“மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்.” – சில்வியா பிளாத்
சில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 – பிப்ரவரி 11, 1963), அமெரிக்கப் பெண் கவிஞர்; நாவல், சிறுகதை எழுத்தாளர். அவரின் கவிதைகள் பரவலாக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நுண் உணர்வுகளை அதற்கே உரித்தான வார்த்தைகளில் சொல்வதில் தனித்திறமை பெற்றவர். 1950-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மற்றும் 1960-ஆம் ஆண்டுகளின் தொடக்க காலகட்டத்தில் எழுதப்பட்ட தன்னிலைக் கவிதைகளாகவே (confessional poetry) சில்வியா பிளாத்தின் கவிதைகள் அறியப்படுகின்றன. அவரது வாழ்வு அவரது கவிதைகளின் வழியே நம்மை வந்தடைந்து விடுகிறது.
எவரதும் போலவே
உங்களது மரணமும் இயல்பென்றாள் என் தாய்
அம்மனநிலையை உள்வாங்கும் வயதேறுதல்
சடுதியில் எங்ஙனம் நிகழும்?
தந்தையின் மரணம் இளம் மகளுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை இக்கவிதை பேசுகிறது. ஏற்றுக்கொள்ளவே முடியாத தந்தையின் மரணம் சில்வியாவிற்கு ஏற்படுத்திய தாக்கத்தை இக்கவிதையின் அடுத்தவரி சொல்கிறது. “தற்கொலையின் அபகீர்த்தியைச் சுமந்தலையும் ஆவி நானே” என்கிறார். இதே எண்ணம் அவரின் பெரும்பாலான கவிதைகளில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.
அவர்கள் உங்களைப் புதைத்தபோது
எனக்கு வயது பத்து
இருபது வயதில் மரணத்தை விழைந்தேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் …
உங்களை வந்தடைய
எலும்புகள் கூட விழைந்தன
பத்துவயதில் நிகழ்ந்துபோன தந்தையின் மரணம் கவிஞரைத் தொடர்ந்து துரத்துகிறது. மீண்டும் மீண்டும் தனக்கான மரணத்தைத் தானே விழைகிற நிலையென்பது எவ்வளவு கொடுமையானது. சிறுவயதிலேயே அவரது தந்தையை இழந்த துயரம் இறுதி நாட்கள்வரை தொடர்ந்து பாதித்தபடியே இருந்திருக்கிறது இந்தக் கவிதையைக்கூட தான் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பதாகத்தான் எழுதியதாக சில்வியா குறித்த குறிப்புகளில் காணக்கிடைக்கிறது.
முப்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சில்வியா தனது வாழ்வில் பலமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஒவ்வொருமுறையும் தற்கொலையிலிருந்து மீளும் போது அவரின் கவிதையில் வெளிப்படும் சோகம் என்பது நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. சட்டென அதை நாம் கடந்து போக முடியாது. மனம் மரணித்து போகும் நிலையில்தான் மனிதன் மரணத்தைத் தேடி ஓடுகிறான்.
இரண்டாம் முறை,
இதுவே கடைசி
இனித் திரும்பேன் எனும் முத்தாய்ப்போடு
இறுக்கி மூடினேன் என்னையொரு சிப்பியென.
மீண்டும் மீண்டும் கூவியழைத்து மீட்டபின்
பிரித்தகற்றினர்
முத்துக்களைப் போல ஒட்டியிருந்த புழுக்களை
மிக நேரடியான கவிதை. காட்சிகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கவிதை. இரண்டாவது முறையாக தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையும் அதுவே தனது இறுதிமுடிவாக இருக்குமென தான் நினைத்ததையும் மிக இயல்பாய் சொல்கிறது. அந்தநொடி நம்மைச் சொல்லொணாத் துயரத்திற்கு ஆட்படுத்துகிறது. அடுத்தவரியில் அவர் காப்பாற்றப்படுவது நம்மைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது.
என்மேல் பாய்கிறது சிறுத்தை ஒன்று
என் மரணம் அதனால் அமையும்
அதன் வேகத்தை தடுக்க இதயம் விரிப்பேன்
அதன் தாகம் தணிக்க ரத்தம் கொடுப்பேன்
மீண்டும் மீண்டும் மரணத்தைப் பல வகையில் கவிதைகளில் கொண்டாடுகிறார் சில்வியா பிளாத். சாதலும் ஏனைய கலைகளைப் போலொன்றே; அபூர்வ அழகோடு அதனை நான் நிகழ்த்துகிறேன் என்பதுதான் மரணம் குறித்த அவரது நிலைப்பாடாக இருந்தது.
மரணத்திற்கு அடுத்ததாக ஒரு விரக்தி மனநிலையையோடு இயற்கையை அணுகுகிற போக்கும் சில்வியாவின் கவிதைகளில் இருக்கின்றன.
மூழ்கிப்போவதற்காக அல்ல இந்த இரவு
முழுநிலவு
அடக்கமாகக் கண்ணாடி பளபளப்பின் கீழ்
ஆறு நழுவுகிறது கறுப்பாய்
என்ற கவிதையில் ஒரு கல்லிடம் தன்னைக் கடத்திப்போகும்படி கேட்கிறார். நிசப்தத்தின் முகம் அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் இக்கவிதையில் வெளிப்படுகிறது.
இப்படியாக, தனது படைப்புலகில் மிகக் கூர்மையாக எல்லாவித வலிகளோடும் பயணித்துக் கொண்டிருந்த பிளாத் பிப்ரவரி 11, 1963 அன்று தற்கொலை செய்து கொண்டார். அடுப்பில் தலையை நுழைத்து எரிவாயுவைத் திறந்து கார்பன் மோனாக்சைடு வாயுவினை முகர்ந்து அதன் நச்சுத்தன்மை காரணமாக இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டபோது அவரது குழந்தைகள் தங்களுக்குரிய அறைகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். கார்பன் மோனாக்சைடு சமையலறையிலிருந்து தன் குழந்தைகளின் அறைகளுக்குப் பரவாமலிருக்க கதவிடுக்குகளை ஈரத்துணிகள் கொண்டு அடைத்திருந்தார்.
உதிருமோர் இலையைப்
போல் என் வாழ்வு
ஓ! கடவுளே!
விரைவாக்கு என் முடிவை.
ஓர் இலையைப்போல தன்னுடைய அத்தனை துயர்களையும் கவிதையில் சொற்களாக இறக்கி வைத்துவிட்டு உதிர்ந்துவிட்டார் சில்வியா பிளாத். ஆனாலும், அவரது கவிதைகள் இன்றும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றன அவரது வார்த்தைகளுக்காகவும் வாழ்விற்காகவும்.