மனதை ஒருநிலைக்குள் கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கைவிரல்களின் பதற்றம் போகவில்லை. நேரம் போகப்போக பதற்றம் இன்னும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாய் கண்காணித்து வந்ததில் அப்படியொன்றும் கஷ்டப்படத் தேவையில்லை என்று தெரிந்தும் செயல்படவேண்டிய நேரத்தில் பதற்றம் வந்துதொலைக்கிறது. மென்தாள் ஒன்றை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்து வீசினேன்.
பார்வையைப் பரவலாகப் படரவிட்டேன். சாலையில் வாகனங்களும் பேருந்துகளும் விரைந்துகொண்டிருந்தன. மனித உருவங்களின் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. கீழ்த்தளக் கடைகளின் இழுவைக் கதவுகள் திறக்கப்படும் ஒலி. எனக்கு நேரெதிரில் சாலையின் அந்தப்பக்கத்தில் பணமீட்பு இயந்திர அறைக்குள் செல்லும் இருவர். முன்பு கிள்ளான் பட்டணத்தின் மையப்பகுதியில் செய்த காரியம் நினைவுக்கு வந்தது. ‘அடேய்… மக்கா! துணிந்தவனுக்குத் துக்கமில்லைடா…’ என்ற மனக்குரல் கேட்டதும் அருகில் இருந்த மேம்பாலத்தில் ஏறினேன். இரும்புச்சட்டத்தின் மேல் வலதுகாலை வைத்து விளையாட்டுக் காலணியின் கயிற்றை இறுகக் கட்டினேன். நிமிர்ந்து பார்த்தபோது வெண்புறா ஒன்று அருகினில் வந்து தன் சிறகுகளால் படபடத்துவிட்டுச் சென்றது. காகம்தானே வரக்கூடாது, இது புறாவாயிற்றே, நல்ல சகுனம்தான் என்று நினைத்து உள்ளங்கைகளை உரசிச் சூடேற்றிக் கொண்டேன்.
மேம்பாலத்திலிருந்து இறங்கியதும் நடையை சாதாரணமாக்கிக் கொண்டேன். குறிப்பிட்ட அந்தக் கடைக்குள் நுழைந்ததும் இன்றைய எல்லா சந்தோஷங்களும் எனக்குரியவை என்றும் இன்று நான் விசேஷமானவன் என்றும் காட்டக்கூடிய முகமலர்வை கணத்திற்குள் கொண்டுவந்தேன்.
கடைக்குள் இரண்டு சீனப் பெண்களே இருந்தனர். ஆண் எவரும் இல்லாதது வசதியாகப்பட்டது. இருவரும் இளம்பெண்கள் என்பதால் வசீகரப் புன்னகையை வீசி உரையாடத் தொடங்கினேன். ஆங்கில உரையாடலில் பெரிய படித்தவனைப் போலவும் அன்புக்குரியவளின் காதலைவிடப் பணத்தை முக்கியமாகக் கருதுவதில்லை என்று கூறி விழிகளை உருட்டி கன்னத்தில் குழிவிழும் அளவுக்கு இரு அணில் பற்களை அவர்கள் பார்க்கும்படி நின்றேன்.
இருவரில் ஒருத்தி மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். தலைமுடி கட்டையாக வெட்டப்பட்டிருந்தாலும் அதில் வித்தியாசம் இருந்தது. வளைந்த வில்லைப் போல பச்சைநிற சாயத்தில் முடிக்கற்றை பளிச்சிட்டது.
இன்னொருத்தி விரிக்கப்பட்ட நீள்முடி வைத்திருந்தாள். நேர்கோடுகளாய் செழுமைப்படுத்தப்பட்ட முடிகளுக்குக் கணிசமான தொகை செலவு பண்ணப்பட்டிருக்க வேண்டும். இடதுகாதின் மேல்மடல் ஓரத்தில் நான்கு நட்சத்திர வடிவங்களைக் கொண்ட சிறுவகைத் தோடுகள் அவள் முகத்தை மேலும் கவர்ச்சிப்படுத்தியது.
