தன்நெஞ்சறிவது…

pandiyanஅனுபவம் 1

 

“அன்று என்னைப் பார்க்க ஒரு இந்தியப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.அவர் மிகவும் அழகாக இருந்தார். என் எதிரில் அமர்ந்தவர் சில புகார்களைக் கூறினார். பின்னர் பேசிக் கொண்டிருக்கும்போது அவர், “நான் நல்ல சாதிக்காரி, துவான். எங்க குடும்பமே உயர்ந்த ஜாதிக்காரங்கதான். ஆனா இங்க சுற்றுவட்டாரத்துல, அந்த பிளாட்டுல இருக்குறவுங்க முக்காவாசி பேரு கீழ் சாதிக்காரவங்க. அதான் அவங்க புள்ளைங்களும் இப்படி இருக்குதுங்க. என் புள்ளைங்கள அதுங்க கூட பேசக்கூட விடமாட்டேன்” என்றார்.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான், “அப்படியா? எப்படி அப்படி சொல்றீங்க. எனக்கு நீங்க எல்லாம் ஒரே மாதிரிதானே தெரியிறீங்க…… எப்படி வித்தியாசப்படுத்துறீங்க” என்று கேட்டேன்

அவர் சற்று பதற்றத்துடன் “இல்ல துவான், அவங்கல்லாம் பற ஆளுங்க; நான் வேற” என்று மீண்டும் கூறினார்…,

நான் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. உண்மையில் எனக்குச் சற்று குழப்பமாகவும் இருந்தது. ஆகவே “ஓ அப்பிடியா? இனிமேல் கவனிச்சுப் பார்க்கிறேன். என்று மட்டும் சிரித்துக்கொண்டே கூறி அனுப்பிவிட்டேன்

இப்ப நீங்க சொல்லுங்க சேக்கு… நீங்க என்ன ஜாதிக்காரர்? இந்தியர்கள் எப்பிடி மத்த இந்தியர்களின் சாதியை கண்டுபிடிக்கிறாங்க? என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார் அந்த மலாய் அதிகாரி.

***

அனுபவம் 2

ஒரு இடைநிலைப்பள்ளியில் நான்காம் ஐந்தாம் படிவ இந்திய மாணவர்களுக்கும் மூன்றாம் படிவ சீன மாணவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு பெரிய ரகளையானது. பள்ளி முதல்வர் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசை வரவழைக்கும் நிலை உருவானது. பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. சண்டைக்கான மூலகாரணம் கண்டறியப்பட்டு இருதரப்பிலும் மூர்க்கமாகச் செயல்பட்ட மாணவர்கள் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடிக்கடி பள்ளியில் இந்திய மாணவர்களால் கட்டொழுங்குப் பிரச்சனைகள் வருகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் இந்திய ஆசிரியர்களிடம் தான் எல்லா இந்திய மாணவர்களையும் சிறப்பு காலைச் சந்திப்பில் சந்திக்கப்போவதாக கூறினார்.

அந்த வெள்ளிக்கிழமை சந்திப்பில் அவர் பல ஆக்ககரமான ஆலோசனைகளைக் கூறினார். மாணவர்களும் சுற்றி அமர்ந்திருந்த இந்திய ஆசிரியர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

