இரண்டாவது தடவை அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்திருக்கக் கூடாது. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகி விட்டது. முதல் தடவை எந்தப் பிரச்சினையும் இல்லை. தாகம் அடங்கவில்லை போலிருந்தது. இரண்டாவது தடவை படுத்துக் கொண்டே, இருட்டில் போத்தலை வாயில் சரித்தபோது அளவுக்கதிகமான தண்ணீர் வாய்க்குள் புகுந்து உடனடியாக விழுங்கிக் கொள்ளமுடியாமல் புரையேறி விட்டது. தொண்டை வழியே உள்ளே சென்ற பாதித்தண்ணீர் மூக்கினூடாக வெளியே வந்துவிட்டது. அத்தோடு இருமலும் சேர்ந்துகொண்டது. கை தடுமாறி போத்தல் நழுவியது. நெஞ்சுப் பகுதியிலிருந்து போர்வையை நனைத்தபடி உருண்டு வந்து கீழே விழுந்தது. நடுச்சாமத்தில் திடீரெனக் கிளம்பிய அந்த ஓசைகளினால் அறையில் தூங்கிக் கொண்டிருந்த எல்லோருக்கும் போல விழிப்பு வந்திருந்தது. முணுமுணுத்தவாறும், சத்தமாகவும் சிலர் அவளைச் சபிக்கத் தொடங்கினர்.
அப்போதுதான் நினைத்தாள். இரண்டாவது தடவை அந்தத் தண்ணீரையெடுத்துக் குடித்திருக்கக் கூடாது. ‘செத்துத் தொலையக் கூடாதா?’ எனத் திட்டும் அவர்களது வார்த்தைகள் பலிக்கக் கூடாதா என ஏங்கினாள். நடுத்தெருவில், எல்லோருக்கும் முன்பாக அம்மணமாக நிற்பதுபோல கூசினாள். எப்பொழுதும் அந்தத் தண்ணீர் போத்தல் அவளருகே கட்டிலுக்குக் கீழேதான் இருக்கும். ஒரு வளர்ந்த மனிதனின் கை சாண் அளவேயான பிளாஸ்டிக் போத்தல். எப்பொழுதாவது அவளைப் பார்க்க வரும் சந்திரா ஒரு தடவை கேட்டாள்.
‘ஏன் இத்தனூண்டு போத்தல்ல தண்ணி வச்சுக்குற? பெரிய ஒரு போத்தல்ல வச்சுக்க வேண்டியதுதானே? நீ தண்ணி குடிக்கிற அளவுக்கு மூணு, நாலு நாளைக்கு மேல தாங்கும். இந்தச் சின்ன போத்தல்ல தண்ணி ரொப்பிக்கிறதுக்காக நீ தெனமும் கஷ்டப்பட்டுக் கீழ போய்ட்டு வர வேண்டியிருக்குல்ல? வந்துட்டு அப்புறம் மொழங்கால் வலி, தோள்பட்டை வலி அது இதுன்னுட்டு முனகிட்டே இருப்பே. ஏதோ உன் நல்லதுக்குச் சொல்றேன். நான் பக்கத்துல இருந்தேன்னா தெனமும் நானே கொண்டு வந்துருப்பேன். உன்னைப் பார்க்குறதுக்கே வூட்டுக்காரரை ஏமாத்திட்டு வர வேண்டியிருக்கு. இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல’