நான் பேசுகிற விதத்தைக்கண்டு இருவரும் சுறுசுறுப்படைந்தனர். தொகை ஒரு பிரச்சினை கிடையாது என்றதால் ஆளுக்கொரு தங்கச் சங்கிலியை எடுத்து நீட்டினர். ஒன்றை எடுத்து என் முகத்துக்கு நேராக இருவிரலால் பிடித்துத் தொங்கவிட்டேன். அதைப்பார்த்துக் கொஞ்சம் சந்தோஷம் கொள்வதாக முகக்குறிப்பில் காண்பித்து என் இடது உள்ளங்கையில் போட்டுக்கொண்டேன்.
இன்னொருத்தி நீட்டிய சங்கிலியை அதேபோலத் தொங்கப் பிடித்து தேடினது கண்டடைந்ததைப் போன்றதொரு பரவசத்தில் வலது உள்ளங்கையில் வைத்து விரல்களால் மூடிக்கொண்டதும் ஒருமுறை மூச்சையிழுத்துவிட்டு விருட்டென ஓட்டம் பிடித்தேன். மூன்று கடைகளைத் தாண்டி, வலதுபக்க குறுக்குப் பாதையை எட்டினதும் அவ்விருவரின் கூச்சல் சத்தம் கேட்டது.
வலதுகரத்தில் ஒரு சங்கிலி. இடதுகரத்தில் ஒரு சங்கிலி. பத்தாயிரம் வெள்ளி பெறுமானம். போதும். இனி தப்பித்தாக வேண்டும். கட்டிடங்களுக்கிடையே இருந்த குறுக்குச் சந்துகளில் புகுந்து வெளியேறி ஓர் இறக்கமான பாதைக்கு வந்தடைந்து ஓட்ட வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். பார்வை எட்டும் தூரத்தில் ஒட்டுக்கடை ஒன்று இருந்தது. அங்கே போவது ஆபத்து என்றுணர்ந்தேன். மூன்றுக்கு ஒன்பது என்ற கடிகார நேர்திசையில் சாலையைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது சிறு பாதை ஒன்று தெரிய அங்கு விரைந்தேன்.
உயர்ரக அடுக்குமாடி வீடுகளின் பகுதிக்குள் நுழைந்ததும் வெவ்வேறு விதமான நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது. நான் இதை எதிர்பார்க்காததால் ஓட்டத்தை முழுவீச்சில் அதிகரித்துக்கொண்டேன். இருசக்கர வண்டிகளின் ஒலிப்பான் சத்தங்களைச் செவிகள் கேட்டதில் திரும்பிப் பார்த்தேன். நாலைந்து வண்டிகளோடு கறுப்புநிற மூடுந்து ஒன்று படுவேகமாக வந்து கொண்டிருந்ததைக் கண்டதும் திக்பிரமை ஏற்பட்டது. பீதியூட்டும் உணர்வோடு எங்காவது சந்து பொந்து தெரிகிறதா எனப்பார்க்கையில் என் வலதுகால் இடதுகாலைத் தடுக்கிவிட்டதில் பொத்தென்று விழுந்தேன். எழுவதற்குள் இருசக்கர வண்டிகளும் மூடுந்தும் என்னை வளைத்துக் கொண்டன.
