எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார்.
எழுத்துலகில் புதிய அறிமுகம் என்றாலும் எழுத்து இவருக்குப் பழைய நண்பன் என்பதை அவருடைய பள்ளிப் பருவ எழுத்து வாழ்க்கை குறித்துப்பேசும் கட்டுரைகள் வழி அறிய முடிகிறது.
மிமிக்ரி செய்வதில் கைதேர்ந்த கலையைக் கொண்டுள்ள எழுத்தாளர் தயாஜி, மிமிக்ரி திறனை வளர்த்துக்கொள்ள கதாப்பாத்திரங்களின் ஆளுமையை உள்வாங்கி அவர்களின் குரலை வெளிப்படுத்துவதைப்போல அவர் வாழ்கையில் சந்தித்த அனுபவங்களை அதன் நிகழ்வுக் காலத்தை எந்த சுவையூட்டியும் இன்றி அப்படியே நமக்குப் பரிமாறியிருப்பது கட்டுரையின் பலமாக இங்கே காண்கிறேன்.
தயாஜியின் எழுத்துத் தேடல்கள் ஒளிபுகா இடங்கள் வரை சென்று இருண்ட இடங்களில் நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்களின் மறுக்கப்படும் குரலை ஒலித்திருக்கிறது. வானொலிப் பணிக்காக அவர் தயாரித்த கண்ணாடித் துண்டுகள் நிகழ்ச்சிகள் குறித்து எழுதப்பட்ட சம்பவங்களும் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கருப்பொருளும் இருண்ட வாழ்கையின் அவலங்களையும், அந்த அவலங்களைக் காது கொடுத்துக் கேட்க மறுக்கும் மனங்களையும், சம்பவங்கள் வாயிலாக நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் தயாஜி . ” உண்மையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, அழுகைகளுக்கும் சாபங்களுக்கும் கையாலாகாத்தனத்திற்கும் இடையேதான்”. “மூக்கை மூடும் பிரதேசங்களை நோக்கிதான் குறிவைத்தேன்” போன்ற வரிகள் பேசப்படாத சமூகத்தை நோக்கிப் பேசும் தயாஜியின் உண்மையான எழுத்துப் பணியைப் புலப்படுத்துகிறது. கார்பெரெட் உலகத்தையும், சினிமா பிம்பங்களையும் காட்டுவதிலேயே கண்ணாக இருக்கும் ஊடகங்கள் மத்தியில் “மூக்கை மூடும் பிரதேசங்களை நோக்கிதான் குறிவைத்தேன்” என்று கூறி இருக்கும் தயாஜி ,சிறைக் கைதி, திருநங்கை, தனித்து வாழும் தாய், பாலியல் தொழிலாளி ஆகியோரைச் சந்தித்துப் பகிர்ந்து கொண்ட அனுபவக் கட்டுரை குப்பைத் தொட்டிக்குள் வாழ்க்கை நடத்துபவர்களை மூக்கை மூடாமல் எட்டிப்பார்க்க வைக்கிறது.
அகற்றப்படும் அவசியமற்ற ஆயுதம்
26 வயது திருநங்கையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அவரின் குடும்பம், பணத்துக்காகக் காதலனாக நடித்துக் கம்பி நீட்டி விட்ட காதலன், ஆகியோரின் நிராகரிப்பு வெளியே சொல்ல முடியாத தொழிலுக்கு விட்டு விடுகிறது. உணர்வால் ஆணில்லை என்று உணர்ந்து வாழும் திருநங்கைகளை குடும்ப அந்தஸ்து எனும் பேய் பிடித்து ஆட்டுகிறது. இவர்களுக்குக் குடும்பம் என்று அமைவது குதிரைக் கொம்பு. ஆனால் இவர்களிடம் அன்பு காட்டி பணத்தைச் சுரண்டுவது சுலபம் என்று அறிந்திருக்கும் உழைக்காத வர்க்கங்களின் நயவஞ்சகத்தனத்தில் அதிகமாக அடிபடும் திருநங்கைகள் குறித்து கட்டுரையில் பதிவாக்கப்பட்ட அனுபவங்கள், அவர்களுக்குக் குரல் கொடுத்துப் பேசியுள்ளது. தாய்மை, காதல், குடும்பம் என்று வாழ நினைக்கும் இவர்களை சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பு இருண்ட சந்துகளில் தள்ளிவிடுகிறது. சமூகத்தால் தள்ளிவிடப்பட்ட இவர்கள் குற்றவாளிகளா? எனும் கேள்வியை திருநங்கையின் உரையாடல்களில் கேள்வியாக எழுப்பியுள்ளார் எழுத்தாளர்.