அவளுக்குப் பேச்சு வரவில்லை. தண்ணீர் எடுத்து வரும் சாக்கில் கீழே போய், எஞ்சித் தூளாகிப் போன பாண், பிஸ்கட், ரொட்டித் துண்டுகளை சிட்டுக்குருவிகள் கொறிக்கட்டுமென முற்றத்தின் ஒரு மூலையில் கொட்டி விட்டு வருவாள். அவள் மாடியிலிருந்து படியிறங்குவதைக் கண்டதுமே மா மரத்தில், பூக்கொன்றை மரத்தில், நொச்சி மரத்தில் என எங்கெங்கோவெல்லாம் அடைந்துகிடக்கும் குருவிகளெல்லாம் சட சடத்துப் பறந்து கீச் கீச்சென்று கத்தத் தொடங்கிவிடும். ஒருவேளை அவளுக்காகத்தான் காத்திருக்குமோ என்னமோ. மெலிந்து, வெளிறிப் போய், அங்கேயிங்கே எனப் பிடித்துப் பிடித்து மெதுமெதுவாக நடந்துவரும் அவளைச் சுற்றிச் சுற்றிப் பறக்கும். அவளது மனதுக்குள் குதூகலமாக உணர்வாள். அவளை எதிர்பார்த்திருக்கும் சீவன்கள் இந்த உலகில் இன்னுமிருப்பது ஒரு உற்சாகத்தைத் தரும். வயது, வியாதி, வலி எல்லாம் மறந்து அக்கணத்தில் ஒரு சிறுமியாகி விடுவாள். தேயிலைத் தோட்டத்தில், இறப்பர் காட்டில் வெறுங்கால்களோடும் கிழிசல் சட்டையோடும் ஓடித் திரிந்த சிறுமி.
காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. அவளுக்குக் கல்யாணமானதும், அம்மா செத்துப் போனதும், அப்பா காணாமல் போனதும், குழந்தை தரித்ததுமென எல்லாமே நேற்றுப் போல இருக்கிறது. எதுவுமே மறக்கக் கூடியதாக இல்லை. ஏதோவொரு வாசனை, வர்ணம், துணியின் மென்மை, காலநிலை, உணவின் சுவை என ஏதாவதொன்று ஞாபகத்தின் முனையைப் பிடித்து மேலே இழுத்துவிடும். பிறகு நாள்தோறும், இரவு தூக்கம் வரும்வரைக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பாள். சில நாட்களில் தூக்கம்கூட வராது. இருட்டில் மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். அது ஒரு தவம். உறக்கம் பீடிக்க வேண்டுமென்ற பிரார்த்தனை. உடல் வலி, முழங்கால் நோவு, பழிச் சொற்கள் எல்லாவற்றையும் உறக்கத்திலிருக்கும் சொற்ப நேரத்தில்தான் மறந்துவிட முடியும், பழைய ஞாபகங்களையும் கூட.
அவளுக்குத் திருமணம் நடக்கும்போது பதினைந்து வயது தாண்டி நான்கைந்து மாதங்கள் கூடக் கழிந்திருக்கவில்லை. முதன்முதல் சேலை கட்டியிருந்தாள். தங்கநிற கையகல சரிகையோடு சிவப்புநிற மணிப்பூர் சேலையை லயக் காம்பிராவுக்குக் கொண்டு வந்தநாளில் அவளது அம்மா கூட தோளில் போட்டு அழகு பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது. அம்மா, அப்பா, அக்கம்பக்கத்து வீட்டாரோடு நடந்தே கோயிலுக்குப் போய் மாலை மாற்றித் திருமணம் நடந்தது அவளுக்கு விளையாட்டுப் போலிருந்தது. திருமணம் முடிந்த அடுத்த நாளே இடுப்பில் பழைய துணியைச் சுற்றிக் கொண்டு கணவனோடு இறப்பர் பால் வெட்டப் போனாள். போகும் போது இறப்பர் காட்டின் அட்டைக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சவர்க்காரக் கரைசலை அவன்தான் அவளது கால்களில் தடவி விட்டிருந்தான்.
