பத்திரிகைகளில் என் படைப்புகளை இடம்பெறவைக்கக் கொண்டிருந்த தீவிரம் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. இன்றுபோல அத்தனை இலகுவான சூழல் அப்போது இல்லை. அப்போது என்பது 97-98 ஐக்கூறலாம். இருந்ததே இரு தினசரிகள். அதில் ‘மலேசிய நண்பன்’ அதிகம் விற்பனை ஆனது. ‘தமிழ் நேசனு’க்கு இப்போது போலவே அப்போதும் பெரிய விற்பனை இல்லை. எழுதத்தொடங்கிய புதிதில் மலேசிய நண்பனில் படைப்பு வரவேண்டும் என எதிர்ப்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் பேராசை என்றாலும் அதற்காகப் பல வழிகளிலும் முயன்றேன். பெரிய பத்திரிகையில் பெயர் அடிக்கடி வருவதே அதற்கான குறுக்குவழி எனத் தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலம் அது. (இப்போது முகநூலில் 200/300 லைக்குகள் வாங்கி கவிஞர்கள் ஆகிவிடுவதுபோல.) துரதிஷ்டவசமாக அப்போது இருந்த ஞாயிறு பொறுப்பாசிரியர்கள் ஓரளவு இலக்கியம் தெரிந்தவர்கள் போல. தொடர்ந்து படைப்புகளை நிராகரித்தனர்.
நிராகரிப்பு அதிக சக்தி கொண்டது. நிராகரிப்பைக் கொண்டிருக்கும் கரங்கள் ஒருவனை வன்முறையாளனாக்கவும் சாதனையாளனாக்கவும் ஒரே அளவிலான அக்கறையைக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஊடகங்கள் எதை விரும்புகிறதோ அதைக் கொடுத்தால் எளிதில் படைப்புகள் பிரசுரமாகும் என நம்பியதால் அப்போது பிரசுமாகும் படைப்புகளை ஆராய்ந்தேன். சமூகத்தை நோக்கி சீறிப்பாயும் வரிகளைக் கொண்ட கவிதைகளே அப்போது பிரசுரமாகியிருந்தன. நானும் சமூக அக்கறை கொண்ட கவிஞனாக மாறினேன்.
தமிழ்ச் சமூகத்தில் உறங்கிக் கிடக்கும் வீரத்தைத் தட்டி எழுப்புவதாகவும் மூடப்பழக்கங்களைச் சாடுவதாகவும் எனக்குள்ளிருந்து கவிதைகள் உதயமாகத் தொடங்கின. இப்படிப் புரட்சிக் கவிதை எழுதுபவர்களெல்லாம் ஏதாவதொரு பட்டப்பெயரை வைத்திருப்பதால் நானும் எனக்கான பட்டப்பெயரைத் தேடத்தொடங்கினேன். புரட்சிக் கவி, புரட்சி வீரன், புரட்சி இளைஞன் எனப் பலவாறாகப் பெயரிட்டும் ஒன்றும் சரிவரவில்லை. என் பெயர் ‘நகர’ வரிசையில் தொடங்கியதால் பட்டப்பெயரோடு சேர்த்து உச்சரிக்கையில் ஓசை இன்பம் என் பெயரில் இல்லாதது அதற்கு முக்கியக் காரணம். பெரும் சோகத்தோடு புரட்சி என்ற வார்த்தையைக் கைவிட்டேன். ’நகர’ வரிசைக்குத் தோதாக எந்தப்பட்டப் பெயரும் இல்லாததால் ‘மகர’ வரிசைக்குத் தோதாகத் தேடி (அப்பாவின் முதல் எழுத்துக்கு ஏற்றார் போல) கிடைத்தது ‘மக்கள் கவிஞன்’ எனும் பட்டப்பெயர்.
