கேலிச்சித்திரத்துக்கான உச்சம் அதிகாரத்தை நோக்கிப் பாய்வது!

tayaji coverமொத்தம் பதினைந்து தலைப்புகளைக் கொண்டு ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் பத்திகளடங்கிய தொகுப்பு தயாஜியின் முதல் நூலாக வெளிவந்திருக்கிறது. நல்லதொரு ஆரம்பம்தான். இந்த ஆரம்பத்திலேயே படைப்பின் பலத்தையும் பலவீனத்தையும் சார்பற்ற நிலையில் விமர்சிப்பது தொடரும் வெளியீடுகளில் நன்மையைக் கொண்டு வருமென நம்புகிறேன்.

இத்தொகுப்பில் கவன ஈர்ப்பும் முக்கியத்துவமும் கொண்டவையாக ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்’ மற்றும் ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. கனமான விஷயங்கள் கனமில்லாத சொற்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. மற்ற யாவும் அதிமுக்கியமில்லாதவை. அவை வாசிப்பிற்குத் தீனி மட்டுமே ஆகும்.

கேலிச்சித்திரம் என்பது இருபுறமும் கருக்குள்ள கூராயுதம் . பத்தி அல்லது கட்டுரை என்றால் படித்து முடிக்க பொறுமை வேண்டும். இந்தப் பொறுமை கேலிச்சித்திரத்துக்குத் தேவையே கிடையாது. கேலிச்சித்திரம் பார்த்த மாத்திரத்தில் சிந்தனையைக் கிளறக்கூடியது. உடனடித் தாக்கத்தை உண்டாக்கிவிடும். நையாண்டித்தனமும் கேலியும் கிண்டலும்தான் அதன் உருவகம். கேலிச்சித்திரத்துக்கான உச்சம் அதிகாரத்தை நோக்கிப் பாய்வது.

முன்பு, நமது ஆங்கில மலாய் நாளேடுகளிலும் வார மாத சஞ்சிகைகளிலும் சிறிதளவே அரசியல் நையாண்டி கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. கேலிச்சித்திரங்களின் கிண்டலுக்குள்ளான அதிகார வர்க்கத்தின் செவிகளுக்கு ‘மகா கேவலம்’ என்ற ரீதியில் சொல்லப்பட கொதித்தெழுந்தது அதிகாரம். நள்ளிரவில் வட்டமேசைச் சந்திப்பு, நீள்மேசை சந்திப்பு என நிழற்படங்களாய் அரங்கேறின. இதன் விளைவு சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை, சஞ்சிகைகளை அதிகாரவர்க்கம் தங்களின் சொத்துடமையாக்கிக் கொண்டன. கேலிச்சித்திரக்காரனின் கைகளுக்கு வேறு வேலை கொடுக்கப்பட்டு கேலிச்சித்திரத்தின் ஆயுளை முடித்துவிட்டார்கள்.

இன்று அதிகாரவர்க்கத்தின் ஆள் மாறினாலும் இதே கெடுபிடி இன்னுமுண்டு. முன்பைவிட இன்றைய காலக்கட்டத்தில் கேலிச்சித்திரத்திற்கான சங்கதிகள் நிறையவே உண்டு. விசேஷத் தனிப்படையைச் சேர்ந்த காவலதிகாரி நீதிமன்றக் கூண்டில் தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி ‘மேலிடத்து உத்தரவு’ என்றது, இஸ்லாமிய அதிகார இல்லத்தில் கேரள மாந்திரீக யாகம் நடத்தியது, கிரீஸ் கத்தியைக் காட்டி ‘நெருப்போடு விளையாடாதீர்’ என்றது, துடைப்பத்தை வழங்கி கௌரவித்தது, கோடிக்கணக்கான ரிங்கிட்டில் ஒரே ஒரு மோதிரத்தை வாங்கியது, வகை வகையான உயர்தரக் காலணிகளின் சேகரிப்பு, நன்கொடையாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட கோடானுகோடி வெள்ளி. இது போன்று இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவையாவும் கேலிச்சித்திரங்களுக்கு உகந்தவை. வரைந்தால் வயிறு குலுங்கக் குலுங்க கண்களில் நீர் வரச் சிரிக்கலாம். சிரிக்க வைக்கலாம். வரைந்தவர்தான் வாழ்நாள் முழுக்க அழுது கொண்டிருக்கவேண்டும். தேர்வாகி வரும் எந்த மாமன்னர்களிடமிருந்தும் மன்னிப்பும் கிடைக்காது; விடுதலைப் பத்திரமும் தயாராகாது. இதுதான் இங்குள்ள கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமும் ஜனநாயகமும் ஆகும். எந்தவகையிலும் கருத்தைச் சொல்ல இங்கே கட்டுப்பாடுகள் உண்டு. உண்மையைச் சொல்வதென்றால் பெரும்பான்மையான நாடுகளிலும் இந்த நிலைதான்.