அவளது கன்னத்துக் குழி ஸ்ரீப்ரியாவையும், பெரிய கண்கள் ஸ்ரீவித்யாவையும் நினைவுபடுத்துவாக அவன் சொன்னதும் சிரித்தாள். அப்படியொரு சிரிப்பு. அதற்குப் பிறகு இன்றுவரையில் அப்படியொரு சிரிப்பை அவள் சிரிக்கவேயில்லை. அதுவரை யாருமே அவளிடம் அப்படிச் சொன்னதில்லை. அவன் சொன்னது சந்தோஷத்தைத் தந்தது. உண்மையில் சொல்லப் போனால் அவளுக்கு ஸ்ரீதேவியைத்தான் பிடித்திருந்தது. தலைமுடி சீவுவதெல்லாம் கூட ஸ்ரீதேவியைப் போலவே செய்து பார்த்திருந்தாள். வெள்ளைப் பாவாடை தாவணியில் ‘செந்தூரப் பூவே செந்தூரப் பூவே’ எனச் செந்நிற மலர்களோடு ஸ்ரீதேவி ஆடிப் பாடும் காட்சி அவளது மனதை விட்டு அகல மறுத்திருந்தது. அது கணவனோடு அவள் போய்ப் பார்த்த முதல் படம். படத்தின் பெயரைப் போலவே, சொல்லி வைத்தது மாதிரி அப்பொழுது அவளுக்கு பதினாறு வயது. விறுவிறுவென்று வேகமாக நடந்துசெல்லும் கணவனின் பின்னால் நைலெக்ஸ் சேலை அணிந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த நகரத்துக்கு அவள் வந்தது அதுதான் முதல் தடவை. வாகனங்களும், விதவிதமான ஆடையணிந்து நடமாடிக் கொண்டிருந்த மனிதர்களும், ஆடம்பரமான கட்டிடங்களும் வீடுகளும் அவளை ஆச்சரியப்படுத்தின.
சந்தைக்குக் கூட்டிக்கொண்டுபோய் அவளுக்கு துணி வாங்கிக் கொடுத்தான். வெற்றிலைக் கடையின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் போஸ்டரைக் காட்டி ‘போவோமா?’ என்றான். திரையரங்குக்குள் இருட்டு, மூட்டைப் பூச்சிக் கடி, பீடியும் சுருட்டுப் புகையும் கலந்த வாடை, காதடைக்கும் சத்தம் எல்லாமே அவளுக்குப் புதியதாக இருந்தன. படத்தின் இடைவேளையில் அவளுக்கு ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்தான். அவளுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது, அவனுக்கும் !
இப்பொழுது அவன் இருக்கிறானா அல்லது செத்துப் போய்விட்டானா எனத் தெரியவில்லை. ஒரு தகவலும் இல்லை. நல்லவன். ‘எங்கிருந்தாலும் நல்லாருக்கட்டும்’ என அடிக்கடி நினைத்துக் கொண்டாள். சந்திராவிடம் கூற முடியாது. வம்புக்கு நிற்பாள். ஒரு தடவை ‘ஒரே அவன் நினைப்பாகவே இருக்கிறது’ எனச் சொன்னதற்கு ஊரே கேட்கப்போல புலம்பி விட்டாள்.
“ஆமா. நீயே உன் புருஷன மெச்சிட்டிரு. பார்க்க வந்தான்ல. அப்பவே உன்னக் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல. ஏதோ ரெண்டு மூணு வருஷம் நானும் நீயும் ஒரு வூட்டுல வேல பார்த்தோம். எனக்கு நெறைய நல்லது பண்ணியிருக்கங்கறதுக்காக நான் வந்து அப்பப்ப ஒண்ணப் பார்த்துக்குறேன். இப்ப உன்னால முடியல. உனக்கு ஆருமில்ல. நானும் இல்லேன்னா நாதியத்துப் போயிருப்பேல்ல. உன்னத் தேடிட்டு அவன் வந்தான். எப்படியோ கண்டுபுடிச்சு வந்தான்ல. எத்தன வருஷம் ஒண்ணா இருந்திக்கீங்க. அவனுக்காக எத்தன வேல பார்த்திருப்ப. எத்தன நல்லது பண்ணியிருப்பே. அவன் இங்க வந்திருந்தப்போ தொட்டாப் பட்டா, சமைச்சு, துவைச்சுப் போட்டா எல்லாம் எய்ட்ஸு ஒட்டிக்காதுன்னு டாக்டர் மேடம் அவனுக்கு எல்லாத்தையும் தெளிவாப் புரிய வச்சாங்கள்ல. அதுக்கப்புறமும் ஒண்ணுக்குப் போறேன்னு போயி தப்பிச்சுக் காணாமப்போன பாவி. அவனை இன்னும் நெனச்சுட்டிருக்க. விட்டுட்டு வேலயப் பார்ப்பியா?!”