மூடுந்திலிருந்து இறங்கி வெளிப்பட்ட நட்சத்திரத் தோடுக்காரியின் முகம் வெளிறிப்போய் இருந்தது. ஆவேசங்கொண்டவளாய் முகத்தில் அறைந்து சங்கிலிகளைக் கேட்டாள். உடனே கொடுத்துவிட்டேன். அவள் ஓர் அடி பின்வைத்ததும் ‘போச்சுடா…’ என மனம் முன்கணிப்பு செய்துகொண்டது. மலாய் மொழியின் அத்துணை கெட்டவார்த்தைகளோடு நெருங்கியவர்கள் மடேர் மடேரென்று தாக்கினார்கள். கோக்கு மாக்காக அடிகள் விழுந்தன. தரையில் விழுந்தது அவர்களுக்கு இன்னும் சுலபமாயிற்று போல. உடலின் எந்தப்பாகத்தையும் பாராமல் மனம்போன போக்கில் உதைத்தும் எத்தியும் மிதித்தும் தங்களின் மனக்கொடூரத்தை வெளிப்படுத்திக்கொண்டனர். அந்தப்பாதையில் போகிற வருபவனெல்லாம் விசாரித்துத் தங்கள் பங்குக்கு உதைகொடுத்துச் சென்றனர். ஒருவன் தன்னுடைய தலைக்கவசத்தைக் கொண்டு என் தலையில் மடீர் மடீரெனப் போட்டான். முன்மண்டையிலிருந்து இரத்தம் ஒரு கோடுபோல வழிந்து கன்னத்தை நனைத்தது. இரத்தத்தோடு எச்சிலையும் வாய் வெளியேற்றியது. சுவாசிக்கச் சிரமப்பட்டேன். தலையைத் தூக்கமுடியவில்லை. ஒருகண்ணால் மட்டும் பார்க்க முடிந்தது. விலா எலும்புகளுக்குள் பத்துப்பதினைந்து ஊசிகளைக் குத்தி நிமிண்டி எடுப்பதுபோன்ற வலி. தரையோடு முகம் ஒட்டிக்கிடந்தது. தரையின் சூடு அனலாகத் தகித்தது. இம்சிக்கும் கெட்ட வார்த்தைகளின் சத்தங்களுக்கிடையே ஒரு பெரியவரின் குரல் அடித்த எல்லோரையும் ஏசிக்கொண்டிருந்தது. தலையைச் சற்று எக்கிக் குரல்வந்த திசையைப் பார்த்தேன். குல்லா அணிந்த வெண்தாடிக்காரர். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான மசூதி. என்னைச் சூழ்ந்திருந்தவர்கள் மெதுவாகக் கலைய முற்பட்டனர். ஒரு சீனரும் அந்தச் சீனத்தியும் என்னைத் தூக்கி மூடுந்தில் கிடத்தும்போது காவல்நிலையத்தில் என்னை ஒப்படைக்கும்படி சிலர் போகிறபோக்கில் சொல்லிச் சென்றனர். இருவரும் தலையை கீழும் மேலுமாக ஆட்டிக்கொண்டு வாகனத்திற்குள் ஏறிக்கொண்டனர். மூடுந்து திருப்பப்பட்டு விரைந்தது.
மூடுந்து தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டதும் கதவு திறக்கப்பட்டு ஆளுக்கொருபக்கமாக என்னைத் தூக்கிக்கொண்டு தங்களின் கடைக்குள் நுழைந்தனர். கடையின் பின்புறத்தில் விளக்கொளி மங்கலாகத் தெரிந்தது. இது என் ஒருகண்ணின் பார்வை விளைவாக இருக்கலாம். ஒரு நீள்மெத்தை நாற்காலியில் என்னைப் பொத்தென்று போட்டனர். சற்று விலகி நின்றவாறே அவர்களின் பாஷையில் பேசத் தொடங்கினர். ஆணின் பேச்சை அவள் வெட்டி வெட்டிப் பேசினாள். அவளின் அதிருப்தி அங்க அவயங்களின் அசைவில் தெரிந்தது. அவள் தன் குரலை உயர்த்திப் பேசியதும் ஆண் அடங்கிப்போனான். ஆண் சலித்துக்கொண்டே வெளியேற அவள் என்னருகே வந்து சற்றுநேரம் அமைதியாக இருந்து என் உடைகளைக் களைந்தெடுத்து என்னை நிர்வாணப்படுத்தினாள். எழுந்து நிற்கவைத்தாள். நிமிர முடியவில்லை. என் கரத்தைப் பிடித்துக்கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தாள். சிறிய அறை, இருபக்க மூலையிலும் ஆளுயர இரும்புப் பெட்டிகள். சுவற்றில் சாய்ந்திருக்க வைத்து வெளியேறியவள் முரட்டுக் கயிற்றோடு வந்தாள். மனம் திடுக்கிட்டது.
