நகையாயுதம்

pandiyan 2(1)மக்கள் கலைகள் அனைத்திலும் உள்ள பொதுத்தன்மை அதன் ஊடாக அமைந்திருக்கும் நகைச்சுவைக் கூறாகும். நகைச்சுவையின் வழி உலகமக்களைக் கவரவும் ஒன்றுதிரட்டவும் முடியும். நகைச்சுவை, மக்களின் மனோவியலை மென்மைப்படுத்துகிறது. மனக்கட்டுகளை அவிழ்த்து மனதை இலகுவாக்கி உணர்ச்சிகளைச் சமன்படுத்துகிறது.

நகைச்சுவை என்பது ஒரு சொல்லில் இருந்தோ ஒரு அசைவில் இருந்தோகூட வெளிப்படலாம். நமக்கு எது நகைப்பை உருவாக்குகிறது என்பது தனிப்பட்ட ரசனைக்கு உட்பட்டதாகும். அது தனிப்பட்ட மனோவியல், அரசியல் காரணங்களாலும் வடிவமைக்கப்படுகிறது. ஆயினும் நகைச்சுவைக் கலைஞர்களால் ஒரு பொது நகைச்சுவை வடிவத்தைக் கட்டமைக்க முடிகிறது. அவர்கள் ஒரு தனித்தன்மையை அனைவருக்குமான நகைச்சுவையாக வடிவமைத்து விடுகின்றனர். புகழ்பெற்ற ‘திரி ஸ்டுஜஸ்’ முதற்கொண்டு சார்லி சாப்ளின் வரை அவ்வாறாக ஒரு நகைச்சுவைத் தன்மையை புதிதாகக் கட்டமைத்துக் கொண்டவர்கள்தாம். குட்டை மீசை வைத்த இட்லரையும் பாரதிதாசனையும் பார்த்தால் நமக்கு ஏற்படாத சிரிப்புணர்வு, சார்லி சாப்ளினைப் பார்த்ததும் ஏற்படுவதற்கான காரணம் குட்டைமீசையின் பொதுத்தன்மையால் அல்ல. மாறாக, சார்லி சாப்ளின் என்னும் கலைஞன் உண்டாக்கிய தனித்தன்மையால்தான்.

ஒரு நல்ல நகைச்சுவை என்பது இரண்டு படிநிலைகளைக் கொண்டிருக்கவேண்டும். முதல்படிநிலை, ரசிகனின் மனஇறுக்கங்களைத் தளர்த்துவது. இரண்டாவது படிநிலை இறுக்கம் தளர்ந்த மனதிற்குள் சில தகவல்களை கடத்துவது. ஆயினும் இந்த இரண்டு படிநிலைகளும் எல்லா நகைச்சுவைகளிலும் இருப்பது இல்லை. பெரும்பாலும் முதல் படிநிலையோடு நின்றுவிடுபவனாகவே இருக்கின்றன. ஒரு நகைச்சுவைக் காட்சியையோ கதையையோ கேட்கும் நேரம் நம் மனஇறுக்கங்கள் சட்டென்று தளர்வு அடைந்து, ரசிப்பு மனநிலைக்கு வந்துவிடுகிறோம். ரசிப்பு மனநிலை என்பது மிக சகஜமான மனநிலை. அதாவது இறுக்கமான மண்ணில் நீரூற்றி பதப்படுத்துவது போன்ற நிலை. ஆகவே நகைச்சுவையின் முதல்நோக்கம் இறுக்கங்களை உடைப்பதுதான். அதன் பின்னான பணிகள் கலைஞனின் ஆளுமையைச் சார்ந்ததாகும்.

ஒரு தேர்ந்த கலைஞன் தன் நகைச்சுவைக்குள் சில தகவல்களை, சீண்டல்களை அல்லது விமர்சனங்களைப் பொத்திவைத்திருப்பான். ரசிகனுக்கு அந்தத் தகவல் மிகச்சுலபமாக கடத்தப்பட்டுவிடும். காரணம் ரசிகனது மனநிலை முன்பே ஏற்கும் மனநிலைக்கு தயாராகியிருக்கும். தகவல்கள் அற்ற நகைச்சுவை வெறும் அசட்டு நகைச்சுவையாகத் தேங்கிவிடும்.

