விரிவுரையாளனுக்கான அடையாளத்தைச் சிவப்பு நிறக் கயிற்றில் தொங்கும் பெயரட்டையில் பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்திருந்து. கழுத்தில் பெயரட்டை தொங்கும்வரை வளாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வளாகத்தை விட்டு வெளியேறினால் அடுத்து நான் சந்திக்கும் பலர் என்னிடம், “தம்பி, நீ என்னப்பா படிக்கிற?” என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள். இன்னும் சிலர் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பார்கள். வெளிச்சூழலில் அது எனக்குப் பழகிப்போன ஒன்று. இச்சமூகம் கல்வியாளர்களுக்கென சில வரையறைகளை வகுத்து வைத்திருக்கிறது. கல்வியாளர்கள் கல்விக்கூடங்களிலும் அதற்கு அப்பாலும் கல்வியாளர்களாகவே இருக்கவேண்டுமென இச்சமூகம் எதிர்பார்க்கிறது. மாறாக, என்னுடைய ஐந்தரை அடி உயரப் பள்ளி மாணவனை ஒத்த உடலமைப்பு சமூகத்தின் எதிர்பார்ப்பிலிருந்து எனக்கு விலக்கு அளித்திருந்தது. வெளியுலகிற்கு நான் ‘சின்னப்பையன்’. கல்வியாளனென்று சொல்லி கொள்வதற்கு எந்த அடையாளமும் என்னிடமில்லை.
சில சமயங்களில் பல்கலைக்கழகத்தில் பெயரட்டை அணிய மறந்துபோவதும் உண்டு. பதினைந்தாயிரம் மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகத்தில் பெயரட்டை அணியாதபோது நான் இழப்பது எனக்கான அடையாளம் மட்டுமல்ல, மரியாதையும்தான்.
அன்றைய நாளில் கடைசி விரிவுரையை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அலுவலக நேரம் முடிந்திருந்தது. ஆள் நடமாட்டமும் குறைந்திருந்தது. கட்டிடத்தின் கீழ்தளத்தில் மாணவர்கள் சிலர் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் தீவிரமாய் இயங்கி கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து லிப்டை நோக்கிச் சென்றபோது மறைவில் மாணவர்கள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். நான் அவர்கள் முன்னே நின்றிருந்தபோதும் அவர்கள் சாவகாசமாகவே பிரிந்தனர். அவர்களை அழைத்தேன். அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் அழைத்தேன். தெரியாததுபோல இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தனர். அவர்களை நோக்கி ‘கூப்பிடுவது காதில் விழவில்லையா’ எனக் கத்தினேன். அவர்கள் மிரண்டுபோய் என்னிடம் வந்தனர். ‘கூப்பிட்டபோது ஏன் வரவில்லை’ எனக் கோபத்துடன் கேட்டபோது, மாணவன் ‘நீங்கள் யார்’ என்றது எனக்கு மேலும் கோபத்தை வரவழைத்தது. ‘நான் விரிவுரையாளன் என்பது உனக்குத் தெரியாதா’ என்றேன். ‘நீங்கள் விரிவுரையாளர் என்பதற்கான அடையாளம் எதுவுமில்லையே’ என்றான். கழுத்தில் பெயரட்டை இல்லாததை உணர்ந்தேன். அவர்கள் இதுவரை என்னை அவமதித்ததைவிட விரிவுரையாளருக்கான அடையாளம் இல்லையென்றது எனக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது. கோவமும் அவமானமும் சேர்ந்து அவர்களை உச்சத்தொனியில் திட்டித் தீர்த்துவிட்டேன். மறுநாள் மாணவர்களது நடத்தை குறித்து மேலிடத்தில் புகார் அளித்திருந்தேன்.