கம்பிகளுக்கு உள்ளே
சிறைக்கைதி உடனான பேட்டியில், அவரிடம் கேள்விகள் அறிவுரை சொல்லும் கோணத்தில் முன் வைக்கப்படுகிறது. கொலைக் குற்றம் கொண்ட கைதியின் வாழ்க்கை அவன் அனுபவிக்கும் தண்டனையைவிட, உறவுகள் அவனை நிராகரிக்கும் தண்டனை தாங்க முடியாத ஒன்றாகும். அவனைக் காண யாரும் வருவதில்லை. அன்று வந்திருப்பவர் அவரைப் பேட்டி காண வந்த ஊடகவியலாளர். கைதியை குற்றவாளியாக நோக்கியதால் அவருக்கு அறிவுரை சொல்லும் வகையில் பேட்டியாளர் கேள்விகளை முன்வைக்கும்போது கைதி கோபம் அடைகிறார். இதனைப் புரிந்துகொண்டு கேள்விகளை நிறுத்தி அவரைப் பேச வைக்கிறார் பேட்டியாளர். குடியால் மனைவியை இழந்தார், கொலையால் குடும்ப உறவுகளை இழந்தார். மகளும் அவரைக் காண வராத துன்பம் அவரை வாட்டி வதைக்கிறது. சூழ்நிலைக்குப் பலியாகும் பலவீனங்களால் குற்றம் புரிந்து தண்டனைகளை அனுபவிக்கும் அந்தச் சிறைக்கைதி தேடுவது உறவுகளை. சிறைக்கம்பிக்குள் விடுதலையை அனுபவிப்பது உறவுகள் வந்து போகும் தருணங்களே. இதனை இழந்த சிறைக்கைதிக்கு நிரந்தர விடுதலை நாட்களை எண்ணுவதில் என்ன இருக்கிறது? என்பதனை சிறைகைதியின் உடனான சந்திப்பில் பதிவாக்கப்பட்ட அனுபவ எழுத்துகளால் வாசகனைத் துலங்கச் செய்கிறார்.
“புருவம் மட்டும் இல்லையென்றால் எதிரில் பேசுகிறவரின் எண்ணங்களை எப்படித்தான் புரிந்து கொள்வதோ?” என்று நாசுக்காக முன் வைக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் முகமூடி போட்டிருக்கும் மனிதர்களின் போலித்தனத்தைச் சாடுவதாக அமைகிறது.
சேவை வணிகம்
தனித்து வாழும் யுவதிகளுக்கு உதவி புரிகின்றோம் என்ற பெயரில் அவர்களைப் படுக்கை அறைக்கு அழைக்கும் சந்தர்ப்பவாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி என்பது கொடுக்கல் வாங்கல் வணிகமாக மாறி விட்டதை தனித்து வாழும் தாய் பரிதவிப்பில் உணர்த்தியிருக்கிறார் எழுத்தாளர். உதவி கேட்டு நாடும் மாதை ஹோட்டலுக்கு வா என்று அழைக்கும் உதவிகள் பெண்களுக்குச் சவாலாகவே உள்ளது. பெண்களும் வேலை செய்யவேண்டும். வேலையில்லாப் பெண்கள் தனித்து வாழும் தாய்மார்களாகும் வேளை, பெரிய மனிதர்கள் என்று நம்பியிருக்கும் மனிதர்களிடம் உதவி கேட்கும்போது அங்கே ” உன்னைக் கொடு உதவி செய்கிறேன்” என்று வணிகம் பேசப்படுகிறது. பெண்களைப் பாலுணர்வோடு பார்க்கும் பெரியமனிதர்களைக் காட்டிக் கொடுத்தாலும் அவர்களிடம் உள்ள செல்வாக்கு அவர்களைக் காட்டிக் கொடுக்காது.