மக்களை மனம் விட்டுச் சிரிக்க வைக்க நகைச்சுவை பயன்படும் அதே வேளையில் நகைச்சுவையை அதிகாரங்களுக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும் என்பதைப் பலரும் நிரூபித்துள்ளனர். ஒருவகையில் நகைச்சுவை என்பதே சமூக நடப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனம்தான். கேலிச்சித்திரங்கள் ஆற்றும் அதே சீரிய பணியை நகைச்சுவைக் கதைகளும் காட்சிகளும் நாடகங்களும் ஏற்படுத்த முடியும். நகைச்சுவை கலைஞர்களும் நகைச்சுவை ரசிகர்களும் தங்களுக்கான தனித்தொடர்பு மொழியுடன் இயங்குவதால் பேசு மொழிகளற்ற மெளன சாடைகள் கூட பெரும் உட்பொருள் கொண்டதாக இருக்கக் கூடும்.

பழங்காலம் தொட்டே நகைச்சுவைகளின் வழி அதிகாரங்களை விமர்சனம் செய்வது வழக்கத்தில் இருந்துள்ளது. தெனாலிராமன் கதைகளிலும் முல்லா கதைகளிலும் அரசர்களையும் அதிகாரங்களையும் விமர்சிக்கும் அல்லது நையாண்டி செய்யும் போக்கு இருப்பதைக் காணலாம், நவீன நகைச்சுவைக் கலைஞர்களில் சார்லி சாப்ளின் உலகின் மாபெரும் சர்வாதிகார சக்திகளை தனது தனித்த பாணிகளின் வாயிலாக தொடர்ந்து விமர்சித்தபடியே இருந்தார். வெளிப்படையான விமர்சனங்களாலேயே ‘தெ டிக்டேட்டர்’ என்னும் இவரின் படம் இன்றும் சிறந்த கலைப்படைப்பாகக் கொண்டாடப்படுகிறது

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை முக்கிய அங்கமாக நிலைபெற்றுள்ளது. ஆயினும் சில விதிவிலக்குகளைத் தவிர, தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை அதிகமாக வியாபாரத்தை பெருக்கத் தேவைப்படும் கவர்ச்சிப்பாண்டமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு மேடை நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் விதூஷகன் என்னும் கோமாளி இருப்பது வழக்கம். அவன் இடைவேளைகளில் மேடையில் தோன்றி தன் கோமாளித்தனங்களால் மக்களைச் சிரிக்கச்செய்வான். ஆரம்பகால தமிழ்சினிமாவிலும் இந்த வழக்கம் தொடர்ந்தது. அவை கோமாளித்தனங்களால் மட்டுமே மக்களை சிரிக்கவைக்க முயன்றன.

பிறகு, என். எஸ் கிருஷ்ணன் தன் நகைச்சுவைகளைப் புதியவடிவில் கொடுக்க முயன்ற முக்கியமான கலைஞராக இருந்தார். அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பல சமூக சீர்திருத்த கருத்துகளை அடிப்படையாக வைத்தே அவரின் நகைச்சுவைக் காட்சிகள் கட்டமைக்கப்பட்டன. மக்களுக்கு தன் நகைச்சுவையின் வழி சில தகவல்களைக் கொடுக்க முன்வந்த முக்கிய ஆளுமையாக அவர் திகழ்கிறார். அவரைத் தொடர்ந்து எம். ஆர் ராதா போன்ற கட்சி அரசியல் சார்புள்ள கலைஞர்கள் தங்கள் நகைச்சுவையின் வழி சமூக சீர்திருத்தங்களையும் கட்சியின் கொள்கைகளையும் ஓரளவு பிரச்சாரம் செய்யப் பயன்படுத்தினர்.