மேலும் பேசிய அவர் “எனக்குத் தெரியும் உங்களில் சாதிகள் உண்டு. கீழ்ச் சாதிக்காரர்கள் எப்போதும் மிகவும் இழிவான செயல்களில் ஈடுபடுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். மேல் சாதிக்காரர்கள் நல்ல பண்புடன் நடந்துகொள்ளக் கூடியவர்கள். நீங்கள் வாழும் தாமானில் பலரும் கீழ்சாதிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எல்லாம் மாணவர்கள். நன்னெறிப் பண்புகளைக் கற்கிறீர்கள். ஆகவே உயர் சாதிப்பண்புடன் நடந்து கொள்ளவேண்டும். இந்திய மாணவர்களால் அடிக்கடி இந்தப் பள்ளியில் பிரச்சனைகள் வருவது எனக்கு வருத்தம் தருகிறது. இனிமேல் நல்ல மாணவர்களாக நடந்துகொள்ள முயற்சி எடுங்கள். உங்களுக்குப் பிரச்சனை இருந்தால் இங்கு இருக்கும் இந்திய ஆசிரியர்களின் உதவியை நாடலாம். உங்களுக்கு உதவ அவர்கள் காத்திருக்கிறார்கள்”, என்று முடித்தார். மாணவர்கள் அமைதியாகவே இருந்தனர். அசௌகரியமான சூழலை உணர்ந்த ஆசிரியர்கள் சிலர், “ஆமா! இதுங்க பண்றது அப்படிதான் இருக்குது. பேரக் கெடுக்குறதுக்குனே ஸ்கூலுக்கு வருதுங்க” என்று முணுமுணுத்துக் கொண்டனர்.

***

இந்தியக் குடிமக்கள் குடியேறிய எல்லா நாடுகளிலும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு சென்ற இன்னொரு உறுப்பு சாதியமாகும். பலநூறு ஆண்டுகளாக சாதிய மெத்தையில் படுத்துறங்கிச் சுகம்கண்ட மேல்தட்டு மக்கள் எக்காரணம் கொண்டும் சாதியத்தைக் கைவிட முன்வரமாட்டார்கள் என்பதைச் சுலபத்தில் புரிந்துகொள்ளலாம். ஆயினும், சாதிய நெருக்கடிக்குள்ளாகி அடுத்த மனிதன் முன் கூனி நிற்பதே விதியாக்கப்பட்ட, கீழ்த்தட்டு மக்களும் சாதியத்தை கெட்டியாகப் பிடித்திருப்பது வியப்பு. இதன் பின்னனி என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால், சாதியச் சிந்தனையானது மனித மன அகங்காரத்துடன் தொடர்புடைய ஒரு அம்சம் என்பது தெளிவாகும்.

சமுதாயம் ஒருவனைக் கீழானவன் என்று ஒதுக்கினாலும் அவன் மற்றவனைத் தன்னைவிட கீழானவனாகப் பார்க்கக்கூடிய ‘வசதியை’ சாதியக் கட்டமைப்பு அமைத்துக் கொடுக்கிறது. ‘என்முகத்தில் பலர் உமிழ்வதை என்னால் தடுக்கமுடியாவிட்டாலும், எனக்கு கீழானவர்கள் சிலரின் முகத்தில் உமிழ இந்தச் சாதிய சமுதாயம் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறது’ என்பதாகவே சாதிய அடுக்குகளை சாமானியரும் புரிந்து கொள்கின்றனர். அந்த வாய்ப்புகளுக்காகவே அவர்கள் சாதியை விடாப்பிடியாகப் பிடித்திருக்கின்றனர். தனிமனித மன அகங்காரத்திற்கு தீனிபோடும் இந்த அமைப்புமுறை பலரையும் சாதியத்தின் வழி நிற்கத் துணைபுரிகிறது