‘மக்கள் கவிஞன் ம. நவீன்’ என்ற பெயரை ஒரு தரம் உச்சரித்தபோது உடல் சிலிர்த்தது. செல்லும் இடமெல்லாம் ‘மக்கள் கவிஞர்’ எனும் அடைமொழியோடு என்னை அழைக்கப்போகும் திரளான மக்கள் கூட்டத்தை நினைக்கையில் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது. அப்போது மலேசிய நண்பன் பத்திரிகையில் ஒரு சொல் கொடுத்து அச்சொல்லுக்குக் கவிதை எழுதும் போட்டி வாரா வாரம் நடந்து கொண்டிருந்தது. வெற்றிபெறும் கவிதைக்குப் பரிசும் கொடுத்தார்கள். அந்தப் போட்டிக்கு நானும் எழுதினேன் ‘மக்கள் கவிஞன்’ எனும் அடைமொழியோடு.
ஒருவேளை போட்டியில் வெற்றிபெற்றால் எனது பெயர் அதன் அடைமொழியோடு பிரபலமாகும் என நம்பினேன். மறுவாரம் வெறும் பெயரோடு பத்திரிகையில் என் கவிதை பிரசுரமானது. பரிசு கிடைக்கவில்லை. என் பட்டப்பெயர் இல்லாமல் கவிதையைப் பிரசுரித்த மலேசிய நண்பன் மேல் கோபம் வந்தது. இந்தத் தவறுக்கு முக்கியகாரணம் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் ஆதி. குமணனாகத்தான் இருக்கவேண்டும் என நம்பினேன். அன்றே ஆதி.குமணனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் நான் எத்தகைய மகத்தான கவிஞன் என்றும், அந்தப் பட்டப்பெயருக்கான காரணத்தையும் விரிவாக விளக்கி எழுதி அனுப்பினேன்.
அடுத்தவாரம் அதற்கு அடுத்த வாரம் போட்டியில் பங்கு பெற்ற காரணத்தால் எனது கவிதைகள் வெறும் பெயரோடே வெளிவந்தன. நானே எனக்கு இட்டுக்கொண்ட பட்டப்பெயரை யார் நீக்கியிருப்பார்கள் என இன்றுவரை தெரியவில்லை. பெரும் மனச்சோர்வுடன் என் பட்டப்பெயர் திட்டத்தை நான் கைவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக திடீர் சமூக அக்கறையும் குறைந்து போனது.
***
அப்போது எம்.ஏ.இளஞ்செல்வன் நூல் வெளியீடு கண்டிருந்தது. புத்தகத்தின் பின்புறம் அவர் படம். படத்தில் அவர் முகம் பக்கவாட்டில் இருந்தது. அப்போதுதான் சில நூல்களை ஆராய்ந்தேன். எழுத்தாளன் என்றால் கேமராவை நேராகப் பார்க்காமல் சைட்டாகப் பார்க்க வேண்டும் எனப்புரிந்தது. புகைப்படம் பிடிக்க ஓடினேன்.
கேமராவைத் தயார் செய்துவிட்டு கடைக்காரன் என்னை வியப்பாகப் பார்த்தான். நான் சைட்டாக அமர்ந்து கொண்டிருந்தேன். அவன் நான் நேராக அமரும்வரை படம் பிடிப்பதில்லை என உறுதியாக இருந்தான். அப்போதெல்லாம் டிஜிட்டல் கேமரா இல்லை. நான் இப்படித்தான் வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தேன். படம் பிடித்தபின் நான் அவனைக் குறை சொல்லக் கூடும் என நினைத்தவன் பணத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்டு படம் பிடித்தான். படம் தயாரானபின் மலர்ந்த என் முகத்தைப் பார்த்துக் குழம்பினான். சைட்டு போஸில் அழகாகத்தான் இருந்தேன். அந்தப்படத்துடன் சில கவிதைகளை இணைத்து அப்போது வார இதழாக வந்த மக்கள் ஓசைக்கு அனுப்பினேன். கவிதை படத்துடன் பிரசுரமானது. நான் முழுமையான எழுத்தாளனாகிவிட்டதாக ஒரே மகிழ்ச்சி. ஆனாலும், என் சிறுகதை மலேசிய நண்பனில் வந்தால்தான் அது நிறைவடையும் எனத் தொடர்ந்து அப்பத்திரிகைக்குக் கதைகளை அனுப்பிக்கொண்டிருந்தேன். என்றாவது ஆதி.குமணனைப் பார்த்தால் என் கதைகள் குறித்து கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்.