பிறகு வந்த படங்களில் நகைச்சுவை நடிகர்கள் நாயக பாத்திரங்களின் நண்பனாக, அல்லது தோழியாக வந்து நன்மையின் பின்நிற்கும் பொறுப்போடு நகைச்சுவைகளைச் செய்தனர். ஆயினும் சங்க இலக்கியங்களின் தோழன்/தோழி பாத்திரவடிவங்களின் நீட்சியாகவே இது அமைகிறது. நகைச்சுவை பாகமேற்பதோடு முதன்மைக் கதைமாந்தர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் பங்குவகித்தனர். திரைப்படத்தின் வியாபாரத்தை முடிவுசெய்யும் அளவுக்கு முக்கிய நிலைகளை நகைச்சுவைக் கலைஞர்கள் எட்டியிருந்தாலும் திரைக்கதையில் அவர்களின் பங்கு செயற்கையான கோமாளித்தனங்களின் தொகுப்பாகவே அமைந்திருக்கிறது. இந்நிலை தமிழ்த்திரைப்படங்களில் இன்றுவரை தொடர்வதைக் காணமுடிகிறது. ஒரு நாயகனைச் சுற்றி நான்கு கோமாளிகள் எப்போதும் நட்பு வட்டத்தில் இருக்கவேண்டும் என்பது ஒரு திரைத்துறை விதி.

ஆயினும் நகைச்சுவையின் தன்மை என்பது பல நேரங்களில் விபத்தாகவும் விபரீதமாகவும் மாறிவிடுவதை நாம் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். சுயவதையும், பிறர்வதையும் நகைச்சுவைப் பொருளாக மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனை இன்னொரு மனிதனோ ஒரு குழுவோ அடிப்பதும் துன்புறுத்துவதும் நகைச்சுவை என்று தமிழ்ச் சினிமா கட்டமைத்துள்ளது. மேலும் ‘ரேப்’ பண்ணுவது என்பது ஒரு தமாஷான செயல் என்கிற அபத்தத்தையும் திரைப்பட நகைச்சுவை காட்டுகிறது. அதேபோல் தனிமனித உடல் அமைப்பையும் தோற்றத்தையும் எள்ளி நகைப்பதும் மலிவான நகைச்சுவைகளாக அமைந்துள்ளன. பெண்கள், மூன்றாம் பாலினர், வயோதிகர் போன்றோரை மையப்படுத்தும் நகைச்சுவைகளில் விரசமும் சமூகப் பொறுப்பற்ற போக்கும் வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

மலேசிய நகைச்சுவை என்பது வெகுவாக மாற்றம் கண்டுவரும் ஒரு கலையாகும். முன்பு மலாய்காரர்கள் மத்தியில் அரவாணிகள் நகைப்புக்குரியவர்களாக திரைப்படங்களில் காட்டப்படும் நிலை இன்று சற்று குறைந்துள்ளது. அதேபோன்று பல மலாய் திரைப்படங்களில் இந்திய வம்சாவளி கதாபாத்திரங்களைக் கோமாளிகளாக காட்டுவதும் அவர்களின் பேச்சு வழக்கையும் உடல்மொழியையும் கிண்டல் செய்வதுமே முக்கிய நகைச்சுவையாக இருந்ததுண்டு. பி. ரம்லி போன்ற கலையுலக ஆளுமைகள் கூட இது போன்ற காட்சிகளை அமைத்ததுண்டு. மலாய் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அச்சப்பான், பரம், சத்தியா போன்ற நகைச்சுவைக் கலைஞர்கள் அனைவரும் இனஅடையாளங்களை நகைச்சுவைப் பொருளாக்கி மலாய் சினிமாவில் பரப்பியவர்கள்தான். அவர்களின் உடை, குரல், உடல்மொழி, உச்சரிப்பு அனைத்திலும் இனம்சார்ந்த நையாண்டி நகைச்சுவை ஆக்கப்பட்டிருக்கும்.

