வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 1

group 03கடந்த ஒன்பது ஆண்டுகளாக கலை, இலக்கியம், அரசியல் என பல்வேறு தளங்களில் உற்சாகமாய் இயங்கிவரும் வல்லினம் இவ்வாண்டு ‘வல்லினம் விமர்சன அரங்கு 2016’ எனும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், இலக்கிய வாசகர்களுக்கு மத்தியில் நடைபெறும் பொதுவான இலக்கிய அரங்காக இல்லாமல் மலேசியத்தமிழ் இலக்கியச்சூழலில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கவேண்டும் எனும் அழுத்தமான நம்பிக்கையில் இவ்விமர்சன அரங்கு முன்னெடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக மலேசியத்தமிழ் இலக்கியச்சூழலைப் பற்றி பேசுவதும் விவாதிப்பதும் சாத்தியப்படாது என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறான பருந்துப்பார்வை எந்த அளவுக்குத் தாக்கத்தையும் அடுத்தகட்ட நகர்வுக்கு அடித்தளமிடும் என்பதும் கேள்விக்குறியே.

வல்லினம் குழுவினரின் முதல் முயற்சியான இவ்விமர்சன அரங்கு ஆழ்ந்த திட்டமிடலுக்குப் பின் முன்னெடுக்கப்பட்டது. அவ்வகையில் வல்லினம் பதிப்பகம் தனது சுயபதிப்பில் வெளியான நூல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை மறுவாசிப்புக்குக் கொண்டுவந்தது. ஒருவகையில் வல்லினம் தனது பதிப்பகத்தையும்; எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளையும் மீண்டும் பொதுவாசிப்புத் தளத்திற்குக் கொண்டுவந்து மீள் பரிசீலனை செய்யவும், புதிய கருத்தாக்கங்களை உருவாக்கவும், உடன்பட்ட / மாறுபட்ட கருத்தாக்கங்களை விவாதிக்கவும், குறைகளை அறியவும், நிறைகளை மீட்டுணரவும், தொடர்ந்தியங்கவும் சாத்தியமான நிலையை உருவாக்கும் என்பது இவ்வமர்வின் நோக்கமாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த இவ்விமர்சன அமர்விற்கு 7 எழுத்தாளர்களின் நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, நூல்கள் குறித்து விமர்சிக்க எழுத்தாளர்கள் சிலரை அணுகி ஒருமாத காலத்திற்கு முன்பாகவே அந்நூல்கள் கொடுக்கப்பட்டன. படைப்புகளின் வெவ்வேறு முகங்களைக் கண்டறிய ஒவ்வொரு நூலைக்குறித்தும் மூத்த எழுத்தாளர், இளம் தலைமுறை எழுத்தாளர் என இருவரிடம் நூல் குறித்த விமர்சனத்தைக் கட்டுரை வடிவில் பெற்று நிகழ்வின்போது அச்செடுத்து வழங்கப்பட்டிருந்தது.

பெரும்பாலும், இலக்கிய சந்திப்புகளும், விமர்சன அரங்குகளும், ஏன் மாநாடுகளும்கூட மிகச் சடங்குபூர்வமான கூடிக்கலையும் நிகழ்வாகவே இருக்கின்றன. நிகழ்வின் அடிப்படை நோக்கம் தெளிவானதாக இருந்தாலும் அவை முன்னெடுக்கப்படும் விதம் பிசகும்போது எவ்வளவு பெரும் பொருட்செலவானாலும் அத்தனையும் பயனற்று போய்விடுவதை சான்றுகள் காட்டி விளக்க வேண்டியதில்லை. இவ்விமர்சன அரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் நிகழ்வுக்குப் பின் மேலும் செம்மைப்படுத்தி தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளின் சிற்றிதழ்களுக்கும், இணைய இதழ்களுக்கும் அனுப்பி பரவலாக்கப்படும் என்பது இந்நிகழ்வின் கூடுதல் சிறப்பு. மேலும், இக்கட்டுரைகளுக்கு அப்பால் இந்நிகழ்வில் நடைபெற்ற விவாதங்களையும், அனுபவப் பகிர்வுகளையும் ஆவணப்படுத்துவதும் பொதுவில் பகிர்வதும் இன்னும் ஆழமான பாதிப்புகளையும் தொடர் உரையாடலுக்கும் இட்டுச்செல்லும் எனும் எதிர்பார்ப்பில் இப்பதிவு எழுதப்படுகிறது.

6.2.2016 (சனிக்கிழமை), 7.2.2016 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் ரவாங் நகரில் திட்டமிட்டபடி தொடங்கிய நிகழ்வில் எழுத்தாளர் ம. நவீன், டாக்டர் சண்முக சிவா, கோ. புண்ணியவான், அரு.சு. ஜீவானந்தன், முனைவர் ஶ்ரீலட்சுமி, சிவா பெரியண்ணன், அ. பாண்டியன், ஶ்ரீதர்ரங்கராஜ், மஹாத்மன், சரவணதீர்த்தா, கருணாகரன், பூங்குழலி வீரன், தயாஜி, கங்காதுரை, டாக்டர் முனீஸ்வரன் குமார் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

அரு.சு. ஜீவானந்தன் நிகழ்வுக்கு வருவதை உறுதி செய்திருந்த அடுத்த நாளிலிருந்து ம.நவீன் அவரது சிறுகதைத் தொகுப்பை மீண்டும் வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறினார். இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு ஜெயமோகனின் ‘பினாங்கு இலக்கிய சந்திப்பு’க்குச் செல்லும் முன் அறம் சிறுகதைத் தொகுப்பையும் அவரது மிக அண்மைய விவாதங்களையும் வாசிப்பதாகச் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது. இலக்கிய கலந்துரையாடல்களோ அல்லது தனிநபர் சந்திப்புகளோ தட்டையான வாதத்திலும் பொழுதுபோக்காகவும் பயனற்று போகாமலிருக்க இதுபோன்ற homework-குகள் அவசியம். பிரமாண்டமான முன்னெடுப்புகளைக் காட்டிலும் இதுபோன்ற சிறுசிறு நகர்ச்சிகளே பின்னாளில் பெரும் அதிர்வினை தரக்கூடியதாக இருக்கும். அதனை எல்லாக் காலங்களிலும் ஈடுபாட்டுடனும் தீவிரத்துடனும் தொடர்ந்து செய்யும் ம.நவீன், அ.பாண்டியன், ஶ்ரீதர் போன்றவர்களின் செயலூக்கம் கவனிக்கத்தக்கது.

அரு.சு.ஜீவானந்தன், மஹாத்மன் ஆகியோரை பார்த்ததில்லை என்பதும் இருவரும் தனித்துவமிக்க சிறுகதைகளைப் படைத்தவர்கள் என ம.நவீன் குறிப்பிட்டிருந்தது அவர்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலை அதிகப்படுத்தியது. அதிலும் மஹாத்மனின் சிறுகதைகள் என்னை சில ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டியிருந்தது. அவரைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்ததால் அவர் மீதான கற்பனையில் எனக்கான பிம்பத்தை உருவாக்கியும் வைத்துக் காத்திருந்தேன்.

பிப்ரவரி 6, 2016 சனிக்கிழமை – [முதல் நாள்]

நண்பகல் 1 மணிக்கு விமர்சன அரங்கு தொடங்குவதாக உறுதிசெய்யப்பட்டிருந்ததால் வடக்கு group 02மாநிலம்-கெடாவிலிருந்து அதிகாலையே இரயிலில் அ.பாண்டியனுடன் புறப்பட்டு வந்திறங்கிய கோ.புண்ணியவான் போதுமான ஓய்வும் உறக்கமும் இல்லாமல் களைப்பாகவே காணப்பட்டார். முதுகுத்தண்டு வலியால் 25ஆண்டுகளுக்குமேல் எழுத்துலகிலிருந்து தூரமாக சென்றுவிட்டிருந்த அரு.சு. ஜீவானந்தன் தனக்கு எப்போது வேண்டுமானாலும் இவ்வலி வந்து இம்சிக்கும் என்பதை உடன்கொண்டுவந்த தலையணையின்மூலம் காட்டிக்கொண்டே இருந்தார். விமர்சன அரங்கு தொடங்கும் முன் இவ்விரு எழுத்தாளர்களின் ஆவணப்படம் பதிவு செய்யப்பட்டது. தங்களது வாழ்வையும் இலக்கியப்பணியையும் பின்னோக்கிப் பார்த்து உள்மனதிலிருந்து பேசியதில் அரு.சு. ஜீவானந்தன் என்னை மொத்தமாய் நெகிழ வைத்தார்; கோ. புண்ணியவான் ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.

