இந்த எழுத்துகள் மூலம் உங்கள் வாழ்வின் சில பக்கங்களை புரட்டிக்கொடுத்தவர்களை நீங்கள் நினைவுகூர்ந்தால் அதுவே தற்போதைய நமது இருப்புக்கான அர்த்தத்தை கொடுக்கும். ஒருவகையில் அது என் நினைவுகளில் சுற்றித்திரியும் பெண்களுக்கு நான் செய்யும் நன்றியும் கூட. பெண்கள் இல்லாமல் வாழ்வில் உச்சம் என்பதன் தரிசனம் கிடைக்காது என்றே நம்புகிறேன். அப்படிக் கொடுப்பவர்கள் நம்முடனேயே வாழ்கின்றவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, அவள் ஒருகணம் பார்த்தவளாக இருக்கலாம் அல்லது ஒருமுறை மட்டுமே சந்தித்தவளாக இருக்கலாம்.
கடந்த ஆண்டு எனது புத்தக வெளியீடு மேலும் மூன்று நண்பர்களின் புத்தகங்களுடன் வல்லினம் கலை இலக்கிய விழாவில் நடந்தது. ஒவ்வொரு புத்தகம் குறித்தும் முக்கிய படைப்பாளர்கள் புத்தக விமர்சனம் செய்தார்கள். எனது புத்தக விமர்சனத்தை நண்பரும் படைப்பாளருமான ஸ்ரீதர்ரங்கராஜ் செய்தார். பத்தி எழுத்துகள் குறித்தும் அதன் வகைகளைக் குறித்தும் சிறப்பாகவே பேசினார். பேச்சுக்கு இடையில் “தயாஜி குறித்துப் பேசும்போது பெண்கள் குறித்து பேசாமல் இருக்க முடியாது” என்றார். அரங்கம் ஒருகணம் மௌனம் காத்துச் சட்டென சிரித்தது.
முதலில் எனக்கும் சிரிப்பு வந்தது. பிறகு வந்த சிரிப்பு மறந்து சில முகங்கள் ஞாபகத்துக்கு வந்தன. இது என் மீதான விமர்சனமா அல்லது அரங்கத்தை கவர்வதற்கான யுக்தியா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது எனக்கு முப்பது வயது, என் வாழ்வில் எத்தனையோ பெண்கள் வந்து போயிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எனது வாழ்வை அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு நகர்த்தியவர்கள். அதேபோல வாழ்வின் அடுத்தடுத்த பகுதியில் அவர்களின் இருப்பை வைத்து அழகுபார்க்க அவர்கள் விரும்புவதில்லை. சிலர் கண்களுக்கு எட்டிய தூரமிருந்தாலும் மனதளவில் அகப்படாத தூரத்தில் இருப்பதாய் எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வது சரியா தவறா என உட்கார்ந்து யோசிக்கவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் காலம் எனக்கு ஒத்துழைக்கவில்லை. நானும் அதற்கான மனநிலையில் இல்லை.
இப்படியெல்லாம் சொல்லிச்செல்வதால், ஆணுக்கும் பெண்ணுக்குமான வழக்கமான உறவாக இது இருக்குமோ என்கிற உங்கள் முன் முடிவுகளுக்கு முற்றுப்புள்ளியாக ஒரு பெண்ணைச் சொல்லியாக வேண்டும். பெயர் தெரியாத மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கொஞ்சமும் இல்லாத பெண் அவள்.
சில ஆண்டுகளுக்கு முன் நானும் நண்பர்களும் இந்தோனேசியா, ஜோக் ஜகார்த்தாவிற்குச் சென்றிருந்தோம். எங்களை சுற்றுலாப்பயணி எனச் சுலபமாகக் கண்டுகொண்டவர்கள் விற்கும் பொருட்களின் விலையை ரிங்கிட் என்றே குறிப்பிட்டார்கள். அவர்களின் ருபாய்க்கும் எங்களின் ரிங்கிட்டும் இருக்கும் வித்தியாசம் தெரிந்துகொண்டுதான் பயணத்தை ஆரம்பித்திருந்தோம். ஆகவே அவர்களிடம் ரிங்கிட்டுகளில் இல்லாமல் ருபாயிலேயே பேரம் பேசிக்கொண்டிருந்தோம். உடன் வந்திருந்த நண்பர்கள் ஒருபடி மேலே சென்று ஆங்கிலத்தில் பேரம் செய்ய முயன்றார்கள், ஆனால் ஆங்கிலம் பேசியவர்களிடம் வியாபாரிகள் டாலர்களில் வியாபாரம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்படி வெளியூர்களுக்குச் செல்கிற பட்சத்தில் அவர்களின் மொழியில் பேசினால் மட்டுமே வேலைக்கு ஆகுமென்று அப்போதுதான் கண்டறிந்தோம். தங்கள் மொழி பேசும் வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் ஓரளவேனும் மயங்காமல் இல்லை.
