துர்க்கனவு போல அவள் முகம் வந்துபோனது. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அவள் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்…………
எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. விடுமுறையைச் சம்பளமாக்கிட தற்காலிகமான வேலையை தேடிக்கொண்டிருந்தேன். அச்சமயம் தோட்டங்களை துண்டாடிய பின் அங்கு தொழிற்சாலைகளைக் கட்டியிருந்தார்கள். இதற்கு முன் அங்கு வாழந்தவர்களுக்குத்தான் முதல் வேலை வாய்ப்பு என்று நாங்கள் ஓட்டு போட்டவர், கோட்டுப் போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். எல்லோருக்கும் புதிய வாழ்க்கை எப்படி இருக்குமென்ற பேச்சாகவே இருந்தது. ஒரே ஒருவர் மட்டும், ”அட போங்கடா… உங்களையும் பார்த்தேன் உங்களோட கட்சியையும் பார்த்தேன்” என எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டார். ஆனாலும் அந்தக் கிழவரை யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் அந்த கிழவர் மரணித்த தருவாயில் இருந்து அவர் வாயிலிருந்து வந்த சொற்கள் எல்லோர் வாயிலும் வந்து போகத் தொடங்கின .
சட்டென ஒருநாள் யாருடைய முன் அனுமதியும் பெற்றிடாமல் வீடுகளை இடிப்பதற்கான இயந்திரங்களுடன் சில மனித ரோபோக்கள் வந்திருந்தன. என்ன கேட்டாலும், எப்படி அழுதாலும் இடிக்கப்போவதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவர்களை எப்படி மனிதர்கள் பட்டியலில் சேர்ப்பது. அப்போதும் தலைவர் வந்தார். இம்முறை கோட்டு சூட்டெல்லாம் போட்டிருக்கவில்லை. கோவிலில் உலக மக்களுக்கான பிரார்த்தனை செய்து முடித்து வேட்டி சட்டையுடன் வந்திருந்தார். எங்கோ குழப்பம் நிகழ்ந்திருப்பதாகவும், அவர் பேசி எங்களுக்குச் சில வாரங்கள் அவகாசம் கொடுப்பதாகவும் சொன்னார். அந்த இடைவேளையில் குறைந்த விலை வாடகை வீடுகளை பார்த்துக் கொடுப்பதாகவும், இப்போதைய இடத்தை அழித்து மீண்டும் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் கட்டும் போது ஆளுக்கொரு வீடு கிடைக்க வழி செய்வதாகவும் கழுத்தில் போட்டிருந்த ருத்ராட்ச மாலையில் சத்தியம் செய்தார். வேறு வழியின்றி எல்லோரும் ஆளுக்கு ஒரு இடமெனத் தேடிக் குடியேறினார்கள்.
சில மாதங்கள் கழிந்த நிலையில் , வேலை கிடைக்கும் என நம்பியிருந்த அன்றாட கூலிக்காரர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். தொழிற்சாலை தொடங்கியபோது மட்டும் திறந்திருந்த வாயில் கதவு அதன் பின் எங்களுக்காகத் திறக்கவேயில்லை. நாங்கள் தங்கியிருந்த இடங்கள் வெற்று நிலங்களாக தெரிந்தன, வந்துசேர்ந்த வேற்று நாட்டவர்களுக்கே அங்கு வேலை கிடைத்தது.
எதிர்பார்த்தபடி வேலை கிடைக்காததால் அவரவர்க்கு கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார்கள். ஒரு சிலரே ஏதேதோ காரணங்கள் சொல்லி இடிந்துகிடக்கும்குடியிருப்பில் சில பலகைகளையும் பாய்களையும் வைத்து கூடாரம் போல எதையோ செய்து கொண்டு அங்கு தங்க ஆரம்பித்தார்கள்.
வீடுகள் இடிபட்ட இடங்களில் மீண்டும் வீடு கட்ட தொடங்கினார்கள். அவசரப்பட்டு வேறு இடங்களுக்கு வந்துவிட்டோம் என நாங்கள் வருந்தினோம். தற்காலிகக் கூடாரங்களை அமைத்தவர்கள் மீது பொறாமையாக இருந்தது. எப்படியும் அவர்களுக்கு ஆளுக்கொரு வீடாவது கிடைக்கும். கொடுத்து வைத்தவர்கள்.