அதுவரையில் மிக இறுக்கமான ஆளாக தென்பட்ட அரு.சு. ஜீவானந்தன், தாளமுடியாத முதுகு வலி தனது எழுத்தையும் வாசிப்பையும் மொத்தமாய் விழுங்கிவிட்டிருந்ததைக் கூறும்தருணம் ஒரு படைப்பாளனுக்கே உரிய அத்தனை மெல்லிய உணர்வுக்குள் சென்றுவிட்டிருந்தார். அவரது ஆவணப்படப் பதிவில் மிக முக்கியமாக அறிந்துகொள்ள முடிந்த விடயம் 70களில் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் சிற்றிதழ் முயற்சி நடந்திருப்பது பற்றியதாகும். இலக்கிய வட்டம் எனும் பெயரில் தனிச்சுற்றுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்ட அவ்விதழில் சந்திப்புகள், இலக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் என சிற்றிதழ் தன்மையோடு வந்திருப்பது மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாகும். தொடர்ந்து நாவல், சிறுவர் நாவல் என இளைஞனின் உத்வேகத்துடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கோ.புண்ணியவான் தனது அடுத்தக்கட்ட திட்டங்கள்பற்றி கூறியது வியப்புக்குள்ளாக்கியது.

இப்படியாக இரு ஆவணப் பதிவுகள் செய்து முடிக்கும்போது மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்திருந்தனர். மதிய உணவை முன்னிருந்த கடையில் முடித்துக்கொண்டு 1.15க்கு வல்லினம் விமர்சன அரங்கு தொடங்கியிருந்தது. எழுத்தாளர் கங்காதுரையின் ஆலோசனையின் நீட்சியாக முன்னெடுக்கப்பட்ட இவ்விமர்சன அரங்கிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகூறி நிகழ்வின் நோக்கம் குறித்தும் இருநாள் நிகழ்வில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டிய சில அம்சங்களையும் ம.நவீன் நிகழ்வின் தொடக்கத்திலேயே கூறினார்.

அவை: (1) கலந்துரையாடலில் உறுதியாக தனிநபர் தாக்குதல் இருக்கக்கூடாது; (2) நிகழ்வில் கலந்துகொள்பவர் / கொள்ளாதவர் யார் குறித்த அந்தரங்க பகிர்வோ / வதந்தியோ பேசப்படக்கூடாது; (3) விமர்சனங்கள் நூலின் / படைப்பின் அடிப்படையில் இருக்கவேண்டும்; (4) ஒவ்வொரு நூலும் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நூல்கள் கண்டிப்பாக முழுமையாக வாசிக்கப்பட்டிருக்க வேண்டும்; (5) ஒரு நூல் குறித்து ஒரு விமர்சனம் 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். 40 நிமிடங்கள் விவாதத்திற்கு ஒதுக்கப்படும்; (6) நிகழ்வில் வெளிபார்வையாளர்களுக்கு இடமில்லை; (7) நிகழ்ச்சி ஏற்பாட்டில் என்ன சங்கடங்கள் இருந்தாலும் அனைத்துமே கலந்துரையாடி மாற்றம் செய்யக்கூடியதே. விமர்சன அரங்கு கூடுமானவரை திசைமாறிச் செல்லாமலும் கொடுக்கப்பட்ட நேரத்தில் ஆக்ககரமான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற இம்முன்கூட்டிய தெளிவுறுத்தல் அவசியமாகியிருந்தது.

தொடர்ந்து, வல்லினம் இவ்விமர்சன அரங்கின் நோக்கம் குறித்து ம.நவீன் குறிப்பிடுகையில் ‘இது நாம் இலக்கியம் குறித்தும் சமகாலப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் குறித்தும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு களம். பொதுவாக இன்று இலக்கிய கலந்துரையாடல்கள், தத்தம் ஆணவத்துக்குத் தீனி போட்டுக்கொள்ளும் நோக்கிலும் பொதுப்பரப்பில் தங்கள் ஆளுமையைக் கட்டமைக்கும் முயற்சியாகவே தொடங்கப்பட்டு சட்டென முடிவடைந்துவிடுகின்றன. அவற்றின் நோக்கம் நிறைவேறியதா?, தொடர்ச்சி என்ன? என யாரும் கவனிப்பதுமில்லை. நமது சந்திப்பு அவ்வாறு இல்லாமல் உண்மையான ஒரு படைப்பை நோக்கிய ஆழமான புதிய கண்டடைதல்களை உருவாக்க வேண்டும். அந்தக் கண்டடைதல்களே பின்னர் வல்லினத்தில் பதிவாகும். இது நம்மை நாமே பரிசோதித்துக் கொள்கிற ஒரு முயற்சி மட்டுமே’ என்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்நிகழ்வு குறித்து எவ்வித முகநூல் பதிவும் விளம்பரங்களும் பகிரப்படவில்லையென்றும் அதுபோல நிகழ்வு முடியும்வரை நிகழ்வு குறித்து பதிவிட வேண்டாம் என்றும் ஒருமாதத்துக்கு முன்பே கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் அமர்வு : அவர்கள் பேனாவிலிருந்து கொஞ்சம் மை
நூலசிரியர் : அ. பாண்டியன்
நூல் விமர்சனம் : ஶ்ரீதர்ரங்கராஜ், கோ.புண்ணியவான்
நேரம் : பகல் 1.15 – 2.45 வரை

ஸ்ரீதர்ரங்கராஜ் அமர்வில் வாசித்த கட்டுரை இணைப்பு

pandiyanமுதல் விமர்சன அரங்கு எழுத்தாளர் அ.பாண்டியனின் ‘அவர்கள் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ எனும் நூலிலிருந்து தொடங்கியது. பல்வேறு மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பு இலக்கிய வாசிப்பினூடாக தொடர்ந்துவரும் ஶ்ரீதருக்கு இந்நூல் குறித்து விமர்சிக்க அதிகமே செய்திகள் இருந்தன. ஆசிய இலக்கியங்களை ஓரளவு வாசித்திருந்ததால் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த இலக்கியங்கள் சமயத்தைக் கடந்து அல்லது மீறி எதையும் படைத்துவிடுவதில்லை என்பதையும் அவ்வாறு ஒரு வட்டத்துக்குள் மட்டுமே உழலும் படைப்புகள் மிகக் குழந்தைத்தனமானதாக இருப்பது குறித்தும் ஶ்ரீதர் பேசினார். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாட்டு இலக்கியங்களை அடியொற்றி வளர்ந்திருக்கும் மலேசிய மலாய் இலக்கியத்தில் சில பரிசோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இந்நூல் அடையாளப்படுத்தியிருப்பதையும் குறிப்பிட்டிருந்தார். அவற்றுள் புலப்பெயர்வையும், பின் நவீனத்துவம் எனும் பெயரில் அனைத்தையும் கட்டுடைக்கும் போக்குகளைக் கொண்ட ஓரிரு சிறுகதைகள் உலக இலக்கிய தர வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியது எனும் கருத்தையும் பதிவு செய்தார்.