சரி.

அதிகாரவர்க்கத்தை நோக்கிக் கேலிச்சித்திரங்கள் வேண்டாம். இஸ்லாமிய போதனைகளை தவறாகப் புரிதல் கொண்டிருக்கும்   ISIS தீவிரவாதிகளைக் குறித்து இங்கிருந்தே நையாண்டி கேலிச்சித்திரத்தை வரைந்தாலே போதும், பயங்கரமான விதத்தில் மரணம் உங்களுக்கு நேரிடும். அதுவும், உங்கள் மரணத்தின் விதத்தை காணொளியில் கண்டு பீதியடைவார்கள். இப்படியிருக்கையில் எவன் கேலிச்சித்திரத்தை வரைய முன் வருவான்?

மறுபடியும் தயாஜியின் கேலிச்சித்திரத்தின் பத்திக்கே வருகிறேன். பொது இடத்தில் ஒரு பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும்போது காவலாளியும் காவல்காரரும் வந்து அது குற்றம் என்கிற கேலிச்சித்திரத்தைக் குறித்தானது. பக்கத்தில் ஆபாசப் பெண்ணின் உடை விளம்பரப் பலகை.

இந்த நாட்டில் பொது இடங்களில் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவது குற்றமே கிடையாது. ஓர் இந்தியப் பெண்ணோ ஒரு சீனத்துப் பெண்ணோ பொது இடத்தில் தாய்ப்பாலூட்டி நான் பார்த்ததில்லை. அநேக முறை பொது இடங்களில் மலாய் பெண்களே தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டுகின்றனர். நல்லது.

ஓர் ஆண் மர்மப்பகுதியை மட்டும் மறைத்துக்கொண்டு கடையில் பொருளை வாங்குவதற்கு நடந்து செல்லும்போது, அவ்வழியே ஒரு மசூதி, ஒரு தேவாலயம், அல்லது ஓர் இந்துக் கோவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சிலர் நாகரீகத்துடன் கைபேசிகளில் படம் பிடித்து முகநூலுக்கு தீனி கிடைத்ததைப் போல அனுப்பி வைப்பார்கள். வேறு சிலர் அதே படத்தை காவல் துறையினருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடு என்பார்கள். இன்னும் சிலர் தங்களுக்குள் நெடுங்காலமாய் உறக்கத்தில் வைத்திருக்கும் மிருகத்தை தட்டியெழுப்பி அந்நபர் மீது பாய்ந்து பிராண்டி விடச்செய்வார்கள். இதுவே தொலைக்காட்சி விளம்பரங்களிலும் சாலையோர விளம்பர பலகையிலும் காண நேரிட்டால் குற்றம் என்று நாம் நினைத்தாலும் குற்றம் கிடையாது. ஏனெனில், வணிக நிறுவனங்கள் அரசாங்கத்தோடு ஒப்பந்தகளிலும் உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டு அரசு முத்திரையைப் பதித்து வலது இடது கரங்களில் கோப்புகள் இடம் மாறி அனுமதி பெறப்பட்டவையாகும். எனவேதான், பட்டணத்தில் முக்கிய வணிக வளாகத்தின் வாசலிலும் பேரங்காடிகளின் சுவர்ப்பக்கங்களிலும் வண்ணமயத்தில் ஒய்யார அழகிகள் தங்களின் சிரைக்கப்பட்ட அக்குளைக் காண்பித்து, காமப் பார்வை ஒன்றை வீசி வாசனைத் திரவியத்தின் பொட்டலத்தைத் தொட்டுச்செல்கின்றனர். இங்கே காண்பிக்கப்படும் எல்லாவிதமான ஆபாச அசைவுகள் எல்லாம் சட்டப்படி செல்லுபடியானவை. இம்மாதிரியான சூழ்நிலையில் நமது அறச்சீற்றம் எங்கனம் எடுபடும்.