மணிக்கட்டுக் கரத்தில் கயிற்றைக்கட்டி ஆளுயர இரும்புப்பெட்டியின் முனையிலிருந்த கொக்கி போன்ற இரும்பு வளையத்தில் மாட்டினாள். இதேபோல இன்னொரு கரத்திற்கும் நடந்தது. கால்களுக்கும் அப்படியே செய்தாள். கொக்கியின் கயிறைச் சுற்றத் தொடங்கினாள். சுற்றச்சுற்ற என்கரம் மேலேறியது. வலதுகரமும் மேலேறியது. கால்கள் இரண்டும் அகண்டு நின்றன. நடு அறையில் நின்றவாறு என்னைப்பார்த்தாள். ஒருவித திருப்தி அவள் முகத்தில். வாசல்வரை திரும்பிப் போனவள் நின்று மறுபடியும் திரும்பி வேகத்தோடு வந்து கத்தியவாறே விலாப்பகுதியில் எத்தினாள். அவள் காலணியின் கூர் உட்புகுந்து வந்ததில் இரத்தம் வெளிப்பட்டது. கதவை சத்தத்தோடே சாத்தினாள். கண்ணீரோடே சளியும் ஒழுகியது. முகத்தின் வியர்வை காயத்தில் பட்டு படு எரிச்சலைக் கொடுத்தது.
‘இந்த இருபத்தியிரண்டு வயதிற்குள் கணக்கு வழக்கில்லாமல் எத்தனைமுறை திருடியிருக்கிறோம். எப்படியெல்லாம் தப்பித்திருக்கிறோம். எப்படியெல்லாம் சண்டைபோட்டு ஓடியிருக்கிறோம். இன்று என்காலே என்னைத் தடுக்கிவிட்டதே… என்ன இது… விதியா இல்லை கடவுள் பழிவாங்குகிறாரா? எல்லாவற்றுக்கும் சேர்த்து வட்டிக் குட்டியோடு சேர்த்து வாங்குகிறாரா? ஒண்ணுமே புரியலையே…’ மனம் அரற்றிக்கொண்டேயிருந்தது. முன்மண்டை விங் விங் விங்ஙென்று வலி எடுத்தது.
அழுத்தமாகப் பதித்துவரும் காலணியின் ஓசை கேட்டது. அவளைப் பார்த்ததும் விடுவிக்க வருகிறாள் என்றெண்ணி நிமிர்ந்திருக்க முயன்றேன். அருகில் வந்தவள் தன்னுடைய வலதுகாலின் மேல்பாகத்தைப் பின்னுக்கிழுத்து ஓங்கி என் ஆண்குறியைப் பார்த்து உதைத்தாள். உயிர் நரம்புகளை இழுத்துவிட்டது போன்று கதிகலங்கியது. விதைப்பைகள் சுருங்கிக்கொண்டபோது பலம் முழுவதும் இழந்தவன் போலானேன். குளிர்நீரின் சிலிர்ப்பு உண்டானது. அவள் போய்விட்டாள்.
‘கொட்டாங்குச்சி கொங்கைகளுடைய இவளுக்கா இப்படிப்பட்ட ஆத்திரம், மூர்க்கம், வன்மம். இப்படி வதைக்கிறாளே. மவளே ஒஞ்சாணிய எடுக்க…’ மூச்சுப் பிடித்துக்கொண்டது.
‘இனிமேலும் வருவாள். வகை வகையாய் தொகை தொகையாய் யோசித்து யோசித்து வதைப்பாள். இவள் என்னை விடுவதாக இல்லை. பிழிந்தெடுத்துச் சக்கையாய்தான் என்னைக் காவல்நிலையத்திற்கு ஒப்படைப்பாள். அடுத்து எப்படி வதைப்பாளோ ஆண்டவா… நீதான் என்னை இவகிட்டேயிருந்து காப்பாத்தணும்…’ மனம் ஜெப மந்திரத்தில் மூழ்கியது. ஓம் சக துன்பம் போம், நமச்சிவாய.
