு ‘மண்டை ஓடி’ தொகுப்பு ஒரு சான்று. அவரது சிறப்பு அம்சம் அவர் கதையை எங்குமே சொல்லவில்லை. மாறாக எல்லாமே காட்சிகளாகவே நம்மைக் கடந்து செல்கின்றன. கதைகள் காட்சிகளாகக் கடந்து சென்றாலும் வாசகனின் மனதை விட்டு நீங்கவில்லை. அவை தொடர்ந்து வாசகனோடு தொடர் உரையாடலை நிகழ்த்துகின்றன. மற்றொரு சிறப்பம்சம் ம.நவீனின் சொற்பிரயோகம். தேர்ந்தெடுத்த சொற்களால் மட்டுமே கதை சொல்லப்படுகிறது. கதையில் எதுவும் வலிந்து சொல்லப்படவில்லை. எல்லாம் போகிற போக்கில் சில வார்த்தைகளால் மிக லாவகமாகக் கடந்துவிட்டுச் செல்கின்றன. அதுவே கதைக்குத் தேவையான இடத்தில் தகுந்த உணர்வுகளைக் கொடுக்கின்றன.
அடுத்ததாக ம.நவீனின் கதைகளில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களும் அதன் பெயர்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சில கதைகளில் மிகக் குறைவான பாத்திரங்கள். இன்னும் சில கதைகளில் கூடுதலான பாத்திரங்கள். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிக் கதையென அளவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சில பாத்திரங்கள் தொடர்ந்து சில கதைகளில் பயணிப்பதைப் பார்க்க முடிகின்றது. அவ்வாறாக ஓலை, ஓலம்மா, பிளாக்காயன், முனியாண்டி பாத்திரங்கள் சில கதைகளில் தொடர்ந்து வருவதால் சில கதைகள் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டிருப்பதை வாசகனால் அறியமுடிகின்றது. இப்பாத்திரங்கள் எல்லாம் கதாசிரியரின் கண் முன் வாழ்ந்ததாகக் கூட இருக்கலாம். குறிப்பாக ஓலை, ஓலம்மா, பிளக்காயன். ம.நவீன் கதைகளில் கதாப்பாத்திரங்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர்கள் கூடத் தனிச்சிறப்பை கொண்டவையாகப் பார்க்கிறேன். பாதிக்குப் பாதிக் கேட்டிராத பெயர்கள். குறிப்பிட்ட பெயர்களைத் தேர்வு செய்வதில் ம.நவீனுக்கு எதேனும் காரணங்கள் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும்கூடப் போகலாம். ஆனால் சில பெயர்கள் கதைக்கு எதேச்சையாகவே அமைகின்றன. எடுத்துக்காட்டாக ‘மண்டை ஓடி’ சிறுகதையில் விச்சு தன்னுடன் வேலை செய்யும் காசிக்கு மனைவியின் கிட்னி ஆப்ரேஷனுக்காக மொத்தப் பணத்தையும் கொடுக்கிறான். புண்ணியம் தேடிச்செல்லும் இடமாக ‘காசி’ பார்க்கப்படுவது நாம் அறிந்ததே. இக்கதையிலும் விச்சு காசிக்கு உதவி செய்வது அவனுக்கான புண்ணியம். இப்படியாக இன்னும் சில உதாரணப் பெயர்கள் கதைகளில் உலாவுகின்றன. ஆனாலும் எதுவும் திட்டமிட்டு நடந்ததாகத் தெரியவில்லை. எல்லாமே அதன் போக்கிலேயே அமையப்பெற்றிருக்கிறது. கதையின் கதாபாத்திர கட்டமைப்பு சிறப்பாக வெளிப்படுகின்றது. ஒவ்வொரு கதையிலும் அதன் பாத்திரங்கள் மிக நேர்த்தியாகத் தொடர் கட்டமைப்பின் மூலமாக முழுமை பெறுகின்றன. அதற்குச் சான்றாக, மண்டை ஓடியில் விச்சு கதாபாத்திரம், நெஞ்சுக்கொம்பில் ‘கொய்த்தியோ’ மணியம், நொண்டியில் சேது ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தொடர்ந்து, இத்தொகுப்பை ஆராயும்போது ம.நவீனின் கதைகளில் உரையாடல்கள் என்பது மிகக் குறைவு. கதைக்கான உத்திமுறையே அதற்கான காரணமாக இருக்கிறது. எட்டு கதைகளில் ஐந்து கதைகள் தன்னிலையிலிருந்தே சொல்லப்படுகின்றன. அவற்றில் மண்டை ஓடி, நெஞ்சுக்கொம்பு, இழப்பு, மணிமங்களம் ஆகிய கதைகள் சிறுவர்களின் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. சிறுவர்களின் மனநிலை இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றது. அதுவே கதையின் பலமும் கூட.