மனுஸ்ருமிதி வகுத்துச் சொல்லும் நான்கு வர்ணக்கோட்பாடு என்பது இன்றைய நவீன சாதியத்தின் வேர் என்று சொல்லலாம். ஆயினும் இன்று பரவலாக தென்னிந்திய வழித்தோன்றல்களிடையே நிலவிவரும் சாதியச் சிந்தனை மிக நுட்பமானதோடு ஆதிமனித குழுமனப்பான்மையை பிடிமானமாகக் கொண்டுள்ளது. குலப்பெருமைகளும் குலங்களுக்குள் இருக்கும் குறுங்குலத் தனித்துவங்களும் இன்று ஒரு பொது சாதிக்குள் பலநூறு கிளைச்சாதிகளைப் பிரித்து வைத்துள்ளதோடு அவற்றுக்குள் பிளவுகளையும் பிணக்குகளையும் வளர்த்துவிட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இன்றைய நிலையில் சாதியத்தின் நிலை முழுக்கவும் அரசியல் சார்ந்ததாக மாறியுள்ளது. சாதியை இந்தியாவில் இருந்து அழிக்க முடியாத அளவுக்கு அது இடஒதுக்கீடு, சிறப்புச் சலுகைகள் போன்ற தேவைகளை முன்வைத்து இறுக்கம் அடைந்துள்ளது. ‘பிற்படுத்தப்பட்டோர்’, ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ போன்ற சொற்கள் அரசியல் தேவைக்கேற்ற சாதியம் சார்ந்த நவீன கலைச்சொற்களாக மாறியுள்ளதைத் தவிர அங்கு வேறு மாற்றம் இல்லை. சாதியை ஒழிப்பதாக கோசமிட்டு ஆட்சியைப்பிடித்த திராவிடக் கட்சிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாதியை மேடை நாடகத்திலும் திரைப்படங்களிலும் மட்டுமே ஒழிக்கத்துடிப்பதாக கோஷம் போட முடிந்திருப்பது கண்கூடு.

இந்தியச் சமூக நிலையிலும் சாதியத் தாக்கத்தால் இன்று பல வன்முறைகளும் தனிமனித உரிமை மீறல்களும் வெளிப்படையாக அரங்கேறுகின்றன. ‘தர்மபுரி குடிசை எரிப்பு’ முதல் பல்வேறு கெளரவக்கொலைச் சம்பவங்கள் உட்பட பல மனிதாபிமானம் அற்ற செயல்களுக்குச் சாதியே பின்னணியாகிறது. ஆகக் கடைசியாக, கற்றோர் மத்தியில் சாதிய அழுக்கு தேங்கிக்கிடப்பதின் அடையாளமாக ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித்தின் தற்கொலை அமைந்துள்ளது.

இந்தியநாட்டின் நிலை இவ்வாறு இருக்க, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தென்னிந்திய மக்களின் குடியேற்ற நாடுகளில் சாதியச்சிந்தனையும் மனப்பான்மையும் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கிய விடயமாகும். மலேசியாவும் சிங்கப்பூரும் இந்தியப் பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட நாடுகளாகும். இங்கு இந்தியப் பாரம்பரியங்கள் பல்வேறு கலப்புகளின் வழி கரைந்துபோய் பல நூற்றாண்டுகள் ஆகின்றன. மேலும் இங்கு பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்களுக்கான தனி அடையாளங்களைக் கொண்டுள்னர். இனங்களை விட மதக் கொள்கைகளுக்கே மலேசியா போன்ற நாடுகள் முன்னுரிமை தருகின்றன.

மலேசியாவில் வாழும் இந்திய வழித்தோன்றல்களுக்கு இந்நாட்டு குடியுரிமையுண்டு என்றாலும் சிறப்பு அரசியல் தகுதியானது மலாய் மக்களுக்கே உரித்தானதாக அரசியல் சாசனம் வகுக்கப்பட்டுள்ளது. அரசியல் அடிப்படையில் மலேசியவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தகுதியே ஒதுக்கப்படுகிறது. அவர்கள் சிறுபான்மையினர். தமிழர், தெலுங்கர், மலையாளி போன்ற இன அடிப்படையிலோ, சாதிய அடிப்படையிலோ அரசியல் அதிகாரத்தில் இடம் இல்லை.

ஆயினும், மலேசிய இந்தியர்கள் சாதிய வட்டங்களில் இருந்து இன்னும் வெளிவரமறுக்கும் உளப்பாங்கோடே இருப்பது உண்மை. இந்நாட்டில் பல சாதிச்சங்கங்கள் நீண்ட காலமாக இயங்கி வருவதும் அவற்றில் பல அரசியல் தலைவர்கள் திரைமறைவில் செயல்படுவதும் எல்லாரும் அறிந்ததுதான். அவை பெரும்பாலும் பண்பாட்டுக் கூட்டுறவு இயக்கங்களாக பதிவுபெற்று இயங்கிவருகின்றன.