சுவரில் இருந்த ஓவியங்கள் பயமுறுத்தின. எல்லா ஓவியங்களும் நவீனத்தின் வார்ப்பு. வர்ணக்கோடுகளால் கிளறிவிட்டது போல, சாயத்தை உள்ளங்கையில் அள்ளி வீசியடித்தது போல, பேசத் தொடங்கிய குழந்தையை வரைய வைத்தது போலத்தான் அவ்வோவியங்கள் காட்சி தந்தன. அதில் ஒன்றுதான் எனக்குப் பயத்தைத் தந்தது. இடப்பக்க மேலோரத்தில் சிவப்புக்கோடு. அதன்கீழே கறுப்பு, சாம்பல் நிறங்களில் தீற்றல். அதன்கீழே பச்சைநிறப் படிகம் போன்ற கோடுகள். படிகத்தின் நடுவே மூன்று நாமம் போன்ற மஞ்சள் மென்கோடுகள். சாய்வு நாற்காலையைத் திருப்பிப்போட்டு வைத்த மாதிரி தடிப்பான கருங்கோடுகள். இதன் பின்காட்சியில் சிவப்பையும் வெளிர் பச்சையையும் வெளிர் சாம்பலையும் குழைத்துப்போட்டு அப்பியது போன்றிருந்தது. இடது ஓரத்தில் மலாய் மன்னரின் கிரீஸ் கத்தி தலைகீழாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. நிறங்களைக் குழைத்துப்போட்டு அப்பிய காட்சியே ஆதிப்பேயாய் ஓவியம் முழுக்க அடர்ந்து படர்ந்திருந்தது. என் இயல்புநிலையை ஊடறுத்துவிட்ட ஓவியம் உயிர் கருகுகிற வாடையைத் தந்தது. தற்சிதைவின் தாக்கம். கும்மிருட்டில் சத்தம் செய்யும் பனைமரங்கள் போன்றதொரு சூழல். உற்றுப்பார்த்தால் மேல்நோக்கிய சிறுவடிவிலான சுடுகலன். படுத்துக்கிடக்கும் மனித உருவம். பற்களைக் காட்டிச் சிரிக்கும் கொடூரமுகம். கருஞ்சுழியின் விநோத வெறுமை. ஓவியத்தின் உள் அமைவு ஒன்றை வெளிப்படுத்தவில்லை. பார்த்துக் கொண்டேயிருந்தால் ஒன்று பத்தாகிறது.
மறுபடியும் அதே காலடிச்சத்தம். மனம் நடுங்கத் தொடங்கியது. ‘ஜெப மந்திரத்தை எங்கோ விட்டுவிட்டேனே. இந்த ஓவியம் வந்து கெடுத்துவிட்டதே. ஐயோ! மந்திரம். மந்திரம்…’ சட்டென வியர்த்தது. இதயத் துடிப்பு அதிகரித்தது.
கதவைப் பாதிவரை திறந்துவைத்தவள் அறையை அங்குமிங்குமாக நோட்டமிட்டாள். அவளுக்கு வேண்டியது கிடைத்தது போல. ஒரு புன்சிரிப்பு. எனக்கது விகாரமாயிருந்தது. இரும்பு பெட்டியருகே வந்து எக்கி விரல்களால் தொட எத்தனித்தாள். அவளால் முடியாமல் போக வெளியேறி முக்காலியோடு வந்தாள். அதன்மேல் ஏறி நின்று எடுத்து கீழே இறங்கி, கையில் இருப்பதைப்பார்த்தேன். சுத்தியல். எனக்கு தலையே சுற்ற ஆரம்பித்தது. ‘செத்தோம்டா சாமி…’ என்று கண்களை மூடி திறப்பதற்குள் வலது காலின் பெருவிரலில் சுத்தியலின் பலத்த அடி விழுந்தது. ‘அம்மா…வ்வ்…’ என்று பலங்கொண்டு கத்தினேன். மறுகணமே சுத்தியலின் அடி தாடையில் விழிந்தது. தொடைகள் தானாக ஆட்டங்கண்டன. கைகள் நடுங்கின. கன்னங்களும் ஆடி உப்பிக்கொண்ட உணர்வை கொடுத்தது.
பக்கா திருடன். அமாவாசை திருடன் என்ற பட்டமெல்லாம் பறந்தன. பிழைத்தேன் என்றால் இனி வாழ்க்கையில் சத்தியமாய் திருடவே கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டேன். தானாகச் சிறுநீர் கழிந்தது. “ ஐயோ ! இந்த மூத்திரத்தை பார்த்தாள் என்றால் குஞ்சுமேலே அடிப்பாளோ..” மனம் பதைபதைத்தது. உயிரோடு இருக்கும் வாய்ப்பு குறைந்துகொண்டே வந்தது.