ஒரு தலைமுறையில் போராட்டவாதிகளாகவும் உயிர்த்தியாகம் செய்தவர்களாகவும் கருதப்பட்டவர்கள் பின்னாளில் ஒருவரது தனிப்பட்ட அனுபவம், தனிப்பட்ட இழப்பை வைத்து அளவிடப்படுவதை தற்போது நேரு, காந்தி, வாஞ்சிநாதன் போன்றவர்களை நோக்கி வீசப்படும் குற்றச்சாட்டுகளை வைத்து இன்னும் விரிவாக அவரது விமர்சனப் பதிவு அமைந்திருந்தது. தொன்மங்களை மீளுருவாக்கம் செய்யும் போக்கு குறித்தான பகுதியில் தொன்மங்களை மறுவாசிப்புக்குத் தேடிப்போகும் விதமாக எழுதப்படும் இலக்கியப் பிரதிகளை பின்நவீனத்துவத்திற்கு எதிர்ப்பானது என முத்திரை குத்த வேண்டியதில்லை என்றும் எல்லாக் காலங்களிலும் இலக்கியங்கள் மீள்வாசிப்புக்கும் மீளுருவாக்கத்திற்கும் உட்படுவதை கோடிகாட்டினார். இதில் படைப்பாளன் எவ்வாறான நிலைபாட்டிலிருந்து எழுதுகிறான் என்பதே விவாதிக்கப்பட வேண்டியது என்பது அனைவரது பொது கருத்தாகவும் இருந்தது.

தொடர்ந்து, மலாய் இலக்கியங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுவதன் தேவை குறித்து கலந்துரையாடல் சென்றது. பெரும்பாலும் மாறுபட்ட கூறுமுறைகளுக்காகதான் ஆங்கில மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்திருப்பதாகவும் மலாய் இலக்கியத்தில் தமிழ் இலக்கிய கூறுமுறையிருந்து மாறுபட்டுள்ள நிலை இருக்குமானால் அவற்றை மொழிபெயர்க்க முயலலாம் மற்றபடி மலாய் இலக்கியத்தை அறிமுகம் செய்திருக்கும் இந்நூல் போன்று மேலும் ஒரு நூல் புதிதாக உருவாக்கப்படுவது தேவையற்ற முயற்சியாக ஶ்ரீதர் குறிப்பிட்டார்.
மலாய் இலக்கியங்களைக் காட்டிலும் தமிழ் இலக்கியங்கள் ஒப்பீட்டளவில் இன்னும் தரமாக இருப்பதாகக் கூறிய முனைவர் ஶ்ரீலட்சுமி தமிழ் இலக்கியங்கள் மலாய்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றார். ஆனால் அது எந்த அளவுக்கு மலாய் இலக்கியச் சூழலில் கவனப்படுத்தப்படுகிறது எனும் கேள்வி எழும்போது சிங்கப்பூரை பொருத்தமட்டில் அரசியல் பாராபட்சங்கள் இலக்கியச் சூழலில் இல்லை என்றும் cross literature studies உயர்க்கல்விக்கூடங்களில் இருப்பதும் மொழிபெயர்ப்பின்மூலம் தமிழ் இலக்கியம் குறித்த கவனம் பெருகுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அ.பாண்டியனின் வாசிப்பில் 1980 தொடங்கி 2004 வரை உள்ள மலாய் இலக்கியத்தில் மதத்தைக் கடந்து பண்பாட்டு விழுமியத் தொலைப்புகள் பற்றியே அதிகமும் இருப்பதை குறிப்பிட்ட ஶ்ரீதர் இவ்வகை value lost என்பது எல்லா மொழி இலக்கியங்களிலும் நிச்சயம் இருக்குமென்றும் புதிதாக ஏதும் இல்லாத பட்சத்தில் வெறும் பரிமாற்றம் எனும் பெயரில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தேவையா என சிந்திக்கத் தூண்டினார்.

ஜெயமோகனின் வெண்முரசு நாவலை உதாரணப்படுத்திய ம.நவீன், மதத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்படும் எழுத்துமுறை மற்றும் மதத்தை நேரடியாக எழுதும்முறை என வெவ்வெறு ரகம் இருப்பதை குறிப்பிடுகையில் இரண்டையுமே அணுகுவது அவசியமற்றது என ஶ்ரீதர்  கருதுவதாகச் சொன்னார்.

மலாய் இலக்கியங்கள் மதம் சார்ந்த எழுத்துகள் என்பது ஒரு பார்வை. அதற்குள் என்ன மாதிரியான அத்துமீறல்களும் கட்டுடைப்புகளும் நிகந்துள்ளது என்பதை தொடர் வாசிப்பின் மூலமே கண்டடைய வேண்டியுள்ளது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் சாதிய இலக்கியமாக முன்னிறுத்தப்பட்டதால் இனி அதனைப் படிக்க வேண்டியதில்லை எனக் கூறிவிட முடியாது என அ.பாண்டியன் கூறினார்.

மதத்தைத் தவிர்த்து இதர வகை இலக்கிய நடைகளை சற்று சிரத்தை எடுத்துத் தேடி அவற்றை மொழிபெயர்க்கும் தேவைகள் உள்ளதை அரு.சு.ஜீவானநதன் குறிப்பிட்டுக் காட்டி விவாதத்தை வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றார். 1970களில் மாலய்மொழியில் அதிகம் துப்பறியும் நாவல்கள் ரசனைமிக்க வடிவில் திகில்தன்மையுடன் புனையப்பட்டிருப்பதைப் பற்றிக்கூறிய அ.பாண்டியன் பின்னாளில் அவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை என்பதை அறிந்து ஏமாற்றமடைந்ததாகவும் கூறினார்.

சிங்கப்பூர் மலாய் இலக்கியத்தோடு மலேசிய மலாய் இலக்கியத்தை ஒப்பிட்டு பேசிய முனைவர் ஶ்ரீலட்சுமி அங்குள்ள இலக்கியங்களில் இவ்வாறான மதவாதத் தன்மைகளில் சற்று தாராளவாதம் காட்டப்படுவதாகக் குறிப்பிட்டார். மலேசிய மலாய் இலக்கியங்கள் இன்றைய சூழலில் மதம், காதல் ஆகிய பாடுபொருள்களில் மட்டும் அதிகம் புனையப்படுவதையும் அதையே இங்குள்ளவர்களும் விரும்பி வாசிப்பதையும் புத்தகக் கடைகளில் உள்ள மலாய் நூல் பிரிவுகளில் காணப்படும் புத்தக வகைகளைக் சுட்டிக்காட்டிமுனைவர் முனீஸ்வரன் விளக்கினார்.

முஸ்லிம் எழுத்தாளர்களை நோக்கி கலந்துரையாடலைத் திருப்பிய அ.பாண்டியன் பிற நாட்டு முஸ்லிம் படைப்பாளர்களின் படைப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு நைஜீரிய இலக்கியத்தை உதாரணம் காட்டிய ஶ்ரீதர் , ச்சினுவா அச்செபெ (Chinua Achebe)-வினுடைய ‘Things Far Apart’ எனும் நாவல் குறித்துப் பேசினார். இங்கு மதம் எப்படியான தன்மையுடன் இலக்கியங்களில் பங்குவகிக்கிறதோ அதைப்போல நைஜீரிய இலக்கியங்களில் இனம் தனது இறுக்கமான தடத்தைப் பதித்துள்ளதைச் சுட்டினார். ம.நவீன் மண்ட்டோ (Saadat Hasan Manto), குல்சார் (Gulzar) போன்ற பாக்கிஸ்தானிய முஸ்லிம் எழுத்தாளர்கள் மதத்தைக் கடந்து மனிதத்தை எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்.

