சில முன் குறிப்புகள்
- நான் சிறுகதைகள் படிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது.
- உள்நாட்டு படைப்புகளைப் படித்து நீண்டகாலம் ஆகிறது. அப்படியே விமர்சனங்களும் திறனாய்வுகளும்.
- இந்த புத்தகத்தில் எழுத்தாளர் இமையத்தின் உரையைப் படிப்பதைத் தவிர்த்தேன்.
சிறுகதைகள்- பொதுப்பார்வை
தொடக்கம், உள்ளடக்கம், முடிவு, கரு, உத்தி என்பனவற்றிலிருந்து சிறுகதைகள் பல வகையான மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. சிறுகதை அதற்கான வடிவத்தையும், சொல்லும் முறையையும், சொற்களையும் அதுவே தோற்றுவித்துக் கொள்கிறது. ஏனெனில், கருப்பொருளைப் பொறுத்தே சொல்லாடல்களும் நுண்மையும் சேர்ந்து கதையை நகர்த்துவதில் மேலான திறனைக்காட்ட முடியும்.
நிகழ்வுகள் கதையாகாது என்றும் கதைக்குள் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்றும் ஒரு கூற்று உள்ளது. எனினும் நிகழ்வுகளையே கதைபோல சொல்லும் வடிவத்தை ‘டோக்கோ ட்ராமா’ என்பார்கள். கதையில் எப்போதும் நான் ஓர் அமைதியைப் பெற வேண்டும். இந்த அமைதியை கதையின் வடிவமே நிர்ணயிக்கிறது என்று நான் சொல்கிறேன். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் நான் தேர்ந்தெடுக்காமல் என் மனதுக்கு உகந்தவைகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
இழப்பு
மனிதகுலம் வரலாறு தொட்டு இடம்பெயர்வதும் குடிபெயர்வதும் ஒரு தொடர் நிகழ்வுதான். இந்தப்பெயர்ச்சிக்கு பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு. இயற்கையாகவும், செயற்கையாகவும் அதிகமும் பாதிக்கப்படுபவர் பெண்களும் சிறுவர்களும். இழப்பு கதை அப்படிக் குடியமர்த்தப்பட்ட ஒரு குடும்பத்தின் விளைவுகளைச் சித்தரிக்கிறது. தோட்டம் என்பது பெருவெளி. அங்கு எல்லோருக்கும் – மரம், செடி, விலங்குகள் – போதிய இடமுண்டு. யாருக்கும் இட நெருக்கடி இல்லை. பெருவெளியில் மனமும் பறந்து திரியும். அதனால் மனப்புழுக்கம் இல்லை. அடுக்குமாடி வீடுகள் – சந்தடிமிக்கவை, இட நெருக்கடி மிக்கவை, காற்றோ வெப்பமானது.
தோட்டத்தில் வாழ்ந்த தாத்தா, அப்பா, அம்மா இவர்களோடு இந்தக் கதையை சொல்லும் சிறுவனும் குடியேறுகிறான். மண்ணைப் பிரிவது, வாழ்ந்த மனிதர்களைப் பிரிவது மனதைக் கலங்கடிக்கும். வயதான முதியோருக்குப் பெரிய இழப்பு இல்லை. அப்பாவும் அந்த மாற்றத்துக்கு விருப்பமின்றியே வாழ்கின்றார். அம்மாவுக்கு இந்த மாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாடுகளையும் ஆடுகளையும் இன்ன பிறவற்றையும் பிரிந்து ஓர் அறையில் அடைந்து கிடப்பது மிகப் பெரிய வெப்பமாகும். அது மனதின் சமநிலையை அவ்வப்போது அசைக்கும். கோபமாக, எரிச்சலாக, சகிப்புத்தன்மை அற்ற வேதனையாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கதை சொல்லும் பையனுக்கும் இந்த பிரச்சனைகள் உண்டு. எனினும், வளர்கின்ற பருவமாதெனில் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்கிறான். தனக்கு ஏற்பட்ட இட நெருக்கடியை, மன நெரிசலை வென்று எடுக்கும் விவேகம் அவனுக்கு இயல்பாகவே வருகிறது. அவன் தனக்கான ஒரு பரந்த வெளியைக் கனவு காண்கிறான். அந்த வெளி ஏன் நிலமாய் இருக்க வேண்டும்? நீரிலும் அதைக் கட்டமைக்க முடியும். பாய்ச்சிய கால் கோபத்தால் அல்ல, மாறாக தடைகளை உடைத்து மேடைகள் அமைக்கவே. இது புலம் பெயர் தமிழர்க்கும் பொருந்தும்.