ஆண்குறியின்மேல் சுத்தியலின் அடி. நான் சாகப்போகிறேன். இவ்வளவுதான் வாழ்க்கை. இத்தோடுதான் என் கதை முடியப்போகிறது. நாயடி பேயடி . பிணத்தை எங்கோ வீசப்போகிறாள். காகங்களும் கழுகுகளும் தின்னப்போகிறதா. முதலை தின்னப்போகிறதா, சாக்கடை தின்னுமா, மண் தின்னுமா தெரியவில்லை. பிணமாகிப்போன பிறகு யார் தின்றால் என்ன? எது தின்றால் என்ன?
மனம் தீவிரத்தோடு படம் பிடித்து படம் பிடித்து தள்ளியதுபோல காட்சிகள் வந்து போயின. முதல் காதலியின் முத்தம், என்னை முதுகில் சுமந்து அப்பா ஓடியது, தாயின் மடியில் முகம் புதைத்து அழுதது, முதல் திருட்டு, முதல் கொலை, முதல் வழிப்பறி, முதல் துரோகம், முதல் கத்திக்குத்துச் சண்டை, முதல் உடலுறவு, விந்து தானம், கடைசிக் காதலியின் இழப்பு என மிகக் கனகச்சிதமாக வரிசைப்படி கொடுத்து முடிந்தது. விரக்தியின் சூன்யம் சூழ்ந்தது.
இன்னொரு காலணியின் சத்தம் கேட்டது. இது அவளுக்குரியது அல்லவென தெரிந்தது. முடிந்தவரை தலையை கோணலாக்கிப் பார்த்தேன். இன்னொரு பணிப்பெண்தான். என்னைக் கண்டதும் சிறுவிழிகள் முட்டை விழிகளாயின. வாயைப் பொத்திக்கொண்டு இன்னொரு கரத்தை அப்படியும் இப்படியுமாம ஆட்டினாள். தொலைபேசியை எடுத்து யாருடனோ குசுகுசுவென பேசினாள். திரும்பி நடந்தாள். அவளின் பச்சாதாபப் பார்வையில் கொஞ்சமாய் ஆறுதலடைந்தேன்.
இந்த என் நிலையை எனக்குத் தெரிந்தவர்கள் அறிய நேரிட்டால் என்னாவது என மனம் யோசித்தது. மானக்கேடு. இதற்கு நான் செத்தே தொலைக்கலாம். “இந்த நாதேறி மூதேவியைக் கொன்று போட ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலே போதும். துர்கா சாமிக்கு எலுமிச்சை மாலையை சாத்தலாம். “ கண்ணைத்தொறந்து பாரடியம்மா…” என் மனம் யாசித்து வேண்டிக் கொண்டது.
இரு வெவ்வேறான காலணியின் வருகை ஓசை கேட்டது. “ அடிப்பதற்கு துணையாக இன்னொரு ஆளைக் கூட்டி வருகிறாளோ..” என மனதில் பட்டது. ஓர் ஆணும் வாய்ப்பொத்திய பெண்ணும் நுழைந்தனர். என்னைப் பார்த்ததும் ஆண் தன் நெற்றியில் கையை வைத்து தன் மொழியில் ஏதோ கூற அவள் ஓடிப்போய் அவளை அழைத்து வந்தாள். காரசாரமாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. ஆண் திருப்தியடையாதவனாய் கத்தினான். மூவரும் வெளியேறினர். கசமுசாவென சத்தம் கேட்டுகொண்டே இருந்தது.