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன, வெளிநாட்டிலிருந்து அந்தத் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்தவர்களே அந்தக் குடியிருப்பில் நிறைந்தார்கள். தற்காலிகக் கூடாரம் அமைத்தவர்களுக்கு கிடைத்த வீடு குறித்து விசாரிக்கச் சென்றிருந்தோம். அவர்களை அங்குமட்டுமில்லை இன்றும் வேறெங்கும் காண முடியவில்லை. ஒருவேளை இடிக்கப்பட்ட குடியிருப்பில் வாழ்ந்தவர்களை விரட்டிவிட்டு இவர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம்.
அப்படி ஆளுக்கொரு திசையில் பிரிந்து, கேள்விப்பட்ட தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். அம்மாவுக்கும் அப்படியொரு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. குடியிருப்பில் பிரிந்த பலர் வேலையிடத்தில் சந்திப்பது பழைய நினைவின் வேதனைகளுக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருந்தது. எங்கள் வீட்டில் இருந்து தொழிற்சாலைக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லாமல் இருந்தது. எனக்கு விடுமுறை என்பதால் அம்மாவை வேலைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
காலையில் வேலைக்கு கொண்டு செல்வது, மாலையில் வீட்டுக்கு கூட்டிவருவது என இடையில் கிடைத்த நேரத்தை என்ன செய்வதென்று தெரியாமல் முடிந்தவரை தூங்கினேன். தூக்கம் வராத நேரங்களில் தொலைக்காட்சியும் புத்தகங்களும் துணையிருந்தன.
எங்கள் வீட்டில் இருந்து செல்லும் பாதையில் கட்டுமானப்பணி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆக, வேறு வழிகள் இருப்பதாக சொன்ன நண்பர்களை நம்பி, மாலை அம்மாவை கூட்டி வர செல்லும் சமயங்களில் புதுப்புது பாதைகளில் சென்றேன். வரும்போது வழக்கமான பாதையில் பிரச்சனைகளின்றி வரலாம்.
அப்படி ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் போதுதான் அவளைச் சந்தித்தேன். மற்றவர்கள் போல மோட்டாரை ஒரு சக்கரத்தில் ஓட்டுவதோ, வளைத்து வளைத்து ஓட்டுவதோ எனக்குத் தெரியாது. சைக்கிளில் கைகளை காற்றில் விட்டு ஓட்ட முயற்சித்து கவிழ்ந்து விழுந்துள்ளேன். அந்த அனுபவம், இன்னும் அவ்வபோது முட்டியில் வலியைக் கொடுக்கிறது.
நின்றுகொண்டிருந்த பெண்ணை வெறுமனே கடந்து சென்றேன். அழகாகத் தெரிந்தாள். வீட்டு உடையில் இருந்தாலும் தோளில் ஏதோ பள்ளிப்பை போல ஒன்றை மாட்டிக்கொண்டிருந்தாள். ஒருவேளை பக்கத்தில் ஏதாவது தொழிற்சாலையில் வேலை செய்கிறவளாக இருக்கலாம். ஆனால் ஏன் அங்கு நிற்காமல் இப்படி ஒதுக்குப்புறமாக நிற்கிறாள். எங்கள் இடங்களில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஊர்தியில் தொழிலாளர்களை வேலைக்கு கூட்டிச்செல்பவர்கள். ஒரு இடத்தில் சில தொழிலாளர்களை இறக்கி விட்டு மற்றொரு ஊர்தியில் ஏற்றிச் செல்வார்கள். அப்படியெதும் இருக்குமோ என முதல் நாளிலேயே முடிவு செய்துவிட்டேன். மறுநாளும் அவளை அங்கு பார்க்க நேரிட்டால், எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.
முன்பின் அறிந்திடாத பெண்களிடம் பேசுவதற்கென்றே சில யுக்திகள் வைத்துள்ளோம். அதில் ஒன்று மட்டும் சொல்கிறேன். முன்பின் தெரிந்திடாத பெண்ணிடம் சென்று , “நீங்க ப்ரியாவோட தங்கச்சியா..? அக்கா எப்படி இருக்காங்க..? நானும் அவுங்களும் ஒன்னாதான் படிச்சோம்” என ஆரம்பிக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் அந்நொடியில் இருந்து புதிய பூக்கள் பூக்கும் ஓசையை நாம் கேட்போம். சட்டென உச்சி வெயிலில் வானவில்லின் வண்ணம் முகத்தில் தடவிச்செல்லும். ஒருவேளை நமது கேள்விக்கு பதில் தரும் வகையில் அந்த பெண்ணிடம் இருந்து, “இல்லங்க.. ஆனா உங்களை பார்த்தாதான் குமாரோட தம்பி மாதிரி இருக்கிங்க.. ஆமா உங்க அண்ணன் பேரு குமாரா ?” என்று பதிலுக்கு பதில் கேள்வி வந்தால், உடனே இடத்தை காலி செய்வது உத்தமம். ஏனெனில் நமது ’கம்பெனி’ ரகசியத்தை யாரோ கசியவிட்டிருக்கிறார்கள். அங்கு அதற்கு மேல் இருப்பது நமக்கு ஆபத்து.