சந்திரா அப்படித்தான். படபடவென்று பேசி விடுவாள். உள்ளூர அன்பு இருக்கிறது. எதையும் வெளிக்காட்ட மாட்டாள். சந்திரா உண்மையைத்தான் சொல்கிறாள் என அவளுக்குப் புரிந்ததுதான். பாழாய்ப் போன மனதுதான் அவன் நினைப்பை விட மாட்டேனென்கிறது. அவனும் நல்லவன்தான். எந்தக் கணவனும் பார்க்கக் கூடாத கோலத்தில், வியாதியில் அவளைச் சந்திக்க நேர்ந்தால் விட்டுப் போகாமலிருந்தால்தானே ஆச்சரியமாக இருக்கும்? அம்மா இருந்திருந்தால் ஒருபோதும் கைவிட்டிருக்க மாட்டாள். பின்னேரங்களில் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டு, அறை முழுவதும் நிரம்பும் சாயத் தேநீர் வாசனையில் அவளுக்கு தினந்தோறும் அம்மாவின் நினைப்பு வந்துவிடுகிறது. அது அம்மாவின் வாசனை. பிறந்ததுமே ஒரு குழந்தை உணரக் கூடிய முதல் வாசனை.
கொழுந்து பறிக்க தேயிலைத் தோட்டத்துக்குப் போன அதிகாலை வேளையொன்றில் விஷப்பாம்பு கொத்தி புதர்களுக்கிடையில் வாயில் நுரைதள்ள விழுந்துகிடந்த அம்மாவை அவளது லயக் காம்பிராவுக்குத்தான் தூக்கி வந்தார்கள். அம்மா, அம்மா என அரற்றிக் கிடந்தாள். அந்தத் தோட்டத்திலேயே அம்மாவைப் புதைத்தார்கள். அவளது உழைப்பை உறிஞ்சிய அதே தேயிலைத் தோட்டத்துக்கு உரமாகிப் போயிருந்தாள் அவள்.
அதே ஆண்டு வந்த இனக் கலவரத்தில்தான் அவளது அப்பா காணாமல் போனார். தேயிலைத் தோட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற லொறியில் தேயிலைப் பெட்டிகளை இறக்கி வைக்கவென ஏனைய கூலிகளோடு சென்ற அவருக்கு என்னவானது எனத் தெரியவில்லை. அப்பொழுது அவள் இரண்டரை மாதக் கர்ப்பிணி. மாதாமாதம் இலவசமாகத் தரப்படும் போஷாக்குணவு பாக்கெட்டுக்காகவும், இலவச மருத்துவ பரிசோதனை, மாத்திரைகள், அறிவுறுத்தல்களுக்காகவும் வைத்தியர் அறைக்கு வெளியே இருந்த நீண்ட வாங்கில் அமர்ந்து கர்ப்பிணிப் பெண்களோடு சேர்ந்து காத்திருந்தபோதுதான் அது நிகழ்ந்தது. கையில் கத்தி, பெரிய தடிகள், அரிவாள் போன்ற ஆயுதங்களோடு வந்த காடையர் குழுவொன்று அவர்களது இனத்தைச் சேர்ந்த வைத்தியரையும், தாதியையும் அறைக்குள் வைத்து பாதுகாப்பாக வெளியில் பூட்டியது. என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்ளும் முன்பே அவளையும், ஏனைய கர்ப்பிணித் தாய்மாரையும் இழுத்துக் கொண்டு சென்று, வந்திருந்த வேனுக்குள் போட்டு அடைத்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுது ஓலமிட்டனர். விட்டுவிடும்படி கெஞ்சினர். பாதிப்பேர் மயங்கினர். அதில் அவளும் ஒருத்தி.