மலேசிய தமிழ்ச்சூழலில், ஸ்டேன்லி ஐயப்பன் போன்ற மூத்த கலைஞர்களும் ஏ. எம் ஆர், போன்ற குழுக்களும் மேடைகளில் நாடகப் பாணி நகைச்சுவைகளை அரங்கேற்றி வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் கற்பனைக் காட்சிகளும் வசனங்களும் நகைச்சுவைத் தன்மையால் நல்ல வரவேற்புப் பெற்றன. ஆயினும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர கூரிய விமர்சனங்களை அவர்கள் படைப்பில் காண்பது அரிதாகவே இருக்கும். தற்போதைய நிலையில் கலைஞர் கானா முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் எடுத்தாலும் இவர் நகைச்சுவை உணர்வை மிகவும் மலிவான பண்டமாக்கி வியாபாரம் செய்யும் நிலையிலேயே இருக்கிறார். பெண்ணின் உடல் பருமனை மையமாக வைத்து இவர் அமைக்கும் காட்சிகள் நகைச்சுவைக்கு உரியவை அல்ல என்பது தெளிவு. பல புதிய கலைஞர்கள் போலித்தனம் செய்வதையே நகைச்சுவை நடிப்பாகச் செய்து மேடைகளை அலங்கரிக்கின்றனர். உண்மையில், மலேசியத் தமிழ் கேலிச்சித்திரக் கலையில் காணப்படும் தேக்கநிலை நகைச்சுவைக் கலையிலும் அதிகமாகவே உள்ளது.

மலேசியாவில் பலரும் நகைச்சுவைகளை உருவாக்கிப் புகழ்பெற்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாக தனிமனிதர் மேடை நகைச்சுவை காட்சிகளை வெற்றிகரமாக நடத்திவரும் ஹரித் இஸ்காந்தர் என்னும் கலைஞர் குறிப்பிடத்தக்கவர். இவரின் முழு பெயர் ஹரித் இஸ்காந்தர் மூசா, (Harit Iskandar musa). மேடைக் கலைஞராகவும், தொலைக்காட்சி, திரைப்படக் கலைஞராகவும் இவர் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறார். இவர் மலேசியத் தனிமனிதர் அரங்கு நகைச்சுவையாளர்களின் முன்னோடியாகவும் திகழ்கிறார். மலேசிய நகைச்சுவையாளர்களில் குறிப்பிடத்தக்க தனித்தன்மைகள் இவரிடம் உள்ளன. குறிப்பாக இவர் நகைச்சுவையாக்கும் சமுதாயக் கூறுகள் பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவின் அரசியல் தோற்றத்தை சீண்டிப்பார்ப்பதாகவே உள்ளது முக்கிய காரணமாகும்.

ஜோகூரில் பிறந்து வளர்ந்த இவரின் தந்தை ஒரு மலாய் ராணுவ தளபதி. தாய் ஆங்கிலேயப் பெண்மணி. மேலும் இவரின் மனைவி ஒரு இந்திய-சீன கலப்புப் பெண்ணாவார். இந்தக் கலவையான இனத்தன்மை காரணமாகவே இவரின் மொழியும் பேசும் விடயங்களும் இன அடிப்படைவாதத்துக்கும் தூய்மைவாதத்துக்கும் எதிரானவையாகவே இருக்கின்றன. இவரின் பல நகைச்சுவைகள் ‘மலேசியர்கள்’ என்னும் மையக்கருப்பொருளைப் பலவித கோணங்களில் அணுகும் போக்குள்ளவையாக உள்ளன. ஒரு நேர்காணலில் இவர் தனக்கான நகைச்சுவைகளை இவர் பெரும் விதம் குறித்து வினவப்பட்டபோது, முதலாவதாக மறைந்த தனது தாயாரிடம் இருந்தும் அடுத்து இந்நாட்டு மக்களின் இனம் சார்ந்த மனநிலையில் இருந்தும் தனக்கான விகடங்கள் கிடைப்பதாகக் கூறுகிறார்.