ஒருமுறை, வார இறுதியில் பல்கலைக்கழகத்தில் “ஓப்பன் டே” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எனக்குப் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இடைநிலைக்கல்வியை முடித்த மாணவர்கள் பெற்றோருடன் மேற்கல்வி தொடர்பாக விளக்கம் பெறுவதற்காகப் பல்கலைக்கழகம் வந்திருந்தனர். சீனர்களின் வருகை அதிகமாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் சீனர்கள் அவர்தம் இனத்தவர்களையே நாடி தகவல் கேட்டறிவார்கள். நம்மைச் சீண்டுபவர்கள் அரிதிலும் அரிது. தகவல் முகப்பில் அமர்ந்திருந்த எனக்கு ஆறுதலாய் ஓர் இந்தியக் குடும்பம் வந்தது சேர்ந்தது. மேற்கல்வி தொடர்பாக மாணவியின் அம்மா என்னிடத்தில் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்துக் கொண்டிருந்தேன். இறுதியாக, அவர் கேட்ட கேள்வி, ‘நீங்க இங்கயா படிக்கிறீங்க’. அடுத்த முகப்பில் அமர்ந்திருந்த மற்றொரு இந்திய விரிவுரையாளர் வாய்விட்டுச் சிரித்தார். கேள்வி கேட்ட முகத்தில் அசடு வழிந்தது. கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த பெயரட்டையை அவர் கண்முன் நீட்டினேன். ‘இலக்சரரா? பார்க்க ரொம்ப சின்னப் பையனா இருக்கீங்களே’ என்றார் அந்த அம்மா. பொய்யான சிரிப்பைப் பதிலாகத் தந்தேன்.
அந்த அம்மா சொன்னது போல, பார்ப்பதற்குச் ‘சின்னப்பையன்’ போல் இருப்பதால் அநேக நேரம் நான் மாணவர்களுக்கும் மாணவனாகவே தெரிகிறேன். ஒவ்வொரு பருவத்தின் முதல் விரிவுரை வகுப்புக்குச் செல்லும்போது மாணவர்களிடத்தில் ‘புன்’ மறைந்து ஒரு மாதிரியான நகைப்பு மட்டும் என்னை நோக்கி அப்பட்டமாக வெளிப்படும். அந்த நகைப்பு உள்ளுக்குள் என்னை ஏதோ செய்வதது போன்ற ஓர் உணர்வு தோன்றி மறையும். அடுத்தகணமே முகத்தில் காட்டம் சற்று தூக்கலாக இருக்கும். மாணவர்களை அடக்கி ஆள அதுவே போதுமானதாக இருக்கும். அழுத்தமான குரலில், தொடர் கேள்விகள் வீசப்படும்போது மாணவர்கள் பம்மிவிடுவார்கள். நாட்கள் போகப் போக, என்னைப் புரிந்துகொள்ளும் மாணவர்கள் நட்புடன் பழக ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் சில மாணவர்கள் அப்படியல்ல. முதல் வகுப்பிலேயே அவர்களுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடும். அது இறுதிவரை அப்படியே நீடித்திருக்கும். எவ்வளவு சிறப்பாக விரிவுரையை நடத்தினாலும் மதிப்பீட்டு ஆய்வில் படுமோசமாக விமர்சனம் செய்து என் மீதான மதிப்பீட்டைக் குறைப்பார்கள். சில முறை குறைந்ததும் உண்டு.
இந்த எட்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கண்டுவிட்டேன். என்னிடம் படித்த மாணவர்களுக்கு நான் விரிவுரையாளன் என்பது தெரியும். எல்லோருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவே அவர்கள் என்னைப் பகடி செய்வதற்குத் தோதுவாக இருக்கிறது. இந்திய மாணவர்களிடத்தில் இம்மாதிரியான சிக்கலை இன்னமும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். “டேய் சாரு போறாருடா” எனக் காதில் விழும்படி பேசுவதிலிருந்து நம்மைக் கிண்டலடிக்கத் தொடங்கிவிடுவார்கள். சில நேரங்களில் நம்மைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துப் பேசுவதும் உண்டு. அதனாலேயே முடிந்தளவில் இந்திய மாணவர்களைத் தவிர்த்துவிடுவேன். அதையும் மீறி சில சமயங்களில் விரிவுரையில் ஒரு சில இந்திய மாணவர்கள் இருப்பார்கள்.
அப்படியாக ஒருமுறை விரிவுரை வகுப்பில் ஓர் இந்திய மாணவன் இடம்பெற்றிருந்தான். அவன் எண்ணம்போல வகுப்புக்கு வருவான்; வராமலும் போவான். வந்தால் ஒருமணி நேரம் தாமதமாக வருவான்; சரியான நேரத்தில் வந்தால் அடுத்த ஒருமணி நேரத்தில் காணாமல் போய்விடுவான். நான் அவனைப்பற்றி சட்டை செய்யவில்லை. அன்று வகுப்பில் தேர்வு இருந்தது. அவன் தேர்வுக்கு வரவில்லை. தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து மாற்றுத்தேர்வு கொடுக்கப்படவேண்டுமென்பது கல்விக்கூடத்தில் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. வேறுவழியின்றி அவனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு என் அறைக்கு வரும்படி சொல்லியிருந்தேன். அவனும் வருவதாகச் சொல்லி, காத்திருந்த என்னை முட்டாளாக்கினான். வகுப்பில் சந்தித்தபோது, தனக்கு வயிற்றுப்போக்கு அதனால் வர இயலவில்லை எனக் காரணம் சொல்லி என்னை ஏமாற்றினான். நானும் ஏமாந்தவன் போல இன்னொரு நாளில் வரச்சொல்லி நிஜமாகவே ஏமாந்து போனேன்.