அகற்றப்பட்ட அவசியமற்ற ஆயுதம். ‘ஒம்போது’ என்றும் ‘பொண்டான்’ என்றும் ‘பாப்போ’ என்றும் ‘அரவாணி’ என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படும் இவர்களுக்கு சமீப காலத்தில்தான் இந்திய நீதிமன்றம் ஒன்று சமூகத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அது எந்தளவு என்ற கருத்தோட்டங்கள் முழுமையாய் அறிய இயலவில்லை. அடையாள அட்டையில் பெயர் மாற்றம், வேலை வாய்ப்பு, வீடு வாங்கும் உரிமை, சொந்த வியாபார விண்ணப்பம், கோவிலுக்குச் செல்லுதல், பதவி உயர்வு, திருமணம், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற பல விஷயங்களில் நிராகரிப்பு இருந்து வந்துள்ளது.

நமது நாட்டில் அடையாள அட்டையில் பெயர் மாற்றம், மசூதிக்குச் செல்லுதல், திருமணம் மற்றும் குழந்தையை தத்தெடுத்தல் போன்றவை முடியவே முடியாத காரியம். காரணம், நாட்டின் அதிகாரத்துவ மதமான இஸ்லாம் அனுமதியளிப்பதில்லை. எதிர்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை.

’சவ் கிட்’ ஆஷா என்பவர் சொத்து வாங்குதல், நகை நட்டு சேர்த்தல், கோவிலுக்குச் செல்லுதல் (துர்கா, கூத்தாண்டவர்) தத்தெடுத்தல் ஆகிய விஷயங்களில் வெற்றி பெற்றவர். 15 வயது முதல் 18 வயது அரவாணிகளை தத்தெடுத்து 15 முதல் 35 ஆயிரம் ரிங்கிட் வரை செலவு செய்து தாய்லாந்துக்கும் சிங்கப்பூருக்கும் அனுப்பி வைத்து அறுவை சிகிச்சை செய்வித்து வயது வந்த பெண்ணுக்குச் சடங்கு சம்பிரதாயம் செய்வதுபோல மிகவும் பிரம்மாண்டமான விழாவாக தன் இருப்பிடத்தில் நடத்திக் காட்டினவர். அறுவை சிகிச்சைக்குப் பிறகே இவர்கள் ‘திருநங்கை’ என அழைக்கப்பட்டனர்.

கோவில் பணிகளுக்கெனவும் தாசிகளுக்குத் தோழிகளாக பணிவிடை செய்யவும் கோவில்களில் சேர்க்கப்பட்டவர்கள். ஆண் அதிகார வர்க்கம் தங்களின் கீழ்த்தரமான இச்சைகளுக்கு திருநங்களைப் பலிகடாவாக்கினார்கள். ஒடுக்கப்பட்ட இவர்கள் ஒரு காலகட்டத்தில் மதத்தின் பேராலே கோவிலில் இருந்து விரட்டப்பட்டார்கள். மதத்தின் அதிகாரவர்க்கம் இவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து சமஸ்கிருத மந்திரங்களை எப்போதும்போல ஓதிக்கொண்டிருந்தது. இது முன்னொரு காலத்தின் இந்திய வரலாறு.

இன்றைய சூழலில் நூறு பேரில் ஒருவருக்கு என்ற சதவீதத்தில் கல்வியறிவு வைத்திருக்கிறார்கள். இரவில் ஆண் வாடிக்கையாளர்களுக்காக காத்து நிற்கிறார்கள். அதே வேளையில் எல்லாவித போதை வஸ்துகளின் வைப்பகமாகவும் இருக்கிறார்கள்.   விநியோகமும் நடப்பதுண்டு. வருகின்ற வருமானத்தில் ஒரே ஒரு காரியத்தை வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி செய்தே விடுகின்றனர். தங்கம் சேர்ப்பதுதான் அது. தங்கத்தோடு, தங்கச்சங்கிலி, தங்க மூக்குத்தி, தங்க வளையல்கள் இன்னும் எந்தெந்த வகையில் முடியுமோ அத்தனை வகையிலும் செய்து போட்டுக்கொள்வார்கள். போடட்டும், நமக்கென்ன? ஆனால் கிலோ கணக்கில் சேர்த்து சேர்த்து வைத்த தங்கத்தை விற்று சொந்த வியாபாரம் செய்து தங்களை உயர்த்திக்கொள்ளும் எண்ணமே இல்லாமலிருக்கிறது. மீண்டும் மீண்டும் அதே தொழில். சிறை நுழைவின் எண்ணிக்கை அதிகரிப்பு. இவர்கள் இப்படியே இருந்தால் எந்தத் தைரியத்தில் நீதிமன்றம் இவர்களுக்குத் தத்தெடுக்கும் உரிமையை வழங்கும்? இவர்கள் கேட்பது இவர்களுக்கு நியாயமாகப்படுகிறதா? குழந்தை வளரும் சூழல், குழந்தையின் கவனிப்பு, குழந்தைக்கான பராமரிப்பு, குழந்தை வளரும்போது கல்வியின் கட்டாயம், பாதுகாப்புக்கான உத்திரவாதம் போன்ற விஷயங்களை நீதிமன்றமோ அனாதை இல்லமோ பரிசோதிக்காதா? கல்வியறிவின் போதாமையும் அறியாமையும்தான இதற்கெல்லாம் காரணம் என்கிறபோது இவர்களின் அறச்சீற்றம் வீரியமிழந்துவிட்டதென அர்த்தப்படுகிறது.