அன்று நடந்த வியாபார கலாட்டாக்களைக் குறித்து சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் ஊர்தி சமிக்ஞையில் நின்றது. சட்டென அமைதியானோம். சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் இருக்கும் நடைபாதையில் ஐந்து பெண்கள் விறுவிறுவென வந்து நின்றுகொண்டார்கள். ஆடைகளில் வண்ணங்கள் ஜொலித்தன. முகத்தில் முகப்பூச்சு ஓரளவுக்கு இருந்தது. நடைபாதையில் வாகனங்களுக்கு முன்னே அவர்களாகவே ஏதோ பாடி ஆடத் தொடங்கினார்கள். நான்குபேரும் ஒரே மாதிரி ஆடினாலும், ஒருத்தியை மட்டுமே நான் கவனித்தேன்.
அவளின் முகச்சாயலில் என் வாழ்வில் நான் சந்திந்த அனைத்துப் பெண்களையும் என்னால் காண முடிந்தது. அந்தக் கண்கள், அந்தக் கன்னம், அந்தச் சிரிப்பு என முகத்தில் ஒவ்வொன்றும் ஏதோ நினைவுகளை மீட்டுக் கொடுப்பதாக அமைந்திருந்தது. அதுநாள் வரையில் வந்தார்கள் போனார்கள் என்று நினைத்துக் கடந்துவிட்டவர்கள் எல்லாம் அந்தக்கணத்தில் சாதாரணமானவர்களாக இருக்கவில்லை. ஆடிகொண்டிருந்த பெண்கள் சமிக்ஞை நிறம் மாறவிருக்கும் நொடியைக் கணக்கிட்டவர்களாக ஆடிக்கொண்டே நின்றிருக்கும் வாகனங்களிடம் வந்து கையேந்தினார்கள்.
அப்போதுதான் புரிந்தது. இப்படி நடனமாடிப் பணம் வாங்குகிறார்கள். அவர்கள் பிச்சை எடுப்பதாக நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் என்னைப்போல எத்தனையோ பேருக்கு அவர்கள் யார் யாரையெல்லாம் நினைத்துப்பார்க்க உதவியிருக்கிறார்களோ . அதற்கான கட்டணத்தை நாம் கொடுத்துதானே ஆகவேண்டும். நான் ரசித்துப்பார்த்த பெண் மிகச்சரியாக என் முன் நின்று சிரித்துக்கொண்டே கை நீட்டினாள். நண்பர்கள் உசுப்பியதில்தான் என் முன் அவள் கையேந்தியிருப்பது தெரிந்தது. கையில் இருந்த ரிங்கிட்டுகளை கொடுத்தேன். வேகமாக வாங்கியவள் துள்ளிக் குதித்துக்கொண்டு தன் தோழிகளிடம் ரிங்கிட்டுகளைக் காட்டியபடி நடந்தாள். அவள் துள்ளலில் இருந்த குழந்தைமையை நான் யாரிடமோ கண்டிருக்கிறேன். அவளின் தோழிகள் என்னைக் காட்டி ஏதோ சொல்லிச் சிரிக்கிறார்கள்.
ஒருவினாடி நின்றவள், என்னைத் திரும்பிப் பார்த்தாள். ஊர்தி புறப்படவும் அவள் என்னைப் பார்க்கவும் சரியாக இருந்தது. இப்படி வெளியூர் பணத்தை யாரும் அவளுக்கு கொடுத்ததில்லையோ எனச் சந்தேகித்தேன். புறப்பட்டுவிட்ட ஊர்தியில் இருந்து அது ”ரிங்கிட்.. ரிங்கிட்..” என கத்தினேன். அவள் வைத்தகண் வாங்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென அவள் அருகே ஒரு கார், எங்கள் இருவரின் பார்வை வெளியை கறுப்பாய் மறைத்துவிட்டுப் போனது. தூரத்தில் அவள் தோழிகள் சிதறி விழுந்துகிடந்த ரிங்கிட்டுகளை ஓடி ஓடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். இவள் கீழே கிடந்த நோட்டுகளை எடுப்பதான பாவனையில் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கள் வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பியது.
மர்மம்!
யார் அவள் தயாஜி!
கதை சிறப்பு!