வாசகனுக்குச் சலிப்பை ஏற்படுத்தாத கதை சொல்லும் முறை ம.நவீனுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. அதுவே அவரது கதைக்கான வலுவாகவும் அமைகிறது. கதைகளைச் சொல்வதில் அவர் கையாண்டிருக்கும் உத்திகள் கதைகளுக்கு நல்ல வடிவத்தைக் கொடுத்திருக்கின்றது. ‘ஒலி’ மற்றும் ‘நெஞ்சுக்கொம்பு’ கதைகளை வாசகர்களுக்குக் காட்சிகளாகக் காட்டிவிட்டு போனாலும் அவற்றின் தொடர்ச்சி ஒரே நேர்கோட்டில் பயணித்து மையத்தை அடையும்போது கதையும் முழுமையடைகிறது, வாசகனும் நிறைவு கொள்கிறான்.
ம.நவீனின் கதைகளில், சமூக அரசியல் கதைகளோடு மிக நேர்த்தியாக இணைத்திருப்பது குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு சிறப்பம்சம். ‘ஒலி’ சிறுகதையில் தோட்டப்புறங்களில் குடிக்கு அடிமைப்பட்ட சமூகத்தை வைத்து மற்றொரு சமூகம் எப்படிப் பணம் பண்ணியது என்பது நேர்த்தியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதைப்போலவே ‘இழப்பு’ சிறுகதையில் புத்ராஜெயா பெருநகரம் உருவாக அதிகாரபீடத்தால் வெளியேற்றப்பட்ட நம் சமூகத்தின் வேதனையும் இழப்பும் வலியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நெஞ்சுக்கொம்பு’ சிறுகதையில் ‘கொய்த்தியோ’ மணியம் மூலம் கம்பத்துப் பகுதியில் வாழும் சமூகத்தின் அசல் வாழ்வு கதையாக்கப்பட்டுள்ளது. நாம் நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் அரசியல் வலையைக் கண்டறிய சமூக அரசியல் மிக அவசியமும்கூட. அவை இக்கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றது.
வாழ்க்கை என்பது முழுவதும் கொண்டாட்டம் நிறைந்ததாக இல்லை. கொண்டாடப்படாத வாழ்க்கையையும் நம்மைச் சுற்றி பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதுவரை நாம் பார்த்திராத அல்லது பார்க்க மறுக்கும் அம்மாதிரியான வாழ்க்கையை ம.நவீனின் ‘மண்டை ஓடி’ தொகுப்பு வாசகர்களுக்குத் தருகின்றது. இது வாசகர்களுக்கு நிச்சயம் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றாக ம.நவீனின் ‘மண்டை ஓடி’ தொகுப்பும் இடம்பெற்றுள்ளதாகவே கருதுகிறேன். ஆதலால் நிச்சயமாக ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பைக் கொண்டாடலாம்.
மண்டை ஒடி’ என்கிற கதை அற்புதம். இப்போதுதான் அக்கதையினை நான் அவரின் ப்ளாக்கில் வாசித்து முடித்தேன்.
ஏற்கனவே முகநூலில் டாக் செய்து வாசிக்கச் சொல்லியிருந்தார். ஏதோ ஒரு சிந்தனையில் இருந்த நான், அன்று அக்கதையினை வாசிக்கத் தவறிவிட்டேன்.
இங்கே வல்லினத்தில், எழுத்தாளர் இமயம் மற்றும் எழுத்தாளர் கங்காதுரையின் விமர்சனங்களை வாசித்தப்பின் உடனே விரைந்தேன் அவரின் வலைத்தளத்திற்கு.