மாய மான்கள்
சந்தர்ப்பச்சூழலை விலைபேசி வணிகம் செய்யும் பொருளாதாரத் தேடலுக்குத் தீனியாகும் சிறுவர்களின் வாழ்க்கையைத் தொட்டு எழுதப்பட்ட எழுத்துச் சம்பவங்கள் வாசகர்களுக்கு அறிமுகமானதாக இருக்கலாம். இருப்பினும் இவர்கள் வாழ்கையின் மூலம் எங்கே தொடங்குகிறது? இவர்களின் பின்னணி என்ன என்பதை உளவுபார்த்துத் தந்திருக்கும் எழுத்தில் படைப்பாளனின் உழைப்பைக் காண முடிகிறது. ஒரு தனிப்பட்ட வணிகக் குழு வறுமைப் பிடியில் இருக்கும் சிறுவர்களைப் பயன்படுத்தி வயிறு வளர்ப்பதை தமது கட்டுரையில் காட்டியிருக்கிறார். கற்றுத்தரப்படும் வசனங்களைப் பேசி ,பொருட்களை விற்று, மூன்றாம் தரப்புக்காகச் சில்லறைகளைச் சேகரிக்கிறார்கள் சிறுவர்கள். ஏற்றிச் செல்லும் வேனிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது நாம் செய்யும் உதவி என்று கூறும் எழுத்துகளின் மனசாட்சி “சில்லறைகள் அவர்களைக் காப்பாற்றாது” என ஒலிக்கிறது.
வாசனையுள்ள அறைகள்
பாலியல் தொழிலாளியைப் பேட்டி காண எழுத்தாளர் கையாண்ட “சூழ்ச்சி” வாசகனுக்கு கொஞ்சம் அதிருப்தியைக் கொடுத்திருந்தாலும், அவள் படும் பாட்டை, ஆபத்தான உளவு வேலைக்குப் பின் நமக்கு அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கும் செய்தியின் உழைப்புக்கு மார்க்குகள் கொடுத்துதான் ஆகவேண்டும். 15 வயதில் ஆடவரிடம் காதல் வயப்பட்ட பெண் அவனோடு கோலாலம்பூருக்கு ஓடி அங்கே சீனத் தவுக்கேவிடம் விற்கப்படுகிறாள். போதை மருந்து ஏற்றப்பட்டு பலர் அவளுடன் படுத்து எழுந்திருக்கும் நிர்வாணக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அதனையே மிரட்டலாகக் காட்டி பெண்ணைப் பணிய வைக்கும் சீன தவுக்கே அவளைப் பாதுகாக்கும் நல்லவனாக மாறுகிறான். வயது கடந்து விட்டதால் தவுக்கே கவனிப்பு தளர்கிறது. தொழிலை விட்டுப் புதிய வாழ்கையை ஆண் துணையோடு தொடரலாம் என்று நம்பி பிள்ளையைப் பெற்றுக் கொள்கிறாள். அவனும் ஓடி விடுகிறான். மீண்டும் தொழிலுக்கு வந்து சேருகிறாள். தமிழன் விற்றான். சீனன் வளர்த்தான். தோட்டப்புற வாழ்க்கை தொட்டே தமிழனின் பலவீனங்கள் சீனனின் பண வேட்டைக்குப் பலியாகிய நினைவுகளை முன் நிறுத்துகிறது தயாஜியின் இந்தப் பதிவுகள். நிர்வாணமாக்கப்பட்டு படம் எடுத்த சீனன் போட்ட சோறும் கவனிப்பும் அவனை நல்லவனாக மாற்றியது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு. பணத்தால் மனத்தை மாற்றும் மந்திரம் தெரிந்தவர்கள் கடவுள் போன்ற அந்தஸ்தை பெற்றுவிடும் உலக நடப்பை இங்கே காட்டப் படுகிறது. பாலியல் தொழிலில் மாட்டிக்கொண்டு விடுபடமுடியாமல் இருக்கும் சூழலை இம்மாதுவின் வழி நமக்குச் சொல்லப்பட்ட விதம் எதார்த்தம். ” படுத்துக் கிடச்ச பணத்துலதான் அவளை வளர்த்தேன். இப்ப என்னமோ தெரியாத மாதிரியே போறா. அவ புருசனையே பல தடவை இங்கே பார்த்திருக்கேன். ஒன்னுமே மொளைச்சிருக்காது பொம்பள சுகம் கேட்குது பாருங்க ” போன்ற வசனங்களின் பதிவுகள் வாசக மனங்களைப் பாதிக்கிறது. “இருட்டில் இருக்கும் அவர்களுக்கும் வெளிச்சத்தில் இருக்கும் நமக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை” என்று எழுத்தாளர் கூறியுள்ளார். செயலால் மட்டுமே நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி தெரிகிறது.. மனத்தால் அவர்களும் நம்மைப்போலவே கனவுகளைத் தேக்கி நிற்பவர்கள். இருண்ட உலகத்துக்குள் செல்லும் நேரம் வராத வரைக்கும் நாம் அவர்களோடு வித்தியாசப்படுவோம். நேரமே அதற்கான இடைவேளி என்று வாசகனுக்கு உணர்த்துகிறார் தயாஜி.