இவரின் ரசிகர்கள் பெரும்பாலும் நகர்ப்புற படித்த மக்களாவர். ஆங்கிலம் மலாய் இரண்டிலும் கலவையாக மலேசியப் பாணி மொழிநடையைக் கையாளும் இவரின் உடல்மொழியும் சிறப்பானது. மலேசிய மக்கள் வழமையாக பின்பற்றும் பழக்கவழக்கங்களும் மலேசியர்களுக்கிடையே அவ்வப்போது ஏற்படும் இனம் சார்ந்த நெருக்கடிகளையும் இவர் பகடிகளின் வழி விமர்சனம் செய்வது வழக்கம். நாடு சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு கடந்த நிலையிலும் நாம் ஏன் மலேசியர் என்ற உணர்வு குறைந்தவர்களாக வாழ்கிறோம் என்ற வினா அவரது நிகழ்சிகளில் முக்கிய வினாவாக வைக்கப்படுகிறது. ஹரித் தனது நகைச்சுவையை முழுக்கவும் மலேசியத்தன்மை மிக்கதாக எல்லா இனங்களையும் சென்றடையும் தகவல்களோடு முன்வைக்கிறார். நகைச்சுவைகளில் ஆங்காங்கே செருகப்பட்டிருக்கும் அரசியல் விமர்சனத் தெறிப்புகளும் முக்கியமானவையாகும்.

மலேசியாவில் மத, இன அடையாளம் என்பது மிக முக்கியமானதாக விளங்குகிறது. குழந்தைகள் பிறப்புப்பதிவு, பள்ளிப் பதிவு, வேலை வாய்ப்பு என எல்லா விடயங்களிலும் மத இன அடையாளங்களை முன்வைத்தே இயங்கவேண்டிய சூழல் இங்குள்ளது. ஒரு தனிமனிதனின் மதமும் இனமும் இன்னது என்று தெரிந்த பிறகுதான் அவனுக்கான இடத்தை வழங்க சமுதாயம் முன்வருகிறது. ஆயினும் இனமும் மதமும், தந்தை வழி வருவதாகவே ஒரு நம்பிக்கையும் உள்ளது. இச்சூழல்களை ஹரித் தன் நகைச்சுவைகளில் விமர்சிக்கத் தவறுவதில்லை. தன்னையே மாதிரியாகக் கொண்டு அவர் பள்ளிக்காலத்தில் பதிவு பாரத்தில் இடம் பெற்றுள்ள இனம் என்ற அடையாளத்தை முடிவுசெய்வதில் எதிர்நோக்கிய சிக்கல்களை நகைச்சுவை ததும்பப்பேசுவார். அவரின் மனைவியும் அதேமாதிரியான சிக்கல்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்றும் இன்று தன் பிள்ளைகளும் இன்ன இனம் என்ற தனித்தன்மைகளற்று இருப்பதால் அவர்களும் தன்னைப் போன்றே குழப்பத்துக்கு ஆளாகவேண்டும் என்றும் தனது நகைச்சுவை காட்சிகளில் பேசுகிறார். மலேசிய அரசியல் இனம் என்ற அடையாளத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இவரின் நகைச்சுவை எள்ளி நகைப்பதை உணரமுடிகிறது. எல்லா நிலைகளிலும் இனமேலாண்மையை உயர்த்திப்பிடிக்கும் நாட்டில் மலேசியர் என்று கூறிக்கொள்வது பொருளற்றது என்பதையும் உணர்த்துகிறது.

அரசியல் சார்ந்த இவரின் நகைச்சுவைகளும் மிக முக்கியமானவையாகும். அண்மையில் மலேசியப் பிரதமரின் வங்கிக்கணக்கில் 2.6 பில்லியன் பணம் மர்மமான முறையில் புகுந்ததும் பின் பல சமாளிப்புகளுக்குப் பிறகு, அது ஒரு அரேபியக் கோடீஸ்வரரால் தனக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டதாக பிரதமர் அறிவித்து பல நகைப்புக்குரிய விவாதங்கள் தொடர்ந்ததும் நாடே அறியும். பல முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களையும் தகவல்களையும் கொடுத்த பிரதமரும் அவரின் ஆதரவு தரப்புகளும் இறுதியாக அந்த நன்கொடைப் பணத்தை தாம் 90% திருப்பிக் கொடுத்து விட்டதாக மேலும் ஒரு தகவலைக் கொடுத்திருந்தனர். நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்புகளை உண்டாக்கிய இந்த விடயங்களை அடிப்படையாக வைத்து அமைத்து, ஹரித் பேசும் நகைச்சுவைகள் சிந்திக்கத்தக்கன. அவர், தனது நகைச்சுவைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு நாசிக்காண்டார் முதலாளி தனக்கு ரிம 2.60 விலையுள்ள தேனீரை இலவசமாக கொடுத்தார் என்றும் அதைத்தான் கொஞ்சமாகக் குடித்து விட்டு 90% தேனீரை திரும்பக் கொடுத்து விட்டதாகவும் கூறுவது சிரிக்கவும் சிந்திக்கவும் தக்கதுதான்.

