ஏக்நாத்தின் ஆங்காரம் நாவல்

IMG_0004ஏக்நாத் எழுதியிருக்கிற ஆங்காரம் நாவல் ஒரு தனிமனிதனுடைய கதையோ, ஒரு குடும்பத்தினுடைய கதையோ அல்ல. ஒரு ஊரைப் பற்றிய, குறிப்பிட்ட ஊரில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களைப்பற்றிய கதை என்று சொல்லலாம். கதை நடக்கிற ஊரிலுள்ள மனிதர்களைக் காப்பதற்காக ஊருக்கு வெளியேயும், ஊரைச் சுற்றியும் இருக்கிற மந்திரமூர்த்தி, பூதத்தார், சொரி முத்தையன், சொரி முத்து அய்யனார், வடக்குவா செல்வி அம்மன் போன்ற சாமிகள் உருவான கதைகளையும், வரலாறுகளையும், இந்த சாமிகளுக்குக் கொடுக்கப்படுகிற கொடைகளைப் பற்றிய கதை என்றும் இந்நாவலைச் சொல்லலாம்.

கசமுத்து வகயிறாவுக்கும், பல்லி முருகன் வகயிறாவுக்குமான பகை, விரோதம், இரண்டு வகயிறாவும் மாறிமாறி செய்யும் கொலைகள் பற்றிய கதையாகவும் ஆங்காரம் இருக்கிறது. கண்ணன், ஆண்டாள் இவர்களுடைய மகன் முப்படாதி ஆகியோர் பற்றிய கதையாகவும், அவர்களுடைய குடும்பத்தைப் பற்றிய கதையாகவும், கண்ணணுடைய அண்ணன் கசமுத்துப் பற்றிய, அவருடைய குடும்பத்தைப் பற்றிய கதையாகவும் ஆங்காரம் இருக்கிறது.

ஆங்காரம் நாவல் நடக்கிற ஊரில் யார் யாருக்கு, யார் யார் மீது காதல்? பொன்னம்மாவின் காதல், குறிக்கேட்கப் போய் குறி சொல்பவனோடு ஓடிப்போன சிவப்பி பார்வதியின் காதல், லட்சுமியுடனான, மீனாட்சியுடனான, ஜெசிலா மேரி உடனான, கட்டமுண்டு மைனியுடனான முப்படாதியின் காதல், டிப்டாப் செல்வத்தின் சுந்தரவள்ளி மீதான காதலால் ஏற்பட்ட பிரச்சனையால் பம்பாய் ஓடிப்போவது, நான்காண்டு கழித்து திரும்பி ஊருக்கு வந்து மலையாளப் பெண் உமா மகேஸ்வரியுடன் கொள்ளும் காதல், எண்பதாயிரம் கொடுத்து ஏமாந்துபோவது என இப்படி ஊரில் நடந்த காதல் கதைகளைப்பற்றிய கதையாகவும் ஆங்காரம் இருக்கிறது.

வில்லுப்பாட்டுக்காரர்களின் கதையாக, கோவிலில் திருட வந்த திருடனின் கதையாக, ஒவ்வொரு ஆண்டும் கொடை கொடுக்கும்போது ஊரில் நடக்கிற பஞ்சாயத்து, சில்லரைச் சண்டைகளின் கதையாகவும் இந்நாவல் இருக்கிறது. சாமிகள் உண்டான கதையைப் பேசுகிற, சாமிகளுக்கு உருவேற்றம் செய்கிற கதையைப் பேசுகிற பல கதைகளின் கூட்டுத் தொகுப்பாக இந்நாவல் இருக்கிறது. நாவலில் மந்திரமூர்த்தி சாமி உண்டான வரலாறும், சாமிகளுக்கு உருவேற்றம் செய்வது தொடர்பான பகுதியும் முக்கியமானது. நாவலில் வரும் உரையாடல்கள் யதார்த்தமாகவும், கச்சிதத்தன்மையுடனும் இருக்கின்றன. அச்சு அசலான தென் தமிழகத்தின் பேச்சு வழக்கு முழுமையாக ஏக்நாத்திற்கு கைகூடி வந்திருக்கிறது.

பல கதைகளின் கூட்டுத் தொகுப்பாக எழுதியிருந்தாலும் எந்த கதையும் முழுமை பெறவில்லை. எந்தக் கதாபாத்திரமும் முழுமை பெறவில்லை. கதாபாத்திரங்கள் வெறும் பெயர்களாக மட்டுமே வாசகர் மனதில் நிற்கிறார்கள். ஊர்களின் பெயர்களும், இடங்களின் பெயர்களும் அப்படியே. தகவல்கள் வேறு. கதை வேறு. ஆங்காரம் முழுமைபெற்ற நாவல் என்று சொல்ல முடியாது. ஏக்நாத்தின் எழுதுகிற பயிற்சிக்கு இந்நாவல் உதவியிருக்கிறது. அவருடைய எழுதுகிற, எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிற உணர்வு, உழைப்பு முக்கியமானது. மதிக்கத்தக்கது.

1 comment for “ஏக்நாத்தின் ஆங்காரம் நாவல்

  1. April 25, 2016 at 3:40 pm

    நன்றி இமையம் சார்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...