விவேகானந்தரும் விலைமாதரும்
தயாஜியின் விவேகானந்தரும் விலைமாதரும் கட்டுரையில் உயிரற்ற சிலைகளுக்குப் போராடும் கூட்டத்தையும், நரகத்திலிருந்து விடுதலைக் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் பாலியல் தொழிலாளர்களையும் வெவ்வேறு கோணங்களில் நிற்கவைத்துப் பேசுகிறது. வெளிச்சத்தில் இருக்கும் விவேகானந்தரின் சிலையைக் காணுபவர்களுக்கு இருட்டில் வாடும் பிரிக்பீல்ட் பெண்களின் ஓலங்கள் கேட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். இங்கே கணிசமான இந்துப் பெண்கள் உள்ளனர் என்று எழுத்தாளர் கொடுத்திருக்கும் தகவல் , அங்கே சிலையைக் காப்பாற்ற நினைக்கும் இந்து மதக் கூட்டத்திற்கு வைக்கப்படும் தர்க்கமாக உணர்கிறேன்.
கட்டாயப்படுத்தப்பட்டு தொழிலுக்குக் கொண்டுவரப்பட்ட இவர்களுக்காகப் போராடுவதற்கு யாரும் இல்லை. “விவேகானந்தரின் சிலையின் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இருண்ட பிரதேசம் தெரிவதே இல்லை” என்ற வரிகள் சாட்டையால் அடிக்கிறது. உயிரற்ற சிலையின் பழமையைக் காக்கப் போராடும் கூட்டத்திற்கு அந்த இருட்டறை தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அந்த இருட்டறையிலிருந்து விவேகானந்தரின் தலைப்பாகையை முதன் முதலாகப் பார்த்ததாக எழுத்தாளர் கூறியிருக்கும் அனுபவங்கள் நமக்குள் பல தேடல்களைத் தூண்டுகிறது. ஒழுக்கத்தைக் கட்டமைத்துக்கொண்டு வாழும் மனிதக்கூட்டங்களில் காண முடியாத சமத்துவத்தை இங்கே காணலாம் என்று குறிபிட்டுள்ளார் தயாஜி. மொழி, இனம், மதம், வயது அனைத்திலும் பேதமை பாராமல் வந்துபோகும் வாடிக்கையாளர்களை வரவேற்கும் இருண்ட உலகத்தில் சுரண்டல்கள் இல்லை.
சாதி மயிர்
முடி திருத்துபவரும் ஆசிரியரும் மாணவனின் மனவோட்டத்தில் சமநிலையில் காணப்படுகிறார்கள். இருப்பினும் சாதியப் பேய்கள் ஆட்டிப்படைக்கும் சமூகத்தில் தீண்டாமைக் கொடுமை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவன் கொடுப்பதை உண்ணாதே, குடிக்காதே என்று சாதிக்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தீண்டாமையின் கொடுமையானது பாதிக்கும் மனங்களில் தழும்புகளை ஏற்றி விடுகிறது. தீண்டாமைக்கொடுமை சாவதைவிடக் கொடுமையானது. சீனன் கடையில் முடியை வெட்டச் சொல்லும் அப்பன் தமிழனை சாதி வேறுபடுத்திப் பார்த்து மகனை விலகி இருக்கச் சொல்லும் சம்பவங்களின் வழி தமிழனின் பொருளாதாரத்தைத் தடை செய்துகொண்டிருப்பது சாதியத் தமிழனே என்பதைச் சாதி மயிர் கட்டுரை மூலம் காட்டியிருக்கிறார் படைப்பாளி.