இவ்விவாதத்தை வரலாற்று நோக்கிலிருந்து அணுகிய அரு.சு.ஜீவானந்தன் புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகளில் இனம், மதம் சார்ந்த இறுக்கமான பிடிப்புகள் இருப்பதன் காரணத்தை ஆப்பிரிக்க மலேசிய அரசியலுடன் ஒப்பிட்டுக் காட்டினார். மலேசியாவைப்போல இன மதவாத கெடுபிடிகளையும் அழுத்தங்களையும் ஆப்பிரிக்க இலக்கியங்களில் காணமுடிவதில்லை என்றும் மலேசியா போன்ற புதிய சுதந்திர நாடு தனது அரசியல் பலத்தைத் சிதற விடாமல் தக்கவைக்க மதத்தைக் கையில் ஏந்துவதையும் குறிப்பிட்டார். இதற்குமுன் மலேசியாவில் நடந்திருக்கும் 3 இனவாத போராட்டங்களைச் சுட்டிக்காட்டி, மத ரீதியாக மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதே அவர்களது அரசியல் பலத்தை சிதறுறாமல் பிடிக்கும் என்பதால் அதனை இலக்கியத்திலும் தக்கவைக்க முயலும் போக்கை கவனிக்க வேண்டியதாகக் கூறினார்.

இதையொட்டி மேலும் பேசிய அ.பாண்டியன் தமிழ் முஸ்லிம்களின் இருவேறு செயல்பாட்டு முகங்களைப் பற்றியும் கவனிக்க வேண்டியுள்ளதாகத் தனது கண்ணோட்டத்தைக் குறிப்பிட்டார். துறிஞ்சில் போன்ற மதம் சார்ந்த இதழ்களில் வேறாகவும் பொதுவான பத்திரிக்கைகளில் வேறாகவும் இயங்கும் தன்மைகளை இந்திய முஸ்லீம்களிடம் பரவலாகக் காண முடிவதை ஓரளவு இதனுடன் பொருத்திக் காட்டினார். இவர்களிலிருந்து சற்றே மாறுபட்டு இயங்கும் தன்மையினராக சை.பீர்முகம்மது, சீனி நைனா முகம்மது போன்றவர்களின் ஆக்ககரமான இலக்கியப்பணிகளை உடனடியாக சிந்தித்துப் பார்க்க முடிந்தது. தவிர, மலாய் இலக்கியச் சூழலில் இயங்கும் உதயசங்கர் எஸ்.பி. போன்றவர்கள் இந்துமதத்தை மலாய் இலக்கியச் சூழலினுள் கொண்டுவந்து நுழைப்பதாக கூறப்படுவது குறித்தும் விவாதங்கள் விரிந்து முடிவுக்கு வந்தது.

இரண்டாவது அமர்வு : துணைக்கால்
நூலாசிரியர் : விஜயலட்சுமி
நூல் விமர்சனம் : முனைவர் ஶ்ரீலட்சுமி, முனைவர் முனீஸ்வரன் குமார்
நேரம்: பகல் 2.45 – 4.15 வரை

முனைவர் ஸ்ரீலட்சுமி  அமர்வில் வாசித்த கட்டுரை இணைப்பு

முனைவர் முனீஸ்வரன்  அமர்வில் வாசித்த கட்டுரை இணைப்பு

நீண்ட ஓய்வுகள் எதுவுமின்றி இவ்விமர்சன அரங்கின் இரண்டாவது அங்கமாக ‘துணைக்கால்’ dr laksmyஎனும் எனது நூல் குறித்த விமர்சனமும் விவாதமும் தொடரப்பட்டது. உறங்குவதற்கு உவப்பான நண்பகல் 2.45க்குத் தகவல்களை அள்ளிக் குவித்திருக்கும் எனது நூல் தொடர்பான அரங்கம் நினைத்ததற்கு மாறாக படு உற்சாகமாவே நடைப்பெற்றது. இந்நூல் குறித்து எழுதப்பட்ட இரு விமர்சனக் கட்டுரைகளும் இருவேறு காலப்பிரிவைச் சார்ந்த விரிவுரையாளர்களின் வெவ்வேறு விமர்சன வடிவங்களிலிருந்து அமையப்பெற்றிருந்தது கலந்துரையாடலிலும் நீடித்திருந்தது. முனைவர் முனீஸ்வரன் குமார் இந்நூலினை விரிவுரையாளர்/ஆய்வாளர் கண்ணோட்டத்திலிருந்து அணுகி அதன் குறைநிறைகளைப் பற்றி கருத்துப் பதிவு செய்தார். முனைவர் ஶ்ரீலட்சுமி ஆய்வு மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக வழிகாட்டிய, படைப்புத் திருட்டில் பலமுறை ஏமார்ந்துவிட்டிருந்த தனது அனுபவத்தைக் கலந்துரையாடலில் கட்டுரையைக் காட்டிலும் அதிகமாகவே பதிவு செய்தார்.

எப்போதும் அனுபவங்கள் சார்ந்த பகிர்வில் தனிமனித வசைகளைத் தவிர்த்துப் பேசுவது எளிதில்லைதான். ஆனால், அதனை சரியான எல்லையில் நின்று விவாதிக்க முடியாமல் போனால் ‘காப்பிக் கடை’ பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் போய்விடும். முனைவர் ஶ்ரீலட்சுமி இடையிடையே சில தனிமனித வசைகளை முன்வைத்தாலும் அவை உழைப்புச் சுரண்டலில் பலியாகியவரின் உள்வலி என்பதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. எப்போதும் அறிவுத் திருட்டு என்றால் சட்டென ஆய்வு மாணவர்களை விரல் நீட்டிக் காட்டிக்கொடுத்து நழுவிவிடும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் திருட்டுத்தனங்களை யாருமே லட்சியம் செய்வதில்லை என்பதாகத் தொடர்ந்த அவரது பகிர்வு அடுத்த மிக முக்கியமான விவாதத்திற்குள் கொண்டு சென்றது.

அறிவுத் திருட்டுக்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் தமிழில் நடக்கும் திருட்டு வேலைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகின்றது என்ற முனைவர் முனீஸ்வரனின் ஆதங்கக் குரலுக்குப் பின்னால் மனநிறைவற்றிருக்கும் ஆயிரமாயிரம் ஆய்வாளர்களின் உள்ளக்கிடக்கையைப் பார்க்க முடிந்தது என்போன்ற நூலகரின் குரூர மனவோட்டமாகக் கூட இருக்கலாம். ‘OCR’ போன்று எழுத்துருவை அடையாளம் காட்டக்கூடிய மென்பொருட்களைப் பயன்படுத்தி தமிழில் நூல்கள் மின்வடிவமாக்கப்படும் (Digitalisation) தற்போதைய சூழலில் இன்னும் சில ஆண்டுகளில் அறிவுத் திருட்டுகளைக் (ஓரளவாகினும்) கண்டுபிடிக்க முடிவது சாத்தியமே என்றேன். கலந்துரையாடல் சற்று ஆழமாக சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் பிரதிகளை மின்னாக்கத்திற்கு உட்படுத்தியதன் போதாமைகள் குறித்துச் சென்றது. அரசாங்கக் கொண்டாட்டம் ஒன்றிற்காக தேர்ந்தெடுக்கப்படும் திட்டமொன்றில் இதைவிட அதிகமாக எதிர்பார்க்க முடியாது என்று ம.நவீன் விளக்கினார். அதனை முற்றாக மறுத்து எனது பார்வையை முன்வைத்தேன்.

எப்போதும் ஒருவரைக் குறித்து குவிக்கப்படும் பாராட்டுகளும் கட்டமைக்கப்படும் மிகப்பெரும் பிம்பங்களும் அவரது நிஜ ஆளுமையைக் கடந்து பிரம்மாண்டமானதாக வளர்ந்துவிடுவதுண்டு. பின்னாளில் அதற்கு எதிர்வினையாற்ற முடியாத சூழலையும் உருவாக்கி நம்மையே மிரட்டுவதாகவும் அமைந்துவிடுகின்றன. இப்படியானதொரு மிகைபிரம்மாண்ட சித்தரிப்பில் பின்னப்பட்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மின்னாக்க முயற்சியைக் குறித்து என் பார்வை அமைந்திருந்தது. பெரும் பணச்செலவில், பலநூறு ஆள் பலத்தை விழுங்கியிருக்கும் இத்திட்டம் வெறும் 50 ஆண்டுகளை உள்ளடக்கிய இலக்கிய வடிவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதையும் அதன் கவனிக்கப்படாத பக்கங்களைக் குறித்தும் தொடர்ந்து விவாதம் வலுத்திருந்தது. அவை இக்கலந்துரையாடலில் இடைச்செருகலாக இருந்தாலும் மிகத் தீர்க்கமாக விவாதிக்க/விமர்சிக்க வேண்டிய அம்சம் என்பதை இறுதியில் ஶ்ரீதர், அ.பாண்டியன் ஆகியோர் ஆமோதித்தனர். சிங்கப்பூர் மின்மரபுடைமைத் திட்டம் குறித்த விரிவான கட்டுரையொன்றை எழுத வேண்டிய தேவையையும் இதன்வழி யோசிக்க முடிந்தது.