மறுநாள் அதே வழியில் சென்றேன். அவள் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். இம்முறை நேற்றைய தினம் விட இன்னும் அழகாக இருந்தாள். சரி கடவுள் நமக்கென்று ஒன்றை அடையாளம் காட்டியிருப்பதாக நினைத்துக் கொண்டேன். அவளைக் கடக்கும்போது என் மோட்டார் மெதுவாக நகரத்தொடங்கியது. அவளைக் கடந்து செல்கிறேன். கண்ணாடியில் அவளைப் பார்த்தவாறே, இன்னமும் மோட்டார் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்சந்தலையில் கொட்டியதாகப்பட்டது. மோட்டாரை அங்கேயே நிறுத்தினேன். இன்றும் அவள் இருந்துவிட்டால் ,அவளிடம் சென்று பேசுவதாக நேற்று எடுத்திருந்த முடிவு நினைவுக்கு வந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்.
மோட்டாரை லாவகமாகத் திருப்பினேன். ஆச்சர்யமாக இருந்தது முதல் முறையிலான லாவகம் என்றாலும் அத்தனை நேர்த்தியாக செய்ய முடிந்தது. மோட்டார் அந்தப் பெண்ணை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அந்த பெண்ணின் கண்கள் என் கண்களை ஊடுருவியது. காற்று பலமாக வீசி என் தலைமுடியெல்லாம் பறந்தன. என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இடது கையால் தலைமுடியை வாரினேன். பக்கத்தில் ஊர்தி ஒன்று என் காலை உரசுவதாக என்னை கடந்து சென்றது. அதுவரை அவள் பார்த்துக் கோண்டிருந்து. அந்த ஊர்தியைத்தான் என உரைத்தது.
அவளின் அருகில் நின்றது ஊர்தி. அவளும் அதுவரையில் காட்டிடாத சிரிப்பை காட்டிவிட்டு ஊர்தியில் ஏறிக்கொண்டாள். ஊர்தி முழுக்க கறுப்பு நிற கண்ணாடியால் மூடப்பட்டிருந்ததால் வேறு எதையும் என்னால் கவனிக்க முடியவில்லை.
அதன் பிறகு அவளைத் தனியாக நான் பார்க்கவில்லை. அதே நேரம்தான் செல்கிறேன். சில சமயம் அதற்கு முன்பும் செல்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் கறுப்பு கண்ணாடி சூழ்ந்திருக்கும் ஊர்திதான் நின்றுகொண்டிருந்தது.
இப்படித்தான் ஒருமுறை வழக்கமான ஏமாற்றத்தை எண்ணியபடி அவ்வழி சென்றுகொண்டிருந்தேன். தூரத்திலேயே அந்த ஊர்தியை கவனித்துவிட்டேன். அதோடு ஊர்த்தி குலுங்குவதையும் கவனித்தேன். நெஞ்சு படபடவென அடித்துகொண்டது. மோட்டாரை பிடித்திருக்கும் கைகள் நடுங்கின. வயிற்றில் என்னமோ கரைந்தது.
ஊர்தியை கடக்கும் சில நொடிகளில் லேசாக கண்ணாடி திறந்திருந்ததை குலுங்கலுக்கு இடையில் கண்டுகொண்டேன்.
அந்த அரையடி இடைவேளையில் அந்தப் பெண்கள் கண்களை கடக்கும்போது கண்டுகொண்டேன். இம்முறை அவள் கண்களில் வீசிய உக்கிரம் என்னை வியர்க்க வைத்தது. என் நடுக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது. அம்மாவின் தொழிற்சாலையில் மோட்டார் தானாக நின்றபோதுதான் சுய நினைவுக்கு வந்தேன்,. ஆனாலும் நடுக்கமும் படபடப்பும் விட்டபாடில்லை. மறுநாள் எனக்கு உடல் நலமில்லாமல் போனது. நல்லவேளையாக தொழிற்சாலை நிர்வாகமே போக்குவரத்துக்கு பேருந்தை ஏற்பாடு செய்திருந்தது. பேருந்துக் கட்டணத்தைக் கட்டுவதற்கே தினமும் ஓவர் டைம் செய்யவேண்டி வந்ததை அம்மாவும் வேறு யாரும் பெரிதுபடுத்தவில்லை.