‘விவேகானந்தரும் விலைமாதர்களும்’ என்னும் பெரும் பத்திக்குக் கீழ் ‘வாசனையுள்ள அறைகள்’ என்ற சிறுபத்தியை இணைக்கிறேன், இரண்டும் ஒரே நேர்க்கோட்டு அனுபவங்கள்.

‘வாசனையுள்ள அறைகள்’ என்ற பத்தியின் ஆரம்ப வரியாக புக்கிட் பிந்தாங் என்று சொல்லிவிட்டு கீழே மறுபடியும் பிரிக்பீல்ட் என்று சொல்லிப்போவது கொஞ்சம் குளறுபடியாக இருந்தாலும் இரண்டிலும் விவரிக்கப்படும் அனுபவம் ஒன்றுதான். பாலியல் தொழில்.

பாலியல் தொழிலாளியை அணுகும் முதல்படி ‘விவேகானந்தரும் விலைமாதர்களும்’ என்றால் இரண்டாம் படி ’வாசனையுள்ள அறைகள்’ என்பேன். தனக்கு நேரிடப்போகும் ஆபத்தை முன்கூட்டியே யூகித்து தீர்மானித்திருந்ததால் பாதுகாப்புக்கென காவல்துறை நபரும் நிருபரும் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. தயாஜி அப்போது வகித்திருந்த அரசாங்கப் பதவி கைகொடுத்திருக்கிறது. நல்லவேளை. இல்லையென்றால் அங்குள்ள அராஜகக் கும்பல் இவரைப் பிச்சி பேன் பார்த்திருப்பார்கள்.

வாசனையுள்ள அறைகள். ஒரு பெண் பாலியல் தொழில் செய்துகொண்டே தாயாகிறாள். மகள் வளர்க்கப்பட இத்தொழில் மூலம் கிடைத்த பணம் உபயோகப்படுகிறது. மகளும் ஒருவனை மணந்து அந்த வட்டாரத்திலேயே வசிக்கிறாள். அவள் புருஷனும் அங்கே உள்ள விலைமாதர்களிடம் போய் வருவதை தாய் பார்த்துவிடுகிறாள். மகளிடம் சொல்லியும் ஒன்றும் எடுபடவில்லை. தாயைப் பார்க்க நேரிடும்போதெல்லாம் மகள் மகா வெறுப்படைந்து முகக்கசப்பைக் காண்பிக்கிறாள். தாய் ஆதங்கப்படுகிறாள். நான் கேள்விப்படாத கதை இது என்றாலும் தாயின் அறச்சீற்றம் நியாயமானதா அல்லது மகளின் அறச்சீற்றம் நியாயமானதா என்ற கேள்வியே என் முன் நிற்கிறது. தாயின் பார்வையில் எடுத்துக்கொள்வதா அல்லது மகளின் பார்வையை எடுத்துக்கொள்வதா என்ற குழப்பம் எனக்குள் ஏற்பட்டது.

தாயின் பார்வை; பாவத் தொழிலேயேனாலும் இதில் சம்பாதித்த பணத்தில்தானே நீ வளர்ந்தாய்..?

மகளின் பார்வை; இப்படிப்பட்ட பாவத்தொழிலைச் செய்தா என்னை வளர்த்தாய்.. ஐயோ கருமம் .. ச்சீ..ச்சீ..

அறச்சீற்றம் இவர்களில் யாருக்கு சரியாய் பொருந்தும்…?