இந்நூலின் முன்னுரையில் வ.கீதா கூறிப்பிட்டிருப்பதைப் போலவே முனைவர் முனீஸ்வரனும் இந்நூல் மேலும் பல விவாதங்களைத் தொடக்கி வைக்க வேண்டும் என்பதாகக் கூறி சில பரிந்துரைகளையும் முன்வைத்தார். அவற்றில் மிக முக்கியமானது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் நூல்களைச் சந்தைப்படுத்துதல் குறித்தான சூட்சுமங்களை அடையாளம் காண வேண்டும் என்பதாகும். அவரது எதிர்பார்ப்பு யாழ் பதிப்பகம் மூலம் நிச்சயம் சாத்தியப்படக்கூடியதாக இருக்கும் என தயாஜி நம்பிக்கையாகப் பேசினார். கிழக்காசிய நாடுகளில் என்னென்ன கருப்பொருள் சார்ந்த நூல்களுக்கு தடை உள்ளது என்பது குறித்தும் அவ்வாறான தடைகளைக் கடந்து அங்கெல்லாம் இலக்கியங்கள் எப்படி வளர்ந்துள்ளன என்பதையும்கூட ஆராய வேண்டிய தேவை உள்ளதென கங்காதுரை வலியுறுத்தினார். பூங்குழலி வீரன் முன்வைத்த பொதுவான கேள்வி அதுவரை நிலவிய பரபரப்பான விவாதத்தை மற்றுமொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. ‘எழுத்து பொதுச் சொத்து. அப்பறம் அதுக்கு எதுக்கு copyright?’ என்பதே அவரது கேள்வி.

இதுபோன்ற கேள்வி ஒன்றை பூச்சோங் சேகர் சிங்கப்பூர் வாசகர் வட்டச் சந்திப்பின்போது என்னிடம் கேட்டிருந்தார். இக்கேள்வியை ‘சிந்தனை தோன்றிய காலத்திலிருந்து சில நூறாண்டுகளிலேயே எல்லாமும் எழுதப்பட்டுவிட்டன. இதில் எதை என்னுடைய அறிவு, என்னுடைய கண்டுபிடிப்பு என அடையாளப்படுத்துவது? எல்லாமும் எங்கிருந்தோ பெற்றுக் கொள்ளப்பட்டதுதானே?’ என்பதாகவும்கூட திரித்தும் சிந்தித்துப் பார்க்க முடியும். இதனை மிக எளிதாக விளக்க வியாச முனிவனின் மகாபாரத்தை அடியொற்றி மீளுருவாக்கம் செய்யப்பட்ட பாரதியின் பாஞ்சாலி சபதம், ஜெயமோகனின் வெண்முரசு ஆகிய இலக்கியப் பிரதிகளை உதாரணம் காட்டினேன். வெண்முரசு நாவல் மகாபாரதத்தை அடியொற்றியதாக இருந்தாலும்கூட மகாபாரத்தில் இல்லாத பல்வேறு பாத்திர வார்ப்புகளையும், விரிவான கிளைக் கதைகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருப்பதால் முழுக்க முழுக்க இது ஜெயமோகனின் படைப்பாகும். அதுபோல நாளுக்கு நாள் ரக ரகமாக மாற்றங்களை அடைந்துவரும் தொலைபேசிகள் அனைத்திற்கும் அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) மட்டுமே உரிமையானவர் என்றால் ஏற்போமா? இல்லையே. ஆக, மாற்றத்திற்கு உட்படும் அனைத்தும் அதனை தோற்றுவித்தவனுக்கு உரிமையாகிறது.

பெரும்பாலும் பதிப்பகத்தார் நூல் பதிப்பை பொதுச்சேவையாகக் காட்டிக்கொள்வதற்கு பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்றாக குழலியின் கேள்வியைச் சுட்டிக்காட்டி ம. நவீன் பதிப்பகக் கண்ணோட்டத்திலிருந்து பேசினார். எல்லா அறிவும் ஏதோ ஒரு மூலத்திலிருந்து வந்ததாகவும் எழுத்தாளர்கள் அவற்றை எழுத்துபூர்வமாக பதிவுசெய்யக் கடமைப்பட்டவர்களாகவும் பதிப்பகத்தார் அந்நூல்களைப் பதிப்பிப்பதை மாபெரும் சேவையாகவும் பொதுவில் ஒரு தியாக பிம்பத்தை உருவாக்குகின்றனர். இதில் எப்போதும் ஏமாற்றப்படுவது எழுத்தாளர்களே. தன் ஆக்கத்தின்மீதும் அசல் தன்மைமீதும் தன் உழைப்பின்மீதும் சந்தேகமில்லாதவர்கள் copyright, royalty பற்றியெல்லாம் மாற்றுக்கருத்து வைத்திருக்க மாட்டார்கள் என ம.நவீன் மேலும் திட்டவட்டமாகவே பேசினார். முகநூல், புலனம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகச்சுலபமாகப் பகிர்வுகள் நடைபெறுவதால் copyright போன்றவற்றை இறுகப்பிடித்திருப்பது எவ்வகையில் சாத்தியப்படும் என அ.பாண்டியன் கேட்டது சற்றே சிந்திக்க வைத்தாலும் copyright, royalty போன்றவை இணையம் பரவலாக்கப்பட்ட காலத்தினூடே ஈடுகொடுத்து முன்னகர்ந்து வந்திருப்பதைக் சுட்டிக்காட்டி விளக்கினேன்.

‘துணைக்கால்’ நூலின் வடிமைப்புப் பற்றி சுட்டிக்காட்டி அதன் குறைகளில் ஒன்றாக கட்டுரைகள் அடுக்கப்பட்ட வரிசையில் சரியான ஒருங்கமைவு இல்லாததை முனைவர் முனீஸ்வரன் குமார் குறிப்பிட்டார். ஆய்வுகளுக்கு உதவும் கட்டுரைகள் அனைத்தையும் ஒரு பிரிவிலும் பொதுவான தலைப்புகளைக் கொண்ட கட்டுரைகளை ஒரு பிரிவிலும் பகுத்திருந்தால் பயனீட்டாளர்களுக்கு உதவியாக இருக்கும் எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து, எந்தக் கட்டுரையிலும் துணைநூல்பட்டியலும், பத்திகளினூடே மேற்கோள்களும் காட்டப்படவில்லை எனவும் முனைவர் முனீஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். ஆய்வாளர்களுக்கே உள்ள மிகப்பெரிய குழப்பங்களில் ஒன்றாக இதைக்கூறலாம். எந்தெந்தக் குறிப்புகளுக்கு மேற்கோள் காட்டவேண்டும் என்றும் பொதுமைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அவை தேவையில்லை என்பதை ஓரளவு விளக்கிவிட்டு இவ்வமர்வை எல்லோரும் கலையா உற்சாகத்துடனே முடித்தோம்.