சில நாட்களில் உடல் நலம் பெற்றது. மனம் மட்டும் ஏதோ குழப்பத்தில் இருந்தது. எதற்கான பதிலோ கிடைக்காத அதிருப்தியுடன் சில நாட்கள் திரிந்து கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு முறையாவது அவ்வழியில் சென்று அந்த பெண்ணைப் பார்த்துவிட வேண்டும் என தீர்மானித்தேன். இந்நேரம் அந்த ஊர்திக்காரனுடன் திருமணம் முடித்திருப்பாள் என ஒரு மனமும் ஊர்தி இன்னமும் குலுங்கிகொண்டிருக்கும் என இன்னொரு மனமும் சொல்லிக்கொண்டது. இரண்டில் எதன் பேச்சை கேட்பது என யோசிக்காமலேயே புறப்பட்டேன்.
மோட்டாரை மெதுவாக்கினேன். தூரத்தில் ஊர்தி நின்றுகொண்டும் இரண்டாம் மனம் சொன்னது போல குலுங்கிக்கொண்டும் இருந்தது. அன்று போல இந்தக் குலுங்கல் இல்லை. இன்று ஆவேசமாக இருந்தது. ஊர்தியின் கதவு திறந்தது. அந்த பெண் பொத்தென்று கீழே விழுந்தாள். பிராவும் குட்டைப்பாவாடையும் மட்டுமே அணிந்திருந்தாள். நான் எனது மோட்டாரை நிறுத்திவிட்டேன். அவள் முகத்தின் மீது ஏதோ வீசப்பட்டது. அது அவளின் முகத்தில் சில நொடிகள் ஸ்தம்பித்தது. அதை வெறியுடன் கையில் எடுக்கிறாள். எழுந்து நிற்கிறாள், கால்களை ஒவ்வொன்றாக நுழைத்து குட்டை பாவாடைக்குள்ளே அவள் உள்ளாடையை அணிந்து கொண்டாள். ஆவேசம் கொண்டு ஊர்தியின் ஏற முயன்றாள். மீண்டும் ஒரு கை அவளைத் தள்ளிவிட்டது. அவள் கத்துவது தெரிந்தது. ஆனால் கேட்கவில்லை. கீழே விழுந்துகிடந்தவள் மீண்டும் எழுந்தாள். இன்னமும் அவளிடம் அந்த ஆவேசம் இருந்தது. ஊர்தியின் கதவு மூடியது. ஊர்தி புறப்படத்தொடங்கியது. புறப்பட்டது.
பிரா, குட்டைப்பாவாடையுடன் ஊர்தியையே பார்த்துக்கொண்டிருந்தாள். சில அடிகளில் ஊர்தி நின்றது. வாகனமோட்டியின் கண்ணாடி திறந்தது. உள்ளிருந்து வெண்மையான சீருடையும் பள்ளிப்பையும் தூக்கி எறியப்பட்டன. பின்னர் ஊர்தி புறப்பட்டது. பை கிழிந்து சில புத்தங்கள் சிதறிக்கிடந்தன. ஏதோ பேசிக்கொண்டே சிதறிய புத்தகங்களை புத்தகப்பையில் போடுகிறாள். பள்ளிச் சீருடையை எடுத்து உதறிக்கொள்கிறாள். திரும்பி என்னை பார்த்தவாறே சீருடையை எந்தக் கூச்சமும் இன்றி அணிந்துகொண்டாள். எனக்குத்தான் அவளை அந்நிலையில் பார்க்கக் கூச்சமாக இருந்தது. இன்னமும் நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.
அவள் என்னை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மோட்டாரைத் திருப்பினேன். என்னைக் கைகாட்டி அழைத்தாள். எனக்கு இருந்த அப்போதைய மனநிலையில் வீட்டுக்குப் போவதுதான் சரி எனப் பட்டது. மோட்டாரை வளைத்து வந்த வழியில் திரும்பினேன். கண்ணாடியில் அவளை பார்க்க, அவள் எனக்கு கையாட்டிக்கொண்டிருந்தாள்.
துர்க்கனவு போல அவள் முகம் சில கனவுகளில் வந்துபோனது. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அவளின் கனவு வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் உக்கிரமான கண்களை மட்டும் அவ்வபோது சிலரிடத்தில் கண்டு அச்சம் கொள்கிறேன்.