‘கம்பிகளுக்கு உள்ளே’ என்ற சிறைக்கைதியின் பத்தி வரவேற்கத்தக்கது. நெடுங்காலமாய் சிறைத்தண்டனையில் இருந்துவரும் கைதிகளை நேர்காணல் செய்வது தீமிதித்துப் போவது போன்றது. அவர்களின் அருள் கிடைத்தால்தான் தீ ஒன்றும் செய்யாது. நல்லவேளை, கண்கள் சிவந்ததோடு போயிற்று.

சிறைக்கம்பிகளுக்கு நடுவே ஆயிரமாயிரம் கதைகள் நிரம்பிக்கிடக்கின்றன. அவை எல்லாவற்றிலும் அறச்சீற்றத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு முற்றுப்புள்ளிபோல தயாஜிக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், பேட்டியை அப்படியே உரையாடலின் எழுத்து வடிவத்திற்கு கொண்டு வந்திருந்தால் பத்தி சிறப்பைப் பெற்றிருக்கும் என்பது என்னுடைய அவதானிப்பு.

’சேவை வணிகம்’ என்ற பத்திக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தனித்துவாழும் இவர்களைப் போன்றோருக்கு உதவ முடிந்தால் உதவ வேண்டும், இல்லையேல் உதவியைப் பெற்றுத்தர வேண்டும்.

‘மாய மான்கள்’ பத்திக்காகப் பாராட்டுகள் என்று சொல்ல வேண்டும்தான். ஆனால் முடியவில்லை. மனிதாபிமானத்தையும் மனசாட்சியையும் கழற்றி வைத்துவிட்டு இவர்கள் செய்யும் அநியாயங்களை இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கி எழுத்தில் படம் பிடித்து காட்டியிருக்க வேண்டும். விலைமாதரிடம் பேட்டி காண உதவிக்கு வந்த காவல்துறை நபரும் பத்திரிகைத்துறை நபரும் வராதது ஏன்? இந்த பத்திக்கான ஆதங்கம் இந்தக் கேள்வியில்தான் தொக்கி நிற்கிறது.

இறுதியாய், ‘வெறும் செருப்பு’ என்ற பத்திக்கு வருகிறேன். MH 370 விமானம் காணாமல் போன அன்று தயாஜி மர்லின் மன்றோவின் புகைப்படத்தை முகநூலில் போட்ட காரியத்தை யோசித்துப்பார்த்தேன். தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒன்றுக்காக ஏன் நாம் அலட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். ஆனால் அதற்காக நாடே அதிர்ச்சியிலும் சம்பந்தப்பட்டவர்கள் பெருந்துயரத்திலும் இருக்கும்போது ஒரு எழுத்தாளனின் இச்செயல் நீசப்பார்வை கொண்டது. உங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்கள், நெருங்கிய உறவுகள் அவ்விமானத்தில் இருந்து காணாமல் போயிருந்தால் மர்லின் மன்றோவின் படத்தையா முகநூலில் போடுவீர்கள்? மனக்கட்டமைவுகளின் தற்சிதைவு என்பது மனங்கொள்ளத்தக்கது.

நீங்களும் நானும் மலேசியத் தமிழ் தீவிர இலக்கியத்தை முன்நகர்த்துபவர்களாக இருக்கிறோம். ஆங்கில சொற்களின் கலப்பு தேவைதானா என்று யோசியுங்கள். உரையாடலில் வரலாம், ‘slowdown he is getting angry’ இதைக்கூட அதன் உட்கிடை நிமித்தம் ஏற்றுக்கொள்ளலாம். கார்ட்டூன், பஞ்ச் பேசுவது, பியர், பியர் புட்டிகள், ஹோர்ன், இன்பாக்ஸ், வேன், ஷாப்பிங்க் , கார்டூனிஸ்ட், வீடியோ கேம், நோட்டீஸ், செக்ஸ், மைலோ டின், உணவகக் கவுன்டர், ஜீன்ஸ் சட்டை, script, பிளாஸ்டிக் , நம்பர் எழுதும் கடை, மருந்து பாட்டில்கள், பௌடர் டின், ஏஜண்டு, சிகரெட், சினிமா, கண்ணாடி கிளாஸ், போலிஸ்காரன், ஆகிய சொற்களுக்கு தமிழில் வார்த்தை இல்லையா.? தேடுங்கள். விசாரியுங்கள். அகராதியைப் பாருங்கள். உங்களின் சொற்சேகரிப்புக் குறிப்பேடுகளைப் பாருங்கள். இல்லையா..? உருவாக்குங்கள். படைப்பாளன்தானே உருவாக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறான். நாம் படைப்பாளர்கள். புதுச்சொற்களையும் படைப்போம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...