வாய்ப்பொத்தியவள் மறுபடியும் வந்தாள். அவசர அவசரமாக என் கட்டுகளை விடுவித்தாள். பொத்தென விழுந்த என்னைக் கூச்சமின்றி தொட்டுப்பிடித்து எழ வைத்து என் கரத்தை தன் கழுத்தில் போட்டுக்கொண்டு அடிமேல் அடி வைத்தாள். அவளுக்கு சிரமம் கொடுக்காதபடிக்கு நானும் தம்பிடித்து நடக்க முயற்சித்தேன். ஆட்டங்காணும் கால்கள் வலுவிழந்திருந்த போதிலும் தப்பிக்கும் தருணம் வந்துவிட்ட உற்சாகத்தில் திடப்படுத்திக்கொண்டேன். அவள் என்னை கழிவறைக் குழியின் மேல் மூடியில் உட்கார வைத்தாள். ஒரு சிறு துண்டை கொண்டு வந்து ஈரப்படுத்தி தலையிலிருந்து பாதம்வரை துடைத்தெடுத்தாள். மறுபடியும் ஈரப்படுத்தி நோகாமல் உடல் முழுவதும் துடைத்தாள்.
என் உடைகளை எடுத்து வந்து அணிவித்தாள். அவளைப் பிடித்துகொண்டே கை வசப்படும் இடங்களில் தாங்கியவாறே மெல்ல நடந்து நீள் மெத்தை நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டேன். நான் இருந்த அறைக்கு போவதும் வருவதுமாய் இருந்த அவளை நினைத்து மனம் நெகிழ்ந்தது. அறையை சுத்தம் செய்துவிட்டு ஒரு குவளையில் தண்ணீரை ஊற்றிக் குடிக்க வைத்தாள் . பெரும் மூச்சு வந்தது. அவள் முன் பகுதிக்குச்சென்றதும் கண்களை மூடிக்கொண்டேன். சிறிது நேரத்திற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
இருண்டதொரு வெளியில் பெருங்காற்றை எதிர்த்துச் சென்றபோது உடல் தூக்கியெறியப்பட்ட உணர்வு. திடுக்கிட்டு விழித்தேன். நான் இருந்த இடமும் முன்பகுதியில் இருண்டுக் கிடந்தது. ‘ ஐயோ..! என்னை மறந்துவிட்டு போய்ட்டிங்களோ..’ என்றபடி உட்கார முயன்றேன். பசையில் அழுத்தமாய் ஒட்டிக்கொண்டது போல உடல் உறுப்புகள் ஒத்துழைக்க மறுத்தன. அப்போது இழுவைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ஓருருவம் என்னை நோக்கி வந்து எழுந்து நிற்க வைத்தது. கெந்திக் கெந்தி நடந்து கடை வாசலை அடைந்து ஒரு தூணைப் பிடித்துக்கொண்டேன்.
வெளி வெளிச்சத்தில் அவ்வுருவத்தைப் பார்த்தேன். எனக்காக வாக்குவாதம் புரிந்த சீனர் என் தெரிந்தது. கடையை மூடிவிட்டு என் தாங்கியபடி மூடுந்தின் பின் பக்கக் கதவைத் திறந்து ஏறி உட்கார வைத்தார். தலையை இலேசாக அசைத்து மணி என்னவென்று பார்த்தேன். ஒன்று பத்தெனக் காட்டியது. வாகனம் விரைந்துச்சென்றது. “சரி இனி காவல் நிலையம்தான் “ என நினைத்தேன்.
வாகனம் வளைந்து புகுந்து திரும்பிப் பயணித்தது. நெடுஞ்சாலையை அடைந்ததும் சீராகச்சென்றது. இருபது நிமிடப் பயணத்திற்குப் பின் நெடுஞ்சாலையில் ஓரமாய் வாகனம் நின்றது. சீனர் இறங்கி என் கதவைத் திறந்து இறங்க வைத்தார். கதவை மூடினார். என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர் தன் பணப்பையைத் திறந்து ஒற்றைத் தாளை என் கையில் திணித்துவிட்டு வாகனத்தில் ஏறிக் கிளம்பினார்.
மெதுவாக உள்ளங்கையை திறந்து கண்ணருகே கொண்டு வந்து பார்த்தேன். நூறு வெள்ளி. வானத்தைப் பார்த்தேன். அலங்கோலமான ஓவியங்கள் போல மேகங்கள்.
அருமையான எழுத்துநடை. என்னாகுமோ என்று விடாமல் வாசிக்கவைத்த சிறுகதை. நன்று.