தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி
தன் வீட்டைச் சுத்தப்படுத்தி
குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் .
பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் .
தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி
தன் தெருவைச் சுத்தப்படுத்தி
குப்பைகளை .
நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான்
நகரத்தில் நோய்த் தொற்று அதிகம் .
கொசு மருந்து அடிக்க தன்னிடமே ஒப்புதல் வாங்கிக் கொள்கிறான் .
தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி
பின் நகரைச் சுத்தம் செய்து
கப்பலிலேற்றி அருகிருக்கும் நாட்டில் கொண்டு போய்க் கொட்டுகிறான் .
அதற்குத் தானே டெண்டர் விட்டுத் தானே டெண்டர் எடுத்துக் கொள்கிறான்.
***
ஒரு காட்டு மரம்
அது தன்னைத் தானே விதைக்கும்.
தனக்குத் தானே நீரூற்றித் தன்னைத் தானே வளர்க்கும்.
வேனலில் தனக்குத் தானே காற்றை வீசிக் கொண்டு உறங்கும் .
கடும் புயலின் நாளில் தீராத மன உளைச்சலில் தன் கரங்களை ,சிரசை ,
சமயங்களில் தன் மொத்த உடலையே வெட்டிக் கொண்டு சரியும் .
எப்போதாவது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு கருகும் .
தனக்குத் தானே நாற்காலி செய்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருக்கும் .
இல்லையேல் மேசையாகி கை , கால் ஊன்றிக் குனிந்து கிடக்கும்
மரங்கள் நாற்காலிகளை விளைவிக்கிறது.
மரநாற்காலிகளில் அமர்ந்தபடி
மரங்களை விலை பேசும் மரக்கடைக்காரரை என்ன சொல்ல ….
மரக்கடைக்காரா…,
அங்கே கொஞ்சம் பசுமையான என் நினைவுகளின் மீதும் உட்கார் .
அதன் அடியிலும் உட்கார்.
***
இரவுக்கும் பகலுக்குமிடையே ஒரு சிறு கயிற்று பாலம்
பூரானை மல்லாக்கக் கவிழ்த்தியபடி
கிட்டத்தட்ட ஒரு மணி நேர நீளமுடையது அது .
அதன் மேல் பள்ளிச் சிறுவர்கள் கால் பந்து விளையாடுகிறார்கள் .
காதலர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள் .
பணியிடத்திலிருந்து அரசுஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள் .
அதன் ஒரு முனையில்; பகலிருக்கும் திசையிலிருந்து
ஒரு சிறுமி அவளின் முதல் மாதவிடாய் ஒழுக்கோடு
மறுமுனையில் இரவிருக்கும் திசை நோக்கி
ஒரு பேரிளம்பெண் அவளின் இறுதி மாதவிடாய் ஒழுக்கோடு…
அதே நிறம்தான் அந்தக் கயிற்றுப் பாலத்துக்கு.
***
ஆட்டுக்காரா…
சமண மலையின் உள்ளே 17ஆயிரம் தேரைகள்
நீ யாரை மேய்த்து கொண்டு செல்கிறாய் …
உன் ஆடுகளின் மேல் சிறு சிறு உண்ணிகள்
அதையும்தான் அழைத்துக் கொண்டு செல்கிறாய் மேய்ச்சலுக்கு ….
யாருக்காய் குழலூதுகிறாய் …
உண்ணிகள் மயங்குகின்றன …
ஆடுகள் உன் மனைவியையும் , தாயையும் உண்டு விட்டன .
உண்மைதான் .
அதன் கடைவாயில் வெண்ணிற பெண் முடிகள் ….
கடந்த வாரம் அதன் இணை ஆட்டின் கறுத்த முடிகளை
உன் கடை வாயில் பார்த்ததாய் நினைவு .
அதன் தகப்பனை விருந்துண்டீர்கள் அல்லவா.
உன் தகப்பனைப் புதைந்த இடம் தெரியும் அதற்கு
நேசம் மிகுந்த ஒரு ஆடு
அது புதைந்த உன் தந்தையின்
திறந்த வாயின் இடையே வளர்ந்த புற்களை
முத்தமிட்டபடியே உண்டு கொழிக்கும் .
கோபம் மிகுந்த ஒரு ஆடு
அது புதைந்த உன் தந்தையின்
இரு தொடை நடுவே வளர்ந்த புற்களை
கர முர…கர முரவென்று …
****
தளபதியாரே …
உமது கணீர் உலோகக் குரல்கள் துருப்பிடித்து விட்டன.
முகபாடத்தைத் தாண்டி குதிரைகளின் வாய்களில் நுரை தள்ளுகிறது. .
ஆடைகளில் ஒரு அங்குலத்திற்கு புழுதிகள் .
குதிரைகளின் பிடரி மயிர்களில் விந்துக் கறைகள்.
வேண்டுமென்றே பின்தங்கி வரும் படை வீரர்கள்
மற்றும் வழி தவறுபவர்கள்
தத்தம் போர் கருவிகளை விற்றுத் தீர்த்து மதுவருந்துகிறார்கள்.
அல்லது தாசிப் பெண்டிரோடு
கிருஷ்ணா லாட்ஜ் – ல் அறை எடுக்கிறார்கள் .
மூன்றாம் ஜாமத்தில் கூடாரம் திரும்புமவர்கள் .
வேறொருவனின் போர்கருவிகளில் தம் அடையாளத்தைப் பதிகிறார்கள் .
அடுத்த நாளின் காலையில் எழுவர் வெறுங்கையர்.
போர்…போர் …
தூரத்தே களம் கண்டீரா?
வெற்ற்ற்ற்றி வேவேவேல் வீவீவீவீர வேல் ….
உமது குரல் ஏன் இவ்வளவு தளர்கிறது .
காலையில் bp மாத்திரை போட்டீரா ?
கொஞ்சம் மதுவருந்துகிறீரா?
ஓய்வெடுங்கள் . “கிருஷ்ணா லாட்ஜ் ” அருகில்தான் இருக்கிறது .
***
செலவு பிடிக்குமே?
1. உடை வாள் – 1 – உலோகம் – இரும்பு – எடை – 7 கிலோ 400 கிராம்
2. குறுங்கத்தி – உலோகம் – ஐம்பொன் (பிடியில் கல் வேலைப்பாடு) எடை –
துல்லியமாய் 350 கிராம்
3. வேல் கம்பு -1 ( மர பிடிக்கு விலை இல்லை , அது நீங்கலாக எடை 1.2 கிலோ)
4. மற்றும் பொன் ஆபரணங்கள்
கங்கணம்-1 (15 கிராம்) 916 KDM
கடுக்கண் -2, (கல் எடைநீங்கலாக -7 கிராம்,) 916 KDM
மோதிரம்-3, ( 13.5கிராம் ) 916 இல்லை
கழுத்தணி – 1 35 கிராம்) 916 இல்லை ( குறிப்பு : செம்பு அதிகம் கலக்கப்பட்டுள்ளது )
அரைஞாண் – 1 (வெள்ளி எடை-113கிராம் )
1 comment for “நரன் கவிதைகள்”