***
அதிர்ஷ்டவசமாக மலேசிய நண்பன் ஆசிரியர் ஆதி.குமணனே லுனாஸுக்கு வந்தார். ஆனால் அது துரதிர்ஷ்டமான நாள். அவர் எம்.ஏ.இளஞ்செல்வன் மரணத்திற்கு வந்திருந்தார். ஆதி.குமணன் கருப்பு நிறத்திலான ‘பாத்தேக்’ ரக துணி அணிந்திருந்தார் என ஞாபகம். அவர் பக்கத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர். நாடு முழுவதும் பல லட்சம் வாசகர்களைக் கொண்டவராக ஆதி.குமணன் அப்போது இருந்தார். அவர் சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் திரளை தனது எழுத்தின் மூலம் சம்பாதித்து வைத்திருந்தார். எந்த அரசியல்வாதியை விடவும் செல்வாக்குடன் இருந்தார். மலேசியாவில் இத்தகைய ஆளுமை மிக்கவர்கள் குறைவு. தனது நெருங்கிய நண்பனின் மரணம் அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும். கைகளைக் கட்டியபடி வெளியில் நின்று கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் இன்னும் வந்து சேராத நேரமது.
நான் நேராக என் சைக்கிளை அவர் அருகில் நிறுத்தினேன். அவர் என்னை ஏற இறங்க ஒருதரம் பார்த்தார். நான் சற்றும் தாமதிக்காமல். ”நான் நவீன். உங்கள் பத்திரிக்கைக்கு சிறுகதை அனுப்பியிருக்கிறேன், நினைவுண்டா?” என்றேன். என்னைப்போல் பலரைப் பார்த்திருப்பார் போல. தாமதிக்காமல் ‘ஆம்’ என்பதுபோல தலையை ஆட்டினார். அவர் பக்கத்தில் இருந்தவர்கள் என்னை அந்நியமாய் பார்த்தனர். என் தோற்றம் அவர்களைக் குழப்பம் அடையச் செய்திருக்க வேண்டும். நான் விடாமல் “நான் பல சிறுகதைகள் அனுப்பியும் உங்கள் பத்திரிகையில் இடம்பெறவே இல்லை. அடுத்த வாரம் போட்டுவிடுங்கள் சார்” என்றேன். ’கண்டிப்பாக’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டினார்.
இளஞ்செல்வனின் மரணம் மனம் முழுவது கனக்க, நான் புதிய சிறுகதை ஒன்றை எழுதி தபாலில் அனுப்ப ஆயத்தமானேன்.
நடிப்புத் துறையைச் சார்ந்தவர்களின் நடிப்பின் முதல் புகைப்படமும் ,எழுத்துத் துறையில் இருப்பவர்களின்முதல் படைப்பும் பத்திரிக்கையில் வந்துவிட்டால் அந்த மகிழ்ச்சி பிரவாகத்தை வார்த்தைகளால் சொல்லவியலாது. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
நவீன், நான் நாற்காலியில் இருந்து கீழே விழுகிற அளவிற்கு சிரித்துவிட்டேன்.. ஹாஹாஹா. செம லொள்ளு
பிறகு நவீன், நீண்ட நாற்காலியில் படுத்துக்கொண்டு, கைகளை பிடரியில் கோர்த்துக்கொண்டு , ஆகாயத்தை விரைத்தபடி போஸ்கொடுத்த புகைப்படத்தைப் போட்டுக்கொண்டால், இணைய புரட்சியாளர் ஆகலாம் என்பதை எங்கே கற்றுக்கொண்டீர்கள்.. lol 😛