மூன்றாவது அமர்வு : மண்டை ஓடி
நூலாசிரியர் : ம.நவீன்
நூல் விமர்சனம் : அரு.சு. ஜீவானந்தன், கங்காதுரை
நேரம் : பகல் 4.30 – 6.00 வரை

கங்காதுரை அமர்வில் வாசித்த கட்டுரை இணைப்பு

ganggaசிறு ஓய்வுக்குப் பின் விமர்சன அரங்கில் ம.நவீனுடைய முதல் சிறுகதை நூலான ‘மண்டை ஓடி’ குறித்த விமர்சனமும் விவாதமும் தொடங்கியது. முதலில் அரு.சு.ஜீவானந்தன் மிக சம்பிரதாயமான தொனியில் பேசத்தொடங்கினார். மண்டை ஓடியை வாசித்து அரு.சு.ஜீவானந்தன் விமர்சனக் கட்டுரை ஒன்றை கையெழுத்துப் படிவமாக நிகழ்வின் இரு வாரங்களுக்கு முன்பே தயாஜியிடம் கொடுத்திருந்தார். தயாஜியும் ம.நவீனும் அக்கையெழுத்துப் பிரதியை வாசித்து தட்டச்சு செய்ய முடியாமல் அம்முயற்சியை அத்தோடு கைவிட்டிருந்தனர். நிகழ்வுக்குப் பின்னர் அவரிடமே வாசிக்கச் சொல்லி தட்டச்சு செய்து கொள்ளலாம் என முடிவும் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் விமர்சன அரங்கிற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்த கையேட்டில் அவரது கட்டுரை மட்டும் விடுபட்டுப் போனது. கைவசம் அப்பிரதியை வைத்திருந்த அரு.சு.ஜீவானந்தன் தனக்கே அவ்வெழுத்துக்களை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை எனக் கூறியதும் அரங்கம் கலகலத்தது.

புத்தகத்தின் வடிவமைப்பைப் பற்றி, அதிலும் குறிப்பாக முன் அட்டையில் இருந்த ஓவியத்தைக் குறித்தே முதலில் பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் சில மிக நகைச்சுவையானதாகவும் இருந்தன. முகப்பு அட்டையில் உள்ள ஓவியத்தை வரைந்த ஓவியர் அங்கீகரிக்கப்படாதது குறித்து அரு.சு.ஜீவானந்தன் முதலில் கேள்வி எழுப்பினார். அது கணினியில் வடிவமைக்கப்பட்ட படம் என்றும் அட்டைப்பட வேலைகளை சந்தியா பதிப்பகம் மேற்கொண்டது குறித்தும் ம.நவீன் குறிப்பிட்டார். புத்தகத்தை நாலா பக்கமும் திருப்பிக் காட்டி அப்படம் ஒவ்வொரு திசையில் திருப்பிப் பார்க்கும்போது வெவ்வேறு ஓவியமாகத் தெரிவதாக முனைவர் முனீஸ்வரன் சொன்னார். எப்போதும் மிகத் தீவிரமாக பேசும்போது இதுபோன்ற நட்பான பேச்சுகள் புதுஉற்சாகத்தைக் கொடுக்கின்றன.

அடுத்து, யாருமே எதிர்பார்த்திராத கேள்வியை மீண்டும் முனீஸ்வரன் குமார் கேட்டார். ‘நவீன், இந்த நாட்டுல பலரும் உங்கள் பேரை கேட்டாலே ‘அவன் ஒரு மண்டை ஓடி’ என்று சொல்கிறார்கள். இதுல நீங்களும் மண்டை ஓடினு புத்தகத்துக்கு பெயர் வச்சிருக்கீங்க. புத்தக அட்டையில் வாசிக்கும்போது ‘மண்டை ஓடி’ நவீன் என்றுதான் வாசிக்க முடிகிறது. இதிலிருந்து நீங்க என்ன சொல்ல வர்றீங்க?’

சிரித்தபடியே பதிலளித்த ம.நவீன் “இந்நூலுக்கு நான் தேர்ந்தெடுத்த தலைப்பு வேறு. கதைகளைச் செறிவாக்கம் செய்த எழுத்தாளர் இமையம்தான் இத்தலைப்பை வைக்கும்படி சொன்னார். அச்சொல் தமிழ்நாட்டுக்குப் புதிது என்றும் இது மலேசியாவுக்கென்றே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் சொல் என்றார். பெரும்பாலும் செறிவாக்கம் செய்பவர்களிடம் நான் அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்துவிடுகிறேன். நீங்க சொல்ற மாதிரியே ‘மண்டை ஓடி நவீன்’ என்பதாகவும் இருந்துட்டு போகட்டுமே. 2013ல் குறும்படம் பட்டறையை வழிநடத்த வந்த லீனா மணிமேகலை ‘கொஞ்சம் கிறுக்குத்தனமான தைரியம் இருப்பவர்களால்தான் கலையைத் தயக்கம் இன்றிப் படைக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார். அது முற்றிலும் உண்மை. முழுத் திட்டத்தையும் வடிவமைத்து, பாதகம் எதுவுமில்லை என்பதை உறுதிசெய்துவிட்டுதான் ஒரு கலைவடிவத்தை உருவாக்குவது என்பது சாத்தியப்படாது. அப்படியான பாதுகாப்பு மனநிலையுடன் இயங்குபவர்களால் எப்போதுமே ஒரு படைப்பை உருவாக்க முடியாது. எல்லாத்துக்கும் கொஞ்சம் குருட்டுத்தனமான தைரியமும் நம்பிக்கையும் வேணும். அப்படிப் பார்த்தா நான் கொஞ்சம் மண்டை ஓடிதான்” என்றார்.

பெரும்பாலும் இதுமாதிரியான கேள்விகளை வெளிப்படையாகக் கேட்பதை அனைவருமே தவிர்க்க நினைப்பார்கள். இது தனிமனித தாக்குதலாகவும், நையாண்டியாகவும் மாறிவிடும் அபாயத்தைக் கொண்டதாகும். ஆனால் கேட்டவரும் பதிலளித்தவரும் திறந்த மனதுடன் பேசியது இளைய சமுதாயத்தினர் மிக ஆரோக்கியமான வெளிப்படையான மனதுடன் இயங்குவதைக் காட்டியது.

மண்டை ஓடி கதையில் வரும் மண்டை ஓடிகளான விச்சு, சபா மாமா மாதிரியான ஆட்களை நாம் காலம் முழுக்கவும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அவர்களைப் பல நேரங்களில் நாம் வெறுப்பதும் உண்டு. சட்டென ஒருநாள் நாம் எதிர்பார்க்காததை, நம்மால் எப்போதுமே புரிந்துகொள்ள முடியாத அளவில் செய்து மனதில் இடம்பிடித்துவிடுகிறார்கள். ஆனால் எப்போதுமே அவர்கள் மண்டை ஓடிகள்தான் என அக்கதையின் சாரம் தொட்டு ம.நவீன் மேலும் பேசினார்.

ஒட்டுமொத்தமாக இந்நூலின் கதைகள் அனைத்தும் தோட்டப்புற பின்புலத்தைக் கொண்டு அமைந்திருப்பது 50 ஆண்டுகளுக்கு முன் சங்கமணி இதழில் தோட்டப்புறப் பின்புலத்தைக் கொண்டு படைப்புகள் உருவாகியிருந்ததை அரு.சு.ஜீவானந்தன் நினைவுகூர்ந்தார். குறிப்பாக, கதைகளில் வரும் ஓலம்மா படிக்காத, வலிமையற்ற, பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்ட தோட்டப்புற பெண்களின் குறியீடாக இருக்கிறாள். அத்தகைய பெண்கள் ஆண்கள் தங்களின் பலமாகக் கருதுவதை மெளனமாக இருந்தபடி தாக்குவதை இக்கதையிலும் பார்க்க முடிவதாகவும் சொன்னார். அகதிகளாகவும், அடிக்கடி இடம்பெயர்க்கப் படுபவர்களாவும், போர்ச் சூழலில் வாழும் பெண்கள் மிகக் கொடூரமான முறையில் அடக்குமுறைகளுக்கும் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி ஓலம்மாவை ஒப்பிட்டார். கலந்துரையாடவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கப்படாத பெண்கள் உளவியல் ரீதியாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதை மணிமங்களம் கதையில் வரும் அம்மா கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டுக் காட்டினார்.