நெஞ்சுக் கொம்பு
ஓலம்மா என்ற ஓர் இழவு சொல்லியின் மகளுக்கும் கொய்த்தியோ மணியன் என்ற ஒரு முரடனுக்கும் மெளனமாய் ஆனால் மூர்க்கமாய் நடக்கும் யுத்தமே இந்த கதையின் கரு. ஓலம்மா என்ற பெண் இந்த சமூகத்தின் கடைநிலையில் உள்ளவள். அவள் படிப்பறிவற்ற ஒரு பாமரப் பெண். மணியம் உடல் வலிமையும் சமூக வலிமையும் மிக்கவன். ஒரு சந்தர்ப்பத்தில் அவளை இவன் கற்பழிக்கிறான். ஊரார் கூடி அவனோடு வாழவேண்டும் என்றும் இல்லையெனில் எல்லோருக்கும் உரியவளாய் இருக்கவேண்டும் என்றும் கட்டளை இடுகின்றனர். ஓலம்மாவின் மனதில் ஒரு வன்மம் உருவாகிறது. யாருக்கும் தெரியாமல் தன் வன்மத்தைத் தீர்க்க மணியத்தை சாவின் எல்லையில் கொண்டு நிறுத்துகின்றாள். அவள் ஊருக்குள் அடியெடுத்து வைப்பதே ஆத்தாவின் வருகையாக. வந்தவுடன் அன்னாசிச் செடி வளர்த்து அதன் காய்களை உண்பது கரு சேராமல் இருப்பதற்கான ஓர் உத்தி. தூமைத்துணிகளைக் கொடியேற்றி தான் கருவுறவில்லை என்பதை ஊருக்குப் பறைசாற்றிக் கொள்கிறாள். பொறுக்க முடியாத மணியன் டாக்டரைப் பார்க்க அவளை அழைத்து போகிறான். அவன் திரும்பும்போது ஓலம்மா வரவில்லை. அவள் ஒரு மாதம் கழித்துதான் திரும்புகிறாள், கருவைச் சுமந்து கொண்டு. கரு யாருடையது என்பதல்ல முக்கியம். உறித்த அழுங்கு மணியத்துக்கு ஒரு குழந்தையைப் போல் தோன்ற ஓலம்மா ‘அது உன்னுடையது அல்ல’ என்று வார்த்தைகளால் வாளைப் பாய்ச்சுகிறாள்.
இந்த வார்த்தைகளை தாங்க முடியாத மணியன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். ஆயுதமின்றி ஆள் பலமின்றி தன் மன வலிமையாலும் அறிவுத் திறனாலும் வீழ்த்திய கதை இது. இன்றைய சமூகத்துக்கும் பாலினத்துக்குமிடையே நடந்த போராட்டம்.
மணிமங்கலம்
இது ஒரு மனோவியல் கதை.
‘மங்களம் மணி மங்களமாய் மாறி மணியே மங்களத்தின் தெய்வமாகி இறுதியில் மங்களமே தெய்வமான கதை. கணவனுக்கு மனைவியாய் இல்லாமல், மகனுக்குத் தாயாய் இல்லாமல் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் மங்களம் உடலும் உள்ளமும் சோர்ந்த மனம் பிறழ்ந்த கதை.
வீடு என்பது குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் உரியது. உரிமையோடு சிரிக்கவும் பேசவும்தானே வீடு. குதூகலமின்றி மெளனத்தைப் போர்த்திக் கொண்டிருந்தால் அது சிறை. இந்தக் கதையும் ஓர் சிறுவனால் சொல்லப்படுகிறது. அப்பா, அம்மா, பையன் என்ற ஒரு குடும்ப அமைப்பே ஒருவருக்கு ஒருவர் பேசுவது குறைகிறது. அப்பாவுக்கு வெளியிருக்கிறது. அம்மா தனிமைப்படுத்தப்படுகிறாள். தனியாள் ஆன அம்மாவுக்கு பூசையறையும் அங்குள்ள சாமி படமும் துணை ஆகின்றன. ஆனால் அவள் திருப்தி அடையவில்லை. பேசாத சாமியோடு தனக்கு இருக்கும் நெருக்கத்தை பிறரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறாள்.
மணியோசை என்பது எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு சக்தி என்பது மங்களத்துக்குத் தெரியும். தனியறையில் சத்தமின்றி சாமி கும்பிடுவதைவிட மணியோசையின் மூலம் எல்லோருக்கும் அறிவித்து மற்றவர்களுடைய கவனத்தைத் தன்பால் ஈர்க்க முடியும் என்பதும் மங்களத்துக்குத் தெரியும். மணி என்பது அது எழுப்பும் ஒலியின்மூலம் தான் இருக்கும் இடத்தைப் பகிரங்கப்படுத்துவது. நேரம், இடம் சார்ந்து ஓசையின் அளவீடுகளில் மணியோசையின் பொருள் வேறுபடும். ஐஸ்கிரீம் மணியோசையும், கச்சான் மணியோசையும் தற்தமது இருப்பையும் நேரத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துவது போலவே மங்கலத்தின் மணியோசையும் அவளுடைய தெய்வ வெளிப்பாட்டை வெளிப்படுத்தவே.
முடிவாக
நவீன் கதைகளின் பொதுப்பண்பு
- கதை நிகழும் களமும் மனிதர்களும் அதிக வேறுபாடு இல்லாமல் இருப்பது.
- அடுக்கடுக்கான நிகழ்வுகளின் கட்டமைப்பினால் ஒரு புதினத்தின் தன்மையைப் பிரதிபலிப்பது.
- செறிவான சொல்லாட்சி அதனூடே மிளிரும் நகைச்சுவை, பகடி, தக்க இடத்தில் பாய்ச்சி தெறிப்பை உண்டாக்கும் சொற்கள்.
- உள்ளடக்கத்தைச் சுற்றி எழுப்பப்படும் நிகழ்வுகள் கருவை அமிழ்த்தி விடுகிறது.
- கதையின் மையப் பாத்திரங்கள் அழுத்தமின்றி இருப்பது.
- சிறுவர்கள் மூலம் சொல்லப்படும் கதைகளின் விவரங்கள் அளவுக்கு, வயதுக்கு மீறி இருப்பது.
இந்த தொகுப்பைப் படித்து முடித்தவுடன் ஒரு நாவலின் சில அத்தியாயங்களைப் படித்தது போலவே உணர்ந்தேன்.