இம்முறை எனக்குக் கடுங்கோபம் வரவே அவனை அழைத்துக் கடுமையாகவே திட்டினேன். அவனிடம் எந்தச்சலனமும் இல்லை. ‘இறுதியாக ஒரு வாய்ப்புத் தருகிறேன், நாளை காலை என் அறைக்கு வந்து தேர்வு எழுதுவதாக இருந்தால் எழுது. இல்லையென்றால் மேற்கொண்டு நடக்கப்போவதை மட்டும் வேடிக்கைப் பார்’ என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டேன். என்ன நினைத்தானோ, மறுநாள் சரியான நேரத்தில் என் அறையின் முன்னே நின்றிருந்தான். அன்றைய தினம் மற்றொரு விரிவுரையாளரின் வகுப்பு எடுக்க வேண்டியிருந்ததால் அவனுக்கான தேர்வைக் கொடுத்துவிட்டு பக்கத்து அறை விரிவுரையாளரைக் கண்காணிக்கச் சொல்லிச் சென்றுவிட்டேன். வகுப்பு முடிந்து திரும்பியதும் அவனுடைய தேர்வுத்தாளைப் பெற்றுக்கொண்டேன். அவன் ஒரு மணி நேர தேர்வை இருபது நிமிடங்களிலேயே முடித்துச் சென்றுவிட்டதாக பக்கத்து அறை விரிவுரையாளர் தகவல் சொன்னார். தேர்வுத்தாளை நோட்டமிட்டேன், அது பிரகாசித்தது.
மதிய சாப்பாட்டுக்குச் செல்ல, வண்டியை நோக்கிச் சென்றேன். வண்டி பல இடங்களில் ‘Liquid paper’ –ஆல் கீறப்பட்டிருந்தது. ஒருபக்கம், எந்தப் படுபாவியோ என் வண்டியைக் கீறுவதாக எண்ணி மனைவியின் வண்டியைப் பதம் பார்த்து விட்டானே! என மனம் குமுறியது. மறுபக்கம், மனைவிக்கு என்ன பதில் சொல்வது? என அறியாது இதயம் கனத்தது. யார் செய்த வேலை இது? என யோசித்தேன். அவனைத் தவிர வேரு யாரும் செய்திருக்க முடியாது என மனம் உறுதியாக நம்பியது. கோபம் தலைக்கேறியது. ஆனால் எதுவும் செய்ய முடியாது. ‘வாகனம் நிறுத்துமிடத்தில் உங்கள் வாகனத்திற்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பேற்காது’ என்ற அறிவிப்புப் பலகை என்னை நோக்கி இருந்தது.
வண்டியை வாகனம் கழுவுமிடத்திற்குக் கொண்டு சென்றேன். சீனன் ஏற்கனவே ஒரு வண்டியைக் கழுவிக்கொண்டிருந்தான். காத்திருக்கும் நேரத்தில் ஆதாரத்திற்குக் கீறல்களைப் கைப்பேசியில் படமெடுத்துக் கொண்டிருந்தேன். சீனன் என்னை நோக்கி கையசைத்து வண்டியைக் கழுவுமிடத்தில் நிறுத்தச் சொன்னான். நானும் நிறுத்தினேன். வண்டியிலிருந்து இறங்கிய என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘நீ ஆசிரியரா? எனக் கேட்டான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கழுத்தில் எந்தப் பெயரட்டையும் இல்லை.
நிறைய கார்கள் இம்மாதிரி அவரிடம் கழுவுவதற்குச் சென்றிருக்குமோ..! அதனால்தான் சரியாகக் கணித்துவிட்டார்.
நான் நினைக்கிறேன், நீங்கள் கொஞ்சம் தொந்திபோடுங்கள்.. அந்நியாயமாக `சின்னப்பையன்’ மாதிரி இருக்கின்றீர்கள்.!
நம்முடைய முதல் சந்திப்பில் நான் தங்களிடம் கேட்ட கேள்வி, “நீங்கள் எந்தனையாவது ஆண்டு மாணவன்?’’ ஹிஹிஹி.. இப்போது உணர்கிறேன் அன்றைய உங்களின் முகமாற்றத்தை..
😛