சாதிச்சங்க நிர்வாகிகளை ‘சாதி வெறியர்கள்’ என்று பலர் குறிப்பிடுவது இயல்பு என்றாலும், ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் தேவைக்காகவும் சாதியை அணைத்துக் கொள்ளத் தயங்குவதில்லை என்பது நிதர்சனம்.

மலேசியத் தமிழர்களிடையே தேசிய அரசியலில் சாதிக்கு இடம் இல்லாமல் இருந்தாலும் பண்பாட்டுத் தளத்திலும், சமயம், இனம் சார்ந்த இயக்கங்கள், இந்தியர்களை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள் போன்றவற்றிலும் அது முக்கியத்துவம் பெறுகிறது.

மலேசியாவில் இந்தியர்களின் சாதிய உணர்வு வெளிப்படையானது அல்ல. ஆனால் அழுத்தமான குழுநிலை உணர்வுடையது. சமுதாயத்தில் தன்நிலையை உயர்த்திப்பிடிக்க வேறு எந்த பிடிமானமும் இல்லாதபோது பலரும் சட்டெனப்பற்றும் கயிறு சாதியாகும். சாதியப்பிரிவுகளில் ஆழமாகச்சென்று நுணுகி ஆராயும் குணம் பலருக்கும் குறைவுதான். மேல் கீழ் சாதிகள் என்று சில பொதுவான தொகுப்புகளை மட்டும் பிடிமானமாக பிடித்துக் கொண்டு ‘எங்க ஆளு” என்று கூறிக் கொள்பவர்கள் பலர்.

“இங்க அப்படியெல்லாம் இல்லீங்க” என்று பசப்பலாக கூறிக் கொண்டாலும் அரசியலும் திருமணங்களும் சாதியத் தகுதி அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகின்றன என்பதும் யாவரும் அறிந்த உண்மைதான்.

திருமணத்தில் சாதி பார்ப்பது தனிமனித உரிமை தொடர்பான விடயமாகி விட்டது. ‘அது எங்க வீட்டு உள்விவகாரம்’ என்று அதிகாரத்தோடு சொல்பவர்கள் பலர். “நீ அந்த வீட்டுல சம்பந்தம் வச்சுகுவியா?“ என்று நம்மை மடக்கும் யுக்தியோடு கேள்வி கேட்பவர்கள் சிலர். நான் அதெல்லாம் பாக்குறது இல்லை. ஆனா என் வீட்டுக்காரிதான் அதுல ரொம்ப கரெக்டா இருப்பா” என்று தப்பிக்கும் ஆண்கள் அதிகம்.

காதலிக்கும் முன்னே என்னசாதி என்று தெளிவாக அறிந்துகொண்டு பின்னர் ‘செம்புலப்பெயர் நீர்’ போல தெய்வீகக் காதலில் கரைபவர்கள் இந்நாளைய மலேசிய இளைஞர்கள்.

மேலும் சாதியை தனிமனிதத் தாக்குதலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் சூழல்களும் இங்கு அதிகமே. சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு இயக்கத்தலைவரை தூற்ற முற்பட்ட ஒரு நபர், அவரை மற்ற சிலதலைவர்களின் ஒத்த சாதியைச் சார்ந்தவர் என்று கூறி அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான புத்தி என்ற ஒரு பதிவைப் போட்டிருந்தார். அவர்களை மத்திம சாதிகளில் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அந்தப்பதிவு அமைந்திருந்தது. இதுபோன்ற செயல்கள் சாதி வெறுப்பு செயல்போலத் தோன்றினாலும் உண்மையில் அசல் சாதி வெறியர்களின் வேறு ஒரு குரலாகவே இதைப் பார்க்க முடியும்.