“வெட்டி வீசப்படும் மயிரில் சாதி பார்க்கும் இவர்களால் எதிர்கால சந்ததியினரின் மனம் கெடாமல் இருக்க வேண்டும்” என்று கூறும் வார்த்தைகளில் எழுத்தாளரின் கோபம் உணரமுடிகிறது. ஜாதி பார்க்காத வெள்ளை மனங்களில் சாதி விஷத்தை ஏற்றும் சாதியக்காரர்களின் நடவடிக்கை குறித்து வருத்தத்தைத் தெரிவிக்கும் தயாஜி சாதி மயிரைப் பிடித்துத் தொங்குபவர்களிடமிருந்து எதிர்காலத் தலைமுறை காப்பற்றப்படவேண்டும் என்று கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
ஆண்குறி சுடும் போட்டி
விளையாட்டுக்குப் பச்சைக் கம்பளம் விரித்துக் கொடுத்த தோட்ட வாழ்கையில் கிடைத்த இன்பத்தை ஆண்குறி சுடும் போட்டி எனும் கட்டுரையில் பதிவாக்கியிருக்கிறார் தயாஜி . பச்சைப் பசேல் எனும் பெரிய திடலில் ஆண் பெண் பேதமின்றி விளையாடிய குதூகலம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது என்பதை “இன்று செயற்கையாக குழந்தைகளுக்கு ஊஞ்சல், பெரியவர்களுக்கு ஓய்வு நாற்காலி, காதலர்களுக்கு இரவில் விளக்கு. இதுதான் திடல் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது என்று அவர் எழுதியிருக்கும் வரிகளில் காணமுடியும். நிழல்கள் தரும் மரம், அந்த மரக்கிளைகளில் வந்தமரும் பறவைகள். அந்தப் பறவைகளுக்குப் பெயர் சூட்டி மகிழும் பொழுது போன்ற இன்ப காலங்கள் தோட்டத் துண்டாடலில் துண்டு போடப்பட்டு விட்டதையே இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அன்று இருந்த திடல்கள் பல வீரர்களை வளர்த்தது. இன்று திடல் காணாமல் போய்விட்டது. மனிதன் ஆரோக்கியத்துக்கு இயந்திரத்தை நம்பி வாழ்கிறான். போன்ற உண்மைப் பதிவுகள் பல தமிழ்ப் பள்ளிகளில் திடல் இல்லாமையை நினைவுபடுத்துகிறது. விளையாட்டுத் துறையில் ஜாம்பவனாக இருந்த தமிழனின் பெயர்கள் மறைந்து இன்று போலிஸ் பட்டியலில் இருப்பது யாருடைய குற்றம்? விளையாடும் உள்ளங்களுக்கு நாம் எதைக் கொடுத்தோம் என்று கேள்விகள் எழுகிறது இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது. கொஞ்ச நாளில் திடல் என்பதைப் புகைப்படத்தில்தான் பார்த்துத் தொலைக்கப் போகிறோம் என்றும் திடல் விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தால் வாழ்க்கை விகாரமாகலாம் என்றும் எழுத்தாளர் இக்கட்டுரையில் வலியுறுத்திக் கூறியிருப்பது இங்கே கவனிக்கப் படவேண்டிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
சன்னிலியினும் ஓடுகாலியும்