மணி என்பது கோயில்களில், வியாபாரிகளிடத்தில் என அனைவராலும் ஒன்றை அறிவிக்க அல்லது அடையாளப்படுத்த பயன்படுகிறது. இப்படியான மணிதான் மங்களம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் தன் இருப்பைத் தொடர்ந்து அனைவரிடத்திலும் நிறுவிக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. மணிமங்களம் கதையை இவ்வாறாக மனோவியல் ரீதியிலிருந்தும் அரு.சு.ஜீவானந்தன் அணுகிப் பேசியது புதிய நோக்கில் அச்சிறுகதையை பார்ப்பதாக இருந்தது.

விமர்சனத்தின் தொடக்கத்தில் தன் எழுத்தை தன்னால் படிக்க முடியாததையும் நினைவிலிருந்து சிலவற்றை பேசுகிறேன் என்பதாகத் தொடங்கிய அரு.சு.ஜீவானந்தன் ம.நவீனின் சிறுகதைகளை சில ஆங்கில இலக்கியங்களுடன் பொருத்திக்காட்டி மிக விரிவாகவே விமர்சித்திருந்தார். நினைவிலிருந்து பேசும்போதே இடைவிடாமல் பேசிக்கூடியவராக இருக்கையில் அவரது சிந்தனை இன்னும் எத்தனை வேகமாக இயங்கியிருக்கும் என்றும் அதனை அப்படியே பதிவுசெய்ய முயற்சித்ததன் விளைவுதான் அக்கையெழுத்துப்பிரதி என்பதையும் பின்பே என்னால் ஊகித்துணர முடிந்தது.

இந்நூல் குறித்து விமர்சனக் கட்டுரை எழுதியிருந்த கங்காதுரை பெரும்பாலும் கட்டுரையின் சாரமான செய்திகள் பலவற்றை மீண்டும் அரங்கில் பகிர்ந்து கொண்டார். இச்சிறுகதை தொகுப்பில் கங்காதுரையை கவர்ந்திருந்த ‘இழப்பு’ சிறுகதை அவ்விமர்சன அரங்கின் புதிய கலந்துரையாடலுக்கு வழிவிட்டிருந்தது. இந்நாட்டில் அரசாங்க மேம்பாட்டுத் திட்டமொன்றால் கட்டாயமாக வேறு இடங்களுக்கு (வசதிகள் குன்றிய அடுக்குமாடி வீடுகளுக்கு) அனுப்பப்பட்ட பலநூறு இந்தியர்களின் நசுக்கப்பட்ட வாழ்வை சிறுவனின் பார்வையிலிருந்து சொல்லியிருக்கும் இக்கதை முக்கியமான வரலாற்று சான்றாகவும் ஆவணக் குறிப்பாகவும் இருப்பதை கங்காதுரை பதிவு செய்தார். ஏற்கனவே புலம்பெயர்வாழ் சமூகமாக வாழ்பவர்களை மீண்டும் வேறொரு இடத்திற்கு துரத்தியடிப்பதால் உண்டாகும் வலியை இக்கதை மிக அழகாகக் காட்டுவதாக வர்ணித்தார்.

கங்காதுரையின் கட்டுரை சார்ந்த விமர்சனப் பகிர்வுக்குப் பின்னர் ‘மண்டை ஓடி’ சிறுகதை நூல் தொடர்பான பொதுவான கலந்துரையாடல் தொடங்கியது. இழப்புக்குப்பின் இன்னொரு வாழ்வு இருக்கும் என்கிற நம்பிக்கையையும் தீராக் கனவையும் ‘இழப்பு’ சிறுகதையின் முடிவில் பார்க்க முடிவதாக அ.பாண்டியன் குறிப்பிட்டார். வாழ்வில் அபத்தங்களை மட்டுமே அனுபவிக்கும் சூழலில் அதற்கு நேரெதிராக மனது எப்போதும் கனவுகளைப் பூக்க வைத்துக்கொண்டே இருப்பதால்தான் வாழ்வு தொடர்கிறது. நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கனவும் வாழ்வை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து வாழ வைக்கிறது என்பதான தத்துவார்த்தப் பார்வையை கோ.புண்ணியவான் கதையின் கடைசி பத்தியிலிருந்து சுட்டிக்காட்டி விளக்கினார். இந்நூலிலுள்ள ‘எனக்கு முன் இருந்தவனின் அறை’ எனும் சிறுகதை சொல்லப்பட்ட விதம் உண்மையில் மிகுந்த அச்சமூட்டுவதாகவும் திகிலை உண்டாக்குவதாகவும் இருப்பதைக் குறிப்பிட்ட மஹாத்மன் மலேசியத் தமிழ் சிறுகதை சூழலில் இது புதிய முயற்சி என்பதாகக் கூறினார். தொடர்ந்து, ‘நெஞ்சுக் கொம்பு’ கதையை அரவான் படத்தில் வரும் ஒரு பகுதியிலிருந்து தழுவி புனையப்பட்டதா எனக்கேட்ட முனைவர் முனீஸ்வரன் குமார் வசதியான கிழவன் ஒருவனுக்கு மனைவியாகும் பெண் தன் காதலனுடன் உறவுகொள்ளும் அத்திரைப்படத்தின் ஒரு பகுதியைக் ‘நெஞ்சுக் கொம்பு’ கதையுடன் பொருத்திக் காட்டினார்.

இல்லையென்று பதிலளித்த ம. நவீன் ‘இலக்கியங்கள் பலவற்றில் இம்மாதிரியான தழுவலும் சாயலும் இருப்பது போன்றான கணிப்புகள் வரலாம். அது அவரவர் வாசிப்பனுபவத்தையும் வாசிப்பு விசாலத்தையும் பொருத்தது. கலை என்பது மனிதனின் உள்ளத்திலிருந்தும் அவன் வாழ்வை எவ்வாறெல்லாம் நோக்குகிறான் என்பதிலிருந்தும் பிறக்கிறது. ஒரு படைப்பாளனுக்குத் தோன்றும் அல்லது உணரும் ஒன்று மற்றொரு படைப்பாளனுக்கும் தோன்றுவதை ஆச்சரியமாகப் பார்க்க வேண்டியதில்லை. இலக்கியம் தோன்றிய காலத்திலிருந்தே நாம் இதைத் தொடர்ந்து பார்க்க முடியும்’ என விளக்கினார்.

‘அணிமிகு மென்கொம்பு ஊழ்ந்த
மணிமருள் பூவின் பாடிநனி கேட்டே’

என்று குறுந்தொகையில் வரும் தலைவியின் இரவின் தனிமைகுறித்தும் அதன் பேரமைதி குறித்தும் இன்றைய நவீன கவிதைகளில் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி எழுதப்பட்டிருப்பதைக் கவிஞர் சல்மா, குழலி வீரன் கவிதைகளில் காண முடிவதை சில கவிதை வரிகளை உதாரணம் காட்டி விவாதத்தை ம.நவீன் சுவாரசியமாக்கினார். மேலும் ‘கலம்செய் கோவே கலம்செய் கோவே’ என்பதாகத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை நவீன கவிஞர்களில் ஒருவரான மனுஷ்யபுத்திரனின் நீங்குதல் தொடர்பான கவிதையையும் ஒப்பிட்டுக்காட்டி இரண்டும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் பாடுபொருளிலும் வாசிப்பனுபவத்திலும் ஒரேவித மனநிலைக்குக் கொண்டு வருபவையாக இருப்பதையும் குறிப்பிட்டார்.

‘மணிமங்களம்’ சிறுகதையில் தந்தையின் கதாபாத்திரம் வலுவுடன் இல்லை என்பதும், வறட்சியாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் ஶ்ரீதர் தனது பார்வையை வெளிப்படுத்தினார். அக்கதையைப் பொருத்தமட்டில் மங்களம் தனது பக்தி மார்க்கத்தை வேறெப்படியாகவும்கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நிகழ்கால winner நிச்சயம் அப்பாவே என சிலாகித்தும் பேசினார். ‘எனக்கு முன் இருந்தவனின் அறை’ சிறுகதையைக் குறித்து பேசிய ஶ்ரீதர் அக்கதையில் ஏதோ ஒன்று குறைவதைப் போலவே இருப்பதை கதை நெடுக உணர முடிவதாக கூறினார். தொடர்ந்து, ஶ்ரீதரின் இவ்விமர்சனம் சிறுகதைகளில் கதைக்களம் (plot) என்பதாக விமர்சன அரங்கை வேறு தளத்திற்கு நகர்த்தியது.