மண்டை ஒடி’ கதையினை வாசிக்கின்றபோது மனமும் கண்களும் கதைதனில் அப்படியே ஒட்டிக்கொள்கிறது.
நகைச்சுவையாக் கதை சொல்கிற யுக்தி நவீனுக்கு கைவந்தக்கலை. கதையில் வரும் அந்தச் சிறுவனின் செயல்பாடுகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், மனம், அந்தச்சிறுவனின் பாதிக்கப்பட்ட மனநிலையினை நினைத்து கலக்கம் கொள்கிறது.
விச்சு, `கறுப்பட்டி’ என்று எல்லோர் முன்னிலையிலும் அழைக்கிறபோது, அதுவும் கனகா என்கிற பெண்ணின் முன் அழைக்கின்றபோது, அந்த அப்பாவிச்சிறுவனின் மனம் படும்பாடு, வாசகர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து நகர்த்துகிறது.
குழந்தைகளை வெளியே அனுப்பி அனுபவங்களைக் கற்றுக்கொள்ள பெற்றோர்கள் வழிவகுக்கவேண்டும் என்கிற சிந்தனை, “சீனர்களைப் பார்,’’ என்கிற வார்த்தை உதாரணத்தின் மூலமாகச் சொல்லப்பட்டாலும், நம் பிள்ளை இந்த மாதிரியெல்லாம் அவமானப்பட்டு, அடுத்தவர் கொடுக்கின்ற ஐஞ்சுக்கும் பத்துக்குக்கும் மொத்தடிப்படவேண்டுமா என்கிற சிந்தனை வராமல் இல்லை.
எச்சியில் பாத்திரங்களை `ஆய்வு’ மனப்பான்மையுடன் ஆராய்ந்து கழுவி சுத்தப்படுத்துகிறான், இது கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே வேளையில் உண்மையாகவும் இருந்தது.
அவமானப்பேச்சுகளில் இருந்து ஒதுங்கி ஒளிந்து மறைந்து பொதுவில் வர கூச்சப்பட்டுக்கொண்டு கூனிக்குறுகுகிற காட்சியினை எந்தப் பெற்றோர்கள் பொறுத்துக்கொவார்கள்.! அம்மாவிற்குத்தெரிந்தால், என்று அசைபோடும் குழந்தையின் உள்ளம். பாவம்.
எல்லா அவமானங்களில் இருந்து தனித்து விடுதலை பெற தட்டு கழுவுகிற வேலைகளில் கவனத்தைத் திருப்பி, அதில் தமது ஆய்வினை தொடர்வதாகக் குறிப்பிடுகையில், நெஞ்சம் பதறுகிறது.
பலூனைக்கண்டவுடன் (பலூன் போல் உள்ள காண்டொம்) ஊதி விளையாடத்துடிக்கின்ற பிஞ்சுமனதின் கல்லங்கபடமற்ற வெள்ளை உள்ளம்; தாயான எனக்கு, அச்சிறுவனின் மனவுணர்வுகளைப் சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஏனோதானோ என, யாரோ ஒருவரை நம்பி வேலைக்கு அனுப்பிய தாயின் மேல் கோபமே மிஞ்சுகிறது. அப்படி என்ன வறுமை வாட்டுகிறது!?
குழந்தை வயதில் ஏற்படுகிற அவமானங்கள் சாகும்வரை மறையாது. “எனக்கு அது நல்ல அனுபவம்,’’ என்று வெளியே கம்பீரமாக பிதற்றிக்கொண்டாலும், உள்ளூர அந்த வடு எட்டி எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கும். அப்படி எட்டிப்பார்க்கின்ற தருணங்களில், மனம் ஒருவித சோர்வில் மண்டிக்கிடக்கும். அதனால்தான், இதுபோன்ற அனுபவசாலிகள் தங்களின் குழந்தைகளை மனங்கோணாமல் பாதுகாத்துக்கொள்வார்கள். அனுபவம் தேவைதான், ஆனால் ஒன்றுமறியா குழந்தைகளின் மனங்களை ரணப்படுத்தி நோகடிப்பது பாவச்செயல்.!
சில உணவுக்கடைகளில் நடக்கின்ற அவலங்கள் அருவருப்பு.
அற்புத கதை சொல்லி நவீன்.
வாழ்க வளர்க.!