மலேசிய இந்தியர்கள் தங்கள் சாதியச்சிந்தனை எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், அதைப்பற்றி மற்ற இனத்தவர்கள் பேசிவிட்டால் மட்டும் வெகுண்டெழுவது வேடிக்கை. மலேசிய இந்தியர்களைப் பொருத்தமட்டில் சீன மலாய்க்காரர்களுக்கு இவர்களிடம் சாதியச் சிந்தனை இருப்பது தெரியாது என்றே நினைக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்ட கதையாக இவர்கள் நடத்தும் நாடகம் பல நேரங்களில் நகைப்புக்குரியது.

முன்னர் மலாய்க்காரர்கள் இந்தியர்களின் நிறத்தை அடிப்படையாக வைத்து சாதியைக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். கருப்பாக இருந்தால் கீழ்ச்சாதியர் என்பதும் சிவப்பாக இருந்தால் பிராமண வம்சத்தார் என்பதும் அவர்களின் யூகமாக இருந்தது. ஒருவேளை இந்தத் ‘தவறான தகவல்’ நம்மிடமிருந்தே கூட அங்கு போயிருக்கலாம்.

ஆனால், இன்றைய நிலையில் இந்தியர்களிடையே இருக்கும் சாதிய உணர்வுகள், பூசல்கள் குறித்த தெளிவான தகவல்களை அதிகாரமட்டம் நன்கு அறிந்தே இருக்கிறது. உயர்கல்வியாளர்களின் சமூகவியல் ஆய்வுகளின் வழி இத்தகவல்கள் திரட்டப்படுகின்றன. ம.இ.கா போன்ற கட்சிகளில் நிலவும் பூசல்களுக்குப் பிண்ணனியாகச் சாதி இருப்பதை பிரதமரும் அறிந்தே இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக அவரின் உரைகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சமகாலச் சூழலில் சாதியம் பேசும் இந்தியர்கள், மற்ற இனத்தவர் நம்மைப் பற்றி என்னமாதிரியான கருத்துகளை வைத்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது அவசியம். அவர்கள் நம்மை பொதுவாகத் தமிழர் என்று நினைத்துப் பேசுகிறார்களா அல்லது கீழ்சாதி மேல்சாதி தமிழர்கள் என்ற மதிப்பீடுகளின் வழி பார்கிறார்களா என்று சிந்திக்கவேண்டிய காலம் இது. இச்சூழலில்தான் மலேசியாவில் சாதீய மலத்தை நம்முகத்தில் அள்ளிவீசும் கொடிய சந்தர்ப்பங்கள் அவ்வப்போது வாய்க்கின்றன. அதில்ஒன்று பிற இனத்தார் நாம் மூடிவைத்துள்ள சாதிப்பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, உள்ளூர ஏளனம் தொனிக்கக் கேள்வி கேட்பதும் கருத்துகள் கூறுவதுமாகும்.

மேலே நீங்கள் வாசித்த ‘அனுபவங்கள்’ சில உதாரணங்கள்.

அந்த இக்கட்டான நேரத்தில், “அதெல்லாம் இந்தியாவுலதான்; மலேசியாவுல நாங்க எல்லாம் ஒண்ணுதான்” என்று தன்நெஞ்சறிந்து பொய்சொல்லி விட்டுக் குறுகுறுப்பதைத் தவிர வேறுவழி தெரிவதில்லை. ஆயினும் அச்சூழலில் நம் முகத்தில் வடியும் மலத்தை லாவகமாக கைக்குட்டையில் மூடித் துடைத்துப் போட்டுவிட்டு பச்சையாக ஒரு சிரிப்புச் சிரித்து சமாளிக்கும் பயிற்சியை இந்தச் சமுதாயம் நமக்கு கொடுத்திருப்பது நன்றிக்குரியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...