சிறுகதைகளில் கதை உலகம், கதைமாந்தர் என அனைத்தையும் வாசகர் கதைக்களத்திற்கு அப்பாலும்கூட சென்று பார்க்கலாம் எனக்குறிப்பிட்டு, இக்கதை இதை மட்டும்தான் சொல்கிறது என சுருக்கம் கூறக்கூடாதென ஶ்ரீதர் விமர்சித்தார். ம.நவீன் சிறுகதைகளில் வர்ணனைகளும் காட்சி சித்தரிப்புகளும் சிறுகதையின் கதைக்களம் (plot) தாண்டிச் செல்வதாகவும் அவை அவசியமற்றது எனவும் அரு.சு.ஜீவானந்தன் குறிப்பிட்டதன் மாற்றுக்கருத்தாக ஶ்ரீதர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடிவம் மீறிய சில சிறுகதைகளைக் சுட்டிக்காட்டிய ஶ்ரீதர் நேரடியான கதைசொல்லல் முறையில் மட்டும்தான் குவிந்த பார்வை சாத்தியம் என்பதையும் ஒரு கதையை வெவ்வேறாகப் புரிந்துகொள்ள முடியும் என்றால் சம்பவங்களின் அடுக்குகளை விவரிக்க வேண்டிய அவசியமிருப்பதையும் விளக்கினார்.
இதனை Modern Art-னுடைய சோதனை முயற்சியாக வகைப்படுத்திய அரு.சு.ஜீவானந்தன் ‘சில இலக்கியப் பிரதிகளை வாசிக்கும்போது எனக்கு மனதளவில் பேரமைதி உண்டாகிறது. அதற்கு காரணம் அப்படைப்பினுடைய வடிவம்தான்’ என தனது வாசக பார்வையிலிருந்து பேசினார். வண்ணதாசன் போன்றவர்கள் கதைக்களம் நோக்கி நகரும் வடிவத்தைக் கொண்டிருப்பதையும் தன் கருத்துக்குச் சான்றாக்கினார். கதைக்கரு இல்லாமல் இருப்பதும்கூட ஒருவகை கதைக்கரு என்பதாக அவரது விமர்சனம் அமைந்தது. கதை என்பது கதையாக இல்லாமல் சம்பவங்களின் சித்தரிப்பாகவும் எழுத்தாளனின் மொழியாற்றலைக் காட்டும் இடமாகவும் மட்டும் இருப்பதன் தேவை என்ன என்பதாக அவரின் விமர்சனம் கேள்விகளுடன் நின்றது. ம.நவீன் மண்டோவின் ‘திற’ சிறுகதையைச் சுட்டிக்காட்டி இவ்வகை படைப்பு வெறும் சம்பங்களினூடே சொல்லப்பட்டிருப்பதையும், இதில் மன அமைதியைக் காண்பதன் சாத்தியம் என்ன என்பதையும் கேள்வி எழுப்பி இலக்கியம் மனித அபத்தங்களைப் பேசத் தொடங்கியதிலிருந்தே அதன் வடிவம் சார்ந்த கவனிப்பும் மாறியிருப்பதை விவரித்தார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பு வடிவம் மீறியவையாக இருப்பதாகவும், வர்ணனைகளும் காட்சி சித்தரிப்புகளும் நீண்டு செல்வதாக எழுந்த சர்ச்சைகளை நினைவுகூர்ந்தார் ம.நவீன். அதில் யானை டாக்டர் எனும் கதையில் சில வன விலங்குகளின் சித்தரிப்பு கதைக்கருவுடன் சம்பந்தப்படாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டினார். அவை கதைக்கருவுடன் தொடர்புடையதாகவோ, கதைக்கு அவசியமானதாகவோ இல்லாமலிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அக்கதையில் வனமும் அதில் வாழும் உயிர்களையும் கற்பனையில் காட்சியாக முழுவடிவத்துடன் காட்டுகிறது என்பதில் முக்கியமானதென ம.நவீன் தனது பார்வையை முன்வைத்தார். எழுத்தாளர் இமையத்தின் ‘எங் கதெ’ நாவலைச் சுட்டிக்காட்டி எந்த ஒரு வறட்சியான கதையையும் ஒழுங்காகச் செதுக்குவதன்மூலம் அதனை எழுத்தாளனுக்கும் வாசிப்பவனுக்குமான மொழியாக்கிவிட முடியும் எனும் சாத்தியத்தை ஆ.பாண்டியன் முன்வைத்தார்.

தொடர்ந்து, ம.நவீன் தனது வலைப்பதிவில் பதிவேற்றியிருந்த காசியும் கருப்பு நாயும், கோணக்கழுத்து சேவல் ஆகிய இரு சிறுகதைகள் இந்நூலில் விடுபட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக குறிப்பிட்ட கங்காதுரையும் முனைவர் முனீஸ்வரனும் அவை இந்நூலின் உள்ள தோட்டப்புற வாழ்வோடு ஒத்துப்போவதாக இருப்பதாகவும் எனக்கு முன் இருந்தவனின் அறை மற்ற சிறுகதைகளுடன் பொருந்தாமல் நிற்பதையும் குறிப்பிட்டனர். காசியும் கருப்பு நாயும் சிறுகதையின் பாதியிலேயே கதை இன்னதென அனுமானிக்க முடிவதை ஜெயமோகன் சுட்டிக்காட்டியதையும் எழுத்தாளர் இமையம் கோணக்கழுத்து சேவல் சிறுகதையை இத்தொகுப்பிலிருந்து நீக்கியதையும் ம.நவீன் குறிப்பிட்டார். இதனை வாசகர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஏற்பதும் அதுபோல செறிவாக்கம் செய்பவருக்கு அனைத்துவகைச் சுதந்திரம் கொடுப்பதும் மற்றமொழிகளிலும் நடக்கும் Editor, Reviewerக்கான முக்கியத்துவம் தமிழ்ச்சூழலிலும் நடக்க வேண்டுமென ம.நவீன் விரும்புவதன் வெளிப்பாடாகவே காண முடிகிறது. மேலும் ம.நவீன் சிறுகதைகளில் காணப்படும் கோபம், நூலின் சமர்ப்பணத்தில் இடம்பெற்றுள்ள ஆத்தா என்பவர் குறித்தும் சிறுசிறு கேள்விகளும் கூடவே இடம்பெற்றன. இவ்வமர்வின் இறுதியான கேள்வியாக சிறுகதை எழுதும் உத்தி குறித்து எழுத்தாளர் கருணாகரன் கேள்வி ஒன்றை முன்வைத்தார். சிறுகதையின் முடிவை உருவாக்கிவிட்டு கதையை நகர்த்துவதா அல்லது கதையின் நகர்வில் முடிவு தேர்ந்தெடுக்கப்படுகிறதா என்பதாக அக்கேள்வி இருந்தது. கருவைத் தேர்ந்தெடுத்தபின் கதை நகர்வதைப்போல் சில நேரங்களில் கதையோட்டத்தை முடிவும் நிர்ணயிக்கும் சூழலும் உள்ளது என்பதாக பதில் அமைந்தது.

பதிவு அடுத்த மாதம் தொடரும்…

2 comments for “வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 1

  1. March 5, 2016 at 9:13 pm

    அற்புதம்.

  2. sriviji
    March 28, 2016 at 11:29 am

    அழகான தமிழுடன் கூடிய, அற்புத நடையில், நேர்த்தியான முறையில் கோர்வையாக எழுதப்பட்ட மிகநீண்ட கலந்துரையாடல் விமர்சனம். அருமை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...