அதிகாரத் தரப்பினரை விமர்சனம் செய்வதும் மக்கள் உணர்சிகளை தூண்டக்கூடிய விடயங்களைத் தொட்டு நகைச்சுவை செய்வதும் மிகவும் ஆபத்தான பணி என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் மலேசியா போன்ற இன, மத இறுக்கங்கள் மிகுந்த நாட்டில் கலைஞர்கள் மிகக் கவனமாகவே செயல்படவேண்டியுள்ளது. கலைஞர்கள் தங்கள் ஆபத்தான எல்லைகளைப் பற்றிப் பேசும் நிகழ்ச்சி ஒன்று கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றது. “Killing Sacred Cows: Comedy in the Age of Offence” என்ற அந்த நிகழ்வில் பேசிய நகைச்சுவைக் கலைஞர்கள் இஸ்லாமிய மதத்தை கிண்டல் செய்வதில் உள்ள ஆபத்துகளை வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர். ஹரித் இந்த நிகழ்சியில் பேசும்போது தான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் இஸ்லாம் குறித்த தனது சின்ன நையாண்டியும் தனக்கெதிரான பெரும் ஆயுதமாக மாறக்கூடும் என்றும் கூறுகிறார். ஆகவே தான் வழக்கமாக மதம் குறித்த கிண்டல்களை மிகவும் மறைபொருளாக வைத்தே நகைசுவைகள் செய்வதாகவும் கூறினார். தான் நடத்திய ஒரு பினாங்கு நிகழ்ச்சியில் அரசநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் தனது நிகழ்ச்சி காவல் அதிகாரிகளால் உளவு பார்க்கப்பட்ட தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆகவே மக்களுக்குத் தெளிவும் விழிப்பும் கிடைக்கும் பொருட்டு நகைச்சுவைக் கலைஞர்கள் சுய ஆபத்துகளின் எல்லைகளில் இருந்துதான் பணியாற்ற வேண்டிய நிலை மலேசியா போன்ற வளரும் நாடுகளின் தலைவிதியாக உள்ளது. ஆயினும் ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இடையில் நின்று பணியாற்றும் ஆற்றலே அசல் கலைஞர்களுக்கு மக்கள் வழங்கும் அங்கீகாரமாகும் என்பதால் சிறிய அளவிலேனும் இது போன்ற முயற்சிகள் தொடர்கின்றன.

இனங்களை தேவைக்கேற்ப ஓட்டு வங்கிகளாகவும் அரசியல் கேடயங்களாகவும் பயன்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் அரசியல்கட்சிகளின் மேல் ஹரித்தின் விமர்சனம் நகைச்சுவைகளின் வழியாக வெளிப்படுகிறது. நகைச்சுவையை பொழுதுபோக்கு அம்சமாகவும் இளைப்பாற்றியாகவும் பயன்படுத்தும் நிலையில் இருந்து விடுபட்டு நகைச்சுவையை அதிகாரங்களுக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படுத்தும் நுண்ணிய சாமர்த்தியம் ஹரித் இஸ்காந்தர் போன்ற தேர்ந்த கலைஞர்களுக்கே சாத்தியமாகிறது.

ஹரித் இஸ்காந்தர் நகைச்சுவைக் காட்சிகளில் சில யூ டியூப்பில்…

https://www. youtube. com/watch?v=dZqEzNLX07w

https://www. youtube. com/watch?v=k0t9Lk3aedU

https://www. youtube. com/watch?v=DmjINMfbW6g

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...