பண்பாட்டுக்கு இழுக்கு என்று கூறி தனிமனிதனின் முடிவுகளுக்குள் மூக்கை நுழைக்கும் சமுதாயத்தின் போக்கைச் சாடுகிறது இந்தக் கட்டுரை. சன்னி லியோன் என்ற ஆபாசப் பட நடிகை தற்போது தமிழ் சினிமாவில் நுழைந்திருப்பது குறித்துக் கூச்சல் போட்ட சம்பவத்தையும் ஓடுகாலி என்று முத்திரை குத்தப்பட்ட மாதுவின் வாழ்க்கை முடிவைக் குறித்தும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார் எழுத்தாளர். குழந்தைகளுக்குத் தாயான 35 வயது தனித்து வாழும் தாய் தமக்கு உதவ வந்த 50 வயது முதியவருடன் சென்று விடுவதால் அவளை ஓடுகாலி என்று பட்டம் சூட்டுகிறது சுற்றியுள்ள சமூகம். அதற்குமுன் இவளுடைய அம்மாவுக்கும் அந்த முதியவருக்கும் தொடர்பு உள்ளது என்று பேசிவந்தது. முதியவரோடு வாழ்ந்து வரும் அப்பெண் நான்கு குழந்தைகளையும் பராமரித்து வருகிறாள். ஆனால் அவளை ஓடுகாலியாகவே இந்தச் சமூகம் காண்கிறது. வாழ்க்கையின் முடிவுகளை சமுதாயத்தின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம். பிறர் வாழ்க்கையின் முடிவுகளை சமூகம் குற்றமாகப் பார்க்க வேண்டாம். சன்னிலியோனின் ஆபாச நடவடிக்கைகளுக்கு அவளே காரணமாகிறாள். அந்த வாழ்க்கையை மாற்றி அமைத்து வாழ்வதும் அவளின் முடிவு. அதுபோல முதியவருடன் செல்ல முடிவெடுத்தது அவளின் முடிவு. அதற்கான விளைவுகளையும் அவளே அனுபவிக்கிறாள். அவரை அவர் வழியில் விட்டு விடலாம் என்று தனி மனித சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.
சாமியார் யார்?
சாமியார் என்பது அதிகாரம்
சாமியார் என்பது பலம்
சாமியார் என்பது பணம்
என்ற மூன்றே வரிகளில் சாமியார் யார் என்பதைக் காட்டி விட்டது சாமியார் யார் என்ற கட்டுரை. வாழ்க்கையின் சிக்கல்களுக்கு திடீர் நிவாரணியைத் தேடிச் செல்லுபவனுக்கு, சாமியார்கள் கண்ணுக்குத் தெரியும் கடவுளாகக் காட்சி தருகிறார்கள். அறிவாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு இடமளிக்காத சாமியார் சன்னிதானங்களில் நடக்கும் முறைகேடுகளை நகைச்சுவையாக எடுத்துச் சொல்லியிருந்தாலும் அவர்களால் சமுதாயம் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைகிறது என்பதை இக்கட்டுரையில் உண்மைச் சம்பவம் வழி காட்டி இருக்கிறார்.
கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் சாமியார் உடலில் வந்து இறங்கும் சாமி ஏமாற்றும் வேலைக்கு உடந்தையாக இருந்து வருவதைக் காணும் கண்களுக்கு இவர்கள்தான் கடவுள். சண்டியரும் வாலைச் சுருட்டிக் கொண்டு வாயடைத்து நிற்கும் சாமியார் சன்னிதானம் நல்ல வரவு தரும் வணிகம் என்பதனை உங்களால் முடிந்ததைப் போடுங்கள் என்ற வார்த்தைகளால் உறுதி செய்யப்படுவதை இக்கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இப்படி சமூகத்தில் நடக்கும் அபத்தங்களையும், குறைகளையும், வாழ்க்கையிலிருந்து அந்நியமாகிவரும் வாழ்வியல் விழுமங்களுக்கான ஏக்கங்களையும் பேசும் கட்டுரைகளாக தயாஜியின் கட்டுரைகளைப் பார்க்கிறேன்.
அச்சில் ஏறிய முதல் படைப்பாக இருந்தாலும் வாழ்க்கையின் இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒளிபுகா இடங்களைத் தேடிப் பிடித்து நமக்குக் கட்டுரைகளின் வழி ஒலி கொடுத்திருக்கும் தயாஜியின் படைப்பு எளிமையாக இருந்தாலும் புறக்கணிக்க முடியாத உண்மைகளைத் தாங்கி நிற்கிறது.