விழித்துப் பார்க்கும்போது ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டிருந்தாள். கதவோடு ஒட்டியிருந்த ஜன்னல் வழியே மங்கிய மாலை வெளிச்சம் உள்ளே வந்துகொண்டிருந்தது. சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த 1983 ஆம் வருடத்து சுவர்க் காலண்டர்களில் நடிகைகள் சபீதாவும், மாலினியும் கை கூப்பி வணக்கம் சொன்னபடி புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். கைவிரல்களில் ஏதோ நெருட என்னவென்று பார்த்தபோது தரை முழுவதும் சுற்றிவர வெட்டிப் போடப்பட்டிருந்த தலைமுடிக் கற்றைகள் பரந்திருந்தன. தான் ஒரு சலூனுக்குள் அடைபட்டிருக்கிறோம் எனப் புரிந்தது. பாடுபட்டு முயன்று எழுந்து பார்த்தபோது அவளது உடலில் சேலையில்லை. மேலாடையில்லை. கிழிந்த பாவாடை மட்டுமே உடலில் ஒட்டிக் கொண்டிருந்தது. உடல் படுமோசமாக வலித்தது. முதலில் அவளுக்கு எதுவும் விளங்கவில்லை. புரிந்தபோது பேரதிர்ச்சியாக இருந்தது. அழுகை வரவில்லை. பாவாடையை இழுத்து மாரை மூடிக் கட்டிக் கொண்டாள். சுற்றிவரப் பார்த்தாள். அவளோடு சேர்த்து அம்மணமாக இன்னும் மூன்று பெண்கள். அவர்களுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லையென நினைத்து தவழ்ந்தவாறே போய் உசுப்பிப் பார்த்தாள். அவர்கள் செத்துப் போயிருந்தார்கள்.
அவளும் செத்துவிட்டாளென நினைத்துத்தான் அங்கே விட்டுப் போயிருந்தார்கள் காடையர்கள். எங்கோ யாரோ அலறும் சத்தம் கேட்டது. மெதுவாக எழுந்து உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலின் துவாரத்தினூடாக வெளியே பார்த்தாள். தெருவெங்கும் எரிந்து கொண்டிருந்த டயர்களும், கடைகளும் கரும்புகையைக் கிளப்பிவிட்டிருந்தன. ஒரு கும்பலின் வெற்றிக் கூச்சலும் ஆரவாரங்களும் வெடியோசைகளும் அவளை அச்சுறுத்தின. சலூன் கண்ணாடியில் பக்கவாட்டு முகம் இலேசாகத் தெரிய முழுவதுமாகத் திரும்பி கண்ணாடியைப் பார்த்தாள். நீண்ட தலைமுடி கலைந்து போய், காதிலிருந்த மொட்டுக் காதுப்பூக்கள் காணாமல் போய், சிவந்து, கறுப்புத் தூசும் எண்ணையும் படிந்து வாடிக் களைத்துப்போன முகம். அவளல்ல அது. கழுத்தில் எரிவாக இருக்க தடவிப் பார்த்தாள். மஞ்சள் கிழங்கு வைத்துச் சுற்றிக் கட்டிய தாலியைக் காணவில்லை. பறித்து எறிந்திருக்கிறார்கள். கழுத்தின் தோல் உரிந்து, எரிவைத் தந்தது. தாலியில்லாத கழுத்தைப் பார்த்ததும்தான் அழுகை வந்தது. இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டு விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.
இப்பொழுதும் கூட குளியலறையில் கண்ணாடி பார்க்க நேரும்போது அவளுக்குத் தென்படுவதெல்லாம் அந்தப் பதினெட்டு வயது முகம்தான். அவளது வாழ்வின் அனைத்தையும் இழந்து, உயிர் மட்டும் எஞ்சிநின்ற அந்தநாள் நினைவுக்கு வந்து தொலைக்கும். இலேசாக அழுகை வரும். இந்த நாற்பத்தெட்டு வயதுக்குள் எவ்வளவோ அழுதாயிற்று. எவ்வளவோ இழந்தாயிற்று. அவள் இருந்த அறைக்குள் எல்லோருக்குமே கிட்டத்தட்ட அவள் வயதுதான் இருக்கும், நந்தினியைத் தவிர. அவர்கள் எல்லோருமே சாவை எதிர்பார்த்தபடி காத்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்குமே ஏதோவொரு உடல் வருத்தம் இருந்துகொண்டிருந்தது. எதிலும் பிடிப்பற்ற பார்வை. பயம், யோசனை, விரக்தி எல்லாமும் கலந்த உரையாடல்கள். அவளையும், நந்தினியையும் தவிர ஏனைய அனைவருமே விலைமாதுக்களாக இருந்தவர்கள். நந்தினிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. ஒரு விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவளுக்கு, அவசரத்தில் ஏற்றப்பட்ட குருதியில் எய்ட்ஸ் கிருமி இருந்தது யாருக்குமே தெரியவில்லை. குணமாகி வீட்டுக்குப்போய், கல்லூரிக்குப்போய்ப் படித்து காய்ச்சல் வந்து பரிசோதித்துப் பார்த்தபோதுதான் எய்ட்ஸ் எனத் தெரியவந்தது. ஊர் சேர்ந்து அவளது வீட்டை எரித்தது. வீட்டில் இருந்தால் வீட்டாருக்கு ஆபத்தும், அவமானமும்தான் என்பதை உணர்ந்தவள் இங்கு வந்து சேர்ந்திருந்தாள்.
பாதிக்கப்பட்ட மகளிருக்கான நலன்புரி நிலையமொன்று அவர்களை வாழ வைத்துக் கொண்டிருந்தது. அறையோடு படுக்கை, உணவு, மருந்து, மாத்திரைகள், உடைகள் என எல்லாமே இலவசமாக அவர்களுக்கு அங்கு கிடைத்தது. எழுந்து நடமாட முடியுமான நோயாளிகள் செய்து தரும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றும் அந்த நலன்புரி நிலையத்துக்குச் சொந்தமாக நகரத்திலிருந்தது. அவள் அதற்கு இதுவரை போனதில்லை. ஆனால் அவள் செய்துதரும் கால்மிதிகள்தான் அதிகம் விற்பனையாகின்றன என காரியதரிசி சொன்னதைக் கேட்டபோது அவளுக்குள் மகிழ்வாக உணர்ந்தாள். அருகிலிருந்த ஆடை தயாரிப்பு நிலையத்திலிருந்து மாதத்துக்கு நான்கைந்து மூடைகள் வெட்டிக் கழித்து ஓரமாக்கப்பட்ட துணித்துண்டுகள் வந்துசேரும். அவற்றிலிருந்து கால்மிதி தயாரிப்பதற்குத் தேவையான நீண்ட துணித் துண்டுகளைத் தேர்ந்தெடுப்பதுதான் அவளது முதல்வேலை. பிறகு ஒரேயளவாக மூன்றாகப் பிரித்து, நீளக் கூந்தலைப் பின்னுவதைப் போல நீண்ட வர்ணத் துணித் துண்டுகளைப் பின்னி, வட்டம் சதுரம் செவ்வகம் எனத் தெரிந்த வடிவங்களில் நேர்த்தியாகத் தைத்து கால்மிதிகளைத் தயாரித்து விடுவாள். அவை கடைக்கு விற்பனைக்கென கொண்டு செல்லப்படும்.
நாற்பத்தெட்டு வயதென்பது செத்துப் போகும் வயதா என்ன? ஆனாலும் ஒவ்வொரு நாள் உறங்கச் செல்லும்போதும் அடுத்தநாள் எழுந்துகொள்ள உயிரிருக்காது என்ற நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எய்ட்ஸ் எனத்தெரிந்து இங்கு வந்துசேரும் வரை ‘ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோம்’ எனத்தான் எண்ணிக் கொண்டிருந்தாள். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவளது உடலுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அதை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பங்களாவில் சமையல்வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து, வைத்தியசாலையில் வைத்துக் கண்டுபிடித்தார்கள். அதற்குப் பிறகு அவளை அத்தனை வருடங்களாக வேலைக்கமர்த்தியிருந்த அந்த வீட்டார் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சக வேலைக்காரி சந்திராதான் அங்கு அடிக்கடி யாருக்கும் தெரியாமல் வந்துவந்து பார்த்தாள். அங்கிருந்து இங்கு அனுப்பப்பட்ட பின்னர் அவளால் அடிக்கடி வர முடியவில்லை. தூரம் அதிகம். பேருந்துக்கே அவளது நான்கைந்து நாள் உழைப்பு செலவாகி விடும்.
நந்தினி எழுந்து சென்று குளியலறையில் எழுப்பும் தண்ணீரின் ஓசை அவளுக்குக் கடலை நினைவுபடுத்தியது. ‘எனக்கு மரணமில்லை. ஆதி தொடங்கி உலகின் முடிவுவரைக்கும் நான் இருப்பேன்’ என ஓயாது கத்திச் சொல்லிக் கொண்டேயிருக்கும் அலை நீரின் ஓசையது. சலூனுக்குள் அவளது அசைவு கண்டு, குதூகலித்து, அங்கிருந்தும் ஒரு கும்பல் அவளை வண்டியிலேற்றி தூரக் கடற்கரைப் பிரதேசமொன்றுக்குக் கொண்டுவந்து வன்முறைக்காளாக்கியது. கரு கலைந்து போயிற்று. அதற்குப் பிறகும் அவள் பிழைத்துக் கிடந்ததே அபூர்வம்தான். யாராலோ காப்பாற்றப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலே அலையோசை கேட்கும் மருத்துவமனையொன்றில் படுத்துக்கிடந்தாள். குணமாகி வெளியேறச் சொன்ன நாளில், தனது ஊருக்குச் செல்லத் தோன்றவில்லை. இனிமேலும் இழக்க என்ன இருக்கிறது? பத்திரமாக ஊருக்கு எடுத்துச்செல்ல இனிமேலும் என்ன இருக்கிறது? ஒரு பங்களாவில் சமையல்வேலை கிடைக்க, அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள அவளோடு சிநேகமாயிருந்த ஒரு தாதி உதவினாள்.
தண்ணீரில் நனைந்துபோயிருந்த போர்வை உடல் சிலிர்க்க வைத்தது. உறக்கம் வரவில்லை. ‘காலையில் இந்தக் கட்டிலிலேயே நான் செத்துப் போயிருந்தால்?’ நினைத்துப் பார்க்கும்போதே திக்கென்றது. அந்த அறையில் ஒளிர்ந்த இரவு விளக்கு வெளிச்சத்தில் போர்வையை விலக்கி விட்டு மெதுவாக எழுந்து கீழே விழுந்து கிடந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து ஒதுக்குப்புறமாக வைத்தாள். சுவரைத் தடவிப் பிடித்துக்கொண்டு குளியலறைக்குப் போனாள். மூடியிருந்த கழிப்பறை திறந்து நந்தினி வெளியே வரும்வரை காத்திருந்தாள். அவள் செத்துப் போய் விட்டால், நந்தினியிடம் தினமும் சிட்டுக்குருவிகளுக்கு தீனி வைக்கச் சொல்ல வேண்டும்.